Advertisement

அவள் நான் பயணம் – 2

 

என் கம்பீரமெல்லாம்

அவளின் கால் மெட்டி

நெகிழ்வில்

நொருங்கிப் போகிறது

ஆம் என் சிகை வணங்கா கம்பீரங்களெல்லாம், அவளின் மெல்லிய தலை கோதலில் மேற்கு சூரியனாய் வீழ்ந்துவிடுகிறது. நாணலாய் நிற்க வேண்டிய தருணங்களில் தென்னையாகிப் போனதால் ஒடிந்த மனதை காதலெனும் ஓடையில் செலுத்தி அவளைத் தேடிச் செல்கிறேன்.

இவ்ளோ கூட்டத்தில சீட்டு கெடைக்குறதே பெரிய விசயம், இங்க எப்படி மாறா கவிதைன்னு கேக்குறீங்களா…. அவள நெனச்சா போதுங்க, மனசு சும்மா ஜில்லுனு ஆகி கவிதை பனியாக் கொட்டுது. (ஒரு ஸ்வெட்டர் பார்சல்…)

அடேய் மழையும் வராம வெயிலும் அடிக்காம காத்தும் இல்லாம, பஸ் வெக்கை வேற, இந்த புழுக்கத்துல உனக்கு பனியாக் கொட்டுதாஇது தானே உங்க மைண்ட் வாய்ஸ். அத நான் காட்ச் பண்ணீட்டேன். (இங்க என்ன த்ரோ பால் மாட்ச்சா நடக்குது)

இந்த கவிஞர்கள் கிட்ட இருக்க ஒரு கெட்ட பழக்கமா நல்ல பழக்கமா தெரியலங்க, அவங்களுக்கு கவிதை எப்ப வருமின்னு நீங்க கேட்டுப் பாருங்களேன். அழகான இயற்கை காட்சிகள், பசுமை, மழை, தென்றல் இரவு, நிலவு, காதலி, காதலன், இதெல்லாம் ஒரு காரணியா இருந்தா தான் அவங்களுக்கு கவிதை வருமின்னு நெனச்சிட்டு இருப்போம்.

ஆனா அது ஒரு அழகான தருணம். தாய் பறவை தேடி எடுத்துட்டு வந்த உணவை தன் குஞ்சுகளுக்கு ஊட்டுற மாதிரி தன்னோட உணர்வுகளை கவிதைகள் மூலமா ரசிகனுக்குக் கொடுக்கிறவன் தான் கவிஞன்.

அடம் பிடிக்கிற கொழந்தைக்கு சோறூட்டுற அம்மாவுக்கு, பிள்ளை வாயெல்லாம் சோறாகுறத விட வயித்துல இருக்க பசிங்குற உணர்வு தா முக்கியம். அப்படித்தான் கவிஞனும், எந்த சூழ்நிலைன்னாலும், அதோட புறத் தோற்றத்தை விட, அங்க தெரியுற உணர்வு, ரொம்ப முக்கியம்னு நெனப்பான்.

அவன் நெனக்குறது இருக்கட்டும் இப்ப நீ என்ன நெனக்கிற மாறாஅப்படி நீங்க கேக்குறதுக்கு முன்னாடி நம்ம கதைக்கு அதாங்க என் கதைக்கு வரேன். கொஞ்சம் முன்னாடி தான லட்டு கதைய சொன்னேன். அதோட கண்டினியுசேன். இப்ப நெனச்சா நானா அப்படி ஓடி வந்தேன்னு இருக்குங்க, இன்னைக்கு மாதிரி இருந்தா ஒரு முழுநாள் உக்காந்து பொண்ணு பாத்திருப்பேங்க. (திரும்ப பொண்ண வர சொல்லி பாத்துட்டு வந்தவன் தான நீ)

இப்புடி பொண்டாட்டி மேல பாசமிருக்குறவன் என்னத்துக்குடா அவ கூட சண்டை போட்டநோ நோ அப்படி மட்டும் கேக்ககூடாது.

ஏன்னா நான் சண்டை போட்டு தா  பிரிஞ்சேன்னு சொல்லவேயில்லை. ஆக்சுவலா என்ன நடந்ததுன்னா, அதே மார்டீன கொழுத்திவிடுங்க, சாரி அது தீர்ந்திடுச்சுன்னா, வேற எடுத்துகோங்க……

பைக்க ஸ்டார்ட் பண்ணுனவன் வீட்டுக்கு வந்த வேகத்த பாத்தே எங்கம்மா ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க, இன்னைக்கு என்ன ஆட்டம் ஆடப் போறானோன்னு.

