Advertisement

அவள் நான் பயணம் – 9

அவள் மடல் தீண்டிய

மழைக் காற்றை

மீட்டுகிறேன்

மெல்லிசையாகிறது….

நெருங்கும் தனிமைகளில் நெஞ்சத்தை நிலமென்கிறாய். வளைவுகள் புதிராகையில் நாணத்தை சூடுகிறாய். நடுங்கும் குளிரில் நகை மிக அரிதென்கிறாய். விழி சொல்லும் விசித்திர பாடம் விரல்களுக்கு புரிவதில்லையடி.

புலம்பெயர்தல் நதிக்கு வழி, என் மனம் பெயர்ந்த உன்னிதயம் எனக்கன்றோ, அகதியாக்காதே அடிமையல்ல ஆளவந்தேன் உன்னை காதலால். எல்லைகள் தகர்த்துவிடு, பரந்து கிடக்கிறது பூமி நமக்கென….

உயிர்கூடு உடையும் முன் ஒருமுறை வந்துவிடு….

என்னோட காதல அவகிட்ட சொல்றத விட, உன்னோட காதலை நான் புரிஞ்சுகிட்டேன் சக்தின்னு ஒரு தரம் சொல்லிட தான் துடிச்சுகிட்டு இருக்குது இந்த இதயம்.

ரெண்டு நாளா குடுத்த ட்ரீட்மெண்ட்க்கு இந்நேரம் கண்ணை திறந்திருக்கணும், ஆனா இந்த பேஸண்ட் நமக்கு ரெஸ்பான்ஸ் பண்ணவே மாட்டேங்குறாரேடாக்டர் தாடைய தட்டி யோசிச்சுகிட்டு இருக்காரு.

ஆனா அவருக்கு நம்ம கதையே தெரியாதே, சொல்ல முடியலைன்னாலும் மூளை என்னவோ அதையே தான் அசை போட்டுகிட்டு இருக்கு. எனக்கு வேண்டிய குரல் வர்ற வரைக்கும் நீ என்ன தொந்தரவு செய்யாதேன்னு காதுகிட்ட சொல்லிருச்சு மூளை.

என்னை சுத்தி நடக்குற பேச்சு சப்தமெல்லாம் இனி என்னை தொந்தரவு பண்ணாது. அமைதியா இருக்கேன். ஆனா அன்னிக்கு அவ கூட எங்கம்மாவ பாக்குறதுக்காக போகும் போது, இதே அமைதி கொடுமையா இருந்துது.

வெறுப்ப கொட்டி வேற திசைக்கு திரும்புன என்னோட மனசு அவளோட ஒரு துளி கண்ணீருக்கு கரைஞ்சிடுச்சா,… எனக்கே அதிசயமாத் தான் இருக்குது. சாதாரணமா யார் மேலயும் எனக்கு கோவமோ வெறுப்போ அவ்வளவு சீக்கிரம் வராது.

ஆனா அப்படி வந்துட்டா அதை மாத்திக்கிறது அவ்வளவு சுலபமான விசயம் இல்லை. இவகிட்ட மட்டும் எப்படி எல்லா விசயத்துலயும் நான் தோத்துபோறேன்னு புரியல.

அவளோட வார்த்தைகள் அன்னியமா தெரிஞ்சப்போ கூட அவளோட கண்கள் எனக்கு ரொம்ப நெருக்கமான உணர்வை தான் கொடுக்குது. முழுசா என்னால கோபப்படக்கூட முடியல.

சிந்தனைகளுக்கு பின்னாடி போய்கிட்டே இருந்தா நம்ம பாதைகள் மாறிடும். ஆனா அது எப்படிப்பட்ட பாதைன்னு சிந்திக்கிற நம்ம தான் முடிவு பண்ண வேண்டி இருக்கு

நாங்க போன காருக்கு இந்த விதிகள் பொருந்தாதே. கார் சென்னை பைபாஸ்ல இருந்து  திருச்சி சிட்டிக்குள்ள நுழைய ஆரம்பிச்சது. மேம்பாலங்கள் வந்ததுனால  பயணம் ஈஸியா தெரிஞ்சாலும், ஒரு சிலதை மிஸ் பண்ண வேண்டி வரும்.

