Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 10


அர்ச்சனா கிளம்பும் போது பாவனாவையும் அழைக்க… வர மறுத்தவள் அரவிந்தனை தூக்க சொல்ல… அவனும் தூக்கி வைத்துக் கொண்டான். காமாட்சிக்கு கூடப் பாவனா அவள் மாமா வீட்டிற்குச் சென்றால்… பரவாயில்லை எனத் தோன்றியது.


அர்ச்சனா எவ்வளவு அழைத்தும் பாவனா வர மறுக்க… “இருக்கட்டும் அர்ச்சனா, நாங்க வரும் போது வேணா அவளையும் உங்க வீட்டுக்கு கூடிட்டு வரோம்.” என்றாள் திலோத்தமா.


அவளுக்கு அர்ச்சனா ஏன் பாவனாவை அழைக்கிறாள் எனப் புரியவில்லை. அரவிந்தனுக்குப் புரிந்தது, ஆனால் மகள் விரும்பாமல் அவளை அனுப்ப அவனும் விரும்பவில்லை.


“நான் பார்த்துகிறேன் அர்ச்சனா நீ கிளம்பு.” என்றான்.


அர்ச்சனா மனமே இல்லாமல்தான் முகிலனுடன் கிளம்பினாள். அதன் பிறகு பாவனா அரவிந்தை விட்டு அந்தப் பக்கம் இந்தக் பக்கம் நகராமல் இருக்க… அவனும் மகள் எதோ உறக்க கலக்கத்தில் இருக்கிறாள் என நினைத்துக் கொண்டான்.


வித்யா குடும்பம் மறுநாள் காரில் கிளம்புவதாக இருந்தது. அதோடு அரவிந்தனின் பெற்றோர் இருந்தனர். மாவு நிறைய இருந்ததால்… இரவுக்கு இட்லி பாதியும். மீதத்துக்குத் தோசை ஊற்றிக் கொள்ளலாம் எனப் பேசினர்.


வித்யா தான் சாம்பார் வைத்தாள். அவள் வேகமாகச் செய்வதைப் பார்த்து, “நீங்க எவ்ளவு வேகமா சமைக்கிறீங்க?” எனத் திலோத்தமா ஆச்சர்யப்பட…


“இப்படிச் சொல்லி நீங்க சமைக்கிறதுல இருந்து தப்பிச்சிக்கலாம்ன்னு நினைக்காதீங்க. மாலினி அண்ணி சமைச்சு நான் பார்த்ததே இல்லை. எங்க அண்ணன் சரி இல்லை. நான் யாரை குத்தம் சொல்ல முடியும். முதல்லையே இழுத்து நாலு அறை விட்டிருந்தா, என்னைக்கோ திருந்தி இருப்பாங்க.” என்றாள்.


“வித்யா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அவங்க வாழ்க்கைப் பத்தி நாம ஏன் பேசணும்? அதுவும் செத்துப் போனவங்களைப் பத்தி தப்பா பேசக் கூடாதுன்னு சொல்வாங்க.”


“நீங்க என்னைச் சொல்லுங்க ஓகே… நாம அவங்களைப் பத்தி பேச வேண்டாமே.” என்றாள்.


வித்யாவுக்கு என்ன நினைப்பு என்றால்… அண்ணன் மாலினியை அவள் போக்குக்கு விட்டது போல.. எங்கே திலோத்தமாவையும் அவள் இஷ்ட்டதுக்கு விடுவிடுவானோ என ஒரு எண்ணம். அதனால் தான் மாலினியை சொல்வது போல… நீயும் அவள் மாதிரி இருந்து விடாதே என ஜாடையாகத் திலோத்தமாவுக்குப் புரியவைக்க முனைந்தாள்.


வித்யாவுக்கு ஒன்று புரியவில்லை. மனைவியை மிரட்டுவதும் அடிப்பதும் ஆண்மை அல்ல… அரவிந்தனுக்கு அது பிடிக்கவும் பிடிக்காது. அவனுக்குத் தெரிந்த வழியில் அன்பாலையே மனைவியைத் திருத்த பார்த்தான்.


