Advertisement

அவள் நான் பயணம் – 4

உன் விழி மையின்

வேர் தேடி

முகிழ்த்து எழுகிறதடி

என் வலிமையெல்லாம்

உன் விழித்திரை படைக்கும் காவியம் படிக்க புவியில் எனையன்றி புலவன் இல்லையடி. படைப்பவள் இங்கே என் முகம் படிக்கும் வாசகியாகிப் போனாய். உன் காவியம் படிக்க வந்த நானோ புலவனாகிப் போனேன். முரண் பார்த்தாயா முகில் தீட்டும் கோலங்கள் நிலவில் வெண்மையாகிப் போகிறது. அனல் தீட்டும் கோலங்கள் மழையில் வானவில்லாகிறது.

இரவில் வானவில் தேடும் குழந்தையாய் ஆகிப்போனேனடி, நிலவில்லா கருவானமாய் தனித்து நிற்கிறேன்உலா வந்த போதெல்லாம், உறங்கிவிட்டேன். உள்ளம் உன்னை தேடுகையில் கண்ணாமூச்சி ஆடாதே கண்மணியேகார்முகிலனின் கானக்குழலாய் கை சேர்வாயாஇசைத்திட காற்றாய் நிறைந்திருக்கிறதடி காதல்

எங்க தம்பி காத்து வருது, அந்த கண்ணாடிய கொஞ்சம் திறந்து விடுங்க, என்னமா வேர்க்குது, இவருக்கு மட்டும் காத்தா நெறஞ்சு இருக்காமுல்ல, பையன் பயங்கர தெளிவா இருக்காப்ல, கண்டக்டர்கிட்ட சொல்லி மொதல்ல சீட்ட மாத்தனும்எனக்கு கேக்கனும்னே சத்தமா சொல்றாராம். பக்கத்தில உக்காந்திருக்க பிரகஸ்பதிக்கு நம்ம கவலை எங்க இருந்து புரிய போகுது, அவளுக்கே புரியல.

நீ புலம்பாம இருக்கவே மாட்டியா மாறான்னுநீங்க கேக்கலாம். என்ன பண்றதுங்க, நம்மள்ள பாதி பேர் இப்படி புலம்பியே தான் வீணாப்போறாங்க, இதுல என்ன ஒரு விசயம்னா, புலம்புறதுனால நம்ம கஷ்டம் தீரப் போறதில்ல, அதிகமாகாம இருந்தா சரி. உங்கள மாதிரி ஒரு நல்லவங்க, எல்லாருக்கும் கிடைக்கிறது இல்லைங்க.

என்னடா இது,… மாறன் திடீர்ன்னு இப்படி உண்மையா சொல்லுறான்அப்படீன்னு ஷாக் ஆகாதீங்க. புலம்புறத கேக்க ஆள் கிடைக்குறது தாங்க கஷ்டம், அதான் உங்கள நல்ல நல்லவங்கன்னு சொன்னேன். இப்ப புரியுதா….

எங்களோட பப்பி ப்ளாஸ் பேக் கேட்டு நீங்க சிரிச்சீங்களோ, மொறச்சீங்களோ, ஆனா எங்கம்மா சொன்னதும், நான் உண்மையில அப்படியே ஷாக் ஆயிட்டேன்னா பாத்துக்கோங்க.

இன்னைக்கு இவ்வளவு அமைதியா இருக்க இளமாறனா, ஒரு காலத்தில அடங்காத வாலு பையனா இருந்தான். கசப்பா இருந்தாலும் நாம் உண்மைய ஒத்துகிட்டு தான் ஆகணும். ஆமா கதைய எங்க விட்டேன்….

ஹான், அன்னிக்கு போன் பண்ணதோட விட்டேன். ”மலரும் நினைவுகள தெரிஞ்சிகிட்டேன், நீ யாரு நான் யாரு எல்லாம் புரிஞ்சிகிட்டேன், சக்தி…. மை லவ்அப்படீன்னு கத்தனும்னு தான் போன் பண்ணேன்.

