Advertisement

மாலை இருவரும் படத்துக்குச் சென்றனர். இடைவெளியில் மதியழகன் மித்ரா கேட்ட கோன் ஐஸ் வாங்கிக் கொடுக்க, அதைப் பாதிச் சாப்பிடும் வரை, அருகில் இருந்த கணவன் கூடத் தெரியவில்லை. பிறகுதான் நினைவு வந்து, “உங்களுக்கு வேணுமா?” என்றாள்.


“நீ கையில வச்சிருக்க ஐஸ்கிரீம் விட… அதைச் சாப்பிட்ட உன் உதடு தான் டேஸ்ட் அதிகம். எனக்கு அதுதான் வேண்டும்.” என்றான்.


முகம் சிவந்து, மித்ராவுக்குப் பதட்டம் ஆகிவிட்டது. பக்கத்தில் இருந்தவர்கள் கேட்டு விட்டார்களா எனச் சுற்றிலும் ஒருமுறை திரும்பி பார்த்துக் கொண்டாள். ‘இனிமே ஐஸ்கிரீம் வேணுமான்னு கேட்ப?’ என அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டு, தானே முழு ஐஸ்கிரீமும் சாப்பிட்டு முடித்தாள்.


படம் முடிந்து பைக்கை எடுக்கச் சென்றனர். மதியழகன் வண்டியை எடுக்க, மித்ரா யாரோ தன்னை நெருங்கி நெருங்கி வருவதை உணர்ந்தாள்.


யாரோ என நினைத்து பார்த்தவள், அங்கே நவீனைப் பார்த்ததும் அரண்டு விட்டாள்.

இத்தனைக்கும் கழுத்தில் தடிமனான தாலி இருக்கிறது, நெற்றி வகுட்டில் குங்குமம் இருக்கிறது. திருமணம் ஆனப் பெண் என அவளைப் பார்த்ததும் தெரியும்.


அப்போதும் நெருங்கி வருகிறானே ,இவனை என்ன செய்வது என்பது போலப் பார்த்தவள், “என்னங்க?” என்றாள் சத்தமாக.


இவர்கள் வண்டியை எடுக்கப் பக்கத்தில் இருந்த வண்டியை நகர்த்திக் கொண்டு இருந்தவன், மித்ராவின் குரல் கேட்டு, அவள் முகம் பார்த்தான்.


அவள் பயந்து போய்ப் பக்கத்தில் நின்றவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். வண்டியை அப்படியே விட்டு அவளிடம் சென்றான்.


“என்ன மித்ரா?”


“இந்த ஆளை என்னன்னு கேளுங்க?” என்றாள்.


“என்ன?” என்றான் நவீனைப் பார்த்து, அந்த ஒரு வார்த்தையிலேயே அனல் பறந்தது.


“இல்லை தெரிஞ்சவங்க மாதிரி இருந்துச்சு, அதுதான் பார்த்தேன்.” என்றான்.


“அதுக்காகப் பக்கத்தில வந்து பார்ப்பியா?” என்றவன், “தொலைச்சிடுவேன். இங்க இருந்து ஓடிடு.” என்றான்.


நவீன் இவர்களைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல, மதியழகன் வண்டியை எடுக்க, அதில் மித்ரா ஏறி அமர்ந்தாள்.


தியேட்டர் விட்டு வெளியே வந்ததும், “எங்க போனாலும் பொண்ணுங்களை விட மாட்டானுங்க. கல்யாணம் ஆனப் பொண்ணுங்க, ஆகாத பொண்ணுங்க, எல்லோருமே ஒண்ணுதான் இவங்களுக்கு.” அவன் கோபமாக முனங்க,


“இவன் என்னைக் கல்யாணத்துக்கு, முன்னாடியும் இப்படித்தான் பார்ப்பான்.” என்றாள் சங்கமித்ரா.


வண்டியை சட்டென்று பிரேக் போட்டு மதியழகன் நிறுத்தி விட, மித்ரா ஒருநொடி கலங்கிப் போனாள்.


“உனக்கு முன்னாடியே அவனைத் தெரியுமா?”


“எங்க காலேஜ் ஸ்டாப்பில நின்னுட்டு இருப்பான். ஒருமுறை என்கிட்டே வந்து பேசினான். அதுக்குப் பிறகு அண்ணன்தான் காலேஜ் கொண்டு போய் விட்டு கூடிட்டு வந்தாங்க.”


“அப்புறம் இன்னைக்குதான் பார்கிறேன்.” என உண்மையே சொன்னாள்.


யாரோ எவனோ என நினைத்து விட்டிருந்தான். இது எதோ சரி இல்லை என்று தோன்ற, வண்டியை திருப்பி இருந்தான். நல்லவனாக இருந்திருந்தால், கல்யாணம் ஆனது தெரிந்ததும், விலகி இருப்பனே என்று தோன்றியது.


அது அகலமான தார் சாலை… எதிரே நவீன் வரக் கூடும் என வலது பக்கமே ஓரமாகச் சென்றான். இரவு நேரம் என்பதால்… ஆள் நடமாட்டமும் இல்லை.


“அவன் பேரு என்ன?”


“அவன் பேரெல்லாம் எனக்குத் தெரியாது.” என்றாள்.


அவன் எதிர்ப்பார்த்தது போல, நவீன் அவன் வண்டியில் வந்தான். அவன் எதிரில் கொண்டு போய் வண்டியை நிறுத்தியவன், இறங்கி சென்று நவீனின் சட்டையைப் பிடித்து, வண்டியில் இருந்து இறங்கு என்றான்.


“யாரு டா நீ? எங்க வீட்டு பொண்ணு பின்னாடி ஏன் வர்ற?”