அரவிந்தன் மட்டும் மாலினியை அரட்டியோ மிரட்டியோ இருந்தால்.. அதைச் சாக்காக வைத்துக் கொண்டு, அவள் என்றோ அவனை விட்டு சென்றிருப்பாள்.

இரவு உணவு முடிந்து வித்யாவின் கணவர் தன் பிள்ளைகளுடன் பாவனாவின் அறையில் படுத்துக்கொள்ள…ஹாலில் இருந்த திவனில் அரவிந்தனின் அப்பா படுத்து உறங்க…. ஹாலில் மெத்தை விரித்து, வித்யா அதில் படுத்துக் கொண்டாள்.


“நீயும் போய்ப் படுமா.” காமாட்சி சொல்ல… திலோ அரவிந்தன் அறைக்குள் சென்றாள். கட்டிலில் படுத்து மகளை உறங்க வைக்கத் தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தவன், அவளைப் பார்த்தும் வரவேற்பாகப் புன்னகைத்தபடி எழுந்து உட்கார்ந்தான்.


அரைத் தூக்கத்தில் இருந்த பாவனா திலோத்தமாவை பார்த்ததும், “ஆன்டி வேண்டாம், போகச் சொல்லுங்க.” என்றாள்.


கதவை மூடிக் கொண்டிருந்த திலோத்தமா காதில் கேட்டதை நம்ப முடியாமல் திரும்பி அரவிந்தனைப் பார்க்க.. அவனும் அதிர்ச்சியில் மகளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். பிறகு திலோவை பார்க்க… அவள் முகம் வெளுத்திருப்பதைப் பார்த்து,

“ஹே… அவ தூக்க கலக்கத்தில பேசுறா … நீ பெரிசா எடுத்துக்காத.” என்றான் சமாதானம் செய்யும் விதமாக.


அவன் சொன்னதில் கொஞ்சம் தெளிய, திலோத்தமா கட்டிலின் அருகே வந்தாள். அவள் வருவதைப் பார்த்த பாவனா மீண்டும் “ஆன்டி வேண்டாம்.” என்றவள், சத்தம் போட்டு அழ வேறு ஆரம்பிக்க… அரவிந்தன் திலோத்தமா இருவருமே ஒரு நொடி ஆடித்தான் போனார்கள்.


வீட்டில் வேறு யாரும் இல்லையென்றால்.. திலோத்தமா இந்நேரம் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று இருப்பாள். எப்போதுமே மற்றவர்களுக்குக் காட்சி பொருள் ஆவது அவளுக்குப் பிடிக்காது. அதனால் தன்னை அடக்கிக் கொண்டு நின்றாள்.


வெளியே பாவனாவின் சத்தம் எல்லோருக்கும் கேட்டது. வித்யாவே இப்படி நடக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை. அவளுக்குக் கை கால் எல்லாம் வெலவெலத்துப் போனது. இதற்குதான் சின்னப் பிள்ளைகளிடம் பார்த்து பேச வேண்டும். வசந்த் வேறு அறையில் இருந்து வெளியே வந்து நின்றான்.

“பாவானா…” என அரவிந்தன் குரலை உயர்த்த…


“நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. நீங்க பேசுறது வேற வெளிய இருக்கிறவங்களுக்கு எல்லாம் கேட்கணுமா.” என்றவள், அமைதி என உதட்டின் மீது கை வைத்து பாவனாவுக்கும் காட்ட…. பாவனாவும் அழுகையை நிறுத்தினாள்.


கட்டிலில் ஓரமாக உட்கார்ந்தவள், “உனக்கு எதாவது சொல்லனும்ன்னா அழாம சொல்லணும்.”


“நான் இங்க இருக்க வேண்டாமா?” என அவள் கேட்க, பாவனா ஆமாம் எனத் தலையசைத்தாள்.