அதே மாதிரி தா நானும் ஆரம்பிச்சேன்,

என்னம்மா இதெல்லாம். சொல்லாம கொள்ளாம பொண்ணு பாக்க கூட்டிட்டு போயிருக்க, அங்க போனதுக்கு அப்புறமாவது சொன்னியா, நான் பாட்டுக்கு லட்ட எடுத்து தின்னா அங்க இருக்க அதிபுத்திசாலி கெழவி ஒண்ணு மாப்பிள்ளைக்கு பொண்ணு புடிச்சிருக்காம்னு அனொன்ஸ் பண்ணுது

அதில்ல தம்பி, உன்கிட்ட சொன்னா நீ ஒத்துக்க மாட்ட, வேணாம்னு சொல்லுவ, அதா சொல்லாம கூட்டிட்டு போயி அந்த பொண்ணு பிடிச்சி போச்சுன்னா அப்புறம் சொல்லிக்கலாம்னு இருந்தேன்

யாரு சொன்னாஇல்ல யாரு உனக்கு இந்த அற்புதமான ஐடியாவெல்லாம் குடுக்குறாங்க சொல்லு….. சொல்லு மா

இல்லடா நானும் உங்கப்பாவும் தா முடிவு பண்ணுனோம்

ஆனா எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மம்மி, அவர் எப்புடி உன்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் இப்படி ஆயிட்டாரா, இல்ல அதுக்கு முன்னாலயே இப்படித் தானா

டேய்ய்ய்ய்ய்….”

பின்ன என்ன மா எதுல உங்களோட விஞ்ஞானி மூளைய செயல்பட விடுறதுன்னு வேணாமா

டேய் நிப்பாட்டு…”

ஏன் ஏன்…. ஏன்…????”

எதுக்குடா இப்ப கத்துற, உண்மையிலயே இந்த ஏற்பாடு பிடிக்காதவன், விசயம் தெரிஞ்சதும் எழுந்திரிச்சு போக வேண்டியது தான, அத விட்டுட்டு இன்னொரு தடவ பொண்ண வர சொல்லி நிறுத்தி நிதானமா பாத்துட்டு, ஃபெவி குயிக் போட்ட மாதிரி அங்கயே ஏன் உக்காந்திருந்த…”

அதெப்படி மா முடியும், என் செல்ல அம்மா, உனக்கு அது அசிங்கமாயிடாதாஎன்ன புள்ள வளர்த்து வச்சிருக்கு இந்தம்மா பொது எடத்துல நாலு பேருக்கு மத்தியில எப்புடி நடந்துக்கணும்னு ஒரு நாகரீகம் கூட இல்லாம அந்த பையன வளர்த்து வச்சிருக்கேன்னு உன்ன பாத்து யாராச்சும் டங்க் மேல டீத் போட்டு பேசீட்டா, என்னால தாங்க முடியுமா, உன்னை யாரும் கொற சொல்லீடக்கூடாதுன்னு தா அமைதி காத்தேன் மம்மி

அடப்பாவி அவ்வளவு நல்லவனா நீ, பக்கத்துவீட்டு ரேஷ்மி பாப்பாகிட்ட சண்டை போட்டு அந்த ராகுலோட கிரிக்கெட்ட பேட்ட ஒடச்சி, நீ அவங்க கூட பண்ணுன அலம்பல்ல அவங்கம்மா கிரிஜா என்கிட்ட பேசுறதே இல்ல,”

அது அறியாத வயசு மம்மி

க்கும் நீ இப்ப வரைக்கும் அதைத்தான டா பண்ணுற

இப்ப என்ன மம்மி நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றியா

நான் அப்படி சொல்லவே இல்லையே

நீ சொல்லுவ மா, இதே பேச்சு இன்னும் கொஞ்ச நேரம் கண்டினியூ ஆச்சுன்னா, இதுவும் சொல்லுவ, இதுக்கு மேல போயி அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் வைக்கனும்னு சொல்லுவ

டேய்ய்ய்ய் இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல, நான் இன்னும் அத பத்தியெல்லா யோசிக்கவே இல்லையேஇப்படி எங்கம்மா மறுத்துகிட்டு இருக்கும் போதே எங்க தல எண்ட்ரி குடுக்குறார். ( அட எங்கப்பா தாங்க)

