Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 4



மனதில் அரவிந்தனை நினைக்கத் தொடங்கி விட்டாலும், மேலே எப்படி அவனை அணுகுவது, அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்றெல்லாம் திலோத்தமாவுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கு உதவுவது போல அர்ச்சனா வந்தாள்.


அர்ச்சனாவுக்குத் திலோவின் படிப்பு, வயது மற்றும் குடும்பத்தை வைத்து பார்த்தால், அவள் அரவிந்தனுக்குச் சரி வருவாள் என்றே தோன்றியது. அவளோடு பேசி அவளது விருப்பத்தையும் தெரிந்து கொள்வோம் என்றே வந்திருந்தாள்.


மாலை திலோத்தமா வீட்டில் இருக்கும் நேரமாக, புவன் மற்றும் பாவனாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். எதேச்சையாகச் செல்வது போல… அவளது வீட்டிற்கும் சென்றாள்.


கதவைத் திறந்த வைதேகிக்கு அர்ச்சனாவை தெரியாது இல்லையா? அவர் தெரியாத பார்வை பார்க்க… “திலோத்தமா இருக்காங்களா?” அர்ச்சனா கேட்கும் போதே… வைதேகியும் பாவனாவை கவனித்து விட்டார். அதனால் அவரால் அர்ச்சனா யார் என்றும் ஊகிக்க முடிந்தது.


“உள்ள வாங்க…” என்றவர், அவர்களை உட்கார சொல்லிவிட்டு, மகளை அழைக்கச் சென்றாள்.


திலோத்தமா, தனது அறையில் ஒரு பக்கமாகப் போடபட்டிருந்த மேஜை நாற்காலியில் உட்கார்ந்து, மறுநாள் கல்லூரிக்குத் தேவையான குறிப்புகள் எடுத்து கொண்டிருந்தாள்.


“திலோ, உன்னைப் பார்க்க பாவனாவோட அத்தை வந்திருக்காங்க.” என்றார்.


ஒருநிமிடம் புரியாமல் முகதத்தைச் சுருக்கியவள், யார் என்று புரிந்த நொடி, மிகவும் பரபரப்பானாள்.


“அம்மா, அவங்களுக்குச் சாப்பிட எதாவது கொடுங்க.” என்றவள், அணிந்திருந்த நைட்டியை கலைந்து விட்டு, வேகமாக ஒரு சுடிதார் எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.


“வாங்க அர்ச்சனா…” என்ற திலோத்தமாவிடம், “சாரி, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.” என்றாள் அர்ச்சனா.


“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீங்க வந்தது சந்தோஷம் தான்.” என்றவள், பார்வையைப் பாவனா மற்றும் புவனிடம் திருப்பினாள்.


“ஹாய் பாவனா, உன்னோட ப்ரண்டை எனக்கு அறிமுகம் செய்ய மாட்டியா?” திலோ கேட்டதும், அவளைப் பார்த்து புன்னகைத்த பாவனா, புவனை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். புவன் பாவனாவை விடச் சின்னவன் தான்.


வைதேகி பிஸ்கட் மற்றும் பழங்களை நறுக்கி கொண்டு வந்து வைத்தார்.


“டீயா, காபியா?” என அவர் அர்ச்சனாவிடம் கேட்க, “இல்லைமா எதுவும் வேண்டாம். வரும் போதுதான் குடிச்சிட்டு வந்தேன். பசங்களும் பால் குடிச்சிட்டாங்க.” என்றவள், பழங்களை எடுத்து சாப்பிட, பிள்ளைகள் பிஸ்கட் சாப்பிட்டனர்.


வைதேகியும் அர்ச்சனாவும் தான் பேசிக் கொண்டு இருந்தனர். பொதுவான பேச்சுவார்த்தை தான். அர்ச்சனா என்ன செய்கிறாள்? அவர்கள் குடும்பத்தில் யார்யார் இருக்கிறார்கள் எனச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.


சிறிது நேரம் சென்றுதான் திலோ வாய் திறந்தாள். “அரவிந்தன் சார், இன்னைக்கு இருக்க மாட்டாங்களே… நீங்க வந்திருக்கீங்க, லீவ் போட்டிருக்கங்களா?” என்றாள்.


