Advertisement

சங்கீத ஸ்வரங்கள்



அத்தியாயம் 1



பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடை பயணத்தில், தனது அடக்கு மாடி குடியிருப்பதை அடைந்த திலோத்தமா, அதுவரை தான் வெயிலுக்காகப் பிடித்து வந்து குடையை மடக்கினாள். முன் மாலை நேரம் என்பதால்… வெயிலும் தகிக்கத்தான் செய்தது.


கீழ் தளத்தை அடைந்தவள், மின் தூக்கியின் அருகே செல்ல.. அதுவரை தோளில் புத்தகப் பையோடு அங்கிருந்த சிமெண்ட் திண்டில் அமர்ந்திருந்த சிறுமியும் வந்து இவளோடு சேர்ந்து கொண்டாள்.


உள்ளே சென்றவள் நான்காம் தளத்தின் எண்ணை அழுத்த, அந்தக் குட்டிப் பெண் பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, அவள் எதுவும் எண்ணை அழுத்தவில்லை. அவளும் நம் தளம் தான் போல எனத் திலோ நினைத்துக் கொண்டாள். ஆனால் இவள் நான்காம் தளத்தில் இறங்கியபோது, அவளுடன் வெளியே வந்த அந்தச் சிறுமி, புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு, படிக்கட்டு வழியாக மேல் தளத்திற்குச் சென்றாள்.


அந்தக் குடியிருப்பில் மொத்தம் ஐந்து மாடிகள்தான். ஏன் மின்தூக்கியில் செல்லாமல் படி வழியாகச் செல்கிறாள் என நினைத்தவள், ஒரு வேளை தனியாகச் செல்வதற்குப் பயமாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டு, அவள் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள். அதோடு அந்தச் சிறுமியை பற்றி மறந்தும் போனாள்.


கதவை திறந்த வைதேகிக்கு அறுபது வயது இருக்கலாம். பாதி வெள்ளையும் கருப்புமாய் இருந்த கூந்தலை கொண்டையாக முடிந்து இருந்தார். மாநிறத்துக்கும் சற்று கூடுதலான நிறம், உயரத்திற்கு ஏற்ற எடையுன் கம்பீரமாக இருந்தவர், நெற்றியில் சின்னக் கருப்பு பொட்டு மட்டும் வைத்து இருந்தார்.


காதில் வைரத் தோடு, அதைத் தூக்கி பிடிக்க மாட்டல், கழுத்தில் முகப்பு வைத்த கனமான சங்கிலி, இரண்டு கைகளிலும் இரண்டிரண்டு தங்க வளையல்கள் எனப் பார்க்கும் போதே அவரின் செல்வ செழிப்புத் தெரிந்தது.


“வா திலோ…” என்றவர், வந்த மகளுக்கு வழியை விட, வீட்டிற்குள் நுழையும்போதே… நெய்யின் மனம் நாசியில் ஏறியது.


“இன்னைக்கு என்ன மா?” என்றாள் பயத்துடன்.


“இன்னைக்குக் கொஞ்சமா சக்கரை பொங்கல் பண்ணேன்.”


“டெய்லி எதாவது ஒன்னு பண்ணி வச்சு, ஏன் மா என்னோட வெயிட்டும் எத்துற நீ?” என்ற திலோத்தமாவுக்கு உண்மையில சற்று பூசிய உடல்வாகுதான். அதோடு உயரமும் அதிகம், அதனால் குண்டு என்றும் சொல்ல முடியாது. ஆனால் மாநிறத்தில் வெகு களையான முகம்.


“ஏன் டி கடையில வாங்காம, நான் வீட்லையே பண்றேன்னே அதுக்குப் பாராட்ட மாட்டியா?” என்ற வைதேகி சமையல் அறைக்குச் செல்ல, “நீ இருக்கப் பாரு.” என்ற திலோத்தமா சலிப்புடன் அவளது அறைக்குச் சென்றாள்.


