சென்னையில் வளர்ந்து வரும் புறநகர் பகுதியில் அமைந்துள்ள முன்னூறு வீடுகளைக் கொண்ட அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் , அதிகாலையில் அந்த வீட்டுச் சமையலறை மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது . பால் குக்கர் விசில் அடிக்க , வேகமாக வந்து அடுப்பை அணைத்தார் மஞ்சுளா .
பின் தனக்கென்று சூடான பாலில் டிக்காஷனை ஊற்றி மணக்க மணக்க காபி கலந்தார் . காபியை அருந்தியபடி , காய் நறுக்க ஆயுத்தமாக , ஒரு மடக்கு குடித்திருக்க , உலை கொதிக்க , மணியைப் பார்த்தவர் , காபியை அருகில் வைத்து விட்டு , அதில் அரிசியை கலைந்து போட்டார் .
மீண்டும் காபியை உறிஞ்ச , அது சற்றே ஆறிப் போயிருக்க , ஒரு பெருமூச்சை விட்டபடி , ஒரே மடக்கில் காபியை குடித்து முடித்தார் . பின் காயை நறுக்கி சட்டியில் வேகப் போட்டபடி மணியை பார்க்க , ஐந்து மணி முப்பது நிமிடம் எனக் காட்ட , மகன் விவேக்கை எழுப்ப விரைந்தார்.
“விவேக் எழுந்திரு, மணியாச்சு” என்று போர்வையை தலை வரை போர்த்தி அசையாமல் உறங்கிய மகனை எழுப்ப முயன்றார் .
“அம்மா இன்னும் கொஞ்ச நேரம்…” என்று மனு போட்டான் .
“நேரமாகி விட்டது விவேக் , அப்புறம் கல்லூரி பேருந்தைப் பிடிக்க முடியாது “ என்று எச்சரிக்க, உடனே அரக்கபரக்க எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான் .
சென்னைக்கு மிக அருகாமையில் (! ) ஒரு மணி நேரப் பேருந்து பயணத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் விவேக் கணினிப் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கிறான் . அக் கல்லூரி பேருந்தைப் பிடிக்கத் தான் , இந்த அதிகாலை திருப்பள்ளி எழுச்சி .
மகன் தயாராகி வரட்டும் என்று மீண்டும் சமையல் அறைக்குள் புக ,
கல்லூரியில் காலை உணவு என்றிருக்க , மகனுக்கு கல்லூரிக்குப் போகும் வரை பசி தாங்க வேண்டும் என்பதற்காக, கஞ்சியைப் பழக்கப் படுத்தியிருந்தார் . விவேக் அரை மணிநேரத்தில் கிளம்பி வர , குடிக்கும் பதத்தில் ஆற்றித் தயாராக வைத்திருந்த சத்து மாவு கஞ்சியை கையில் திணித்தார்.
விவேக் வேக வேகமாகக் குடித்து விட்டு கிளம்ப , மகன் அனைத்தையும் எடுத்து விட்டானா? என்று பலமுறை வினவி , உறுதிபடுத்திக் கொண்டார் .
“நான் சின்ன பையன் இல்லை அம்மா….” என்று புன்னகைத்தபடி கிளம்பினான்.
“இல்லைடா ராஜா , எதையாவது மறந்து விட்டால் திரும்பி வந்து எடுக்க முடியுமா? ஒரு தடவை ஞாபகப்படுத்துவது நல்லது தானே…”
“சரி அம்மா” என்று விடைபெற , மகன் கண்ணில் இருந்து மறையும் வரை பால்கனியில் நின்று வழி அனுப்பினார் மஞ்சுளா .
மணி ஆறு முப்பதாக , அடுத்த கடமை அழைக்க , மகள் சஞ்சனாவை எழுப்பச் சென்றார் . மகளும் அதே பல்லவியைப் பாட ,
“எழுந்திரு, நேரமாச்சு…” என்று கட்டிலில் அமர்ந்து முதுகைத் தட்ட, சஞ்சு வசதியாக அம்மாவின் மடியில் சலுகையாகப் படுத்துக்கொண்டு, இன்னும் கொஞ்ச நேரம் என்று செல்லம் கொஞ்சினாள் .
“எழுந்திரு, அப்புறம் சரியாகச் சாப்பிடாமல் போவாய்…” என்று செல்லமாக அடிபோட ,
“அம்மா ஐந்து நிமிடம்…” என்று சிணுங்கியபடி வசதியாகப் படுத்தாள் .
