Advertisement

சங்கீத ஸ்வரங்கள்

 



அத்தியாயம் 2



தினமும் பார்க் சென்ற புண்ணியத்தில், சீக்கிரமே திலோத்தமா அம்மாவுக்கும் அரவிந்தன் அம்மாவுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.


பாவனா தான் அவரை அழைத்து வருவாள். அவளுக்குப் பார்க்கில் நண்பர்களுடன் விளையாட வேண்டும். பாவனாவின் பாட்டிக்கு மின்தூக்கியில் தனியாக வரத் தெரியாது. அதனால் பாவனாவோடு வந்துவிட்டு செல்வார்.


முன்பெல்லாம் பள்ளி முடிந்து வரும்போது, பெண்கள் யார் வந்தாலும், அவர்களோடு பாவனா மின்தூக்கியில் செல்வாள். ஆனால் இப்போது எல்லாம் திலோத்தமாவுக்காகக் காத்திருந்து, அவள் வந்ததும் இருவரும் சேர்ந்து செல்வார்கள்.


அப்படிச் செல்லும் போது, இருவரும் பேசிக் கொள்வது வழக்கமாகியது. அதனால் பாவனா மூன்றாம் வகுப்புப் படிப்பதில் இருந்து, அவள் பாட்டி வீட்டில் இருக்கும் முகிலன் மாமா, அர்ச்சனா அத்தை மற்றும் அவர்களின் மகன் புவன் பற்றித் தெரிய வந்தது.


ஒரு நாள் திலோத்தமா தன் வெகு நாள் சந்தேகத்தைக் கேட்டாள்.


“ஆமாம் நீ ஏன் லிப்ட்ல தனியா வர மாட்டேங்கிற?”


“அது அப்பாதான் சொல்லி இருக்காங்க. தனியா வரக் கூடாதுன்னு.” என்றதும், பாதியில் பழுதாகி நின்றுவிட்டால் பயந்து விடுவாள் எனச் சொல்லி இருப்பான் என நினைத்தாள். ஆனால் பாவனா, “யாராது கேர்ள்ஸ் இருந்தா தான் கூட வரணும், பாய்ஸ் கூட எல்லாம் வரக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.” என்றாள் தெளிவாக.


அவன் ஏன் அப்படிச் சொல்லி இருப்பான் எனப் புரிந்தாலும், திலோத்தமாவுக்கு மனதிற்குள் அப்படி ஒரு கோபம் எழுந்தது.
நாங்க பொண்ணுங்க ஏன் பயந்திட்டே இருக்கணும்? விட்டா வீட்லயே உட்கார வச்சிடுவாங்க போலிருக்கு என நினைத்தாள்.


ஒரு நாள் வைதேகி பாவனாவின் பாட்டி காமாட்சியை வீட்டிற்கு அழைத்து இருந்தார். பாவனாவும் அவள் பாட்டியோடு வந்திருந்தாள். வைதேகி அவர்களுக்குச் சிற்றுண்டி கொடுத்து உபசரித்தார்.


“நான் இந்த வாரம் ஊருக்கு கிளம்புறேன். பாவனா அவ பாட்டி வீட்ல இருப்பா.. அரவிந்தனுக்கு லீவ் இருக்கும் போது, இங்கயும் வருவா.” என்றார்.


“நானும் என் பொண்ணும் மட்டும்தான் இந்த வீட்ல இருக்கோம். உங்க பையன் வர்ற வரை, உங்க பேத்தி எங்க வீட்ல கூட இருக்கலாம். நாங்க அவளை நல்லா பார்த்துப்போம்.” என்றார் வைதேகி.


காமாட்சி அதை அரவிந்தனிடம் சொன்னதற்கு, “அம்மா, அவங்க சொன்னாலும், நாம அப்படி விடக் கூடாது மா. நான் பாவனாவை பார்த்துகிறேன்.” என்றவன், பெற்றோரை ஊருக்கு வண்டி ஏற்றி விட்டு வந்தான்.


