Advertisement

அவள் நான் பயணம் – 1

 

என் கிறுக்கல்களை

அவள் வளைவுகளால்

ஓவியமாக்கிவிட்டாள்

வண்ணச் சித்திரமாய்

என் வாழ்க்கை

ஆம் வாழ்வென்னும் வண்ணச்சித்திரத்தை வரைய நான் தூரிகையாய் நின்ற போது வண்ணமாய் வந்து என் வாழ்வை வடிவமைத்தவள் அவள். அவளைத் தான் காணச் செல்கிறேன். ஒரு நீண்ட தூரப் பயணம் இது. வாழ்வை மட்டுமல்ல வரலாற்றையே மாற்றும் சக்தி கொண்டவை பயணங்கள். மாற்றத்தை தேடி நான் துவக்கிய இந்தப் பயணம், உடன் பயணிக்கும் உங்கள் வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டு வரலாம்,… யார் அறிவார்

உடன் பயணிக்கபோவது வேறு யாருமல்ல நீங்கள் தான், இந்த நொடி வாசிப்பின் மூலம் எனக்கு உரு கொடுத்து உயிர் கொடுக்கப்போகும் வாசகராகிய உங்களுடன் தான் என் பயணம். அதெல்லாம் சரி, நீ யார் என்கிறீர்களாவேற யாரு இந்த கதையே என்னை வைத்துத் தான் நகரப் போகுது, அப்ப நான் யாரு …??? (இப்ப உங்க மனசுல ஹீரோன்னு பதில் வந்திருக்குமே)

அவனே தான்…. நான் தாங்க இளமாறன். ஒண்ணுமில்லைங்க என் பொண்டாட்டிய பார்க்க ஊருக்கு போறேன், உங்ககிட்ட பேசிகிட்டே போனா தூரம் தெரியாது பாருங்க, அதா இப்படி ஒரு ப்ளான், ஆனா ஒரு விசயம் என்னன்னா, கதைக்குள்ள வர்ற நீங்க எனக்கு மட்டும் தான் தெரியுவீங்க, மத்த கேரக்டர்ஸ் உங்கள கண்டுக்கலைன்னு கோவிச்சுக் கூடாது ஓகே வா….”

மணி இப்ப ஆறாயிடுச்சுங்க, இப்ப கிளம்புனாத் தான் இங்க இருந்து கோயம்பேடு போயி சரியா பஸ்ஸ புடிக்க முடியும், இத்தணை நாளா மண்டைக்குள்ள கொடஞ்சிகிட்டு இருக்க பிரச்சனைய ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்னு தாங்க இந்த திடீர் பயணம். நேத்து இந்நேரம் நீ ஊருக்கு போறியா மாறான்னு நீங்க கேட்டிருந்தா கண்டிப்பா நான் இல்லைன்னு தான் சொல்லிருப்பேன், ஆனா இன்னைக்கு இதோ என்னோட லேப்டாப் கூட ஆப் பண்ணி பேக்ல வச்சாச்சு, இனி கிளம்ப வேண்டியது தான்.

என்னடா நண்பா, சொல்லாம கொள்ளாம கெளம்பீட்டியே, ஹ்ம்ம்……, இட்ஸ் கே, ஆல் தி பெஸ்ட் டா, வரும் போது சந்தோஷமா வர வாழ்த்துக்கள்

யாருடா இந்த பெருமூச்சு கேஸுன்னு பாக்குறீங்களா, வேற யாருமில்லைங்க, என் கூட வேலை பாக்குறவன் தான், நான் இங்க இருந்திருந்தா, இன்னிக்கு நைட் ஒரு பீரோட (குடி குடியைக் கெடுக்கும்) என் ப்ளாட்க்கு வர்றதா இருந்தான், இப்ப அது கேன்சல் ஆயிடுச்சு, அதுக்குத் தான் இந்த பெருமூச்சு, இருங்க அவனுக்கு பதில சொல்லீட்டு வரேன், ரொம்ப நேரமா அவனஸ்டாச்ட்யூசொன்ன மாறி நிக்க வச்சிருக்கேன்.

