Advertisement

சங்கீத ஸ்வரங்கள்

 

 


அத்தியாயம் 6



காலை உணவு யாருமே சாப்பிடவில்லை. எல்லோருக்கும் என்ன செய்வது என ஒன்றும் புரியாத நிலை. வீட்டில் வேலை செய்யும் பெண் வர… ஆண்கள் இருவரும் வெவ்வேறு அறைகளில் முடங்கினர். மாலினியும் எழுந்து அரவிந்தன் இருந்த அறைக்குள் சென்றாள்.


அரவிந்தனுக்கு அவள் வந்தது தெரியும். அவன் எதுவும் பேசவில்லை. கண்ணை மூடி படுத்து இருந்தான்.


அர்ச்சனாவும் அவள் மாமியாரும் வேகமாகச் சமையலை முடித்தனர். அர்ச்சனா மாலினி என்ன செய்கிறாள் என வந்து பார்க்க… அவள் அங்கிருந்த சேரில் அமர்ந்து இருந்தாள்.


“அவளுக்கு மருந்து போட்டு எதாவது சாப்பிட கொடு அர்ச்சனா.” என்றான் அரவிந்தன்.


“நீயும் சாப்பிடு அரவிந்த்.” என்ற அர்ச்சனா மாலினியின் காயத்தில் மருந்திட்டு, அவளுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தவள். அவளுக்கு ஒரு வலி மாத்திரையும் கொடுத்தாள்.


அரவிந்தன் எழுந்து குளித்துவிட்டு வந்தவன், முகிலனையும் சாப்பிட அழைக்க, இருவரும் சேர்ந்து சாப்பிட… அர்ச்சனா பரிமாறினாள்.


எல்லோரும் அரவிந்தன் என்ன முடிவு எடுப்பான் என உள்ளுக்குள் கலங்கி போய் இருந்தனர். அவன் என்ன முடிவு எடுத்தாலும், இவர்கள் யாரும் மறுக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்.


அரவிந்தன் உண்டு முடித்து, மாமியாரும், அர்ச்சனாவும் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை. அதன் பிறகே பேச்சை ஆரம்பித்தான்.


“அர்ச்சனா, மாலினியை கூப்பிடு.” என்றான்.


அர்ச்சனா சென்று மாலினியை அழைத்து வர… அவளுக்கு ஒரு இருக்கையைக் காட்டியவன், “யாரு அது? உனக்கு எவ்வளவு நாளா தெரியும்?” என விசாரித்தான்.


மாலினி பதில் சொல்லாமல் கல் போல இருக்க, “வாயைத் திறந்து சொல்லு டி.” என முகிலன் அடிக்க வர…


“என்னோட ஆபீஸ் கேப் டிரைவர். பேரு மணி. எனக்கு ஆறு மாசமா தெரியும். ஆனா இப்ப கொஞ்ச நாளாதான் பழக்கம்.” என்றாள்.


“என்ன மாதிரி பழக்கம்?” முகிலன் கடுப்பாகக் கேட்க, மாலினி அமைதியாக இருந்தாள்.


“இருங்க முகிலன் நான் பேசிக்கிறேன்.” என்றவன், “நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு உனக்குப் புரியுதா? இது வெளியில தெரிஞ்சா, உன்னை மத்தவங்க எப்படிப் பார்ப்பாங்க தெரியுமா?”


“என்னை விடு, நமக்கு ஒரு பொண்ணு இருக்கா… அவ வாழ்க்கை என்ன ஆகும் எதாவது யோசிச்சியா நீ?”


“எனக்கு அவரைத்தான் பிடிச்சு இருக்கு. நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்.” என்றாள் மாலினி இலகுவாக.


“அடி செருப்பால நாயே… இதுக்கு மேல உன்னை வச்சுக் குடும்பம் வேற நடத்துவாருன்னு நினைச்சிட்டு இருக்கியா?” முகிலன் காட்டமாகக் கேட்க,


“இருங்க முகிலன்.” என்றவன், “டைவர்ஸ் பண்றது ரொம்ப ஈஸி. ஆனா அதுக்கு அப்புறம் நீ என்ன ஆவ? யோசிச்சு பாரு.”


