Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 3

வைதேகியின் அருகில் வந்து படுத்த திலோத்தமா, உறங்கும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள். தான் திருமணம் செய்யாதது அவருக்கு நிறைய மன வருத்தம் என்று புரிந்தது.


தனக்குப் பிறகு மகள் எப்படி இருப்பாள் என்ற கவலை வைதேகிக்கு தான் இருந்தது. ஆனால் திலோத்தமா அந்த மாதிரி கற்பனை கூடச் செய்து பார்த்தது இல்லை. அம்மா இப்படியே எப்போதும் இருப்பார் என்பது போலத்தான் இருந்தாள்.


இன்று அவருக்கு உடம்பு முடியாமல் போனதும், கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டாள். அரவிந்தன் மட்டும் இல்லையென்றால் மிகவும் பயந்து போய் இருப்பாள்.


படிக்கும் காலத்தில் இருந்தே நிறைய வரன்கள் வந்தது. ஏன் இப்போது கூட வருகிறது. ஆனால் திலோத்தமாக்கு ஒரு பிடித்தம் என்பது எந்த வரனிடமும் தோன்றவில்லை.


நமக்கு ஏன் யாரையும் பிடிக்கவில்லை? நமக்குப் பிடித்த மாதிரி யாரையும் சந்தித்து இருக்கோமா என யோசித்த போது, மனக் கண்ணில் அரவிந்தன் முகம் தான் தெரிந்தது.


கல்யாணம் ஆகாதவர்களை எல்லாம் விட்டு, இப்படி ஏற்கனவே  கல்யாணம் ஆனவனைப் போய் நினைக்கிறாயே? என மனம் கேட்ட கேள்விக்கு,


அவர் பொண்டாட்டி இருக்கும் போது, அவரைப் பற்றி நினைச்சாதான் தப்பு. அவர் மனைவி தான் இல்லையே என அவளே மனசாட்சிக்குப் பதில் சொல்ல ஒரு காரணமும் கண்டுபிடித்தாள்.


திலோத்தமா தீவிரமாக அரவிந்தனைப் பற்றியே நினைக்க ஆரம்பித்தாள். அவனைப் பற்றி நினைத்துக் கொண்டு உறங்கியும் போனாள்.


மறுநாள் திலோத்தமா கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்தாள். வைதேகியை வேலை செய்யவிடாமல், அவளே பார்த்துக் கொண்டிருந்தாள்.


காலை மருத்துவமனை செல்லும் முன் அரவிந்தன் இவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான். கருப்பு நிற பேண்ட்டும், வெளிர் நீல நிற முழுக்கை சட்டையும் அணிந்து இருந்தான். ஷாம்பூ போட்டு அலசிய கேசம் வேறு பளபளத்தது. ஸ்மார்ட் லுக்கிங் என்பார்களே, அது போல இருந்தான்.


திலோத்தமா அவனை வரவேற்று உட்கார வைக்க, அவன் வைதேகியிடம் “எப்படி இருக்கீங்க மா? அப்புறம் வாந்தி வந்ததா?” என்றான்.


“இல்லை… நீங்க கொடுத்த மாத்திரை போட்டதும், நல்லா தூங்கிட்டேன்.” என்ற வைதேகி, திலோவிடம் அவனுக்குக் காபி கொடுக்கச் சொல்ல,


அவரிடம் மறுத்து விட்டு, “ரெண்டு நாள் லைட்டாவே சாப்பிடுங்க.” என்றவன், அவரின் ரத்த அழுத்தம் பார்த்தான். அவருக்கு ரத்த அழுத்தம் இல்லை.


“நீங்க சாப்பிட்டது தான் எதோ சேரலை. இனி கவனமா இருங்க.” என்றவன், அவரிடம் விடைபெற்று வெளியே செல்ல, அவனுடன் திலோத்தமாவும் சென்றாள்.