“அந்த ரூம்ல உங்க வசந்த் மாமா இருக்கார். ஹால்ல தாத்தா பாட்டி இருக்காங்க. நான் இப்ப வெளிய போக முடியாது. நாளைக்குப் போயிடுறேன் ஒகே வா…” எனத் திலோத்தமா சொல்ல…. பாவனா அமைதியாக இருந்தாள்.


“எனக்கு உங்க அப்பா வேண்டாம். நீயே வச்சுக்கோ உங்க அப்பாவை. இப்ப அமைதியா தூங்கு.” என்றாள் பாவனாவின் மனதை அறிந்தே…ஆனால் அது அரவிந்தனுக்கு அப்படி ஒரு வலியை கொடுத்தது.


திலோத்தமா சொன்னதும் பாவனாவும் உறங்க ஆரம்பிக்க… “நீங்க அவளோட கட்டில்ல படுத்துக்கோங்க. நான் கீழ படுத்துகிறேன்.” என்றவள், அப்போதுதான் அரவிந்தன் முகத்தைக் கவனித்தாள்.

அவன் முகத்தில் அப்படி ஒரு வேதனை. ஆனால் இப்போது எது பேசவும் பயமாக இருந்தது. பாவனா எழுந்து மீண்டும் அழ ஆரம்பித்தால்…. அதுவும்  வீட்டில் மற்றவர்கள் வேறு இருக்க…அதனால் எதுவும் பேசாது ஒரு நைட்டியை எடுத்துக் கொண்டு குளியல் அறை சென்றாள்.


பாவனாவின் அழுகை நின்றதும் எல்லோரும் மீண்டும் சென்று படுத்து விட்டனர். “இந்தப் பையன் இனிமேயாவது நல்லா இருப்பன்னு பார்த்தா… இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணுதே.”என முனங்கியபடி காமாட்சி படுத்தார்.
வித்யாவுக்கு வேறு பயமாக இருந்தது. பாவனா இவள் பேரை உளறி வைத்து விடுவாளோ என்று.


திலோத்தமா குளியல் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தால்… விடிவிளக்கின் ஒளியில் அரவிந்தன் கட்டிலில் இல்லை என்பது தெரிய…. அவன் எங்கே எனப் பார்த்தால், தரையில் படுத்து இருந்தான்.


அவன் பக்கத்தில் தரையில் உட்கார்ந்தவள், “நீங்க மேலப் படுங்க.” என்றாள் மெதுவாக.


“நீ மேலப் படு. எனக்குத் தரையில படுத்துப் பழக்கம் தான்.” என்றான்.


“அவ முழிச்சு என்னைப் பக்கத்தில பார்த்தா திரும்ப அழப்போறா அரவிந்த்.”


“நைட் துங்கினா காலையில தான் எழுந்துப்பா.”


இந்த இரவில் நிறையப் பேச வேண்டும் என இருவருமே நினைத்து இருந்தனர். பாவனாவை வைத்துக் கொண்டு வேறு எதுவும் செய்திருக்க மாட்டார்கள் தான். ஆனால் கண்டிப்பாகப் பேசி இருப்பார்கள். இப்போது பேச கூடப் பயமாக இருந்தது.


திலோத்தமாவுக்கு அரவிந்தனோடு தரையில் படுக்க வேண்டும் என்றுதான் இருந்தது. ஆனால் பாவனா முழித்து இருவரையும் பார்த்தால்… தன்னைத் தனியாக விட்டு விட்டார்கள் என நினைப்பாள், என்று நினைத்தே திலோத்தமா கட்டிலில் படுத்துக் கொண்டாள்.


உன்னோட அப்பா எனக்கு வேண்டாம் என்றதே அரவிந்தனுக்கு மனதிற்குள் வலித்துக் கொண்டு இருந்தது. அவள் பாவனாவுக்காகச் சொன்னாள் எனப் புரியாமலும் இல்லை.