ஆமா டா, திடீர்னு கெளம்பீட்டேன், அதுக்கு என்ன இப்ப, ஆல் தி பெஸ்ட்  சொல்ற நான் என்ன அரியர் கிளியர் பண்ணவா போறேன், ஆங்அப்புறமென்ன சொன்ன வரும் போது சந்தோஷமா வான்னு சொல்ற, ஏன் இப்ப நான் சந்தோஷமா இல்லையா, ஏன் டா நீங்களா ஒரு பில்டப் கொடுக்குறீங்க

உனக்கு சொன்னேன் பாரு என்ன சொல்லனும்” (டென்சன் ஆயிட்டானாமா…)

சரி சரி விடு, என்ன பரீட்சைன்னே தெரியாம போறவன கூப்பிட்டு, இது முக்கியமான கேள்வி கண்டிப்பா வரும் அப்புடீன்னு சொல்ற நண்பேன்டா நீனு

ஒருவழியா அவன்கிட்ட சொல்லீட்டு கெளம்பீட்டேன், ஓரக் கண்ணுல உத்து பாக்குற அத்தை பொண்ணு மாதிரியே என்ன ஒருத்தன் இங்க வாட்ச் பண்ணீகிட்டு இருக்கான், மேனேஜரோட க்ளோஸ் ப்ரண்டுன்னு ஒரு சீன போட்டுகிட்டு இங்க நடக்குறத பூரா, போய் அந்த முட்டைக்கோஸு மேனேஜர்கிட்ட போட்டு குடுக்குறது தான் இவன் வேலை.

ஆபீசுக்கு ஒருத்தன் இப்புடித் தான் இருக்கான், இவன் சொன்னதெல்லாம் மனசுல வச்சுகிட்டு, நாம என்னமோ கொலைக்குத்தம் பண்ணுன மாதிரியே அந்த முட்டைக் கோசு லுக்கு விடும் போது வரும் பாருங்க கோவம், என்ன பண்ணறதுன்னே தெரியாது, சோ பேசாம வந்திடுவேன்.

பார்கிங்கு வந்தாச்சு, அபியும் நானும் படத்துல வர மனோபாலா மாதிரி ஒரு கேரக்டர்ங்க, நம்மள க்ராஸ் பண்ணுது, ஆனா ஒரு வித்தியாசம், அவர மாதிரி கேள்வி கேக்காம, ”அப்புறம் மாறா…. ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்அப்புடீன்னு தாடைய மட்டும் லைட்டா தூக்கி ஒரு ரியாக்ஷன் குடுப்பாருங்க, எதுக்கு குடுக்குறாருன்னே எனக்கும் இதுவரைக்கும் தெரியல, இந்த இடத்துல என் அக்மார்க் சிரிப்ப சிரிச்சு வைப்பேன்.

காரணமே இல்லாம நெறைய எடத்துல சிரிக்க வேண்டியிருக்கு. ஆனா சிரிக்க வேண்டியவங்க கிட்ட எதாவது காரணத்த கண்டுபிடிச்சு கோவப் படவேண்டியதா இருக்கு. இப்படித்தாங்க அவகிட்டயும் என்னோட இயல்பான குணத்த காட்ட முடியாத அளவுக்கு ஏதோ ஒண்ணு டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருந்துச்சு.

யாருகிட்டன்னு யோசிக்கிறீங்களா, என் பொண்டாட்டிகிட்ட தாங்கநல்லா இருட்டாத சாயங்கால வேளையில சோடியம் லைட்டெல்லாம் அப்ப தான் எரிய ஆரம்பிக்கும் அந்த நேரத்துல கோவிலுக்கு போகனும்னு கூப்பிட்டா, அன்னிக்கு முதல் முறையா அவ கூப்பிட்டு மறுப்பு சொல்லாம நானும் வந்தேன்.

