அன்று காலையில் அம்மாவிடம் பள்ளிக்குச் செல்லும் முன் , தேர்வுக்கு கொஸ்டீன் பாங்க் வாங்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்தாள்
அப்போது எழுந்து வந்த விஜயன் , “என்ன பஞ்சாயத்து?” என்று கேட்க ,
வேகமாக மஞ்சு , “ஒன்றும் இல்லை , ஏதோ புத்தகம் வாங்க வேண்டும் என்கிறாள் . அதுதான் தேவையா ? என்று நண்பர்களிடம் விசாரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்…” என்று மழுப்பியபடி , காப்பியை எடுத்து வந்தார் .
“இருக்கிற புத்தகத்தையே படிக்கக் காணோம் , இதில் புதுசா ஒன்று , காசுக்குப் பிடித்த கேடு…” என்று கத்தினார்.
என்ன புத்தகம்? என்ன தேவை? என்று எந்த கேள்வியும் இருக்காது , முன் முடிவுகளுடன் தீர்ப்புகள் வழங்கப்படும்
“சஞ்சு போய் கிளம்பு , பள்ளிக்கு நேரமாச்சு…” என்று அப்பாவின் திட்டுக்களில் இருந்து தப்புவிக்கும் பொருட்டு உள்ளே அனுப்பினார் .
மஞ்சுவை முறைத்தபடி, காபியை அருந்தினார் விஜயன். காலி டம்ளரை வாங்கிக் கொண்டு சமையலறையில் நுழைந்த மஞ்சு , காலைப் பொழுது பெரிய சச்சரவின்றி முடிந்ததே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் .
மாலையில் அவர்கள் அரட்டைக் கச்சேரியின் போது கீத்து வர , புத்தகத்தைப் பற்றிய விவரம் கேட்க ,
“ என் கிட்ட இருக்கு. நான் சஞ்சுவோடு பகிர்ந்து கொள்கிறேன் ஆன்ட்டி…” என்று சொல்ல,
மஞ்சுவிற்கு நிம்மதியானது. இல்லையென்றால் அந்த புத்தகம் வாங்குவதற்குள் பெரிய போராட்டமே நடந்து இருக்கும் .
“ரொம்ப நன்றி கீத்து” என்று ஆசுவாசமானார் மஞ்சு.
ஒரு வாரம் சென்றிருக்க , தேர்வுகள் முடிவடைவதால் , நண்பர்கள் அனைவரும் பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் உணவு விடுதியில் வெள்ளியன்று மதிய உணவு உண்டு விட்டு வர முடிவு செய்தனர் . தனக்கும் அனுமதி வேண்டும் என்று மஞ்சுவிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் சஞ்சு .
“அப்பா நிச்சயம் ஒத்துக்க மாட்டார் சஞ்சு ம்மா , விட்டு விடு…” என்று தன்மையாகச் சொன்னார் .
விஜயன் எழுந்து வந்துவிடுவாரோ என்று மஞ்சு அறை வாசலில் பார்வையை வைத்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தார் .
“இந்த ஒரு தடவை அம்மா…” என்று கெஞ்சினாள் .
“சஞ்சு பிடிவாதம் பிடிக்காதே , அப்பா வந்து விடுவார் , பள்ளியில் யாரெல்லாம் வருகிறார்கள் என்று முதலில் கேட்டு வா , அப்புறம் பார்க்கலாம்…” என்று சமாளித்து , பள்ளிக்குக் கிளப்பினார் .
அன்று பக்கத்தில் இருக்கும் கல்லூரிக்கு பேப்பர் பிரஷன்டேஷனுக்குச் செல்வதால் , தாமதமாகக் கிளம்பிக் கொண்டிருந்த விவேக் , சஞ்சு உள்ளே வருவதைப் பார்த்து , “அப்பா இருக்கும் போது , பேசாதே என எத்தனை தடவை சொல்வது? போய் கிளம்பு”என்று கடிந்தான்.
அவனையும் முறைத்து விட்டு கண்கலங்க , உள்ளே சென்றாள் .
