Advertisement

சண்ட கோழி


அத்தியாயம் 8



மதியழகன் செல்லில் காலை ஆறு மணிக்கு அலாரம் வைத்திருக்க, அடித்ததும் மித்ரா எழுந்து கொண்டாள். அவளுடனே அவனும் எழுந்துகொண்டான்.


“இப்ப நான் என்ன பண்ணும்?” மித்ரா கேட்க,


“என்ன வேணா பண்ணலாமே.” என்றவன், அவளை அணைக்கச் செல்ல,


அவனைப் பிடித்துத் தள்ளி விட்டவள், “நான் இதைச் சொல்லலை…இந்த வீட்ல எனக்கு என்ன வேலைன்னு கேட்டேன்.” என்றாள்.


“முதல்ல நீ குளிச்சு புடவை கட்டி அந்த வீட்டுக்கு போ. இன்னைக்கே உனக்கு வேலை கொடுக்க மாட்டங்க. மத்தவங்க என்ன பண்றாங்க கவனி. அப்படியே கொஞ்சம் அவங்களுக்குக் கூட மாட உதவி பண்ணு.”


“டெய்லி புடவைதான் கட்டணுமா?”


“ஆமாம், நாம மட்டும் வெளிய போற அன்னைக்கு வேணா சுடிதார் போட்டுக்கோ.”


அவள் எதோ கடமைக்கு  கேட்பது போலவே மதியழகனுக்குத் தோன்றியது. இது என் வீடு என்ற உணர்வு அவளுக்கு இன்னும் வரவில்லை. அவள் கொஞ்சம் இறுக்கமாகவும் இருந்தாள்.  


மை ஊதா நிறத்தில் கிரேப் சில்க புடவை உடலை தழுவி இருக்க, முகத்திற்கு லேசான ஒப்பனை செய்து பொட்டு வைத்துக் கொண்டு வந்தாள்.


“சரி நான் அங்க போகட்டா?” எனக் கேட்டுக் கொண்டு வந்தவளிடம், “இரு உங்க அண்ணாகிட்ட பேசிட்டு போகலாம்.” என்றவன், வீடியோ கால் போட்டான்.
தன் அண்ணனின் முகத்தைத் திரையில் பார்த்ததும்தான் மித்ராவின் முகம் மலர்ந்தது.


“ஹே மித்ரா… எப்படி இருக்க…?”


“நல்லா இருக்கேன் அண்ணா… நீ நான் இல்லாம சந்தோஷமா இருக்கியா?”


“ஏன் அப்படிச் சொல்ற? இப்பதான் அம்மாகிட்ட காலையில் எப்பவும் மித்ராவோடுதான் காபி குடிப்போம்ன்னு சொல்லிட்டு இருந்தேன்.”


“அப்புறம் மாப்பிள்ளை எப்படி இருக்கார்?”


“ஜெய் கேட்டதும், மதியழகன் மித்ராவின் அருகே நெருங்கி உட்கார்ந்தான்.”


“நல்லா இருக்கேன் மச்சான்.”


பிறகு மித்ரா பெற்றோரோடும் சிறிது நேரம் பேசினாள். நாளைக்கு கூப்பிடுறேன் எனச் சொல்லிவிட்டு வைத்தாள்.


வீட்டினரோடு பேசியதும் முகம் கொஞ்சம் தெளிவாக இருந்தது. இவள் கிளம்பும் போது எழிலரசி வந்துவிட்டாள்.


“வாங்க அண்ணி?” மித்ரா மகிழ்ச்சியாக அழைக்க,


“நான் இன்னைக்கு எங்க வீட்டுக்கு கிளம்புறேன் மித்ரா. அதுதான் சொல்லிட்டு போக வந்தேன்.” என்றாள்.


“ஏன் அண்ணி அதுக்குள்ள போறீங்க? இன்னும் ரெண்டு நாள் இருந்திட்டு போகலாமே?”


“பசங்களுக்கு ஸ்கூல் இருக்குல… அதானால அவனுங்க அன்னைக்கே போய்ட்டானுங்க. மாமியார்தான் பார்த்துகிறாங்க. அவங்களுக்கு லீவ் விட்டதும் வரேன்.”


