Advertisement

சங்கீத ஸ்வரங்கள்




அத்தியாயம் 8

திலோ சென்றதும் அரவிந்தன் கிளம்பி அர்ச்சனா வீட்டிற்குச் சென்றான். அன்று வித்யா பேசிய தினத்தில் கோபித்துக் கொண்டு வந்தவள், அதன் பிறகு எத்தனையோ முறை அரவிந்தன் கைபேசியில் அழைத்தும் எடுக்கவில்லை.


இன்று அரவிந்தன் நேரிலேயே வந்து நிற்கவும், அவனை ஒழுங்காகவே வரவேற்றாள். அரவிந்தன் முகிலனோடு ஹாலில் உட்கார்ந்து பேச… அரவிந்தன் வந்திருப்பதால்… தோசைக்கு ஏற்கனவே இருந்த தேங்காய் சட்னியோடு, கார சட்னி செய்தாள்.


அரவிந்தனும் முகிலனும் உண்டு முடிக்க, அர்ச்சனா அவளுக்கு நின்று தோசை ஊற்றிக் கொண்டு இருந்தாள். ஏற்கனவே அவள் மாமியார் சாப்பிட்டு புவனோடு படுத்து இருந்தார்.


சமையல் அறைக்குச் சென்ற அரவிந்தன், “நீ சாப்பிடு, நான் தோசை ஊத்துறேன்.” என அடுத்தத் தோசை அவன் ஊற்றினான்.


நண்பர்கள் பேச இடம் கொடுத்து, முகிலன் தன் மடிக்கணினியோடு ஹாலில் அமர்ந்தான்.


“அப்புறம் வேற எதுவும் பொண்ணு பார்த்தியா?” அரவிந்தன் வேண்டும் என்றே கேட்க,


“எதுக்கு உன் தங்கச்சிகிட்ட திட்டு வாங்கவா… அவகிட்ட ஒன்னு சொல்லிடு, திலோத்தமா கிட்ட நான் பேசுறதுக்கு முன்னாடியே அவளுக்கு உன்னைப் பிடிச்சிருந்தது. சொல்லப் போனா, அவதான் முதல்ல ஆரம்பிச்சா. எதோ நான் பார்த்த பொண்ணுன்னு நினைச்சிக்க வேண்டாம்.”


“அப்படியா? எப்படி உன்கிட்ட சொன்னா, சொல்லு.” என்றான்.


“ஏன்? நீதான் அவ வேண்டாம்ன்னு சொல்லிட்ட இல்ல… சொல்ல முடியாது போ.”


“நீ சொல்றது வச்சு எதாவது முடிவு பண்ணலாம்ன்னு நினைச்சேன். சரி சொல்லலைனா விடு.” என்றான் பாவமாக.


அங்கே ஏற்கனவே திலோவிடம் திருமணதிற்குச் சரி என்று சொல்லிவிட்டு வந்ததைச் சொல்லாமல், ஏனோ இனிதான் முடிவு எடுக்கப் போவது போலச் சொல்ல, பாவம் ! அதை அந்த அர்ச்சனா அப்பாவியும் நம்பி, உடனே மகிழ்ந்து போய்…. அன்று அவளும் திலோவும் பேசிய அனைத்தையும் சொல்லிவிட்டாள்.


முழுவதும் கேட்டவன், “நான் அவளோட ரொம்பப் பேசி பழகினது எல்லாம் இல்லை. ஆனாலும் ஏன் என்னைப் போய் அவளுக்குப் பிடிச்சுதுன்னு தான் தெரியலை.” என்றான்.


“என்ன உன்னைப் போய்….ஏன் உனக்கு என்ன குறை?”


“குறைன்னு சொல்லலை… ஆனா ஏற்கனவே எனக்குக் கல்யாணம் ஆகி, எட்டு வயசுல ஒரு பொண்ணும் இருக்கா…அவளோ புத்தம் புது ரோஜா மாதிரி இருக்கா… கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் பிடிக்காம போயிடக் கூடாது இல்ல… அதுதான் யோசனையா இருக்கு.”


“உனக்கு என்னடா முப்பத்தி அஞ்சு வயசு தானே ஆகுது. அதுக்குள்ள ஏன் டா கிழவன் மாதிரி பேசுற?”


“இருந்தாலும் ரெண்டாவது கல்யாணம் தானே. ஆனா இனிமே யோசிச்சு ஒன்னும் பண்ண முடியாது. நான் அவகிட்ட ஓகே சொல்லிட்டேன்.” என்றான்.


