Advertisement

அவள் நான் பயணம் – 5

உன் காந்தப்புலத்தின்

மையத்தையே

தேடிச் சுழல்கிறதடி

என் துருவமெல்லாம்

        உனைத்தேடியே என் பயணம்

பயணத்தின் தடைகளை தாகத்தின் நீட்சியென கடந்து வருகிறேன். பாலைவனத்தின் பகல் பொழுதாய் எனை வதைக்காதே. கார்கால இரவாய் காதோரம் கதைக்க வருகிறேன். கயல்விழியில் கனல் பேசி கொல்லாதே.

தீண்டிச் செல்லும் பூங்காற்றின் நாசி நுழைந்த வாசமாய் பாசம் காட்டிவிட்டு, அடுத்த மூச்சில் அகன்று விட்டாய். நறுமணம் விலகியது என் பிழையா, கால்களின் இயக்கம் கண்களைத் திறந்தது காலத்தின் பிழையா, பதில் கூறடி பளிங்குப் பூவே….

தம்பி தம்பி நாம தமிழ் நாட்டுல தான இருக்கோம்தூக்கத்திலிருந்து அடிச்சு பிடிச்சு எழுந்து கேக்குற  கேள்விய பாரு.

ஏன்  நான் பேசுறத பாத்தா தமிழ் மாதிரி தெரியலையா

அத நான் கவனிக்கல, இது தமிழ்நாடு தானே

ஆமா சார், சென்னையிலிருந்து திருச்சி போயிட்டு இருக்கோம், இப்ப விழுப்புரத்துல டீ காபி சாப்பிட நிறுத்திருக்காங்க, நான் என் பொண்டாட்டிய பாக்க போறேன் நீங்க யார பாக்க போறீங்க, எதுக்கு இப்படி ஒரு முழி முழிக்குறீங்கநானும் அமைதியின் சிகரமா, பொறுமையா, பதில் சொல்லீட்டு இருக்கேன், ஆனா அந்த மனுசன் பாவம் இன்னும் பீதியில இருந்து வெளியில வரல. அந்த பொறுமைய இன்னும் கொஞ்சம் இழுத்து பிடிச்சு,

சார் சார் என்ன ஆச்சு , ஏன் இப்படி வேர்க்குது, கைகால் நடுங்குது என்ன பண்ணுது சார்ன்னு கேக்குறேன்.

அது வந்து சார் காஷ்மீர்ல குண்டு போடுற மாதிரி இங்கயும் குண்டு ஏதும் போட்டாங்களா…”

நாம தெளிவா தான இருக்கோம் இந்தாளு என்ன சொல்றான்னே புரியலையேஅப்படீன்னு யோசிச்சுக்கிட்டே, “யோவ் என்னயா ஆச்சு எதுக்குயா இப்ப அலண்டு போய் கெடக்குற, குண்டு போட்டாங்களா, கொடை விரிச்சாங்களான்னுகிட்டு, தெளிவா சொல்லுய்யா, கொஞ்சமாச்சும் இன்ட்ரோ அழகா குடுக்க விடுறீங்களா, அதென்ன என் பொண்டாட்டிய பத்தி எதாவது கவிதை சொன்னாலே மூக்குல வேர்த்த மாதிரி எவனாச்சும் குறுக்க குறுக்க பேசிகிட்டே இருக்கீங்க, எங்கய்யா அந்த கண்டக்டர் மொதல்ல சீட்ட மாத்தணும்

தம்பி தம்பி பொறுமையா இருங்க, மொதல் தடவையா தனியா ஊருக்கு போறேன், கொஞ்சம் அசந்து தூங்கீட்டேன், அந்த நேரம் எம் பொண்டாட்டிகூட காஷ்மீர்ல இருக்க மாதிரி ஒரு கனவு, அப்ப பாகிஸ்தான் தீவிரவாதிங்க குண்டு போட்டுட்டாங்க, டம் டம்னு பயங்கர சத்தம், டக்குன்னு கண்ண முழிச்சு பாத்தா பஸ்ஸில இருக்கேன், அதான் கன்பர்மேசனுக்காக கேட்டேன்.”