வீட்டுக்கு வெளியில வந்தவ, நான் பைக்க ஸ்டார்ட் பண்ணீட்டு நின்னுகிட்டு இருக்கேன், உக்காராம என்னையே பாத்துகிட்டு இருந்தா, என்ன நெனச்சாலோ, கிட்ட வந்தவ ஏதோ சொல்ல வாயெடுத்தா, நான் அத எதிர்பாத்திட்டு இருக்கேனு தெரிஞ்சதும் சொல்லாமயே போய் உக்கார்ந்துட்டா, எனக்கு என்னவோ போல ஆயிடுச்சு

என்ன சொல்ல வந்திருப்பா, ஏன் சொல்லவே இல்லன்னு யோச்சிகிட்டே வந்ததுல, கோவில் சீக்கிரமே வந்த மாதிரி இருந்துச்சு, அன்னிக்கும் இதே மாதிரி தான் விளக்கெலாம் நடுரோட்டுல ஊர்வலம் போறமாதிரி இருந்துச்சு, உங்க கூட பேசுற மாதிரி அவகிட்ட அன்னிக்கு பேசாம போய்டேனேன்னு இப்ப நெனக்கிறேன்.

ஹ்ம்ம் போட்டாங்களா, அதானே சிக்னல்ல சிக்காம வண்டி ஓட்டீட்டா அது சென்னையே இல்லயே, நாமளும் நிப்போம். சிக்னல் போட்டா நமக்கு கோவம் வருதோ இல்லையோ பக்கத்துல நிக்குறவன் பைக்கெலாம் செம டென்சன் ஆகிடுதுங்க, உர்ர்ர் உர்ர் ன்னு  உறுமுறதுலயே நாம தெரிஞ்சுக்கனுமாம்,…

அழகான மரங்கள் ரெண்டு பக்கமும் நிக்குற ரோட்டுல, பச்ச பசேல்னு இருக்க வயல்வெளிகள், சில்லுனு காத்து வீசுற மலைக்கு மேல மேகத்துக்கு நடுவுல ட்ராவல் பண்ணுறோமோன்னு நெனக்குற மலைப்பிரதேசத்துல போகும் போது தான் சுத்தி இருக்கிறதையெல்லாம் ரசிக்க முடியும்னு நாம நெனச்சிகிட்டு இருந்தா ரசனையே நமக்கு மறந்து போயிடும்.

அப்படித்தாங்க பக்கத்துல இருந்த மல்லிகைப் பூவ ரசிக்காம தொலஞ்சு போன ரோஜாப்பூ ரொம்ப அழகா இருந்துச்சேன்னு வருத்தப்பட்டுகிட்டே விட்டுட்டேன். இப்ப அந்த மல்லிகைப் பூவ தேடிப் போறேன். எங்க போறேன்னு கேக்கவே இல்லயே செண்டிமெண்ட்டா கேக்கவேண்டாம்னு விட்டுடீங்களோ

நானே சொல்றேன்திருச்சிக்கு போறேங்க, அது தான் என் பொண்டாட்டி ஊரான்னு கேக்காதீங்க, அது என் சொந்த ஊருஅவ ஊரு போடிங்க.. அட தப்பா சொல்லலைங்க, போடி நாயக்கனூர் அவ ஊருவேற எதுக்கு பதில் சொல்றாளோ இல்லையோ, எந்த ஊருன்னு யாராச்சும் கேட்டா சொல்லுவா பாருங்கஒரு புத்தகமே போடலாம்அது ஆல்ரெடி பப்ளிஸ் ஆயிடுச்சுசோ இப்ப நான் எங்க ஊர பத்தி சொல்றேன். காதுல இரத்தம் வருதேன்னு கவலப் படாம படிக்கணும்

எங்க ஊரோட பேரை சொன்னாலே மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கோவில், காவேரி ஆறு, முக்கொம்பு, கல்லணைன்னு வரிசையா சுற்றுலா தலங்கள் சொல்லிகிட்டே போகலாம்ங்க.. அது எல்லாரும் சொல்றது தான்.

