சஞ்சனா   நாள்_2

அத்தியாயம் 4

இளைப்பாற சாய்ந்த நேரத்தில் , மஞ்சுவின் மனது தன் வாழ்க்கையைக் குறும்படமாக ஓட்டியிருக்க , மூச்சை இழுத்து விட்டவர்  , கட்டில் மேல் கிடந்த துண்டினை எடுத்து உலர்த்தினார் . பின் கலைந்து கிடந்து கிடந்த  பொருட்களை  ஒழுங்கு செய்தார் . அப்படியே உணவை முடித்தவர்,  மற்ற வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்

மாலையில் முதலில் சஞ்சனா வர , அவளுக்கு உணவைக் கொடுத்து விட்டு , அவளை டியூசனில் கொண்டு போய் விட்டு வந்தவர், பின் அப்படியே கீழே  குடியிருப்பு வளாகத்தில் நடக்கத் தொடங்கினார். எதிர்ப்பட்டவர்களைச் சிநேக பாவத்தோடு , சிரித்தபடி கடந்தார் . 

நான்கு சுற்றுகள் முடித்திருக்க , அவர் தோழிகள் ராஜி , ராதா வர , அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து பேசத் துவங்கினர் . 

இதில் ராஜியின் கணவர் கண்ணன் வங்கியில் மேலதிகாரியாக இருக்க, அவர் மகன் ரவி  கணினி நிறுவனத்தில் வேலை பார்க்கிறான்.

ராதாவின் கணவர் ரமேஷ் தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் , இவர்களின் ஒரே மகள் கீர்த்தனா  . இதில் கண்ணனும் , ரமேஷும் நல்ல நெருக்கம் .

ராதாவும் அவள் கணவன் ரமேஷும் நல்ல அன்யோன்யமான தம்பதியினர் . ஒருவர் மீது மற்றொருவருக்கு அன்பும் , மரியாதையும் உண்டு . எல்லா விசயங்களையும் கலந்து ஆலோசிப்பார்கள் . அதனால் பெரிய சண்டை சச்சரவுகள் இருக்காது .மற்றவர்களுடைய  நட்பு வட்டத்தை , சொந்தங்களை மதிப்பார்கள் . மேலும் மற்றவர்களின் ஆசைக்கு , கனவுகளுக்கான  இடமும் கொடுப்பார்கள் . மொத்தத்தில் கண்ணு படக் கூடிய ஐடியல் ஜோடி .

என்னதான் கீர்த்தனா ஒரே பெண் என்றாலும் அடம்  , முன்கோபமெல்லாம் கிடையாது . மிகவும் பக்குவமான பெண் . ஏன் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் உண்டு .

 அதற்குக் காரணம் கீர்த்தனா வீட்டில் , நினைத்ததைப் பெற்றவர்களிடம் பகிர , பதின் பருவத்தில் வரும்  குழப்பங்களை மனம் விட்டு தைரியமாகப் பேச , சுயமாகச் சிந்திக்க , சுயமரியாதையோடு செயல்பட என்று அனைத்துச் சுதந்திரமும் இருந்தது .

வீட்டில் செல்லமெல்லாம் கிடையாது . வேலைகளை பகிர வேண்டும் . தன்னுடைய பொருட்களை சரியாகப் பராமரிக்க வேண்டும் . அதேபோல் கேட்டதெல்லாம் கிடைக்காது , தேவையா ? தேவையில்லையா?  உடனே வேண்டுமா?  தள்ளிப் போடலாமா ? என்று பட்டிமன்றம்  நடந்த பின் தான் நிறைவேறும் . மொத்தத்தில் பெற்றவர்கள் நன்றாக யோசித்து , மிகுந்த கவனத்துடன் வளர்க்கிறார்கள் .

 இதில் கீர்த்தனாவும், சஞ்சனாவும் ஒரே பள்ளி , ஒரே வகுப்பு . இங்கே குடி வந்ததில் இருந்து தொடரும் பல வருட இணைபிரியா  நட்பு  , நகமும் சதையுமான  தோழிகள் .