மனதிற்குள் எந்த எதிர்ப்பார்ப்பும் வைத்துக் கொள்ளாமல், இது தான் வாழ்க்கை என வாழ்ந்து கொண்டு இருந்தான். திலோத்தமா வந்ததும், அதுவும் அவள் காட்டிய அன்பு, அவனையும் ஈர்த்தது.  இப்போது போய் இப்படிப் பேசி வைத்தால்… அவனுக்கு கஷ்ட்டமாக இருந்தது.


ஒரு வழியாக எப்படியோ உறங்கி காலையில் எழுந்தனர். திலோத்தமா தான் முதலில் எழுந்தாள். அரவிந்தனை எழுப்பி மேலே படுக்கச் சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாள்.


குளித்து ஒரு சுடிதார் அணிந்து வந்தவள், வெளியே செல்ல.. அங்கே வித்யா ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். திலோத்தமா கோபம் வருத்தம் என எதையும் காண்பிக்காமல் சாதரணமாக நடந்து கொண்டாள்.


திலோ தயாராகிச் சென்றதும், தானும் தயாராகி வெளியே வந்த அரவிந்தனும், எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை. பள்ளிக்கு செல்ல நேரம் ஆனதால் அரவிந்தன் சென்று பாவனாவை எழுப்ப… அவளுக்கு லேசாகக் காய்ச்சல் அடித்தது. அதனால் அன்று பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என முடிவு செய்தவன், அதை வீட்டினரிடமும் சொல்ல…


“இந்தப் பொண்ணு மனசுல என்ன வச்சு இருக்கு தெரியலையே?” எனக் காமாட்சி கவலைப் பட…


“அவளுக்கு ஒருவேளை இந்தக் கல்யாணம் பிடிக்கலையோ.” என்றாள் வித்யா.


“இல்லையே வித்யா, அவதான் ரொம்பச் சந்தோஷப்பட்டா… அதுவும் அவளுக்குத் திலோவை பிடிக்கும். நேத்துல இருந்துதான் இப்படி இருக்கா.” எனக் காமாட்சி யோசிக்க…


ஐயோ ! நாம தான் தேவை இல்லாம குழப்பி விட்டோமா… தெரிஞ்சா நம்ம புருஷன் கொன்னுடுவாரே…” என நினைத்தவள், “சரி விடுங்க, அவகிட்ட எதுவும் கேட்காதீங்க. இன்னும் பயப்படப் போறா…” என்றாள்.


அரவிந்தன் மகளுக்கு உணவு கொடுத்து காய்ச்சலுக்கும் மருந்து கொடுத்து, அவளை மீண்டும் படுக்க வைத்து விட்டு வந்தான்.


காலை உணவு முடிந்து வித்யா வீட்டினர் கிளம்பி விட… அவர்களை வழியனுப்பி விட்டு வந்த திலோத்தமா, “அத்தை, அம்மா இன்னைக்கு மதியம், நம்மை எல்லாம் அங்க சாப்பிட வர சொன்னாங்க. நான் போய் அவங்க கூட வேலை பண்றேன்.” எனச் சென்றுவிட்டாள்.


தன்னைப் பார்த்தால்… இன்னும் எதாவது குழப்பிப் பாவனா காய்ச்சலை இழுத்துக் கொள்வாளோ என அவளுக்குப் பயம்.


வீட்டில் அவள் அம்மாவும் பெரியம்மாவும் மட்டும் தான் இருந்தனர். மதியம் ரகு வருவதாகச் சொல்லி சென்று இருந்தான்.

“என்ன கல்யாணப் பொண்ணு காலையிலேயே இங்க இருக்க.” அவள் பெரியம்மா கேட்க,


“சும்மா, உங்களுக்கு உதவி பண்ண வந்தேன்.” என்றாள்.