நீ நெனக்கல பூரணி ஆனா உன் புள்ள நெனக்குறான் அப்படி…”

ஹி ஹி ஹி அப்படியெல்லாம் இல்ல டாடி” (கரெக்ட்டா சொல்லீட்டாரே)

உடனே வந்து ரெண்டு பேரு ஆளுக்கொரு காதை பிடிச்சு திருக ஆரம்பிச்சுட்டாங்க (வலிக்காமத்தா திருகுனாங்க ஆனா நம்மளோட பெர்ஃபானென்ஸ் இப்ப தா காட்டணும்)

அய்யோ அம்மா அப்பா வலிக்குது விடுங்க, இதுக்குத் தான் இந்த ஒலகத்துல நல்ல பிள்ளையாவே இருக்கக் கூடாது

அடேய் எதுக்கு எதடா பேசுற “ (அப்பா ஸ்ட்ரிக்ட்)

சரி நாளைக்கு அவ வந்து ஏன் உங்க புள்ளைக்கு காது மட்டும் தனியா விரிஞ்சு நிக்குதுன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க

யாருடா

ம்ம் உங்க மருமக ஓம் சக்தி

அடிங்க அவனவர வர ரொம்ப வாய் ஜாஸ்தியாயிடுச்சு, கல்யாண வயசுல இருக்க பையன் மாதிரியா இருக்கான், எப்ப பாரு வெளையாட்டு

பூரணி உன் பையன் தெளிவாத் தா இருக்கான் நீ தா அப்பாவியாவே இருக்க, அந்த டேஞ்சரஸ் ஃபெல்லோ அந்த பொண்ண பேசி முடிச்சு அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்த வைக்க சொல்லீட்டு போறான், உனக்கு புரியலையா

அடப்பாவி

கல்யாணத்தப்போ இருந்த மாதிரியே இருக்க பூரணி

அப்படியாங்க இருக்கேன்

ஆமா டா அதே மாதிரி அம்மாஞ்சியா ” (இப்ப தான தெரியுது மாறன் ஏன் இப்படி பேசுறான்னு)

அதுக்கப்புறம் பூரிக்கட்டை பறந்ததுல, எங்கப்பாவின் கைவண்ணத்தில் அழகான பூரியும் கிழங்கும் நைட் டைனிங்க் டேபிள்ல இருந்துச்சு.

இந்தப்புழுக்கத்துல இருந்துகிட்டு இவ்ளோ அழகா புள்ள கதை சொல்றானே அவனுக்கு குடிக்க ஜில்லுனு ஏதாச்சும் கொடுப்போம்னு தோணுதா உங்களுக்கு. (ஜில்லுனு ஒரு இளநீர் அய்யாவுக்கு)

இப்படித்தாங்க என் கல்யாணப்பேச்ச ஸ்டார்ட் பண்ணிவிட்டுட்டு நான் பாட்டுக்கு சென்னை கெளம்பி வந்துட்டேன் (லீவு முடிஞ்சிடுச்சுங்க அதுக்கு மேல இருந்தா லாஸ் ஆப் பே)

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை அப்படின்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரிதாங்க, நான் சொன்னதுக்கப்புறம் எங்க வீட்டு யங் கப்பிள்ஸ் (என்ன பெத்தவங்க தான்) தீயா வேலை செஞ்சு, ஒரே மாசத்துல கல்யாணத்தேதி வச்சுட்டாங்க.

அப்புறமென்ன ஒரே கனவு தான், ஹெட் போன்ல ஒரே லவ் சாங்கு, அனபாண்டு போட்ட மாதிரி முகத்துல எப்பயும் சிரிப்பு, சுத்தி வெள்ளை கலர் ஏஞ்சல் ட்ரெஸ்ல நாலு புள்ளைங்க சுத்தி சுத்தி வந்துச்சுங்க.

இதெல்லாத்துக்கும் வேட்டு வைக்கிறமாதிரி நம்ம ஓம்சக்தி வீட்டுல போட்டாங்க பாருங்க (திரும்ப ஒரு லிட்டில் பாய்).