யோவ் யோவ் எதாவது சொல்லீட போறேன், நல்லா வருது வாயில, டீ காபி குடிக்க இறங்காம, உன்னைய மாதிரி எல்லாரும் தூங்கீட்டு இருந்தா, இந்த கடைக்காரனுக்கு வியாபாரம் ஆகாதுன்னு, பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி நிரப்பி ஜன்னலுக்கு பக்கத்தில டம்டம்னு அடிப்பானுக எழுப்புறதுக்கு, இந்த சத்தம் உனக்கு காஷ்மீர்ல குண்டு போடுற மாதிரி இருக்கா, உன்னையெல்லாம் எவன்ய்யா பஸ்ஸில வரச் சொன்னது, அதுவும் என் பக்கத்துல உனக்கு யாரு யா சீட்டு குடுத்தது….”

ஹி ஹி விடுங்க தம்பி, கனவுல எதோ கன்பியூசன், அதுக்கு போய் இப்படி கோவிச்சுக்கிறீங்களே, நீங்களா தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் பக்கத்துல வந்து உக்காந்தீங்க , இப்ப இப்படி கேக்குறீங்களே

சரி சரி, தூங்குய்யாசலிச்சுக்குற மாதிரி ஒரு சீன் போடனும், ஏன்னா பஸ்ஸ் ஏறுனதுல இருந்து நாலு சீட் மாறி இப்ப அஞ்சாவது சீட்ல உக்காந்திருக்கேன்.

ஒரு சில விசயங்களை இந்த சீட் மாதிரி மாத்த முடியாதுங்க, என்னன்னு பாக்குறீங்களா, அது பத்தி சொல்ல ஆரம்பிச்சா லிஸ்ட் நீளமா போகும், சோ இப்ப நாம டாப்பிக்கு வருவோம்.

சுவிஸ்ல போயி டூயட் பாடணும்னு எனக்கும் ஆசை தான், அதுக்கு நாம லவ் பண்ணனும், நம்மள லவ் பண்ணுற பொண்ணு வேணும், ரெண்டும் தான் இருக்கே அப்புறம் என்னன்னு கேக்குறீங்களாசிலு சிலு கிளைமேட்ல இருந்து அவளுக்கு அலுத்துடுச்சாம், சோ லொகேஷன சேஞ்ன்ச் பண்ணீட்டு, டூயட்டுக்கு என்ன டியூன் போடலாம்னு யோசிச்சுகிட்டு இருப்பேன்னு நெனக்காதீங்க. என் யோசனையே வேற

படக்குனு கதவு தொறக்குற சத்தம், பின்னாடியே கெக்க பிக்கேன்னு சிரிச்சிகிட்டு அவ ப்ரண்ட்ஸ் வேற வருவாங்களேன்னு பாத்தேன். நல்ல வேளை வரல, இல்லைன்னா இங்க நான் என்னமோ ஸ்டாண்டிங் காமெடி பண்ணுற மாதிரி, என்ன பாத்ததுமே அப்படி சிரிப்பாங்க, கண்டிப்பா இந்த மாதிரியான நல்ல காரியங்கள செய்ய கமெண்ட்ரி பாட்டிய விட்டா வேற ஆளே இல்ல இந்த வீட்டில. ஹப்பாடி கெளப்பீருச்சு பாட்டி….

இவ என்னடான்னா, ப்ளாக் அண்ட் வொயிட் படத்துல வர மாதிரி, ஏகப்பட்ட வெட்கம், தகதகன்னு பட்டுசேலை, அப்படியே நகைக்கடை விளம்பரத்துல வரமாதிரி வந்தா, எத்தனையோ தடவ இப்படி ஒரு சந்தர்ப்பம், அவ கிட்ட பேச கிடைக்காதான்னு ஏங்கி இருக்கேன், அந்த தவிப்பு, ஆசையெல்லாம், இப்ப எங்கன்னே தெரியாத அளவுக்கு இருந்துச்சு

எந்தவிதமான சலனமும் இல்லாம தெளிஞ்ச ஓடிட்டு இருந்த வாழ்க்கையில திடீர்ன்னு ஒரு எதிர்பாரா திருப்பம், எல்லாத்தையும் நேர்மறையாவே யோசிக்கிற எனக்கு, இதுவரைக்கும் தோணாத ஒரு கோணத்தை சொல்லி ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு குழப்பிவிட்டான் ஒருத்தன்.