காலில் ஷூவை போட்டுக் கொண்டே, “இப்ப கொஞ்சம் அசதியா இருக்காங்க, அதனால ஒரு வாரம் கழிச்சு, இங்க பக்கத்தில இருக்கிற ஹாஸ்பிடல்ல, எதுக்கும் ஒரு முழுச் செக் அப் பண்ணிடுங்க. ரிசல்ட் வந்ததும் எடுத்திட்டு வாங்க, நான் பார்க்கிறேன்.” என அவன் சொல்லிவிட்டு செல்ல,


“ம்ம்.. சரி, உங்களுக்குப் பீஸ்…” எனத் திலோத்தமா இழுக்க,
அரவிந்தன் நின்று திரும்பி அவளை ஒரு பார்வைப் பார்க்க, “சாரி, நான் சொன்னது வாபஸ் வாங்கிக்கிறேன்.” என்றாள் உடனே.

அவன் அவளைப் பார்த்து புன்னகைக்க, அதில் தெரிந்த அவனின் வரிசையான பல் வரிசையும், வலது கன்னத்தில் விழுந்த குழியும், அவளின் மனதை கவர்வதாக இருந்தது.


அரவிந்தனை பிடித்தம் என்ற எண்ணத்தில் பார்க்க ஆரம்பித்ததும், அவனின் சின்னச் செயல்களையும் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தாள்.


இதமான மன நிலையில் வீட்டிற்குள் சென்றவள், வைதேகி சொல்லச் சொல்ல சமையல் செய்து முடித்தாள். இதுவரை சமையல் அறைக்கு அவள் செல்ல வேண்டியதே இருந்தது இல்லை. இன்று அம்மாவுக்கு முடியவில்லை என்றதும்தான் சமையல் அறை பக்கம் வந்திருக்கிறாள்.


இவளுக்குச் சமையல் சொல்லிக் கொடுத்து வைதேகிக்கு தலைவலி வந்ததுதான் மிச்சம். துவரம் பருப்புக்கு கடலைப் பருப்பைக் கொண்டு வந்து, இதுவா என்றவளுக்குக் கூட்டுக்கு போடும் பாசி பருப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை.


“இப்படி ஒரு பருப்பு இருக்கா மா?” என வேறு அவள் கேட்டு வைக்க… கொஞ்ச நாள் இவளையே சமைக்க வைக்க வேண்டும் என வைதேகி முடிவு எடுத்துக் கொண்டார்.


ஒரு வாரம் கழித்து அரவிந்தன் சொன்னது போல முழுச் செக் அப் செய்தனர். அதன் ரிப்போர்ட் அடுத்த நாள்தான் கிடைத்தது. ஆனால் காலைவேளை இவளுக்குக் கல்லூரிக்கு செல்ல வேண்டியது இருந்தது. அதிகாலை சென்று அவன் வீட்டு கதவை தட்ட ஒரு மாதிரி இருக்க… இன்னும் அவனிடம் ரிப்போர்ட்டை காட்டவில்லை.


மறுவாரம் வந்த பாவனாவை பார்த்ததும், எப்போதும் இருப்பதை விட மகிழ்ச்சியாக உணர்ந்தாள். பாவனாவிடம் எப்போதுமே அவளுக்குப் பிடித்தமும், அக்கறையும் உண்டு. ஆனால் இந்த முறை கூடுதலாக எதோ உணர்ந்தாள்.


அரவிந்தன் வீட்டில் இருக்கும் அன்று, அவனே பாவனாவை கீழே வந்து அழைத்துச் செல்வான். இன்றும் அது போல அவன் வந்திருக்க, எல்லோரும் ஒன்றாகத்தான் லிப்டில் சென்றனர்.


அவளிடம் அவள் அம்மாவைப் பற்றி விசாரித்தான். பிறகு பாவனா தன் பள்ளியில் நடந்ததைச் சொல்ல.. இருவரும் அதைக் கேட்டு புன்னகைத்தனர்.


வீட்டிற்கு வந்து குளித்து எப்போதும் போடும் நைட்டி அணியாமல் சுடிதார் அணிந்து வந்தவள், “அம்மா, அரவிந்தன் சார் இன்னைக்கு வீட்ல இருக்காங்க. நான் போய் உங்க ரிப்போர்ட் காட்டிட்டு வந்திடுறேன்.” எனக் கிளம்பினாள்.


