Advertisement

 

மாலினியின் அம்மாவும் எவ்வளவு நேரம்தான் மகளைக் கண்காணித்துக் கொண்டு இருப்பார். அவர் மதிய நேரம் சற்றுக் கண் அசந்து விட…. அர்ச்சனாவும் மருத்துவமனை சென்று இருந்தாள்.


மாலினி தன் அம்மாவின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று மணியை அழைத்தாள்.


“அரவிந்தன் வேற ஊருக்கு போகலாம்ன்னு சொல்றார். இப்ப என்ன பண்றது?” என்றாள்.


“நீ பேசாம என்னோட கிளம்பி வந்திடு. நாம வேற ஊருக்கு போய்டலாம்.” என்றான்.


“வேற ஊருக்குப் போனா சாப்பாடுக்கு என்ன பண்றது?”


“நீ படிச்சிருக்க நீ வேலைக்குப் போ.. எனக்கு எங்கனாலும் டிரைவர் வேலை கிடைக்கும். ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம் போதாதா?” என்றான்.


“என் அண்ணனுக்குத் தெரிஞ்சா கொன்னே போட்டுடுவான். சீக்கிரம் எதாவது பண்ணனும்.” என்றாள்.


“நீ நாளைக்கே வீட்டை விட்டு வந்திடு.”


“சரி.”


“நைட் வரியா?”


“இல்லை வேண்டாம். வீட்ல ஆள் இருப்பாங்க. நாளைக்கு இதே நேரம். தெரு முனையில காத்திட்டு இரு வந்திடுறேன்.” என்றவள், பேசி முடித்துவிட்டு, செல்லில் இருந்த நம்பரை அழித்துவிட்டு, கொண்டு போய் இருந்த இடத்திலேயே வைத்து விட்டாள்.


உறங்கி எழுந்த அவள் அம்மாவும் மகள் சாதரணமாக இருப்பத்தைப் பார்த்தவர், மகள் மாறி விட்டாள் என்றே நினைத்துக் கொஞ்சம் மெத்தனமாகவே இருந்தார்.


முகிலனுக்கு இன்னும் அந்த மணி அப்படிச் சாதாரண ஆள் என நினைக்க முடியவில்லை. ஒரு பெண் வழிய அவனின் வீடு வரை சென்றிருக்கிறாள், அப்படி எளிதாக விட்டு விடுவானா என்ன?


அந்த மணியைப் பற்றி விசாரிக்க யாரிடம் செல்வது என யோசித்துக் கொண்டு இருந்தான். அரவிந்தனுக்கும் அதே சந்தேகம் இருந்தது.


நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இதுவரை எந்த வம்பு தும்புக்கும் போனது இல்லை. இப்போது இப்படி ஆனதும் யாரை கேட்பது என ஒன்றும் புரியாத நிலை. இதைப் பற்றி யாரிடமாவது பேசினால்… இவர்களைத்தான் கேவலமாகப் பார்ப்பார்கள்.


மணியைத் தாங்களே நேரடியாகக் கூப்பிட்டு பேசுவதை விட, யாரவது காவல்துறை அதிகாரியிடம் உதவிக் கேட்கலாம் என இருவரும் முடிவு எடுத்தனர்.


அன்று இரவு கூட அரவிந்தன் மாலினிக்கு அவ்வளவு புத்தி சொன்னான். “இந்த மாதிரி விஷயத்துல கொலை கூட நடக்குது. பேப்பர்ல எவ்வளவு படிக்கிறோம்.” என்று.


அப்போது அவளுக்கு மனதிற்குள் நறுக்கென்று இருந்தாலும், மொத்தமாக மூளை மழுங்கி போய்க் கிடந்ததால்… அறிவு வேலை செய்யவில்லை.


மறுநாள் மதியம் அவள் அம்மா கண் அசந்தவுடன், அவர் செல்லை எடுத்து மணியை அழைத்தவள், அவன் வந்துவிட்டேன் என்றதும், உடனே செல்லை வைத்துவிட்டு கிளம்பி விட்டாள்.


கைப்பையில் அவளுடைய சான்றிதல்கள், கொஞ்சம் பணம், வீட்டில் எப்போதும் நகைகளை வைத்திருப்பதில்லை. அதனால் அவள் போட்டிருந்த நகைகளுடன், அப்படியே கிளம்பி விட்டாள்.