“இல்லை அரவிந்தனுக்கு நான் வந்ததே தெரியாது. இந்தப் பசங்களை இங்க இருக்கப் பார்கல விளையாட வைப்போம்ன்னு வந்தேன்.”


“சாயங்காலம் நீங்க கிளினிக் போக மாட்டீங்களா?”


“இல்லை… நான் காலையில எட்டு மணிக்கு போயிட்டு அஞ்சு மணிக்கு வந்திடுவேன். பசங்களைப் பார்த்துக்கணும் இல்ல. மாமியாரால தனியா ரொம்ப நேரம் பார்த்துக்க முடியாது.”


பார்க் என்றதும், பிள்ளைகள் இருவரும் அதைப் பிடித்துக் கொள்ள, அவர்களோடு கிளம்பிய அர்ச்சனா, “உங்களுக்கு வேலை இருக்கா திலோ, நீங்களும் எங்களோட பார்க் வர்றீங்களா?” எனக் கேட்டாள்.


“ஒரு வேலையும் இல்லை. சும்மா எதாவது புக் எடுத்து வச்சிட்டு, அதுலயே கவுந்து கிடப்பா… கொஞ்சம் காலாற நடந்திட்டு வாடின்னா கேட்க மாட்டா. நீங்களாவது கூடிட்டு போங்க.” என்றார் வைதேகி. அவர் சொன்னதைக் கேட்டு அர்ச்சனா சிரிக்க, திலோ அவள் அம்மாவை பொய்யாக முறைத்தபடி கிளம்பினாள்.


பிள்ளைகளை அங்கிருந்த பார்க்கில் விளையாட விட்டு, அர்ச்சனாவும் திலோத்தமாவும் பேசிக் கொண்டு இருந்தனர்.


“நீங்களும் அரவிந்தன் சாரும் எப்ப இருந்து ப்ரண்ட்ஸ்?”


அவளே அரவிந்தனைப் பற்றிப் பேச வேண்டும் என்றுதான் நினைத்து இருந்தாள். திலோத்தமாவே கேட்டதும், மகிழ்ச்சியாகத் தங்கள் நடப்பை பற்றி, அர்ச்சனா சொல்ல ஆரம்பித்தாள்.


“நானும் அரவிந்தனும் ஒரே ஊர்தான். ஆனா காலேஜ் வந்துதான் ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ் ஆனோம்.”


“கொஞ்சம் அமைதியானவன் தான். ஆனா நாம அவன்கிட்ட நல்லா பேசினா, அவனும் நல்லா பேசுவான்.”


“ரொம்பப் படிப்பாளி, விட்டா படிச்சிட்டே இருந்திடுவானோன்னு பயந்துதான், என்னோட நாத்தனாரை நானே அவனுக்குப் பேசி முடிச்சேன்.”


“அப்பவும் அவன் சாமான்யமா கல்யாணத்துக்கு ஒத்துக்கலை. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்ன்னு தான் சொன்னான். நாங்க எல்லாம் போர்ஸ் பண்ணி தான் ஒத்துக்க வச்சோம்.”


திலோத்தமாவுக்கு ஏனோ அவன் முதல் மனைவியைப் பற்றிப் பேசுவதில் விருப்பம் இல்லை. முதல் மனைவியோடு அவனது வாழ்க்கை முடிந்து விட்டது. இனி கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதால்… என்ன ஆகப் போகிறது? அதுவும் அவனின் கடந்த காலம் தனக்குத் தேவை இல்லை என நினைத்தாள். அதனால் பேச்சை மாற்றினாள்.


“புவன் அப்பாவும் டாக்டரா?”


“இல்லை, அவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர்.”


அதே போல் அர்ச்சனாவுக்கும் அரவிந்தனின் முதல் மனைவியைப் பற்றிச் சொல்ல விருப்பம் இல்லைதான். அப்படித் திலோத்தமாவுக்குச் சொல்வதாக இருந்தாலும், அரவிந்தன் தான் சொல்ல வேண்டும் என நினைத்து, அவளும் வேறு பேச்சுக்கு தாவினாள்.


