Advertisement

சங்கீத ஸ்வரங்கள்


அத்தியாயம் 5


மெத்தையில் வந்து படுத்து விட்டாலும், உறக்கம் வர வேண்டும் அல்லவா, அரவிந்தனின் மனம் அலைபாயும் போது, உறக்கம் எங்கிருந்து வரும்.


இத்தனை நாள் முயன்று மனதின் ஆழத்திற்குள் தள்ளியது எல்லாம், மனக் கண்ணில் தோன்றி அவனை வதைக்க ஆரம்பித்தது.


அர்ச்சனாவும் அவனும் கல்லூரியில் படிக்கும் போதே நல்ல நண்பர்கள். பொது மருத்துவம் முடித்து, வெவ்வேறு பாதையில் சென்றாலும், இருவருக்கும் இடையேயான நட்பு அப்படியே இருந்தது.


அதுவும் அர்ச்சனா திருமணம் முடித்துச் சென்னையில் இருக்க, அரவிந்தனும் சென்னையில் தான் மேற்படிப்புப் படித்தான். அதனால் அடிக்கடி இல்லையென்றாலும், எப்போதோ ஒருமுறை சந்தித்துக் கொள்வார்கள்.


அர்ச்சனா அரவிந்தனை வீட்டிற்குதான் அழைப்பாள். முகிலனும் அரவிந்தனிடம் நன்றாகப் பழகுவான். அவர்கள் வீட்டிற்குச் சென்றால், அவனைச் சாப்பிடாமல் விடவே மாட்டார்கள்.


அங்கே செல்லும் சமயங்களில் மாலினியையும் பார்த்து, பேசி, பழகி இருக்கிறான். அப்போது அவள் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருந்தாள்.


சாதாரணமாகப் பார்த்து இருக்கிறானே தவிர, பெரிதாக ஈர்ப்பு எல்லாம் அவளிடம் ஏற்படவில்லை. அவளுக்குமே அப்படித்தான்.


மாலினி வீட்டில் அடக்க ஒடுக்கமாக இருந்தாலும், வெளியே அப்படி இல்லை. அது லேசாக முகிலனுக்குத் தெரிய வர… அவள் அந்த வருடம் படிப்பு முடித்ததும், மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் அவளைப் பற்றி அர்ச்சனாவுக்குத் தெரியாது.


அர்ச்சனா கூட அப்போது மாலினிக்கு அரவிந்தனைப் பார்க்கலாம் என நினைக்கவில்லை. முதலில் மாலினியின் அம்மாதான் ஆரம்பித்தது.


அரவிந்தன் அப்போது நரம்பியலில் மேற்படிப்பு முடித்து, அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்த நேரம். அவன் அப்போது திருமணத்தைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை.


தன் மாமியார் அரவிந்தன் பெயரை சொன்னதும், அர்ச்சனா பிடித்துக் கொண்டாள். முகிலன் வேறு இடம் பார்ப்போம் என்றுதான் சொன்னான். ஆனால் அர்ச்சனா தான் கேட்கவில்லை. அவள் காமாட்சியிடம் பேச, மாலினியின் அழகு, குடும்பம் எல்லாம் அவரை உடனே சரியென்று சொல்ல வைத்தது.


அதுவம் அரவிந்தனும் எத்தனை நாள் வெளியே சாப்பிடுவான். தங்களாலும் அவனோடு சென்று இருக்க முடியாது. இதே மாமியார் வீடு பக்கம் இருந்தால்… ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள் என்று நினைத்தவர், அதை அரவிந்தனிடமும் சொல்ல… முதலில் இப்போது திருமணம் செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்றான்.


“எனக்காகப் பண்ணிக்க மாட்டியா அரவிந்த்?” என அர்ச்சனா ஒருபக்கம் நச்சரிக்க, இன்னொரு பக்கம் காமாட்சி வேறு போன் செய்து அதையே வலியுறுத்தினார்.


இன்று இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் திருமணம் செய்துதான் ஆக வேண்டும், தெரியாத இடத்தில் செய்வதற்கு, தெரிந்த இடத்தில் செய்து கொள்ளலாமே என்றுதான் திருமணதிற்குச் சரி என்றான்.