யாரோ ஒரு மூணாவது மனுசன் சொன்னதுதானேன்னு என்னால அதை தூக்கி போட்டுட்டு போக முடியல, ஏன்னா இத்தனை வருசத்துல எனக்கு அம்மா சொல்ற  மாதிரி எந்த ஞாபகமுமே வரல, அம்மா சொல்றாங்க அது பொய்யா இருக்காதுங்குற நம்பிக்கையில தான் ஒத்துகிட்டேன்னு சொல்ல முடியாது.

உண்மையிலயே எனக்கு சக்திய பாத்ததும் பிடிச்சிடுச்சி, இதுவரைக்கும் பெரிய கனவு, கற்பனை, எதிர்பார்ப்பு எதுவும் இல்லாததுனாலயான்னு தெரியலை, அவள பாத்ததும் மனசுக்கு அவ்வளோ நெருக்கமாயிட்டா, பொய்யில்லாத கண்கள், போலியில்லாத சிரிப்பு, மனசிலிருந்து வர வார்த்தைகள், இதையெல்லாம் என்னால பாத்ததுமே உணர முடிஞ்சிது.

அவ பாட்டி ஆரம்பிச்சு வைச்ச, கமெண்ட்ரில இருந்து, அவங்க வீட்டில போட்ட கண்டிசன் எல்லாமே, என்னைய அவள விட்டு தூரமா நிறுத்தும்னு நினைச்சிருப்பாங்க, ஆனா பேசக் கூடாது, பாக்குறதுக்கு ஆயிரத்தியெட்டு தடைகள், அவள தனியா விடாத ப்ரெண்ட்ஸ்னு இன்னும் இன்னும் அவ மேல இருக்க இண்ட்ரெஸ்ட் அதிகமாயிடுச்சி.

இது தான் காதலாஅப்படீன்னு கேட்டா எனக்கு தெரியல, ஆனா இதுவரைக்கும் அனுபவிக்காத ஒரு உணர்வு, முகத்துல எப்பயுமே ஓடிகிட்டு இருக்க சிரிப்பு, மனசு ஃபுல்லா ஒரு பரவசம், எனக்காக எனக்கே எனக்காக ஒருத்தி வரப்போறாங்குறதே அவ்ளோ சந்தோசமா இருந்துச்சி.

அதுலயும் எங்கம்மா சொன்ன பப்பி பிளாஸ் பேக் கேட்டு முதல்ல சிரிப்பு, அப்புறம் கொஞ்சம் ஆச்சர்யம் , உண்மையிலயே நான் இப்படி இருந்தேனா அப்படீங்குறது தான் இப்ப வரைக்கும் எனக்கு நம்ப முடியாத விசயமா இருக்கு.

எனக்கே இப்படி இருக்கும் போது, அவகிட்ட என்ன சொல்லியிருக்காங்க, அவ மனசுலயும் என் மேல காதல் இருக்கா, இல்ல இந்த மாதிரி பப்பி பிளாஸ் பேக் கேட்டிட்டு, ஒத்துக்கிட்டாளா, எனக்குள்ள இந்த குழப்பங்கள் வர ஆரம்பிச்சதுமே, என்னுடைய உணர்வுகளை முதல் முறையா மறைக்க ஆரம்பிச்சேன்.

கல்யாணத்துக்கு முந்தின நாள் வந்தப்போ அவ உக்காந்திருந்தத பாத்ததுமே, உயிரோட ஒரு ஓவியம் உக்காந்திருக்க மாதிரி இருந்துச்சி, அப்படியே அள்ளி அணைச்சு என் காதல வெளிப்படுத்தும் போது, அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கான்னே தெரியாம நீ செய்யுறது சரி தானான்னு என் மனசாட்சி கேட்ட கேள்வியில அவ கண்ணை அதுக்கு மேல பாக்க முடியாம வந்துட்டேன்.