“மாப்பிள்ளையோட இருக்க வேண்டியது தான… அவர் மூன்னு நாள்தான் லீவ் போட்டிருக்கிறதா சொன்ன.” என வைதேகி கேட்க,


“பாவனாவுக்கு ஜுரம். அதுதான் அவரைப் பார்த்துக்கச் சொல்லிட்டு வந்திட்டேன்.” என்றாள்.


“ஜுரம்ன்னு சொல்ற, நீயில்லை கூட இருந்து பார்த்துக்கணும்.”


“அவ தூங்கிறா மா… அதுதான் விட்டுட்டு வந்தேன்.” என எதையோ சொல்லி திலோத்தமா சமாளித்தாள்.


இவள் ஒன்றும் வேலை பார்க்கவில்லை. தனது அறையில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டுதான் இருந்தாள். எப்படிப் பாவனாவை அணுகுவது என ஒன்றும் புரியவில்லை. யோசித்து யோசித்து அப்படியே உறங்கி விட்டாள்.


சமையல் தயார் ஆனதும், வைதேகி சென்று மகளை எழுப்பினார். “போய் அவங்களை எல்லாம் சாப்பிட அழைச்சிட்டு வா…”


அவள் அப்படியே எழுந்து செல்ல… “ஹே இப்படியே எழுந்து போவியா? முகம் கழுவி ஒரு நல்ல புடவையா கட்டிட்டு போ. இங்க உங்களுக்கு இன்னைக்கு விருந்து.” என்றவர், புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியா இருக்கா எனப் புலம்பிக் கொண்டே சென்றார்.


திலோத்தமா தயாராகி அங்கே சென்றபோது, அங்கேயும் எல்லோரும் உறங்கிக் கொண்டுதான் இருந்தனர். இவள் சென்று அழைத்ததும் காமாட்சி தயராகச் சென்றார்.


திலோத்தமா மெதுவாக அரவிந்தன் அறைக் கதவை திறந்து பார்க்க… அவன் கட்டிலில் படுத்து இருந்தான். ஆனால் உறங்கவில்லை. பக்கத்தில் பாவனா உறங்கிக் கொண்டு இருந்தாள்.


இவள் சென்று அவன் எதிரில் நிற்க, அவளைத் தலைமுதல் கால் வரை பார்வையால் வருடினான்.


“ஜுரம் குறைஞ்சிருக்கா அரவிந்த்?”


“ம்ம்… இப்ப பரவாயில்லை. ஆனா இன்னும் காய்ச்சல் விடலை.” என்றவன், கட்டிலில் தள்ளிப் படுத்து, “இங்க உட்காரு.” என்றான்.


தயங்கினாலும், பாவனா உறங்குகிறாள் என்ற தைரியத்தில், அவன் முகம் பார்ப்பது போலக் கட்டிலில் அமர்ந்தாள்.


“ரொம்பச் சாரி திலோ, பாவனா அப்படி நடந்துப்பான்னு நானே எதிர்ப்பார்க்கலை.”


“நீங்க ஏன் சாரி சொல்றீங்க? அவ சின்னப் பொண்ணு தானே எதோ தப்பா புரிஞ்சிகிட்டா போலிருக்கு.”


“சரி இப்ப நான் ஒன்னு கேட்கிறேன் அதுக்குப் பதில் சொல்லு?”


“இப்ப நீயேன் ஓடி ஒளிஞ்சிட்டு இருக்க? என் மேல நம்பிக்கை இல்லையா? உங்க அம்மா வீடு இங்க இல்லைனா என்ன பண்ணி இருப்ப?”

“நீ பாட்டுக்கு கிளம்பி உங்க வீட்டுக்கு போயிட்ட. இங்க அம்மா காலையில இருந்து புலம்பிட்டு இருக்காங்க. கல்யாணம் ஆன அடுத்த நாளே, இந்தப் பொண்ணு இப்படி அம்மா வீட்டுக்கு போய்டுச்சேன்னு.”


“எங்க அம்மா மாதிரி தான உங்க அம்மாவும் நினைப்பாங்க.”


