Advertisement

 

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 9

திலோத்தமா அங்கேயே சாப்பிட்டு வந்தேன் என்றதும், “அவரைச் சமைக்க வச்சு ,இப்படிச் சாப்பிட்டு வந்திருக்கியே, உனக்கு வெட்கமா இல்லையா?” என வைதேகி கேட்டார்.


“ஏன் மா என்னைத் திட்றீங்க?”


“அன்னைக்கே உன் மாமியார் திரும்பத் திரும்ப என்கிட்டே சொன்ன விஷயம், மகன் சரியான உணவு இல்லாமல் கஷ்ட்டப்படுறாருன்னு தான் சொன்னாங்க. அதுக்குத்தான் வீட்ல இருக்கப் பெண்ணா பார்கிறேன்னு வேற சொன்னாங்க.”


“நீ இன்னும் சமைக்க வரலைன்னு சொல்லிட்டு இரு. என்னைத்தான் கேவலமா பார்ப்பாங்க.” என்றார்.


மறுநாள் காலையே கையில் நோட்டுடன் சமையல் அறைக்கு வந்த மகளைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டார். அவள் போடும் கணக்கை போல… வரிசையாக இதற்கு அப்புறம் இதைப் போட வேண்டும் என எழுதி வைத்து சமைத்தாள்.


ஒவ்வொரு வேளையும் நோட்டில் எழுதி வைத்து தான் சமைத்தாள். எதோ இதாவது செய்கிறாளே என வைதேகி நினைத்துக் கொண்டார்.


திருமனத்திற்காக என்று காமாட்சியும் வந்து விட, பாவனா இங்கேயே இருந்து விட்டாள். அரவிந்தன் அழைக்க எல்லாம் காத்திருக்காமல் திலோத்தமாவே அவனைக் காலை, மாலை என இருவேளையும் கைப்பேசியில் அழைத்து விடுவாள்.


அப்படி அழைக்கும் போது தான், தனக்கு இன்னும் திருமணதிற்கான உடைகள் வாங்கவில்லை என்றான்.


“ஏன்?”


“எனக்கு டைம் இல்லை. நீயே வாங்கிடு.” என்றான்.


“உங்க சைஸ் எனக்கு எப்படித் தெரியும்?”


“நான் சொல்றேன்.”


“நீங்க பிட்டிங் பார்க்க வேண்டாமா?”


“சரி விடு, இன்னும் அஞ்சு நாள் இருக்கு, நான் பார்த்துகிறேன்.”


“எப்ப? கல்யாணத்து அன்னைக்கா? நாளைக்கு நீங்களும் என்னோட வர்றீங்க?” என்றாள்.


அவளோடு சேர்ந்து போய் வாங்க வேண்டும், அதற்குதான் இப்படிச் சுத்தி வளைத்துக் கொண்டு இருந்தான். அவள் சொன்னதும் ஒத்துக் கொண்டான்.


மறுநாள் மாலை அரவிந்தன் வரும் போதே ஏழு மணி, அதன் பிறகு அவன் குளித்து விட்டு வர, இருவரும் அவசரமாகக் கிளம்பினர்.


காமாட்சி இருந்ததால் பாவனாவை அவரிடம் விட்டு, இவர்கள் இருவர் மட்டுமே கிளம்பினர். பாவனா உடன் வருகிறேன் என ஒரே பிடிவாதம் பிடித்தாள்.


இவர்கள் ட்ராபிக்ல் செல்லவே நேரமாகி விடும், பாவனா உறங்கி விடுவாள், அவளை வைத்துக் கொண்டு எப்படி வாங்குவது?


திலோத்தமா அழைத்துச் செல்லலாம் என்றுதான் சொன்னாள். காமாட்சிதான், “இன்னும் கொஞ்ச நேரத்தில் தூங்கிதுவா, சின்னக் குழந்தையா என்ன கையில் தூக்கி வச்சிருக்க, ஏற்கனவே நாள் நெருங்கிடுச்சு, நீங்க சீக்கிரம் போயிட்டு வாங்க, நான் பார்த்துகிறேன்.” என்றார்.


இருவரும் காரில் சென்றனர். வெளியில் தான் டிராபிக், ஆனால் கடையில் கூட்டம் இல்லை. அரவிந்தன் திலோவை தேர்ந்தெடுக்க விட்டு, அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


கொஞ்ச நேரம் இப்படியும் அப்படியும் பார்த்தவள், “அரவிந்த், எனக்கு ஆம்பிளைங்க டிரஸ் பத்தி ஒன்னும் தெரியாது. எனக்கே எங்க அம்மாவும் பெரியம்மாவும் தான் வாங்கினாங்க. நீங்க டிரஸ் எடுங்க, நான் கலர் வேணா பார்த்து சொல்றேன்.” என்றாள்.