“இதுவே ரேவதி மட்டும் தனியா சமாளிக்க முடியாதுன்னு தான் இத்தனை நாள் இருந்தேன். இதே சுபத்ரா அண்ணி தனியா இருந்தா கூடச் சமாளிப்பாங்க.” என்றாள்.


தன் அக்காவை பற்றி நாத்தனார் உயர்த்திப் பேசுவது கேட்க மித்ராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


“நான் உன்னை விட வரவா அக்கா?” மதியழகன் கேட்க,


“இல்லை மதி, நீ இப்பதான் கல்யாணம் முடிச்சு இருக்க. முதல் தடவை ஜோடியாதான் வரனும். ஒரு நாள் விருந்து வைக்கிறேன். அப்ப ரெண்டு பேருமா வாங்க. இன்னைக்குக் கருணா கூடிட்டு போறான்.” என்றாள்.


எழிலரசி விடைபெற்று கிளம்ப, அவளுடனே மித்ரா சென்றாள். அங்கே சென்றவுடன், எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு, அவளுக்காகக் காத்திருந்த கருணாவுடன் சென்றுவிட்டாள்.


சுபத்ரா குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்புவதில் மும்முரமாக இருக்க… “நான் என்னக்கா பண்ண?” என வந்து நின்றாள் மித்ரா.


“என்னைக் கேட்காத அத்தைகிட்ட போய்க் கேளு. நான் இந்த வீட்ல இல்லைனா என்ன பண்ணி இருப்ப. அப்படி நினைச்சுக்கோ.” என்றாள் சுபத்ரா. அவள் சொன்னபடி நீலவேணியிடம் சென்று மித்ரா நின்றாள்.


“முதல்ல உன் புருஷனுக்குக் காபி கலந்து கொடுத்தியா, அவனுக்குக் கொடுத்திட்டு, நீயும் குடி.” என்றார் அவர்.


“நீங்க குடிச்சிடீங்களா அத்தை. வேற யாருக்கும் கலக்க வேண்டாமா?” எனக் கேட்டுக்கொண்டே சென்றாள்.

சமையல் அறைக்குச் சென்றால்… அங்கே ஒரு மிகப் பெரிய டேசா நிறையப் பால் இருந்தது.


“இதை எப்படித் தூக்குவது? என மலைத்து போய் நின்றாள். அவள் அப்படித்தான் நிற்பாள் என எதிர்ப்பார்த்து வந்த சுபத்ரா, “அங்க பக்கத்தில கரண்டி இருக்குப் பாரு. அதுல ரெண்டு டம்ளர் எடு. ஆரி போயிருந்தா, ஒரு சின்னக் கிண்ணத்துல ஊத்தி சூடு பண்ணிட்டு காபி கலக்கு.” என அவளுக்கு இருந்த வேலையிலும் வந்து சொல்லிவிட்டு சென்றாள்.


அவள் காப்பியோடு வெளியே வர.. மதியழகன் குளித்து முடிந்து வந்து, சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்தான்.


சிரித்த முகமாகக் காபி கொடுத்த மனைவியைப் பார்த்து அவனுக்கும் புன்னகை தொற்றியது. அவளுக்குக் கண்ணைக் காட்டிவிட்டு, சமையல் அறை தாண்டி பின்புறம் சென்றான். மித்ராவும் சற்று இடைவெளி விட்டு அவனைத் தொடர்ந்தாள்.


“நான் போய்க் கடை திறந்து வச்சிட்டு ஒரு பத்து மணிக்கு சாப்பிட வரேன்.” என்றான்.


“என்னது பத்து மணிக்கா.. அதுவரை நானும் சாப்பிட முடியாது இல்ல…” என அவள் கவலையைப் பார்த்து, அவனுக்குச் சிரிப்பு வந்தது.


“ஒரு ஒன்பது ஒன்பதரைக்கு வந்தா பரவாயில்லையா?” என்றான்.


“ம்ம்..” என்றாள்.