அவன் சொல்வதைக் கேட்டு திலோத்தமா, “உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல அரவிந்த், பாவனா பீல் பண்றான்னு தான்.” என்றாள்.


“பாவனா பீல் பன்னா… அவளுக்குப் புரிய வைக்கப் பார்க்கணுமே தவிர… இப்படி விலகி போகணும்ன்னு நினைக்கக் கூடாது.”


“அவளுக்கு ஜுரம் வேற வந்திடுச்சா.. அதுதான் பயமா இருக்கு.”


“வேற காரணத்தினாலும் ஜுரம் வந்திருக்கலாம்.”


“சரி இனிமே உங்களைக் கேட்காம எதுவும் பண்ணலை.”


“அப்படிச் சொல்லலை… நீ என்னைக் கேட்டுத்தான் செய்யணும்ன்னு நான் நினைக்கவும் மாட்டேன். நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, எதுனாலும் சேர்ந்து பார்த்துக்கலாம். இப்படி விட்டு விலகி போகாத கஷ்ட்டமா இருக்கு.”


“சாரி, நிஜமா வேணும்ன்னு பண்ணலை. என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் பண்ணிட்டேன்.”


பாவனா உறக்கம் கலைந்து எழுவதைப் பார்த்தவள், “நான் வெளிய இருக்கேன். நீங்க கிளம்பி வாங்க.” என வெளியே சென்று விட்டாள்.

பாவனாவுக்கு முகம் கழுவி வேறு ஆடை மாற்றி அரவிந்தன் அழைத்து வர… ஹாலில் இருந்த திலோத்தமா அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.


“சாதரான ஜுரம் தான் சரி ஆகிடும்.” என்றவள், அரவிந்தனிடம், “நீங்க அவளைத் தூக்கிக்கோங்க ரொம்பச் சோர்வா இருக்கா.” என்றாள்.


அரவிந்தன் பாவனாவை தூக்கிக் கொள்ள, கதவை பூட்டிக் கொண்டு அனைவரும் திலோத்தமா வீட்டிற்குச் சென்றனர்.

அங்கே சம்பந்தி வீட்டினரை வரவேற்ற வைதேகி, “பாவனா குட்டிக்கு ஜுரமா…நான் உனக்கு ரசம் சாதம் செஞ்சிருக்கேன். சாப்பிட்டுத் தூங்கினா சரி ஆகிடும்.” என்றவர், உள்ளே சென்று குழைவான சாதத்தில் ராசம் போட்டு பிசைந்து கொண்டு வந்து திலோத்தமாவிடம் கொடுத்து ஊட்ட சொன்னார்.


திலோத்தமாவுக்கு ஒரே தயக்கம், பாவனா என்ன சொல்வாளோ என்று. “நான் ஊடட்டுமா இல்லை, உங்க அப்பா ஊடட்டுமா?” என அவள் பாவனாவிடம் கேட்க,


“ஏன் டி உன்னை ஊட்ட சொன்னா, நீ என்ன அவரை ஊட்ட சொல்ற? ஏன் உன்கிட்ட அவ நல்லாத்தானே இருப்பா.” என்றார்.


அதிலேயே எல்லோருக்கும் திலோத்தமா இங்கே வந்து ஒன்றும் சொல்லவில்லை எனப் புரிந்தது. திலோத்தமா பயந்து கொண்டே தான் ஊட்டினாள். ஆனால் பாவனா மறுக்காமல் சாப்பிட்டாள்.


சாப்பிட்டதும் அவளுக்கு மருந்து கொடுத்து, தனது அறையில் சென்று அவளைப் படுக்க வைத்தவள், கட்டிலில் அவள் அருகில் அமர்ந்து கொண்டு, அவளுக்குத் தட்டிக் கொடுத்தாள்.

“பாவனா, உனக்கு என்னை மம்மி சொல்ல பிடிக்கலைனா பரவாயில்லை. நீ சொல்ல வேண்டாம். நாம முன்னாடி மாதிரி ப்ரண்ட்ஸா மட்டும் இருக்கலாம் என்ன? ஆனால் எதுக்கும் பயப்படாத… உனக்கு என்ன தோணுதோ சொல்லு.”