அடுத்த வாரம் அவனது விடுமுறை நாள், அன்று வந்த பாவனா திரும்பப் பாட்டி வீட்டுக்கு செல்ல விரும்பவே இல்லை.


“அப்பா, நான் உங்க கூட இருக்கேன் பா…” என்றாள்.


“ஏன் டா பாட்டி வீட்ல உன் கூட விளையாட புவன் இருக்கான் இல்ல, அப்புறம் என்ன?”


“ஆனா நீங்க வேணும் பா எனக்கு.” என்றாள் அழுத்தமாக.


அரவிந்தனுக்கும் அவளை விட்டு இருப்பது சிரமம் தான். காலை மருத்துவமனை சென்றால், எப்போது வீடு திரும்புவான் என அவனுக்கே தெரியாது. அதுவும் சில நாட்கள் இரவில் மருத்துவமனையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரும், அப்போது அவளைத் தனியாகவும் விட்டு செல்ல முடியாது.

 

அதோடு வெளி ஆட்களை நம்பி எப்படிக் குழந்தையை விட முடியும்.
இதே அவளின் பாட்டி வீடு என்றால்… நிறையப் பேர் இருக்கிறார்கள். அதுவும் முகிலன் தன் மருமகளை அப்படித் தாங்குவான். அர்ச்சனாவும் நன்றாகப் பார்த்துக் கொள்வாள். இவனும் பாவனாவை பற்றிக் கவலையில்லாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.


பாவனாவுக்காவது அவனை இன்னொரு திருமணம் செய்யச் சொல்லி, இரண்டு வீட்டிலும் அழுத்தம் கொடுக்கிறார்கள். சில நேரம் செய்து கொள்ளலாம் எனத் தோன்றும், அதே மற்ற நேரம், இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தன்னால் முடியாது என்றும் தோன்றும். இரு வேறு மனநிலையில் தத்தளித்துக் கொண்டு இருந்தான்.


பாவனாவை அவள் பாட்டி வீட்டில் விடச் சென்றவன், அவன் மாமியார் கொண்டு வந்த காபியை பருகிக் கொண்டு இருக்கும் போது, அர்ச்சனா வந்தாள்.


“எப்படி இருக்க அர்ச்சனா?” அரவிந்தன் கேட்க,


“எனக்கு என்ன? நல்லா இருக்கேன். அப்புறம் நீ எப்ப உன் பொண்ணை உன்னோட கூப்பிட்டுக்கப் போற” என்றாள் நேரடியாகவே.
உண்மையில் அரவிந்தனுக்குக் கோபம்தான் வர வேண்டும். ஆனால் அவனுக்குச் சிரிப்புதான் வந்தது. அவனுக்குத் தெரியாதா அவனுடைய தோழியைப் பற்றி.


“நீதான் இருக்க இல்ல, என் பெண்ணைப் பார்த்துக்க.” என்றான் அவனும் திமிராகவே.


“எவ்வளவு நாள் டா பார்த்துப்போம். நாங்க எவ்வளவு பார்த்தாலும், அவளுக்கு நீ பார்கிறது போல இருக்குமா?” எனக் கோபத்தில் ஆரம்பித்தவள்,


“எல்லாம் என்னோட தப்புதான் இல்லையா… என்னால தான் நீ தனியா நிக்கிற. சாரி டா..” என அழுகையில் முடித்தாள்.


“நீ முதல்ல அழுகிறதை நிறுத்து, இதுல உன் தப்பு எதுவும் இல்லை. என் தலையில என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும்.” என்றான் அரவிந்தன்  கோபமாக.


