Advertisement

சங்கீத ஸ்வரங்கள்

 


அத்தியாயம் 7



அரவிந்தனின் தங்கை வித்யா, தன் இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு விடுமுறைக்கு அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தாள். அதற்காகத்தான் காமாட்சியும் முன்பே இங்கு வந்திருந்தார்.


வித்யாவை மதுரையில் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். பெரிய குடும்பம் அவளுடையது. அதனால் அடிக்கடி வரமாட்டாள். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தான் வருவாள்.


எப்போதோ ஒருமுறை வீட்டிற்கு வரும் தங்கை என்பதால்… அவள் வந்தால், அரவிந்தன் அவளை நன்றாகவே கவனித்து அனுப்புவான்.


தங்கையின் பிள்ளைகள் வந்திருப்பதால்…. அரவிந்தன் அன்று விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தான். அர்ச்சனாவும் அன்று மாலை புவனை அழைத்துக் கொண்டு வித்யாவை பார்க்க வந்திருந்தாள்.


காமாட்சி வித்யாவிடம், திலோத்தமா பற்றிச் சொன்னவர், அரவிந்தன் அவளை மறுத்ததிற்கான காரணத்தையும் சொன்னார். திலோத்தமா அர்ச்சனா பார்த்த பெண் என்ற ஒரு காரணமே, வித்யா திலோத்தமாவை வெறுக்கப் போதுமானதாக இருந்தது.


“போதும், ஏற்கனவே இவங்க பார்த்த பெண்ணைக் கட்டி எங்க அண்ணன் பட்ட பாடு. திரும்ப இவங்க பார்க்கிற பொண்ணு வேண்டவே வேண்டாம்.” என்றாள் பட்டென்று.


இத்தனைக்கும் மாலினியின் கருப்புப் பக்கங்களை வித்யா அறிந்தது இல்லை. அதற்கே இந்த நிலை.


மாலினி என்றுமே நாத்தனாரை மதித்தது இல்லை. வித்யா விடுமுறைக்கு வந்தால்… வேண்டுமென்றே அம்மா வீட்டில் போய் உட்கார்ந்து கொள்வாள். அரவிந்தனின் சொந்த ஊருக்குச் சென்றலும், யாரோடும் ஒட்டமாட்டாள். ஒரு நாள் தங்குவதற்கே அவ்வளவு அலட்டுவாள்.


வித்யாவுக்கு என்ன என்றால்? நாம் அவ்வளவு பெரிய குடும்பத்தில் இருந்து எல்லோரையும் அனுசரித்துச் செல்ல… இவள் என்றோ ஒருநாள் வரும் தன்னிடம் நன்றாக நடந்து கொண்டாள் என்ன என்றுதான்.


அதனால் மாலினி எதாவது பேசினாள், வித்யாவும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாள். இவளும் மாலினியை எதாவது குத்திக் காட்டி பேசுவாள். பதிலுக்கு அவள் முகத்தைத் திருப்புவாள்.


“என்னைக்கோ ஒருநாள் பார்க்கிறீங்க? ரெண்டு பேரும் கொஞ்சம் அனுசரணையா நடந்துகிட்டா என்ன?” என அரவிந்தன் சொன்னாலும், இருவருமே கேட்க மாட்டார்கள். மாலினி இறந்த பிறகும், அவள் மீது இருந்த வெறுப்பு வித்யாவுக்குப் போகவில்லை.


“பெண்ணுக்கு முப்பது வயசு சொல்றீங்க. முத்தி போன மூஞ்சா இருக்கப் போகுது. அதுவும் இவ்வளவு வயசுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணா குழந்தை இருக்குமோ என்னவோ? ஏன் இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணலை? எதாவது கசமுசா இருக்கப் போகுது. இவ்வளவு படிச்சிருக்கான்னு வேற சொல்றீங்க, கண்டிப்பா யாரையும் மதிக்க மாட்டா.” என்றாள்.


ஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்தாலும் ஒன்றுமில்லை… அதே பெண்ணிற்கு என்றால்… இந்தச் சமுகம் ஆயிரம் கேள்வி எழுப்பும். அதுவும் பெண்களே தான் பெண்களுக்கு எதிரி.