ஒரு சிறிய குளியல் போட்டு, நைட்டி அணிந்து வந்தவள், வைதேகி கொடுத்த பொங்கலை வாங்கிச் சாப்பிட்டாள்.


“எப்படி டி இருக்கு?” தன்னை ஆவலாகப் பார்த்த வைதேகியிடம், “நீ செஞ்சு எது மா நல்லா இல்லாம இருந்து இருக்கு. அதெல்லாம் ரொம்ப நல்லாத்தான் இருக்கு.”


“உன்கிட்ட பாராட்டைக் கூட நான் கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு. இதே உங்க அப்பா இருந்திருந்தா… நான் கேட்கிறதுக்கு முன்னாடி. அவரே பத்து தடவை நல்லா இருக்குன்னு சொல்லிடுவார்.” என்றவர், ஹாலில் மாட்டி இருந்த தன் கணவர் படத்தை ஏக்கமாகப் பார்த்தார்.


“ஆமாம் நீ இப்படி எண்ணெய்யும், நெய்யுமா செஞ்சு போட்டுதான், மனுஷன் ஹார்ட் அட்டாக்ல சீக்கிரமே போயிட்டாரோ என்னவோ?”


“ஏன் டி சொல்லமாட்ட… இந்தப் டிபன் செய்யுற பழக்கமே உங்க அப்பாகிட்ட இருந்துதான் வந்தது. ஆபீஸ்ல இருந்து வரும் போதே, இன்னைக்கு என்ன டிபன்னு கேட்டுத்தான் வீட்டுக்குள்ளயே வருவார்.”


“ம்ம்… நீ நடத்து. இல்லைன்னு சொல் அவர் இருக்காரா என்ன?” விடாமல் திலோத்தமா வம்பு இழுக்க…


“இதெல்லாம் நல்லா பேசு, ஆனா நான் சொல்றது மட்டும் கேட்டுடாத..” என்றார் குத்தலாக.


வைதேகி எங்கே வருவார் எனத் திலோத்தமாவுக்குத் தெரியாதா என்ன?


“நாளைக்குக் கிளாஸ் எடுக்க ரெடி பண்ணனும்.” என்றவள், எழுந்து அறைக்குள் செல்ல, வைதேகி மகளின் முதுகை வெறித்தார். அவரால் செய்ய முடிந்த அனைத்தும் செய்து பார்த்து விட்டார். ஆனால் மகளை மட்டும் தன் வழிக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை.


ஒரு பெருமூச்சுடன் எழுந்தவர், “நான் கீழ பார்க் போயிட்டு வரேன்.” எனச் சத்தம் கொடுத்துவிட்டு, கதவை பூட்டிக்கொண்டு சென்றார்.


அவர் வயதை ஒத்த நிறையப் பேர் அந்தக் குடியிருப்பில் இருப்பதால்.. எல்லோரும் சேர்ந்து கொஞ்ச நேரம் நடந்துவிட்டு, பிறகு பார்க்கில் உட்கார்ந்து அரட்டை அடித்து விட்டு, இருட்டிய பின்புதான் வீடு திரும்புவார்கள்.


இரவுக்கு இட்லி தோசை என எதாவது செய்து சாப்பிட்டு விட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் படுத்து விடுவார்கள். காலையில் திலோத்தமா ஏழரைக்கு எல்லாம் கல்லூரிக்கு கிளம்பி விடுவாள். அவள் செல்வதற்குள் டிபன், சாப்பாடு இரண்டும் கட்ட வேண்டும்.


திலோத்தமா தனியார் பொறியியல் கல்லூரியில் துணை பேராசிரியராக வேலைப் பார்க்கிறாள். அவள் பயங்கிற படிப்பாளி, கணிதத்தில் PHD முடித்து இருக்கிறாள். சில நேரம் ரொம்ப அறிவாளியாக இருந்தாலும் பிரச்சனைதான். யோசித்துக் கொண்டே இருப்பார்கள். சட்டென்று முடிவு எடுக்க மாட்டார்கள். எல்லோரையும் சொல்லவில்லை, ஆனால் சிலர் அப்படித்தான்.