“எவ்வளவு நாள் அவனோட உன்னால வாழ முடியும்ன்னு நினைக்கிற? கொஞ்ச நாள்ல தூக்கி போட்டுப் போய்டுவான். அப்புறம் உன்னோட நிலைமை என்ன?”


“ஒரு நாள் கூட ஏசி இல்லாம தூங்க மாட்ட, நல்ல சாப்பாடு இல்லாம சாப்பிட மாட்ட….வேலை செய்யவும் உடம்பு வணங்காது. அவன் ஒரு டிரைவருன்னு சொல்ற, எப்படி அவனோட காலமெல்லாம் இருப்ப?”


அரவிந்தன் கேட்க கேட்க, மாலினி யோசனையில் இருந்தாள்.

“அவனை நம்பி போய், இன்னும் கொஞ்ச நாள்ல தெருவுல பிச்சை எடுக்கப் போற நீ.”


“இதே உன் அண்ணி இப்படிப் பண்ணி இருந்தா… நான் உடனே அவளைத் தலைமுழிகிட்டு போய் இருப்பேன். இப்படி உட்கார வச்சு எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டேன்.”


“அவர் இப்பவும் உனக்காகத்தான் பேசுறார். இந்த வாய்ப்பையும் நீ பயன்படுத்திக்கலைனா, நீயே உன் தலையில மண்ணை வாரி போட்டுகிறேன்னு தான் அர்த்தம்.” என்றான் முகிலன் ஆற்றமையாக.


“உன் நல்லதுக்குதான் சொல்றாங்க. அவங்க பேச்சை கேளேன்.” என அர்ச்சனா கிட்டத்தட்ட கெஞ்ச,


“இனி ஒழுங்கா இருக்கேன்னு சொல்லு மா… மாப்பிள்ளை உன் நல்லதுக்குதான் சொல்றார்.” என்றார் அவளது அம்மாவும்.


“இவ எல்லாம் சரிபட்டு வரமாட்டா அரவிந்த்… பேசாம நீ டிவோர்ஸ் கொடுத்திடு. கூடப் பிறந்த பாவத்துக்கு, இவ காலை உடைச்சு வீட்ல போட்டு நான் பார்த்துகிறேன்.” என்றான் முகிலன் பொறுமை இழந்து.


“இருங்க அவ யோசிக்கட்டும்.” என்றவன், “பாரு மாலினி, இன்னைக்கு உனக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா நாளைக்கு நீ கஷ்ட்டப்படும் போது தான். ஏன் இப்படிப் பன்னோம்ன்னு ரொம்ப வருத்தபடுவ. அப்ப எங்களாலும் ஒன்னும் பண்ண முடியாது.” என்றான் அரவிந்தன் பொறுமையாக.


எல்லோரும் அழுத்தம் கொடுத்ததும், மாலினி, “சரி, அவனை விட்டுடுறேன்.” என்றாள். இவள் விட்டாலும், அவன் விடுவான தெரியவில்லை.


மாலினி சொன்னதைக் கேட்டு அவளது அம்மாவும், அர்ச்சனாவும் வேண்டுமானால் சந்தோஷப்படலாம். ஆனால் முகிலனுக்கும், அரவிந்துக்கும் அவள் உடனே மாறுவாள் எனத் தோன்றவில்லை.


பள்ளியில் இருந்து பாவனா வந்துவிட, அதன்பிறகு யாரும் அங்குப் பேசவில்லை. அரவிந்தன் மருத்துவமனை கிளம்பி சென்றான். முகிலன் மாலினியின் செல்லை எடுத்து வைத்துக் கொண்டான்.


இரவு வரை எந்த அழைப்பும் வரவில்லை. அவள் வேலைக்குச் செல்லும் நேரம் அழைப்பு வர, முகிலந்தான் எடுத்துப் பேசினான்.


முகிலன் குரல் கேட்கவும், அந்தப் பக்கம் தயக்கம். பிறகு “சார், ஆபீஸ் கேப் வைடிங்.” என்றான்.


“அவங்க இன்னைக்கு ஆபீஸ் வரலை.” என முகிலன் வைத்து விட்டான். எதுவாக இருந்தாலும் அந்தப் பக்கம் இருந்தே வரட்டும் என நினைத்தான். இவனே பேசி எந்த ஆதாரத்தையும் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே என்னென்ன வைத்திருக்கிறானோ தெரியவில்லை.


