Advertisement

சண்ட கோழி


அத்தியாயம் 5

ஜெய் காரை ஓட்ட அவன் அருகில் இருந்த இருக்கையில் சுபத்ராவின் பிள்ளைகள் இருவரும் இருந்தனர். பின்புறம் மதியழகன் சங்கமித்ரா மற்றும் சுபத்ரா அமர்ந்துகொள்ள… கார் புதுக்கோட்டையை நோக்கி சென்றது.


ஜெய் காரில் பாடல் ஓடவிட்டு வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்த, சுபத்ரா அந்தப் பக்கம் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.


மதியழகன் சங்கமித்ராவுடன் பேசிக் கொண்டு வரலாம் என்று நினைக்க, அவள் அதற்கு இடம் கொடுத்தால் தானே…


“எனக்குத் தலை வலிக்குது.” என்றவள், சீட்டின் பின்புறம் சாய்ந்து கண்ணை வேறு மூடிக் கொண்டாள். ஜெய் அதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.


பிறகும் ஜெய்யும், மதியழகனும் தான் பேசிக் கொண்டு வந்தனர். ஊர் செல்ல நான்கு மணி நேரங்கள் ஆகும் என்பதால்… வழியில் ஒரு இடத்தில் டீ குடிக்க நிறுத்தினர்.


மதியழகன் தனக்கும் சங்கமித்ராவுக்கும் டீ எடுத்து வர.. அதற்குள் ஜெய் சுபத்ராவுக்குக் கொடுக்கச் சென்றதை, அவள் வாங்கி இருந்தாள். அதனால் மதியழகன் தான் கொண்டு வந்ததைத் தன் அண்ணியிடம் கொடுத்தான்.


சுபத்ராவை முன்புறம் உட்கார சொல்லிவிட்டு, அவள் பிள்ளைகளைத் தங்கள் இருவருக்கும் நடுவில் உட்கார வைத்து, சங்கமித்ரா அவர்களுடன் விளையாடிக் கொண்டு வந்தாள்.


தன்னைத் தவிர்க்கவே அவள் இப்படிச் செய்கிறாள் என மதியழகனுக்குப் புரியாமல் இல்லை. அவன் இப்போது சீட்டில் சாய்ந்து கண் மூடிக் கொண்டான். அதன் பிறகு அவன் அவளோடு பேச முயற்சிக்கவே இல்லை.


மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். நிறைய உறவினர்கள் சென்று இருந்தனர். பக்கத்தில் இருந்தவர்கள் மட்டும் இவர்கள் வருவதற்காகக் காத்திருந்து, இவர்கள் வந்ததும் கிளம்பினர்.


வீட்டு ஆட்கள் மட்டுமே எஞ்சி இருக்க., ஹாலில் முத்துகுமாருடன் மதியழகன் பேசிக் கொண்டு இருந்தான். சங்கமித்ரா சென்று அறையில் இருந்த கட்டிலில் படுத்துக் கொண்டாள்.


அந்த அறைக்கு வந்த அவளது அம்மா, “விளக்கு வச்சத்துக்கு அப்புறம் இப்ப என்ன படுக்கை. போ.. போய்க் குளிச்சு வேற புடவை மாத்து.” என்றார்.


“இருங்க மா இப்பத்தான் வந்தேன், கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க.” என அவள் சிடு சிடுக்க, ஜெய் அப்போது அந்த அறைக்கு எதோ எடுக்க வந்தவன், அங்கே படுத்து இருந்தவளைப் பார்த்து முறைத்து வைக்க, அதைப் பார்த்துப் பயத்தில் சங்கமித்ரா எழுந்து அமர்ந்தாள்.


கதவை சாற்றித் தாள் போட்டு வந்தவன், “அவர் அங்க ஹாலில் உட்கார்ந்து இருக்கார். அவருக்கு எதாவது வேணுமா, என்ன ஏதுன்னு எதுவும் கேட்காம, இவ இங்க வந்து படுத்திட்டா? அவர் சுபத்ராகிட்ட தண்ணி வாங்கிக் குடிக்கிறார்.”


“அந்த மனுஷன் நம்மைப் பற்றி என்ன நினைப்பார். என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்கீங்கன்னு காரி துப்ப போறார்.” என்றான்.


“நீ கொஞ்சம் பொறுப்பா இரும்மா.” அவள் அம்மா சொல்ல,


“அம்மா, இவ சரியே கிடையாது. அவர் வந்து பேசினா முகத்தைத் திருப்பிக்கிறா, நானும் பார்த்திட்டே இருக்கேன், எதுக்கு இப்படிப் பண்றான்னு புரியலை.”


