Advertisement

சண்ட கோழி


அத்தியாயம் 7


அன்று சம்பந்தி விருந்து என்பதால்…. காலையிலேயே மித்ரா எழுந்து குளித்து, தனது பெட்டிகளில் மிச்சம் மீதி வைக்க வேண்டியது இருந்தவைகளையும் வைத்துக் கொண்டு இருந்தாள்.


சுபத்ராவும், அவள் அம்மாவும் அவளுக்கு உதவிக் கொண்டு இருந்தனர். வீட்டில் வைத்தால் இடம் பத்தாது என வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த சின்ன மண்டபத்தில் காலையும் மதியமும் உணவுப் பரிமாறுவதாக இருந்தது.


இவர்களின் பக்கம் சொந்தங்கள் எல்லாம் காலை உணவுக்கு வந்து விடுவார்கள். மாப்பிள்ளை வீட்டினர் மதியம்தான் வருவார்கள்.


“சங்கமித்ரா முகத்தை இப்படி வச்சுக்காத மாப்பிள்ளை பார்த்தா தப்பா நினைக்கப் போறார். சந்தோஷமா கிளம்புமா.” அவள் அம்மா சொல்ல, மித்ரா அவரைப் பார்த்து முறைத்து வைத்தாள்.


ஜெய், காலை உணவு மண்டபத்தில் சமைப்பத்தை ஒரு எட்டு சென்று பார்ப்பான், பிறகு தங்கை இருக்கும் இடத்திற்கு வேலை இருப்பது போல வந்து நிற்பான்.


அவன் வருவதும் போவதுமாக இருப்பதைப் பார்த்த அவர்கள் அம்மா, “ஜெய் தான் பாவம், இவளை விட்டுட்டு எப்படி இருப்பானோ தெரியலை. மித்ரா வீட்ல இருந்தா… பத்து தடவை வீட்டுக்கு வருவான்.” என்றார் சோகமாக.


“ஆமாம் மா எனக்கும் அண்ணனைப் பார்த்தா பாவமா இருக்கு. அண்ணனுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுங்க மா… அப்ப அண்ணனுக்கு ஒன்னும் தெரியாது. உங்களுக்கும் வீட்டுக்கு மருமகள் வந்திட்டா நல்லா இருக்கும்.” என்றாள் சுபத்ரா.


“அம்மா, அண்ணனுக்கு நம்ம வாணி அத்தை பொண்ணு நிஷாவை கேளுங்க மா. அண்ணனுக்கு அவளைப் பிடிக்கும்.” என்றாள் மித்ரா.


“உனக்கு எப்படி டி தெரியும்? உங்க அண்ணன் சொன்னனா?”


“இல்லை. ஆனா எனக்குத் தெரியும். அண்ணனுக்கு அவளைப் பிடிக்கும்.” என்றாள் மித்ரா உறுதியாக.


“நல்லப் பொண்ணுமா அவ…” என்றாள் சுபத்ராவும். ரத்த சொந்தம் இல்லையென்றாலும், நிஷாவின் அம்மா அவர்களுக்கு அத்தை முறை. நிஷாவும் மித்ராவும் தோழிகள்.


“சரி ஒரு மூன்னு மாசம் போகட்டும். பேசலாம்.” என்றார்.


உறவினர்கள் வர தொடக்கி விட, அதன் பிறகு இவர்களுக்கும் பேச நேரம் இல்லை. மதியம் பெரிய பட்டுபுடவைக் கட்டி, மித்ரா நன்றாக அலங்காரம் செய்து மதியழனோடு மண்டபம் சென்றாள்.


பன்னிரெண்டு மணி போல்… மதியழகன் வீட்டினர் காரிலும், வேன்னிலும், தங்கள் சொந்தபந்தங்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டனர். கூடவே மதியழகனின் நண்பர்கள்.


“டேய் மாப்பிள்ளை. என்ன டா நம்ம பையன் தேறுவானா?” நடராஜ் வெங்கடேஷிடம் கேட்க,


“இரு பார்ப்போம், மாப்பிள்ளை முகத்தைப் பார்த்ததும் தெரிஞ்சிடும்.” என்றான் வெங்கடேஷ்.