அரவிந்தன் வீடு திரும்ப இரவு ஆகிவிட்டது. மாலினியின் வீட்டிற்குதான் வந்தான். அர்ச்சனா அவனுக்கு உணவு பரிமாறினாள்.


“மாலினி சாப்பிட்டாளா?” என அரவிந்தன் கேட்ட பிறகே உண்டான். அவன் உண்டு முடித்ததும், முகிலன் அவனிடம் பேசினான்.


“உண்மையாவே நீ மாலினியை மன்னிக்கத் தயாரா இருக்கியா?”


“இதையே ஒரு கணவன் செஞ்சா, மனைவி மன்னிச்சு ஏத்துகிறது இல்லையா? உனக்கு அவ மேல எவ்வளவு கோபம் இருந்தாலும், நீ உன் தங்கையை விடுவியா?” என அரவிந்தன் முகிலனிடம் கேட்க, மாட்டேன் எனத் தலையசைத்தான் முகிலன்.


“அதே போலத்தான் எனக்கும். எதோ ஒரு சந்தர்பத்தில தவறிட்டா, உடனே விட்டு போயடணுமா? திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.” என்றான்.


இந்த நிலைமையிலும் மனைவியை விட்டுக் கொடுக்காத அவனது பேச்சு… எல்லோருக்குமே வியப்பாக இருந்தது. உள்ளே இருந்து அவன் பேசுவதை மாலினியும் கேட்டு இருந்தாள்.


முகிலன் படுக்கச் சென்று விட… வெளியே நடந்து கொண்டிருந்த அரவிந்தனிடம் வந்த அர்ச்சனா, “உனக்கு நிஜமாவே வருத்தம் இல்லையா?” எனக் கேட்டாள்.


“வருத்தம் இல்லாம எப்படி இருக்கும் அர்ச்சனா. நானும் சாதாரண மனுஷன் தானே. எனக்கும் மனசுக்குள்ள கோபம் ஆத்திரம் எல்லாமே இருக்கு. நான் எல்லாத்தையும் உதறிட்டு போனா.. எதுவுமே நடக்கலைன்னு ஆகிடுமா?”


“எதோ நாம படனும்ன்னு இருக்கு. பார்க்கலாம் எல்லாம் சரியான சரிதான். சரி நீ போய்த் தூங்கு.” என்றவன், படுக்கை அறைக்குள் சென்றான்.


கட்டிலில் நடுவில் பாவனா படுத்திருக்க, சுவர் பக்கம் மாலினி படுத்து இருந்தாள். ஆனால் அரவிந்தன் அவர்களோடு மெத்தையில் படுக்கவில்லை. அதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. தலையணை எடுத்துத் தரையில் போட்டு படுத்து விட்டான்.


அவனால் உறங்கவே முடியவில்லை. எவ்வளவு பெரிய துரோகம். எப்படி இவளால் இதைச் செய்ய முடிந்தது என நினைத்தவன், மாலினி என்ன செய்கிறாள் எனத் தலையைத் தூக்கி பார்க்க, அவள் நன்றாக உறங்கி இருந்தாள்.


இவளால் எப்படிக் கொஞ்சம் கூடக் குற்ற உணர்வு இல்லாமல் உறங்க முடிகிறது என ஆச்சர்யமாக இருந்தது. இவன்தான் உறங்க முடியாமல் விழித்தே கிடந்தான்.


மாலினிக்கு அதிகாலை உறக்கம் கலைய, அப்போதுதான் தரையில் படுத்திருந்த அரவிந்தனைப் பார்த்தாள். அரவிந்தன் நன்றாக உறங்குகிறான் என்பதை உறுதி செய்து கொண்டு, அவன் செல்லை எடுத்துக் கொண்டு மெதுவாகக் குளியல் அறைக்குள் சென்றாள்.


அரவிந்தன் செல்லில் இருந்தே அந்த மணிக்கு தொடர்பு கொண்டாள்.


“ஹலோ யாரு?”


“மணி, நான்தான் மாலினி.”