ஆனா இதெல்லாம் விட எனக்கு மனசுல திருச்சின்னா மலைக்கோட்டைய விட பெருசா தெரியுற விசயம் என்ன தெரியுமா,… சோழ நாடுங்க, சுத்தி சுத்தி சோழர்கள் கால் பதிக்காத இடமே இல்ல, சோழர்களுக்கு முன்னாடியும் பின்னாடியும் எவ்வளோ பேர் வந்தாலும், அழிக்க முடியாத தடம் பதிச்சது அவங்க தாங்க,

நீங்க ஒரு டைம் திருச்சி வந்தீங்கன்னா, எங்க மண்ணை மிதிக்கும் போது உங்களுக்கு மனசுல சிலிர்க்கும், கொஞ்சம் ஹாட்டான சிட்டி, அதே நேரம் தமிழ்நாட்டோட ஹார்ட் சிட்டி (செம ரைமிங்ல…) இதெல்லாம் சிட்டிக்குள்ளங்க,

இதை விட்டு நீங்க கிராமங்கள் இருக்க பக்கம் வந்தீங்கன்னா, அப்பிடியே நெல்லு மனம், கரும்பு வாசம், வாழைத்தோட்டம்னு சங்க காலத்துல பாட்டுல வர மாதிரி காவேரி ஆத்து தண்ணி வாய்க்கால்ல வந்து சின்ன சின்ன வரப்புகளுக்குள்ள, நெல்லுக்கு மஞ்சளுக்கு வாழைக்கு கரும்புக்குன்னு வரிசையா பாயுமாம். அம்பூட்டு செழிப்பா இருந்த ஊருங்க, தண்ணி பிரச்சனை தான் உங்களுக்கு தெரியுமே, அட நான் காவேரி தண்ணிய சொல்றேங்க, அதுல பாதி கட்டிடமா ஆயிடுச்சு, கொஞ்சம் பேரு மோட்டார் வச்சு விவசாயத்த காப்பத்துறாங்க, அது கிடைக்காத மீதி பேர் காவேரிய நம்பி காத்திட்டு இருக்காங்க

மாதம் மும்மாரி பொழிஞ்சு, தழைய தழைய வர பொன்னியால மூணு போகம் வெளஞ்ச ஊருங்க, இப்ப ஒரு போகத்துக்கு உசிரு போக போராட வேண்டியதா இருக்கு, இத பேச ஆரம்பிச்சா, அது நம்ம கதைய விட பெருசா போகுங்க, இன்னும் நெறய இருக்குங்க சொல்றதுக்கு….

ரொம்ப பொலம்புறேனோ…. சந்தேகமே இல்லைன்னு நீங்க சொல்றது கேக்குது. இந்த லூசு ஏன் இப்புடி புலம்புறான்னு யோசிக்கிறீங்க.. தெரியுது, நானே சொல்றேன் எடுங்க ஒரு மார்டீனஅட அதாங்க ப்ளாஸ் பேக்….

சென்னையில நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருசம் ஆகியிருந்தது. வேலையும் சென்னையும் அப்ப தான் நல்ல பழகியிருந்தது எனக்கு. ரெண்டு மூணு நாள் தொடர்ந்து லீவ் கெடச்ச சமயம் வீட்டுக்கு போயிருந்தேன். அப்ப தான் எங்கம்மா என்ன தெரிஞ்சவங்க வீட்டு போய்டு வரலாம் வான்னு கூப்பிட்டு போனாங்க,

எங்கம்மாவ பத்தி சொல்லையே, சின்ன பிள்ளையா இருந்ததுல இருந்து கஷ்டத்த தவிர வேற எதையும் அனுபவிக்காத ஜீவன், என் மேல ரொம்ப பாசம், எவ்ளோ வளர்ந்தாலும் அவங்களுக்கு நான் இன்னும் ஸ்கூல்ல படிக்கிற பையன், கிட்டதட்ட எல்லா அம்மாக்களும் அப்படித் தான், அதுக்காக எங்கம்மாவ பத்தி சொல்லாம இருக்க முடியுமா,

நான் குழந்தையா இருந்தப்போ தூக்கி வச்சு ஆசை தீர கொஞ்ச கூட நேரமிருக்காதாம், ஆனா அடங்கவே மாட்டேனாம், அண்ணாகயித்துல கயிறு போட்டு என்னைய கட்டி வச்சுட்டு வேலை பாப்பாங்கலாம். இவன் செம வாலா இருப்பானோ அப்புடி தோணும், அதெல்லாம் நட்ராஜ் ரப்பர வச்சு அழிச்சிரணும், உங்களுக்கு நான் எப்பயும் சமத்து தான்