“இப்படியே இருக்காத அரவிந்த், புதுசா உன்னோட வாழ்கையைத் தொடங்கு. எனக்காகப் பண்ண மாட்டியா அரவிந்த்.” அர்ச்சனா கெஞ்சுவது போலக் கேட்க,


“இப்படித்தான் நீ முன்னாடியும் சொன்ன.” என்றான் உணர்ச்சிகள் அற்ற குரலில். அர்ச்சனா முகம் கருத்து போய் அமர்ந்து இருந்தாள்.
அதைப் பார்த்தாலும் அரவிந்தனுக்குத் தாங்கவில்லை. “எனக்குப் பிடிக்கட்டும், இந்தப் பொண்ணுதான்னு என் மனசு சொல்லட்டும் பண்ணிக்கிறேன்.” என்றான்.


“அப்ப பொண்ணு பார்க்க ஆரம்பிக்கவா?” அர்ச்சனா ஆர்வமாகக் கேட்க,
“வேண்டாம் நானே பார்த்த்கிறேன்.” என்றான்.


“என்ன டா யாரையாவது ஏற்கனவே பார்த்து வச்சிட்டியா?”


“இல்லை, இனிதான் பார்க்கணும். பார்கிறேன்.” என்றான்.


அவன் இவ்வளவு சொன்னதே பெரிது என்பதால், அர்ச்சனா மகிழ்ச்சியாக அவனுக்கு விடை கொடுத்தாள். அர்ச்சனாவும் மருத்துவர் தான். அவளும் அரவிந்தனும் கல்லூரியில் இருந்தே நண்பர்கள். இவளின் பிடிவாதத்தால் தான் அவன் இந்த வீட்டு மாப்பிள்ளை ஆகவும் ஆனான்.


அரவிந்தன் சொன்னதை, இரவில் வந்த தன் கணவனிடம் அர்ச்சனா சொல்லி மகிழ, “அவன் சொல்றதை எல்லாம் நீ நம்புறியா? அவன் தானா எல்லாம் பார்க்கவே மாட்டான். நாமதான் எதாவது பண்ணனும்.” என்றான் முகிலன்.


அடுத்த வாரத்தில் திலோத்தமாவின் பிறந்த நாள் வந்தது. சாதாரண நாட்களில் கூட, அதை இதைச் செய்யும் வைதேகி, அன்று எதுவும் செய்யவில்லை. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார்.


அம்மாவை பார்த்தபடி அமைதியாகக் கல்லூரி செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள் திலோத்தமா. வைதேகி தனது புலம்பலை ஆரம்பித்து விட்டார்.


“குழந்தைகளுக்குப் பிறந்தநாள்ன்னா அம்மாக்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஆனா எனக்குத் திக்குன்னு இருக்கு. முப்பது வயசை தொட்டாச்சு… இனி எவனாவது கிழவன்தான் வருவான்.”


“இன்னைக்கு நான் சொல்றது உனக்கு புரியாது. எனக்கு அப்புறம் யாரும் இல்லாம நீ தனியா இருக்கும்போது தான், அம்மா சொல்லும் போதே கேட்டு இருக்கலாம்ன்னு தோணும்.” என்றார்.


வைதேகி இதைச் சொல்லும் போது கூடத் திலோத்தமா பெரிதாக எதையும் நினைத்து பயந்து விட வில்லை. அம்மா தன்னை மிரட்ட அப்படிச் சொல்கிறார் என்றே நினைத்தாள்.


கல்லூரிக்கு கிளம்பியும் சென்றுவிட்டாள். செல்லும் வழியாவும் வைதேகி பேசியதே மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.


அவள் என்றுமே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என நினைத்தது இல்லை. முதலில் படிப்பைக் காரணம் காட்டி தள்ளி போட்டுக் கொண்டே வந்தாள். பிறகு தந்தையும் இறந்து விட… தானும் திருமணம் செய்து சென்றுவிட்டாள், அம்மாவின் நிலை என அதை நினைத்தே சில நாட்கள் ஓட்டினாள்.