ஆனா குழப்பத்துக்காக காலத்தை நிறுத்த முடியாதே, கல்யாண வேலை நடந்த வேகம், என்னை மணவறைக்கு கொண்டு வந்து நிறுத்திடுச்சி, அவ கிட்ட கேக்குறதுக்கான நேரமோ சூழ்நிலையோ அதில்லையே, எனக்கு பிடிச்ச அவளை இழக்க முடியாது, சோ என் கையால அவளோட பெயர திருமதி.சக்திஇளமாறன்னு மாத்தி எழுதீட்டேன்.

இதோ என் பக்கத்தில, மூச்சும் மூச்சும் முட்டிக்கிற தூரத்தில அவ வந்துட்டா ஆனாலும், அவகிட்ட என்னோட மனச சொல்ல முடியல. என் முகத்துல அவளுக்கு என்ன தெரிஞ்சிதோ, என்னாச்சுன்னு கேட்டா

அவ கேட்ட கேள்வி எதிரொலிச்ச அளவுக்கு என்னோட பதில் எதிரொலிக்கல, அமைதியா இருந்தேன். திரும்ப கேட்டா,

என்னாச்சு, ஏன் ஒருமாதிரி இருக்கீங்க

ஒண்ணுமில்ல

இல்ல என்னமோ சரியில்ல

எல்லா சரியாத்தான் இருக்கு

அப்படி இருந்திருந்தா எனக்கு இந்த கேள்வியே வந்திருக்காதே

கோ

என்ன கோ, நான் கேக்குறது புரியுதா

நான் ஒண்ணும் முட்டாள் இல்ல

நானும் ரொம்ப புத்திசாலி இல்ல, நீங்க மனசில நெனக்குறதுலா எனக்கு இங்க படமா ஓடாது, நீங்கதான் சொல்லனும்

நான் மனசில நெனக்குறது எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல தேவையில்லை

எல்லாம் தேவையில்லை, என்னோட கேள்விக்கு பதில் வந்தா போதும்

சொல்ற மாதிரி இருந்தா இந்நேரம் இந்த கேள்வியே தேவையிருந்திருக்காது

என்னோட இந்த பதில அவ கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைன்னு என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது, அவ கண்ணுல அப்படியொரு வலி.

எவ்வளவு அழகா நகர வேண்டிய நேரம், என்னால இப்படி ஆயிடுச்சேன்னு கஷ்டமாயிருந்தாலும், ஒரு தவறான புரிதலோட வாழ்க்கைய தொடங்க கூடாதுங்குறதுல நான் தெளிவா இருந்தேன்.

அதே நேரம் அவ மனச நானா உணர்ந்து தெரிஞ்சுக்குற வரைக்கும், அவகிட்ட என்னோட சந்தேகத்தையெல்லாம் சொல்லி, அவள புண்படுத்த விரும்பலை, மோதி காயமாகுறதவிட, விலகி இருக்குறதே நல்லதுன்னு தோணுச்சு.

அவ மனசு கஷ்டப்படுறது பொறுக்க முடியாம, அவகிட்ட போய்எனக்கு வேற கொஞ்சம் டென்ஷன், நீ தப்பா எடுத்துக்காத, கொஞ்சம் சரி ஆகட்டும் நானே சொல்றேன், இப்ப ரிலாக்ஸா தூங்குஅப்படீன்னு பொய் சொன்னேன்.

இதுவரைக்கும் இவ்வளவு சீரியஸா நான் பேசி பாக்காதவ , அத உண்மைனு நம்பீட்டா. அவளோட மனசில என்ன இருக்கும்னு இப்பயும் என்னால தீர்மானிக்க முடியல. எந்தவிதமான ஏமாற்றமோ, வருத்தமோ இல்லாம முகம் தெளிவா இருந்துச்சு.

விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லைன்னு சொல்லுவாங்க, அது எதுக்காக சொன்ன பழமொழியோ, சந்தேகம்னு வந்துட்டா சரியா பொருந்தும். எதுல சந்தேகங்குறதுல தான் இருக்கு ட்விஸ்ட்டே

இராத்திரியெல்லாம் அமைதியா தூங்குன அவள பாத்தேன். விடிஞ்சதும் எப்படி இருப்பாளோங்குற டென்சன் இல்லாம, என்னோட காதல என்னோட அழகிய ரசிச்சுகிட்டே நகர்த்தீட்டேன் அந்த நாளை.

அடுத்த நாள் நாங்க கிளம்பனும், காலையில எப்ப எழுந்து போனான்னு தெரியலை, நான் எழுந்திரிக்கும் போது மணி சரியா ஆறு. அப்பயும் எனக்கா முழிப்பு வரல, ஒரே அட்வைஸ் மழை, இடி மின்னலோட , அதுவும் நம்ம கமெண்ட்ரி பாட்டி தான். இந்த சத்தத்துல தான் கண்ணு முழிச்சேன்.

இந்தா பாரு சக்திமான்னு ஆரம்பிச்சு, எப்படி நிக்கனும் நடக்கனும் பேசனும் சமைக்கனும் பழகனும், சிரிக்கனும், அனுசரிக்கனும், அன்பா இருக்கனும், சண்டை போடனும்னு, அனுமார் வாலு மாதிரி சொல்லிகிட்டே போனுச்சு பாட்டி, அத ஸ்டாப் பண்ணுறதுக்காவே சீக்கிரமா எழுந்தேன்.

ரூமுக்கு வெளியில ஈரத் தலையோட நிக்குற அவள சுத்தி நண்டு சிண்டுல இருந்து, அந்த வீட்டில கடைசியா இருக்க பழைய கெழவி வரைக்கும் சோகமான மொகத்தோட ஒரே ஃபீலிங்.

மாறா இப்ப மட்டும் அந்த கூட்டத்துக்கிட்ட சிக்கின எங்க பொண்ணு அப்படி, நீங்க அவள இப்படி பாத்துக்கணும்னு கொன்னுடுவாங்க, சோ அப்படியே உள்ள போயி தூங்கீடு மனசாட்சி சொன்ன உருபடியான யோசனை, உடனே அமுல் படுத்தனுமே, உள்ள போயி படுத்துகிட்டேன்.

கொஞ்ச நேரத்தில ஒரு நல்ல வாசனை, காபி தான். நாமளா எழுந்திரிச்சா, இந்தாளு காபிக்கு செத்தவன் போல, காபி வாசனைக்கு எழுந்தே உக்காந்துட்டான்னு அவ நெனச்சிட்டா, நோ நோ காபி ஆறினாலும் பரவாயில்லை கெத்து முக்கியம் மாறா.

முழிச்சிடாத மாறான்னு மனசு சொன்னாலும், கெத்து பாத்தீனா காபி ஆறிடும் மாறா, இங்க இருக்க கிளைமேட்டுக்கு சூடா குடிச்சா செமையா இருக்கும் எழுந்திரின்னு புத்தி சொல்லுச்சுங்க, மனசா புத்தியா, பட்டிமன்றம் நடத்திகிட்டு இருந்தா லாஸ் நமக்குத்தான, அதுனால அப்பிடியே சோம்பல் முறிச்சு மெல்ல கண்ணை தொறந்தேன்.