“இவர்கள் எல்லோரும் வருவது தெரிந்து மதியழகன், வெளியே வந்து நின்றிருந்தான். இவர்களைப் பார்த்ததும் அவன் சந்தோஷமாகக் கை அசைக்க,

“டேய் நம்ம பையன் வாழ்ந்துட்டான் டா… முகமே சொல்லுது பார்.” என்றான்.


“உனக்குக் கல்யாணமே ஆகலை உனக்கு எப்படி டா தெரியும்?”


“எல்லாம் பொது அறிவுதான்.” என்ற வெங்கடேஷ் மதியழகன் அருகில் சென்றான்.


மதியம் மட்டன் பிரியாணி, அது பிடிக்காதவர்களுக்குச் சிக்கென் பிரியாணி, அதுவும் வேண்டாம், நாங்கள் சைவம் என்பவர்களுக்கும், தனிச் சமையல் செய்யப்பட்டிருந்தது.


மதியம் உணவு நேரத்திற்குத் தான் நிஷா தன் பெற்றோரோடு வந்தாள். உயரமாக ஒடிசலாக, மாநிறத்தில் பாந்தமான அழகுடன் இருந்தாள். அவள் வந்ததும் மித்ராவும் நிஷாவும் ஒன்றாகச் சுற்றிக் கொண்டு இருந்தனர்.


ஜெய் நிஷாவை பார்த்தான். ஆனால் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. ‘சரியான கல்லுணி மங்கன் டா நீ…’ என மித்ரா மனதிற்குள் அவனைத் திட்டுக் கொண்டாள். நிஷாவும் அப்படித்தான் இருந்தாள். அவளுக்கும் ஜெய்யை பிடிக்கும். ஆனால் மித்ராவிடமே இதுவரை வாய்த்திறந்தது இல்லை.


காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டு, தினமும் பத்து மணி நேரம் போன்னில் கடலைப் போட்டு… அது போதாதென்று வெளியில் சேர்ந்து சுற்றி எனக் காதலிக்கும் காதலர்களை விட… தங்கள் காதலை சொல்லிக் கொள்ளாமல். தங்கள் மனதிற்குள் மட்டும் காதலிப்பவர்களின், காதல் இன்னும் வலிமையானது.


மதியழகனும் அப்படித்தான் தன் மீது காதல் கொண்டிருந்தான் எனச் சங்கமித்ராவுக்கு இன்னும் தெரியாது.


தங்கள் பக்கம் சொந்த பந்தம் சாப்பிட்டு முடித்ததும், புது மணமக்களை அழைத்து வரும் பொறுப்பைக் கதிரேசன் சுபத்ராவிடம் விட்டு, மற்றவர்களை அழைத்துக் கொண்டு துரை வேன்னில் கிளம்பி விட்டார். வெங்கடேஷ், நட்ராஜ் மட்டும் போகவில்லை.


மதியம் மூன்று மணி போல மண்டபத்தில் இருந்து வீடு வந்தனர். மித்ரா அறையில் பட்டுப்புடவையை மாற்ற, அவளிடம் வந்த மதியழகன், “மித்ரா, நீ உங்க அண்ணன்கிட்ட நல்லா பேசி நான் பார்க்கவே இல்லை. உங்க ரெண்டு பேர்க்கும் இடையில என்னன்னு எனக்குத் தெரிய வேண்டாம். ஆனா நீ அவர்கிட்ட பேசாம வந்தேன்னா… அங்க வந்து, நீயும் நிம்மதியா இருக்க மாட்ட. அவரும் இந்த நிம்மதியா இருக்க மாட்டார்.” என்றான்.


மித்ரா கீழே வந்தபோது, ஹாலில் ஜெய் மட்டுமே இருந்தான். அவளாகச் சென்று அவன் பக்கத்தில் உட்கார, “நான் உன்னை அன்னைக்குக் கோபத்தில்தான் அப்படிப் பேசினேன். உன்னைப் போய் நான் தப்பா நினைப்பேனா மித்ரா. நானே அந்தப் பய என்ன ஓரண்டையை இழுக்கப் போறான்னு பயந்து போய் இருந்தேன். நீ வேற மாப்பிள்ளைகிட்ட முகத்தைத் திருப்பிட்டே இருந்த… அந்தக் கோபத்தில பேசிட்டேன்.”


“அதுக்காக நீ அண்ணாகிட்ட பேசாம இருப்பியா?”