அரவிந்த சில உடைகள் எடுத்து சென்று போட்டு வந்து காட்ட… திலோ அவனைச் செல்லில் படம் பிடித்து வைத்துக் கொண்டாள். பிறகு இருவருமாக எது நன்றாக இருக்கிறது எனச் செல்லில் இருந்த போட்டோவை பார்த்து, அலசி ஆராய்ந்து வாங்கினர். நாங்க படிப்பில் மட்டும் இல்லை டிரஸ் எடுப்பதிலும் கூட அறிவாளி என நிருபித்தனர்.


கடைசியாக அரவிந்தனுக்கு வேஷ்ட்டி வாங்க. “நீங்க கட்டிக்கோ ஒட்டிக்கோ வாங்கலையா?” எனத் திலோ புன்னகைக்க…


“நான் கோயம்புத்தூர்காரன், வேட்டி கட்ட தெரியலைனா வெட்ககேடு.” என்றான்.


“சரி முதல் தடவையா வெளிய வந்திருக்கோம். உனக்கு எதாவது வாங்கலாம்.” என அவளை அழைத்துக் கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்றான்.


திலோவுக்கு நீல நிற சில்க் காட்டன் புடவை ஒன்றை அவனே தேர்ந்தெடுக்க… மேற்கொண்டு திலோத்தமா அவனை எதுவும் வாங்க விடவில்லை.

“ஏற்கனவே எங்க அம்மாவும் பெரியம்மாவும் சேர்ந்து அவ்வளவு வாங்கி வச்சிருக்கங்க.” என்றவள், பாவனாவுக்கும் உடை எடுத்த பிறகே கடையில் இருந்து வெளியே வந்தாள்.


ஏற்கனவே இவளுக்குத் திருமணப் புடவை எடுக்கும் போதே பாவனாவுக்கு வாங்கி விட்டார்கள். அரவிந்தன் வீட்டிலும், அவன் பெற்றோருக்கு, வித்யா குடும்பத்திற்கு, அர்ச்சனா குடும்பத்திற்கு வாங்கும் போது, பாவனாவுக்கும் வாங்கி இருந்தனர். இருந்தாலும், இவர்களுக்கு எடுத்துவிட்டு, அவளுக்கு எடுக்காவிட்டால் நன்றாக இருக்காது என அவளுக்கும் ஒன்று எடுத்தாள்.


கடை மூடும் நேரம்தான் இருவரும் வெளியே வந்தனர். “சாப்பிட்டுப் போகலாம் திலோ.” என்றான் அரவிந்தன்.


“வீட்டுக்கு போயிடலாமே.” என்றாள் திலோ… வரேன் என்ற பாவனாவை விட்டுவிட்டு வந்து, தாங்கள் மட்டும் ஹோட்டல் போக, அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.


அவள் இவ்வளவு பார்த்தும், எது நடந்து விடக் கூடாது என நினைத்தாளோ, அதுதான் நடக்கப் போகிறது.


“எனக்கு ரொம்பப் பசிக்குது.” என அரவிந்தன் திரும்பச் சொல்லவும், சரி போகலாம் என்றாள்.


ஹோட்டல் வளாகத்தில் அவளை இறக்கி விட்டவன், “நான் கார் நிறுத்திட்டு வர்றதுக்குள்ள, நீ போய் ஆர்டர் பண்ணு, சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பிடலாம்.” என்றான்.


அவன் காரை நிறுத்த செல்ல, இவள் உள்ளே சென்று இருவருக்கும் தேவையானது சொன்னாள். அரவிந்தன் வருகிறானா என அவள் வாயிலையே பார்க்க, ஆனால் மறுபக்க வழியாக வந்த அரவிந்தன், அவள் தன்னைத் தேடுவதைக் கண்டு கொண்டான்.


இங்கும் அங்கும் தேடி அலைந்த திலோத்தமாவின் பெரிய விழிகள், அரவிந்தனைப் பார்த்ததும், அலைபாய்வதை நிறுத்த, இவன் சென்று எதிரில் அமராமல், அவள் பக்கத்தில் அமர… அவள் விழிகளில் பதட்டம். அவளின் நிலை உணர்ந்த அரவிந்தன், வாய்க்குள் சிரிப்பை அடக்கினான்.