“நான் லவ் பண்ண பொண்ணு சார்.” நவீன் சொல்லித்தான் முடித்து இருப்பான். மதியழகன் விட்ட அறையில், அவன் கண்ணில் பூச்சு பறக்க, காதில் கொய் எனச் சத்தம் கேட்டது.


அந்தப் பக்கம் சென்ற ஒருவர், “என்ன சார்?” என்றார்.


“என் பர்சை திருடிட்டான். நான் பார்த்துகிறேன். நீங்க போங்க.” என்றான்.


“நீ பொறுக்கித் தனமா பின்னாடி சுத்திட்டு, அதுக்குப் பேரு லவ்ன்னு சொல்வியா?”


“பொண்ணுங்க படிக்கத் தானே டா வெளியப் போகுதுங்க. அதுங்களை நிம்மதியா படிக்கக் கூட விட மாட்டீங்களா? லவ்வுங்கிற பேர்ல எவ்வளவு டார்ச்சர் பண்றீங்க.” என்றவன், இன்னும் நாலு அறை விட்டான்.


மித்ரா தடுக்கவெல்லாம் இல்லை. அவன் அடி வாங்குவதை கண்குளிர பார்த்து ரசித்தாள்.  

இவனால் அல்லவா அவள் படிப்புப் போனது. அதோடு உடனே திருமணமும் நடந்தது. மதியழகன் போல் இல்லாமல், அவசரத்தில் குணம் சரி இல்லாத வேறு யாரையாவது திருமணம் செய்து இருந்தால்.. காலம் முழுக்க அவள்தானே கஷ்ட்டபப்ட வேண்டும் என நினைத்துத் தடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


மதியழகன் நவீனின் செல்லை எடுத்து அதை ஆராய்ந்தான். அவன் செல்லில் இருக்கும் புகைப் படங்கள், அவனது முகநூல் பக்கம், அதில் இருக்கும் புகைப்படங்கள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து, அதில் எதுவும் மித்ரா படங்கள் இல்லை எனத் தெரிந்தாலும், அதில் இருந்த மற்ற எல்லாவற்றையும் அழித்து விட்டே செல்லை திருப்பிக் கொடுத்தான்.


“இன்னொரு தடவை என் பொண்டாட்டி பின்னாடி நீ வர்றதை பார்த்தேன். அன்னைக்குதான் நீ இந்த உலகத்தில இருக்கிற கடைசி நாள். நல்லா நியாபகம் வச்சுக்கோ.” என்றான் மதியழகன் மிரட்டலாக.


இன்னைக்கு வாங்கிய அறைக்கே நான்கு நாள் வாயை திறக்க முடியாது போல… இனி இவன் கண்ணுல மட்டும் மாட்டிடவே கூடாது… என நவீன் அங்கிருந்து தப்பித்தால் போதும் என ஓடிவிட்டான்.


வீட்டிற்கு சென்றவர்களிடம், “ஏன் இவ்வளவு லேட்?” என்று கேட்ட ஜெய்யிடம், எதோ சொல்லி சமாளித்துச் சாப்பிட்டு, இருவரும் மாடிக்கு வந்துவிட்டனர்.


புடவை கூட மாற்றாமல் மித்ரா கட்டிலில் உட்கார்ந்து இருந்தாள். மதியழகன், உடை மாற்றி முகம் கழுவி வந்தான்.


“ஏன் அவன் செல்லை எடுத்து பார்த்தீங்க? நீங்க என்னை நம்பலையா?”


“அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன். அவன் உனக்குத் தெரியாம போட்டோ எடுக்க முடியாதா? உன்னைப் பழிவாங்க எதிலாவது உன் போட்டோவை ஏத்திவிட்டா, அதுதான் பார்த்தேன்.” என்றான்.


“நிஜமா நீங்க என்னை நம்புறீங்க தான. அவன் பேர் கூட எனக்குத் தெரியாது.” என்றவளுக்குக் கண்ணீர் எட்டிப் பார்க்க,


அவள் அருகே சென்றவன், “ஒரு பொருக்கி சொல்றதை வச்சு, நான் உன்னைத் தப்பா நினைப்பேனா மித்ரா. நீதானே அவனைப் பத்தி என்கிட்டே சொன்ன. நீ நினைச்சா சொல்லாம இருந்திருக்கலாமே.”


“நீ இப்படிக் கேட்டா, நீதான் என்னை நம்பாத மாதிரி இருக்கு.” என்றான் மதியழகன்.

தன் கணவன் தன்னை நம்புகிறான் என்றதும், அதுவரை என்ன சொல்வானோ? அல்லது என்ன கேட்பானோ? என பயந்து போய் இருந்தவள், உட்கார்ந்த வாக்கிலேயே அவனை இடையோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள். இப்போது அவளுக்கு அழுகை வந்தது.

“ஏய் பொண்டாட்டி, என்னைச் சோதிக்காத டி.. நேத்து ராத்திரிதான் வேஸ்ட் பண்ணோம். இன்னைக்கு நைட்டுக்காக, நான் காலையில் இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” என்றான் கிறக்கமாக.


மித்ராவுக்கு அழுகை நின்று விட்டது. அவள் அவன் முகம் பார்த்து சிரிக்க, அப்படியே அவளோடு கட்டில் சரிந்தான்.


அவர்களின் சரசதிற்கு ஏற்ப, மித்ராவின் கால் சலங்கை சிணுங்க… “முதல்ல இதைக் கழட்டனும். ரொம்ப டிஸ்டர்ப் செய்யுது.” என்றவன், அவள் கால் கொலுசை கழட்ட ஆரம்பித்தான்.


நிறையப் பேர் தாலியை கழட்டி வைக்கிறாங்க. பரவாயில்லை டா… நீ கொலுசை தான் கழட்டுற.

 

Advertisement