“சரி அதை விடு அண்ணா. ஆனா உனக்கு ஒன்னு தெரியுமா?” என்றவள், முன்தினம் படம் பார்த்துவிட்டு வந்தபோது நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டாள்.


“அவரு உன்னை ஒன்னும் சொல்லலையா?”


“இல்லையே… அவர் என்னை நம்புறார்.” சொல்லும்போதே அவள் குரலில் அவ்வளவு பெருமிதம், அதைப் பார்த்து ஜெய்க்குச் சிரிப்பு வந்தது.


“ம்ம்… மதியழகன் உன்னை ரொம்ப மயக்கிட்டார் போலவே…எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு மித்ரா. அவர் உன்னைப் நல்லா பார்த்துப்பார், எனக்கு இனி கவலை இல்லை.”


“ஏன் நான் அவரை நல்லா பார்த்துக்க மாட்டேனா?”


மித்ரா துடுக்காகக் கேட்க, “அப்படி நடந்தாலும் சந்தோஷம்தான்.” என்றவன், “நீ உன் வீட்டுக்கு போகும் போது சிரிச்சிட்டு போகணும் மித்ரா. அழுதுட்டு மட்டும் போகாத. உன் அழுத முகமே என் கண்ணுல நிக்கும்.” என்றான் ஜெய்.


மாலை ஐந்து மணி போல… சங்கமித்ரா தன் புகுத்த வீடு கிளம்பினாள். அவளின் அண்ணனின் விருப்பத்திற்கு ஏற்ப, சிரித்த முகமாகவே எல்லோரிடம் சொல்லிக் கொண்டு சென்றாள்.


ஒரு அழுகாச்சி ஸீனை எதிர்பார்த்த மதியழகனுக்குக் கூட மித்ராவின் இந்தச் செய்கையை நம்ப முடியவில்லை.


ரொம்பச் சந்தோஷப்பட்டுக்காத, கார்ல ஒரு ஆக்க்ஷன் ஸீன் இருக்கு டா உனக்கு.


“நீங்க என் தங்கச்சியை நல்லா பார்த்துபீங்க. ஆனா கொஞ்சம் எங்க வீட்டுக்கும் அடக்கடி வந்து போய் இருங்க.” என்றுதான் விடைபெறும் போது, ஜெய் மதியழகனிடம் கேட்டுக் கொண்டான்.


மதியழகன் காரை ஓட்ட, அருகே கதிரேசன் உட்கார்ந்து இருந்தான். நடு இருக்கையில் சங்கமித்ரா, சுபத்ரா மற்றும் அவளின் பிள்ளைகள். சுமோ என்பதால்.. பின்புற இருக்கையில் வெங்கடேஷும், நட்ராஜும் இருந்தனர்.


அதுவரை அண்ணனுக்காகப் பொறுத்துக் கொண்டிருந்தவள், கார் நகர்ந்ததுமே அடக்க முடியாமல் கண்ணீரை கொட்டி விட… ஆளாளுக்கு அவளுக்குச் சமாதானம் சொல்லினார்கள்.


“நான்தான் உன்னோட இருக்கேன் இல்லை.” எனச் சுபத்ராவும்,


“மதி உன்னை நல்லா பார்த்துப்பான் மா…” என நட்ராஜும்.


“விடு தங்கச்சி… அதெல்லாம் நாங்க எல்லாம் இருக்கோம் உனக்கு.” என வெங்கடேஷும் சொல்ல…. அவர்களைப் போலச் சமாதானம் சொல்ல எண்ணிய கதிரேசன், “நீ என்ன வெளிநாட்டுக்கா போற? நினைச்சா பார்த்துக்கலாம்.” என வாய் விட…


“அப்படி எத்தனை தடவை அத்தான், நீங்க எங்க அக்காவை எங்க வீட்டுக்கு கூடிட்டு வந்திருக்கீங்க? இல்லைனா அனுப்பி வச்சிருக்கீங்க?” சங்கமித்ரா நறுக்கென்று கேட்க,


அவள் இப்படிப் பேசுவாள் என எதிர்பார்க்காத மதியழகன், “ஹே யாரைப் பார்த்துக் கேள்வி கேட்கிற?” என்றான் கோபமாக.