“சரி நான் போயிட்டு வரேன். உனக்கு எதாவது பிடிக்காதது நடந்தா. நான் வந்ததும் என்கிட்டே சொல்லு. நீயா எதுவும் துடுக்குத்தனமா பேசி வைக்காத.” எனச் சொல்லிவிட்டே சென்றான்.


தன் பிள்ளைகளோடு கருணாவின் பையனையும் அழைத்துக் கொண்டு கதிரேசன், அவர்களைப் பள்ளியில் விடச் சென்றான்.


“இதுல தோசை மாவு இருக்கு, அங்க டேபிள்ள சட்னி இருக்கு. மதி வந்தா தோசை ஊத்திக் கொடுத்திட்டு, நீயும் சாப்பிடு. நான் போய்க் குளிச்சிட்டு வரேன்.” எனச் சுபத்ரா ஓடினாள்.


வெறும் தேங்காய் சட்னி, மட்டும் தான் இருந்தது. இதை மட்டும் வச்சு எப்படிச் சாப்பிடுறது? என நினைத்தவள், இட்லி மிளகாய் பொடி இருக்கிறதா எனத் துழாவினாள்.


சமையல் அறைப் பக்கம் வந்த நீலவேணி, “என்ன தேடுற?” என்றார். “இல்லை சட்னி மட்டும்தான் இருந்துச்சு, அதுதான் மிளாகாய் பொடி இருக்கான்னு பார்க்கிறேன்.” என்றாள்.


“முதல்ல சாப்பிடுறவங்க ஊத்தி சாப்பிடுங்க. பிறகு பத்தலைனா உன் அக்காளுங்க திரும்ப அரைப்பாங்க.”


“நான் சும்மாதான் இருக்கேன். நான் வேணா இன்னொரு சட்னி வைக்கவா அத்தை ?”


“சரி வையேன்.” என்றார்.


திரும்பத் தேங்காய் சட்னி வைப்பதற்கு, தக்காளி சட்னி செய்வோம் எனக் கொஞ்சம் தக்காளி, பூண்டு, காஞ்ச மிளகாய் சேர்த்து வதக்கி உப்பு வைத்து அரைத்து வைத்தாள்.


“மாமா சாப்பிட வந்திட்டார். அவருக்குத் தோசை ஊத்தணும்.” என நீலவேணி வர… நான் ஊத்துறேன் என மித்ரா பொறுபேற்றுக் கொண்டாள்.


அவள் தோசை ஊற்றிக் கொடுக்க, ஹாலில் சாப்பிட்ட கணவருக்கு நீலவேணி பரிமாறினார். எப்போதும் இரண்டு தோசையோடு போதும் என்பவர், இன்று மூன்று தோசை சாப்பிட்டார்.


“கார சட்னி நல்லா இருந்துச்சு. எப்பவும் ஒரு சட்னி தானே வைப்பீங்க.” என்றார்.


“மூத்தவளுங்களுக்குக் காலையில எங்க நேரம் இருக்கு. சின்னவன் பொண்டாட்டி வச்சா.” என்றார். துரை கடைக்குக் கிளம்பி சென்றார்.


“நீங்களும் அப்படியே சாப்டிடுறீங்களா அத்தை.” என மித்ரா தோசையோடு வர, சரி என அவர் சாப்பிடும் போதே, மதியழகனும் வர… அவனுக்கும் ஊற்றினாள்.
அவன் தட்டில் சட்னிகளை எடுத்துக் கொண்டு அடுப்படிக்கே வந்து விட்டான்.

அவன் ஒரு வாய் சாப்பிடுவது, மனைவிக்கு ஒரு வாய் ஊட்டுவது என அவன் அலும்பு பண்ண, பின்பக்கமாக வந்த சுபத்ரா, அவர்களைப் பார்த்து விட்டு, வந்த சுவடு தெரியாமல் திரும்பி சென்றாள்.

வீட்டை சுற்றிக் கொண்டு முன்பக்கமாக வந்தவள், ஹாலில் மாமியாரின் அருகில் உட்கார்ந்து கொண்டாள். அப்போது கதிரேசன் சாப்பிட வந்தவன், அவனும் அவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தான். எப்போதும் லேட்டாக வரும் கருணாவும் அன்று சீக்கிரமே வந்துவிட…


“சாப்பிட்டியா?” என்றான் அண்ணனிடம்.