இவளோடுதான் திருமணம் என்றதும், அவனுக்கு மாலினி மீது ஈர்ப்பு வரவே செய்தது. ஆனால் மாலினிக்கு அப்போதும் அந்த மாதிரி உணர்வு இல்லை.


அவளுக்கு இரண்டு விஷயங்களில் திருப்தி இல்லை. ஒன்று அவனின் நிறம். அவள் ரோஜா நிறத்தில் இருக்க, அவன் கருமையாக இருந்தது பிடிக்கவில்லை. இன்னொன்று அவன் அரசு மருத்துவமனையில் வேலைப் பார்ப்பது. அவளுக்குப் பிடிக்கவே இல்லை.


இத்தனை தனியார் சிறப்பு மருத்துவமனைகள் இருக்க, யாரவது அரசாங்க மருத்துவமனையில் போய் வேலைப் பார்ப்பார்களா என நினைத்தாள்.


மாலினி தன் அம்மாவிடம் “அரவிந்தன் ரொம்பக் கலர் கம்மி இல்லை. எங்க ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் நல்லா இருக்குமா?” என ஜாடையாகச் சொல்ல, உடனே அவர் அதை முகிலனிடம் சொல்ல,


“ஆம்பிளைக்கு எதுக்குக் கலர்? வெறும் கலர வச்சு என்ன செய்யப்போற? ஒரு ஆணுக்கு முக்கியமான தேவை என்ன தெரியுமா?”


“முதல்ல குணம், அப்புறம் குடும்பம், அப்புறம்தான் படிப்பு, அழகு எல்லாமே…குணம் இல்லைனா மத்தது எது இருந்தும், ஒன்னும் ப்ரோஜனம் இல்லை.”


“அரவிந்தன் மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க, நீ கொடுத்து வச்சிருக்கணும்.” என்றான்.


மாலினி இவ்வளவு எல்லாம் கஷ்ட்டபட்டிருக்கவே வேண்டாம். அவள் மட்டும் தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லையென்று அரவிந்தனிடம் ஜாடையாகக் காட்டி இருந்தால் கூட… அவன் உடனே விலகி இருப்பான். இத்தனைக்கும் அவன் அவளிடம் நேரடியாகவே அவளது விருப்பத்தைக் கேட்டறிந்து இருந்தான்.  


அவனிடம் தான் சொல்ல முடியவில்லை என்றால்…. அர்ச்சனாவிடமாவது சொல்லி இருக்கலாம். அவள் பார்த்துக் கொண்டிருப்பாள். ஆனால் விதி யாரை விட்டது?


அரவிந்தன் மாலினி திருமணம் நடந்தே விட்டது. திருமணதிற்கு வந்திருந்த தோழிகள், “ஹே… கருப்பா இருந்தாலும், உன் ஆளு என்ன கலையா இருக்காரு. செமையா இருக்காரு, நீ ரொம்ப லக்கி.” என்றதும்தான், மாலினி அரவிந்தனை ஆராய ஆரம்பித்தாள்.


அவன் யாரிடமோ சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தான். அவள் தோழிகள் சொன்னது போல, வெகு கலையாக, கம்பீரமாகத் தெரிந்தான். தோழிகள் தன் கணவனைப் பார்த்து ஜொள்ளு விட்டதும்தான், மாலினிக்கும் அரவிந்தன் மீது ஈர்ப்பு வந்தது. அதன் பிறகு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாள். அவனையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாள்.


அதுவும் முதலிரவில் அவனின் அணுகுமுறையில் மிகவும் கவரப் பட்டாள். அதன் பிறகு கணவனுடன் நன்றாக ஒன்றியம் போனாள். கணவனிடம் அவளது தேடல்கள் எல்லாம் உடளவில் தான் இருந்தது. அவன் மனதை புரிந்து கொள்ளவே அவள் முயற்சிக்க வில்லை.