ஆனா நம்ம நேரம் பாருங்க, நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார், தயவு செய்து சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்னு சொல்லீட்டாங்க. நீ யாரு டி எனக்கும் சக்திக்கும் நடுவுல நீ என்னடி வந்து அப்புறம் பேசுங்கன்னு சொல்லுறது இடியட்னு அந்த கம்பூயூட்டர் வாய்ஸ திட்டி தீர்த்துட்டேன்.

நான் திட்டுனது அவளுக்கு கேட்டுச்சோ இல்லையோ, என்னோட மேனேஜருக்கு கேட்ருச்சுங்க, கரெக்டா போன் பண்ணீட்டான். அவன் பேசுற ஹிந்தி எனக்கு புரியல, நான் பேசுற அட்வான்ஸிடு இங்கிலீஸ் அவனுக்கு புரியல, அங்க அங்க தமிழ போட்டு மிக்ஸ் பண்ணி பேசுனதுல, லீவ் முடிஞ்சு ரெண்டு நாளாச்சு இன்னும் வராம என்னடா பண்ணுறன்னு கேக்குறான்னு புரிஞ்சிடுச்சு,

நாளைக்கு வந்துடுறேன் எசமான்ன்ன்ன்ன்ன்னுஅவனுக்கு புரிய வைக்குறதுகுள்ள நாக்கு தள்ளிருச்சு, ஏன் டா பாவி உன்ன மாதிரி ஆளுக்காக தானே மெயில்னு ஒன்னு கண்டு பிடிச்சிருக்கோம் அத பண்ண வேண்டியது தானேன்னு கடுப்பாகி மெயில் ஓபன் பண்ணுனா, வரிசையா பத்து மெயில், அவனும் அனுப்பி அனுப்பி பாத்துட்டு ஆள காணாம்னு தான் போன் போட்டுருக்கான்இல்ல இல்ல போட்டுருக்கார். எதுக்கு சேப்டியாவே பேசனும் எவனாச்சும் போட்டு குடுத்திடப்போறான்.

ஒருவழியா அந்த முட்டைக்கோஸ் மேனேஜருக்கு நாளைக்கே வரேன்னு மெயில் அனுப்பீட்டு, கீழ வந்தேன். எங்கம்மா ஒரு பெரிய பார்சல் ரெடி பண்ணிகிட்டு இருந்தாங்க.

ஏன்மா எனக்கு தெரியாம திடீர்னு அப்பா வெளிநாட்டுக்கு ஏதும் போறாறா, அங்க கிடைக்காதுன்னு எல்லாம் பேக் பண்ணுறீங்களா

டேய் இது உனக்கு டாஎங்கம்மாவோட ரியாக்ஷன் பாக்கணுமே, பில்டர் காபியான்னு கேட்டவர்கிட்ட இது ப்ரூ டா அம்பீன்னு சொல்லி சிரிப்பாங்களே ஒரு மாமி அவங்க தா கண்ணுமுன்னாடி வந்து நின்னாங்க.

அம்மா தாயே நீங்களெல்லாம், என்னிக்கு இந்த மூட்டை கட்டுறத நிறுத்தப்போறீங்களோன்னுதலைக்கு மேல கைய தூக்கி ஒரு கும்பிடு போட்டேன். அதுக்கு எங்கம்மா சொன்னாங்க பாருங்க,

இந்தியா முழுக்க ஒரே விலைவாசி என்னிக்கு வருதோ அன்னிக்கு நான் இப்படி மூட்டை கட்ட மாட்டேன் மாறா, இந்தியா முழுக்க கஷ்டம், தமிழ்நாடுக்குள்ள மட்டுமாவது ஒரே விலைவாசி வரட்டுமே இத நான் நிறுத்திடுறேன்.”