முதல் நாள் என்பதால்… இருவருக்குமே நிறையத் தயக்கம். அன்று பொதுவாக மட்டும் பேசினார்கள். திரும்ப இரண்டு நாட்கள் கழித்து அர்ச்சனா வந்திருந்தாள். அதே பார்க் அதே இடத்தில் நின்று இருவரும் பேசினர்.


“நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத திலோத்தமா, நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?” அர்ச்சனா தயங்கித் தயங்கி ஒருவழியாகக் கேட்டே விட்டாள்.


திலோத்தமா இத்தனை நாள் ஏன் தள்ளப் போட்டாள் எனக் காரணத்தைச் சொன்னவள், “அம்மா ரொம்பப் பீல் பண்றாங்க. இனியாவது பண்ணிக்கலாமான்னு யோசிக்கிறேன்.” என்றாள்.


“மாப்பிள்ளை பார்த்தாச்சா?”


“இல்லை இனிமே தான். அரவிந்தன் சாருக்கு கூடப் பொண்ணு பார்க்கிறதா சொன்னாங்களே, அவருக்குப் பார்த்தாச்சா?”


இவள் ஏன் சம்பந்தம் இல்லாமல் அரவிந்தனை நடுவில் இழுக்கிறாள் என அர்ச்சனாவுக்குத் தோன்ற,


“அரவிந்தனுக்கு மட்டும் முன்னாடி கல்யாணம் ஆகலைனா… நான் உன்னைதான் அவனுக்குப் பார்க்கலாம்ன்னு சொல்லி இருப்பேன்.”


திலோவிடம் என்ன பிரதிபலிப்பு எனத் தெரிந்து கொள்ளத்தான் அர்ச்சனா அப்படிச் சொன்னது. ஆனால் உடனே திலோத்தமா முகம் மலர்ந்தது.


அவள் முகத்தில் கோபமோ… வெறுப்போ இல்லை. மாறாகக் கொஞ்சம் ஆர்வமும் வெட்கமுமே தெரிந்தது.


நல்ல சந்தர்ப்பம் விட்டு விடாதே என மனம் வேறு துள்ளி குதிக்க,

“அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதை பத்தி நான் பெரிசா எடுத்துக்கலைனா?” என்றாள் திலோத்தமா கேள்வியாக.


அவள் சொன்னதைக் கேட்ட அர்ச்சனாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. “நிஜமாதான் சொல்றியா? அப்புறம் பேச்சு மாற மாட்டியே.” என்றாள்.


“நான் ஒன்னும் மாற மாட்டேன். ஆனா அரவிந்தன் சார் ஒத்துப்பாங்களா?”


“இதுல என்ன சந்தேகம் உனக்கு. கண்டிப்பா ஒத்துக்க மாட்டான். உன்னை மட்டும் இல்லை, அவன் எதிரில் உலக அழகியே கொண்டு வந்து நிறுத்தினாலும், வேண்டாம்ன்னுதான் சொல்வான்.”


“ஆனா நாம அதைக் கேட்கப் போறோமா என்ன? அதனால கவலையை விடு.” என அர்ச்சனா கண் சிமிட்ட, திலோத்தமாவுக்கும் சிரிப்பு வந்தது.


“அரவிந்தன் அம்மா அடுத்த வாரம் இங்க வர்றாங்க. நான் அப்ப அவங்ககிட்ட பேசி சம்மதம் வாங்குறேன். ஆமா உங்க அம்மா நீ அரவிந்தனை கல்யாணம் பண்ண ஒத்துப்பாங்களா?”


“தெரியலையே… ஆனா எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னா, ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்.”


“சரி முதல்ல அரவிந்தனை கரெக்ட் பண்ணிட்டு, அப்புறம் உங்க அம்மாகிட்ட பேசலாம்.” என்ற அர்ச்சனா, திலோவின் கையைப் பிடித்துக் கொண்டவள்,


“நிஜமா திலோ, எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அரவிந்தன் மாதிரி நல்ல மனுஷனைப் பார்க்கிறது எல்லாம் அபூர்வம். நான் நல்லது நினைச்சுதான் அவனை என் நாத்தனாருக்குக் கல்யாணம் பண்ணேன். ஆனா அது வேற விதமா முடிஞ்சிடுச்சு.”


