Advertisement

சண்ட கோழி



அத்தியாயம் 9


மித்ரா அவர்கள் பகுதிக்கு வந்தபோது… ஹாலில் பாய் விரித்து, ஜன்னகள் எல்லாம் காற்றுக்குத் திறந்து விட்டு, ஏற்கனவே ஈரத்துணி எல்லாம் போட்டு வைத்து, இப்படி எல்லாச் செட்டப்பும் செய்து வைத்திருந்தான் மதியழகன்.


அவனைப் பார்த்து சிரித்தபடி உள்ளே வந்த மித்ரா, கதவை சாற்றிவிட்டு நைட்டி எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். அவள் வந்தபோது, பாயில் படுத்து இருந்த மதியழகன், அவளை நோக்கி வா என்னும் விதமாகக் கையை நீட்ட, அதைப் பற்றியபடி அவன் அருகே நெருங்கி உட்கார்ந்தாள்.


“என்ன இன்னைக்கு ஹாலுக்கு வந்துடீங்க?”


“அது எங்க இருந்தா பேச மூடு வர மாட்டேங்குது. அதுக்குதான்.”
என்றான். அவன் சொன்னதைக் கேட்டு, அவள் புன்னகை மேலும் விரிந்தது.


“நீங்க என்னை லவ் பண்ணீங்களா?” என மித்ராவே ஆரம்பித்தாள்.


“அது பேரு லவ்வான்னு எல்லாம் எனக்குத் தெரியலை மித்ரா. ஆனா உன்னைப் பார்க்கும் போது ஒரு எண்ணம். எனக்கு நீ உரிமையானவள் போல… எனக்கு எப்படிச் சொல்றதுன்னு தெரியலை.”


“அண்ணன் கல்யாணத்துல தான் உன்னை முதல் முறை பார்த்தேன். அப்ப நீ கொஞ்சம் கொழுக் மொழுக்குன்னு இருப்ப… சத்தியமா உன்னைப் பத்தி எனக்கு அப்ப எந்த எண்ணமும் இல்லை. அண்ணியோட தங்கச்சின்னு தான் பார்த்தேன். அதுவும் நீ உங்க அக்கா எங்க வீட்டுக்கு வரும்போது ரொம்ப அழுத. உன்னைப் பார்க்க பாவமா இருந்துச்சு.”


“அதுக்கு அப்புறம் உன்னை ரெண்டு வருஷம் நான் பார்க்கவே இல்லை. கதிரேசன் அண்ணன் பையனுக்கு முதல் மொட்டை போடும்போது, நீயும் வந்திருந்த. அங்கதான் உன்னைத் திரும்பப் பார்த்தேன்.”


“பம்ப் செட் மேல உட்கார்ந்திட்டு, தண்ணிக்குள்ள காலை விட்டு ஆட்டிட்டு, உங்க அக்காவோட சிரிச்சு பேசிட்டு இருந்த.”


“இதுக்கு முன்னாடி பார்த்த சின்னப் பொண்ணு தோற்றத்தில இருந்து மாறி, குமரிப்பெண்ணா இருந்த. குல்பி ஐஸ் மாதிரி இருந்தவக் குச்சி ஐஸ் ஆகிட்டாளேன்னு நினைச்சேன்.”


“அப்பவும் உன்னை லவ் பண்ணனும், கல்யாணம் பண்ணனும்ன்னு எல்லாம் நினைக்கலை. ஆனா உன்னை அந்தத் தடவை அடிக்கடி பார்த்தேன். நீ வாய் மூடாம பேசிட்டே இருந்த. சரியான வாயாடின்னு நினைச்சிகிட்டேன்.”


இதைச் சொன்னதும் மித்ரா அவனை முறைக்க… “அது அப்போ.” என்றான் சமாளிக்கும் விதமாக. “சரி மேல சொல்லுங்க. அப்புறமாவது லவ் வந்துச்சா இல்லையா?” மித்ரா கேலியாகக் கேட்க,


“அடுத்தத் தடவை பார்க்கும்போது, லவ் வரலை கோபம்தான் வந்துச்சு.”