அரவிந்தன் தங்கையை முறைத்தான். வித்யா பேசுவது பொறுக்காமல் அர்ச்சனா எழுந்து கொண்டாள்.


“சரி வித்யா, நீயே உங்க அண்ணனுக்குப் பொண்ணு பாரு. என் ராசிதான் நல்லா இல்லை. உன் ராசியாவது நல்லா இருக்கட்டும். எனக்கு அரவிந்தன் நல்லா இருந்தா போதும்.” என்றவள், தன் மகனை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல, காமாட்சி மகளைத் திட்ட,


“அர்ச்சனா, உனக்கு வித்யா பத்தி தெரியும் இல்ல… அவ பேசுறது எல்லாம் பெரிசா எடுப்பியா?” என அரவிந்த் அர்ச்சனாவை பின் தொடர்ந்தான்.


ஏற்கனவே அரவிந்தன் விஷயத்தில் அர்ச்சனாவுக்கு மிகுந்த குற்ற உணர்வு, இப்போது வித்யா வேறு சொல்லிக் காட்டியதும், மிகவும் காயப்பட்டுப் போனாள்.


இருவரும் வெளியே வந்திருந்தனர். எதோ சொல்வதற்கு வாய் திறந்த அர்ச்சனா, அங்கே திலோத்தமா நிற்பதை பார்த்ததும் வாயை மூடிக் கொண்டாள். அரவிந்தனுக்கும் அவளைப் பார்த்தது அதிர்ச்சிதான்.


என்னென்ன கேட்டு வைத்தாளோ தெரியவில்லையே என நினைத்தான். திலோத்தமா அவனைப் பார்த்த பார்வையில் அனல் அடித்தது. அதிலேயே தெரிந்தது, எல்லாவற்றையும் கேட்டு விட்டாள் என்று.


“நான் வரேன் அரவிந்த்.” என்ற அர்ச்சனா திலோத்தமாவிடம் சென்றவள், “சாரி திலோ, நான் உன் மனசை வேற கலைச்சிருந்தா ரொம்பச் சாரி.” என்றாள்.


“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அர்ச்சனா. நான் பார்த்துகிறேன்.” என்றாள் திலோ.


இவள் என்ன பார்ப்பாள் என்பது போல அரவிந்தன் திகைத்து போய் நின்றான். திலோ மீண்டும் ஒருமுறை அவனை முறைத்துவிட்டு, அர்ச்சனாவுடன் சென்றாள்.


சிறிது நேரத்திக்கு முன்பு பாவனாவும், புவனும், திலோத்தமா வீட்டிற்குச் சென்றவர்கள், வித்யா வந்திருப்பது, அர்ச்சனா வந்திருப்பது எல்லாம் சொன்னார்கள். சரி நாமும் அவர்களைப் பார்த்து விட்டு வரலாம் எனத் திலோத்தமா வந்திருந்தாள்.


இவள் சென்ற சமயம் கதவு திறந்து தான் இருந்தது. இவள் பெயர் அடிபடவும், உள்ளே செல்ல தயங்கி அங்கேயே நின்றாள். அதனால் எல்லாம் கேட்டு இருந்தாள்.


அர்ச்சனாவிடம் பேசி அவளைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தவள், தன் வீட்டிற்கு வந்ததும், செய்த முதல் வேலை, தன் அறை கண்ணாடியின் முன் நின்று, தன் முகத்தை ஆராய்ந்தது தான்.


வித்யா சொன்னது போலத் தன் முகம் முத்தி போய்யா இருக்கிறது என ஆராய்ந்தாள்.


திலோத்தமாவுக்கு முப்பது வயது என அவள் சொன்னாலே ஒழிய யாரும் கண்டுபிடிக்க முடியாது. பின்னே வைதேகி பாலும் நெய்யும் அல்லவா கொடுத்து வளர்த்திருக்கிறார். கொழுகொழு கன்னம், தொட்டாலே வழுக்கி விடுவது போலச் சர்மம், அதுவும் அந்த வட்ட முகத்தில் அழகான பெரிய விழிகள் வேறு…


வித்யாவே திலோத்தமாவை பார்த்தால்… இவளைப் போய்யா அப்படிச் சொன்னோம் என நினைப்பாள்.