பொண்ணு போன் நம்பரெல்லாம் தர முடியாதுங்க, காலமே கெட்டு கெடக்கு

காலம் கெட்டு கெடக்குறதுக்கு நான் என்னய்யா பண்ணேன், வாட்ஸாப், ஹைக், மெஸன்சர், அப்புறம் வீடியோ கால் பேச இன்னும் ஏதோதோ ஆப் லாம் இருக்குற காலத்துல, எனக்கு இப்படி ஆப்பு வைக்கிறீங்களேடா ந்னு தனியா புலம்பத் தா முடிஞ்சுது, கப்யாணத்துக்கு முந்தின நாள் வரைக்கும் அவகிட்ட பேசவே முடியலைங்க.

ஸ்மார்ட் போன் வச்சிருக்குறதே வேஸ்ட்டுனு யோசிக்க வச்சுட்டாங்க என்னை, (அச்சச்சோ)

நம்மல்லாம் யாரு இதுக்கெலாம் அசருவோமா என்ன, பத்திரிக்கை மாடல் காட்ட, பட்டுபுடவை எடுக்க, கிப்ட் வாங்க, எங்க வீட்டு நாய் குட்டி போட்ருச்சு, எங்கம்மா அப்பாவோட கல்யாண நாள் அப்படீன்னு அந்த ஒரு மாசத்துல எல்லா வீக் எண்டும் அவங்க வீட்ல தான் இருந்தேன் (அடப்பாவி)

இது கூட நல்லாத்தாங்க இருந்துச்சு, நாள் பூரா மெசேஜ் பண்ணி பேசி கிடைக்காத சந்தோஷம் பூரிப்பு காதல் எல்லாமே இந்த தடைகளைத் தாண்டிய சின்ன சின்ன பார்வைகள், திருட்டுத் தனமான ரசனைகள், இதுல இருந்துச்சுங்க. (கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைங்குற…)

ஆனா அவ இருக்கா பாருங்க, சத்தியமா நான் எதிர்பாக்கலைங்க, ரொம்ப நிதானம், எதிலையும் அவசரமில்ல, ஆர்பாட்டமில்ல, தவிப்பு இல்ல, பதட்டமில்ல, எதோ அவ ப்ளான் பண்ணி எல்லாம் நடக்குற மாதிரி அமைதியா இருந்தா.

நானா எதாச்சும் பேசுனா கேட்டாக்கூட ஒரு புன்முறுவல் அவ்ளோ தான். அதுக்கு மேல சிரிச்சாக்கூட முத்து கொட்டிடும்னு அவளோட கமெண்ட்ரி பாட்டி சொல்லுச்சோ என்னமோங்க, என்ன பிரமிக்க வைக்கன்னே அவ பொறந்திருக்கா போல.

நீங்க ஒண்ணு நோட் பண்ணீங்களான்னு தெரியல, இதுவரைக்கும் அவ பேசினா , கேட்டான்னு எதாச்சும் சொன்னேனா பாத்தீங்களா, இல்லல்ல. உண்மையும் அது தாங்க, கல்யாணத்துக்கு முந்தின நாள் வரைக்கும் அவளா என்கிட்ட பேசவுமில்ல, பேச ட்ரை கூட பண்ணலைங்க.

ஆனா அவ முகத்துல அவ்ளோ சந்தோஷம், அவ ப்ரெண்ட்ஸ் கூட இருக்கும் போது, அவங்கல்லா இவள ஓட்டும் போது இவ மொகத்துல டன் டன்னா தெரிஞ்சுதுங்க என்னோட காதல். (காதலா இது எப்பயிலிருந்து).

இதுக்கு நடுவுல எங்களோட நிச்சயதார்த்தம் நடந்துச்சுங்க. பொண்ணு பாத்துட்டி வந்து பதினைஞ்சு நாள்ல என் ஹிரோயினோட போடிநாயக்கனூர்ல நிச்சயம் வச்சாங்க. நெருங்கின சொந்தக் காரங்க ப்ரெண்ட்ஸ் னு ஒரு ஐம்பது பேர் தாங்க போயிருந்தோம்.

எங்க வீட்டில நானும் ஒரே பையன் அவங்க வீட்டில அவளும் ஒரே பொண்ணுங்குறதால ஏற்பாடெல்லாம் படு அமர்க்களமா நடந்துச்சி. அவங்கப்பா அந்த ஊர்ல எவ்வளவு பெரிய ஆளுன்னு காட்டனும்னே ஊர வளைச்சி ஒருத்தர் விடாம கூப்பிட்டிருந்தார்.