 கீர்த்தனா கொஞ்சம் சூட்டிகை ,  படிப்பிலும் கெட்டி. ஆனால் சஞ்சுவோ  கொஞ்சம் பயந்த சுபாவம் , படிப்பிலும் சுமார்தான் . அப்பாவின் பேச்சைக் கேட்டே நடப்பதால் சுயசிந்தனை என்பது பெரிதாக இல்லாமல்  பெரும்பாலும்  பள்ளியில் கீர்த்தனாவைச் சார்ந்தே இருப்பாள். 

மாலையில் தோழிகள் கூடி அரைமணி நேரமாவது பேசுவதை வழக்கமாக்கி இருந்தனர் . உலக  செய்தி முதல் உள்ளூர் பொருளாதாரம் வரை அலசுவார்கள் .

“தீபாவளி வரப் போகிறதே , உடைகள் எங்கே வாங்கலாம் என்று யோசித்திருக்கிறாய் மஞ்சு ?” என்று ராஜி ஆரம்பிக்க,

ஒரு புன்னகையை தவழவிட்டபடி , “நீ… ?” என்று கேள்வியைத் திருப்பினார் மஞ்சு .

“புதுசா நம்ம ஏரியாவில் தி. நகரில் இருக்கும் பெரிய கடையின் கிளையை திறந்திருக்கிறார்கள் . கூட்டம் அலை மோதுகிறது. காலையில் சீக்கரம் சென்றால் தான் கொஞ்சம் நிதானமாக வாங்க முடியும் என்கிறார்கள். ஞாயிறு குடும்பத்துடன்  போகலாம் என்று யோசனை…” என்றார் ராஜி .

இடைபுகுந்த ராதா , “இவகிட்ட போய் கேட்கிறாய் ? விவேக் அப்பா எங்கே கூட்டிக் கொண்டு  போகிறாரோ… , அந்தக் கடைக்குத் தலையாட்டிக் கொண்டு பின்னாடியே போக மட்டும் தான் மஞ்சுவால் முடியும் ?” என்றார் ஆதங்கமாய் .

தன் பங்கிற்கு ராஜி , “மனுசன் மனைவியிடம் அன்பாய் பேசிப் பார்த்ததே கிடையாது , திட்டவும் , குற்றம் சொல்ல  மட்டுமே வாயைத் திறப்பார்.  பெண்கள் என்றால் மட்டமென்று நினைப்பு..” என்று குமுறினார் .

“விடு ராதா , என் வாழ்க்கை அவ்வளவு தான் , மாற்ற முடியாததைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது ? வேறு ஏதாவது பேசு …”என்று மஞ்சு சொல்ல ,

 மஞ்சுவின் வார்த்தையில்  தவழ்ந்த சோகத்தைக் கண்டு, பேச்சை மாற்றம் பொருட்டு, “தீபாவளிக்கு என்ன பலகாரம் ?” என்று  ராஜி கேட்க,

“இன்னும் முடிவு செய்ய வில்லை….” என்று மஞ்சு இழுத்தார் .

உடனே  ராதா ,  “ நீ எப்படி முடிவு செய்வாய்? உன் புருஷன் அல்லவா மெனு சொல்ல வேண்டும்…” என்று சடைத்தார். 

மஞ்சு பாவமாகப் பார்க்க ,

 “உன்னையெல்லாம்  திருத்தவே முடியாதுடி” என்று ஏற்ற இறக்கத்தோடு சினிமா டயலாக் பேசி மஞ்சுவை கலாய்த்தார் ராதா. பின், “நான் இந்த முறை மைசூர் பாக்  போடலாம் என்று யோசிக்கிறேன்..”  என்று சொல்ல , 

உடனே மஞ்சு , “மைசூர் பாக்கா ?” என்று இழுக்க ,

ராஜி வயிற்றை பிடித்துக் கொண்டு, “பல் பத்திரம்…” என்று சிரிக்க ,

உடனே ராதா ரோஷமாக , “இந்த முறை பார்…” என்று பேச ஆரம்பிக்க, மற்ற இருவரும் பொங்கிய சிரிப்பை அடக்க முயன்றனர் .