அரவிந்தனுக்கு இது எல்லாம் தெரியவில்லை. அவன் மனம் ஒன்றித்தான் அவளோடு வாழ்ந்தான். அதனால் அவளும் அப்படி இருப்பாள் என்றே நினைத்தான்.


திருமணம் ஆன புதிதில் இருப்பது போல, எப்போதும் இருக்க முடியாது இல்லையா… அதோடு அரவிந்தனின் வேலையும் அப்படி, அவனால் மாலினியோடு அதிக நேரம் செலவழிக்கவும் முடியவில்லை.


இதனால் அவனுக்கும் மாலினிக்கும் இடையே சண்டை வர ஆரம்பித்தது.

“எவ்வளவு நேரம் வீட்டில் தனியாக இருப்பது.” எனச் சண்டை பிடித்தாள்.


“ஏன் வீட்ல இருக்க, வேலைக்குப் போ.” என்றான்.


“வேலைக்குப் போற அளவுக்கு நான் ஒன்னும் வக்கில்லாத குடும்பத்தில இருந்து வரலை. ஏன் உங்க சம்பளம் பத்தாதா, என்னை வேலைக்குப் போகச் சொல்றீங்க?” என அவள் நக்கலாகக் கேட்க,


“எல்லோரும் பணத்துக்காகத்தான் வேலைக்குப் போறாங்கன்னு உனக்கு யார் சொன்னது? இவ்வளவு தூரம் படிச்சுப் படிப்பை ஏன் வீணாக்கிற? வேலைக்குப் போறது உன் திறமையைக் காண்பிக்க ஒரு சந்தர்ப்பம். அதனால தான் சொன்னேன். உனக்கு விருப்பம் இருந்தா போ.. இல்லைனா போகாத.” என்றான் அரவிந்தன் கோபத்தை அடக்கிக் கொண்டு.


மாலினனி வேலைக்குப் போவது என்று முடிவு எடுத்தாள். ஆனால் அதற்குள் குழந்தை உண்டாகி விட… மசக்கை எனக் காரணம் சொல்லி, அம்மா வீட்டில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.


சரி கொஞ்சம் தெளிந்ததும் வருவாள் எனப் பார்த்தால், வரவே இல்லை. இங்கே வந்தால் வேலை செய்ய வேண்டும் என அங்கேயே இருந்து கொண்டாள்.


அரவிந்தனும் அழைத்துப் பார்த்து விட்டு விட்டான். முகிலன் அவளை எதாவது சொன்னால், “இது ஒன்னும் உன் வீடு மட்டும் இல்லை, அப்பா வீடு, இதுல எனக்கும் பங்கு இருக்கு.” என்பாள். அதோடு முகிலன் பாதி நாட்கள் இங்கிருந்தால்.. பாதி நாட்கள் எதாவது வெளிநாட்டில் இருப்பான். அது வேறு மாலினிக்கு வசதியாகிவிட்டது. நன்றாக அம்மா வீட்டில் டேரா போட.


அரவிந்தனையும் அங்கேயே வந்துவிடச் சொல்லி, அர்ச்சனாவும் முகிலனும் அழைத்தார்கள் தான். ஆனால் இவனுக்கு அங்கே சென்று தங்க விருப்பம் இல்லை. அதனால் வார விடுமுறை அன்று மட்டும் சென்று மனைவியோடு தங்கி விட்டு வருவான்.


உண்டாகி இருக்கும் போதே வரவில்லை. குழந்தை பிறந்த பிறகு வந்து விடுவாளா என்ன? குழந்தைக்குப் பத்து மாசம் ஆகும் வரை வரவே இல்லை.

அதற்குப் பிறகும் குழந்தயை பார்த்துக் கொள்ள அவள் அம்மாவும் இங்கே வந்து இருந்தார். அப்போது சில நாட்கள் பிரச்சனை இல்லாமல் சென்றது.


அர்ச்சனா உண்டாகி இருக்க, அவளையும் வீட்டையும் கவனித்துக்கொள்ள, மாலினியின் அம்மா அங்கே சென்று விட, திரும்பப் போர் அடிக்கிறது என நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.