இருவரும் வேகமாக உண்டு முடித்துக் கிளம்பி விட்டனர். செல்லும் வழியில் அரவிந்தன் காரை ஓட்டியபடி, காரில் இருந்து ஒரு உரையை எடுத்துக் கொடுத்தான்.


“என்ன இது?”


“நீ கொடுத்த இல்ல மெடிக்கல் சர்டிபிகேட், அப்ப நானும் கொடுக்கிறது தானே முறை. நானும் கல்யாணம் பண்ண தகுதியானவன் தான்னு மெடிக்கல் சர்டிபிகேட்.” என்றான்.


“நான் இந்தப் பேப்பர் எல்லாம் நம்பமாட்டேன். நீங்க ப்ரூப் பண்ணுங்க. அப்பத்தான் நம்புவேன்.” எனத் திலோத்தமா அந்த உரையைக் கையில் வைத்து விசிறியபடி, அவனை ஒயிலாகப் பார்த்துப் புருவத்தை உயர்த்த,


அவள் சொன்னதைக் கேட்டு அரவிந்தனுக்கு அப்படி ஒரு சிரிப்பு “கல்யாணத்துக்கு அப்புறம் ப்ரூப் பண்ணா போதுங்களா அம்மணி?” என அவன் கேட்க, திலோத்தமாவுக்கு ஒரே வெட்கமாகப் போய் விட்டது.


“நான் விளையாட்டுக்கு சொன்னேன்.” என்றாள். ஆனால் அரவிந்தன் பதில் சொல்லாமல் இருக்க…


“நீங்க என்னை நம்பலையா? ஐயோ கடவுளே ! நான் ஏன் உங்ககிட்ட இப்படிக் கண்ட்ரோல் இல்லாம பேசுறேன்னு தெரியலை? நிஜமா அதை நினைச்சு சொல்லைலை… சும்மா கிண்டலுக்குத்தான் சொன்னேன்.” என்றவளின் கண்கள் கலங்க ஆரம்பிக்க,


“ஹே… எனக்குத் தெரியாதா.” என்றான். “ஹோட்டல உன் பக்கத்தில உட்கார்ந்ததுக்கே, அப்படி டென்ஷன் ஆன…. நீ விளையாட்டுக்கு சொல்றேன்னு கூடவா புரியாது.” என்றான். அதன் பிறகே திலோத்தமா அமைதியானாள்.


வீட்டில் வந்து இறங்கும் போது, இரவு பதினோரு மணி, அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு, பிறகு தன் வீட்டிற்குச் சென்றான்.


அன்று அவளைப் பார்த்த பிறகு மீண்டும் பார்த்தது திருமணத்தன்று தான். திருமணம் வடபழனி கோவிலிலும், அது முடிந்து, விருந்து ஒரு நட்சத்திர ஹோட்டலிலும் ஏற்பாடு செய்து இருந்தனர்.


திருமணத்தில் இருபக்க நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்றவர்களை விருந்துக்குதான் அழைத்து இருந்தனர்.


திலோத்தமா சொந்தங்கள் எல்லோரும் வந்திருக்க… அரவிந்தன் பக்கம் சென்னையில் இருப்பவர்கள் மட்டும்தான் வந்திருந்தனர். மற்றவர்களுக்கு ஊரில் ஒரு விருந்து கொடுப்பதாக இருந்தது.


திருமணம் முடிந்ததும் நேராக ஹோட்டலுக்குச் சென்று விட்டனர். சரியாகப் பதினொன்று முப்பத்துக்கு மணமக்கள் விருந்து நடக்கும் ஹாலுக்கு வந்தனர்.


வரவேற்பு மாதிரி மேடையில் தனியாக நிற்காமல், அந்த ஹால் உள்ளே நுழைந்ததும், இடது பக்கம் மலர்களால் அலங்கார வளைவு அமைத்து இருக்க, அங்கே இருவரும் ஜோடியாக நின்று விருந்தினர்களை வரவேற்றனர். இருவரும் மாலை கூட அணிந்திருக்கவில்லை. மேடையில் ஒருவர் வீணை வாசித்துக் கொண்டு இருந்தார்.


திலோத்தமா தான் இப்படி இருந்தால் போதும் என்று சொன்னது. எதோ மேடையில் எல்லோருக்கும் காட்சி பொருளாக நிற்க அவளுக்குப் பிடிக்கவில்லை. அரவிந்தனுக்கும் இந்த ஏற்பாடு மிகவும் பிடித்து இருந்தது.