கடுப்பான ராதா , “உன் மெனு என்ன ராஜி?” என்று வேகமாகக் கேட்க ,

மஞ்சு மாதிரியெல்லாம் மாங்கு மாங்கென்று இரண்டு மூன்று வகை இனிப்பு , காரமென்று என்றெல்லாம் என்னால் முடியாது .  ரவா உருண்டையும் ,  முறுக்கும் தான் . அப்புறம் இந்தக் காமெடியைக் கேளேன்…” என்று ராஜி சுவாரசியமாக ஆரம்பிக்க , 

ராதா ஆர்வமாக,  

 “எங்கள் தளத்தில் இருக்கும் உமாவிற்கும் , அவள் எதிர் வீட்டில் இருக்கும் சத்யாவிற்கும் ஒரே சண்டை…” என்று குறும்புடன்  நிறுத்த ,

உடனே ராதா , “அடி வாங்கப் போற ராஜி , சஸ்பென்ஸ் எல்லாம் இந்தச் சின்ன இதயம்  தாங்காது , சிக்கிரமாகச் சொல்…” என்று எகிற,

தன்  கோலத்தை சத்யா அழித்து விட்டதாக உமா சண்டைக்கு வர , “நடை பாதையில் இதெல்லாம் சகஜம்…” என்று சத்யா காரணம் சொல்ல ,

“அப்புறம் என்னாச்சு? என்று ராதா ஆர்வமாக,

“ஒரே ரகளை தான்…” எனச் சிரிக்க , இருவரும் இணைந்தனர் .

சிறிது நேரம் அபார்ட்மெண்ட் கதைகள் பேசினர். பின் நேரமாவதை உணர்ந்து , மஞ்சு சஞ்சனாவை அழைக்க வேண்டும் என்று கிளம்ப , 

மற்ற இருவரும் தங்கள்  நடையைத் துவக்கினர் .

மஞ்சுவிற்கு மூச்சாறலே , தன் தோழிகளுடன் இருக்கும் இந்தச் சொற்ப நிமிடங்கள் தான் . ஆகையால் கட்டாயமாக மாலை சந்திப்பிற்கு வந்து விடுவார் .

சஞ்சனாவை அழைத்து வரும் பொழுதே ,வீட்டுக்கு வேண்டிய காய்கறி , பழங்கள் ,  பலசரக்கு வாங்கி வந்து விடுவார் .  வேலையில்லாத நாட்களில் நூலகம் , கோவில் என்று  திட்டமிட்டுக் கொள்வார்  மஞ்சு .

அத்தியாயம் 5 

அன்று தற்செயலாக விவேக் ஓய்வாக இருக்க , சஞ்சுவும் டியூசன் முடித்து வர , இருவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தனர் .

 “எப்படி தேர்வு எழுதினாய்?” என்று சஞ்சுவிடம் விசாரிக்க,

“பரவாயில்லை அண்ணா , மத்த கணக்கெல்லாம் போட்டு விட்டேன் , கால்குலஸ் தான் கஷ்டமாக இருக்கு…” என்று இழுத்தாள் . 

“ஓ…!  அப்ப இந்த ஞாயிறு வா ,சொல்லித் தருகிறேன் சஞ்சு..” என்று உதவிக் கரம் நீட்டினான் .

“ஒன்றும் வேண்டாம் , உன் கிட்ட திட்டு வாங்க முடியாது, நான் கீத்து கிட்ட படித்து கொள்கிறேன்.” 

“அவளே ஒரு அரைக்காப்படி ,  அவளிடம் படித்தால் நீ உருப்பட்ட மாதிரி தான் , ஒழுங்காக ஞாயிறு வா , சொல்லித் தருகிறேன்..” என்று மீண்டும் வலியுறுத்தினான் .

“என்னை என்ன வேண்டுமானாலும் சொல் , என் கீத்துவைத் சொல்லாதே , அவள் தான் டாப்பர் தெரியுமா?” என்று ரோஷத்துடன் மல்லுக்கு நின்றாள் சஞ்சு . 