“என்னது ஓகே சொல்லிட்டியா… அப்புறம் ஏன் டா இங்க வந்து என் உயிரை எடுக்கிற? எப்ப அவளோட பேசின?”


“இன்னைக்கு நானும் அவளும் பேசினோம். அப்பத்தான் ஓகே சொன்னேன்.”


“உங்க கல்யாண விஷயத்தைப் பத்தி நீங்களே பேசினீங்களா? எப்படி டா வெட்கமா இருக்காது?”


“நாங்க என்ன பருவ வயசுல இருக்கோமா… எல்லாத்துக்கும் வெட்கப்பட்டுடு இருக்க. ரெண்டு பேரும் பேசினோம். கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு தோனுச்சு, ஓகே சொல்லிட்டேன்.”


“நிஜமாவே நம்பவே முடியலை அரவிந்த். ஆனா எனக்கு ரொம்பச் சந்தோஷம். இனி உன் வாழ்க்கை நல்லா இருக்கும் பாரு.”


“எனக்கு என்னைப் பத்தி கவலை இல்லை. திலோவோட வாழ்க்கை நல்லா இருக்கணும்.”


“நீ நல்லா இருந்தா தான் அவளும் நல்லா இருப்பா. முதல்ல அதை உன் மண்டையில ஏத்து. நீ சந்தோஷமா இரு. அவளையும் சந்தோஷமா வச்சுக்கோ.”


“ம்ம்… சரி. நீயே ரெண்டு வீட்லயும் பேசுறியா?”


“அது மட்டும் என்னால முடியாது. வித்யா இன்னும் முறுக்குவா…”


“சரி எங்க வீட்ல நான் பேசுறேன். திலோ வீட்ல நீ பேசு.”


“சரி… நாளைக்குச் சாயங்காலம் நானும் முகிலனும் வந்து அவங்க அம்மாகிட்ட பேசுறோம்.”


“நான் நாளைக்குக் காலையில அம்மாகிட்ட பேசுறேன். கண்டிப்பா வித்யா குதிப்பா.”


“அவளுக்கு மாலினிக்கும் ஒத்துப் போகலை. மாலினி மேலதான் தப்பு இல்லைன்னு சொல்லலை. ஆனா திலோ எப்படின்னு தெரிஞ்சிக்காம, அவளே கற்பனை பண்ணி பேசினா எப்படி அரவிந்த்?”


“விடு அர்ச்சனா, திலோ அப்படி இல்லைன்னு சீக்கிரம் புரிஞ்சிப்பா… நாம இப்ப எதாவது பேசினா, அவ கோபம் முழக்க திலோ பக்கம்தான் திரும்பும்.” என்றவன், ஹாலுக்குச் செல்ல, அர்ச்சனா சமையல் அறையை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தாள்.


முகிலன் சமையல் அறைக்கு வந்தவன், “வ்வளவு நேரமா ரெண்டு பேரும் அப்படி என்ன பேசினீங்க?” என்றான். அர்ச்சனா சந்தோஷமாக அரவிந்தனின் திருமண விஷயம் பகிர… கேட்ட முகிலனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவன் சென்று அரவிந்தனுக்கு வாழ்த்துச் சொன்னான்.

இரு வீட்டினரிடையே திருமணப் பேச்சு ஆரம்பிக்க… வித்யா தவிர மற்ற அனைவருக்கும் பரிபூரணச் சம்மதம்.


“உங்க அண்ணனே இப்பத்தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு சரி வரார். இப்ப போய் நீ எதாவது அபசகுனமா பேசி வைக்காத.”என அவள் கணவன் வசந்த் அடக்கிய பிறகே அடங்கினாள்.


திலோவின் தாய் மாமன்கள் இருவர் நேரிலேயே வந்து அரவிந்தனை பார்த்து பேசி விட்டு சென்றனர். முதலில் ஏன் இரண்டாந்தாரமாகச் செய்ய வேண்டும் என அவர்களுக்கு வருத்தம் இருந்தது. ஆனால் அரவிந்தனை நேரில் சந்தித்துப் பேசியதும், அவர்களுக்கு அந்த வருத்தம் போய் மகிழ்ச்சி வந்தது.


மருத்துவமனையில் சென்றுதான் அவனைச் சந்தித்தார்கள். அங்கே அவனுக்கு இருக்கும் பேர், மரியாதை எல்லாம் பார்த்த பிறகு வெகு திருப்தி.