“உனக்கு உடம்பு சரி ஆனதும், நாம சேர்ந்து வெளியப் போகலாம். நீ அன்னைக்கு ஒரு படத்துக்குப் போகணும் சொன்னியே, அந்தப் படம் பேர் என்ன?” எனத் திலோத்தமா தெரியாதது போல யோசிக்க…


எதோ ஒரு கார்ட்டூன் படத்தின் பேரை பாவனா சொல்ல… “ஹான் அந்தப் படம்தான். அதுக்குப் போகலாம்.” என்றாள். இப்போது பாவனாவிடம் கொஞ்சம் மாற்றம்.


அரவிந்தன் ரகுவோடு சாப்பிட, திலோத்தமா தட்டில் போட்டுக் கொண்டு வந்து பாவனா அருகில் உட்கார்ந்து தான் சாப்பிட்டாள். பாவனாவிடம் எதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு எப்படியாவது பாவனா பழையபடி ஆகி விட வேண்டும்.


அரவிந்தன் இவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்க வர… அவனை உள்ளே அழைத்தாள் திலோத்தமா. கட்டிலில் மறுபக்கம் வந்து உட்கார்ந்தவன், மகளைத் தொட்டுப் பார்த்தான்.


“அரவிந்த், பாவனாவுக்கு உடம்பு சரி ஆனதும், நாங்க படம் பார்க்க போறோம்.” திலோத்தம்மா சொல்ல…


“ஓ… சூப்பர், நான் அந்தச் சீன்ல இருக்கேனா இல்லையா?” அவன் புன்னகையுடன் கேட்க,

“நீங்க இல்லாம எப்படி? நீங்கதானே எங்களைக் கார்ல கூடிட்டு போகணும். அப்புறம் எங்களுக்குப் பாப்கார்ன், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கித் தரணும். இல்ல பாவனா.” திலோத்தமா கேட்க, பாவனா வேகமாகத் தலையசைத்தாள்.


பாவனாவை பழையபடி ஆக்கிவிட வேண்டும் என அவள் துடிப்பது அரவிந்தனுக்கு நன்றாகவே புரிந்தது. அவனும் பாவனாவுக்கு உடம்பு சரி ஆனதும், அவளோடு பேச வேண்டும் என்றுதான் இருக்கிறான்.


“எப்ப படத்துக்குப் போவோம்?” பாவனா கேட்க, “உனக்கு உடம்பு சரி ஆனதும் போவோம்.” என்றவள், பாவனாவை தொட்டுப் பார்த்து விட்டு, “நீங்க என்ன மருந்து கொடுத்தீங்க? ஜுரம் போகவே மாட்டேங்குது. வேற டாக்டர்கிட்ட போகலாமா?” என்றாளே பார்க்கலாம்.


“அது எப்படித் திலோ? கல்யாணம் ஆகி ஒரு நாள்ல இப்படி டிப்பிக்கல் அம்மாவாகிட்ட. இந்த அம்மாங்க மட்டும் எப்பவும் டாக்டரை நம்பவே மாட்டாங்க.” என்றான் சிரித்தபடி.


தாய்மையை உணர பெண்கள் குழந்தை பெற்றிருக்க வேண்டும் என்பது இல்லை. பெண்மை என்பதே தாய்மை தான். அவள் திருமணம் ஆனவளாக இருந்தாலும் சரி, ஆகாதவளாக இருந்தாலும் சரி. அது பெண்களுக்கு கடவுள் கொடுத்த வரம்.


இங்கே திலோத்தமாவும் அப்படித்தான் இருந்தாள். மகள் தன்னை ஏற்றுக்கொள்ளும் வரை, அவளுக்குத் தன் நினைவே வராது என அரவிந்தனுக்கும் புரிந்தது.


Advertisement