“நீ கருணா அண்ணா கல்யாணத்துக்கு வந்திருந்த. அப்பத்தான் உன்னைத் திரும்பவும் பார்த்தேன்.”


“பட்டுப் பாவாடை தாவணியில இருந்த, நைட் நேரம் தனியா மண்டபத்துக்கு வெளிய நின்னுட்டு இருந்த.”


“ஆமாம், எனக்கு அங்க பேச யாரும் இல்லை. அக்கா மேடையில ரேவதி அக்காவோட இருந்தா, ஜெய் அண்ணாவும் வரலை. ரொம்பப் போர் அடிச்சுது. அதனால சும்மா நடந்திட்டு அப்படியே  வெளியே வந்துட்டேன் போல…”


“நான் எதோ வேலையா வெளிய போயிட்டு வந்தேன். நீ நின்னுட்டு இருந்ததைப் பார்த்ததும், ஒரு நொடி திகைச்சுதான் போயிட்டேன். அப்புறம்தான் உனக்குப் பின்னாடி நின்னுட்டு இருந்த பசங்களைப் பார்த்தேன். நீ தனியா போறதை பார்த்து வந்திருக்கணும்.”


“அது எங்க ஊர் இல்லை. கல்யாணம் அண்ணி ஊர்ல நடந்துச்சு. உன் பின்னாடி ரெண்டு பசங்க நிற்கிறாங்க. எங்க ஊருன்னா அவனுங்களைதான் விரட்டி இருப்பேன். அவனுங்க யாரு என்னன்னு தெரியாது. நான் எதாவது பேசி பிரச்சனை ஆகிட்டா, நீ வேற என்னோட இருக்க. அதுதான் உன்னை அதட்டினேன்.”


“எனக்கு அது தெரியாது. நமக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தராவது இருக்காரேன்னு, நான் உங்க கிட்ட ஆர்வமா பேச வந்தேன். ஆனா நீங்க என்னை இங்க என்ன பண்றன்னு திட்டினீங்க.”


“அதோடவா விட்டீங்க. பொம்பளை பிள்ளைக்கு அடக்கமா இருக்க தெரியாதா.. முதல்ல உள்ள போன்னு கத்தினீங்க. நான் பயந்தே போயிட்டேன். எப்படி அழுதேன் தெரியுமா?”


“தெரியும், உன்னைப் பேசிட்டு, அன்னைக்கு நான் எவ்வளவு கஷ்ட்டபட்டேன்னு எனக்குதான் தெரியும். நீ உன் கண்ணை யாருக்கும் தெரியாம துடைக்கிறதை, நான் பார்த்திட்டே இருந்தேன். அன்னைக்கு எனக்கே என் மேல அவ்வளவு கோபம் வந்துச்சு.”


“நான் உன்கிட்ட வந்து சாரி கேட்கணும்ன்னு தான் நினைச்சேன். ஆனா நாம ரெண்டு பேரும் பேசுறதை பார்த்தா… எதாவது கதை கட்டி விட்டுடுவாங்க. உன் பேர் கெட்டு போயிடுமேன்னு பயந்துதான் உன்கிட்ட பேசலை.”


“எங்க அப்பா அம்மா என்னை வரவேண்டாம்ன்னு தான் சொல்வாங்க. எங்க அக்காவை பார்க்கிறதுக்காகத் தான் நான் வருவேன். அதுக்கப்புறம் நான் உங்க ஊர் பக்கமே வரலை.”


“ஆமாம் நான் உனக்காக எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.”


“அதுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு. கதிரேசன் அண்ணனோட பொண்ணுக்கு காது குத்தும் போது வந்த… பட்டு புடவையில, தலை நிறையப் பூவோட கார்ல இருந்து இறங்கின…”


“உங்க மேல ரொம்பக் கோபத்தில்தான் வந்தேன்.”