வெறும் கைப்பையோடு வந்தவளை பார்த்து விழித்த மணி, அப்போது ஒன்றும் கேட்க முடியாமல் காரை எடுத்தான்.


“இப்ப நாம எங்கப் போறோம்?” சிறிது தூரம் சென்றதும், மாலினி கேட்க,


“பெங்களூர் போறோம். அங்க என் பிரான்ட் இருக்கான்.”


“சரி, அங்கே போனா எனக்கும் சீக்கிரம் வேலை கிடைக்கும்.” என்றவள்,


“நாம அங்க போய்க் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றாள்.


“கல்யாணமா? அது எதுக்கு? எனக்கு அதெல்லாம் பிடிக்காது.” என மணியின் அலட்ச்சியத்தைப் பார்த்து மாலினி விழித்தாள்.


“நீ ஒரு வீடு எடுத்து இரு. நான் வேற இடத்தில இருக்கேன். நான் உன் வீட்டுக்கு வரப் போய் இருக்கேன்.” என்றான் சாதரணமாக.


மாலினிக்கு உள்ளுக்குள் தடதகடக்க ஆரம்பித்தது. அது அவள் முகத்திலும் தெரிய… “இப்ப நிறையப் பேர் அப்படிச் சேர்ந்து இருக்காங்க. அது ஒன்னும் தப்பு இல்லை. நீ போட்டிருக்கத் தாலிக்கு மட்டும் இப்ப என்ன மரியாதை கொடுத்திட்ட?” என்றான் குத்தலாக. அதை கேட்டு மாலினியின் முகம் கருத்துவிட்டது.

மணிக்கு மாலினியின் மேல் எந்த மரியாதையும் இல்லை. அவன் ஆள் பார்க்க நன்றாக இருப்பான். இவன் கொஞ்சம் அவளை ஆர்வமாக பார்த்து வைக்க, அவள் முறைப்பாள் என  நினைத்தால்… அவளும் பதிலுக்குக் கள்ளப் பார்வை பார்த்து வைத்தாள்.

அன்றிலிருந்து மணி அவளைப் பிடித்துக் கொண்டான். முதலில் தனியாக அவள் மட்டும் பயணம் செய்யும் சமயங்களில் கொஞ்சம் அத்து மீறிப் பார்த்தான். மாலினியும் அதனை எதிர்க்காமல் உடன்பட… அவனுடைய வேலை எளிதாகி விட்டது.

இதனால் அவனுக்கு என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது? ஊரும் உலகமும் அவனை தூற்ற  போவது இல்லை. அவனுக்கு கிடைத்தவரை லாபம்.

இதற்கெல்லாம் அஞ்ச வேண்டியவளோ… அதனால் ஏற்படப் போகும், பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்… கிடைத்த சுகத்தில் மயங்கிக் கிடந்தாள்.    

மாலினி நினைத்துக் கொண்டு இருந்தாள். நாம்தான் மணியை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறோம் என்று. அவன் ஒரு அப்பாவி என நினைத்துக் கொண்டு இருந்தாள். ஆனால் உண்மையில் மணி பயங்கிறமான ஆள்.  இவள் எவ்வளவு தூரம் போகிறாள் பார்ப்போம் என்றே அமைதியாக இருந்தான்.

எப்படியும் இவளது அண்ணன் அல்லது கணவன் வந்து தன்னிடம் பேசுவார்கள், மொத்தமாக மொட்டை அடித்து விட வேண்டும் என நினைத்து இருந்தான். ஆனால் அவர்கள் வராமல் இவள் வந்து மாட்டிக் கொண்டாள். இனி இவளை இவன் விடுவானா?


“ஆமாம் இப்படி மாத்தி கட்ட துணி கூட இல்லாம வந்திருக்கியே பணம், நகை எதாவது கொண்டு வந்திருக்கியா?” என்றான்.


“வீட்ல கொஞ்சம் பணம் தான் இருந்தது. நகையும் லாக்கர்ல இருக்கு.” என்றாள்.


“இப்ப போற வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கணுமே… அப்புறம் வீட்ல சாமான் எல்லாம் வாங்கிப் போடணும். நீ இப்படி வெறுங்கைய வீசிட்டு வந்தா என்ன பண்றது?” என்றான்.


இதெல்லாம் வேற இருக்கா என மாலினி இப்போதுதான் நினைக்க ஆரம்பித்தாள். இப்பொழுதே கண்ணைக் கட்டியது.