“அந்தப் பய வேற நம்ம வீட்டையே சுத்தி சுத்தி வரான். அப்போ அன்னைக்கு எங்ககிட்ட ஒன்னும் இல்லைன்னு பொய் சொன்னியா?  நீ அவனை மனசுல வச்சிட்டுதான் இப்படிப் பண்ற?” என்றான் ஜெய் கடுமையாக.


இதுக்கு இப்படி வேற அர்த்தம் வேறு இருக்கா… எனச் சங்கமித்ரா அரண்டே போனாள். அண்ணனே தன்னைத் தவறாகப் பேசுகிறான். மதியழகனும் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டால், தன் வாழ்க்கை என்ன ஆகும் எனப் பயம் வந்தது.


அவள் எதோ அவள் எரிச்சலை அவர்களிடம் காண்பித்தாளே தவிர, இனி தன் வாழ்க்கை மதியழகனோடு தான் எனப் புரியாதவள் இல்லை.


“அண்ணா, அப்படியெல்லாம் எதுவும் இல்லைனா…நீ என்னை நம்ப மாட்டியா?” என அவள் ஜெய்யின் முகம் பார்க்க, அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.


“இவ எதாவது எக்குத்தப்பா பண்ணி வச்சா… சுபத்ராவையும் சேர்த்து நம்ம வீட்டுக்கே அனுப்பிடுவாங்க.” என்றார் அவர்களது அம்மா பயந்து போய்.


“இப்ப சொல்லுங்க. நான் இதுக்குதான் அந்த வீட்ல இவளை செய்ய வேண்டாம்ன்னு சொன்னேன்.” என்றான் ஜெய். தங்கை ஏதாவது எக்குதப்பாகச் செய்து பெயரை கெடுத்துக் கொள்வாளோ என அவனுக்குப் பயமாக இருந்தது.


“என்ன சொல்ற சங்கமித்ரா? இனிமே ஒழுங்கா இருக்கியா?” அவள் அம்மா கேட்க, சரி எனத் தலையசைத்தவள், கண்களில் துருத்தியை கண்ணீரை துடைத்து விட்டு, சட்டென்று எழுந்து ஹாலுக்குச் சென்று மதியழகன் அருகே உட்கார்ந்து கொண்டாள்.


அவன் அவள் வந்ததைப் பார்த்தாலும், அவன் அவளைக் கண்டுகொள்ளவில்லை. செல்லில் எதோ பார்த்துக் கொண்டு இருந்தான்.


“எதாவது வேணுமா?” சங்கமித்ரா மெதுவாக அவனிடம் கேட்க,
என்னய்யா கேட்கிற என்பது போலப் பார்த்தவன், எதுவும் வேண்டாம் எனத் தலையசைத்தான்.


அவர்கள் இருவர் மட்டுமே ஹாலில் இருந்தனர். ஆனால் அவன் அவளிடம் எதுவும் பேச முயற்சிக்கவே இல்லை. அதை அந்தப் பக்கம் வரும்போது, போகும் போது சுபத்ரா, ஜெய் இருவருமே கவனித்தனர்.


மதியழகன் குணம் அப்படித்தான், அவன் தானாக யார் வம்புக்கும் போக மாட்டான். ஆனால் யாரவது அவனிடம் வம்பு செய்தால்… திரும்ப அவர்களுக்குத் தான் யார் என்று காட்டாமல் விட மாட்டான்.


சங்கமித்ராவுக்கும் அவன் கோபமாக இருக்கிறான் என்று புரிந்தது. தேவையில்லாமல் அவனைச் சீண்டி விட்டோம் என நினைத்துக் கொண்டாள்.


எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது. “நான் போய் டிரஸ் மாத்தட்டா?” அவள் அவனிடம் அனுமதி கேட்க,


என்ன டா இவ? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை நம்மை மதிக்காம இருந்தா… இப்ப பெர்மிஷன் கேட்கிறா என்பது போலப் பார்த்தவன், அப்போதும் சரி என்று சொல்லவில்லை. “உன் இஷ்ட்டம்.” என்றான்.


அவள் அறைக்குச் சென்ற போது, கட்டிலில் அவளுக்கு உடைகள் தயாராக இருந்தது. அப்போது உள்ளே வந்த அவளது அம்மா, “ரெண்டு சொம்பு உடம்புக்கு ஊத்திட்டு புடவை மாத்து.” என்றார்.