அடுப்பை சிம்மில் வைத்தோமா? என்ற சந்தேகம் உதிக்க , சஞ்சுவை தள்ளி விட்டு, அவதி அவதியாக சமையலறை நோக்கி ஓடினார் மஞ்சு .
சிம்மிலே இருக்க அசுவாசமானவர் , சாம்பாருக்கு ஊற வைத்திருந்த பருப்பைக் குக்கரில் போட்டு விட்டு, மீண்டும் மகளை எழுப்ப சென்றார் ..
“சஞ்சும்மா எழுந்திரு , திரும்பி வந்து எழுப்ப மாட்டேன்…” என்று இறுதிகட்ட எச்சரிக்கையை விடுத்து விட்டு சமையலறை நோக்கி மீண்டும் சென்றார்.
காலை டிபன் இட்லி , சாம்பார், சட்டினி மற்றும் மதியத்திற்குச் சாப்பாடு என்று எல்லாவற்றையும் முடித்து , மகளுக்கும் கணவருக்கும் ஆற வைத்து, டிபன் பாக்ஸில் கட்டி வைத்தார் .
சஞ்சனா கிளம்பி வர , அவளுக்குச் சூடாக இட்லியை வைத்த படி , “நல்லா படித்திருக்கிறாயா ? இன்றைய தேர்விற்குத் தயாரா ? “என்று வினவினார்.
சஞ்சனா படிப்பில் கொஞ்சம் சுமார் தான். “ ஒரளவு படித்திருக்கிறேன் அம்மா…”
“என்னடி பதில் இது? பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாய், ஞாபகம் இருக்கிறதா? போன முறை அப்பாவிடம் வாங்கிக் கட்டியது மறந்து விட்டதா?” என்று பதட்டப்பட ,
“நிறைய பாடம் அம்மா…” என்று விளக்கமளிக்க முயல,
“ஏதாவது காரணம் தேடாதே , ஒழுங்காகப் படி , வீட்டில் ஒரு டம்ளரை கூட நகர்த்த விடாமல் எல்லா வேலைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேனே ? அப்புறம் படிப்பதற்கென்ன?” என்று படபடவென பொரித்தார்.
தன் நிலை தன் பெண்ணிற்கும் வந்துவிடக் கூடாது , நன்றாகப் படித்து வேலைக்குப் போக வேண்டும் . தன் காலில் சுயமாக நிற்க வேண்டும் .சுயமரியாதையோடும், கௌரவத்தோடும் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கோபப்பட ,
அதைப் புரியாமல், சஞ்சனா மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டாள் .
“ஒரு சொல் பொறுக்கமாட்டியே , சிக்கிரம் கிளம்பு…” என்று உந்த ,
சஞ்சு வாடியபடி கிளம்ப ,
பிள்ளைகள் தான் மஞ்சு வாழ்வின் பிடிப்பே ! அவர்களை நன்றாக வளர்ப்பதைத் தான் வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தார் . அவள் வருந்துவது பிடிக்காமல், “உன் நல்லதிற்குத் தானே சொல்கிறேன்” என்று சமாதானம் செய்தபடி , பாலை ஆற்றி மிதமான சூட்டில் கையில் கொடுத்தார் .
காலை எழுந்தவுடன் பாலை கொடுத்தால் சரியாகச் சாப்பிட மாட்டாள் என்று உணவிற்குப் பின் தருவார் .
“லேட்டாகி விட்டது அம்மா, வேண்டாம் அம்மா…” என்று முணங்க,
“பால் குடிக்க ஒரு நிமிஷம் ஆகுமா? குடித்து விட்டு ஓடு, எப்படியும் உன் ஆருயிர் தோழி கீர்த்தனா , உனக்காக ஆட்டோவை நிறுத்தி வைத்திருப்பாள்” என்றபடி கையில் பாலை திணித்தார்.
“நேரமாச்சு அம்மா… “என்று பரபரக்க,
“லிப்டைப் பிடித்து வைக்கிறேன் , டக்கென்று குடித்து விட்டு வா…” என்று மின்தூக்கி அருகே வேகமாகச் சென்றார் மஞ்சு .