மம்மி அதுக்கு நீங்க கியூபாவுக்கும், ரஷ்யாவுக்கும் தான் போகனும்

அப்ப நீயும் இத தூக்கீட்டு தான் போகனும்

அம்மாஆஆஅபோன ஒரு வாரத்தில வர்றதுக்கு எதுக்கு மா மூட்டைன்னுஅவங்க கட்டுன மூட்டைய அவங்க தலையிலயே கட்டீட்டு நான் சென்னைக்கு கிளம்பீட்டேன்.

அப்புறம் ஒரு விசயம் என் வாழ்க்கையில நடந்த விசயங்களை வெறுமனே என்னோட கண்ணோட்டத்துல வசனமா மட்டும் தெரிஞ்சிகிறத விட, என்ன நடந்துச்சோ நடந்ததை நடந்த படியே தெரிஞ்சுக்கணும் இல்லையா. சோ இனிமே என் வாய்ஸ கட் பண்ணீட்டு அப்படியே வீடியோ மாதிரி உங்களையே பார்க்க வைக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க.

ஏன்னா நான் பேசிக்கலாவே அதிகமா பேசுறதில்ல, ரொம்ப அமைதி, யாராச்சும் கேட்டா மட்டும் தான் பதில் சொல்லுவேன். அப்புறம் இன்னொரு விசயம் இதுக்காக யாரும் வருத்த படவேண்டாம்.

திருநிறைச்செல்வன் இளமாறனுக்கும், திருநிறைச்செல்வி சக்திக்கும் திருமணம் செய்ய பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட தேதிக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது.எங்க கல்யாண வீடியோ ப்ளே பண்றேன்,…

சுற்றி சுற்றி சொந்த பந்தங்கள் நிறைந்திருந்த அவளின் வீடு பெரியப்பா, பெரியம்மா, அண்ணன்மார்கள் அண்ணிமார்கள், அக்காமார்கள், மாமன்மார்கள், பாட்டி முறையில் உள்ள லூட்டிகளோடும், குட்டீஸ்களின் குதூகலத்தோடும், மற்றும் நம் உறவினர்கள் அனைவரும் சேர்ந்திருக்க, சக்தியின் வீடு களைகட்டியிருந்தது.

ஒற்றை பெண்ணாய் பிறந்து வளர்ந்தவள் என்று யாருமே சொல்ல முடியாத அளவிற்கு அவளோடு சுற்றித் திரிந்த நட்பூக்கள் அவளை சந்தோச மணம் கமழ வைத்துக் கொண்டிருந்தனர்.

இயல்பில் அவள் சாதுவாக இருந்தாலும், அவளின் இயல்பை மறைத்திடுமளவிற்கு அவளை உற்சாகமாகவே, வலம் வர வைத்த நாட்கள் அவை. இதழ்களில் புன்னகை எப்போதும் ஒட்டியிருந்தது. தோழிகளின் கேலியும், மெய் மறக்க வைத்திடும் கனவுகளும், அவளின் கன்னங்களில் செம்மை மறையாது வைத்திருந்தது.

நலங்கு வைத்து கை நிறைய பூட்டி விடப்பட்டிருந்த வளையல்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு மாறன் எங்கே, மாறன் எங்கே எனக் கேட்பது போலிருந்தது அவளுக்கு. தன்னை அறிந்து கொண்டிருப்பானா, மழலையில் செய்தவற்றை உணர்ந்திருப்பானாஉணர்ந்த போது தன்னை தேடியிருப்பானா, மீண்டும் பார்க்கையில் என்ன சொல்வான், தன்னைப் போலவே அவனும் என்னை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருப்பானா

சக்தியின் மனம் வானில் பறந்து கொண்டிருந்தது. அவளின் கண்கள் எங்கோ இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது. சுற்றுப்புறம் மறந்து அமர்ந்திருந்தவளின் கன்னத்தில் மோதிவிழுந்தது முத்தமொன்றுநடப்பிற்கு அவள் மீள்கையில் , அங்கே யாருமில்லை.