எப்பயும் காவேரிப்பாலம் வழியா போகும் போது எதிரே தெரியுற மலைக்கோட்டைய பாத்துகிட்டே போகலாம். அதுவும்  காவேரி ஆத்துல தண்ணி போகும் போது நம்ம முகத்துல மோதுற சிலுசிலு காத்தோட மலைக்கோட்டையை நிமிந்து பாக்கும் போது வர்ற உணர்வு இருக்கு பாருங்க, சொல்லி புரியவைக்க முடியாது, அனுபவிச்சா மட்டும் தான் தெரியும்.

சரித்திரங்கள் பல உருவான காவேரி ஆத்துல இப்ப தண்ணீர் துளி கூட இல்லை. ஆனா இந்த மேம்பாலம் மலைக்கோட்டையை இன்னும் பக்கத்துல காட்டுச்சு. உச்சி பிள்ளையார் கிட்ட என்னோட பிரார்த்தனை எல்லாம் எங்கம்மாவுக்காக மட்டுமே இருந்துச்சு. அவங்க பரிபூரணமா குணமாகி வரணும்.

முழுசா வேண்டுதல சொல்லி முடிக்கிறதுக்குள்ள ஹாஸ்பிட்டல் வந்துடுச்சு. இல்லை இல்லை, நாம ஹாஸ்பிட்டலுக்கு வந்துட்டோம்.

அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாதுங்குற முழு நம்பிக்கையோட உள்ள போனேன். நான் கிளம்புன நேரத்தை கணக்கு பண்ணி என் நண்பன் செந்தூர்வேலன் எனக்காக வெளியிலயே நின்னுகிட்டு இருந்தான்.

ஏன் டா இங்க நிக்குற அம்மா எப்படி இருக்காங்க, அப்பா எங்க…”

அம்மா ரூம் முதல் மாடி டா, வா போலாம்

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம அவன் இழுத்துட்டு போனது நெருடலாவே இருந்துச்சு….

எனக்கு முன்னாடி மாடி ஏறிகிட்டு இருந்தா சக்தி. வேர்த்திருந்த உள்ளங்கைய புடவைல துடைச்சிக்கிட்டே போனா. அவளோட கை நடுங்கீட்டு இருந்துச்சு. எவ்வளவு பதட்டமா இருக்கான்னு புரிஞ்சுகிட்டேன்.

எந்த ரூம்னு தெரியாம அவ திரும்பி என்ன பார்க்க, நான் வேலன் பின்னாடி போனேன். .சி.யூக்கு பக்கத்து ரூம்ல அம்மா இருந்தாங்க. அம்மா கண்ணை மூடி படுத்திருந்தாங்க. ஒரு பக்கம் ட்ரிப்ஸ் ஏறீட்டு இருந்துது, இன்னும் நிறையா வொயர்ஸ் கூடவே ஒரு நர்ஸ். ஆக்ஸிஜன் மாஸ்க்.

சத்தியமா இதுக்கு முன்னாடி அவங்கள நான் இப்படி பாத்ததே இல்லை. எப்பயும் சிரிச்சுகிட்டு பளிச்சின்னு இருக்க அவங்க முகம் இருள் சூழ்ந்த மாதிரி இருந்துச்சு.

எங்கப்பாவ கட்டிகிட்டேன். எனக்கு தேவைப்பட்டுச்சோ இல்லையோ அவருக்கு அது சரியானதா இருந்துச்சு.

அம்மா ரொம்ப பயமுறுத்தீட்டா டா தம்பி, அவ இல்லாத ஒரு நிமிசத்தை கூட என்னால கற்பனை பண்ண முடியல…” உடைஞ்சுபோன அப்பாவோட குரல். கண்ணுல தண்ணி வந்தாலும்,

அப்பா, அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, அம்மா குணமாகி பழைய மாதிரி திரும்பி வருவாங்க, நீங்க தைரியமா இருங்க, நான் போய் டாக்டர் கிட்ட பேசீட்டு வரேன்.”