சொன்னபடி மின் தூக்கியை மஞ்சு பிடித்து வைத்திருக்க, பாலை குடித்து விட்டு ஓடி வந்தவள். “என் செல்ல அம்மா…” என்று அவசரமாக அம்மாவின் கன்னத்தில் முத்தத்தைப் பதித்து விட்டு , அதிவேகமாக மின்தூக்கியில் புக ,
“எல்லாவற்றையும் மறக்காமல் எடுத்துக்கொண்டாயா ? நன்றாகத் தேர்வு எழுது” என்று மகளையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
மஞ்சுவிற்குப் பிள்ளைகள் தான் உலகம் , பிள்ளைகள் மீது உயிரே வைத்திருந்தார் . அவர்கள் தேவைகளை பார்த்து பார்த்துச் செய்வார் .
அத்தியாயம் 2
வீட்டிற்குள் நுழைந்தவர் கடிகாரத்தைப் பார்க்க, நேரமாகி விட்டதை உணர்ந்து , வேகமாக கணவன் விஜயனை காபியுடன் எழுப்பினார் .
எழுந்து மணியைப் பார்த்தவர் , “பத்து நிமிடம் முன்னாடி எழுப்ப வேண்டியது தானே?” என்று காபியை வாங்கியவர்,
“இப்போது தடதடவென கிளம்பணும் , ஒரு வேலையைக் கூட ஒழுங்காக செய்ய முடியாதா ?உன் அப்பன் நிறுவனமா? தாமதமாகப் போனால் அரை நாள் விடுப்பு கணக்காகி விடும். பயோமெட்ரிக் இயந்திரத்திடம் காரணம் சொல்ல முடியுமா ?” என்று வழக்கமான சுப்ரபாதத்துடன் அவருடைய நாளைத் துவக்கினார் . ஒரு தனியார் நிறுவனத்தில் தற்போது கணக்கு பிரிவில் மேலாளராகப் பணியாற்றுகிறார் .
“இவர் என்ன சிறுபிள்ளையா? துயல் எழுப்ப?” என்று மனதிற்குள் மட்டுமே நினைக்க முடியும். வெளியே சொன்னால் வீடே ரணகளமாகிவிடும் என்பதை உணர்ந்தே பதில் ஏதும் பேசாமல் காலி காபி கோப்பையை வாங்குவதற்காக , அவர் குடிக்கும் வரை அருகில் நின்றபடி , அவரின் ஏச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் . அதை வாங்கிய பின் நகர முற்பட,
“எல்லாம் ரெடி பண்ணி வை, அப்புறம் தாமதமாகி விட்டது என்று பாட்டுப் பாடாதே…” என்று கடிந்தபடி குளியறைக்குள் கைபேசியுடன் நுழைய , ஒரு வெற்று சிரிப்பை உதிர்த்தபடி நகர்ந்தார் மஞ்சு .
இட்லி மாவை ஊற்றி . சாம்பாரை லேசாகச் சுட வைத்து விட்டு , சாப்பாட்டு பையை ரெடி செய்து ஷோபாவில் வைத்தார். விஜயன் தயாராகி வர , ஆவி பறக்க தட்டில் இட்லி வைத்த மஞ்சு, அருகில் நின்று பரிமாற,
செய்தித்தாள் பார்த்தபடி, மஞ்சுளா முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் உணவை முடித்தார் . கடமைக்காகக் கூட நன்றாக இருக்கிறது என்று சொல்ல வில்லை .
“ஏங்க” , என்று மஞ்சுளா ஆரம்பிக்க , அதற்குள் போன் வர , போன் பேசியபடி வெளியே செல்ல முனைய ,
“ஏங்க…” என்று மீண்டும் இழுக்க,
“என்ன வேண்டும்?” என்று முகத்தைச் சுளித்தார் விஜயன்.
“மாதம் பிறந்து விட்டது, பணம்…, பட்டுவாடா இருக்கிறது…” என்றார் தயங்கியபடி,
நேற்று மாலையே கேட்டு வாங்கி வைக்க வேண்டியது தானே , காலையில் கிளம்பும் போது நொய் , நொய் என்று சலித்தபடி , “சாயங்காலம் தருகிறேன்…” என்று நடந்தார் .
கணவன் சென்றவுடன் மலையைப் புரட்டிய ஆசுவாசத்துடன் ஷோபாவில் அமர்ந்தார். அருகில் இருந்த சாப்பாட்டுப் பையை கவனித்தவர் , அவர் வந்து எடுத்துப் போவதென்றால் நேரமாகிவிடும் என்பதைக் கணக்கிட்டு , வீட்டைப் பூட்டியபடி கணவனைப் போனில் அழைக்க , பல ரிங் போயும் போனை எடுக்காமல் இருக்க , மீண்டும் மீண்டும் அழைத்தபடி கார் நிறுத்தத்திற்குக் கிட்டதட்ட ஓடினார்.