கனவோ, இல்லையே, கன்னத்தில் உரசிப்போன உதடுகளின் ஸ்பரிசம் இன்னும் நீங்கவில்லையே, புரியாமல் மீண்டும் விழிக்க, இப்போது மறுகன்னமும் முத்தத்தால் இடிபட, சட்டென எழுந்து நின்றவளின் கன்னங்களை இப்போது இருகரங்கள் ஏந்தியிருந்தது.

அலைப்புறுதலின் காரணம் அலைகள் அறிந்ததோ இல்லையோ, தேடிய விழிகளில் தூரத்து வெளிச்சமாய் வெகு அருகில் நின்றிருந்தான் அவன். அத்துனை மென்மையாய் கன்னம் தீண்டியவனின் கம்பீரம் பேசிடும் சிகையின் சின்னக்குழந்தை அத்துணை இதமாய் தழுவவில்லை அவள் இதழை.

உச்ச ஸ்துதியில் இசைக்கும் வீணையின் நரம்புகளென மீட்டப்பட்டது அங்கே காதல். கண்ணில் பளிச்சிடும் மின்னலைக்காண கருமேகத்தடைகளை விலக்கி அவன் நிலவென வருகையில், செம்மை சூழ வீழும் அந்திச்சூரியனென அவள் தாழ்த்திக் கொண்டாள் இமைகளை.

பின்னியிருக்கும் இதழ்கள் பிரிந்து மலர்தல் பூவின் இயல்பு, இதழ்பின்னலில் மலர்வதே காதலின் அழகு, ரசித்த ரோஜாவின் பனித்துளி பருகுகையில் உரசிடும் முட்கள், தாகத்திற்கு தடை போட, அனிச்சையாய் நோக்கிக் கொண்டது அவனின் கருவிழியும் அவளின் அனல்மொழியும்.

பல வருடப் பிரிவா, பிரிவின் வலியை பிறர் உணர்த்த நேர்ந்த கொடுமையா, அவள் கண்களை சந்திக்க முடியாமல் விடுவிடுவென சென்றுவிட்டான் இளமாறன்.

அவன் கண்களில் மிளிர்ந்த காதலில் எங்கிருந்து வந்தது அந்த வலி புரியாமல் நின்றிருந்தாள் சக்தி.

சித்தி ஒரு பாட்டு பாடேன், ப்ளீஸ்குட்டிப்பையன் சிபியின் குரல்.

ஹா ஹா ஹாஎன அவளை சுற்றி அமர்ந்திருந்த தோழியர் சிரிக்க, திருதிருவென விழித்த சக்தியைப் பார்த்து இன்னும் பலமா சிரிக்கத் துவங்கினர் அவர்கள்.

சிபி குட்டியா கிஸ் பண்ணதுவிழிவிரித்து கனவிலிருந்து மீண்டவள் போலியாகக் கேட்டாள் சக்தி.

பின்ன மிஸ்டர்.ஜாக் வந்தா கிஸ் பண்ணுவாரு, அவர் இன்னிக்கு நைட் தான் வரார்என்று சொல்லி அவளை மீண்டும் அமரவைத்தார் சிபியின் அம்மா, சவிதா.

பாவம் சவிதாவிற்கு தெரியாதே சற்றுமுன்னரே இளமாறன் வந்துவிட்டது. அவனின் குடும்பத்தார் ஆம்னி பஸ்ஸில் வர இவன் மட்டும் நண்பர்களுடன் காரில் வந்துவிட்டிருந்தான்.

குருவே சூப்பரா சொன்னீங்க, உங்க விழுதுகளில் ஒண்ணு ரூட் மாறி போகுது கரெட் பண்ணுங்கதோழி ஒருத்தியின் குரல் மட்டும் வந்தது.