“உனக்கு ஒரு பொண்ணு இருக்கு இல்ல.” என்றான் மணி யோசனையாக…


மகளைப் பற்றி அவன் பேசியதும், மாலினியின் உடல் விறைக்க… அவனை ஏன் என்பது போலப் பார்த்தாள்.


“ஒருநாள் உன் பொண்ணைத் தூக்கிட்டு வந்து வச்சிகிட்டா… உடனே உன் அண்ணனும், புருஷனும் பணத்தோட வர மாட்டாங்க.” என்றான்.


முதல்முறையாக மாலினிக்கு மணியைப் பார்த்து அச்சம் பிறந்தது. தன் மகளைக் கடத்துவதைப் பற்றி எப்படி எளிதாகத் தன்னிடமே பேசுகிறான் என நினைத்தாள்.


அரவிந்தன் அவ்வளவு தூரம் சொன்னனானே, கொலை கூடச் செய்யத் தயங்க மாட்டார்கள் என்று. அவன் பேச்சை தான் கேட்காமல் போனோமே என இப்போது வருந்தினாள்.


கணவன் முகம், அம்மா முகம், அண்ணன் முகம், அண்ணி முகம் தன் மகள் முகம் என ஒவ்வொன்றாகக் கண் முன் தோன்றியது. எத்தனை விதமாக எப்படி கெஞ்சி இருப்பார்கள். யார் பேச்சையும் கேட்காமல் போனோமே என்றிருந்தது.

இப்போது ஒன்றும் கெட்டுவிடவில்லை. இவனது சுயரூபம் தெரிந்து விட்டது, இப்படியே இங்கிருந்து திரும்பி விடலாம் என நினைத்தாள்.


“வண்டியை நிறுத்து.” என்றாள்.


ஏன் என்பது போல அவன் பார்க்க, “எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்.” என்றாள்.


அவள் எண்ணம் புரிந்து, கேலியாகச் சிரித்தவன், “நீ என் கூடப் பண்ண சல்சா எல்லாம் வீடியோ எடுத்து வச்சிருக்கேன். உன் புருஷனுக்கு அப்புறம் உன் அண்ணனுக்கும் அனுப்பி வைக்கட்டுமா? ரெண்டு பேரும் பார்த்தா நல்லா இருக்காது.” என்றான்.


அதைக் கேட்டு மாலினி அதிர்ச்சியில் உறைந்தே போனாள். மணி அவளைப் பார்த்து கிண்டலாகச் சிரித்துவிட்டு, காரின் வேகத்தை அதிகப்படுத்த… அப்போது மாலினிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. இனி இவனிடம் இருந்து தான் தப்பிக்க முடியாதோ என்ற ஆத்திரம் வேறு, இருந்த கோபத்தை எல்லாம் திரட்டி, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாள்.

எதிர்பாராமல் விழுந்த அறையில் மணி ஒரு நொடி அதிர்ந்து போய் அவளைப் பார்த்தவன், பிறகு கோபத்தில் அவனும் அவளை அடிக்க வர, ரோட்டில் இருந்த கவனம் சிதறியது.


கார் அப்போது ஒரு மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்க, பக்கவாட்டில் இருந்த சுவரில் இடித்து, அதோடு நிற்காமல், கார் சுவரைத் தாண்டி, கீழே இருந்த சாலையில் சென்று விழ, அப்போது அதி வேகமாக வந்த லாரி ஒன்று, அந்தக் காரை அப்பளம் போல நசுக்கி விட்டுச் சென்றது. ஒரு நிமிடத்தில் எல்லாம் நடந்து முடிந்து இருந்தது.


அரவிந்தனும் முகிலனும் அப்போதுதான் நண்பர் ஒருவரின் சிபாரிசில் உதவி கமிஷனாரைப் பார்க்க சென்று கொண்டிருந்தனர். வீட்டில் இருந்து மாலினியைக் காணவில்லை என்ற தகவல் வந்தது. இருவரும் பதறி போய் வீடு திரும்பினர்.


மாலினிஅன்று பதட்டத்தில், அவள் அம்மாவின் செல்லில் இருந்து மணியிடம் பேசியதை அழிக்க மறந்திருந்தாள். அவள் விரும்பியே வீட்டை விட்டு சென்றிருக்கிறாள் எனப் புரிந்த நொடி, எல்லோரும் இடிந்து போய் உட்கார்ந்து விட்டனர்.