அப்ப கொஞ்சாம விட்டதெல்லாம் இப்ப கொஞ்சுற என் லவ்லி மாம் அவங்க, பேரு, அன்னபூரணிஇப்ப என்னைய தூக்க முடியலையாம் ஒரே ஃபீலிங் (ஓவரா இருக்கோ… )

ஓகே கதைக்கு வருவோம்சரி தெரிஞ்சவங்க வீட்டுக்குத் தான என்னைக்கோ ஒரு நாள் லீவுக்கு வரோம், வரலைன்னு சொன்னா நல்லாருக்காதுன்னு கிளம்புனேன். (இவ்ளோ நல்ல பிள்ளையா நானுன்னு எனக்கே டௌட்டு வருதுங்க)

எங்கம்மாவுக்கே ஆச்சர்யம், கடைக்கு போய் பால் பாக்கெட் வாங்கீட்டு வா மாறான்னு சொன்னா எனக்கு காபியே வேணாம்னு சொல்றவன் நானு, ஆச்சர்யப் படாமயா இருப்பாங்க. ஜீன்ஸ் டிஷர்ட் கிளம்பி அவங்க கூட போனேன். இல்லல்ல அவங்க வழி சொல்ல சொல்ல பைக் நான் தான் கூட்டீட்டு போனேன்.

ஒரு பதினஞ்சு நிமிச ட்ராவல், சென்னை அளவுக்கு ட்ராபிக் கெடையாதுங்கஅவங்க வீட்டுக்கு போயாச்சு. கொஞ்ச நேரம் அவங்க கூட பேசீட்டு இருந்தாங்க, ஒரு காபி, கொஞ்சம் ஸ்நாக்ஸ், எல்லாம் நமக்கு பிடிச்ச அயிட்டமா இருந்துச்சா, அதுலயும் லட்டு….. மை காட் மை ஃபேவரைட்.. திருப்பதில வெங்கிக்கு அப்புறம் யாரு அதிகமா லட்டு சாப்பிட்டதுன்னு போட்டி வச்சா, கண்டிப்பா சோட்டா பீம்ம பீட் பண்ணிருப்பேன் நான்.

கண்ணுமுன்னாடி இருக்கும் போது கவனிக்காம இருக்குறதா நோ வே, எங்கம்மா ஏதோ சொல்ல வந்தாங்க அதெல்லாம் காதுல விழவே இல்ல, வா வா ன்னு கூப்பிட்ட லட்ட தவிர

என்ன ஒரு டேஸ்ட்சாப்பிட்டு முடிக்கும் போது தான் காதுல விழுந்துச்சு, மாப்பிள்ளைக்கு பொண்ண பிடிச்சிருக்காம், அவர் லட்டு எடுத்து சாப்பிட்டாரு.

என் காதுங்கள என்னாலயே நம்ப முடியல, தொண்டையில முழுசா கூட லட்டு இறங்கல, அதுக்குள்ள இப்படி ஒரு அணுகுண்டு வச்சிருப்பாங்கன்னு சத்தியாம நெனக்கலைங்க

அம்மாவுக்கு தெரிஞ்சவங்க வீடு, பாக்க வந்திருக்கோம், அம்மா பேசீட்டு இருக்காங்க, இதுக்கு நடுவுல ஒரு பொண்ணு வந்து காபி ஸ்னாக்ஸ் லா வச்சிட்டு போனுச்சு, எனக்கு ஒண்ணும் வித்தியாசமா தெரியல, (கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க போறதுன்னா, பட்டுப்புடவை, வெக்கம், சுத்திலும் சொந்தக்காரங்கவா மா மின்னல்னு ஒரு ஹெவி இமேஜ் கிரியேட் பண்ணுன தமிழ் சினிமாவ தான் சொல்லணும்)

வீட்டுக்கு விருந்தாளி வந்தா உபசரிக்குறது நம்ம தமிழ்பண்பாடு அத கரெக்டா ஃபாலோ பண்றாங்களே வெரி குட்னு மனசுக்குள்ள சொல்லீட்டு எப்பயும் போல வேடிக்கை பாத்துகிட்டு இருந்தவன், லட்டு சாப்பிட்டது ஒரு குத்தமாய்யா….