கல்லூரிக்கு செல்வதற்காகக் கிளம்பியவள், தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு மின்தூக்கியின் அருகே செல்ல, கூடவே வைதேகியும் வந்தார்.
ஐந்தாம் தளத்தில் இருந்து வந்த மின்தூக்கியின் கதவு திறக்க, உள்ளே நேற்று பார்த்த சிறுமியுடன், இன்னொருவனும் இருந்தான்.


“திலோ, காலையில டிபன் சாப்பிட மறந்திடாத….. மதியம் மோர் குடிச்சிடு சரியா?” எதோ சின்னக் குழந்தைக்குச் சொல்வது போல… வைதேகி மின்தூக்கியின் கதவு மூடும் வரை சொல்லிக் கொண்டே இருக்க… யாரும் இல்லை என்றால் பரவாயில்லை… இன்று உடன் ஆட்களை வேறு வைத்துக் கொண்டு, அவர் பண்ணும் ரகளை, திலோத்தமாவுக்குத் தர்மசங்கடமாகி விட்டது.


அவள் அந்தச் சிறுமியை பார்க்க, அவள் இவளைப் பார்த்துச் சிரிப்பது தெரிந்தது. மெல்ல அவள் விழி உயர்த்தி அந்த ஆடவனைப் பார்க்க, அவனுமே சிரிப்பை விழுங்கிக் கொண்டு இருக்கிறான் என்பது புரிய… அவளுக்கு வைதேகி மீது கோபமாக வந்தது.


தரை தளத்தை அடைந்ததும், அந்தச் சிறுமி முதல் ஆளாக வெளியே ஓட… பின்னே அவள் புத்தகப் பை மற்றும் உணவுக் கூடையுடன் அந்த ஆடவனும் சென்றான்.


“ஓ… அவன் அந்தப் பெண்ணின் அப்பா.” எனப் புரிந்து கொண்டவள், அந்தப் பொண்ணு அவங்க அம்மா மாதிரி போலிருக்கு என வேறு நினைத்தாள். பின்னே அந்தச் சிறுமி பால் நிறத்தில் இருக்க, இவன் காபி நிறத்தில் அல்லவா இருந்தான்.


நாம ஏன் தேவையில்லாதது எல்லாம் யோசிக்கிறோம் எனத் தன்னையே கேட்டுக் கொண்டவள், தேவை இல்லாத எண்ணங்களை ஒதுக்கி, பேருந்து நிலையம் நோக்கி விரைந்து நடக்க, வாயிலில் நின்ற பள்ளி பேருந்தில் அந்தச் சிறுமியை ஏற்றிவிட்டு, அந்த அவனும் எதிரே வந்து கொண்டிருந்தான். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலே கடந்து சென்றனர்.


அன்று மாலையும் அதே போல, அந்தச் சிறுமி மின் தூக்கியின் அருகே உட்கார்ந்து இருந்தாள். அன்று திலோத்தமாவுடன் இன்னும் சிலரும் இருக்க, எல்லோருமாகச் சேர்ந்து சென்றனர்.


மூன்றாவது தளத்திற்குள் மற்றவர்கள் சென்று விட, இவளும் அந்தச் சிறுமியும் மட்டுமே எஞ்சி இருந்தனர். இன்றும் அதே போல் அந்தச் சிறுமி இவளுடனே இறங்கி மேல் தளத்திற்கு நடந்து சென்றாள்.


திலோ அந்தச் சிறுமியிடம் எதுவும் கேட்கவில்லை. இதே மற்றவர்களாக இருந்தால்.. இந்நேரம் யாரு என்ன என்று கேட்டு இருப்பார்கள். ஆனால் திலோத்தமாவுக்கு மற்றவர் எப்படித் தன் விஷயத்தில் மூக்கை நுழைப்பது பிடிக்காதோ, அதே போல இவளும் மற்றவர் விஷயத்தில் ஆர்வம் காட்ட மாட்டாள்.