இதுல அவள தனியாவே விடக்கூடாதுன்னு ஒரு பத்து புள்ளைக எப்ப பாத்தாலும் அவ கூடயே சுத்திகிட்டு இருந்துச்சுக. மாப்ள பையன் ரெண்டே ரெண்டு கண்ணே கண்ணுனு ரெண்டு ப்ரெண்ட்ஸ கூட்டிட்டு வந்திருக்கானே, நாம மட்டும் எப்ப  பாத்தாலும் கூட்டம் கூட்டமாவே திரியுறோம்னு ஒரு ஃபீலிங்கே இல்லைங்க அந்த புள்ளைக்கு.

என்ன வெறுபேத்துறதுக்குன்னே பேசி பேசி சிரிச்சிகிட்டு இருந்தாங்க. ஆனா இந்த பொண்ணுங்க இருக்குதுங்களே, மணிக்கணக்கா கெக்க பெக்கன்னு என்னத்த தான் பேசி சிரிக்குங்களோ, யப்பா சாமி….

ஒருத்தன் கேள்வி கேட்டாலே ஒரு லைனுக்கு மேல பதில் சொல்ல தெரியல எனக்கு (உனக்காடா…. மாறாநம்பீட்டோம்)

ரொம்ப அழகான நாட்கள் அந்த ரெண்டு நாளும். நிச்சயம் பண்ண ரெண்டு நாளாஅப்பிடியெல்லா கேக்க கூடாது. மாமனார் வீட்டில தங்க சொல்லைன்னாலும் அந்த ஊர் கிளைமேட்ட பிடிச்சி போனதுனால அங்க தங்கி இரண்டு நாட்கள் விழாவை சிறப்பித்துவிட்டு வந்தேன்.

அதுக்கு எங்கம்மா தனியா பதிப்பகம் ஆரம்பிக்கிற அளவுக்கு திட்டுச்சுங்குறதெல்லாம் வேற விசயம். பட்  மாமனார் வீட்டில தடபுடலான வரவேற்பு கவனிப்பு எல்லாமே

அவங்கப்பா ட்ராவல்ஸ் வேற வச்சிருக்கார் அப்புறம் சொல்லவா வேணும் கார் கீய கையில் குடுத்து சுத்திகாட்ட ஒரு ஆளையும் அனுப்பி வச்சார்.

நான் அவன் பின்னாடி உக்கார சொல்லீட்டு காரை ஸ்டார்ட் பண்ணீட்டு வெயிட் பண்ணிகிட்டே இருந்தேன். “என்ன மாப்ள எதுக்கு வெயிட் பண்றீங்கஅப்பிடின்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்டார்.

ட்ராவல்ஸ் வச்சதுக்கு ட்யுப் லைட் கடை வச்சிருக்கலாம்னு நெனச்சிகிட்டு, என்னோட அழகான சிரிப்ப சிரிச்சு, “ சக்தி வரலையா மாமாந்னு கேட்டா அவர் என்ன சொன்னார் தெரியுமா…?

சக்தி இந்த எடத்தையெல்லா நெறையா தடவ பாத்திருச்சி மாப்ள நீங்க போயிட்டு வாங்க

க்கும் நான் மட்டும் தனியா போறதுக்கா ரெண்டு நாள் தங்க ப்ளான் பண்ணேன், மை கடவுளே, என்னடா இது இளமாறனுக்கு வந்த சோதனை

அவரு மீசைய பாத்துட்டு அதுக்கு மேல பேச முடியலைங்க, பேசாம வண்டிய கிளம்பிகிட்டு ஊர சுத்தி பாக்க கிளம்பீட்டேன்.

அடுத்த ஒரு மணி நேரத்துல வீட்டில வந்து நின்னதுல தா. மிஸ்டர் மீசை ஸாக் ஆகீட்டார். அவர் அதிர்ச்சிக்கு பதில் சொல்லிகிட்டு இருந்தா நம்ம காரியம் நடக்குமா,… நேரா கிச்சனுக்கு போனேன்.

அங்க நம்ம கமெண்ட்ரி பாட்டி இருந்துச்சு, பாட்டி சூடா ஒரு காபி வேணும் நான் ஊருக்கு கெளம்புறேன்னு சொன்னேன்.