அரவிந்தன் முழுச் சூட்டில் இருக்க, திலோத்தமா அப்படியே திருமணப் புடவையிலேயே இருந்தாள். அரக்கு நிற பட்டு புடவைக்கு ஏற்றவாறு தங்க நகைகள் அணிந்து இருந்தாள். நிறைய நகை போடாமல்… தேவையான அளவே போட்டிருந்தாலும், எல்லாமே பெரிதாக அணிந்து இருந்தாள். அவளின் உயரத்திற்கும் தோற்றத்திற்கும் மிகவும் எடுப்பாக இருந்தது.


அரவிந்தனின் நண்பர்கள், உடன் பனி புரியும் மருத்துவர்கள் என நிறையப் பேர்கள் வர..அவர்களை எல்லாம் திலோத்தமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அதே போல… திலோத்தமாவுடன் கல்லூரியில் பனி புரிவோர், தோழிகள் என வர… அவளும் அவர்களை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.


நடு நடுவில் அரவிந்தனின் விழிகள் மகளைத் தேடும் போது, அதைப் புரிந்து, “அதோ அங்க இருக்கா பாருங்க.” என அவனுக்குத் திலோத்தமா காட்டுவாள். அவளும் பாவனா மீது ஒரு கண் வைத்திருந்தாள். பாவனாவும் சில நேரம் இவர்களோடு இருப்பாள்… சில நேரம் தன் உறவுப் பிள்ளைகளோடு விளையாட சென்று விடுவாள்.


அரவிந்தனும் திலோத்தமாவும் ஒருவரோடு ஒருவர் நன்றாகப் பேச… அர்ச்சனாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. இவர்கள் இருவரும் எப்படி இருப்பார்களோ எனக் கவலையில் இருந்தாள்.


வித்யா ஒருத்தி மட்டும்தான் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள். தான் இந்தப் பெண் வேண்டாம் என்று சொல்லியும், அண்ணன் அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை. அதுவும் அர்ச்சனா சொன்ன பெண் என இன்னும் கோபம்.


திருமணதிற்கு இரண்டு நாட்கள் முன்பே வந்துவிட்டாள். ஆனால் திலோத்தமாவை சென்று பார்க்கவே இல்லை. காமாட்சியும் சொல்லிப் பார்த்தார் கேட்கவில்லை.


மதியம் மூன்று மணி போல் வீட்டிற்கு வந்துவிட்டனர். முதலில் திலோத்தம்மா வீடு சென்று, மாலை வரை அங்கிருந்து விட்டு அரவிந்தன் வீட்டிற்குச் சென்றனர்.


இருபக்க உறவினர்களும் மண்டபத்தில் இருந்தே கிளம்பி இருந்தனர். அதனால் வீட்டு ஆட்கள் மட்டும் தான். வைதேகியோடு அவர் அக்கா குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். இங்கேயும் வித்யா குடும்பம் மற்றும் அர்ச்சனா முகிலன் தான் உடன் இருந்தனர்.


அர்ச்சனா திலோவுக்கு நகைகளை கழட்ட உதவிக் கொண்டு இருந்தாள். திலோ இடையில் அணிந்திருந்த ஒட்டியாணத்தைக் கழட்டியவள், “இது கூடத் தங்கமா?” எனக் கேட்டாள்.


“ஆமாம்.” எனத் திலோ சொல்ல,


அப்போது அங்கிருந்த அரவிந்தன், “உன் சைசுக்கு ஒட்டியாணம் வாங்கி இருக்காங்கன்னா, பெரிய பணக்காரங்க தான் நீங்க.” என்றான் கேலியாக.


“நான் சொன்னேன்னு வேண்டாம்ன்னு, எங்க அம்மாதான் கேட்கலை… உனக்குதான் பொண்ணு இருக்கா இல்ல… அவளுக்கு வச்சுக்கோன்னு சொல்லிட்டாங்க.” என்றாள்.


அவள் சொன்னதைக் கேட்டு காமாட்சிக்கு அவ்வளவு மகிழ்ச்சி. உனக்குப் பிறக்கும் குழந்தைக்கு வைத்துக் கொள் என அவள் அம்மா சொல்லவில்லை. ஏற்கனவே இருக்கும் பாவனாவை தான் சொல்லி இருக்கிறார். அதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும் என நினைத்துக் கொண்டே வெளியே சென்றார். அரவிந்தனும் வெளியே சென்று முகிலனோடு பேசிக் கொண்டு இருந்தான்.


நகைகளைக் கழட்டி பத்திரப் படுத்திவிட்டு, தலை அலங்காரம் கலைத்து, திலோவுக்குச் சாதாரணமாகப் பின்னி விட்ட அர்ச்சனா, “சரி நீ புடவை மாத்திக்கோ.” என்றவள், அறையில் இருந்து வெளியே செல்ல… திலோ அங்கிருந்த ஆளுயர கண்ணாடியின் முன்பு நின்று, குண்டாவா இருக்கோம் என ஆராய்ந்து கொண்டு இருந்தாள்.