இடைபுகுந்த மஞ்சு , “உன் அண்ணனும் நல்ல மதிப்பெண் எடுத்து , உயர்ந்த கல்லூரியில் படிக்கிறான்” என்று  வக்காலத்து வாங்க , 

 “அண்ணா கிட்டயெல்லாம் படிக்க முடியாது அம்மா , நான் அறிவாளி என்று சீன்  போடுவான்…”

 “உனக்கு  தெரியாததைச் சுட்டிக் காட்டினால் , அதற்கு இப்படி ஒரு பேச்சா ?” என்று கண்டித்தான்.

“அம்மா..” என்று உடனே சஞ்சு கண்கலங்க , 

உள்ளே புகுந்த மஞ்சு , “விடுடா , அவளுக்கு எங்கே விருப்பமோ… அங்கே படிக்கட்டும்” என்று சமாதான உடன்படிக்கை செய்தார்.

நல்ல வேலை தப்பித்து விட்டோம் என்று மனதில் ஓட , இங்கிருந்தால் அண்ணன் விடமாட்டான் என்று இடத்தைக் காலி செய்ய முயன்றாள் .

கடுப்பான விவேக்  , “தொட்டாசிணுங்கி…” என்று கேலி செய்தான்.

“அம்மா…” என்று சஞ்சு சிணுங்க , 

“ராஜா…” என்று மஞ்சு கோபமாகக் குரல் எழுப்ப , கிடைத்த கேப்பில் தன் அறைக்குச் சென்று விட்டாள் .

“இது ரொம்ப சின்ன விசயம் அம்மா , இதையே தாங்காமல் கண் கலங்குகிறாள் . நீங்கள் அவளுக்கு எடுத்துச் சொல்லாமல் , என்னிடம் வருகிறீர்கள்…” என்று வருத்தப்பட்டபடி , உண்டு முடித்தான் . பின் அவன் அறைக்குச்  சென்றான்.

சிறிது நேரம் கழித்து தண்ணீர் எடுக்க விவேக் வெளியே வர, அம்மாவிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள் .ஏதோ ஒரு கிரீம் வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தாள் . விலையைக் கேட்டு மஞ்சுவிற்கு மயக்கம் வராத குறை தான்.

“ப்ளீஸ் மா ,  நான் சிகப்பாகி விடுவேன்…” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள். 

விவேக் களத்தில் குதிக்க , “ஏன் திடீரென்று கேட்கிறாய் சஞ்சு?” என்று  ஆராய, 

 “என் தோழிகள் சிலர் , என்னைக் கருப்பி என்று கேலி செய்கிறார்கள்..” என்று விசும்ப ,  

சஞ்சு சற்று மாநிறம் தான். அதுவும் பதின்பருவத்தில் , படிப்பு , அலைச்சல் என்று உடலை சரியாகக்  கவனிக்காமல் சற்று கருத்து , மெலிந்திருந்தாள் . உரிய வயது வரும் பொழுது அழகாக மலர்வாள் என்பது அவளுக்குப் புரியாமல் அடம் பிடித்தாள் .

உடனே மஞ்சு, “இதைக் கேட்டு கீத்து சும்மாவா இருந்தாள்?” என்று ஆச்சரியப்பட ,

“அதெல்லாம் கேலி செய்தவளை, போடி நெட்ட கொக்கி” என்று பதிலடி கொடுத்து விட்டாள்  என்றாள் பெருமையாக .

“அப்புறம் என்ன? பிரச்சனை முடிந்ததே..” என்றார் மஞ்சு 

“நீ என்ன செய்தாய் சஞ்சு?”என்று விவேக் கேட்க  

“அப்படி பேசியதும் மிகவும் கஷ்டமாகி விட்டது அண்ணா, அழுகையை  வந்தது , அடக்கிக் கொண்டு பேசாமல் நின்றேன்.”

“அதான் கீத்து இருக்காளே , அப்புறம் என்ன ? ஃப்ரீயா விடு ராஜா…” என்றார் மஞ்சு.