“அவர் உங்க அண்ணன் மட்டும் இல்லை. என்னோட அக்கா வீட்டுக்காரர், என்னோட அத்தான். எனக்கு அவரைக் கேட்க உரிமை இருக்கு.” என்றாள் மித்ராவும் எடுத்தெறிந்து.


“அவ என்னோட கொழுந்தியா, அவளுக்கு என்னைப் பேச உரிமை இருக்கு. நீ ரோட்டை பார்த்து வண்டி ஓட்டு.” என்றான் கதிரேசனும்.


“இந்த ஏழு வருஷத்துல, தலை தீபாவளிக்கு ரெண்டு நாள் வந்தீங்க, அப்புறம் பொங்கலுக்கு ஒரு நாள் வந்தீங்க. முதல் குழந்தைக்கு ஒன்பது மாசம் இருக்கும் போது அக்கா வந்தா… குழந்தை பிறந்து மூன்னு மாசம் வரை இருக்கட்டும்ன்னு, எங்க அம்மா கெஞ்ச கெஞ்ச முப்பது நாள்லையே கூடிட்டு போனீங்க. ரெண்டாவது குழந்தைக்கு அனுப்பவே இல்லை. இப்ப கடைசி நாலு வருஷமா வருஷத்துக்கு ஒருவாரம் அனுப்புறீங்க. இதுதான் நீங்க சொன்ன நினைச்சா பார்த்துக்கலாமா?”


மித்ரா இப்படிப் புள்ளி விவரத்தோட தாக்குவாள் என யார் எதிர்ப்பார்த்தார்? எல்லாம் வாய்யடைத்து போய் இருந்தனர்.


“நீங்க நல்லா வச்சுகிட்டா பொண்ணுங்க அம்மா வீட்டை மறந்திடனுமா? உங்களுக்கு அண்ணன் தம்பி மாதிரிதானே எங்களுக்கும் இருக்கும்.”


“நான் இப்பவே சொல்லிட்டேன். நான் எங்க அக்கா மாதிரி இருக்க மாட்டேன். நான் எங்க அப்பா அம்மா அண்ணனை பார்க்க வருவேன். அது யார் தடுத்தாலும் நிக்காது.”


இன்று அவள் வீட்டினரை பிரிந்து வந்தது, இனி அவர்களை எப்போது பார்ப்போமோ என்ற கவலை… அதோடு கதிரேசன் பேசியது, எல்லாம் சேர்ந்து, மித்ரா மனதில் இருந்ததைக் கொட்டி விட்டாள்.


காரை ஓரமாக நிறுத்திய மதியழகன், “மித்ரா, இப்ப மட்டும் நீ வாயை மூடலைன்னு வச்சுக்கோ… அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன் சொல்லிட்டேன்.”


“யாரு டி உன்னைப் போக வேண்டாம்ன்னு சொன்னா? இப்பவே வேணா இறங்கிப் போ.” என்றான் கோபமாக.


“டேய் ! அந்தப் பிள்ளை அவங்க வீட்டை விட்டு வந்த டென்ஷன்ல பேசினா… நீயும் புரிஞ்சிக்காம பேசுற? நீ இறங்கு நான் ஓட்டுறேன்.” என வெங்கடேஷ் சொல்ல, மதியழகன் இறங்கி சென்று மித்ராவின் அருகில் அமர்ந்தான்.


கதிரேசனின் பிள்ளைகள் நட்ராஜிடம் சென்று உட்கார்ந்து கொண்டனர். மதியழகன் மித்ராவை முறைத்துக் கொண்டே வந்தான். மித்ராவும் கோபமாக இருந்தாள்.


கதிரேசன் சுபத்ராவை பார்த்தான். அவள் எப்போதும் போல அமைதியாக இருந்தாள். மித்ரா கோபமாகச் சொன்னாலும் உண்மையைத்தான் சொன்னாள். ஆனால் சுபத்ரா எப்போதாவது இப்படி மித்ரா மாதிரி சண்டை பிடித்து இருந்தால்… அவனுக்கும் புரிந்து இருக்குமோ என்னவோ…. ஆனால் இதுவரை சுபத்ரா அப்படி எதுவும் செய்தது இல்லை.