“கார்ல இருந்து இறங்கும் போதே… நீ யாரையோ தேடினது பார்த்தேன். ஆனா என்னைப் பார்த்ததும், நீ தேடுறதை நிறுத்திட்டு, என்னை முறைக்க ஆரம்பிச்சிட்ட…”


“அப்பத்தான் எனக்குத் தெரிஞ்சிது, நீ என்னைத்தான் தேடினேன்னு. ஆனா நீ என்னை ஆர்வமா எல்லாம் பார்க்கலை… முறைச்சிட்டே இருந்த. அந்தத் தடவைதான் முடிவு பண்ணேன். உன்னைத்தான் கல்யாணம் பண்ணனும்ன்னு.”


“அப்படியா? ஆனா நீங்க ஒன்னும் அப்படி ஆசையா எல்லாம் பேசலையே… அப்பவும் அட்வைஸ் தான் பண்ணீங்க.”


“ஹே லூசு, முறைக்கிறதா நினைச்சிட்டு நீ என்னையே பார்த்திட்டு இருந்த டி… வேற யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க. இந்தப் பையன் இந்தப் பொண்ணா என்ன பண்ணான்னோன்னு நினைக்க மாட்டாங்க.”


“அதுதான் என்னைப் பார்கிறதை விட்டு, வேற வேலை இருந்தா போய்ப் பாருன்னு சொன்னேன். நீ அதுக்கும் கோவிச்சிகிட்ட.”


“பேச தெரியாம பேசிட்டு என்னைக் குறை சொல்றியா நீ…” என மித்ரா அவனை அடிக்க, படுத்திருந்தவன், அவள் கை இரண்டையும் பிடித்துக் கொண்டான்.


“சரி உங்க வீட்ல என்னை வேண்டாம்ன்னு சொல்லி இருந்தா?”


“அப்பாகிட்ட கண்டிப்பா எனக்கு உன்னைப் பிடிக்கும்ன்னு சொல்லி இருப்பேன்.”


“அப்பவும் உங்க அப்பா ஒத்துக்காம வேற பெண்ணைப் பார்த்து இருந்தா?”


“என்ன பண்றது? கல்யாணம் பண்ணி இருப்பேன்தான்.”


“என்னது கல்யாணம் பண்ணி இருப்பியா?” என அவன் பனியனை கொத்தாகப் பிடித்து அவனை இழுத்தவள், “உனக்கு இந்த ஜன்மத்தில மட்டும் இல்லை… எல்லா ஜன்மத்திலேயும் நான்தான் பொண்டாட்டி. சரியா?” என்றாள்.


அவளைத் தன் இரு கையால் கட்டி அணைத்தவன், “எப்ப டி என்னைப் பிடிச்சது? கல்யாணத்து அன்னைக்குக் கூட என்னை முறைச்சிட்டு இருந்த.”


“அது எங்க வீட்ல என்னை மேல படிக்க விடாம கல்யாணம் பண்ணி கொடுத்திடாங்கன்னு கோபம். அதுவும் உங்க வீட்ல எங்க அக்காவை எங்க வீட்டுக்கு விட மாட்டீங்களா…இங்க வந்தா எனக்கும் அந்த நிலைமை தான. அதோட நம்ம ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரி வேற சூப்பரா இருந்ததா… அதனால நான் கொஞ்சம் டென்ஷனா இருந்தேன்.”


“சரி எப்பதான் பிடிச்சது அதைச் சொல்லு.”


“தெரியலையே… நீங்க வேற யாரையோ கல்யாணம் பண்ணி இருப்பேன்னு சொன்னதும், அதை மட்டும் என்னால நினைச்சு பார்க்க முடியலை.”


“நீங்க எனக்கு மட்டும்தான்.” என்றவள், அப்படியே அவன் நெஞ்சில் படுத்துக் கொண்டாள்.