உடன் பணி புரியும் சக பேராசிரியர்கள் கூட… அவளை எதோ அதிசய பிறவியைப் போலத்தான் பார்ப்பார்கள்.


இன்று வைக்தேகி மசாலா சுண்டல் செய்து வைத்து இருந்தார். இது பரவாயில்லை என நினைத்தவள், ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டாள்.


“இன்னைக்குத் தேங்காய் சாதம் நல்லா இருந்துச்சா?” என வைதேகியே எடுத்துக் கொடுக்க,


“அம்மா, இனிமே எது சொல்றதுனாலும், வீட்டுக்குள்ள வச்சே சொல்லு, வெளியே வச்சு எதாவது சொன்ன அவ்வளவுதான். இன்னைக்கு என்னோட மானமே போச்சு. நான் என்ன சின்னக் குழந்தையா?” என்றாள் கோபமாக.


“காலையில லிப்ட் கிட்ட வச்சு பேசினது சொல்றியா. இதுல என்ன டி இருக்கு? உனக்கு எவ்வளவு வயசானாலும் எனக்கு நீ குழந்தைதான.” என்றார் சாதாரணமாக.


“அதுக்காக யார் இருக்காங்க இல்லைன்னு பார்க்க மாட்டியா? இது என்ன இவ்வளவு பெரிய பீப்பாவை, இந்த அம்மா பாப்பா மாதிரி ட்ரீட் பண்றாங்கன்னு நினைச்சு, கேலியா சிரிச்சாங்க தெரியுமா?”


சொல்லும் போதே திலோவின் முகம் சுருங்க, அதைப் பார்த்து சிரித்த வைதேகி, “ஹே… நீ ஒன்னும் பீப்பா மாதிரி எல்லாம் இல்லை.” என்றவர் மேலும், “அவங்க புதுசா வந்திருக்காங்க போலிருக்கு. நானும் இன்னைக்குதான் பார்த்தேன்.” என்றார்.


சிறிது நேரம் சென்று வைதேகி பார்க்குக்குக் கிளம்பி சென்றார். திரும்ப வரும்போது, அவர்கள் ஜாகத்தையே தன் அம்மா கொண்டு வருவார் எனத் திலோத்தமாவுக்குத் தெரியும்.


பிறகு அவரும் அவருடைய தோழிகளுக்கும் இதுதான் வேலையே. அந்தக் குடியிருப்பில் யார் புதிதாக வந்திருப்பது? எந்தப் பையன் எந்தப் பொண்ணைச் சைட் அடிக்கிறான், இல்லையென்றால் எந்தப் பொண்ணு எந்தப் பையனை லவ் பண்றா? எந்த மருமகள் மாமியாரை மதிக்காமல் இருக்கிறாள்? என எல்லா விவரமும் இவர்களுக்கு அத்துப்பிடி.


அதே போல் இரவு உணவு சாப்பிடும் போது, “பாவம் அந்தப் பொண்ணுக்கு அம்மா இல்லையாமே…” என்றார்.


“யாரை மா சொல்ற?”


“அதுதான் காலையில லிப்ட்ல பார்த்தோமே, அந்தப் பொண்ணு பேர் கூடப் பாவனா.”


“அவங்க அம்மா இறந்து போய் மூன்னு வருஷம் ஆச்சாம். அவங்க பாட்டியை இன்னைக்குப் பார்க்குல பார்த்தேன். அப்ப நான்தான் கேட்டேன், அப்புறம் அவங்களே சொன்னாங்க.”


“அவங்களுக்கு ஊர்ல வீடு, வாசல், தோட்டம், தொரவுன்னு இருக்காம். அதனால அவங்களும் அவங்க வீட்டுக்காரரும் ஊர்ல தான் இருப்பாங்களாம். பாவனா அவங்க அம்மாவோட அம்மா வீட்லதான் வளர்ரா போலிருக்கு. லீவ்ல அவங்க அப்பாகிட்ட இருப்பாளாம். இப்ப இவங்க வந்திருக்கிறதுனால இங்க இவங்களோட இருக்காளாம்.”