வித்யாவின் பேச்சு திலோத்தமாவை மிகவும் காயப்படுத்தி இருந்தது. ஆனால் அவள் சொன்னதற்காக எல்லாம் அரவிந்தனை வேண்டாம் என நினைக்கவில்லை. மேலும் அவனைத் திருமணம் செய்வதில், இன்னும் தீவிரம் தான் கொண்டாள்.


வைதேகிக்கு மகளின் எண்ணம் புரியாமல் இல்லை. அவளுக்கு அரவிந்தனை திருமணம் செய்வதில் விருப்பம் இருக்கிறது என அவருக்குத் தெரியும். திலோத்தமா அப்படி யார் வீட்டுக்கும் எல்லாம் போக மாட்டாள்.

அவள் அங்கே விரும்பி செல்வது, அவள் பாவனாவை கவனித்துக் கொள்ளும் முறை, இதெல்லாம் வைத்தே மகளின் மனதை புரிந்து கொண்டார்.


அவரும் மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதை விடவில்லை. இப்போது கூடக் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஜாதகம் ஒன்று வந்திருக்கிறது. பையனுக்கு வயது முப்பத்தி நாலு. பெரிய வசதியான குடும்பம் இல்லை. இரண்டு தங்கைகள் அவனுக்கு, இவன் சம்பாதித்து, இருவருக்கும் திருமணம் செய்திருக்கிறான்.


பொறுப்பான பையன், நல்ல குடும்பம். ஆனால் என்ன பையன் வெளிநாட்டில் இருக்கிறான். அவர்களுக்குத் திலோத்தமாவை மிகவும் பிடித்திருக்கிறது. அவளின் போட்டோ பார்த்தே சரி என்று சொல்லி விட்டனர். ஆனால் திலோத்தமா தன்னைவிட்டு வெளிநாடு செல்ல ஒத்துக் கொள்ள மாட்டாள். அதுதான் பிரச்சனையே.


இவர்களுக்கு நிறையச் சொந்தங்கள் உண்டு. ஆனால் வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள். வைதேகியின் அக்கா மட்டும் சென்னையில் இருக்கிறார். அவருடைய மகன் ரகு, அவனை விட்டுத்தான் திலோத்தமாவிடம் பேச வேண்டும் என நினைத்தவர், அவனைக் கைப்பேசியில் தொடர்பு கொண்டார்.


“ஹாய் சித்தி? எப்படி இருக்கீங்க?”


“நல்லா கேளு டா… ஆனா இந்தப் பக்கம் மட்டும் எட்டி பார்த்திடாத.”


“சாரி சித்தி, கொஞ்சம் பிஸி அதுதான் வரலை.”


“உன்கிட்ட கொஞ்சம் பேசணும், வந்திட்டு போயேன்.”


“சரி சித்தி இந்தச் சண்டே வரேன். அம்மா வேற ஊர்ல இல்லையா செமையா காஞ்சு போய் இருக்கேன். நிறையச் சமைச்சு வைங்க.”


“சரி டா.” என்றவர், தொடர்பை துண்டித்தார்.


திலோதம்மா அன்று கல்லூரி சென்றுவிட்டு திரும்பியவள், மின்தூக்கியின் அருகே காத்திருக்க, மின்துக்கியின் கதவு திறக்க, அரவிந்தனின் மொத்த குடும்பமும் வெளியே வந்தது.


திலோத்தமா அவர்களை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் கொஞ்சம் திகைத்துத்தான் போனாள்.


“நல்லா இருக்கியா திலோ, அம்மாகிட்ட சொல்லிடு, நான் இன்னைக்கு ஊருக்கு போறேன்.” என்றார் காமாட்சி.


“சரி ஆன்டி சொல்லிடுறேன்.”


“ஆன்டி, பாட்டியோட நானும் ஊருக்கு போறேன்.” பாவனா சொல்ல, “நீயும் ஊருக்கு போறியா? ஆன்ட்டிக்கு போர் அடிக்குமே.” என்றாள் திலோத்தமா பாவமாக.


அவள் சொன்னதைக் கேட்டு சிரித்த பாவனா, “அப்ப நீங்களும் வாங்க.” என்றாள்.