அவள் முறைக்கும் போதே, மதியழகன் அவளை அந்தத் தாங்கு தாங்குவான்… இப்போது மனைவியின் காதலை அறிந்தபின் சும்மா இருப்பானா என்ன? அந்த இரவு அவர்களுக்கு உடலளவில் மட்டும் அல்ல… மனதளவிலும் மறக்க முடியாத இரவாக இருந்தது.


முதல் நாள் போல இல்லாமல். மறுநாள் மித்ரா காலையில் எழும் போதே… மகிழ்ச்சியாக உணர்ந்தாள். இரவு தாமதமாக உறங்கிய போதும், காலையில் சீக்கிரமே எழுந்து, குளித்து, மயில் வண்ண நிறத்தில் காட்டன் புடவை அணிந்து, பெரிய வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

அவள் மாமியார் தான் எப்போதும் வாசல் தெளித்துக் கோலம் போடுவார். அவர் வாசல் தொளிக்க, “இன்னைக்கு நான் கோலம் போடுறேன் அத்தை.” என அழகாகக் கோலம் இட்டாள்.


நீலவேணி அவள் கோலம் போடும் வரை உடன் இருந்துவிட்டு, பால் காய்ச்ச சென்றார். காலையில் இந்த இரண்டு வேலையும் அவர்தான் செய்வார்.


இவர்கள் ஊரில் பெரிய தனக்காரர்கள் என்றாலும், வெளியே எல்லோரோடும் சட்டென்று பழகிவிட மாட்டார்கள். துரை யார் விஷயத்திலும் தலையிட மாட்டார். அவருண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். ஆனால் மகன்களுக்கு வெளியே நிறையச் சிநேகிதர்கள் உண்டு.


நீலவேணி யாரோடும் வம்பு தும்பு வைத்துக் கொள்ள மாட்டார். அதனால் இவர்களிடமும் யாரும் வைத்துக் கொள்ள முடியாது. எதாவது விஷேச வீட்டிற்கு மருமகள்களை அழைத்துக் கொண்டு சென்றாலும், சொன்ன நேரத்திற்கு சென்று விட்டு வந்துவிடுவார். அங்கு அதிக என்றம் தங்குவது வெட்டிக் கதை பேசுவது எல்லாம் கிடையாது.


மித்ராவுக்கு நன்றாகச் சமைக்க வரும். அவள் அம்மா அவளுக்கு சமையல் பழக்கி இருந்தார். அதோடு ருசியாக இருந்தால்தான், முதலில் அவள் தொண்டையில் இறங்கும். கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் நன்றாகச் சாப்பிட வேண்டும் என நினைப்பாள்.

“நான் காலையிலேக்கு சமைக்கட்டுமா அத்தை.” என அவள் நீலவேணியிடம் கேட்க,


“இத்தனை பேருக்கு பண்ணிடுவியா?” என்றார்.


அவள் யோசிக்கும் போதே… சுபத்ரா வந்துவிட்டாள்.


“இதோ உன் அக்காவை கேட்டு செய்.” எனச் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.


“அக்கா, இன்னைக்குப் பூரி பண்ணலாமா?” என்றாள்.


“சரி.” என்ற சுபத்ரா பூரிக்கு மாவு பிசைய… அவள் மொத்தமாக் அவ்வளவு மாவு, ஒரே நேரத்தில் பிசைவதை பார்த்து ஆச்சர்யபட்டு போனாள் மித்ரா.


“நானா இருந்தா ரெண்டு தடவையா மாவு பிசைஞ்சிருப்பேன். நீ ஒரே தடவையிலேயே பண்ணிட்ட அக்கா.” என்றாள் பாராட்டுதலாக.


“எனக்கும் முதல்ல வராது. இப்ப பழகிடுச்சு.”


“நான் தொட்டுக்க உருளைக்கிழங்கு பண்றேன்.” என்றவள், எவ்வளவு கிழங்கு போட வேண்டும் எனச் சுபத்ராவை கேட்டுக் கொண்டு, “நீ போய்ப் பசங்களைப் பாரு. நான் பார்த்துகிறேன்.” எனச் சுபத்ராவை அனுப்பி வைத்தாள்.