அப்ப தாங்க அடுப்புகிட்ட நின்னுகிட்டு இருந்தவ திரும்பி என்ன பாத்தா, ஒரு பார்வைன்னாலும், திருப்பார்வைபார்வையே ஆயிரம் கதைகள் பேசுதடி கண்ணேஅப்படீன்னு டைலாக் சொல்லலாம், அவ பாட்டுக்கு இதுவே ஆயிரம் கதை சொல்லுதே அப்புறம் நான் வேற பேசாட்டி என்ன மாமான்னுட்டான்னா, எதுக்கு வம்பு

அவகிட்ட கண்ணாலயே என் காதல சொன்னேங்க, அத பாத்திட்டு அவ என்ன கேட்டா தெரியுமா, “காபி தான அதான் பாட்டிகிட்ட சொன்னீங்களே அப்புறமென்ன கொண்டுவரேன்”.

அடக்கடவுளே மாறா உன் உழைப்பெல்லா வீணாயிடுச்சேன்னு ஒரு ஃப்பீலிங்கோட மாடிக்கு போய் என் பொட்டி படுக்கையெல்லா கட்ட ஆரம்பிச்சுட்டேங்க. என் நெலமைய பாத்தீங்களா, கெயிடு கூட ஆவுட்டிங்க் போக சொல்லுற அப்பா (எங்கப்பாவ விட ஸ்ட்ரிக்ட்டா இருப்பார் போல)

காதல சொன்னா காபி சொண்டு வரேன்னு சொல்லுற பொண்ணு, உன் காட்டுல மழை தான் போ(மனசாட்சி என்னைய கலாய்க்குதாமா)

சோகமே உருவா என் ட்ரெஸ்ஸ எடுத்துவச்சிகிட்டு இருந்தேங்க, டொக் டொக் சத்தம். குதிரையில்லங்க, கதவ யாரோ தட்டுறாங்க. ஆபீஸ் நியாபகத்துல எஸ் கம் இன் னு சொல்லீட்டேன். அதுக்கப்புறம் தான் பக்குன்னுச்சி, கமெண்ட்ரி பாட்டி கையில் காபி குடுத்து அனுபீட்டாளோன்னு பதறிப்போய் திரும்புனா, உண்மையிலயே செம ஸாக்.

கரெக்டா கெஸ் பண்ணுங்க பாப்போம், வந்தது பாட்டியா ப்யூட்டியா….சரிவிடுங்க நானே சொல்றேன். நான் ஸாக் ஆக காரணமே காபி கொண்டு வந்தது ப்யூட்டி. உங்களுக்கே ஸாக்கா இருக்குல்ல.

அப்பயும் எஸ் காட் போட்ட மாதிரியே கூட ஆளுங்களோடயே இருக்குறவ , நம்ம ரூமுக்கு,…. அய்யோ நம்ம ரூமுக்கு வந்திருக்காளேன்னு தான். என்ன பண்ணேன் தெரியுமா ஓடிபோய் வெளியில எட்டிப் பாத்தேன்.

எஸ்காட்ஸ் வெளியில நிக்குதுங்களோன்னு பாத்தேன். இன்ப அதிர்ச்சிங்க, அவ தனியா வந்திருந்தா, ”கடவுளே நான் காண்பது கனவா இல்லை நனவாகேட்டுட்டு பதிலுக்காக காத்திருந்தேன். (மைண்ட் வாய்ஸ் தான்)

ஆனா அதுக்கு பதில் அவ சொன்னாங்க, “கனவில்ல நிஜம்ஒரு வேளை நாம மைண்ட் வாய்ஸ்னு நெனச்சி சத்தமா பேசீட்டமோ, அப்படீன்னு பாத்தா அதுவுமில்ல. என் முகத்த பாத்தே பதில் சொல்லீட்டா. (இத தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் னு சொல்ராங்களோ).

அதே ப்ளோ எங்க உன் எஸ்காட்ஸ காணோம், நீ தனியா காபி எடுத்திட்டு வந்திருக்கஅவகிட்ட கேட்டேன்.

கண்ணுல எதோ கதை சொன்னீங்களே அதோட மீதிய கேட்டிட்டு போகலாம்னு வந்தேன்அவ பதில் சொன்னா

அதுக்கப்புறம்….

பஸ்ஸ எடுத்திட்டாங்க டிக்கெட் எடுத்திட்டு வந்து மீதி கதைய சொல்றேன்

Advertisement