திலோ பாவனாவின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு, “நீ பத்திரமா போயிட்டு வா.” என்றாள்.


டாக்ஸியில் பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்த அரவிந்தனிடம் வந்த வித்யா, “யாருண்ணா அது?” எனக் கேட்டாள்.


“ஓ… ஆளு யாருன்னு தெரியாமத்தான், அன்னைக்கு அவளைப் பத்தி அவ்வளவு பேசினியா நீ.” என்றான்.


இவளா திலோத்தமாவா? என நினைத்தவள், அங்கேயே நின்று அவளை ஆராய ஆரம்பித்தாள். திலோத்தமா காமட்சியோடு பேசிக் கொண்டு இருந்தாள்.


திலோத்தமாவின் வெளித் தோற்றத்தில் அவளுக்குத் திருப்திதான். இருந்தாலும், இறங்கி வருவதாக இல்லை.


திலோத்தமாவுடன் பேசியபடி வந்த காமாட்சி, வித்யாவுக்கு அவளை அறிமுகம் செய்தார். திலோ வித்யாவைப் பார்த்து புன்னகைக்க, வித்யாவும் வேண்டா வெறுப்பாக, உதட்டை சிரிப்பது போல இழுத்து பிடித்தாள்.


“என்ன அதுக்குள்ள கிளம்பிட்டீங்க? இன்னும் லீவ் இருக்குமே.” திலோவே வித்யாவிடம் பேச்சு கொடுக்க,


“சும்மா தான்.” என வித்யா முடித்துக்கொள்ள,


வித்யா திலோத்தமாவுக்குச் சரியாகப் பதில் சொல்லாததைக் கவனித்த அரவிந்தன், “கொஞ்ச நாள் அம்மாவோட ஊர்ல போய் இருந்திட்டு, அப்புறம் தான் அவ ஊருக்கு போவாள்.” என்றான்.


தன்னிடமா பேசுகிறான் என்பது போலத் திலோ வியந்து போய்ப் பார்க்க, அன்று வித்யா பேசியதை கேட்டிருந்தாலும், மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் பேசுகிறாளே என அரவிந்தன் நினைத்தான். அதுனாலதான் அவனாக பேசினான்.


காமாட்சி அவளிடம் விடைபெற்றுக் காரில் சென்று ஏறினார். வித்யா அதற்கு முன்பே ஏறி இருந்தாள்.


“நான் அவங்களை ட்ரைன் ஏத்தி விட்டுட்டு வரேன்.” என அரவிந்தன் அவளிடம் சொல்லிக் கொண்டு சென்றான். காரிலிருந்து பாவனா கையாசைக்க, திலோத்தமாவும் புன்னகையுடன் அவளுக்கு விடைகொடுத்தாள்.


அந்த வார ஞாயிற்றுக்கிழமை வைதேகியின் அக்கா மகன் ரகு வந்திருந்தான். வந்த மகனை வைதேகி தடபுடலாகக் கவனிக்க, அவனுடன் சேர்ந்து திலோவும் உணவு அருந்தினாள்.


“உங்க அம்மா எப்படி இருக்கா? அமெரிக்காவில பொண்ணு வீட்லயே டேரா போட்டுட்டாளா?”


“ம்ம்… ஆமாம் சித்தி. அவங்க நல்லா என்ஜாய் பண்றாங்க? ஹனிமூன் போன மாதிரி, நல்லா ஊர் சுத்திட்டு இருக்காங்க.”


“பசங்க காலா காலத்தில கல்யாணம் பண்ணலைனா? பெத்தவங்களே ஹனிமூன் கொண்டாடிக்க வேண்டியது தான். ம்ம்… உங்க சித்தப்பா இருந்திருந்தா, நானும் தான் ஊர் சுத்தி இருப்பேன்.” என்றார் ஏக்கமாக.


“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை சித்தி, உங்களுக்கு வேணா மாப்பிள்ளை பார்ப்போமா.” ரகு சிரிப்பை அடக்கியபடி கேட்க, திலோத்தமா அவனுக்கு ஹைபை கொடுத்தாள்.