அரவிந்தனின் பெற்றோருக்கு என்ன சொல்வது? உறவினர்களை எப்படிப் பார்ப்பது? இப்படித்தான் மற்றவர்களின் கவலை இருந்தது. ஆனால் இனி சீரழிந்து போவாளே என அப்போதும் மாலினிக்காகத்தான் அரவிந்தன் வருந்தினான்.


நான்கு நாட்கள் பேசிவிட்டு மற்றவர்கள் வேறு விஷயத்திற்குச் சென்று விடுவார்கள், இவர்களும் பத்து நாட்களுக்குப் பிறகு அவரவர் வேலையைப் பார்க்க போய் விடுவார்கள். ஆனால் மாலினி அல்லவா, காலமெல்லாம் கஷ்ட்டப்படுவாள் என அப்போதும் அவளைப் பற்றிதான் நினைத்துத் தவித்துப் போனான்.


அந்த நேரம் உதவி கமிஷனரிடம் இருந்து அழைப்பு வர… “சாரி சார், கொஞ்சம் வீட்ல பிரச்சனை, அதுதான் வர முடியலை.” என அரவிந்தன் சொல்ல…


“இல்ல அரவிந்தன், நான் அதுக்குப் போன் பண்ணலை. இங்க தாம்பரம் கிட்ட ஒரு விபத்து. கார்ல இருந்த டிரைவர் அப்புறம் கூட இருந்து பொண்ணு ரெண்டு பேருமே ஸ்பாட் அவுட். அந்தப் பொண்ணு உங்க மனைவி மாலினியா இருக்குமோன்னு சந்தேகப்படுறோம். எதுக்கும் வந்து பார்த்துக் கன்பார்ம் பண்ணுங்க.” என்றார்.


அரவிந்தனுக்குப் பேச்சே வரவில்லை. முகிலன் அவனை உலுக்கித்தான் விஷயத்தை வாங்கினான். அதுவரை இருந்த கொந்தளிப்பு போய், முகிலன் முகத்தில் ஒரு பரவசம் வந்தது.


“நான் இப்பதான் நினைச்சேன், இனி சாமியே கும்பிடக் கூடாதுன்னு. ஆனா கடவுள் இருக்கான்னு நிருபிச்சிட்டான் டா. உனக்குத் துரோகம் பண்ணா இல்லை.. அதுதான் கடவுளுக்கே பொறுக்கலை.” என்றான் ரௌத்திரமாக.


“அப்படிப் பேசாதீங்க, என்ன இருந்தாலும் அவ உங்க தங்கச்சி.” என்றாள் அர்ச்சனா.


“யாரை பத்தியாவது அவள் நினைச்சாளா டி.” என்றான் முகிலன் ஆத்திரமாக. என்ன இருந்தாலும் மகள் அல்லவா மாலினியின் அம்மாதான் கதறினார்.


மாலினியின் ஆடை மற்றும் கைப் பையை வைத்துதான் அவளை அடையாளம் காண முடிந்தது. மாலினி ஓடிபோனாள் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமலேயே போய்விட்டது. விபத்தில் இறந்து போனாள், அது மட்டும் தான் மற்றவர்களுக்குத் தெரியும்.


எல்லாக் காரியமும் முடிந்து விட்டது. உதவி கமிஷனர் மூலம் மணியைப் பற்றித் தெரிந்த வந்தது. அவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்றும் புரிந்தது.

மாலினி மட்டும் உயிரோடு இருந்திருந்தால்… அவள் என்ன கதி ஆகி இருப்பாள்? என்பதை அரவிந்தனால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. மனைவி இறந்து போனது, அந்த நிமிடம் அவனுக்கு நிம்மதியை தான் கொடுத்தது.

மரணம் கூடச் சில நேரம் சிலருக்கு வரம்தான்.

சில நாட்களில் எல்லோரின் இயல்பு வாழ்க்கையும் திரும்பியது. இப்போது வரை தன் வீட்டினர் யாரிடமும் அரவிந்தன் மாலினியை பற்றி சொன்னதே இல்லை. இனியும் யாரிடமும் சொல்ல மாட்டான்.

குத்தியது நண்பனாக இருந்தால்… செத்தாலும் வெளியே சொல்லக் கூடாது என்பார்கள். அதே போல… தன் இணை எப்படி இருந்தாலும், அவர்களை எந்த நிலையிலும் விட்டுக் கொடுத்திடக் கூடாது. அதுதான் உண்மையான திருமண பந்தம்.

 

Advertisement