அவள் குளித்து வேறு புடவையில் புது மலராக வெளியே வர… மதியழகன் சிரத்தையாக டீவி பார்த்துக் கொண்டு இருந்தான். இவள் போய் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டு டிவி பார்த்தாள்.


இருவரையும் சாப்பிட அழைத்தனர். டைனிங் டேபிளில் இலை போட்டு உணவு பரிமாறினார்கள். அவர்கள் கூடவே முத்துகுமாரும் ஜெய்யும் அமர்ந்து சாப்பிட்டனர். மதியழகன் ஜெய் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட… மூன்று இட்லிகளை முக்கால் மணி நேரமாக ஒருத்தி சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.


இந்த லட்ச்சனத்தில் சாப்பிட்டால் விளங்கிடும் என மதியழகன் நினைத்துக் கொண்டான்.

சாப்பிட்டு திரும்ப ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்தனர். சிறிது நேரத்தில் முத்துகுமார், ஜெய் என ஒவ்வொருவராகக் கழண்டு கொள்ள, “அவரைக் கூட்டிக்கிட்டு மாடிக்கு போ… அவருக்குக் குளிக்கணும்னா துண்டு எல்லாம் எடுத்துக் கொடு.” அவள் அம்மா சொல்ல,
“மாடிக்கு ஏன் போகணும். இங்கதான் பாத்ரூம் இருக்கே.” என்றாள்.
மதியழகனுக்குச் சிரிப்புதான். ஆனால் முகத்தில் எதையும் காட்டவில்லை.


“சொன்னா கேளு, அவரைக் கூடிட்டு போ.” என்றார்.


இதுவரை ஜெய் மட்டும் தான் மாடியில் உறங்குவான். அதுவும் ஹாலில்தான். அங்கிருக்கும் அறையை யாரும் உபயோகிக்க மாட்டார்கள். இவர்களின் படுக்கை கீழேதான். அதுதான் மாடிக்குப் போகச் சொன்னதும், அவளுக்குப் புரியவில்லை.


“சரி வாங்க.” என்றவள், மாடிக்கு செல்ல, மதியழகன் அவளோடு சென்றான்.


பாதிப் படிக்கட்டுகள் ஏறியதும், “ஐயோ ! துண்டு எடுத்திட்டு வர மறந்திட்டேன். நான் போய் எடுத்திட்டு வரேன்.” என அவள் திரும்ப, அவள் கைபிடித்துத் தடுத்தவன், “என்கிட்டே இருக்கு, மேல போ.” என்றான்.


மாடி அறையில் இருந்த பால் பழங்கள் எல்லாம் பார்த்த பிறகுதான், இன்னைக்கு இங்க தான் தூங்கனும் என அவளுக்குப் புரிந்தது. அவன் முகம் பார்க்க சங்கடப்பட்டு, தலை குனிந்து கொண்டாள்.


அவள் நிலை புரிந்தவன், அங்கிருந்த தன் பையை எடுத்து திறந்து குளிக்க உடைகள் எடுத்து வைத்தான். அறையிலேயே பாத்ரூம் இருக்க… குளிக்கச் சென்று விட்டான்.


முதல் இரவை நினைத்ததும், அடி வயிற்றில் ஒரு கலக்கம். அந்த நிலை பிடித்தும் பிடிக்காமலும் இருந்தாள். கவனத்தை வேறு எதிலாவது வைக்க எண்ணி, என்ன இருக்கிறது எனச் சுற்றிப் பார்க்க, கட்டிலில் அவன் செல் இருந்தது.


அவளிடம் செல் இல்லை. அவள் செல் கேட்டதற்கு, உனக்குச் செல் வாங்கித் தர்றதும் ஒன்னும், ஒரு பாய் ப்ரண்ட் பிடிச்சுத் தர்றதும் ஒன்னு. அதனால செல் மட்டும் கேட்காத என்றுவிட்டார் அவளின் அம்மா. அதனால் அவள் அண்ணன் செல்லைத்தான் எப்போதாவது எடுத்து பார்த்துக் கொண்டிருப்பாள்.


லாக் போட்டு வைத்திருந்தான். அதைத் திறக்க தெரியாமல் கையில் வைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.


மதியழகன் குளித்து விட்டு கையோடு உள்ளாடைகளைத் துவைத்துக் கொண்டு வந்தவன், அதைக் காயப் போட வெளியில் சென்றான். அவன் திரும்பி வந்ததும், “இதைக் கொஞ்சம் திறந்து தாங்க.” என்றாள்.