பாவனாவுக்கு இரண்டு வயது ஆனதும், அவளை ப்ளே ஸ்கூல்லில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். ஏற்கனவே வீட்டை கவனிக்க மாட்டாள், அதனால் அவள் வேலைக்குச் செல்வதில் அரவிந்தனுக்கு விருப்பம் இல்லை. அவன் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவள் கேட்கவில்லை.


“ஒழுங்கா எதாவது கோர்ஸ் முடி, அப்புறம் நல்ல வேலைக்குப் போகலாம்.” என்ற முகிலனின் பேச்சையும் அவள் கேட்கவில்லை.


பிபிஓ கம்பெனியில் வேலைப் பார்த்தாள். அது பகல் நேரம் மட்டும் அல்ல, இரவு நேரமும் பார்க்கும் வேலை. பாவனா பள்ளி சென்று வந்து, பாட்டி வீட்டில் இருக்க… மாலினி எந்தக் கவலையுமின்றி வேலைக்குச் சென்று வந்தாள்.


அர்ச்சனாவுக்கு ரொம்ப உறுத்தலாக இருந்தது. அரவிந்தன் எதையும் வெளியே சொல்லவில்லை. ஆனால் அவன் படும்பாட்டை அவள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.


அப்படியே சில மாதங்கள் சென்றது. திடிரென்று மாலினி மிகவும் நன்றாக அவனிடம் நடந்து கொள்ள ஆரம்பித்தாள்.  அரவிந்தனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. மனைவி மாறிவிட்டாள் என்றே நினைத்தான். ஆனால் அவள் வெளியே தான் செய்யும் தவறால் எழும் குற்ற உணர்வை மறைக்கவே, அவ்வாறு நடந்து கொள்கிறாள் எனத் தெரியவில்லை.


அரவிந்தனுக்குத் கடைசி வரை தெரியவே இல்லை. ஒரு நாள் முகிலன் தான் கண்டுபிடித்தான். மாலினி அவள் கேப் டிரைவரோடு சிரித்துப் பேசியபடி காரில் செல்வதைப் பார்த்தான்.  


ஒரு டிரைவர்கிட்ட போய் ஏன் இந்த அளவுக்குப் பேசுறா எனச் சந்தேகம் எழுந்தது. அன்று முதல் அவள் நடவடிக்கைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.


நிறைய நேரம் செல்லில் பேசினாள். இல்லையென்றால் தகவல் அனுப்பினாள். அதை எல்லோர் முன்பும் செய்தால் பரவாயில்லை. ஆனால் அதை ஒலித்து மறைத்துச் செய்ததுதான் சந்தேகமாக இருந்தது.

 

அவன் அம்மாவிடம், அவள் எப்போது வருகிறாள் போகிறாள் என விசாரித்தான். அவள் அலுவலகம் முடிவு பெரும் நேரத்திற்கும், அவள் வீட்டிற்கு வரும் நேரத்திற்கும் இடையே நிறைய இடைவெளி இருக்க… அவ்வளவு நேரம் ஆகாதே… அவள் நடந்தே வந்தாலும், அவ்வளவு நேரம் ஆகாது என  நினைத்தவனுக்கு, எதோ உறுத்த ஆரம்பித்தது.


அன்று அரவிந்தன் ஊரில் இல்லை. அதனால் மாலினி இங்கு இருந்து இரவு வேலைக்குச் சென்றாள். வேலை விடும் நேரம் முகிலன் தனது இருசக்கர வாகனத்தில், அவள் அலுவலக வாயிலில்தான் நின்று கொண்டு இருந்தான்.

விடியற்காலையில் வீடு திரும்ப, அவள் அலுவலகக் காரில் ஏறியதும், அந்தக் காரை பின் தொடர்ந்தான்.


காரில் இருந்த மற்றவர்களை இறக்கி விட்ட பின்பும், கார் சென்று கொண்டே இருந்தது. சொல்லப்போனால் மாலினி இறங்க வேண்டிய இடம் முதலிலேயே வரும். ஆனால் அவள் இறங்கவில்லை.