உடனே ஒரு கெழவி, கிரிக்கெட்டுல ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்குற மாதிரிமாப்பிள்ளைக்கு பொண்ணு பிடிச்சிருக்காம்அப்புடீன்னு அறிவிச்சிடுச்சு.

விட்டேன் பாருங்க எங்கம்மாவ ஒரு லுக்கு, கண்ணுலேயே கெஞ்சி கொஞ்ச நேரம் பொறு டா ன்னு பதிலுக்கு எங்கம்மா பரிதாபமா ஒரு லுக்கு விடுறாங்க . என்ன பண்ண முடியும் பல்ல கடிச்சிகிட்டு உக்காந்திருந்தேன்.

அவ்வளவோ அமைதியா இருந்த வீட்டுல திடீர்னு உள்ளயிருந்து ஒரே சிரிப்பு சத்தம், ஒரு குட்டி பையனும் கொஞ்சம் வளர்ந்த பொண்ணும் வெளியில வந்து எட்டி என்ன பாத்துட்டு, “ அய்ய்ய்ய்ய் நான் தா ஃபர்ஸ்ட்” “இல்ல நான் தா ஃப்ர்ஸ்ட்மாத்தி மாத்தி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க

அங்க இருந்தவங்க சொல்லியும் குட்டீஸ் ரெண்டும் ஓயல, என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு, இங்க வாங்கன்னு சைகை காட்டுனேன், ஒரே ஓட்டத்துல என் கிட்ட வந்துட்டாங்க, “ஹே குட்டீஸ், என்ன உங்க ரெண்டு பேருக்குள்ள போட்டின்னுகேட்டேன்.(உம் பொழப்பே பஞ்சாயத்துல நிக்குது இதுல நீ இவங்களுக்கு பஞ்சாயத்து பண்ணுறியான்னு கேக்குறீங்காளாஅதெல்லாம் அப்படித்தான்)

அதுக்கு அந்த குட்டிப் பையன் சொல்றான், “எங்க சக்தி சித்திய கட்டிக்க போற சித்தப்பாவ யாரு ஃப்ர்ஸ்ட் பாக்குறதுன்னு எங்களுக்குள்ள போட்டி, நான் தான் ஃப்ர்ஸ்ட்ன்னா , இந்த மது ஒத்துக்க மாட்டேங்குறா…. “

இல்ல நான் தா ஃப்ர்ஸ்ட் பாத்தேன்என்றாள் அவன் கூறிய மது.

ஹே இருங்க இருங்க யாரு அந்த சித்தப்பா….” பிள்ளைங்களுக்குள்ள கலவரத்த உண்டு பண்ணுனது யாருன்னு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்.

போட்டாங்க பாருங்க ஒரு லிட்டில் பாய்( ஜப்பான் மேல அமெரிக்கா போட்ட அணுகுண்டு பேருங்க) நான் தான் அந்த சித்தப்பாவாம்…”

உனக்கு யாருடா சொன்னா

எங்க மம்மி

அதுக்குள்ள மைல்டா ஒரு சவுண்ட் அவங்க அம்மா கூப்பிட்டாங்க, ஓட ஆரம்பிச்சவன பிடிச்சி உன் பேர் என்னடா கண்ணான்னு கேட்டேன்

சிபின்னு சொன்னவன் அதுக்கப்புறம் நிக்கவே இல்ல ஓடிப்போயிட்டான். என்னைய சின்ன பிள்ளைங்க விளையாடுற கேம் ஆக்கீட்டியே மம்மின்னு எங்கம்மாவ மொறைச்சா, திருப்பி எங்கம்மா என்ன மொறைக்குறாங்க.

ரொம்ப நேரமா என்ன கூப்பிட்டுருக்காங்க, நான் தான் அந்த குட்டி பையன் அதாங்க நம்ம சிபி கிட்ட பேசிகிட்டு கவனிக்கல. ”என்ன மம்மின்னு கண்ணாலயே கேட்டா கெளம்பு போகலாம் அப்புடிங்குறாங்க.