கையில காபியோட என் புதுப் பொண்டாட்டி நிப்பான்னு தேடுனா, எனக்கு முதுகு காட்டிகிட்டு, கால் மேல கால் போட்டு உக்காந்து காபி குடிச்சிகிட்டு இருக்கா அவ, வந்துது பாருங்க கோவம், அவள மொறச்சேன், லைட்டா திரும்பி ஒரு சின்ன ஸ்மைலோடகுட் மார்னிங்சொல்லுறா,

என்னோட காபிய குடிச்சிட்டு குட்மார்னிங் வேறையான்னு எழுந்து கோவமா குளிக்க போயிட்டேன். வந்து பாத்தா ப்ளாஸ்க்கில இருந்த காபி எனக்காக ஒரு கப் ஊத்திகிட்டு இருந்தா, அதே சிரிப்போடஒண்ணே ஒண்ணு தான் புரிஞ்சிது எனக்கு கோவப்பட தெரியல

இவளால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுதோன்னு, காபிய குடிச்சிட்டு கிளம்புனோம். அம்மா அப்பா மற்றும் சொந்த பந்தங்கள் எல்லாம் தனி வண்டியிலயும், அவளும் நானும் மட்டும் ஒரு கார்ல கிளம்புனோம், வாழ்க்கையோட மூணாவது பருவம்னு சொல்லலாம், இரண்டு பேரும் சேர்ந்து போற முதல் பயணம், கடைசி வரைக்கும் கூட இருக்கனும்னு முடிவோட கிளம்புனேன்.

சாதாரணமா ஒரு பூவை பறிக்கும் போது நமக்கு தெரியாது அதோட வலி, இயற்கையோட சிக்கலான ஆனா கண்டிப்பான விதிகள்ல இதுவும் ஒண்ணு. எந்த பூவும் பூத்த இடத்துலயே இருக்குறது இல்ல, இருந்தாலும் பூவாவே இருந்துட்டா அதுக்கு மதிப்பில்லை. இன்னிக்கு உயிரோட ஒரு பூவ அதோட வேர் கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிகிட்டு போறேன்.

எனக்காக இத்தனை வருசமா இருந்த உறவையெல்லாம் விட்டுட்டு என் கூட வர்றா. இதெல்லாம் புரிஞ்சாலும், அவ அழுகைய என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை, மீசை வச்சிகிட்டு கம்பீரமா சுத்திகிட்டு இருந்த மனுசனே கலங்குனத பாத்ததும், கொஞ்சம் ஓவரா தான் இமோஷனலா போகுதோன்னு தோணுச்சு.

அழுதுகிட்டு வர அவகிட்ட என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை, மத்த நேரமெல்லாம் சுத்தி வர்ற அவளோட ப்ரெண்ட்ஸ் இப்ப எங்க போய் தொலைஞ்சாங்கன்னு அவங்க மேல கோவமா கூட வந்துச்சு, எப்பயும் அவ மொகத்துல இனிமே அழுகையே இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்.

என்கிட்ட அதை சொல்ல வார்த்தையில்லை, ஒரு கை ஸ்டேரிங்ல, இன்னொரு கையால அவ கைய பிடிச்சேன். அதுல மென்மையா ஒரு அழுத்தம், இனி எப்பயும் உனக்காக நான் இருக்கேன்னு, என்னால வாய திறந்து சொல்ல முடியல, நிமிந்து பாத்தா, அவளுக்கு அது என் கண்ணுல தெரிஞ்சுதோ என்னவோ, கன்னத்துல வழிஞ்சிருந்த கண்ணீர என் தோள்ல சாய்ஞ்சு தொடச்சிகிட்டா,

அந்த பயணத்துல என்ன இருந்துச்சுன்னு இப்ப வரைக்கும் என்னால எக்ஸ்பிரஸ் பண்ண முடியாது, ஆனா லைப் மறக்க முடியாத பயணம், மௌனம் கூட இவ்ளோ அழகா இருக்குமான்னு இப்ப வரைக்கும் என்னால நம்ப முடியலை. இவன் என்ன லூசான்னு உங்களுக்கு தோணும், அத பீல் பண்ணி பாருங்க.

வாழ்க்கைக்கு ரெண்டு விசயம் ரொம்ப முக்கியம்ங்க, ஒண்ணு நம்பிக்கை, இன்னொன்னு காதல், இது ரெண்டும் ஒரு புள்ளியில மீட் பண்ணும் போது கெடைக்குற உறவுகள் உண்மையானதா இருக்கும். பிறப்பால கிடைக்குற சொந்தங்கள், உறவுகள் இத தாண்டி, மூணாவது ஒருத்தர்கிட்ட அத உணரும் போது கெடைக்குற உணர்வு ரொம்ப வித்தியாசமானதுங்க.