அடியேய் அசரீரி மாதிரி குரல் மட்டும் குடுக்காம, ஜோதில வந்து ஐக்கியமாகுசவிதா ஆணையிட,

நான் வர்றது இருக்கட்டும், மிஸ்டர்.ஜாக் யாருன்னு அனொன்ஸ் பண்ணுங்க, படிக்கிறவங்க கன்பியூஸ் ஆயிட போறாங்கமீண்டும் சொன்னது குரல்.

ஹே எல்லாரும் கேட்டுக்கோங்க பா, இதுவரைக்கும் நம்ம மிஸ்டர்.ஜாக்னு சொல்லீட்டு இருந்த அந்த முகம் தெரியாத ஆள், திருவாளர் இளமாறன் தான்னு, அபீஸியலா அறிவிக்கிறோம்.”சக்தியின் பப்பி ப்ளாஸ் அறியும்வரை சக்திக்கென வரபோகும் மணமகனை மிஸ்டர்.ஜாக் என பெயரிட்டு வைத்திருந்தனர் தோழியர்.

உடனே கரகோஷத்தோடு, ஆரவாரங்கள் எழ, “ஸ்ஸ்ஸ்ஸ் எல்லாரும் அமைதியா இருக்கீங்களா, நான் என்ன கேட்டேன், எல்லாரும் என்ன பண்ணுறீங்க, மது டியர் இவங்க யாரும் இனிமே வாய தொறக்காம நீ பாத்துக்கோ, கஷ்டமான வேலை தான். பட் நீ தான் கேர்புல்லா செய்யனும்.

 அப்ப அப்ப ஆஃப் மைண்ட் ஆகுற சக்தி சித்திய எழுப்பி நான் திரும்ப பாட்டு பாட சொல்றேன்.” மழலைக்குரலில் வந்த சிபியின் இந்த அறிவிப்பால் அனைவரும் சிரிப்பை அடக்கி கப்சிப் ஆக,

சக்திக்கு இவர்களின் கேலியெல்லாம் மனதில் பதியவில்லை. அவனின் வலி ஏனென்ற தேடல் மனதின் ஆழத்தில் இருந்தது.

சிபிக்காக பாடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டவள், இப்போது அவளாவே பாடினாள்.

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே

ஆனந்த மோகன வேணு கானமதில் அலைபாயுதே கண்ணா…..

நிலைபெயராது சிலை போலவே நின்று

வேதமாவது அறியாமலே மிக விநோதமான முரளீதர எனத் துவங்கி,

… .. … .. … .. … .. … .. … .. … .. .. 

கதறி மனமுருகி நான் அழைக்கைவோ

இதர மாதருடன் நீ களிக்கவா

இது தகுமோ இது முறையோ இது தருமம் தானா….

என்று அவள் பாடுகையில் மாறன் அங்கிருந்த பெண்களின் புன்னகையுடன் உரையாடிக் கொண்டிருந்தான். தன்னை திரும்பிக் கூட பார்க்காமல் அப்படி என்ன சிரிப்பு அவர்களிடம் என்று வந்த கோபம் வெளிப்படும் முன் பாட்டை முடித்திருந்தாள். பாட்டாலயே கேள்வி கேக்குறியா கண்மணி இந்தா வரேன் என்ற இளமாறனோ,

அவள் எதிர்பார்க்கா நேரம், ”ஸ்ராபெர்ரிகண்ணே, விண்வெளிப் பெண்ணே. சில்வர் ஸ்பூன் கையோடு பிறந்தவள் நீயே, ஒரு ஃப்ரிட்ஜிற்குள் ஆப்பிள் போல் இருந்தவள் நீயே, தங்கத்தட்டில் சோறு, பென்சர் ஏசி காரு, இருந்தும் நெஞ்சோடு சொல்லாத பாரம் என்ன, தனிமை இனிமை ஆக இளமை கொடுமை ஆக உன் கண்ணோடு சொல்லாத சோகம் என்ன, உன் பெண்ணழகையும் பேரழையும் எப்படி மறைத்தாய், உன் கற்பனைகளின் அற்புதங்களை இப்படி அடைத்தால், பிடிக்குமே பைத்தியம் பார்க்கவா வைத்தியம்…” என்று அங்கிருந்த பெண்களுடன் ஆடிய படி அவளை பார்வையால் கேட்க,