மேலும் ஐந்து நிமிடங்கள் ஆகியும், அவர்கள் இருவரும் சமையல் அறையில் இருந்து வரும் வழியைக் காணோம்.


“மதி, இன்னுமா சாப்பிடுற? மாவு இருக்கா… இல்லைனா நாங்க வெளிய சாப்பிடுக்கவா?” கருணா குரல் கொடுக்க,


மதியழகன் தட்டில் தோசைகளோடு சிரித்தபடி வந்தான். சுபத்ரா எழுந்து சமையல் அறைக்குச் சென்றாள். அங்கே மித்ரா வெட்கப்பட்டுக் கொண்டு நின்றாள்.


தங்கையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தட்டுகளை எடுத்துக் கொண்டு சென்றாள்.


கதிரேசனும், கருணாவும் சாப்பிட, மதி அவர்களோடு உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தான். மித்ரா தோசை சுட சுபத்ரா இருவருக்கும் பரிமாறினாள்.
சாதாரணமாக அவரவர் கணவர் சாப்பிடும் போது, அவரவர் தான் தோசை ஊற்றுவது. அதுவும் தனித் தனியாகத்தான் சாப்பிட வருவார்கள். இன்று எல்லோரும் சேர்ந்து இருந்ததால்… சேர்ந்து சாப்பிட்டனர்.


அவர்கள் மூவரும் கடைக்குச் சென்றதும், சுபத்ரா சாப்பிட அப்போதான் ரேவதி வந்தாள்.


“என்ன ஆச்சு?” என்ற சுபத்ராவிடம் “ரொம்பப் படுத்துறா அக்கா…” என்றாள் ஒரு வயது மகளைக் காட்டி.


“அவளுக்கு உடம்பு சரி இல்லை பாவம் என்ன பண்ணுவா? சரி வா, வந்து சாப்பிடு.” என்றாள். அப்போது தோசையோடு வந்த மித்ராவும் சாப்பிடுங்க ரேவதி அக்கா என்றாள்.


“இன்னைக்கு மித்ராதான் எல்லோருக்கும் தோசை சுட்டிருக்கா.”


“அப்படியா நான் உனக்குச் சுடவா.” ரேவதி கேட்க, “நான் சாப்பிட்டேன் அக்கா.” என்றாள்.


“நீயே ஊத்திக்கிட்டா ஆறிப் போயிடாது.” ரேவதி சொல்ல,


“அதெல்லாம் அவங்க வீட்டுக்காரர் சுட சுட ஊட்டி விட்டுத்தான் போனார்.” என்றாள் சுபத்ரா சாப்பிட்டபடி.


மாமியார் வெளி திர்ணையில் இருந்தார். இவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர். “ஏன் அக்கா இப்படி மானத்தை வாங்கிற?” என்றாள் மித்ரா.


“இன்னைக்கு மட்டும் மதி எத்தனை தடவை வீட்டுக்கு வருதுன்னு நாம குறிச்சு வைக்கிறோம்.” என்றாள் ரேவதி. சுபத்ராவும் ஆமோதித்தாள்.


அதன் பிறகு ஒருவர் வீட்டை பெருக்க, மற்ற இருவர் பாத்திரம் தேய்த்தனர். நிறையப் பாத்திரங்கள் இருக்கும், ஒருவரே தேய்த்தால் கஷ்டமாக இருக்கும், அதற்குத் தான் இருவர் செய்வது.


பதினோரு மணி போல் கடைப் பையன் காய்கறி, மளிகை சாமான்கள் எல்லாம் கொண்டு வந்தான். சமையல் அறையை ஒட்டி உணவு அறை இருக்கும். அங்கே உட்கார்ந்து பேசியபடி காய்கறி கூடையைச் சுபத்ரா கொட்ட, உள்ளே இருந்த பேப்பரை எடுத்த மித்ரா, “இது என்ன லட்டர்?” என்றாள் அதைக் கையில் எடுத்தபடி.