பிறகு phd செய்ய ஆரம்பித்ததும், அதே நிறைய நேரங்களை இழுத்துக் கொள்ள, வேறு எந்தச் சிந்தனையும் இல்லை. கடைசியாக அம்மாவும் தானும் ஒருவருக்கொருவர் என இருப்பதே பிடித்துப் போய் விட… இப்படியே இருந்து விடலாம் என நினைத்தாள்.

மனம் கேட்காமல் மாலையில் வைதேகி இனிப்புகள் செய்து வைத்து இருந்தார். அதைப் பார்த்ததும் திலோத்தமாவுக்கு ஒரே மகிழ்ச்சி.


“வாங்க மா கோவிலுக்குப் போகலாம்.” என அழைத்துச் சென்றாள். இருவரும் பெசன்ட் நகர் அஷ்ட்டலக்ஷ்மி கோவிலுக்குச் சென்றனர். அன்று விடுமுறை தினம் என்பதால்… அரவிந்தனும் பாவனாவுடன் கோவிலுக்கு வந்திருந்தான்.


சாமி கும்பிட்டு விட்டு வந்து அமர்ந்த திலோத்தமா, பிறகுதான் அரவிந்தன் அங்கிருப்பதைக் கவனித்தாள். கைகட்டி நின்று சாமியவே பார்த்துக் கொண்டிருந்தான்.


வேஷ்ட்டி சட்டையில் சாதரணமாக இருந்தான். மெலிவான தோற்றம் தான். பாவம் இறந்து போன மனைவியை நினைத்து வருந்துகிறான் போல என நினைத்துக் கொண்டாள். இவர்களைப் பார்த்த பாவனா, இவர்களிடம் ஓடி வர… திலோத்தமா அவளைப் புன்னகையுடன் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.


சிறிது நேரம் சென்றுதான் அரவிந்தன் இவர்களிடம் வந்தான். பொதுவாக இருவரையும் பார்த்துப் புன்னகைத்தான்.


“என்னப்பா இன்னைக்கு லீவ்வா?” வைதேகி கேட்க,


“ஆமாம்.” என்றான்.


“இன்னைக்கு ஆன்டியோட பர்த்டேவாம்.” பாவனா சொல்ல, திலோத்தமாவை பார்த்து வாழ்த்துச் சொன்னான். பிறகு அவன் அவர்களிடம் விடைபெற்று பாவனாவோடு கடற்கரைக்குச் செல்ல, சற்று இடைவெளி விட்டு இவர்களும் கடற்கரைக்குச் சென்றனர்.


அங்கே அலைகளில் மகளை விளையாட விட்டவன், அணிந்திருந்த வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மகளுக்குக் காவலாக அருகிலேயே நின்றான்.


திலோத்தமா பார்க்க கூடாது என நினைத்தாலும், அவள் பார்வை அவர்கள் இருவரையும் தொட்டுத் தொட்டு மீண்டது. பிறகு இருவரும் கரைக்கு வந்தனர்.


அங்கே வந்த பஞ்சு மிட்டாயை காட்டி பாவனா தன் தந்தையிடம் கேட்க, இல்லை என மென்மையாகவே மறுத்தான். நன்றாக இருட்டியதும் எழுந்த திலோத்தமாவும், வைதேகியும் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வர, அரவிந்தன் மகளைத் தன் வண்டியின் முன்புறம் உட்கார வைத்துக் கொண்டு சென்றான்.


தாயும் மகளும் வீட்டில் இருந்தவற்றைச் சாப்பிட்டு படுத்தனர். ஆனால் படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் எழுந்த வைதேகி தட்டு தடுமாறி குளியல் அறைக்கு சென்று வாந்தி எடுத்தார்.


சத்தம் கேட்டு திலோத்தமாவும் உடனே எழுந்து விட்டாள். அப்போதுதான் படுத்து இருந்ததால், அவள் அசந்து உறங்கி இருக்கவில்லை.