பின் விஜயனும் , சஞ்சுவும் கிளம்பி விட , மெதுவாக அம்மாவிடம் விபரத்தைக் கேட்க ,
விசயத்தைச் சொன்னவர் , “அப்பா எப்படி டா அனுமதிப்பார் ? புரியாது சண்டை பிடிக்கிறாள்…” என்று புலம்பினார்.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த விவேக் , “சரிம்மா சாயங்காலம் அவள் வந்தவுடன் பேசிப் புரியவையுங்கள்”
மாலை மீண்டும் சஞ்சு ஆரம்பிக்க , மஞ்சு பல சமாதனங்களைச் சொல்லிப் பார்த்தார் . கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வடிய , “அம்மா இது பள்ளியில் நடக்கும் கடைசி சந்திப்பு . அதற்குப் பிறகு தேர்வு வந்து விடும் . அதில் எல்லோரும் பரபரப்பாகி விடுவோம் . அந்த ஹோட்டல் பள்ளிக்குப் பக்கம் தான் , பணம் கூட தர வேண்டாம் அம்மா , கீத்து பார்த்துக் கொள்வாள் , பிளீஸ் அம்மா…. “என்று கெஞ்சினாள்
மஞ்சு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார் . இரவெல்லாம் சஞ்சு கெஞ்ச ,
விவேக்கிடம் மஞ்சு இதைப்பற்றி பேச , “போய்விட்டு வரட்டும் அம்மா. இந்த காலத்தில் , இதையெல்லாம் தவிர்க்க முடியாது. நானும் இம்மாதிரி நிகழ்வுகளை கடந்திருக்கிறேன்…”.
“நீ ஒன்றிரண்டை தவிர பெரிதாகக் கேட்டதில்லையே? அதுவும் நீ ஆண் பிள்ளை என்பதால் தான், பெரிய போராட்டங்களுக்குப் பின் சரியென்றார் . சஞ்சுவிற்கு , ஒத்துக்கொள்ள மாட்டாரே…?”என்று தயங்க ,
“அப்பாவிடம் சொல்லாதீர்கள்…” என முடித்தான் விவேக் ..
“ராஜா…” என்று பதற ,
“நம் வீட்டுச் சூழ்நிலை புரியும் அம்மா , அதனால் நான் பெரிதாக கேட்க மாட்டேன்…” என்றான் தன்மையாக .
“ராஜா…” என்று தலையைத் தடவினார் .
பேச்சைத் தொடர்ந்தவன் , “ வேறுவழியில்லை அம்மா. இதை அனுமதித்தால் தான் , வேறு எதுவும் பெரிதாக கேட்டால் மறுத்து விடலாம் . கீர்த்தனாவிடம் பார்த்துக் கொள்ள சொல்லுங்கள்..”
மஞ்சு படபடப்போடு , “அப்பாவிற்குத் தெரிந்தால்…” என்று தயங்க ,
“நாம் சொன்னால் தான் தெரியும் , பள்ளி நேரத்திற்குள் வந்து விடுவாள் . அப்புறம் முக்கியமாக , அப்பாவிற்குத் தெரியாமல் நடக்கிறது என்று சஞ்சுவிற்குத் தெரிய வேண்டாம் . சின்ன பெண் உளறிவிடுவாள் இல்லையென்றால் இதைச் சாதகமாக வேறு விசயத்திற்குப் பயன்படுத்த நினைப்பாள். இன்னும் பக்குவம் வரவில்லை , இடம் பொருள் பார்த்து நடக்கத் தெரியவில்லை…” என்று முடித்தான் .
“இருந்தாலும் அப்பாவிற்குத் தெரியாமல் செய்வது உறுத்துகிறதுடா…”
“சரி அம்மா , இந்தப் பேச்சையாவது ஆரம்பிக்க முடியுமா? அப்படியே பேசினாலும் அனுமதி கிடைக்குமா ? கிடைக்காவிட்டால் கூடப் பராவாயில்லை, அதற்கடுத்து அடுத்து அவர் போடும் ஆட்டத்தை , சஞ்சு தாங்குவாளா?” என்று நிறுத்தினான்.