பல ரிங்குகளுக்குப் பின் ஒரு அலட்சியத்துடன் போனை எடுத்த விஜயன் , “என்ன ?” என்று கடுமையாகக் கேட்க , (மஞ்சு என்ற அழைப்பு கூட இருக்காது )
“சாப்பாட்டுப் பையை மறந்து விட்டீர்கள் , எடுத்து கொண்டு வருகிறேன்… “
“ம்ம்….” என்றபடி போனை வைத்தார் .
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மஞ்சுளா பையைத் தர , சரியாக யோசித்து ஓடி வந்திருக்கிறாளே என்ற மெச்சுதல் இல்லாமல் ,
“காலையில் கிளம்பும் போது டென்ஷன் செய்தால் , இப்படித்தான்…” என்று அதற்கும் மஞ்சுளாவையே குற்றஞ்சாட்டி விட்டுக் கிளம்பினார்.
அத்தியாயம் 3
பின் வீடு வந்த மஞ்சு, வீட்டை நோட்டம் விட , புயல் அடித்த வீடு மாதிரி பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன . அப்படியே சோபாவில் அமர்ந்து, இளைப்பாற , மனதில் காட்சிகள் படம் போல் ஓடின .
போன மாதம் சாயங்காலம் கேட்ட போது , மனுஷன் வீட்டுக்கு வந்தவுடன் பணம் பணம் என்று அரிக்க வேண்டியது என்று திட்டியபடி கொடுத்தது , அசந்தர்ப்பமாக நினைவு வர , மீண்டும் ஒரு வெற்றுப் புன்னகையைச் சிந்தினார் .
மாதம் பிறந்தது இவருக்குத் தெரியாதா ? கேட்க வைப்பதில் ஒரு அல்ப சந்தோஷம் என்று மனதில் அழுத்துக் கொண்டார். அது மட்டும் தான் மஞ்சுவால் முடியும். அவரிடம் வாயைத் திறக்கமுடியாது , அப்படிப் பேசினாலும் , அதில் வார்த்தையைப் பிடித்து , அன்று முழுவதும் ஆடித் தீர்த்து விடுவார் . அதனால் மஞ்சு பெரும்பாலும் அமைதியாகவே கடந்து விடுவார் .
மஞ்சுவிடம் மாதம் ஒரு தொகையைக் கொடுத்து விட்டு, அனைத்து பண விவகாரங்களையும் மஞ்சு தலையில் கட்டி விடுவார் . பலசரக்கு வாங்குவதில் ஆரம்பித்து பால் கார்டு , மின்சாரக் கட்டணம் , வீட்டுச் செலவுகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும் .
ஆனால் மாத இறுதியில் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்குக் கொடுக்க வேண்டும் . அனைத்து வரவு செலவுகளையும் நோட்டில் எழுதிக் கொடுக்க வேண்டும். கணக்குச் சரியாக இருக்க வேண்டும் , பில்கள் சரியாக இருக்க வேண்டும் . ஏதேனும் கணக்கு விடுபட்டிருந்தால் அவ்வளவு தான்…. “என்ன அண்ணன் வீட்டுக்கு அனுப்பி விட்டாயா? இல்லை பதுக்கி விட்டாயா?” என்று கடுமையான வார்த்தைகள் வந்து விழும் .
கணவர் பண விவகாரத்தில் தன்னை நம்பாமல் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு கேட்பதும் , ஒவ்வொரு முறையும் இதைக் குறைத்திருக்கலாம் , அது ஜாஸ்தி…..என்று பல நொட்டைகளைக் கேட்கவும், தாங்க முடியாமல், “நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்..” என்று மஞ்சு ஒரு முறை சொல்ல ,
“வீட்டைக் கூட கவனிக்க முடியாத தத்தியா ? அப்புறம் என்ன படித்துக் கிழித்தாய்? அதுவும் பயனில்லையா? முட்டாளை என் தலையில் கட்டி விட்டார்களா?” என்று பேச்சை ஆரம்பித்து விடியவிடிய நடத்தினார் . கிடைத்த அனுபவப் பாடங்களினால் இப்போது மஞ்சு பெரும்பாலும் மௌனத்தையே கடைபிடிப்பார் .