“அம்மா, என்ன ஆச்சு மா?” எனத் திலோத்தமா பதறிப் போனாள். வைதேகி வாந்தி எடுத்து முடித்ததும், அவருக்குச் சுத்தம் செய்ய உதவியவள், அவரை அழைத்து வந்து படுக்க வைத்தாள்.


“தலை ரொம்பச் சுத்துது.” என்றார் அவர்.


இந்நேரம் எந்த மருத்துவமனைக்குச் செல்வது, அதுவும் அவர் இருக்கும் நிலையில் எப்படி அழைத்துச் செல்வது என ஒன்றும் புரியவில்லை.

திலோத்தமாவுக்கு மருத்துவரை பற்றி யோசித்ததும், அரவிந்தன் தான் நினைவுக்கு வந்தான்.


“அம்மா ஒரு நிமிஷம் வந்திடுறேன்.” என்றவள், கதவை திறந்துக்கொண்டு படி வழியாகப் பாவனா வீட்டிற்குச் சென்றாள்.


அவள் காலிங்பெல் பெல் அடித்துவிட்டு பதட்டத்துடன் காத்திருக்க, கதவை திறந்த அரவிந்தனுக்கு, அவள் இந்த நேரம் காரணம் இல்லாமல் வந்திருக்க மாட்டாள் எனத் தெரியும், அதோடு எதோ சரி இல்லை என்று, அவள் முகத்தில் இருந்த பதட்டமே காட்டிக் கொடுத்தது.


“என்ன?” என்றான்.


“அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை.” என்றாள்.


“நீங்க போங்க, நான் உடனே வரேன்.” என்றவன், மகள் இருந்த அறையின் கதவை திறந்து பார்த்துவிட்டு, அவள் உறங்குகிறாள் என உறுதி செய்து கொண்டு, அவள் பக்கத்தில் செல் பேசியை வைத்து விட்டு வந்தான்.


ஒரு வேளை நடுவில் எழுந்து கொண்டாலும், பயந்து போய் விடாமல் அவனை அழைப்பாள்.


தேவையான மருத்துவ உபகரணங்களை எடுத்துக் கொண்டு, கதவை நன்றாகப் பூட்டிக் கொண்டு சென்றான். அதற்குள் வைதேகியை கைத்தாங்கலாகப் பிடித்து வந்து சோபாவில் சாய்ந்தது படுக்க வைத்திருந்தாள் திலோத்தமா.


அவர் அருகில் சேரைப் போட்டு உட்கார்ந்தவன், “என்ன மா பண்ணுது?” என இதமாகக் கேட்டான். அதற்குப் பதில் திலோத்தமா சொல்ல வர, அவளைப் பார்த்து பேசாதே எனப் பார்வையால் அடக்கினான். அவளும் அமைதியாக நின்று விட…


“நீங்க சொல்லுங்க.” என்றான் வைதேகியிடம்.


“தெரியலை தம்பி நல்லாத்தான் இருந்தேன். திடிர்ன்னு ஒரே வாந்தி, தலை சுத்துது.” என்றார்.


“என்ன சாப்பிட்டீங்க?” என விசாரித்துக்  கொண்டே ரத்த அழுத்தம் பார்த்தான். கொஞ்சம் அதிகம்தான் இருந்தது. ஆனால் ரொம்பவும் இல்லை.


அவர் காலையில் இருந்து சாப்பிட்டதைச் சொல்ல… “உங்க வயசுக்கு எண்ணெய்ப் பலகாரங்கள் எல்லாம் தவிர்க்கணும். என்னைக்கோ ஒரு நாள் சாப்பிட்டா பரவாயில்லை. அடிக்கடி சாப்பிடக் கூடாது. அதுவும் நைட் சீக்கிரம் ஜீரணம் ஆகுற மாதிரி தான் சாப்பிடனும்.” என்றவன்,


“உங்களுக்கு வேற எதாவது டென்ஷன் இருக்கா.” என்றான்.