டாக்டரை பாத்து பேசுனதுல, சீரியஸான கட்டத்தை தாண்டீட்டாங்க இனிமே பயமில்லை, இப்ப தான் ரிப்போர்ட் வந்துச்சு, இன்னும் உங்க அப்பாகிட்ட கூட சொல்லலை, சொல்லிடுங்க, ஷி வில் பி ஃபைன் இன் ஃப்யூ டேய்ஸ், அப்படீன்னார். இப்ப தான்அம்மா ஹாஸ்பிடல்ல அட்மிட்அப்படீன்னாலே பயம்மா இருக்கே. நான் எங்கம்மாவை சொன்னேங்க.

இழுத்து பிடிச்சிருந்த மூச்சு, அப்ப தான் சீரா வர ஆரம்பிச்சுது. உடனே போய் அப்பாகிட்ட சொன்னேன். அவர் கண்ணுல வந்த கண்ணீரை எனக்கு தெரியாம துடைச்சி கிட்டு, ஒரு நிமிசம் பா அம்மாவ பாத்துக்க இதோ வந்துடுறேன், அப்படீன்னு ஓடுனாரு.

அவர் எங்க போறாருனு எனக்கு தெரியும், என்ன மாதிரியே அவரும் உச்சி பிள்ளையார்கிட்ட வேண்டியிருப்பார். அவள பாத்தேன், எங்கம்மா கைய எடுத்து கைக்குள்ள வச்சிகிட்டு உக்காந்திருந்தா, அவளோட தலையில கைய வச்சேன், நிமிந்து பாத்தா அழுத்தமா ஒரு தரம் கண்ணை மூடி திறந்தேன்.

அவளுக்கு அதுல புரிஞ்சிருக்கும், ஆனா எல்லாம் நல்லதாவே நடக்கும் அப்புடீன்னு ஒரு நம்பிக்கை மட்டும் ரெண்டு பேருக்கும் இருந்துச்சு. அதுக்கப்புறம் ரெண்டு நாள் அங்கயே இருந்து அம்மாவ வீட்டில கொண்டு வந்து விட்டுட்டு கிளம்புனேன். நான் மட்டும் தான். அவ அத்தைய பாத்துக்கணும் நீங்க கிளம்புங்கன்னு சொல்லீட்டா.

எதையோ பாதியிலயே விட்டுட்டு போகுற மாதிரி ஃபீல். நேத்து நடந்த மாதிரி இருக்கு ஆனா நாள் வேகமா ஓடிடுச்சுஒரு மாசம் ஆயிடுச்சுன்னு சம்பளம் என் அக்கௌண்ட்டில ஏறினத சொல்ல வந்த மெசேஞ் பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன். கல்யாணத்துக்கு  முன்னாடி லீவ்வில ஊருக்கு போற மாதிரியான ஒரு பயணத்தை தான் நான் எதிர் பார்த்துகிட்டு இருந்தேன். அதை மாத்தி உடனடியா கிளம்ப வைச்சது அந்த டைரி தான்.

ஆமாங்க அவளோட டைரி….

ஒரு மாசமா நானும் இந்த வீட்டுக்குள்ள சுத்தி வரேன், நேத்து தான் என் கண்ணுல பட்டுச்சு, அடுத்தவங்க டைரி படிக்கக் கூடாது தான். நானா படிக்கலைங்க, சன்னல் காத்துல டைரியில இருந்து ஒரு போட்டோ கீழ விழுந்துச்சு,

என்னோட சின்ன வயசு போட்டோ, அதுலயும் பாதி கிழிஞ்ச நிலைமையில….

அப்ப ராத்திரி ஒன்பது மணி…  அந்த போட்டோவ நான் எடுக்க போகையிலஒரு பெரிய காத்து, சன்னல் கதவெல்லாம் படபடன்னு அடிச்சிகிச்சு, எனக்கும் அந்த படபடப்பு போட்டோவ தொட கையெல்லாம் நடுங்கினுச்சு,….