பாதித் தூரம் சென்றதும், வழியில் டீ குடிக்க நிறுத்தினர். எல்லோரும் சென்று விட, மதியழகன் மித்ரா மட்டும் காரில் இருந்தனர்.


அவள் பக்கம் திரும்பியவன், “இங்கப் பாரு மித்ரா, நான் இன்னைக்குச் சொர்லதுதான். எதுனாலும் நீ என்கிட்ட தான் சொல்லணும். யாரையும் நீ நேரடியா குற்றம் சொல்ற வேலையெல்லாம் வேண்டாம்.”


“இன்னைக்கு நீ பெரிய அண்ணன்கிட்ட பேசின மாதிரி, சின்ன அண்ணன்கிட்ட பேசி இருந்தா, பிரச்சனை வேற மாதிரி போய் இருக்கும்.”


“இன்னொரு தடவை நீ இந்த மாதிரி யாரையும் எடுத்து எரிஞ்சு பேசினா…. நான் வாயில பேச மாட்டேன், கையில்தான் பேசுவேன். புரியுதா?”


“இது உங்க வீடு மாதிரி இல்லை. கூட்டுக் குடும்பம். ஒரு வார்த்தை பேசினாலும் யோசிச்சுதான் பேசணும்.” என்றான் அழுத்தமாக.


மித்ரா மௌனமாகவே இருக்க, அவளின் முகத்தைப் பற்றித் தன் பக்கம் திருப்பி, “இங்கப் பாரு டி என்னை.” என்றான்.


அவள் அவன் முகம் பார்க்க, “நான் உன்னோட நியாயமான விருப்பத்துக்கு எப்பவும் மறுப்பு சொல்ல மாட்டேன். ஆனா என்னைக் கேட்காம, நீயா இன்னொரு தடவை இப்படிப் பேசி வச்ச. தொலைச்சிடுவேன் சொல்லிட்டேன்.”


“நான் உன்னை நல்லா வச்கிக்கனும்ன்னு ஆசைப்படுறேன் மித்ரா. அதை நீயா கெடுத்துக்காத.” என்றவன், “சரியா, வாயைத் திறந்து சொல்லு டி.” என்றான்.


“சரி போங்க, இனிமே உங்ககிட்டயே சொல்றேன்.” மித்ரா சொல்ல, அதன்பிறகே மதியழகன் நிம்மதியானான்.


வெங்கடேஷும் நட்ராஜும் இவர்கள் இருவருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தனர். மதியழகன் தான் இரண்டையும் வாங்கினான். முதலில் அவன் குடித்து விட்டு, அந்தக் கிளாசில் மித்ராவின் டீயை ஆற்றி அவளிடம் கொடுத்தான்.


அவள் மீது கோபமாக இருந்தாலும், அந்த நேரத்திலும் அவன் காட்டும் அக்கறை மனதை நெகிழ செய்ய… அவன் முகம் பார்த்தபடி குடித்து முடித்தாள்.


மீண்டும் கார் பயணம் தொடர… நன்றாகவே இருட்டி விட்டதால்… மதியழகன் மித்ராவை தன் தோளில் சாய்த்துக் கொண்டான். அவளும் அவன் தோள் சாய்ந்து உறங்கிப் போனாள்.


இரவு ஒன்பது மணிக்குதான் வீடு வந்து சேர்ந்தனர். வாசலில் இருந்தே நண்பர்கள் இருவரும் விடைபெற…ரேவதியும் எழிலரசியும் இட்லி அவித்துச் சாம்பார், சட்னி செய்து வைத்திருக்க, முதலில் ஆண்கள் சாப்பிட்டு பிறகு பெண்கள் சாப்பிட்டனர்.


நடுவில் இருக்கும் பெரிய வீட்டில்தான் எல்லோரும் பகலில் இருப்பது. வலது பக்கம் கருணாவுக்கும், இடது பக்கம் மதியழகனுக்கும் தனி வீடுகள். மூன்று வீட்டிற்கும் இடைவெளி இருந்தாலும், ஒரே சுற்றுச் சுவர்தான்.


இரவில் பின்கட்டில் இருந்த சிங்கில் நின்று பாத்திரங்களைச் சுபத்ரா கழுவிக் கொண்டு இருந்தாள். சாப்பிட்டுத் தட்டை போட வந்த சங்கமித்ரா, அக்கா நின்று பாத்திரம் கழுவதைப் பார்த்ததும், “அக்கா, நீ தேய்த்துக் கொடு, நான் கழுவுறேன்.” என்றாள்.