அங்கே சக்தியின் தந்தை, என்னம்மா அங்க சத்தம்…. என்ற படி உள்ளே வந்தார். அவரின் மீசையைக் கண்டாலே இளமாறனுக்கு பக்கென்று இருந்தது. சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா…. என்று சொல்லியவன் பதட்டத்தில் சக்தியின் அறைக்குள் சென்று விட்டான்.

சக்தியின் தந்தையின் குரலால் தோழியர் அனைவரும் ஆளுக்கொரு வேலையை தேடிக் கொண்டு நகர்ந்துவிட, சக்தி மட்டும் அமர்ந்திருந்தாள் அங்கே. உள்ளே வந்த மாறன் அவள் கண்களை சந்திக்க முடியாமல் வெளியேறப் போக,

அவளோ, அவனை செல்ல முடியாத படி இருகைகளாலும் சிறையிட்டபடி நின்றிருந்தாள், மாறனோ அதிர்ந்து அவள் முகம் நோக்க,

பழைய பைத்தியம் பைத்தியம் நானில்லை, உனது வைத்தியம் வைத்தியம் தேவையில்லை, எனது முன்னவர் யாருமே மூடரில்லை, என் நெஞ்சினில் குழப்பமில்லை, கணவன் சேவையில் சேவையில் இன்பம் இல்லை, மனித சேவையில் துன்பம் இல்லை, நான் யாருக்கும் பூமியில் பாரமில்லை.என் பாதையில் இருளும் இல்லை, நேற்று காதல் கண்டு , இன்று கணவன் கொண்டு, நாளை அடுப்பினில் வெந்திட ஆசையில்லை, முதலில் மாலை சூட்டும் பிறகும் விலங்கும் பூட்டும், உங்கள் கசமுசா கல்யாணம் தேவையில்லை.”

என்று இதழில் ஒரு ஏளனவளைவை தெறிக்கவிட்டபடி சென்று விட்டாள்.

என்னது கல்யாணம் தேவையில்லையாஎன்று அவன் வெளியே செல்ல அவனின் குடும்பம் , சொந்த பந்தங்கள் அனைவரும் வந்துவிட, அவளை பார்க்கும் வாய்ப்பே மணவறைக்கு முன் வாய்க்கவில்லை.

திருமணத்திற்கு முன்பே தம்பதியரை ஜோடியாய் நிறுத்தும் பழக்கம் இல்லை என்று மீண்டும் கமெண்ட்ரி பாட்டி போட்ட தடை உத்தரவால், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் வைக்கும் வரவேற்பும் இல்லாமல் போனது.

யாரை நொந்தும் பயனில்லை, விதைத்ததை அறுத்தே ஆக வேண்டுமே. அவள் இல்லாத போது மனதில் பொங்கும் காதல், அவளைக் காண்கையில் கண்முன் வர மறுக்கிறதேமீட்டெடுக்க முடியாத பால்ய நினைவுகளை உண்மையென்று நம்பி, அவளும் நானும் திருமணம் முடிப்பதா, எனக்கே நினைவில்லாத போது அவளுக்கு எப்படி நினைவிருக்கும்

உண்மையில் இது காதல் தானா…. எண்ணிக் கொண்டிருக்கும் போது, ”முகூர்த்தத்துக்கு நேரமாச்சு பொண்ண அழைச்சுண்டு வாங்கோஎன்ற குடுமி அய்யரின் ஆதர்ஷன டைலாக் கேட்டது. இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

கையை மீறி நடப்பதைப் போல ஒரு உணர்வு இருந்தாலும், கையில் மங்கல நாண் கொடுக்கப்பட்டது. சுற்றி நிற்பவர்கள் கையில் அட்சதையோடு காத்திருக்க, ”மாட்டுனடா மாறாஎன்ற குரல் மனதிற்குள் ஒலித்தது.