“நீ பாவனாவை பத்தி எந்தக் கவலையும் படாத. அவ எங்க பொறுப்பு. நான் சும்மா அரவிந்தனை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கத்தான், பாவனா பேரை இழுப்பேன். மத்தபடி எப்பவும் அவளை நாங்க பார்த்துப்போம். அதனால நீ அவளைப் பத்தி கவலைப்படாதே.” என்றாள்.


“அர்ச்சனா, நீங்களும் ஒன்னு புரிஞ்சிக்கோங்க. அரவிந்தன் பாவனா ரெண்டு போரையும், என்னால தனியா பிரிச்சு பார்க்க முடியாது.”


“அரவிந்தனைப் பத்தி தெரியும் போதே, எனக்குப் பாவனா பத்தியும் தெரியும். எப்பவும் அரவிந்தனை பத்தி மட்டும் யோசிச்சது இல்லை. பாவனாவும் சேர்த்து தான் யோசிப்பேன். அதனால இனிமே அப்படிச் சொல்லாதீங்க அர்ச்சனா.”


“நான் அப்பாவையும் பெண்ணையும் சேர்க்கத்தான் வரேன், பிரிக்க இல்லை.” என்றாள் திலோத்தமா அழுத்தமாக.


“சாரி உன்னைக் காயப்படுத்த சொல்லலை… எந்தக் காரணத்தினாலும், நீயும் அரவிந்தனும் சேராம போயிடக் கூடாதுன்னு பதட்டத்தில அப்படிப் பேசிட்டேன்.”


“விடுங்க அர்ச்சனா, நீங்க எனக்காகத்தான் சொல்றீங்க. எனக்கு அது புரியுது.” திலோத்தமா புன்னகைக்க, பதிலுக்கு அர்ச்சனா முகமும் மலர்ந்தது.


மறுவாரம் காமாட்சி மட்டும் சென்னை வந்திருந்தார். காமாட்சியும் வைதேகியும் மீண்டும் பார்க்கில் சந்தித்துப் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். பாவனாவுக்கு முழுப் பரிட்சைகள் நடந்து கொண்டிருக்க, திலோத்தமா தான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தாள்.


பல நேரம் இவள் வீட்டில் தான். ஆனால் சில நேரம் அவர்கள் வீட்டிலும். மாலை வேளையில் அர்ச்சனாவும் மகனை அழைத்துக் கொண்டு இங்கு வந்துவிடுவாள்.


அதுவம் அரவிந்தன் விடுமுறை நாள் அன்று கண்டிப்பாக அங்கேதான் இருப்பார்கள்.


“அன்னைக்கு ஒருதடவை பார்த்ததுக்கே இப்படியா?” அரவிந்தன் அர்ச்சனாவிடம் சந்தேகமாகக் கேட்க, அவளும் திலோவும் ஒருவரையொருவர் பார்த்துக் கேலியாகச் சிரித்துக் கொண்டனர்.


“ஹே என்ன நடக்குது இங்க? எனக்குத் தெரியாம ரெண்டு பேரும் எதுவும் பண்றீங்களா?”


“நாங்க ப்ரண்ட்ஸா இருந்தா உனக்கு என்ன டா வந்தது?” என்றாள் அர்ச்சனா பதிலுக்கு.  


அரவிந்தனுக்கு ஒரே குழப்பம். எதோ திட்டம் போடுறாங்க. அதுவும் இந்தத் திலோத்தமா நம்மைப் பார்க்கும் பார்வையே சரி இல்லை. இந்த அர்ச்சனாவும் சேர்ந்திட்டு எதோ செய்கிறாள் என்ற அளவில் புரிந்தே இருந்தான்.


ஒருநாள் திலோத்தமா வீட்டில் பாவனாவையும் புவனையும் விட்டுவிட்டு, அர்ச்சனா மட்டும் சென்று காமாட்சியிடம் தனியாகப் பேசினாள்.