“நீயே படி.” என்றாள் ரேவதி.


அதில் இன்று புளிக்குழம்பு வைத்து முட்டைகோஸ் கூட்டு செய்யவும் என எழுதி இருந்தது.


“இது யார் எழுதினது?” மித்ரா கேட்க, சுபத்ரா ஹாலை எட்டிப் பார்த்து விட்டு, மெதுவாக, “மாமா.” என்றவள், “அவர்தான் தினமும் மதியம் என்ன சமையல்ன்னு சொல்வார்.” என்றாள்.


“நான் வேற எதோ பேப்பர்ன்னு நினைச்சேன்.” மித்ரா சொல்ல,


“என்ன மாமா அத்தைக்கு எழுதின லவ் லெட்டர்ன்னு நினைச்சியா?” ரேவதி சொல்ல, அதைக் கேட்டு அக்கா தங்கை இருவரும் சத்தம் வராமல் சிரித்தனர்.
காய்கறிகளைக் கழுவி எடுத்துக் கொண்டு போய், ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மாமியார் முன்பு ரேவதி வைக்க, அவர் காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தார்.


அப்போது மதியழகன் பின் வாசல் வழியாக வந்தான். அவனைப் பார்த்ததும் அண்ணிமார் இருவரும் நமட்டு சிரிப்புடன் எழுந்து ஹாலுக்குச் சென்று விட…. அவன் மித்ராவை அழைத்துக் கொண்டு சென்று, பின் வாசல் படியில் அமர்ந்தான். உட்காருவதற்கு முன் கதவை மூடிவிட்டே உட்கார்ந்தான்.


“இந்தா உனக்கு ஹல்வா வாங்கிட்டு வந்தேன். இப்பதான் சூடா கிண்டினாங்க.” என வாழை இலையில் மடித்து இருந்த ஹல்வாவை, அவனே எடுத்து மித்ராவுக்கு ஊட்டிவிட்டான். மித்ராவும் அவனுக்குகொடுத்தாள்.


அதைச் சாப்பிட்ட பிறகு இளநீர் உடைத்துக் கொடுத்தான். அவள் குடித்து முடித்ததும், “இந்தப் பையில இருக்கிறது அண்ணிங்க கிட்ட கொடு, மதியம் சீக்கிரம் வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.


அவன் சென்றதும் சுபத்ராவும் ரேவதியும் சமையல் அறைக்கு வந்தனர். மித்ரா கொடுத்த பையில் இருந்த ஹல்வாவை எடுத்த ரேவதி, “உங்க வீட்டுக்காரர் ஹல்வாவை ஊட்டி விட்டுட்டு போனாராக்கும்.” என்றபடி எடுத்து சாப்பிட, மித்ரா புன்னகைத்தாள்.


“அதெல்லாம் கல்யாணம் ஆன புதுசுல எல்லோரும் அப்படித்தான் இருப்பாங்க. அப்புறம் நம்மைத் திரும்பி கூடப் பார்க்க மாட்டாங்க.” என்றாள் கிண்டலாக.

 

அதைக் கேட்டு மித்ராவின் முகம் மாற, அதைக் கவனித்த சுபத்ரா, “அப்படியெல்லாம் சொல்ல முடியாது ரேவதி. என் வீட்டுக்காரர் இப்படி ஒருநாளும் என்னைக் கவனிச்சதே இல்லை. அவர் அன்னையில இருந்து இன்னைக்கு வர அப்படியே தான் இருக்கார். ஒருவேளை மதியும் இப்படியே எப்பவும் இருக்கலாம். அதெல்லாம் சொல்ல முடியாது, ஒவ்வொருத்தரோட குணம்.” என்றாள்.

அதைக் கேட்டு திரும்ப மித்ராவின் முகம் மலர… ரேவதியின் முகம் வாடியது. அக்கா தங்கையை விட்டுக் கொடுப்பாங்களா என நினைத்தாள்.


மூவரும் சேர்ந்து செய்ததால்… பன்னிரெண்டு மணிக்குள் சமையல் செய்து முடித்து விட்டனர். மதிய உணவுக்காக மதியழகன் பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.