எதை எனப் பார்த்தவனுக்கு அது அவனது செல் எனத் தெரிந்ததும், “என்கிட்டே கேட்க வேண்டாமா?” என்றான்.


“நான் பார்க்கலாம்.” என்றாள் அதிகாரமாக.


மதியழகனுக்குச் சிரிப்பு எட்டி பார்க்க, அவளிடம் இருந்து செல்லை வாங்கி, அதைத் திறக்க, பக்கத்தில் வந்து நின்று எப்படி எனப் பார்த்துக் கொண்டாள்.


திறந்து கொடுத்ததும் கட்டிலில் சென்று உட்கார்ந்து பார்த்தாள். ஸ்க்ரீன் சேவரில் அவள் புகைப்படத்தைத் தான் வைத்து இருந்தான். பரிசம் போடும் போது எடுத்தது.


அட பரவாயில்லை நம்ம போட்டோ எல்லாம் வச்சிருக்கான் என நினைத்தவள், அதில் மேலும் என்னென்ன இருக்கிறது என ஆராய்ந்தாள்.
செல்லை பார்க்கும் ஆவலில் அன்று என்ன நாள் என்றெல்லாம் மறந்து விட்டாள்.


“ம்ஹ்ம்….” எனச் செருமியபடி கட்டிலில் வந்து அமர்ந்த மதியழகன், “அந்தப் பால் ஆறுறதுக்கு முன்னாடி ஊத்திக் கொடுப்பியா இல்லையா?” என்றான்.


அவன் கேட்டதும்தான் அன்று என்ன என்பது நினைவு வர, செல்லை வைத்து விட்டு, பதட்டமாகச் சென்று சொம்பில் இருந்த பாலை டம்ளரில் ஊற்றி எடுத்து வந்தாள்.


பால் சரியான சூடில் தான் இருந்தது. “இந்தா இதை நீ குடி.” என அதை அவள் கையில் கொடுத்துவிட்டு, அவள் கையில் இருந்த சொம்பை வாங்கி, அப்படியே தூக்கி குடித்தான்.


சங்கமித்ரா பால் குடித்து முடித்ததும், என்ன செய்வது எனத் தெரியாமல் நிற்க, “என்ன பார்த்திட்டே இருக்க. படுத்து தூங்கு.” என்றான்.


என்னடா இவன்? கிடைச்ச கொஞ்ச நேரத்தில் முத்தம் கொடுத்தான், இப்ப தூங்க சொல்றான். நிஜம் தானா என்பது போலப் பார்த்தாள்.


அவள் எண்ணம் புரிந்தது போல, “முதல் ராத்திரி அன்னைக்கே எல்லாம் பண்ணனும்ன்னு இல்லை.” என்றான்.


கட்டிலை சுவற்றை ஒட்டி போட்டிருந்தனர். சங்கமித்ரா கட்டிலின் உள்பக்கம் ஏறி படுக்க, மதியழகன் விளக்கை அணைக்க… அறையின் இருளை பார்த்து எழுந்து அமர்ந்தவள், “எனக்கு இருட்டுன்னா பயம்.” என்றாள்.


அவன் விடிவிளக்கை தேடி போட்டு விட்டு வந்தான். சங்கமித்ரா திரும்பப் படுத்துக் கொண்டாள். மதியழகன் அவள் பக்கத்தில் படுத்துக் கொண்டான். கட்டில் கொஞ்சம் சின்னதுதான். அதனால் அவளை நெருங்கி தான் படுத்து இருந்தான்.


இன்றே எல்லாம் நடக்க வேண்டும் என அவனும் நினைத்து இருக்கவில்லை. ஆனால் அவளோடு மனம் விட்டு பேச வேண்டும், இடையிடையே அவளைக் கொஞ்சவும் வேண்டும் என்று நினைத்து இருந்தான். ஆனால் இன்று அவள் நடந்து கொண்ட விதத்தில், இப்போது எதற்கும் மனம் இல்லாமல் இருந்தான்.


சங்கமித்ராவும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். மதியழகன்அவள் பக்கம் திரும்பி படுக்க, அவள் புரண்டு படுத்ததில் புடவை அங்கங்கே நழுவி இருக்க, அவனுக்கு மனம் தடுமாற ஆரம்பித்தது.


“புடவையை கூட ஒழுங்கா கட்ட தெரியாதா உனக்கு.” என அவளிடம் எரிந்து விழுந்தான். அவளும் இழுத்து இழுத்துதான் விட்டாள். அது ஷிப்பான் புடவை என்பதால்… நழுவிக் கொண்டே இருந்தது.