“என்ன அம்மா இது ?  இவள் தைரியமாகக் கையாண்டிருக்க வேண்டாமா?  அப்படி  இவளால் தனியாகக் கையாள முடியாவிட்டாலும் கீத்துவோடு சேர்ந்து பேச வேண்டியது தானே…”  என்றவன் ,

பின் வேகமாக சஞ்சுவிடம் திரும்பி, “எப்போதும் யாராவது காப்பாற்ற வருவார்களா ?  நீ தான் உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும்”என்றான் கடுமையாக .

சஞ்சு கண்கலங்க, “விடுடா ராஜா , வயது வரவர தைரியமாகி விடுவாள்” என்று சமாதானப்படுத்த  மஞ்சு முயல ,

“அவளைத் தைரியப்படுத்துங்கள் அம்மா, அவளை கைக்குள்ளே வைத்துக் கொள்ளாதீர்கள் . நாளை கல்லூரி,  வேலை என்று வெளியே போக வேண்டும் , எல்லா இடங்களுக்கும் கீத்து வரமுடியாது. தனியாக சமாளிக்கச் சொல்லிக் கொடுங்கள். அதைவிடுத்து என்னைச் சமாதானப் படுத்தாதீர்கள்…”  என்றவன் சஞ்சுவைப் பார்க்க, அவள் முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள் . 

“யாராவது ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள் சஞ்சும்மா,  அதற்காக நாம் ஒவ்வொன்றையும் செயல் படுத்த முடியுமா? சரிதான் போடி என்று போக வேண்டும், அதை விடுத்து , வந்து அழுகிறாய் , அது வேண்டும் , இது வேண்டும் என்று கேட்கிறாய்…” என்று திட்டினான் .

இயல்பான பதின்பருவ பிடிவாதத்தால் , விவேக் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ளாமல் , “நான் சிகப்பாக வேண்டும் அம்மா, ஒரு க்ரீம் தானே , வாங்கிக் கொடுங்கள்…” என்று அடம் பிடித்தாள் 

“எந்த க்ரீமும் நம் நிறத்தை மாற்றாது சஞ்சு , எல்லாம்  பொய் ,  அப்படிச் சிகப்பாக்கும் என்றால் யாரும் கருப்பாகவே இருக்கமாட்டார்கள்…” என்று விளக்க முற்பட , 

“நான் அம்மாவிடம் தானே கேட்கிறேன் , நீ உள்ளே வராதே…”  என்றாள் கோபமாக .

மீண்டும் பொறுமையாக , “இதையெல்லாம் அப்பாவிடம் கேட்க முடியாது சஞ்சு..” என்று விளக்க முற்பட்டான் .

 “ஆமாம் டா சஞ்சு , அப்பா வாங்கித் தரமாட்டார் ,  திட்டும் கிடைக்கும்…”  என்று மஞ்சுவும் சொல்ல ,

சஞ்சுவும் தன் பிடிவாதத்திலே, “அம்மா, இந்த ஒரே ஒரு தடவை மட்டும் அப்பாவிடம் பேசி அந்த கிரீமை வாங்கிக் கொடுங்கள்..” என்று கேட்டுக் கொண்டிருக்க ,

“கொஞ்சமாவது யோசி சஞ்சு , தேவையில்லாமல் அம்மாவை சங்கடப்படுத்தாதே..” என்றான் வேகமாக . 

பேச்சின் தீவரத்தில் விஜயன் வந்ததை  அனைவரும் கவனிக்கத் தவறினர் .

“என்ன விசயம்? என்ன க்ரீம்”? என்று குரல் கேட்டு வெலவெலத்தனர் .

“ஒன்றும் இல்லை அப்பா…”  என்று சஞ்சு திணற , 

“மஞ்சு…” என்று கர்ஜிக்க ,

விஜயனின் எதிர்பாராத வரவால் , எப்படிச் சமாளிப்பது? என்று புரியாமல் மஞ்சுவும் தடுமாற,

“என்ன விசயம்? என்று கேட்டேன்…” என்றார் அழுத்தமாக.