இருவரும் சேர்ந்து பாத்திரம் தேய்த்தனர். அப்போது சுபத்ரா, “நீ கார்ல அத்தானை அப்படிப் பேசி இருக்கக் கூடாது. இந்தக் குடும்பத்தோட சூழ்நிலைப் பார்த்து, நான்தான் நம்ம வீட்டுக்கு போகணும்ன்னு கேட்டது இல்லை.”


“முதல்ல நானும் அத்தையும் மட்டும் தான். அப்ப அவங்களை மட்டும் தனியா வேலைப்பாக்க போட்டுட்டு ரொம்ப வர முடியலை. ரெண்டு வருஷத்துல கருணாவுக்குக் கல்யாணம் ஆகி ரேவதி வந்தா… குடும்பம் பெரிசாச்சு. நான் அம்மா வீட்டுக்கு வந்து உட்கார்ந்தா… அவளும் அவங்க அம்மா வீட்டுக்கு போவா… இப்படி மாத்தி மாத்தி போயிட்டே இருக்க முடியுமா?”


“அதனால்தான் அத்தை என்னை ஒரு வாரம் அனுப்புவாங்க, அவளை ஒரு வாரம் அனுப்புவாங்க. இது கூட்டுக் குடும்பம். அதுவும் சொந்தமா பிசினஸ் பண்றோம். ஆம்பிளைங்க மூன்னு வேலையும் வீட்டுக்கு சாப்பிட வருவாங்க. எப்பவும் வேலை இருக்கும். இதுல நான் எப்படி வந்து நம்ம வீட்ல உட்கார்ந்துக்க முடியும்?”


சுபத்ரா சொல்லி முடித்துவிட்டு மித்ராவை பார்க்க, “உனக்குக் கல்யாணம் ஆகும் போது, நான் எட்டாவது படிச்சிட்டு இருந்தேன். அதுவரை நான் உன்னோட தான் சுத்திட்டு இருப்பேன்.”


“உன்கிட்ட தான் நான் வயசுக்கு வந்தது கூடச் சொன்னேன். நீ கல்யாணம் பண்ணி வந்ததுக்கு அப்புறம் எனக்கு நம்ம வீட்ல மனசு விட்டு பேச ஆளே இல்லை. உன்கிட்ட பேசுற மாதிரி அண்ணன்கிட்ட பேச முடியாது இல்ல..”


“நீ எப்ப வருவன்னு எதிர்ப்பார்த்திடே இருப்பேன். நீ முதலையாவது கொஞ்சம் வந்த, அப்புறம் வரவே இல்லை. அப்புறம் இப்படித்தான்னு நானே மனசை தேத்திக்கிட்டேன்.”


“நாங்க இங்க வந்தாலும், உன் வீட்ல தங்க முடியாது. நீங்க மொட்டை அடிக்க, காது குத்துன்னு கூப்பிடுவீங்க, நாங்க வந்திட்டு உடனே போய்டுவோம்.”


“இப்பத்தான் தெரியுது, கல்யாணம் பண்ணா புகுந்த வீட்டை மட்டும் பார்த்திட்டு, பிறந்த வீட்டை விட்டுடனும்ன்னு. ”


“நாங்கதான் உன்னை நினைச்சிட்டு இருந்திட்டோம் போலிருக்கு, நீ எங்களை விட்டுட்ட இல்லை கா….”


“நானும் கொஞ்ச நாள்ல உன்னை மாதிரிதான் ஆகிடுவேன். அண்ணன் நம்மை என்னைக்கோ ஒருநாள் பார்த்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.”
இவர்கள் இருவரும் பேசுவதை, கிணற்றடியில் நின்று, கதிரேசன் கேட்டுக் கொண்டே இருந்தான்.


அன்று சுபத்ரா வேலைகளை முடித்து விட்டு அறைக்குச் சென்றபோது, யோசனையில் இருந்த கணவனைப் பார்த்தாள்.

“என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க? மித்ரா சொன்னதை யோசிச்சிட்டு இருக்கீங்களா?”