சுபத்ராவும் ரேவதியும் அவர்களுக்கு உணவு கொடுக்க, மதியழகனும் மித்ராவும் பின்கட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.


“நீங்க அடிக்கடி வீட்டுக்கு வர்றதை பார்த்து உங்க அண்ணிங்க ரெண்டு பேரும் கிண்டல் பண்றாங்க.”


“காலையில பசங்களைப் பெரிய அண்ணன் கொண்டு போய் விடுவார், சாயந்திரம் சின்ன அண்ணன் வீட்டுக்கு கூடிட்டு வருவார். மதியம் எப்பவும் நான்தான் கூடிட்டு வருவேன்.”


“இது இல்லை. நீங்க அப்ப வந்தீங்க இல்லை, அதுக்கு. கல்யாணம் ஆன புதுசுல இப்படித்தான் கவனிப்பீங்கலாம் அப்புறம் கண்டுக்கவே மாட்டீங்கலாம். அப்படியா?”


“இப்படி வேற போட்டுக் கொடுக்கிறாங்களா?” என மதியழகன் சிரித்தான். ஆனால் மித்ரா முகத்தில் ஒரு கலக்கம், அதைக் கவனித்தவன், “தினமும் ஹல்வா வாங்கிட்டு வரமாட்டேன் தான். ஆனா அந்த டைம்முக்கு கண்டிப்பா உன்னைப் பார்க்க வரேன். போதுமா.” என்றான்.


மித்ரா சந்தோஷமாகப் புன்னகைத்தாள். பிறகுதான் நினைவு வந்து, “உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கணும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்க என்னைப் பார்க்கும் போது எல்லாம் அட்வைஸ் தான பண்ணுவீங்க. அதனால உங்களுக்கு என்னைப் பிடிக்காதுன்னு நினைச்சேன்.” என்றாள்.


அவள் கேட்டதும் மதியழகனுக்கு இன்பமான சில நினைவுகள். “அது அப்படி இல்லை மித்ரா. எனக்கு உன்னைப் பத்தி தப்பா யாரும் சொல்லிட கூடாதுன்னு ஒரு பதட்டம்ன்னு வச்சுக்கோயேன். அதனால தான் அட்வைஸ் பண்ணுவேன். மத்தபடி உன்னைப் பிடிக்காம இல்லை.”


“நாம நைட் அதைப் பத்தி பேசுவோம்.” என்றவன், பிள்ளைகளைத் திரும்பப் பள்ளியில் விடச் சென்றான்.


மதியம் கிட்டத்தட்ட ஆண்கள் எல்லோருமே ஒரே நேரத்திலேயே வர.. எல்லோருக்கும் ஹாலில் வைத்து உணவு பரிமாறினர். கதிரேசன் அப்பளம் கேட்க, சுபத்ரா வறுத்துக் கொண்டு வந்தாள். கருணா தயிர் போட்டு பக்கோடா வைத்துக் கொண்டு சாப்பிட்டான், துரையும், மதியும் மட்டுமே ஒழுங்காகப் பொரியல் வைத்துக் கொண்டு சாப்பிட்டனர். நிறையப் பொரியல் வீண்ணாகியது. மித்ரா எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தாள்.


ஆண்கள் ஹாலில் டீவி பார்க்க, அக்கா தங்கைகள் மூவரும் அங்கிருந்த அறைகளிலேயே கொஞ்ச நேரம் படுத்து எழுந்தனர். மாலை நான்கு மணிக்கு டீ குடித்து விட்டு, மீண்டும் ஆண்கள் கடைக்குச் சென்றுவிட்டனர்.


மாலை பிள்ளைகள் வர… நேரம் அவர்களோடு சென்றது. மித்ரா அவர்களது பகுதிக்கு வந்து தலை வாரி, முகம் கழுவி, சமையல் அறை அலமாரியில் இருந்த சாமி படம் முன்பு விளகேற்றிவிட்டு, வீட்டிலும் லைட் போட்டுவிட்டு, திரும்பப் பெரிய வீட்டிற்கு வந்தாள்.