என்னடா மாறா திகில் படம் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறன்னுள்ளா கேக்கக்கூடாதுஏன்னா நானே எதிர்ப்பாக்காத என் லைப்போட மிகப்பெரிய ஷாக் அந்த போட்டோவுல இருந்துச்சு

நான் யாருன்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரே கன்பியூசன், ஏன்னா அந்த போட்டோவில நானே ரெண்டு தடவை இருந்தேன். நான் நாங்களா இருந்தோம்.

தெளிவாவே சொல்றேனே போட்டோவுல என்னைய மாதிரி ரெண்டு பசங்க தோள் மேல கைய போட்டுகிட்டு நின்னாக, அதுல இருக்குறது நான் தான்னாலும் அந்த ரெண்டு பேர்ல யாருன்னு எனக்கு தெரியல….

குழப்பத்துக்கு முன்னாடி அந்த போட்டோவ பார்த்ததுமே எனக்குள்ள எதோ  இரசாயன மாற்றம். புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருந்துச்சுஇன்னதுன்னு சொல்லமுடியாத அளவு அதிர்ச்சி

சாவியை கையில வச்சிகிட்டே பூட்டை திறக்க முடியலைன்னு ஏன் கவலைப் படனும் , திறந்தேன் அவ டைரிய

ரொம்ப முன்னாடியே எழுத ஆரம்பிச்ச டைரி போல கொஞ்சம் பழுப்பு ஏறி இருந்துச்சு

உள்ளசக்திமாறன்அப்படீன்னு சின்ன புள்ளங்க எழுதுன மாதிரி ஒரு கையெழுத்துல இருந்துச்சுபடங்கள்ல வர்ற மாதிரி போட்டோ, இண்ட்ரோ எதுவும் இல்லாம எழுதியிருந்தது

எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை, என்னால எதையும் மறக்க முடியலை, அழுகை அழுகையா வருது…. அம்மாகிட்ட சொன்னேன், அம்மாதான் உன்னால மறக்க முடியாததை ஆனா எல்லார் கிட்டயும் சொல்ல முடியாத விசயங்களை இந்த டைரியில எழுதிவைன்னு குடுத்தாங்க

கண்ணை மூடுறப்போ எல்லாம் இந்த மாறன்ஸ் தான் வர்றானுங்க, எனக்கு அவங்கள பாக்காம சேர்ந்து ஸ்கூல் போகாம விளையாடாம  இருக்கவே முடியலை. அம்மா திரும்ப கோயம்புத்தூர் கூட்டி போக மாட்டேங்குறாங்க….

இத்தணை வருசம் ஆகியும் நீ மறக்கலையான்னு கேக்குறாங்க, எப்படி மறக்க முடியும்பக்கத்துவீட்டு மீனாபாப்பா என்னோட பொம்மையை உடைச்சிட்டா, எனக்கு அந்த பொம்மை கூட ஞாபகம் இருக்கு….

நாங்க எல்லாரும் எவ்வளவு நாள் ஜாலியா விளையாடிருக்கோம், எப்படி மறப்பேன், இப்ப நான் ஐந்தாம் வகுப்புபிரிவு படிக்கிறேன். நானே பெரிய பொண்ணா வளர்ந்தாலும் என்னோட மாறன்ஸ் மறக்கவே மாட்டேன்….

இன்னிக்கு கணக்கு தப்பா போட்டுட்டேன்னு அந்த மிஸ் என்னைய திட்டீட்டாங்க, என்னோட மாறன் டியர்ஸ் வந்ததும் சொல்லி அந்த மிஸ்ஸுக்கு நல்ல பட்டப்பெயரா வைக்கனும்….