“இந்தக் காபியாவது குடிச்சிட்டு போ.” என வைதேகி அவளிடம் காப்பியை நீட்ட, அதை வாங்கி வேகமாகக் குடித்து விட்டு சென்றாள்.


அவளுக்கு ரிப்போர்ட்டில் என்ன இருக்கிறது என்று தெரியும். இவ்வளவு படித்திருக்கிறாள் அது கூடப் புரியாதா என்ன? அவளுக்கு ஒரு சாக்கு அரவிந்தனோடு பேச…. நாம ஏன் இப்படி ஆகிவிட்டோம் எனத் தன்னையே கேட்டுக் கொண்டாலும், அவனைப் பார்க்கும் ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.


காலிங்பெல் சத்தத்தில் கதவை திறந்த அரவிந்தன் சத்தியமாக அவளை எதிர்ப்பார்க்கவில்லை. திலோத்தமா எதுவும் சொல்லாமல் ரிப்போர்ட்டை அவனிடம் நீட்ட …அதை வாங்கியபடி, அவளை உள்ளே அழைத்தான்.


பாவனாவுக்குத் திலோத்தமாவை பார்த்ததும் அவ்வளவு மகிழ்ச்சி, “ஹே ஆன்டி வந்திருக்காங்க.” என்றவள், திலோவை கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.


அவளைச் சோபாவில் உட்கார சொல்லிவிட்டு, அவள் எதிரில் அமர்ந்தவன், அவள் கொடுத்த ரிப்போர்ட்டை ஆராய்ந்தான்.


“வாங்க ஆன்டி, என்னோட ரூம் காட்றேன்.” என அவளை அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள் பாவனா.


பங்கர் பெட், உட்கார்ந்து படிக்க மேஜை, புத்தக அலமாரி, ஒரு பக்கம் நிறைய விளையாட்டுச் சாமான்கள் என அந்த அறை குழந்தைக்கு உரிய அறையாகவே இருந்தது.


அரவிந்தன் ரிப்போர்ட்டை முழுதாகப் படித்துப் பார்த்து விட்டு நிமிர்ந்தால்… மற்ற இருவரும் அங்கே இல்லை. மகளின் அறையில் இருந்து பேச்சுச் சத்தம் கேட்டது. பாவனா எல்லாவற்றையும் அவளுக்குக் காட்டிக் கொண்டு இருந்தாள்.


ஹால் கதவு திறந்துதான் இருந்தது. சோபாவில் உட்கார்ந்து எப்போது வெளியே வருவார்கள் எனப் பார்த்துக் கொண்டு இருந்தான்.


இன்று முகிலன் அர்ச்சனா வேறு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள், திலோத்தமா கிளம்பி விட்டால் நன்றாக இருக்கும், இல்லையென்றால் அர்ச்சனாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது.


அவன் யோசனையில் இருக்கும் போதே திலோத்தமாவும் பாவனாவும் வெளியே வந்தனர்.


“சரி நான் கிளம்புறேன்.” என எதற்கு வந்தோம் என்பதையே மறந்துவிட்டுத் திலோத்தமா கிளம்ப, அரவிந்தன் அவளை ஒருமாதிரி பார்த்தான்.


பிறகே அவன் பார்வையை உணர்ந்து, “அம்மாவோட ரிப்போர்ட்.” என்றாள்.


“உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், எல்லாமே நார்மலா இருக்கு. ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றான். ஏற்கனவே ரிப்போர்ட்ல் என்ன இருக்கிறது என்பது தெரிந்ததால் தான், அவள் இவ்வளவு  சாதரணமாக இருக்கிறாள் என கண்டுபிடிக்க முடியாதவனா என்ன?


“தேங்க்ஸ்…” என்றவள் வாயிலை நோக்கி நடக்க, “மாமா…” எனக் கத்திக் கொண்டு முதலில் புவன் ஓடி வர… பின்னே முகிலனும் அர்ச்சனாவும் வந்தனர்.