பெரிய வீட்டிற்கும் இவர்கள் பகுதிக்கும் நடுவில் நிறைய இடம் இருக்கும். அதில் சிமெண்ட் போட்டு பூசி இருப்பார்கள். பிள்ளைகள் விளையாடுவது, பாடம் படிப்பது எல்லாம் அங்கேதான். அங்கே காற்றும் நன்றாக வரும்.


ஏழு மணி ஆனதும் திரும்பச் சாதம் வைத்து, குழந்தைகளுக்குப் பால் ஊற்றி பிசைந்து சுபத்ரா ஊட்டி விட்டாள். மற்றவர்களுக்கு ரேவதி ரசமும் துவையலும் செய்தாள்.


கதிரேசனுக்கும் மதியழகனுக்கும் இரவில் டிபன் தான் வேண்டும். அவர்களுக்கு மித்ரா இட்லி ஊற்றி சட்னி செய்தவள், சுபத்ராவிடம் சொல்லிவிட்டு தனக்கும் இட்லியே ஊற்றிக் கொண்டாள்.


இரவு உணவு முடிந்ததும், இன்று ரேவதியும், மித்ராவும் சேர்ந்து பாத்திரம் தேய்க்க… மதியழகன் அவர்களோடு நின்று பேசிக் கொண்டு இருந்தான்.


“மித்ரா, சின்ன அண்ணியைப் பொண்ணு பார்க்க, அப்பா, அம்மா எழில், சுபத்ரா அண்ணி அப்புறம் நான் மட்டும்தான் போனோம்.”


“அப்ப என்ன நடந்துச்சு தெரியுமா?” மதியழகன் சற்று இடைவெளி விட…


“என்ன ஆச்சு?” மித்ரா ஆர்வமாக…


“மதி கொன்னுடுவேன். ஒழுங்கா போயிடு….” என்றாள் ரேவதி.
மதியழகன் சிரிப்பை அடக்கியபடி, “பெண்ணைக் கூடிட்டு வாங்கன்னு சொன்னதும், அண்ணி வந்தாங்களா.. முகத்தில அப்படி ஒரு வெட்கம்.”


“கொஞ்ச நேரத்தில் சரிமா உள்ள போன்னு சொன்னதும், தலையை நிமிர்ந்து அண்ணாவை தேடுறாங்க. அப்பத்தான் அண்ணன் வரலைன்னு தெரியும். அப்ப அவங்க முகத்தைப் பார்க்கணுமே…”


“எனக்கு என்ன தெரியும், உங்க அண்ணன் வரலைன்னு. நான் அவர் வந்திருப்பாருன்னு நினைச்சேன்.” ரேவதி இழுக்க…


“அண்ணன் உங்க போட்டோ பார்த்தே பிளாட் ஆகிட்டார் அண்ணி.” மதியழகன் சொல்ல,


“அப்படியா? ஆனா என்கிட்ட அப்படி ஒன்னும் சொல்லலையே?”
அவர்கள் பேசும்போதே கருணா வந்துவிட, “என்னங்க நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி என்னோட போட்டோ பார்த்தீங்க.” ரேவதி கேட்க,


“போட்டோவா, எனக்குக் கல்யாணம்னே, எங்க அப்பா பரிசம் போடுற அன்னைக்குதான் சொன்னார். இதுல எப்படிப் போட்டோ காட்டுவார். எனக்கு எல்லாம் சாய்ஸ்சே கொடுக்கலை.”


“ஆனா அவருக்கும் ஒருத்தன் தண்ணி காட்டி இருக்கான் தெரியுமா….” என்றான்.


உடனே பதறிய மதியழகன் “அண்ணா, நீ உள்ள வா…” என அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.


ரேவதிக்கு புரியவில்லை. மதியம் மதி பேசியதையும், இப்போது கருணா சொன்னதையும் வைத்து, மித்ராவுக்குக் கொஞ்சம் புரிய… முகம் மலர்ந்தாள். இன்னைக்குக் கண்டிப்பாகத் தன் கணவனிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.























Advertisement