“அடி செருப்பால…. அண்ணனும் தங்கச்சியும் எருமை வயசு ஆகியும் கல்யாணம் பண்ணாம இருந்திட்டு. எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறீங்களா?” என்றார் வைதேகி காட்டமாக.


உணவு உண்டு முடித்ததும், “வா டா.. நாம கடைக்குப் போய்ட்டு வரலாம்.” என ரகுவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்ற வைதேகி, அவனிடம் திலோத்தமாவுக்கு இப்போது வந்திருக்கும் வரன். ஆனால் திலோவுக்கு அரவிந்தன் மேல் விருப்பம் இருப்பது. அரவிந்தன் யார் என எல்லா விவரமும் சொன்னார்.


“நீயே உன் தங்கைகிட்ட கேட்டு சொல்லு. எனக்கு அவ அரவிந்தனைக் கல்யாணம் பண்ணிகிறது பத்தி ஒன்னும் இல்லை. ஆனா இழுத்திட்டே இல்லாம பண்ணிக்கணும். இல்லை நான் பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லு.”


“எனக்கு அப்புறம் அவளுக்கு யாரு டா இருக்கா… நானும் அவளைத் தனியா விட்டுட்டு போய்டுவேனோன்னு எனக்குப் பயமா இருக்கு. இப்ப எல்லாம் என்னால நிம்மதியா தூங்கவே முடியலை.” என்றவர் கண் கலங்க.


“சித்தி, நான் இருக்கேன். அம்மா இருக்காங்க. இருந்தாலும், உங்க மனசு திருப்திக்காக அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாம்.” என ரகு அவரைச் சமாதானம் செய்தான்.


“அவ மட்டும் இல்ல… நீயும் சீக்கிரம் பண்ணிக்கிற. உனக்கும் முப்பத்தி ரெண்டு வயசாகுது.”


ரகு தானே சொந்தமாக மென்பொருள் நிறுவனம் வைத்திருக்கிறான். சில வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. அதனால் நிறைய வேலை… வேலைக்கு இடையில் காதலித்துக் கொண்டும் இருக்கிறான்.


அவன் காதலி சுரேகா மருத்துவத்தில் மேற்படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் படிப்பை முடிப்பதற்காகத் தான் காத்திருக்கிறான். அவன் வீட்டில் எல்லோருக்கும் தெரியும். இங்கே திலோத்தமாவுக்கு மட்டும் தெரியும்.


அவர்கள் குடியிருப்புக்கு திரும்பியதும், “நீங்க வீட்டுக்கு போய்ட்டு, திலோவை வர சொல்லுங்க.” என்றான்.


சிறிது நேரத்தில் திலோவும் கீழே இறங்கி வந்தாள். இருவரும் பேசியபடி நடந்தவர்கள், அந்தக் குடியிருப்பை விட்டு வெளியே சென்றனர்.


ரகு முதலில் அமெரிக்கா வரன் பற்றித்தான் ஆரம்பித்தான்.


“நல்ல இடமா இருக்கு பண்ணிக்கலாமே.” என்றான்.


“நான் அமெரிக்கா போயிட்டா அம்மாவை யார் பார்த்துப்பாங்க? உனக்குத் தெரியுமா? ஒரு நாள் நைட் அவங்களுக்குத் திடிர்ன்னு உடம்பு சரி இல்லை. நான் இல்லைனா அவங்க என்ன ஆகி இருப்பாங்க. என்னால நினைச்சே பார்க்க முடியலை.”


“அவங்களுக்குப் பிறகு நீ தனியா எப்படி இருப்பேன்னு தான் அவங்களும் கவலைப்படுறாங்க. அவங்க நிலைமையும் புரிஞ்சிக்கோ.”


ரகு சொன்னதைக் கேட்டு திலோத்தமா முகம் வாட… “இந்த வரன்னு இல்லை. அவங்க அரவிந்தன்னா கூடப் பரவாயில்லைன்னு தான் சொல்றாங்க.” என்றதும், அவள் முகம் உடனே மலர…ரகு அதைக் குறித்துக் கொண்டான்.


“அம்மா ரொம்ப வருத்தப்படுறாங்க திலோ. அவங்களுக்காகவாவது சீக்கிரம் முடிவு பண்ணு.” என்றான்.