பின்,”கால மாற்றத்திற்கேற்ப அப்பா தன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் , ஒன்றும் செய்ய முடியாது அம்மா , இப்படித்தான் நடக்கமுடியும் என்று வருத்தத்துடன் உரைத்தான் .( இன்றும் சமுதாயத்தில் பல குடும்பங்களில் கருத்துக்களை பகிர , சுதந்திரமும் இடமும் இல்லாததால், பல விசயங்கள் மறைக்கப் படுகின்றன , அது பின்னாளில் பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன .)
அத்தியாயம் 9
பள்ளியில் கீர்த்தனாவிடம், அண்ணன் பேசியது தெரியாமல் சஞ்சு வீட்டில் நடந்ததைச் சொல்லி வருந்த , “நான் ஆன்ட்டியிடம் வந்து பேசுகிறேன்..” என்று கீத்து சமாதானம் செய்தாள் .
மாலை வரும்பொழுதே கீர்த்தனாவுடன் வந்து மீண்டும் ஆரம்பிக்க , “அப்பாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்” என்று முடித்தார் மஞ்சு .
மறுநாள் காலை மெதுவாக சஞ்சுவிடம் , விவேக் சொன்ன மாதிரி முழு விவரத்தை தெரிவிக்காது , “அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கியுள்ளேன் . எதையும் பேசி கெடுத்து விடாதே , அமைதியாகப் போய் விட்டு , சிக்கிரம் வந்து விடு , எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்…” என்று பலமுறை எச்சரித்தே அனுப்பி வைத்தார்.
“அம்மாவென்றால் அம்மா தான்..” என்று முத்தம் வைத்து விட்டு , எதிரே வந்த விவேக்கிடம் குஷியாக கையாட்டியபடி சென்றாள் . அவன் சிரித்தபடி நகர்ந்தான்.
எல்லாம் நல்ல படியாக முடிந்து , மாலை சஞ்சு வீடு வரும் வரை , மஞ்சு பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த பிறகு தான், சற்று ஆசுவாசமானார்.
பின்னர், “அப்பாவைப் பற்றி உனக்குத் தெரியுமே , இது மாதிரி இனி கேட்காதே சஞ்சு…” என்று ஒரு கண்டிப்புடன் நிறுத்திக் கொண்டார்
மாலை ராதாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் , நடந்த விசயத்தைப் பகிர்ந்து கொண்டு , அவருக்குச் சொல்லாமல் மறைத்துச் செய்ததைச் சொல்லி மிகவும் வருத்தப்பட்டார் மஞ்சு .
ராதாவும் வருத்தத்துடன் , “வேறு வழி இல்லையே மஞ்சு, பதின்பருவத்தில் இருக்கிறார்கள். வேகம் , பிடிவாதம் , அலட்சியம் , தங்களுக்கு எல்லாம் தெரியும் , தங்கள் முடிவே சரியானது என்ற எண்ணம் எல்லாம் இப்போது மிகவும் இயல்பு . இதை மிகவும் பக்குவமாகக் கையாள வேண்டும் .வீட்டில் ஒருத்தராவது பிள்ளைகளோடு சிநேகமாக இருக்க வேண்டும் மஞ்சு . ஆனால் இதைச் சரியாகக் கையாள கூடிய நிலையில் உன் குடும்ப சூழ்நிலை இல்லை . இந்தச் சூழ்நிலையில் சில பொய்களைத் தவிர்க்க முடியாது…. “ என்ற நீண்ட உரையாற்றினார் .