கொஞ்ச நேரத்தில் ரேவதி வந்தாள். மித்ரா உருளைக்கிழங்கு வேக வைத்து விட்டு, வெங்காயம் நறுக்கிக் கொண்டு இருந்தாள். இவளாக “அக்கா, இன்னைக்குப் பூரி டிபன்.” என்றாள்.


“அது எண்ணெயால இருக்கும். என்னைப் பொறுத்தவரை பசிக்கு சாப்பிடனும். ருசிக்கு சாப்பிடக்கூடாது.” எனத் தத்துவம் சொல்லிவிட்டு சென்றாள்.


மித்ராவுக்கு அவள் சொல்ல வருவது புரியவில்லை. அவள் உருளைக்கிழங்கு மசால் செய்ய ஆரம்பித்தாள். எல்லாம் கூட்டி, கொதிக்க விடும் நேரத்தில் மதியழகன் வந்தான்.


யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, ஒருமுறை அவளை இறுக அணைத்துப் பின் விலகியவன், “ஏன் டி என்னைக் காலையில எழுப்பாம வந்த?” என்றான்.


“நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க, அதனால அப்புறமா எழுப்பலாம்ன்னு இருந்தேன்.”


“உன்னோட பாசமலர் கிட்ட இருந்து போன் வந்தது.” என்றதும்,

“அண்ணனா ! நான் இப்பவே பேசணும்.” என அவள் துடிக்க, அவளுக்குப் போன் செய்து கொடுத்தான். மித்ரா பின் கட்டில் நின்று, அண்ணனுடன் பேசிவிட்டு கொடுக்க, மதியழகன் கடை திறக்க சென்றான்.


துரைக்கு மித்ராவின் சமையல் பிடித்து இருக்கிறது என அவர் சாப்பிடுவதிலேயே நீலவேணி புரிந்து கொண்டார். முன்தினம் போல… ஆண்கள் ஒவ்வொருவராக வந்து சாப்பிட…


சுபத்ரா பூரி சுட, மித்ரா கொண்டு போய்க் கொடுக்க, நீலவேணி பரிமாறினார். கருணாகரன் கடைசியாகச் சாப்பிட வர, ரேவதி அவனுக்குத் தட்டில் பழையது போட்டு, தயிர் ஊற்றி, கருவாடு வறுத்துக் கொண்டு போய்க் கொடுத்தாள்.


“ஏன் ரேவதி அக்கா?” என மித்ரா கேட்க, அவருக்குப் பழையது தான் பிடிக்கும் என்றாள். அதைக் கேட்டு மதியழகன் முகம் மாறினான்.


“உங்களுக்குப் பூரி பிடிக்காதா சின்ன அத்தான்.” மித்ரா கேட்க,


“எதோ ஒன்ன சாப்பிட வேண்டியது தான.” என்றான் சிரிப்புடன்.


ஏன் கணவனும் மனைவியும் புரியாத மாதிரியே பேசுகிறார்கள் என மித்ரா நினைத்தாள்.


கருணா சாப்பிட்டு எழுந்து சென்றதும், “நான் நிறையத் தடவை சொல்லிட்டேன் அண்ணி. நீங்க அண்ணனுக்குப் பழையது போடுறீங்க. ஆனா அவர் வெளியே வடை, பஜ்ஜி, பரோட்டான்னு வாங்கி சாப்பிடுறாரு. நல்லது இல்லை பார்த்துக்கோங்க.” எனச் சொல்லிவிட்டு மதியழகன் சென்றான்.


ரேவதி அமைதியாக இருந்தாள். “நீங்க சாப்பிடுங்க அக்கா.” மித்ரா சொல்ல,

“எனக்குப் பசி இல்லை. அப்புறம் சாப்பிடுறேன்.” என்றாள்.
வெகு நேரம் சாப்பிடாமலே இருந்தவள், அவளும் பழையதுதான் சாப்பிட்டாள்.