அவளின் போராட்டத்தைப் பார்த்து, “நீ நைட்டி போட மாட்டியா?” என்றான்.


“தூங்கும்போது போடுவேன் தான்.” என்றாள்.


“போய் ட்ரெஸ் மாத்திட்டு படு.” என்றான்.


அவன் காலை மடக்கிக் கொள்ள, கட்டிலை விட்டு கீழே இறங்கினாள். விளக்கை போட்டு அங்கிருந்த அலமாரியில் நைட்டி இருக்கிறதா என்று பார்த்தாள்.


நைட்டி மற்றும் மேலும் சில உடைகள் இருந்தது. காலையில் குளித்து விட்டு மாற்ற புடவை, புதுத் துண்டு எல்லாமே அங்கு இருந்தது. அப்போதுதான் அவளுக்குகே தெரியும்.


அறையில் மதியழகன் இருந்ததால்… வெளியே ஹாலில் சென்று மாற்றுவோம் என நைட்டியை கையில் எடுத்துக் கொண்டு, அவள் கதவை நோக்கி செல்ல, “நான் உனக்குப் புருஷன் தானே, இங்கயே மாத்து.” என்றான்.


ஒரு நொடிதான் திகைத்து நின்றாள். பெரிய விளக்கை அனைத்து விட்டு, அவனுக்கு முதுகு காட்டி நின்று, நைட்டியை தலை வழியே போட்டுக் கொண்டவள், புடவையின் முந்தானையை எடுத்துவிட்டு, ரவிக்கையும் கழட்டி விட்டு, அப்படியே கைவிட்டு நைட்டி அணிந்து கொண்டாள். பிறகு இடையில் இருந்த புடவையை எடுத்துவிட்டு, நைட்டியை நன்றாக இழுத்து விட்டாள்.


விடி விளக்கின் ஒளியில் அவளைப் பார்த்தபடியே மதியழகன் கட்டிலில் படுத்து இருந்தான். அவள் உடை மாற்றிய விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. சங்கமித்ரா சென்று கட்டிலில் படுத்தவள், சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள். அவளைப் பார்த்துக் கொண்டே மதியழகனும் உறங்கிப் போனான்.


எப்பவும் போல மதியழகனுக்கு விடியற்காலையில் விழிப்பு வர… மெதுவாகக் கண்திறந்தான். ஏசி அறை என்பதால்… விடிந்து விட்டதா இல்லையா என ஒன்றும் தெரியவில்லை. நேரம் பார்க்க செல்லை தேடினான்.


செல் சங்கமித்ராவுக்கு அந்தப்புறம் இருந்தது. பாதி மட்டும் எழுந்த நிலையில், எட்டி அவள் பக்கம் இருக்கும் செல்லை எடுக்க முனைந்தான்.


அவன் அவள் மேல் பாதிக் கவிழ்ந்த நிலையில் செல்லை எடுத்து நேரத்தை பார்க்க, அது காலை ஐந்து மணி எனக் காட்ட, அஞ்சுதான் ஆகுதா… என நினைத்தவன், அப்போதுதான் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியைக் கவனித்தான். அவன் அசைவில் கண் விழித்து இருந்தாள்.

 

“தலை கலைந்து, விழிகளில் மை வழிய, நைட்டியில் இருந்தாலும், அவன் கண்களுக்குத் தேவதையாகவே தெரிந்தாள்.”


உறக்கம் கலைந்தும் கலையாமல் இருந்தவளின், ரோஜா நிற உதடுகள் அவனை வா என அழைக்க… எதைப் பற்றியும் யோசிக்காமல், அவள் இதழில் முத்தமிட்டு இருந்தான்.


முத்தமிட்ட பிறகே…என்ன செய்கிறோம் எனப் புரிந்தது. மெதுவாக நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, அவன் விலகியதால்… விழிகளைத் திறந்தவள், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவனைத், தன் கைகொண்டு மெதுவாக அனைத்துக் கொள்ள…

அவளே அனைத்ததும், தடைகள் இல்லா மகிழ்ச்சியில், மதியழகன் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்ற, தன் மனைவியோடு கூடல் கொள்ளத் தொடங்கினான்.


மனதளவில் அறிந்து கொள்வதற்கு முன்பு, இருவரும் உடலளவில் ஒருவரையொருவர் தெரிந்து கொண்டனர். நமது இந்திய திருமணங்கள் நிறைய அப்படித்தான். இவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல….

Advertisement