அவளோட உணர்வுகள என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது, என்னோட உணர்வுகள அவ புரிஞ்சுக்குறதுக்காக காத்திருக்க ஆரம்பிச்சேன். பாதைகள் முடியாது, ஆனா நம்ம பயணத்துக்கு ஒரு முடிவு இருக்குல்ல, சென்னை வந்தாச்சு,….

நீ சென்னையிலிருந்து திருச்சிக்குத்தானே போயிட்டு இருக்க, சென்னை வந்தாச்சுன்னு சொல்றன்னு நீங்க கேக்குறது புரியுது, நான் சொன்னது, அவளும் நானும் போடிநாயக்கனூர்ல இருந்து சென்னை போனத பத்தி….

என் மாமனார் பேமிலி போட்ட சோக சீன் பாத்தப்போ, இனிமே பொண்ண பாக்கவே முடியாதுங்குற மாதிரி அழுவுறாங்களே ஒரு வேளை அவங்க வரல போலன்னு நெனச்சேன். பாத்தா, என் ப்ளாட்டில கதவ ஓபன் பண்ணி வெல்கம் பண்றாங்க குடும்பத்தோட

அடப்பாவிங்களா எங்களுக்கு முன்னாடி எப்பிடியா வந்தீங்க, அதுவும் என் ப்ளாட்டுக்கு உள்ள இருந்து வர்றீங்கன்னு யோசிச்சதுல பேய் முழி முழிச்சேன் போல, ஆனா அவங்க எங்கள மேலயும் கீழயும் பாத்தாங்க,

என்னாச்சு மாப்ள, உங்களுக்கு ஒண்ணும் ஆகலையேஎங்க மீசை கேட்டாரு.

இல்லையே ஏன் இப்படி கேக்குறீங்க மாமா, ஆமா நீங்க எப்படி எங்களுக்கு முன்னாடி வந்தீங்க, பொண்ணு மேல அவ்வளவு பாசமா, எங்கள இந்த பக்கம் அனுப்பிவிட்டுட்டு, அந்த பக்கமா ப்ளைட் புடிச்சு வந்துட்டீங்களோ

என்ன மாப்ள இப்படி கேக்குறீங்க நாங்களும் உங்க கூட தான் கிளம்புனோம் இன்னொரு கார்ல, பாக்கலையா நீங்க

அப்படியா எனக்கு தெரியலையே

சக்திக்கு தெரியுமே, ஏன் மா மாப்பிள்ளைகிட்ட சொல்லலையா

அவருக்கு தெரியும்னு நெனச்சேன் பா

அவன் இந்த உலகத்துல இருந்தா தானே, அவனோட உலகத்துல அவன் பொண்டாட்டிய தவிர யாரும் இல்லையேஎங்கம்மா எண்ட்ரி

நீங்களும் வந்துட்டீங்களா

உங்கள தவிர எல்லாரும் வந்தாச்சு, இவ்வளவு மெதுவாவா ஓட்டுவ, உனக்கு என்னமோ ஏதோன்னு எல்லாரும் பயந்துட்டாங்க

இல்லமா, நார்மல் ஸ்பீட் தான் வந்தேன்

சரி சரி சேர்ந்து நில்லுங்க, அந்த ஆரத்திய எடுத்திட்டு வாங்கம்மா

உடனே சிரிப்பு சத்தம் , வேற யாரு அவ ப்ரெண்ட்ஸ் தான், வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா, இனிமே சிரிச்சே கடுப்பேத்துவாங்களே

என்னடி சக்தி, உங்கள ஊட்டியில பாத்தத்தா சொன்னாங்க

நாங்க போகலையேஅவ முழிச்சா

அப்ப ஸ்விஸ் போயிட்டீங்களோகலாய்க்கிறாங்களாமா

ஆமாங்க ஸ்விஸ் போயிட்டு வந்தோம், ஒரே டையர்டா இருக்கு, சீக்கிரம் ஆரத்திய சுத்துங்க நாங்க ரெஸ்ட் எடுக்கனும், என்ன டார்லிங் நான் சொன்னது சரியா

சக்தி சொல்லவே இல்லஅவ ப்ரெண்ட்ஸ்

அத இப்ப சொல்லியாச்சு சுத்துங்கம்மான்னு சொல்லீட்டு,

விடாம அவள தோளோட சேர்த்து பிடிச்சிகிட்டு நின்னேன்.