திலோவின் திருமண விஷயம் கேள்விபட்ட வைதேகியின் அக்கா, தங்கை தனியாகச் சிரமமப்படுவாள் என உடனே அமெரிக்காவில் இருந்து திரும்பி விட்டார். ரகு வெளி வேலைகள் எல்லாம் பார்த்துக் கொண்டான்.


ரகுவின் வருங்கால மனைவி சுரேக்கா வேறு அவனிடம் அரவிந்தன் பற்றி. ஹஹா.. ஹோஹோ… எனப் புகழ்ந்து தள்ளி இருந்தாள். அவளும் மருத்துவத் துறையில் தானே இருக்கிறாள்.


அரவிந்தனுக்கு இரண்டாவது திருமணம் என்றாலும், திலோத்தமா மற்றும் அவளுது வீட்டினரை கருதி எல்லாமே முறைப்படி செய்தனர்.


பெண் பார்த்த அன்று அரவிந்தன் திலோத்தமாவை பார்த்தது. அதன்பிறகு அவன் அவளைப் பார்க்கவே இல்லை. இடையில் ஒரு மாதம் தான். இருந்தாலும், அவன் கண்ணிலேயே படவில்லை. இத்தனைக்கும் இருவரும் ஒரே குடியிருப்பில் தான் இருக்கிறார்கள்.


அரவிந்தனே பொறுக்க முடியாமல் திலோத்தமாவுக்குப் போன் செய்து விட்டான்.


“என்ன பண்ற நீ? வேலைக்குப் போறியா இல்லையா? பார்க்கவே முடியலை.”


“போறேன் அரவிந்த், கல்யாணத்துக்கு நாலுநாள் முன்னாடிதான் லீவ் போடுறேன். கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு வாரம் போட்டிருக்கேன்.”


“காலேஜ் முடிஞ்சு வரும் போது கூடக் கண்ணுல பட மாட்டேங்கிற.”


“என்னைத் தேடினீங்களா என்ன?” திலோத்தமா கேட்டதும், உஷாராகி விட்டான்.


“பார்க்கலையேன்னு கேட்டேன்.” என்றான் மழுப்பலாக.


“காலேஜ் முடிஞ்சு அப்படியே ஷாப்பிங் போயிடுறோம். அதுதான்

வீட்டுக்கு வர லேட் ஆகுது.”


“சரி வச்சிடுறேன்.”


“இப்ப வீட்லையா இருக்கீங்க?”


“ஆமாம்.” என்றவன் வைத்து விட்டான்.


கல்யாணம் பேசுறதுக்கு முன்னாடி மட்டும் வர தெரிஞ்சிது, இப்ப இந்தப் பக்கம் திரும்பி கூடப் பார்க்கிறது இல்லை என நொந்து கொண்டான்.


அங்கே திலோவோ, “பார்க்கணும், பேசணும்ன்னா வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தான… ஒன்னும் சொல்றது இல்லை. எல்லாத்தையும் மனசுலேயே வச்சிக்கிறது, நாமே கண்டு பிடிக்கணும்.” எனத் தனக்குள் புலம்பியவள்,


“அம்மா, நான் போய் அரவிந்த் பார்த்திட்டு வரட்டா.” என்றாள்.


“சரி போயிட்டுச் சீக்கிரம் வா…” என்றார்.


எதோ சொல்லத் தெரியாத எரிச்சல் அரவிந்தனுக்கு, திலோத்தமாவை பார்க்க வேண்டும் பேச வேண்டும் போலவும் இருக்கிறது. ஆனால் அதைச் செய்யத் தயக்கமாகவும் இருக்கிறது. இருவேறு மனநிலையில் அல்லாடிக்கொண்டு இருந்தான்.


அழைப்பு மணி அடித்ததும், யாரோ என நினைத்து கதவை திறந்தவன், திலோவை பார்த்ததும், அதுவரை இருந்த எரிச்சல் மறைவதை உணர்ந்தான்.


அவனைத் தாண்டி உள்ளே சென்றவள், “ஏன் நீங்க எங்க வீட்டுக்கு வர மாடீங்களா? நான்தான் வரணுமா.” என்றாள்.


தன்னைக் கண்டுகொண்டாலே என்ற எண்ணத்தில், அவன் முகத்தில் மெல்லிய புன்னகை.