“எனக்கு என்ன தம்பி டென்ஷன். இதோ இவளைக் கல்யாணம் பண்ணி கொடுக்கணும். அது ஒண்ணுதான் டென்ஷன். முப்பது வயசு வரை பொண்ணு கல்யாணம் பண்ணாம இருந்தா டென்ஷன் ஆகாதா.” என்றார்.


இதற்கு அவன் என்ன சொல்ல முடியும், அமைதியாகக் கேட்டு மட்டும் இருந்தான். இதையெல்லாம் போய் அம்மா இவனிடம் சொல்கிறார்களே என்று இருந்தது, திலோத்தமாவுக்கு. அரவிந்தன்னின் முன்பு எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தாள்.


பிறகு அவர் இவனிடம் அவனுடைய பெற்றோர் பற்றி விசாரிக்க,

“அவங்க நல்லா இருக்காங்க மா… அடுத்த மாசம் வர்றாங்க.” என்றான்.


சிறிது நேரம் சென்று மீண்டும் அவருக்குப் பிரஷர் பார்த்தான். இப்போது அவருக்குப் பிரஷர் குறைந்து இருந்தது. அவருக்கு அஜீரணக் கோளாறுதான் என்பதை உறுதி செய்து கொண்டு, தன்னிடம் இருந்த மாத்திரையில் இரண்டு திலோத்தமாவிடம் கொடுத்து, “இப்போ ஒன்னு காலையில ஒன்னு கொடுங்க.” என்றான்.


திலோ அப்போதே அவருக்குக் கொடுக்க வேண்டிய மாத்திரையைக் கொடுக்க, காலையில வந்து பார்கிறேன் எனச் சொல்லிவிட்டு, அரவிந்தன் விடைபெற்றுச் சென்றான்.


கட்டிலில் சென்று வைதேகியை படுக்க வைத்து விட்டு வந்த திலோத்தமா, ஹாலில் உட்கார்ந்து அப்படியொரு அழுகை.


தன்னுடைய வீட்டின் அருகே வரை சென்ற பிறகுதான், வீட்டு சாவியை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்பதை உணர்ந்த அரவிந்தன், திரும்பத் திலோத்தமா வீட்டிற்குச் சென்றான்.


இந்த நேரத்தில் பெல் அடிக்க வேண்டாம் என நினைத்து, அவன் கதவை தட்ட, அவன் சென்ற பிறகு இன்னும் பூட்டபடாத கதவு, சட்டென்று திறந்துகொள்ள… ஹாலில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த திலோத்தமாவை பார்த்தான்.


அந்நேரம் அவளும் நிமிர்ந்து பார்க்க, இருவர் பார்வையும் ஒன்றையொன்று சந்தித்தது. அவனைப் பார்த்ததும் உடனே எழுந்து நின்றவள், கண்ணீரை துடைத்தாள்.


“சாரி, என்னோட வீட்டு சாவி.” என அவன் மேஜையைக் காண்பிக்க, திலோத்தமா சாவியை எடுத்து சென்று அவனிடம் கொடுத்தாள். அதன் பிறகே அவனுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை என்பது நினைவு வர…


“அரவிந்தன் சார், ரொம்பத் தேங்க்ஸ்.” என்றாள்.


“அவங்களுக்குப் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.” என்றான்.

“இல்லை, இன்னைக்குக் காலையிலதான் அம்மா சொன்னாங்க. நான் இல்லைனா தான் உனக்குத் தெரியும்ன்னு, அதுதான் ரொம்பப் பயமா இருக்கு.” என்றாள் மனதை மறையாது.


“உங்க திருப்திக்காக வேணா, நாளைக்கு ஒரு புல் செக் அப் பண்ணிடலாம்.” என்றவன், அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.


திலோத்தமாவுக்கு இப்போது கொஞ்சம் தைரியம் வந்தது. தான் தனியாக இல்லை. அரவிந்தன் கூட இருக்கிறான் என்பதே புதுத் தெம்பை தந்தது.

 

Advertisement