என்ன மாப்ள ஆரத்தி சுத்துனா தட்டுல பணம் போடனும் தெரியும்ல எடுங்க எடுங்க

இத நீங்க சக்தி வீடில ஆரத்தி எடுக்கும் போது கேட்டிருக்கனும், இது சக்தியோட டைம், அவ தான் குடுக்கனும், வாங்கிக்கங்கஅவ கையில கர்சீப் தவிர ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சே சொன்னேன்.

சக்தி எடு எடு சீக்கிரம் ரெண்டாயிரம் ரூபா நோட்டா போடு மா

அவ கொஞ்சம் கூட அலட்டிக்காம, என் பாக்கெட்டுல இருந்த ஆயிரம் ரூபா நேட்ட எடுத்து தட்டுல போட்டா

அம்மாடி இதெல்லாம் செல்லாது”,

அதெல்லாம் இந்த டிசம்பர் வரைக்கும் செல்லும்ந்னு ஒரு வழியா தப்பிச்சு உள்ள போனா, பாய வச்சுகிட்டு அவ ப்ரெண்ட் ஒருத்தங்க நின்னாங்க,

வீட்டுக்குள்ள விடமாட்டேன்னுட்டாங்க, “ஏங்க இப்படி பாய வச்சு மறிச்சா எப்படீங்க உள்ள போறது

தம்பி, நான் சவிதா, சக்தி ப்ரெண்ட், ஆனா இப்ப நான் மாப்ள வீடு, உங்கம்மாகிட்ட விசாரிச்சுட்டேன், உங்களுக்கு அக்கா தங்கச்சி இல்லைன்னு சொன்னாங்க, சோ இப்ப நான் தான் உங்க அக்கா, செய்ய வேண்டிய முறையெல்லாம் சரியா செய்யனும்ல

முறையா அப்படி என்ன பண்ண போறீங்க

வெயிட் அண்ட் சீ, இந்தம்மா பொண்ணு, உன்னை உள்ள விட முடியாது

ஏன் கா திடீர்ன்னு இப்படி அவங்க சைடு போயிட்டீங்க, கிளம்பும் போது கூட தேடுனேன், உங்கள யாரையுமே காணமே

இங்க பாருமா, இப்ப நீ என் தம்பி பொண்டாட்டி, நான் உனக்கு நாத்தனார் புரியுதா

இது எப்பயிலிருந்துஇந்த ஸாக் நானு

தம்பி இப்ப தானே சொன்னேன் பேசாம இருங்க

ம்ம்ம்

சக்தி நான் கேக்குற கேள்விக்கு பதில் சொன்னா தான் உள்ள விடுவேன்

என்ன கேள்வி

என் பையன் சிபிக்கு எப்ப பொண்ணு பெத்து தருவன்னு சொல்லு

ஹான்!!!!! இதுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்என்று அவள் தலை கவிழ்ந்து கொண்டாள் நாணத்தால்……

அப்ப அவ முகத்தை நிமித்தி, மாமா இருக்கப்ப நீ ஏன் தயங்குற மயிலு, தைரியமா சொல்லுன்னு சொன்னேன்.

அவ முகம் அப்படியே ரோஜா பூவா மலர்ந்துடுச்சி, அத இப்ப நெனச்சா கூட, எனக்கு அப்படியே ஜில்லுனு இருக்குங்க,

டம் டம்னு இவனுக வேற விடாம தட்டுறானுங்க, சூடா ஒரு காபிய குடிச்சுட்டு வந்து மீதி கதைய சொல்லுறேன்…. 

 

Advertisement