எங்கம்மாவ இழுத்து பக்கத்துல உக்கார வச்சு, “ என்ன விளையாடுறியா மம்மி, எதோ கூப்பிட்டியேன்னு வந்தா லட்டு சாப்டா பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்றாங்கமாப்ளையே நான் தான்ன்னு குட்டிபையன் சொல்லி நான் தெரிஞ்சுக்குறேன், இப்ப என்னடான்னா நீ போலாம்னு சொல்ற

வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா

அதெல்லாம் முடியாது என்னை மாப்பிள்ளைன்னு சொல்லீட்டாங்கல்ல, பொண்ண நான் சரியா பாக்கலைன்னு சொல்லி, இப்ப நீ திரும்ப வர சொல்ற , இல்லை இல்லை பாக்கவே இல்லைன்னு  சொல்லி வரச்சொல்ற மா, இப்ப நீ சொல்றியா இல்ல நான் சொல்லவா

எங்கம்மாகிட்ட சொல்லீட்டு இருக்கும் போதே அந்த கமெண்ட்ரி பாட்டி வந்து, ”என்னம்மா மாப்ள தம்பி என்ன சொல்றாரு

மாப்பிள்ளைக்கு தம்பியெல்லாம் இல்லைங்க, நான் ஒரே பையன்இது நானு (டென்ஷன்ல தான் நக்கல்லா நல்லா வரும்)

அதில்ல பாபாட்டி திரும்ப ஆரம்பிச்சுது

உடனே எங்கம்மா முந்திகிட்டுஇல்ல பொண்ண சரியா பாக்கலையாம் அதான் திரும்ப பாக்கணும்னு சொல்றான்அப்படின்னு தயங்கிகிட்டே சொன்னாங்க.

ஆனா அந்த பாட்டி, “இதுல என்ன இருக்கு, இந்தா வரச் சொல்றேன்” ( ஓல்ட் இஸ் கோல்ட்)

அம்மாடி சக்தி, இங்க வா ராஜாத்தி, மாப்ள உன்ன சரியா பாக்கலையாம்பாட்டி சொல்ல திரும்ப உள்ள இருந்து பயங்கரமான சிரிப்பு. உள்ள யாரு தான் இருக்காங்க எதுக்கு சிரிக்கிறாங்கன்னே சத்தியமா தெரியலைங்க

ஒருவேளை மாயி படத்துல வர வடிவேலு மாறி நம்மள இமேஜின் பண்ணீட்டாங்களோ, அய்யய்யோ இப்புடின்னு தெரிஞ்சிருந்தா ஒன்ஸ் மோர் கேட்ருக்கவே மாட்டேனே. இனிமே என்ன பண்ண முடியும் ஒரு வழியா அந்த பொண்ணு வெளியில வந்துச்சுங்க.

இனிமே வரதெல்லா அப்புடியே கவிதை மாதிரி இருக்கும், செந்தமிழ் பத்தாதுங்க அவள பத்தி சொல்ல, அவ்வளவு இருக்கு….

வெட்கமென்னும் அரிதாரம் அவள் பூசவில்லை, இயல்பாய் வந்து நின்றாள். எங்கெங்கிலும் காணா அண்மை அவள் விழியில் நான் கண்டேன். அருகிருந்து உலகைவிட்டே தொலைந்து போனேன். விண்மீன் நடுவிருந்து வேல்விழி அவள் விசை இழுக்க, நாடொன்றும் காடொன்றும் கடந்திங்கு வந்தமர்ந்தேன்.

சரசரக்க பட்டும் தேவையில்லை, சாமியென அலங்காரம் செய்ய வில்லை. இயற்கையாய் வந்த வாசத்தோடு மல்லிகை சூடியிருந்தாள். மஞ்சளின் ஸ்பரிசங்கள் தீண்டியதில் செம்பூக்கள் தெரியவில்லையா, இல்லை பூக்கவில்லையா புரியவில்லை. புலன் விசாரணை தோற்று போகும் அவள் நேர் கொண்ட பார்வையில், புருவங்களிடை விழுந்த பள்ளத்தாக்கில் அவள் திலகத்தோடு நானும் வீழ்ந்துவிட்டேன்.

தும்பை பூக்கள் பாவமென பொன்னாய் மிளிரும் தங்கத்தோடு போட்டி போட்டது அவள் நிறம். அவள் நாசியெனும் கூர்முனையில் நிற்க முடியாமல் தவறிய வியர்வையென நானும் கீழே கிடக்கிறேன். மஞ்சரியாய் பூத்த மாதுளை மறுபிறப்பொன்று எடுத்திங்கு இதழாகியது அவளுக்கு.