“அம்மா, நம்ம அரவிந்தனுக்குத் திலோத்தமாவை பார்க்கலாமா?”


“அந்தப் பொண்ணா, அவங்க அம்மா ரெண்டான் தாரமா தர ஒத்துப்பாங்களா? அதுவும் நல்லா படிச்சு, வேலையில இருக்கப் பொண்ணு.”


“ரெண்டாவது கல்யாணம் தான். ஆனா அது தவிர அரவிந்தனும் ஒன்னும் சாதாரண ஆள் இல்லையே மா? அவங்க சரின்னும் சொல்லலாம்.”


“அவங்க அம்மா அந்தப் பெண்ணை அப்படிப் பார்த்துப்பாங்க. எப்படி நம்ம வீட்ல கொடுப்பாங்க? எனக்கு நம்பிக்கை இல்லை.”


“நாமா ஏன் கொடுக்க மாட்டாங்கன்னு நினைக்கணும். கேட்டுத்தான் பார்ப்போமே, அப்புறம் கொடுக்கிறதும் கொடுக்காததும் அவங்க இஷ்ட்டம்.”


“நீங்க முதல்ல அரவிந்தன் கிட்ட பேசுங்க. அப்புறம் நான் திலோத்தமா வீட்ல பேசுறேன்.”


அன்று இரவு அரவிந்தன் தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான். பாவனா ஏற்கனவே உறங்கி இருந்தாள். அம்மா மகன் இருவர் மட்டுமே இருந்தனர்.


அவன் சாப்பிட்டு முடிக்கும்போது காமாட்சி மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.


“நம்ம அர்ச்சனா சொல்றா, திலோத்தமாவை உனக்குப் பொண்ணு கேட்கலாம்ன்னு.” என்றதும், அரவிந்தனுக்கு அதிர்ச்சி எல்லாம் இல்லை. அவன் எதிர்பார்த்தது தான்.


கை கழுவி வந்தவன், “நான் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாலும், வெறும் டிகிரி படிச்ச பெண்ணா, வீட்ல இருக்கப் பெண்ணாதான் மா பண்ணிப்பேன்.” என்றான்.


அவனுக்கு மறுக்க எதாவது காரணம் சொல்ல வேண்டும். அதனால்தான் அப்படிச் சொன்னான். ஆனால் காமாட்சி மகன் உண்மையாகவே அப்படி நினைக்கிறான் என நினைத்து விட்டார். வீட்டோட இருந்து அரவிந்தனையும் பாவனாவையும் பார்த்துகிட்டா போதுமே என அவரும் நினைத்தார்.


“ஆமாம் பா, நீ சொல்றது சரிதான். மாலினியும் வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு, பாவனாவை எங்க கவனிச்சா சொல்லு. குழந்தை அவங்க பாட்டி வீட்ல தான் முழுசும் வளர்ந்தா.”


“நீ சொல்ற மாதிரியே பொண்ணு பார்ப்போம்.” என்றார்.


அரவிந்தன் மாலினி என்ற பேரிலேயே வேறு நினைவுகளுக்குள் சென்று இருந்தான். அதன் பிறகு அவன் அம்மா சொன்னது எதுவுமே அவன் காதில் ஏறவில்லை.


மாலினி அரவிந்தனின் முதல் மனைவி. அரவிந்தனுக்கு வாழ்க்கையில் எந்த அளவுக்கு சொர்க்கத்தை காட்டி இருக்கிறாளோ, அதே அளவு நரகத்தையும் காட்டியவள்.


அவளால் அவனுக்கு அளவிட முடியாத சந்தோஷமும் கிடைத்து இருக்கிறது. அதே போல… அவளால் மனதளவில் நிறையத் துன்பமும் பட்டிருக்கிறான்.


ஒருவர் மரணத்தில் நிம்மதி கொள்ள முடியுமா? அரவிந்தன் கொண்டான். அதுவும் அவனுக்காக அல்ல… மாலினிக்காக.

 

Advertisement