திலோத்தமா அவர்களைப் பார்த்து திகைத்து நிற்க, அவர்களும் இவளைப் பார்த்து திகைத்துப் போனார்கள். அரவிந்தனுக்கு ஐயோ என்று இருந்தது. வேறு வழியில்லாமல் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தான்.


முகிலன் அர்ச்சனாவிடம், “இவங்க திலோத்தமா, கீழ வீட்ல இருக்காங்க.” என்றவன், “பாவனாவோட மாமாவும் அத்தையும்.” என்றான் திலோத்தமாவிடம்.


திலோத்தமாவை அவ்வளவு சீக்கிரம் அர்ச்சனா அங்கிருந்து போக விடுவாளா என்ன? அவள் திலோவுடன் பேசியபடி டைனிங் ஹால் பக்கம் அழைத்துச் செல்ல, ஹாலில் முகிலனும் அரவந்தனும் உட்கார்ந்து பேசினர். குட்டீஸ் இரண்டும் அறைக்குள் சென்று விளையாடியது.


திலோத்தமா யாரு? அவள் என்ன செய்கிறாள்? என எல்லா விவரமும் அர்ச்சனா கேட்டுத் தெரிந்து கொண்டாள். தன்னைப் பற்றியும் அவளிடம் சொன்னாள்.


அர்ச்சனாவோடு பேசினாலும் திலோத்தமாவின் பார்வை அடிக்கடி அரவிந்தனை தொட்டுச் சென்றது. கிரீம் கலர் ட்ராக் பேண்டும், மை ஊதா நிறத்தில் டிஷர்ட்டும் அணிந்து இருந்தான். அவன் சிரிக்கும் போது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வைக் கொடுத்தது. கருப்பாக இருந்தாலும் அவ்வளவு களையாகவும் இருந்தான்.


“நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் திலோ. நீயும் சாப்பிடு.” என்றதும், திலோத்தமா எழுந்து கொண்டாள்.


“ஐயோ ! நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது. எங்க அம்மா சமைச்சு வச்சிருப்பாங்க.” என்றவள், ரிப்போர்ட்டை மறந்து விட்டு செல்ல, அரவிந்தன் அதை எடுத்துக் கொடுத்தான்.


திலோத்தமா சென்றதும் கதவை சாற்றிவிட்டு வந்தவனிடம் “வீட்டுக்கு வந்தவங்களைச் சாப்பிடுன்னு கூடச் சொல்ல மாட்டியா டா?” அர்ச்சனா கேட்க,

“இந்தப் போட்டு வாங்கிற வேலை எல்லாம் வேண்டாம். நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை.” என்றவன், சாப்பிட அமர… “என்ன டா இவன்? பிடி கொடுக்க மாட்டேங்கிறான்.” என நினைத்தபடி அர்ச்சனா பரிமாற ஆரம்பித்தாள்.


அரவிந்தன் நல்ல பசியில் இருந்திருப்பான் போல…. அவன் சாப்பிடுவதில் இருந்தே தெரிந்தது.


வெஜிடபிள் பிரியாணியும், காலிபிளவர் வறுவல், தயிர் பச்சடி என்று செய்து கொண்டு வந்திருந்தாள். இப்படி முடிந்த போது கொண்டு வருவது வழக்கம்தான். இதற்கு முன் அரவிந்தன் இருந்த வீடு சற்றுத் தொலைவு அதிகம், இப்போது கொஞ்சம் பக்கத்தில் மாற்றிக் கொண்டு வந்திருந்தான்.


அரவிந்தன் காலை பத்து மணிக்கு ஹாஸ்பிடலில் இருந்தால் போதும். அதனால் காலையில் ஒருவர் வந்து உணவு சமைத்து விட்டு செல்வார். அவனுடைய விடுமுறை நாட்களில் வீட்டை சுத்தம் செய்து, இட்லி மாவும் அரைத்து தந்து விடுவார். அதனால் இரவில் அவனே இட்லி அல்லது தோசை செய்து கொள்வான்.