கெட்டிமேளம் கெட்டிமேளம்அடுத்த டைலாக்

 ”மாங்கல்யம் தானம் பண்ணுங்கோ

என் கையில் இருந்த மஞ்சள்கயிறு அவள் கழுத்தில் தஞ்சம் புகுந்திருந்தது. அடுத்து அவளை வளைத்து அவள் நெற்றியில் வைத்த குங்குமம் என அடுத்து அடுத்து அய்யர் சொன்ன கமாண்டுகள் எக்ஸிகியூட் ஆகிக் கொண்டிருந்தது.மாறன் மனதில் மட்டும் வார்னிங் மெஸேஜ் காட்டிக்கொண்டே இருந்தது.

என்னங்க வீடியோ பாத்தீங்களா…. அவனவன் ஆயிரம் சந்தோசம், எதிர்பார்ப்புகளோட கட்டுற தாலிய நான் கட்டும் போது அவ்வளவு குழப்பம், அவ்வளவு கேள்வி.

நல்லாத்தான மாறா இருந்த எப்படி இப்படி ஆன, அதுதானே உங்க கேள்வி, சொல்றேன் சொல்றேன்,… அன்னிக்கு பயங்கர ஜாலியா சென்னை கிளம்பிப் போனேன்ல, அப்ப என்ன நடந்துச்சுன்னா, ஆபீஸ் போனதும் எங்கேஜ்மெண்ட்க்கு ட்ரீட் குடுக்கனும்னு ஒரே சவுண்ட், நானும் ப்ளாஸ்பேக் தெரிஞ்சதுல நல்லா சந்தோசமா இருந்தேனா, சோ கே சொல்லி கிளம்பீட்டோம்.

வழக்கம் போல அவனவன் வேலைய பாக்க, சாப்ட வந்த எடத்துல வேற என்ன வேலை சாப்டுறது தான், அதுக்கு நடுவுல ஒருத்தன் மெல்ல என் காத கடிக்க ஆரம்பிச்சான்.

அப்புறம் மாப்ள, மாப்பிள்ளையாயிட்ட

ஆமான்டா அதுக்குத்தான இதெல்லா

ஹி ஹி ஆமா மாப்ள, அப்புறம் பொண்ணு எப்படி புடிச்சீங்க, லவ்வா, அரேன்ஜா…?”

புடிச்சேனா, டேய் அவ என்ன ஜூவுலயா இருந்தா நான் புடிச்சிகிட்டு வர

ஹி ஹி அதில்ல மாப்ள தங்கச்சிய எப்படி பாத்தன்னு கேட்டேன்

தங்கச்சியா அது யாருடா

அடேய் உன் வருங்கால பொண்டாட்டிய கேட்டேன் டா

ஹான் அப்படி தெளிவா கேளுடா

கேட்டாச்சு கேட்டாச்சு

அவள நாலு வயசிலயே பாத்தாச்சுடா, இப்ப மேரேஜ்

என்னடா சொல்ற

ஆமா மச்சி எங்களோடது பப்பி லவ், இப்ப தான் நேர்ல பாத்துகிட்டோம், அதுவும் அவள பொண்ணு பாத்துட்டு வந்து நிச்சயம் ஆனதுக்கு அப்புறம் தான் இந்த ப்ளாஸ் பேக்கே தெரியும்

செம்ம கேடி மாப்ள நீனு, நாலு வயசுல பாத்து பழகுன பொண்ண நெனவு வச்சுகிட்டு, தேடி பிடிச்சி, அந்த பொண்ணயும் ஒத்துக்க வச்சு, வீட்சில அவங்களா பாக்குற மாதிரி ஏற்பாடு பண்ணி நிச்சயமெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் இது லவ் மேரேஜ்னு வீட்டுக்கு சொல்லிருக்க, எப்படிடா, உன்னால மட்டும் இப்படி, எதோ படத்துல வர மாதிரி இருக்குடா…”