வேறு வழியின்றி விசயத்தைச் சொல்ல , 

“அறிவு இல்லை , படிக்கிற வயசில் என்ன மேனாமினிக்குத்தனம் வேண்டிக் கிடக்குது?”என்று கடுமையான வார்த்தைகளைப் பிரோயோகித்தார் . 

சஞ்சு அழுதபடி நிற்க ,

“மதிப்பெண்கள் வரட்டும் , அப்ப இருக்கு உனக்கு கச்சேரி…” என்று கடுகடுத்தார்.

இப்போது சஞ்சுவிற்குப் பரிந்து பேசினால் பிரச்சனை இன்னும் பெரிதாகி விடும் என்பதை உணர்ந்தே மஞ்சு அமைதி காத்தார் . 

சஞ்சு பாவமாகப் பார்க்க , மனதைக் கல்லாக்கிக் கொண்டு நின்றார் . விவேக்கும் அதே யோசனையில் மௌனம் காத்தான்.

“ச்சே… , ஒரு வாரமாக வேலை ஜாஸ்தி, இன்று தான் சீக்கிரம் முடிந்தது . அதனால் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று  வீட்டுக்கு  வந்தால் , ஏழரையை கூட்டுகிறாய்? ஒழுங்காகப் போய் படி…” என்று சஞ்சுவை விரட்டினார் .

மஞ்சு கண்ஜாடை காட்ட , சஞ்சு வேகமாக தன் அறைக்குச் சென்றாள் . விவேக்கும் நகர்ந்தான் .

“காபி எடுத்து வருகிறேன்..” என்று சமாளிக்க முயன்றபடி , சமையலறைக்குச் செல்ல ,

விஜயன் முறைத்தபடி, குளியலறைக்குள் புகுந்தார்  .

இதில் விவேக் , மிகச் சிறிய வயதிலேயே , அப்பாவின் தன்மை , குணம் , எண்ணம் ஆகியவற்றைக் கண்டு கொண்டான் . அம்மா படும் பாட்டையும் உணர்ந்தவன், பெரும்பாலும் தன்னால் அம்மாவிற்கு எந்தத் தொந்தரவும் வராமல் பார்த்துக் கொள்வான் . படிப்பிலும் கவனத்தோடு இருப்பான் . அப்பாவிடமும் பேச்சு வாங்காமல் பக்குவமாய் நடந்து கொள்வான் .

சஞ்சு தான் இன்னும் இரண்டு கெட்டானாய் இருக்கிறாள்,  நேக்குப் போக்கெல்லாம் தெரியாது , அப்பா இருக்கும் போதே ஏதாவது பேசி வாங்கிக் கட்டிக்கொள்வாள் . 

பெரும்பாலான நேரங்களில் மஞ்சு தான் உள்ளே புகுந்து காப்பாற்றுவார் . அதையும் மீறி  சில நேரங்களில் இந்த மாதிரி நிகழ்வுகளும் நடப்பது உண்டு.  

உடலை சுத்தம் செய்து கொண்டு வந்த விஜயனிடம் சூடான காபியை கையில் கொடுக்க , காபியை வாங்கிக் கொண்டு டிவியை உயிர்ப்பித்தார் .

டிவியில் மாற்றி மாற்றி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்க , பிள்ளைகள் இருவரும் தங்கள் அறைக்குள் ஒடுங்கினர் .

சமையலறையில் இரவு உணவுத் தயாரிப்பில் , மஞ்சு பரபரப்பாக இருக்க , அழைப்பு மணி அடித்தது . கணவர் ஹாலில் தானே இருக்கிறார் என்று குருமாவிற்குத் தாளிக்க , மீண்டும் மணி ஒலித்தது .

மஞ்சு எட்டிப் பார்க்க , யார் வீட்டிலோ மணி அடிப்பது போல் டிவியோடு ஐக்கியமாகியிருந்தார் விஜயன் .

நீண்ட பெரு மூச்சை விட்டபடி , வேகமாக  கருகி விடக்கூடாது என்பதற்காக  தாளிப்புக்  கரண்டியை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விட்டு , கதவை திறக்க விரைந்தார் .