அதற்கு மகுடமென அவள் புன்முறுவல் மிளிர, அவளின் நளினத்தின் மேடையில் குண்டலங்கள் ஜிமிக்கியாகி ஆடிக் கொண்டிருந்தது காற்றில். அவ்வப்போது மடலோடு சரசரமாடும் பூக்களென அவள் காதோரம் கற்றை முடிகள் உரசிக் கொண்டிருந்தது.

அழகும் அமைதியும் ஒரு புறம் நிற்க மாயவிசையொன்று அவள் மனதின் பால் சென்றது. இருதயத்தில் அறைகளனைத்தும் அவளுக்கென ஒதுக்கிவிட்டு ஓரமாய் நின்றது மனசாட்சி.

கம்பன், பாரதி, கண்ணதாசன், வாலி, வைரமுத்து எல்லோருடைய வாசம் சற்று பிடித்துக் கொண்டதில் தீந்தமிழ் தேன்தமிழாகி உங்களை வந்து சேர்ந்து விட்டது.

இப்படியெல்லாம் சத்தியமா அன்னிக்கு எனக்கு தோணவே இல்லைங்க. சிட்டியில பட்டர்ஃப்ளை கேர்ள்ஸ பாத்துட்டு, அவள பாத்ததும் சத்தியமா, எங்க இருந்துடா பிடிச்சாங்க இந்த பட்டிக்காட்டன்னு தாங்க தோணுச்சு.

பாரதி ராஜா படத்துல வர ஹிரோயின் மாதிரி வந்து நின்னா. ஏதுடா கேட்டது வம்பா போயிடுச்சேன்னு யோசிட்டுகிட்டு இருந்தேன். டக்குன்னு மண்டைக்குள்ள ஒரு மின்னல் (அட ஐடியாங்க)

லட்டு சாப்டோம் பிடிச்சிருக்குன்னு முடிவு பண்ணுனாங்க, அப்ப ….. எங்கடா இங்க இருந்த மிக்ஸரு, அய்யோ ஆப்சனை யூஸ் பண்ணாம விட்டுட்டேனேன்னு வருத்தப் பட தா முடிஞ்சிது.

இவ்ளோ நேரமா எனக்குள்ள ஒரு பிரளயமே நடந்திட்டு இருக்குது, அந்த கமெண்ட்ரி பாட்டி வந்து,

என்ன தம்பி எவ்வளவு நேரம் தா பாப்பீங்க, அமைதியாவே இருக்கீங்க, பொண்ணு உள்ள போயி ரொம்ப நேரமாச்சு

கே பாட்டி நாங்க கிளம்புறோம்

எங்கம்மா சொல்லீட்டு வரத்துக்குள்ள நான் போயி பைக்க ஸ்டார்ட் பண்ணீட்டு வெயிட் பண்ணீட்டு இருந்தேன்.

திரும்ப அதே சிரிப்பு, இப்ப மாடியில இருந்து வந்துச்சு, நடுவுல அந்த பொண்ணு அதாங்க மை பொண்டாட்டி, சுத்தி அவ ப்ரெண்ட்ஸ், நாம பாத்தோமே அந்த குட்டி பையன் சிபி, அப்புறம் மது, தொடங்கி அந்த கமெண்ட்டி பாட்டியோட ப்ரெண்ட்ஸ் வரைக்கும் எல்லா வயசுப் பொண்ணுங்களும் அந்த கேங்குல இருந்தாங்க,

எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருந்துச்சு, எங்கம்மா வரவும் அங்க இருந்து விட்டேன் பாருங்க ஜூட், கோயம்பேடு வந்து தான் நின்னேன்.

அட சொல்லிகிட்டே வந்ததுல கோயம்பேடு வந்தாச்சு, பண்டிகை சீசன்ங்குறதால ஒரே கூட்டமா இருக்கு. பஸ்ஸ பிடிச்சு ஸீட்ட போட்டுட்டு மீதிய கண்டினியூ பண்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ ப்ளீஸ்

Advertisement