அரவிந்தன் சாப்பிடுவதையே அர்ச்சனா பார்த்துக் கொண்டு இருந்தாள். இவனும் எப்போது மற்றவர்களைப் போலச் சாதரணமாக வாழப் போகிறான் என்று நினைத்தாள்.


அவளைப் பார்த்த அரவிந்தன், “சாப்பிடும் போது கண்ணு வைக்காத.” என்றான். அவன் சொன்னதற்கு அர்ச்சனா சிரித்தாள்.


பார்பதற்கு ஆள் சாதரணமாகத் தெரிந்தாலும், அவன் நரம்பியல் நிபுணர். அரசாங்க மருத்துவமனையில் இருக்கும் முக்கிய மருத்துவர்களில் அவனும் ஒருவன்.


அவன் மட்டும் அரசாங்க மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தால்… அவனுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுக்கத் தனியார் மருத்துவமனைகள் தயாராகவே இருக்கின்றன.


பணம் இருக்கிறவங்களுக்குச் சேவை செய்ய நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் இல்லாதவர்களுக்குச் செய்யவே விரும்புறேன் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவன்.


அரவிந்தனும் அர்ச்சனாவும் பொது மருத்துவம் ஒன்றாகத்தான் பயின்றனர். அதன் பிறகு அவள் திருமணம் முடித்துத் தான், மகப்பேரு மருத்துவர் ஆனாள். இப்போது தனியார் மருத்துவமனையில் வேலையும் பார்க்கிறாள்.


பார்க் சென்றுவிட்டு வந்த வைதேகி, மகள் வீட்டில் இருப்பாள் என நினைத்தே வந்தார். ஆனால் அவளும் அப்போதுதான் உள்ளே நுழைந்தாள்.


“அவங்க வீட்டுக்கு விருந்தாளி வந்திட்டாங்க மா… இவ்வளவு நேரம் அவங்களோடதான் பேசிட்டு இருந்தேன்.” என்றவள், அவர்கள் யார் என விவரம் சொல்லியபடி சாப்பிட்டு முடித்தாள்.


வைதேகிக்கு தன் பெண்ணைப் பார்த்து ஆச்சர்யம் தான். அவள் இது போல எல்லாம் யாரு வீட்டுக்கும் செல்பவள் இல்லை. மகளை ஆராய்ச்சியாகப் பார்க்க ஆரம்பித்தார்.


எப்போதும் படுத்ததும் உறங்கிவிடும் திலோத்தமாவுக்கு இன்று உறக்கம் வரவில்லை.


இத்தனை வருடங்களில் தனக்கு வரும் மாப்பிள்ளை அப்படி  இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று எந்த எதிர்ப்பார்ப்பும் அவளிடம் இருந்தது இல்லை. ஆனால் இன்று, மாப்பிள்ளை அரவிந்தனாக இருந்தால்… திருமணம் செய்துகொள்ளத் தயாராகவே இருந்தாள்.


சில நேரம் சிலரை பிடிப்பதற்குக் காரணம் எல்லாம் சொல்லத் தெரியாது. ஏனோ அவர்களைப் பிடித்து விடும். திலோத்தமாவுக்கு அரவிந்தனை அப்படித்தான் பிடித்தது.


அவனைப் பார்க்கும் போது தெரியாதவரை பார்க்கும் உணர்வு இல்லை. ரொம்பவும் பழகியது போலவே உணர்ந்தாள். அதுதான் அன்று கூட அவனிடம் உதவி கேட்க தயங்கவே இல்லை. பணம் கொடுப்பதாகச் சொன்னது கூடச் சம்ப்ரதாயதிற்காக சொன்னது  தான்.


வாழ்க்கை திடிரென்று மிகவும் வண்ண மயமாகிவிட்டது போல் தோன்றியது. சந்தோஷத்தில் தூக்கம் வராமல் விழித்தே கிடந்தாள்.

“உன்னை எதிர்பார்த்ததுதான், என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ…”







Advertisement