“ஹே நீயா? இது யார் நம்பர்? ஏன் இன்னைக்கு ஆபீஸ் வரலை. நீ வேற நானா போன் பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்கியா அதுதான் பண்ணலை.”


“நல்லது பண்ண, என்னோட செல் என்கிட்டே இல்லை. நானா போன் பண்ற வரை இனியும் பண்ணாத.”


“எதாவது பிரச்சனையா?”


“ஆமாம், நான் பார்த்துகிறேன். நீ யார்கிட்டயும் எதுவும் பேசாத.”


“என்னோட வந்திடு ப்ளீஸ்.” என்றான்.


“இப்ப எதுவும் முடியாது, கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம்.” என்றவள், தொடர்பை துண்டித்து விட்டு, அந்த எண்ணை செல்லில் இருந்து அழித்தும் விட்டாள்.


திரும்பச் செல்லை அரவிந்தன் பக்கத்தில் வைத்து விட்டு, நல்ல பிள்ளை போலச் சென்று படுத்துக் கொண்டாள். இவள் எதோ அரவிந்தனை ஏமாற்றியதாக நினைத்துக் கொண்டு இருக்கிறாள், ஆனால் உண்மையில் ஏமாறப் போவது இவள்தான்.


மறுநாளில் இருந்து மிகவும் நல்லபிள்ளையாக நடத்து கொண்டாள். மற்ற நேரங்களில் வீட்டு வேலையில் உதவாதவள், இப்போது தானே வந்து உதவினாள்.


அரவிந்தனும் இங்கயே தங்கி விட்டான். முகிலன் வீட்டில் இருந்தே வேலைப் பார்த்தான். மாலினியின் அலுவலகத்தில் இருந்து அழைத்து அலுவலகம் வராத காரணம் கேட்டனர்.


“அவளுக்கு மிகவும் உடல்நிலை சரி இல்லாததால் வரவில்லை. இனியும் வேலைக்கு வரமாட்டாள்.” எனச் சொல்லி வைத்து விட்டான்.


மறுநாளில் இருந்து மணியிடம் இருந்தும் அழைப்பு வரவில்லை. அதுதான் முகிலனுக்குச் சந்தேகமாக இருந்தது. இவள் எதோ அவனுக்குத் தகவல் கொடுத்து விட்டாள் என நினைத்தவன், எப்படிக் கொடுத்திருக்க முடியும் என்றுதான் புரியாமல் குழம்பினான்.


அரவிந்தன் மருத்துவமனை சென்றிருந்த நேரத்தில், மாலினியிடம் வந்தவன், “அரவிந்தனோட வாழ இஷ்ட்டம் இல்லையா சொல்லிடு. டிவோர்ஸ் கொடுத்திடலாம். அவனாவது நிம்மதியா இருக்கட்டும்.”


“அதை விட்டு இன்னும் எதாவது கேவலத்தைக் கொண்டு வந்திடாத.” என முகிலன் எச்சரித்தே வைத்தான்.  


எத்தனை நாள் முகிலனால் வீட்டிலேயே இருக்க முடியும். அவன் வேலைக்குச் சென்று வர ஆரம்பித்தான். ஒருநாள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அரவிந்தன், தான் வேறு இடத்துக்கு வேலை மாற்றம் கேட்டிருப்பதாகச் சொன்னான்.


“ஏன் டா?” என்ற முகிலனிடம், “இதே இடத்தில இருந்தா, வீணா மனசு சங்கடம் தானே.” என்றான்.


வேறு இடத்திற்குச் சென்றால்… புது இடமும் சூழ்நிலையும் மாலினியை மாற்றும் என்ற எண்ணமும்தான் காரணம்.


இருந்த இடத்தை விட்டு வேறு ஒரு இடத்திற்குச் செல்வது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல… அதுவும் என்ன காரணத்திற்காகச் செல்கிறான் என நினைக்கும் போதே… எல்லோருக்கும் அவ்வளவு குற்ற உணர்வைக் கொடுத்தது.


அர்ச்சனா அழுதே விட்டாள். ஆனால் மாலினிக்கு வேறு கவலை, இனி மணியைப் பார்க்கவே முடியாதா என்று… அதனால் வேறு திட்டம் போட ஆரம்பித்தாள்.

 

 

 

Advertisement