கடைசியில் கார் குப்பம் போல ஒரு இடத்தில் சென்று நின்றது. அந்த விடியற்காலையில் யாரும் வெளியே இல்லை. மாலினி அந்த டிரைவரோடு இறங்கி ஒரு சின்ன வீட்டிற்குள் சென்றாள். நடையில் தயக்கமோ… பார்வையில் பயமோ இல்லை.


பார்த்துக் கொண்டிருந்த முகிலன் நொறுங்கியே போனான். அப்படி ஒரு ஆத்திரம், இப்போதே போய் மாலினியை துண்டு துண்டாக வெட்டி போட வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவளிருக்கும் அந்தக் கேவலமான நிலையில், அங்கே போக முடியும் என்றும் தோன்றவில்லை. சத்தியமாக அவளை அந்த நிலையில் பார்த்தால்…. தான் அவளைக் கொன்றே போட்டு விடுவோம் என நினைத்தான்.


அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டு, தெரு ஓரத்தில் உட்கார்ந்து விட்டான். அவனுக்கு நடப்பதை எல்லாம் பார்க்கும் போதே புரிந்தது, இது இன்று நேற்று ஆரம்பித்த பழக்கம் இல்லை என்று.


அப்போது அவனுக்குத் தன்னை விட, இது அரவிந்தனுக்குத் தெரிந்தால்… அவன் என்ன ஆவான் என நினைக்கும் போதே நெஞ்சு பதைபதைத்துப் போனது. தான் அரவிந்தன் போல ஒரு நல்லவனுக்குப் பெரிய தீங்கு செய்து விட்டதாகவே நினைத்தான்.


ஒரு மணி நேரம் சென்று, இருள் விலகுவதற்குள் மாலினி அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தாள். அவள் வருவதைப் பார்த்ததும், முகிலன் தன் வண்டியில் ஏறி அவளுக்கு முன்பு வீட்டிற்கு வந்துவிட்டான்.


வீட்டு வாசலில் காரில் இருந்து இறங்கிய மாலினி, டிரைவரிடம் சிரித்துப் பேசி வழியனுப்பி விட்டு வீட்டிற்குள் நுழைந்தவள், ஹாலில் உட்கார்ந்து இருந்த முகிலனை எதிர்பார்க்கவில்லை.


கண்சிவக்க அமர்ந்திருந்த அண்ணனை பார்த்ததும் நடுங்கியே போனாள். ஆனாலும் சமாளித்துக் கொண்டு, “நீ இந்த நேரத்தில தூங்காம என்ன பண்ற?” என அவள் முடிக்கக் கூட இல்லை. முகிலன் விட்ட அறையில், தள்ளி சென்று தரையில் விழுந்தாள்.


அவளை எழுந்து கொள்ள விடாமல், முகிலன் அடி நொறுக்கி எடுத்து விட்டான், சத்தம் கேட்டு வந்த அவன் அம்மாவும், அர்ச்சனாவும் என்ன தடுத்தும், அவனை நிறுத்தவே முடியவில்லை.


இதற்கு மேல் அவளை அடிக்கத் தனக்குத் தெம்பு இல்லை என்றதும்தான் விட்டான்.


ஹாலில் ஓரமாக உட்கார்ந்து மாலினி அழுது கொண்டிருக்க, அவன் அம்மாவும் அர்ச்சனாவும் அத்தனை முறை கேட்டும், அவன் காரணம் மட்டும் சொல்லவில்லை.


அர்ச்சனா உறங்கி எழுந்த பாவனாவை அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வந்தாள்.

அரவிந்தன் ஊரில் இல்லை. அவன் பெற்றோரை பார்க்க சென்று இருந்தவன், காலையில் ரயில் நிலையத்தில் இருந்து நேராக இங்குதான் வந்தான். ரயில் வர தாமதமாகியதால்… அவனும் வீட்டுக்கு வந்து சேர நேரமாகி விட்டது.


வீட்டுக்கு வந்தவன் மனைவியைப் பார்த்ததும் பதறிவிட்டான். அவள் முகம் எல்லாம் வீங்கி, உதடு கிழிந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. முகிலன் அங்குதான் சேரில் அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.