அவளைப் பார்த்ததும் பாவனா எழுந்து ஓடி வந்தாள். “அர்ச்சனா அத்தை சொன்னாங்க. இனிமே திலோ ஆன்டி உங்க வீட்ல தான் இருப்பாங்கன்னு. அப்படியா?” என ஆசையாகக் கேட்டாள்.


“ஆமாம், ஆனா அது நீ ஆன்ட்டின்னு கூப்பிட்டா இருக்க முடியாது? நீ என்னை வேற எப்படிக் கூப்பிடலாம்? எனத் தெரியாதது போலத் திலோத்தமா யோசிக்க…


“அக்கான்னு கூப்பிடவா?” பாவனா கேட்க, அதைக் கேட்டு திலோத்தமா முகம் போன போக்கைப் பார்த்து அரவிந்தன் பக்கென்று சிரித்து விட… அங்கே சோபாவில் இருந்த தலையணையைத் தூக்கி, அவன் மேல் கோபமாக விட்டெறிந்தாள் திலோ.

அதைக் கையில் பிடித்தவன், “ஹே… பாவனா இந்தச் சைஸ்ல எல்லாம் அக்கா இருப்பாங்களா?” என அவன் கேட்க,


“ஆமாம் அக்கான்னா குட்டியா இருப்பாங்க இல்ல.” என்றாள் பாவனா. அரவிந்தனுக்கு மீண்டும் சிரிப்பு பொத்துக் கொண்டு வர…திலோ அவனை ஆத்திரமாக முறைத்தாள்.


கண்களில் மன்னிப்பை யாசித்தவன், பாவனாவை அருகில் அழைத்து, “பாவனா குட்டிக்கு அம்மா இல்லைன்னு தான் ஆன்டி இங்க வர்றாங்க, அப்ப நீ அவங்களை எப்படிக் கூப்பிடணும்?” என்றான்.


“அம்மான்னு கூப்பிடணுமா, நான் வேணா மம்மின்னு கூப்பிடவா?” என்றாள்.


அரவிந்தன் எதோ மறுத்து சொல்ல வர, அவனைத் தடுத்த திலோத்தமா, “நீ அப்படியே கூப்பிடு.” என்றாள்.


சிறிது நேரத்தில் பாவனா எதோ எடுக்க அறைக்குள் செல்ல, “ஏன் அப்படிச் சொன்ன? என அரவிந்த் கேட்க, “அவ அம்மான்னு பீல் பண்ணனும் அரவிந்த். அப்போ அவளே கூப்பிடுவா, நாம போர்ஸ் பண்ணக்கூடாது.” என்றாள்.


அவள் சொல்வது அரவிந்தனுக்கும், சரி என்றே தோன்றியது. “நீ நிறைய விஷயம் புரிஞ்சு நடந்துக்கிற. எனக்கு இப்படி வருமான்னு தெரியலை. நான் உன்னை எதாவது தெரியாம காயப்படுத்தினா, ப்ளீஸ் என்கிட்டே சொல்லு… சொல்லாம மட்டும் இருக்காத.” என்றான்.


“ம்ம்… பார்க்கலாம். ஆமா அவ அக்கான்னு சொன்னதுக்கு ஏன் அப்படிச் சிரிச்சீங்க?”


“அவளுக்கு அக்கான்னா எனக்கு என்னன்னு நினைச்சுப் பார்த்தேன். அதுதான் சிரிப்பு வந்திடுச்சு.” என்றான். திலோத்தமா அவனை முறைத்தாள்.


“உன்னோட முட்ட கண்ணை வச்சு சும்மா சும்மா முறைக்காத.. கொஞ்சம் பயமா இருக்கு.” என்றவன், “நான் நைட்டுக்குச் சமைக்கப் போறேன். நீயும் இங்கயே சாப்பிடு.” என்றான்.


“ம்ம்.. சரி என்ன பண்ணப் போறீங்க?”


“ஒரு பேச்சுக்கு கூட வேண்டாம்ன்னு எல்லாம் சொல்றது இல்லை.”


“நீங்க என்ன மூன்னாம் மனுஷனா… ஒரு வாரம் கழிச்சு எப்படியும் நீங்கதான் எனக்குச் சமைச்சு போட போறீங்க? அதை இப்பவே பண்ணா என்ன?” திலோத்தமா இலகுவாகச் சொல்ல…


“ஓ… இன்னைக்குச் சமைச்சா, அப்ப எப்பவும் என்னையே சமைக்கப் போட்டுடுவியா? அப்ப நான் சமைக்கலை.” என்றான் வேகமாக.