திலோவும் சரி என்றாள். இருவரும் வீட்டிற்குத் திரும்ப, அங்கே அரவிந்தனும் வெளியே சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தான். அவன் இவர்களைப் பார்த்தும் ஒரு நொடி தயங்க, “இவங்கதான் அரவிந்தன்.” என்றாள் திலோ ரகுவிடம்.


“ஹலோ சார், நான் ரகு, திலோவோடபெரியம்மா பையன்.” என ரகு கை கொடுக்க, அரவிந்தனும் அவனோடு கை குலுக்கினான்.


சிறிது நேரம் அங்கேயே நின்று இருவரும் பேசினார்கள். ரகு தன்னைப் பற்றிச் சொன்னவன், அரவிந்தனிடமும் அவனைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டான்.


பிறகு சமயம் கிடைக்கும் போது, மீண்டும் சந்திப்பதாகச் சொல்லி இருவரும் விடைபெற்றனர்.


மாலை ரகு கிளம்பி விட, வைதேகியும் கீழே பார்க் கிளம்பி சென்றார். அரவிந்தன் மட்டும்தான் வீட்டில் இருக்கிறான். இப்போது போய் அவனிடம் பேசிவிட்டு வரலாம் என நினைத்த திலோ, வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு, அவன் வீட்டிற்குச் சென்றாள்.


கதவை திறந்தவன் இவளைப் பார்த்ததும் திகைத்துப் போய் நின்றான். ஆனால் திலோத்தமாவோ சாவகசமாக அவனைத் தாண்டி சென்று, அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.


கதவை சாத்தாமல் அப்படியே விட்டு, அவளின் எதிரில் சென்று அமர்ந்தவனிடம், ஒரு வெள்ளை நிற கவரைக் கொடுத்தாள்.


என்ன இது என வாங்கிப் பார்த்தவன், அது மருத்துவக் குறிப்பு என்றதும், “என்ன திலோ உடம்பு சரி இல்லையா…” எனப் பதட்டத்துடன் கேட்டவன், வேகமாகப் பார்வையை அந்தக் காகிதத்தில் ஓட்டினான். அது என்ன என்று புரிந்த நொடி, அவளைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தான். திலோத்தமாவும் பயப்படாமல் அவனை எதிர்க்கொண்டாள்.


அரவிந்தன் திலோவிடம் இருந்து நிச்சயமாக இதை எதிர்ப்பார்க்கவில்லை. அது ஒரு மருத்துவச் சான்றிதழ். எல்லாச் சோதனைகளையும் செய்து கொண்டு வந்திருந்தாள்.


“என்ன திலோ இது?”


“நீங்க டாக்டர் தானே உங்களுக்கே புரியலையா?”


“நான் என்ன கேட்கிறேன்னு உனக்குத் தெரியும்.”


“உங்க தங்கச்சி மாதிரி, உங்களுக்கும் தோணலாம் இல்ல.. அதுதான் எல்லா டெஸ்டும் எடுத்தேன். இப்ப ஓகே வா.” என்றாள்.


“அப்படி என்ன என்னையே கல்யாணம் பண்ணிக்கணும்?”


“தெரியலையே… ஆனா வேற யாரையும் பண்ணிக்க மாட்டேன். அது எனக்கு தெரியும். உங்க கூட, அப்புறம் பாவனா கூட எல்லாம் சேர்ந்து இருக்கிற மாதிரி மனசுல கற்பனை பண்ணிட்டேன். இனி மாத்திக்க முடியாது.”


“இனி நீங்கதான் முடிவு சொல்லணும். நான் அதுக்கு ஏத்த மாதிரி எங்க அம்மாவை வேற சமாளிக்கணும்.” என்றாள்.


இவளை என்ன செய்வது என்பது போல அரவிந்தன் விடாது அவளையே பார்து கொண்டிருந்தான். விவரம் புரியாமல் பேசுகிறாள் எனச் சொல்வதற்கு, அவள் பருவ வயதிலும் இல்லை. உண்மையாக மனதில் இருப்பதைத் தான் சொல்கிறாள்.