“நான் மதியை பத்தி மட்டும் யோசிச்சிட்டு, மித்ராவை நினைக்காம விட்டுடேனோ… அந்தப் பிள்ளைக்கு இந்த வீடு செட் ஆகாதோ. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு சுபி.” என்றான்.


“அதெல்லாம் ஒன்னும் இல்லை மதி பார்த்துக்கும் விடுங்க.” என்றாள் சுபத்ரா நம்பிக்கையாக.


“டேய் ! உன் பொண்டாட்டியை கூடிட்டுப் படுக்கப் போகாம, ஏன் டா என் பின்னாடி சுத்திட்டு இருக்க?” நீலவேணி மதியழகனைப் பார்த்து கேட்க,


“அம்மா, ஒரு ரெண்டு நாள் மட்டும் மித்ராவோட கொடைக்காணல் போயிட்டு வரேன் மா…”


“உன் அண்ணனுங்க எல்லாம் போகலை, நீ மட்டும் போனா? அவங்க என்ன நினைப்பாங்க.”


“அம்மா அவங்க போகலைனா, நான் என்ன மா பண்றது? நான் ரெண்டு நாள் தானே கேட்கிறேன். இந்த ஞாயிறு மாத அடைப்பு. அதோடு திங்கள் ஒரு நாள் சேர்த்து போயிட்டு வரேன்.”


“எப்படியாவது அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கிக் கொடுங்க மா…”


“நான் சொல்றேன், அவர் என்ன சொல்வாரோ தெரியாது.” என்றார் நீலவேணி.


மதியழகன் மித்ராவை அழைத்துக் கொண்டு தங்கள் பகுதிக்கு வந்தான். அவள் வீட்டில் சீர் கொடுத்த கட்டில், மெத்தை, பீரோ, வாஷிங் மெஷின் எல்லாம் அங்கங்கே இருந்தது.


மத்ததும் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இதற்கே கட்டில் பீரோ தான் கொடுப்பது முறை என்றனர். கட்டாயப் படுத்திதான் வாஷிங் மெஷின் வாங்கிக் கொடுத்து இருந்தனர்.


மதியழகன் ஏற்கனவே மாட்டியிருந்த கட்டிலில் மெத்தையைப் போட்டு போர்வை விரித்துக் கொண்டு இருந்தான்.


“ரொம்பக் கசகசன்னு இல்லை.. ஏசி இல்லையா?” என்றாள் மித்ரா.


“நீ குளிச்சிட்டு வா ஏசி ரெடியா இருக்கும்.” என்றான்.


“ஏசி இருக்க மாதிரியே தெரியலையே என யோசித்தபடி குளிக்கச் சென்றாள்.


அவள் திரும்ப வந்த போது, தரையை நன்றாகத் தண்ணீரால் மொழுகி, ஒரு துணியை நனைத்து ஜன்னலில் விரித்து விட்டு, அறையின் ஒரு பக்கம் பாத்திரத்தில் வேறு தண்ணீர் வைத்து இருந்தான்.


அவன் செட்டப் எல்லாம் பார்த்த மித்ரா, “ஏசி இல்லைனா இல்லைன்னு சொல்லிட்டு போக வேண்டுயது தான.” என்றவள், கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டாள்.


“நம்ம வீட்ல இருக்கிற ஆளுங்களுக்கு எத்தனை ஏசி வாங்கிறது சொல்லு. அதோட கரண்ட் பில் எவ்வளவு வரும். இன்னொன்னு ஏசில தினமும் தூங்கிறது நல்லதே இல்லை.”


“நீ வேணா பாரு. இன்னும் ஒரு மணி நேரத்தில் ரூம் எப்படி ஜில்லுன்னு இருக்குதுன்னு.” என்றான்.


அவன் அப்பா தேவைக்கு அதிகமாக ஒரு ருபாய் கூடச் செலவழிக்க மாட்டார். இதுல ஏசி எங்கே வாங்குவது. எதையோ சொல்லி மித்ராவை சமாளித்தான்.


இருந்த களைப்பில் மித்ராவும் மேலே பேசாமல் உறங்கிவிட்டாள். மதியழகன் சொன்னது போல…. நேரம் ஆக ஆகக் குளிரத்தான் செய்தது. அவள் போர்வையைத் தேட… அவள் கணவனே அவளுக்குப் போர்வையாகிப் போனான்.




Advertisement