“இருங்க, ஏன் இப்படி டென்ஷன் ஆகுறீங்க? நான் இப்பதான் சமையல் கத்துகிட்டு இருக்கேன். கத்துகிட்ட அப்புறம் நானே சமைக்கிறேன் போதுமா?”


“இன்னும் ஒருவாரம் தான் இருக்கு கல்யாணத்துக்கு அதுக்குள்ள கத்துப்பியா?”


“அப்படி எதாவது சட்டம் இருக்கா என்ன? பொண்ணுங்க சமைக்கத் தெரிஞ்சா தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு.”


“நல்லா பேசுற நீ.” என்ற அரவிந்தன் சமையல் அறைக்குச் செல்ல, திலோ தப்பித்தோம் என நினைத்தாள். உண்மையாக அவளுக்குப் படிப்பு வந்த அளவுக்குச் சமையல் வரவில்லை. எதாவது ஒன்றை போட மறந்து விடுவாள்.


அரவிந்தன் மசால் தோசை சுட்டுக் கொண்டு வர… பாவனாவும் திலோவும் உட்கார்ந்து சாப்பிட்டனர்.


“அப்பா ஆன்ட்டிக்கு…” என ஆரம்பித்த பாவனாவை, மம்மிக்கு என அரவிந்தன் திருத்த, “ஹான் மம்மிக்குத் தோசை சுடவே தெரியாது பா… அன்னைக்கு எனக்குத் தோசை பிச்சு பிச்சுக் கொண்டு வந்தாங்க.”


“ஏன் இப்படி இருக்குன்னு கேட்டா. நீ பிச்சுதானே சாப்பிட போறேன்னு சொன்னாங்க.” என அவள் கச்சிதமாகப் போட்டுக் கொடுக்க, அரவிந்தன் சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி திலோவை பார்த்தான்.


“எனக்கு நான் ஸ்டிக் கல்லுல சுட தெரியும். ஆனா அது இரும்புக் கல்… ரொம்பச் சூடாகிடுச்சு. அதுதான் பிஞ்சு போச்சு.”


“ஓ… அப்ப கல்லு தான் சரி இல்லை. உனக்குத் தோசை ஊத்த தெரியும்.”


திலோ தலையாட்டிய தினுசில் அரவிந்தன் சிரிக்க, அவனது வசீகரமான சிரிப்பையும், கன்னத்து குழியையும் திலோ ரசித்துப் பார்த்தாள்.


அரவிந்த என்ன என்பதாகப் புருவத்தை உயர்த்த, ஐயோ மாட்டிக்கொண்டோமே என நினைத்தவள், பதில் சொல்லாமல் குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள். அதைப் பார்த்த அரவிந்தன் மனதிலும் இதமான சாரல்.


இதற்கு முன் உடன் பனி புரியும் சக பெண் மருத்துவர்களே அவனைத் திருமணத்திற்காக அணுகி இருக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை அரவிந்தன் அறியாதவனில்லை.

அவனின் படிப்பு, வேலை, மற்றும் ஒரே துறை, இதுதான் அவர்களை ஈர்த்திருக்கிறதே தவிர… அரவிந்தன் என்ற தனி மனிதன் இல்லை. அதை உணர்ந்ததாலையே அவன் அவர்களை மறுத்தும் இருக்கிறான். ஆனால் திலோத்தமா அப்படி இல்லை.


அவளுக்கு அரவிந்தன் தான் முதலில்.. அதன் பிறகுதான் அவனின் படிப்பு வேலை எல்லாம். அது புரிந்ததால் தான் அரவிந்தனும் திருமணதிற்குச் சம்மதம் சொன்னான்.


திலோ சாப்பிட்டு கிளம்பும் போது, ஐயோ போறாளே என இருந்தது.

 

இன்னும் ஒரு வாரம் தான் என அவனே மனதைத் தேற்றிக் கொண்டான்.


திலோ சென்ற பிறகு, இத்தனை நேரம் வீட்டில் இருந்த சந்தோஷ அலைவரிசை குறைந்ததாகவே உணர்ந்தான்.

 

அடுத்த வாரத்தில் திலோ வந்த பிறகு, இந்த வீட்டில் மகிழ்ச்சி எப்போதும் குறையாது இருக்கும் எனச் சந்தோஷப்பட்டான்.


டேய் ! ரொம்பச் சந்தோஷப்படாதே, உனக்காக நான் கதையைச் சீக்கிரம் முடிக்க முடியாது.

 

 

Advertisement