ஏற்கனவே ஒரு திருமணம் செய்து, அந்த மனைவியை வைத்து ஒழுங்காகக் குப்பைக் கொட்ட தெரியவில்லை… இதில் தனக்கு இன்னொரு திருமணம் வேறா என்றுதான், இதுவரை திருமணத்தைத் தள்ளி போட்டுக் கொண்டே வந்தான்.


இன்னமுமே தான் மாலினியை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லையோ… அதனால்தான் அவள் அப்படிச் செய்தாளோ என அவனுக்குள் ஒரு எண்ணம்.


“என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டா நீ சந்தோஷமா இருப்பேன்னு நினைக்கிறியா? என் வேலையைப் பத்தி தெரியும் தானே உனக்கு. ரொம்ப வெளிய எல்லாம் போக முடியாது. அங்க இங்க சுத்த முடியாது. நீ நிறைய நேரம் தனியாத் தான் இருக்கணும், பரவயில்லையா?” என்றான்.


“நானும் தான் வேலைக்குப் போறேனே… அதுவும் பாவனாதான் இருக்கா இல்ல… அப்புறம் கீழ தான் அம்மா இருக்காங்களே. நான் இருந்துப்பேன்.” என்றாள்.


நல்ல பெண், நல்ல குடும்பம், நன்றாகப் படித்து இருக்கிறாள். அன்று வித்யா அவ்வளவு பேசியும், அவளிடம் முகம் திருப்பவில்லை. பாவனா மீதும் அன்பு இருக்கிறது. பாவனா இவளிடம் நன்றாக வளருவாள் என்றும் தோன்றியது.

தானாக இனி வேறு யாரையும் பார்த்து திருமணம் செய்துகொள்வோம் என்று எல்லாம் தோன்றவில்லை.

அவளே விரும்பி திருமணதிற்குக் கேட்கிறாள். பிறகு ஏன் மறுக்க வேண்டும்? நாம் விரும்புகிறவர்களை விட, நம்மை விரும்புகிறவர்களைத் திருமணம் செய்வது நல்லது என்று சொல்வார்களே… பேசாமல் இவளையே கல்யாணம் செய்து கொள்வோமா என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித்தான்.


அவன் யோசனையைப் பார்த்தவள், “கல்யாணத்துக்கு உங்களுக்கு எதாவது கண்டிஷன் இருக்கா.” என்றாள்.


“எனக்கு எதுவும் இல்லை. உனக்கு இருக்கா.” என்றான்.


“உங்களுக்குத் தெரியும் தானே, எங்க அம்மாவை நான்தான் பார்த்துப்பேன்.”  


“அது ஒன்னும் பிரச்சனை இல்லை. அவங்க இங்கேயே நம்ம கூடவே இருக்கலாம்.” என்றான்.


அவன் சொன்னதைக் கேட்டு, திலோத்தமாவின் முகம் அப்படி மலர்ந்தது. ஒன்று அவன் தன் அம்மாவை குறித்துச் சொன்னது, மற்றொன்று அவன் திருமணதிற்குச் சம்மதித்து இருக்கிறான் தானே…


அவள் முகம் மலர்ந்த விதத்தைப் பார்த்து, என்ன என்பது போல அவன் புருவத்தை உயர்த்த…


“அப்ப கல்யாணத்துக்கு ஒகே வா.” எனக் கேட்டாள்.


“இல்லைனா நீ என்னை விடவா போற? அரவிந்தன் புன்னகையுடன் கேட்க,


“அப்படியெல்லாம் யாரும் கஷ்ட்டப்பட்டுச் சம்மதிக்கக் வேண்டாம்.” எனத் திலோத்தமா எழுந்து வாசலை நோக்கி செல்ல,


“சரி எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லிட்டு போ.” என்றான்.


“எல்லாமே நானே சொல்ல முடியாது. இதாவது நீங்க யோசிங்க.” என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

திலோத்தமா அவனை விரும்பித் திருமணம் செய்து கொள்கிறாள்.  அரவிந்தனுக்கு விருப்பாமா இல்லையா என அவனுக்கே புரியவில்லை. மேரேஜ் ஆப் கன்வின்ஸ் என்பார்களே…. அந்த மாதிரி நினைத்துதான் சம்மதித்தான்.

திருமணதிற்கு பிறகு அவன் சொதப்பாமல் இருந்தால் சரி….

 

Advertisement