அதே மாதிரி ஒரு இரு சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்து விட்டு , பிள்ளைகளை டியூசனில் பிக்கப் , டிராப் செய்வது , வெளி வேலைகளுக்கு அலைவது , என்று அனைத்தும் மஞ்சுவின் பொறுப்பில் தள்ளி விட்டு, மனிதர் ஜாலியாக இருப்பார் .
விஜயனுக்கு வீட்டில் எந்த வேலையும் கிடையாது , விரலை கூட அசைக்க மாட்டார் . ராஜ வாழ்க்கை தான் . நிதானமாக காலையில் எழுந்து , வேலைக்கு ரெடி ஆவது மட்டுமே அவர் வேலை . மற்றபடி உணவு முதல் உடுப்பு வரை , அனைத்தும் அவர் கைக்கு வரும். மாலை அலுவலகத்தில் இருந்து வந்தபிறகு , தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு , கொஞ்ச நேரம் குடியிருப்பில் இருக்கும் ஜிம்மிற்கு போய் வருவார் . மற்றபடி படுக்கும் வரை டிவி மற்றும் கைபேசியுடன் தான் இருப்பார் .
மொத்தத்தில் வீட்டில் ஒரு பொருளைக் கூட நகர்த்த மாட்டார் . ஆனால் ஹாலில் அமர்ந்து கொண்டு இது தப்பு , அது குற்றம் எனக் குறைகளை மட்டும் ஒலித்துக் கொண்டே இருப்பார் . இதனாலே பெரும்பாலும் பிள்ளைகள் , படிக்கிறேன் பேர்வழி என்று தங்கள் அறைகளிலே முடங்கி விடுவர். மஞ்சுவும் இரவுச் சமையல் என்று அடுப்படியிலே கிடப்பார் . அதனால் விஜயன் வீட்டில் இருக்கும் பொழுது , வீட்டில் அமைதியே நிலவும் .
சில நாள் , காலையில் திடீரென மஞ்சுவிடம் இன்று மின்சார பில் கட்டி விடு என்பார் . மஞ்சு வேற வேலையை யோசித்து வைத்திருந்தால் , கடைசி நாள் இல்லையென்றால் நாளை போகட்டுமா? என்று கேட்கவோ, தள்ளிப் போடவோ , மாற்றவோ முடியாது,
அப்படி முயன்றால் , “வீட்டில் நன்றாக வசதியாகச் சாப்பிட்டு தூங்க வேண்டுமா ? கொஞ்சம் கூடுதல் வேலை செய்தால் , என்ன கொழுப்புக் குறைந்து விடுமா?” என்று பல ஏச்சுக்களை கேட்க வேண்டியிருக்கும் . காரண காரியங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார் . சொன்னால் சொன்ன வேலை நடந்தாக வேண்டும் . வீட்டில் கட்டளைகள் மட்டுமே . உரையாடல்களோ , மாற்றுக் கருத்துகளோ கிடையவே கிடையாது .
மஞ்சு பம்பரமாகச் சுழன்ற போதும் , அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகவும் , சாமர்த்தியமாக செய்த போதும் ஒரு மெச்சுதல் பார்வையோ , பாராட்டோ விஜயனிடமிருந்து வராது .
அது மஞ்சுவின் கடமை என்பது போல் நகர்ந்து விடுவார். வீட்டைப் பார்ப்பது பெண்களின் தலையாய பொறுப்பு என்ற எண்ணம் உடையவர் விஜயன் .
அப்பா இல்லாத பொழுது , பிள்ளைகள் கூட சில நேரம் கேலியாக , “இதுவே என் கட்டளை , கட்டளையே என் சாசனம்!” என்று பாகுபலியின் டயலாக்கை அப்பா மாடுலேஷனில் பேசி, கேலி செய்வார்கள்.
பிள்ளைகளிடம் கூட முடிந்த வரை எந்த வேலையும் மஞ்சு சொல்ல மாட்டார் . ஏதேனும் தப்பு நடந்து விட்டால் , பேச்சாலே பிள்ளைகளைக் கிழித்துத் தொங்க விட்டு விடுவார் என்ற பயத்திலே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து விடுவார் . தாய்ப் பறவை தன் குஞ்சைக் காப்பது போல் விஜயனின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வார் .
விஜயனின் கோபத்திற்குப் பயந்தே பிள்ளைகள் அப்பா என்றால் இரண்டு அடி தள்ளித்தான் நிற்பார்கள் . பெரிய ஒட்டுதல் கிடையாது . பெரும்பாலும் அம்மா மூலம் தான் எதையும் கேட்பார்கள் .