அடேய் அடேய் டைரக்டராகப் பொறந்தவனே, நீயா எவ்வளவு கற்பனை பண்ணுற, நிப்பாட்டுடா நிப்பாட்டுடா

ஏன் டா

அட ஏன் டா நீ வேற, நிச்சயம் பண்ணுனதுக்கு அப்புறம் தான் டா, எங்களுக்கே தெரியும்

என்னன்னு

நாங்க சின்ன வயசுலயே நல்லா அஃபெக்ஸானா இருந்திருக்கோம்னு, ”

அஃப்பெக்ஸனா இருந்தீங்களா, உனக்கு ஞாபகம் இருக்கா, ”

இல்ல டா, அம்மா சொன்னாங்க, அப்படித்தான் தெரியும் டா

அது சரி, இதெல்லாம் அந்த பொண்ணுக்கு தெரியுமா

தெரியும்னு தா நெனக்கிறேன்

நெனக்கிறியா

ஆமா டா அவகிட்ட நான் இன்னும் பேசல, ஆனா அவ தாn தெரிஞ்சிகிட்டு வாங்கன்னு சொன்னா

டேய் எந்த காலத்துல டா இருக்கீங்க

ஏன் மச்சி 2016ன்னா, இருபத்தி ஒன்றாம் நூற்ரறாண்டு தானடா ஆச்சு

ஆமா எல்லாத்தையும் என்கிட்டயே கேளு

ஏன் டா டென்சன் ஆகுற

டென்சன் இல்லடா, உண்மையிலயே ஆச்சரியமா இருக்கு

ஏன் மச்சி

ஒருத்தன் பொறக்கும் போதே நல்லவனா பொறக்குறானா, இல்ல வளர வளர தான் நல்லவானா ஆகுறானா

என்னடா திடீர்னு இப்படிலாம் யோசிக்க சொல்ற

இதெல்லாம் இப்ப புரியாது, பொறுமையா வீட்டிக்கு போயி யோசீன்னுஅவன் கிளம்பீட்டான்.

எதோ அவனால் முடிஞ்ச நல்லகாரியத்தை பண்ணீட்ட ஃப்பீலோடு பாஸ் போகும் போது பாக்கனுமே,

அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவரேன்னுபேக்க்ரொண்ட் மியூசிக் போடுவோம்னு பயங்கர பில்டப்போட அவன் நடந்து போனான் பாருங்க, என் மனசுல ஓடுனது எனக்கு தான் தெரியும், ஆக்சுவலா ஓடுனது என்ன பாட்டு தெரியுமா,

விடுகதையா இந்த வாழ்க்கை…… விடை சொல்லுவார் யாரோ

நெலமைய பாத்தீங்களா, கதைய அரைகுறையா சொன்னதுக்கே, எப்படி கெளப்பிவிட்டிட்டு போயிருக்கான்னு, இந்த குழப்பமெல்லாம் சேர்ந்து மொத்த உருவமா, உக்காந்திருந்தேன்,

அன்னிக்கு நைட் பால் சொம்போட அவ உள்ள வந்தா, அதாங்க ஃப்பர்ஸ்ட் நைட்டாம்,….

இங்க என்ன பாக்குறீங்கஅங்க பாருங்க, ரெண்டு வெள்ளைக்காக்கா, சோடியா ஜ்வொய்ங்குன்னு பறக்குது

வெள்ளைக்காக்கா, அதுவும் நைட்ல, அதுவும் ஜோடியா, ஜ்வொய்ங்குன்னு….

அட ஆமாங்கஅந்த வெள்ளைக்காக்கா பறந்து போய் லேண்ட் ஆகுற இடம் சுவிஸ் அங்க வைக்குறோம் பாருங்க டூயட்….

அந்த டூயட் பாத்துகிட்டே இருங்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வரேன்….         

Advertisement