சுபத்ராவை பார்க்க மித்ராவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவள் பாட்டுக்கு எதையும் கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டு இருந்தாள். இந்த அக்கா ஏன் இப்படி இருக்கு என மித்ரா நினைத்தாள்.

சுபத்ராவுக்கு இருக்கும் அனுபவம் மித்ராவுக்கு இல்லை. இத்தனை வருடங்களாக அந்த வீட்டில் குப்பை கொட்டுகிறாள், அவளுக்குத் தெரியாதா யார் எப்படி என்று.


சுபத்ரா மித்ராவிடமும் யாரைப் பற்றியும் சொல்லவில்லை. அது வீண் பிரச்சனையை உருவாக்கும். அவளே பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என அமைதியாக இருந்தாள். ஆனால் சுபத்ராவை போலப் பொறுமைசாலிகளுக்கு, எல்லாம் உண்மையிலேயே கோவில் கட்ட வேண்டும்.


வாஷிங் மெஷின் வாங்கிக் கொடுத்து என்ன பயன்? அதைப் போட தண்ணீர் இருக்க வேண்டாமா? அந்த ஊரில் தண்ணீருக்குக் கொஞ்சம் கஷ்ட்டம்தான். அதனால் வாரத்தில் ஒரு நாள் போர்வை தலையனை உரைகளை மட்டும் மெஷினில் போட்டுவிட்டு, மற்ற உருப்படிகளைக் கையில்தான் துவைப்பது.


நேற்றும் இன்றும் சேர்த்து வைத்து, மித்ரா துணி ஊறவைத்து இருந்தாள். காலை வேலை முடிந்ததும், அதைத் துவைத்து விட்டு வர, அவர்கள் பகுதிக்கு சென்று இருந்தாள்.

அந்த இடைவெளியில் மதியழகன் அவளைப் பார்க்க வர,
மித்ராதான் அங்கு இல்லையே.. அது தெரியாமல் ஒவ்வொரு இடமாக… மனைவி எங்காவது தென்படுகிறாளா எனப் பார்த்துக் கொண்டு இருந்தான்.


அவன் தேடுவதைப் பார்த்து அண்ணிகள் இருவருக்கும் சிரிப்பு. “மித்ரா துணி துவைக்கப் போயிருக்கா.” எனச் சுபத்ரா சொல்ல…


“என்ன இன்னைக்கு ஒன்னும் பார்சல் இல்லை. பாசம் அவ்வளவு தானா..” என ரேவதி கேலி செய்ய,


“உங்களுக்குத் தெரியுமா இல்லைன்னு.” மதியழகன் நக்கலாக சொல்லும் போதே…

 

“அண்ணே…” எனச் சத்தம் வர, மதியழகன் எழுந்து வாசலுக்கு சென்றான். திரும்ப உள்ளே வந்தவன் கையில், ஒரு பை நிறைய நொங்குகள் இருந்தது.


“வரும் போது சொல்லிட்டுதானே வந்தேன்.” என்றான் ரேவதியை பார்த்து.

“அண்ணி, ஒரு தட்டுக் கொடுங்க.” எனச் சுபத்ராவிடம் கேட்டவன், அவள் கொண்டு வந்த தட்டில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, மனைவியைத் தேடி சென்றான்.


இவன் சென்றபோது அப்போது தான் அவள் துவைத்து முடித்து இருந்தாள். துணிகள் இருந்த வாலியை தூக்கி வெளியே வைத்தவள், குளியல் அறையை அலசி விட்டு கொண்டிருந்தாள்.


அவள் திரும்ப வெளியே வந்து பார்த்த போது, வாலி அங்கு இல்லை. இங்க தான வச்சோம், எங்க போச்சு என வாய்விட்டு பேசினாள். மதியழகன் எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு மறைந்து நின்றான்.