மேலும்,” இப்போது பிள்ளைகள் வெளியே போவதெல்லாம் மிகவும் சகஜம். இந்தக் காலத்தில் இதைத் தவிர்க்க முடியாது .நாலு விசயங்களைக் கேட்டால் , ரெண்டு விசயத்திற்காவது அனுமதிக்கத்தான் வேண்டும் இல்லையென்றால் வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியது வரும்…”
மஞ்சு புரியாமல் பார்க்க , “அப்புறம் நம்மிடம் சொல்லாமல் போக நினைப்பார்கள் . உதாரணத்திற்கு நீ அனுமதிக்கமாட்டாய் என்று உணர்ந்தால் , அடுத்த தடவை சஞ்சு சிறப்பு வகுப்பு இருக்கு , பிராக்டிக்கல் எழுத வேண்டும் என்று ஏதாவது ஒரு பொய் காரணம் சொல்லி , சாப்பிட்டு வருவாள் . அது இதைவிட பெரிய பிரச்சனை..” என்று விவரிக்க , மஞ்சுவும் தெளிவு பெற்று அமைதியானாள்
“இதில் ஒரே சந்தோஷம் , விவேக் இந்த வயதில் பக்குவமாக இருக்கிறான்” என்று புகழ்ந்து விட்டு , “ஆனால் உன் வீட்டில் எப்படி இவ்வளவு பக்குவமாய்…?” எனக் கேலி செய்தார் ராதா .
இரவு உணவின் போது கணவரிடம் ராதா அனைத்தையும் பகிர , இதைத் தற்செயலாகக் கேட்ட கீர்த்தனா , பராவாயில்லையே விவேக் கொஞ்சம் நல்லவன் தான் என்று நினைத்துக் கொண்டாள் .
தொடரும்…..
அத்தியாயம் 11
தீபாவளி பலகாரங்கள் செய்வதில் மஞ்சு பிஸியானார். விஜயன் ஒவ்வொரு வருடமும் தன் நண்பர்களுக்கு இல்லை அப்படி கூட சொல்ல முடியாது, தன்னுடன் பணியுரிபவர்களுக்கு , தன் வீட்டில் செய்யும் பலகாரங்களை வழங்குவார் , அதற்காக அன்புடன் , நட்புடன் கொடுக்கிறார் என்று நினைத்து விடக்கூடாது , எல்லாம் ஒரு பந்தாவிற்குத் தான் . அதனால் மஞ்சுவிற்கு வேலை அதிகமாகவே இருக்கும் .
மஞ்சு இவ்வளவு செய்கிறாரே என்று ஒரு பாராட்டு இருக்காது, அதிலும் நொட்டைகளைத் தேடிப் பிடித்துப் பேசுவார். போன தடவை செய்த பலகாரத்தைச் செய்யாதே. இதைச் செய் . அதைச் செய் என்ற கட்டளைகளுக்கும் குறைவிருக்காது . எதையும் கண்டு கொள்ளாது , மஞ்சு தன் கடமையைச் செவ்வனே செய்வார்.
இத்தனை வேலைப் பளுவிலும், பத்து நிமிடமாவது தன் தோழிகளோடு பேச ஓடி வந்து விடுவார் .
விஜயன் கூட, “வம்பு பேசாமல் இருக்க முடியாதோ..?” என்று பெண்கள் மீதான தன் இளக்காரமான பார்வையை வெளிப்படுத்துவார் .
சமுதாயத்தில் பல காலமாய் பெண்களின் நட்பு குறித்த பார்வை இப்படித்தான் உள்ளது .இதில் விஜயன் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால் மஞ்சு அதையெல்லாம் காதில் வாங்காமல் , கட்டாயம் இளைப்பாற வந்து விடுவார் .
குடியிருப்பில் , தீபாவளி இரவில் கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது. அனைவரும் ஒரே இடத்தில் கூடி பட்டாசு வெடிப்பார்கள் .
அதிசயமாக இந்த நிகழ்விற்கு மட்டும் , விஜயன் வருவார் . பெரிதாக யாரோடும் ஒட்டி உறவாட மாட்டார். குடியிருப்பில் யாரோடும் அதிகம் பழக்கமில்லை . ராஜி மற்றும் ராதா கணவரோடு கூட மில்லி மீட்டர் அளவு சிரிப்போடு, தலையசைப்போடு கடந்து விடுவார் . நின்று எல்லாம் பேசமாட்டார் . அவர் சிரித்தாரா ? என்று கூட சில நேரம் குழப்பம் வரும். அந்த அளவிற்குத் தான் இருக்கும் அவர் நடவடிக்கை இருக்கும் . தான் என்ற மனோபாவம் எப்போதும் ஓங்கி இருக்கும் . இவர் குணம் தெரிந்தால் , அவர்களும் இரண்டு அடி தள்ளியே நின்று விடுவார்கள் .