எனக்கு நானே எழுதி வச்சிகிட்டாலும், மாறன்ஸ் எப்ப பாக்கிறேனோ அப்ப காட்டுவேன், என்னோட புது மிக்கி ஸ்டிக்கர், சக்திமான் ஸ்டிக்கர் லா ஒட்டி வைப்பேனே

மாறன்ஸ் மாறன்ஸ் நு சொல்றேனாம், அந்த இடியட் சுமதிபுள்ள யாருடி அந்த மாறன்ஸ் மங்கீஸ் னு கேட்டுட்டாஅவ காம்போஸிசன் நோட்டை மட்டும் மிஸ்கிட்ட வைக்காம தூக்கி போட்டுட்டேன், நல்லா மாட்டுவா நாளைக்கு, அவங்களையா மங்கீஸ்னு சொல்றா அவ  தான் மங்கீ, டாங்கீ, டெவில்

எவ்வளவு அழகா இளமாறன் எழில்மாறன்னு எங்கத்தை பேர் வச்சிருக்காங்க, அதை நான் ஸார்ட்டா, ஸ்வீட்டா மாறன்ஸ் னு கூப்பிட்டா, வந்துட்டா இடியட், இனி அவ எங்கிட்ட வரட்டும், ஹெச். எம் சாரோடா பைக் கண்ணாடிய உடைச்சது இவ தான்னு மாட்டிவிடுறேன்இடியட் இடியட்…”

இன்னிக்கு திரும்ப அதே கனவு என்னால அழுகை தாங்க முடியலை, ரொம்ப நாளா வராம இருந்துச்சிஎன்னால எழுதக்கூட முடியலை கையெல்லாம் நடுங்குது, அன்னிக்கே சொன்னாங்க, சாமிகிட்ட வேண்டிக்கோ திரும்ப கனவு வராதுன்னு, நான் வேண்டினது சாமி கேக்கலை போல, இன்னிக்கு சாமி படத்துக்கு கிட்ட போய் சொல்லணும்

சாமி ப்ளீஸ் மாறன்ஸ்க்கு எதுவும் ஆகக்கூடாதுஒரு தடவை அடிப்பட்டவே இந்த இளமாறன் அப்படி அழுதான்…. அய்யோ அவன்ன்னு சொன்னா திட்டுவானே, எழில் பரவாயில்லை, அவனுக்கு தான் முதல்ல அடிபட்டுச்சு ஆனா அவன் அழவே இல்லை, எழில் எப்பவுமே திட்டமாட்டான்….

அவன் மூக்குல இருந்து இரத்தமா வந்துச்சு, கழுத்து முதுகு எல்லாம் ஒரே இரத்தம், அய்யோ இப்ப நெனச்சாலும் எனக்கு பயமா இருக்கு, ஆனா அவன் அழவே இல்லைஇந்த இளமாறன் தான் காயமே இல்லை, ஆனா அப்படி அழுதான்….

ஆனா அழுதது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சுஎனக்கு அழுகையா வந்துச்சு, கனவுலையும் இப்படித்தான் வந்து அழுகுறான்ஆனா எப்பயும் கூடவே இருக்க எழில் இளா அழுகும் போது எங்க போனான்னு தெரியலை

நான் போய் அழுகாதன்னு சொல்லலாம்னு எழுந்திரிச்சு போனா அம்மா கைய பிடிச்சு இழுக்குறாங்க, எங்கடி போறன்னு………….

ம்ம்மா இளா அழுகுறான் மா, நான் போகனும் மா என்னைவிடு மாஅப்படீன்னு நானும் கெஞ்சி பாத்தேன் விடவே இல்லைகன்னத்துலயே அடிச்சாங்கடக்குன்னு கண்ணை திறந்தா எல்லாமே கனவு

எனக்கு இளா பாக்கனும் போல இருக்குஎழில் ஏண்டா அவனை தனியா விட்டு எங்க போனஇளா அழுகுறான் டாஎழில் எங்கடா போன

 

டைரியில ஒவ்வொரு பக்கமா திருப்ப திருப்ப எனக்கு கண்ணுல தண்ணி வந்துச்சுவிடக்கூடாது எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனும்னு முடிவு பண்ணி முழுக்க படிக்க ஆரம்பிச்சேன்………..

 

டாக்டர் டாக்டர் அந்த ஆக்ஸ்டெண்ட் கேஸ் பெட் நம்பர் 7 பேஸ்ண்ட் கண்ணுல இருந்து கண்ணீர் மட்டும் வருது சார்கூப்பிட்டா நோ ரெஸ்பான்ஸ்…”

நோ நோ இதுவே ரெஸ்பான்ஸ் தான், வாங்க பாக்கலாம்…”

 

Advertisement