அவளுக்குப் புரிந்து விட்டது இது மதியழகனின் வேலை என்று. முகம் மலர கணவனைத் தேடினாள். அவளுக்குத் தெரிந்துவிட்டது என்றதும், மதியழகனும் சிரித்தபடி வெளியே வந்தவன், மனைவியை அனைத்துக் கொண்டான். சிறிது நேரம் அவளைக் கொஞ்சி மகிழ்ந்த பின்னே விலகினான்.


“இந்தா நொங்கு வாங்கிட்டு வந்திருக்கேன். சாப்பிடு.” எனத் தோளை உரித்துக் கொடுத்தவன், சாப்பிட்டு முடித்ததும், அவளைப் பெரிய வீட்டில் விட்டு, அவன் கடைக்குச் சென்றான்.


நேற்று போல் இன்றும் காய்கறிகளோடு மெனுவும் வர… பேசிக்கொண்டே மூவரும் சமையலை முடித்தனர். இப்போது ரேவதி மீண்டும் நன்றாகப் பேசினாள்.


மாலை நீலவேணி மித்ராவிடம், “நாளைக்கு வெள்ளிக்கிழமை, காலையில தலைக்கு ஊத்திட்டு, நீயும் மதியும் நம்ம ஊர்ல இருக்கிற கோவிலுக்கு எல்லாம் போய்ட்டு வந்திடுங்க.” என்றார்.


இரவு உணவு முடிந்து துரை உள்ளே சென்றதும், “அம்மா அப்பாகிட்ட கேட்க சொன்னேனே கேட்டீங்களா?” மதியழகன் கேட்க,


“கேட்டேன் டா… அண்ணனுங்க போகலை, அதனால நீ மட்டும் போனா நல்ல இருக்காது. வேணா எல்லாரையும் சேர்ந்து போகச் சொல்லுன்னு சொன்னார்.” என்றதும், சரி இதாவது விட்டாரே என நினைத்து, சரி என்றான்.


அவன் அண்ணன்களிடம் விஷயத்தைச் சொல்ல, கதிரேசன் “பசங்களா, நாம இந்த வாரம் கொடைக்காணல் போறோம்.” என்றவன், மனைவியின் முகத்தைப் பார்க்க… சுபத்ரா முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. குழந்தைகளும் குஷியாக குதித்தனர்.


கருணாகரன் ரேவதியிடம் சொல்ல, “நீங்க எல்லாம் போயிட்டு வாங்க. சின்னத்துக்கு உடம்பு சரி இல்லை. நான் வரலை.” என்றாள்.


மித்ராவை தவிர அனைவரும் ஆரம்பித்து விட்டாயா என்பது போலப் பார்க்க,

“அவ வருவா.” எனச் சொல்லிவிட்டுக் கருணா சென்று விட்டான்.


ரேவதியும் சென்றதும், “இன்னைக்கு விடிய விடிய சண்டை போட ரெண்டு பேருக்கும் காரணம் கிடைச்சிடுச்சு.” என்றான் கதிரேசன்.


“நாம போகனுமா? பேசாம இருந்திடலாமே.” என்றாள் சுபத்ரா.


“அப்பாவே மனசு வந்து சரின்னு சொல்லி இருக்கார். போயிட்டு வருவோம் அண்ணி.” என்றான் மதியழகன்.


இவர்கள் பேசும் போது மித்ரா அங்கு இல்லை. முன்பே அவர்கள் பகுதிக்கு சென்றுவிட்டாள். மதியழகன் சென்றபோது, கொடைக்காணல் செல்ல தேவையான துணிகளை எடுத்துப்  பையில் அடுக்கிக் கொண்டு இருந்தாள்.


“பார்த்தியா நம்ம ஆளு அதுக்குள்ள ரெடி ஆகிடுச்சு.” என நினைத்தவனுக்குச் சிரிப்புப் பொங்கியது.

Advertisement