“என்ன ஆச்சு?” என்றான் பதறிப் போய்… கீழே எங்கேயும் விழுந்து விட்டாளோ என்றுதான் முதலில் நினைத்தான்.


மாலினி வாயே திறக்கவில்லை… “என்ன அர்ச்சனா நீயாவது சொல்லு?” என்றான் அர்ச்சனாவிடம்.


“எதுக்குன்னு தெரியலை அரவிந்த்… அவங்க அண்ணன் தான் அடிச்சார்.” கண்கள் கலங்க அர்ச்சனா சொல்ல,


“நீ மனுஷனா? இல்ல மிருகமா? இப்படி அடிச்சிருக்க.” என முகிலனைப் பார்த்துக் கேட்டவன், அர்ச்சனாவிடம் இருந்து முதல் உதவி பெட்டி வாங்கி, மாலினியின் காயத்திற்கு மருந்து போட சென்றான்.


“தொடாத அவளை…” என முகிலன் போட்ட சத்தத்தில்… அரவிந்தனின் கை அப்படியே அந்தரத்தில் நின்றது. அவன் திரும்பி முகிலனைப் பார்க்க,


“உன் கை கூட அவ மேல படக் கூடாது. அவளுக்கு அந்தத் தகுதி இல்லை. இனி அவ உனக்கு வேணாம். நீ போ….” என்றான்.


“ஏன் இப்படி பண்ற? என்ன காரணமா இருந்தாலும், நீ அவளை அடிச்சது தப்பு.” என்றான் அரவிந்த்.


“ஐயோ ! நான் உனக்கு எப்படிச் சொல்வேன்.” என்ற முகிலன் தலையில் அடித்துக் கொண்டு அழ…. எதோ பெரிய விஷயம் என எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது.


மாலினியின் அம்மா, “நீ என்ன டி பண்ண? நீதான் எதோ பண்ணி இருக்க. இல்லைனா, அவன் இப்படி எல்லாம் பண்றவன் இல்லை. தினமும் வேலைக்குப் போயிட்டு லேட்டாதான் வர… வந்தாலும், எந்நேரமும் கையில போன் வச்சிட்டு சுத்திட்டு இருக்க. உன் நடவடிக்கையே சரி இல்லை. வேலைக்குப் போகாதன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற.” என மகளைப் பிடித்து உலுக்க…


“விடியற்காலை நாலு மணிக்குக் கார் டிரைவரோட வீட்டுக்குள்ள போனவ, அஞ்சு மணிக்கு திரும்ப வெளிய வர்றா… உள்ள என்ன பண்ணான்னு நீங்களே கேளுங்க மா…” என்றான் முகிலன் ஆத்திரமாக. அதைக் கேட்டதும், நிற்க கூடத் தெம்பு இல்லாதவன் போல.. அரவிந்த் அங்கிருந்த இருக்கையில் அப்படியே உட்கார்ந்து விட்டான். அர்ச்சனா அதிர்ந்து போய் நின்றாள்.


“ஐயோ ! பாவி படுபாவி, அந்த நேரத்தில் அவன் வீட்ல என்ன டி வேலை உனக்கு.” என மாலினியை அவள் அம்மா அடிக்க, மாலினி மறுத்து எதுவும் பேசவே இல்லை.


அரவிந்தன் மனதளவில் நொறுங்கியே போனான். அர்ச்சனாவிற்கு அவனைப் பார்க்க பார்க்க தாளவே இல்லை. ஐயோ ! இவனுக்கு நல்லது செய்வதாக நினைத்து, எப்படிப்பட்ட நிலையில் தான் அவனை நிறுத்தி விட்டோம் எனத் துடித்தே போனாள்.


அப்போதும் அரவிந்தன் ஆத்திரப்படவில்லை. தான் எங்கே தவறினோம், நாம் அவளை நன்றாக வைத்துக் கொள்ளவில்லையா? அதனால் தான் வேறு ஒருவரிடம் அவளுக்கு ஈர்ப்பு வந்ததா? என யோசித்துக் கொண்டு இருந்தான் அந்த நல்லவன்.

 

Advertisement