அப்போது உள்ளே வந்த அரவிந்தன், கதவை சாற்றி விட்டு அவள் பின்னே வந்து நின்றான்.


“என்ன பார்க்கிற நீ குண்டா எல்லாம் இல்லை.” என்றான்.


“அப்புறம் ஏன் கிண்டல் பண்ணீங்க?”


“அழகா அமுல் பேபி மாதிரிதான் இருக்க.” என்றான்.


“அமுல் பேபி குண்டா தான இருக்கும்.”


“ஓ… உனக்குத் தெரியுமா?” என்றவன், அவளைப் பார்த்து சிரிக்க, திலோத்தமா அவனை முறைத்தாள்.


“ஏய் கோவிக்காத, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நீ குண்டா இருந்தா, உனக்கு இந்த வளைவே தெரியாது.” என அவள் இடையின் வளைவை, அவன் பார்வையால் காண்பிக்க,


அவசரமாகச் சரிந்து இருந்த புடவையை அவள் ஏற்றிவிட…. “இன்னும் எத்தனை நாளைக்கு?” என அவளைப் பார்த்துக் கேலியாகக் கேட்டு விட்டுச் சென்றான். அவன் கேட்டதில் அவள் முகம் சிவந்து நின்றாள்.


இவர்கள் இங்கு இருந்த நேரத்தில் அர்ச்சனா பாவனாவிடம், “ நீ எங்களோட வா… நாளைக்கு நாம வெளிய போகலாம்.” என அவளுக்கு ஆசைக் காட்டிக் கொண்டு இருந்தாள். புதுமணத் தம்பதிகள் தனியாக இருக்கட்டும் என்று நினைத்தே அப்படிச் சொன்னாள். அதை வித்யா பார்த்துக் கொண்டே இருந்தாள்.


பிறகு அவளது அறைக்குச் சென்ற பாவனாவிடம் வந்தவள், “இங்க பாரு, அத்தை சொல்றது கேளு. உங்க அப்பா உனக்கு வேணும்ன்னு நினைச்சா, நீ அவரோடையே இரு. இல்ல புதுசா வந்திருக்காங்க இல்ல… அந்த மம்மி அவங்களோட உங்க அப்பா சேர்ந்திட்டு, உன்னைத் தனியா விட்டுடுவார். அப்புறம் நீ எப்பவும் உங்க மாமா வீட்லதான் இருக்கணும்.” என்றாள்.


ஏற்கனவே அவளை விட்டுவிட்டு இருவரும் கடைக்குச் சென்ற கோபம் பாவனாவுக்கு இருந்தது. இப்போது வித்யா வேறு ஏத்தி விட…. அவள் அதை நன்றாகவே பிடித்துக் கொண்டாள்.


மாலினி இறந்த போது பாவனாவுக்குப் பெரிதாக எதுவும் தோன்றவில்லை. ஏனென்றால் மாலினி அவளை வளர்க்கவும் இல்லை. ஆனால் அரவிந்தன் அப்படி இல்லை. அதிக நேரம் அவளுடன் இல்லாவிட்டாலும், இருக்கும் நேரம் அப்படிப் பார்த்துக் கொள்வான். இப்போது அப்பாவும் நாம்மை விட்டுட்டு விடுவாரா என ஒரு அச்சம் பாவனாவுக்கு வந்துவிட்டது.


சின்னக் குழந்தை அவள். அம்மாவும் இல்லை. அவளுக்கு இருக்கும் ஒரே உறவு அப்பாதானே… அவனும் தன்னை விட்டுவிடுவான் என பயப்பட மாட்டாளா?


திலோத்தம்மா உன் குழந்தைக்கு அம்மாவாக இருக்க விரும்புகிறேன் எனப் பொய் சொல்லி வரவில்லை. உன்னைப் பிடித்து இருக்கிறது எனச் சொல்லித்தான் திருமணதிற்குக் கேட்டாள். அப்படி இருக்க, அவள் அரவிந்தனை விட்டுக் கொடுப்பாளா?


அதே போலத் தன் மகளுக்கு அம்மா வேண்டும் என்று மட்டும் அரவிந்தனும் நினைக்கவில்லை.


மூவரும் நல்ல புரிதலோடு இருந்தனர். ஆனால் வித்யா பாவனாவை குழப்பி விட்டதில், இனி என்ன ஆவார்களோ?

 

Advertisement