அவர் கிளம்பும் போது மஞ்சுவும் கிளம்பியாக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். பல நேரங்களில் தன் தோழிகளிடம் , பிள்ளைகள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ள சொல்லி விட்டு பின்னாடியே ஓடுவார் .
நல்ல நாளில் கூட , “உன் இஷ்டத்துக்கு இருக்க முடிகிறதா பார்..” என்று புலம்புவார்கள் தோழிகள் .
அதற்கும் ஒரு மென்னகையோடு கடந்து விடுவார் .
நாட்கள் அது பாட்டிற்கு ஒட , டிசம்பர் மாலை ராதா வாட்ஸ் சப்பில் சீனாவில் வீதிகளில் இறந்து விழுகிறார்கள் என்ற வீடியோவை காண்பிக்க , முதலில் பயந்தனர் , பின்னர் வாட்ஸப் வதந்தியாக இருக்கும் என்று தங்களைச் சமாதனப் படுத்திக் கொண்டனர் .
அன்று கொஸ்டீன் பாங்க்கில் இருக்கும் வினாக்களை கீத்து செய்து பார்த்துக் கொண்டிருக்கும் போது , கணினி பாடத்தில் ஒரு ப்ரோகரம் வரவில்லை. நண்பர்களுடன் கேட்டுப் பார்த்தால் யாருக்கும் தெரியவில்லை. பின் கூகுள் ஆண்டவர் துணையை நாடினாள் . அங்கேயும் தோல்வியே , சஞ்சுவிற்கு போன் செய்து விவேக்கிடம் கேட்கச் சொன்னாள் கீத்து.
உடனே சஞ்சு , “போடி, அண்ணாகிட்ட கேட்க முடியாது , ரொம்ப சீன் போடுவான்..” என்று மறுத்தாள் .
“சரி , நீ நம்பர் கொடு , நான் பேசுகிறேன்..” என்று வாங்கிக் கொண்டு, அவனை அழைத்தாள் .
விவரத்தைக் கேட்டவன் , “சரி, வாட்ஸ் ஆப் பில் விடையை அனுப்புகிறேன்” என்று போனை வைத்தான் .
“சிடுமூஞ்சி…” என்று மனதிற்குள் திட்டினாள் .அரைமணி நேரத்தில் விடை வர , அறிவாளி தான் போல என மெச்சினாள் .
ஒரு நன்றியைத் தட்டி விட்டு படிப்பில் கவனமானாள் .
அப்பா வீட்டில் இல்லாதிருக்க , இரவு உணவின் போது , விவேக் சஞ்சுவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பைச் சிந்தினான் .
“இவள் தோழி , அந்த அரைக்காபடி , படிப்பில் உதவி கேட்டாள் அம்மா. என்ன பில்டப் கொடுத்தால் உங்கள் பெண், இப்ப நான் தான் அவளுக்கு குரு..” என்று வெடித்துச் சிரிக்க,
மஞ்சுவும் சிரிப்பில் இணைய , சஞ்சு கோபித்துக் கொண்டு எழ ,
“இன்னும் ஒரு சப்பாத்தி சாப்பிடு” என்று மஞ்சு தடுக்க ,
“சாப்பிட்டுப் போ..” என்று விவேக்கும் உட்கார வைக்க முயல ,
“ஒன்றும் வேண்டாம்..” என்று விவேக்கை முறைத்துவிட்டு , கை கழுவ சென்றாள் .
“சரியான தொட்டாசிணுங்கி அம்மா…” என்று சிரித்தான் .
மறுநாள் பள்ளியில் கீத்துவிடம், “வேண்டாம் என்று சொன்னேன் கேட்டாயா…?” என்று நேற்று தான் அசிங்கப் பட்டதை விவரிக்க ,
காண்டான கீத்து , “என்னை அரைக்காபடி என்றா சொன்னான் உன் அண்ணன் , கையில் கிடைக்கட்டும். அப்ப இருக்கு…” என்று கருவிக்கொண்டாள் .