“அவங்க பாட்டி, பாவம் பாவனா தான் இங்கயும் அங்கேயுமா கிடந்தது அல்லாடுறான்னு வருத்தப்பட்டார். எனக்குக் கேட்கவே கஷ்ட்டமா இருந்துச்சு.”


எப்போதும் மற்றவர் விஷத்தில் ஆர்வம் காட்டாத திலோத்தமாவே, “ஏன் அந்தக் குழந்தையை அவங்க அப்பாவே கூட வச்சுக்க வேண்டியது தானே.” என்றாள்.


“நானும் கேட்டேனே, அவங்க பையன் அரவிந்தன், சென்னை கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல டாக்டராம். நேரம் காலம் பார்க்க முடியாத வேலை. இதுல குழந்தையை எப்படிக் கூட வச்சுக்க முடியும். அதோட வேலை ஆளையும் நம்பி விட முடியாது இல்லையா. அதுதான் நாங்களே மாத்தி, மாத்தி பார்த்துக்கிறோம்ன்னு சொன்னாங்க.”


“நான் கூடச் சொன்னேன், ஏன் உங்க பையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண வேண்டியது தானேன்னு.”


“பொண்ணு பார்த்திட்டு இருக்காங்களாம். இனிமே வர்றவ எப்படி இருப்பாளோ? அந்தக் குழந்தையை நல்லா பார்த்துப்பாளா தெரியலையே”? என்றபடி, வைதேகி கைகழுவ எழுந்து சென்றார்.


“என்னதான் இருந்தாலும் அம்மா போல வருமா.” என்ற எண்ணம்தான் திலோத்தமாவுக்கும். தனக்கு இத்தனை வயது ஆன பின்னாலும், தன்னால் அம்மாவை விட்டு ஒருநாள் கூட இருக்க முடியாது. அந்தக் குழந்தைக்கு ஒரு ஏழு அல்லது எட்டு வயதுதான் இருக்கும், அதற்குள் அம்மா இல்லையென்றால் எவ்வளவு கஷ்ட்டம் என வருத்தப்பட்டாள்.


மறுநாள் காலை அவள் பாவனாவை பார்க்கவில்லை. ஆனால் மாலை சந்தித்தாள். இருவரும் ஒன்றாகவே மின் தூக்கியில் செல்ல, திலோத்தமா ஐந்தாம் எண்ணை அழுத்த, “ஆன்டி, நீங்க போர்த் ப்ளோர் தானே. தப்பா பைவ் அழுத்திட்டீங்க” என்றாள் பாவனா.


இதுதான் குழந்தை மனம் இல்லையா… பெரியவர்கள் போல நமக்கு என்ன வந்தது என்று அவர்களால் இருக்க முடியாது.


திலோத்தமா புன்னகைத்தாளே தவிர எதுவும் சொல்லவில்லை. ஐந்தாம் தளம் வந்ததும், பாவனா இறங்கிக் கொள்ள, அப்படியே மின் தூக்கியில் நான்காம் தளத்திற்குச் சென்றாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாவனாவுக்கு, “ஓ… நமக்காகத்தான் ஆன்டி வந்திருக்காங்க.” எனப் புரிந்தது.


முகம் மலர, குதித்துக் கொண்டு சென்றவள், கதவைத் திறந்த தன் பாட்டியிடம் திலோத்தமா பற்றிச் சொன்னவள், மறுநாள் காலை தனது தந்தையிடமும் சொன்னாள்.


“ஓ… அப்படியா, ஆன்டிக்கு தேங்க்ஸ் சொல்லிடு.” என்றான் அரவிந்தன் புன்னகையுடன்.


 

Advertisement