வாசலில் வாடிக்கை பூக்காரம்மா , “என்னம்மா , இம்மா நேரமாக்கி விட்டாய்? இன்னும் எத்தனை வீட்டுக்குப் போக வேண்டும் தெரியுமா?”  என்று சலித்தவாறு பூவை கொடுத்தார் . பின் , “இந்த மாத துட்டு மஞ்சம்மா?” என்று கேட்க ,

“ஒரு நிமிடம்…” என்று விஜயனைப் பார்க்க , பேச்சைக் காதில்  வாங்கிய போதும் , எதுவும் காதில் விழாதது போல் அமைதியாகவே டிவி பார்த்தார்.

மஞ்சு மீண்டும்,  “ஏங்க …” என்று தயங்க ,

இதைக்  கவனித்த பூக்காரம்மா , “சரி விடும்மா , எனக்கு நேரமாகிவிட்டது. அடுத்த வாரம் வாங்கிக் கொள்கிறேன்…” என்று நடந்தார். மஞ்சு கையைப் பிசைந்தபடி சரியென்று தலையாட்டினார்.

 மனதளவில் மிகவும் குன்றிப் போனார் . மனதின் குமுறல்களை அடக்கியபடி , கணவனை ஒரு பார்வை பார்த்து விட்டு,  எதுவும் பேசாது சமையலறைக்குள் நுழைந்தார் மஞ்சு .

இரவு உணவை தயாரித்து விட்டு ,  “சாப்பிட வாங்க…” என்று அழைக்க ,

 டிவியைப் பார்த்தபடி , “நேரமாகட்டும்..”  என்று முடித்தார் . பின் பிள்ளைகளை கூப்பிட , அவர்கள் வந்து அமைதியாக உணவருந்தினர் .

விவேக்கைப் பார்த்து , “படிப்பு எப்படி போகிறது?” என்று கேட்க,

“நன்றாகப் படிக்கிறேன் அப்பா…” என்று நிறுத்திக் கொண்டான் .

சஞ்சு அமைதியாக இருக்க , “உன் அண்ணனைப் பார்த்துப் படி , அதை விட்டு தேவையில்லாத வேலை பார்க்காதே…” என்று ஒரு குட்டு வைத்து விட்டு , மீண்டும் நிகழ்ச்சியைப் பார்க்கத் துவங்கினார் .

பின் அரைமணி கழித்து சாப்பிட வர , சூடாக அவருக்கு சப்பாத்தி போட்டுக் கொடுத்தார் . பின் தானும் உண்டு விட்டு , சமையலறையை ஒதுங்க வைத்து விட்டு , படுக்கை அறைக்குள் நுழைந்தார் .

படுக்கையில் விஜயன் செல்போனை நோண்டி கொண்டிருக்க , மேஜையில் பணம் இருந்தது .

அமைதியாக பணத்தை எண்ணிய மஞ்சு , “ஏங்க…”என்று தயங்க ,

விஜயன் கைபேசியிலே இருக்க , மீண்டும் “ஏங்க…” என இழுக்க , 

சற்று தலையை நிமிர்த்தி , என்ன? என்பது போல் பார்த்தார்.

“இந்த மாதம் தீபாவளி வருகிறது , பலகாரம் செய்ய வேண்டும் , பலசரக்கு அதிகம் வாங்க வேண்டும் , இரண்டாயிரம் அதிகம் வேண்டும் . அப்படியே  தீபாவளி துணி எடுக்க வேண்டும்…”

“ம்ம்… , காலையில் பணம் எடுத்துத் தருகிறேன்…” என்று பேச்சு முடிந்தது என்பது போல் மீண்டும் செல்போனில் மூழ்க , மஞ்சுவும்  குளியலறைக்குள் நுழைந்தார் . 

தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டு  வந்து , விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுக்க, விஜயன் மஞ்சுவை அணைத்தார் . மனதில் ஆயிரம் கொந்தளிப்புகள் இருந்த போதும், வேறு வழியின்றி மறுப்பு ஏதும் சொல்லாமல் அடங்கினார் .

தொடரும்…..ற