Advertisement

சண்ட கோழி


அத்தியாயம் 6

ஜன்னல் திரைசீலையையும் மீறி விழுந்த வெளிச்சத்தில் கண்கள் கூச, மதியழகன் மெல்ல கண் விழித்தான். பக்கத்தில் சங்கமித்ரா இல்லை. குளியல் அறையில் நீர் விழும் சத்தம் கேட்டது. அவன் செல்லை எடுத்து நேரத்தை பார்க்க, காலை ஒன்பது மணி.


முதல் தடவை இப்படி நேரத்தை பார்க்க எழுந்தது தான். அது எதில் போய் முடிந்தது என நினைத்ததும், கடந்து போன சுகமான அனுபவத்தை மனம் அசைபோட விரும்பியது.


அவன் இன்பான நினைவில் இருக்க, சங்கமித்ரா கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். ஈரமான கூந்தலில் துண்டை சுற்றி இருந்தாள். குளியல் அறை ஈரமாக இருந்ததால்… புடவையைக் கட்டாமல் சுற்றிக் கொண்டு வந்தாள்.


மதியழகன் விழித்திருப்பதைப் பார்த்தவள், கட்டிலுக்குப் பின்னே திரும்பி நின்று புடவையைச் சரியாகக் கட்ட… திடிரெண்டு மதியழகன் அவளைப் பின்னால் இருந்து அணைக்க, ஒரு நொடி பயந்து போனாள்.


அவளைத் தன் பக்கம் திருப்பி நெற்றியில் முத்தமிட்டவன், “தேங்க்ஸ் டி.” என்றான் மனதிலிருந்து.


எதுக்குத் தேங்க்ஸ் எனப் புரியாமல் சங்கமித்ரா பார்க்க, “நான் நினைக்கவே இல்லை மித்ரா, நமக்குள்ள அப்படி நடக்கும்ன்னு. நீ என்னைச் சொர்கத்துக்கே கூடிட்டு போயிட்டே.” என்றான்.


அவன் எதைச் சொல்கிறான் எனப் புரிந்ததும், மித்ராவின் முகம் சிவக்க, “போதும் போங்க போய்க் குளிங்க.” என்றாள்.


“உனக்குப் பிடிச்சுதா..” எனக் கேட்டபடி அவன் அணைப்பை இருக்க,


பிடிக்கலைன்னு சொன்னா என்ன செய்வீங்க என்று தான் கேட்க வந்தாள். அதை ஊகித்தது போல… “உனக்குப் பிடிச்சது. எனக்குத் தெரியும்.” என்றவன், அவளைப் பார்த்து கண்சிமிட்டி விட்டுத் துண்டை எடுத்துக் கொண்டு, குளியல் அறைக்குள் சென்றான்.


அவன் குளித்து விட்டு வந்த போது, சங்கமித்ரா மீண்டும் கட்டிலில் படுத்து இருந்தாள்.


“என்ன திரும்பப் படுத்திட்ட?”


“ஒரே களைப்பா இருக்கு, காலெல்லாம் வலிக்குது.” என்றாள்.


“நான்தான் நேத்து நீ சாப்பிட்ட லட்ச்சனத்தை பார்த்தேனே… சின்னப் பிள்ளைங்க சாப்பிடுற மாதிரி சாப்பிட்டா, இப்படித்தான் இருக்கும்.”


“நீ முதல்ல எந்திரி. ஈர தலையோட படுத்தா தலைவலி வரும்ன்னு தெரியாதா?” என்றவன், அங்கிருந்த வாழைப் பழத்தை எடுத்து பாதி உரித்து அவளிடம் கொடுத்தான்.


அவள் கட்டிலில் உட்கார்ந்து சாப்பிட, மதியழகன் அவள் தலையில் இருந்த துண்டை உருவி விட்டு, அழுத்தமாக அவள் தலையைத் துவட்ட ஆரம்பித்தான்.


“போ போய் அந்த வெளி மெத்துல வெயில்ல அஞ்சு நிமிஷம் நின்னுட்டு வா…” என அவளை அனுப்பிவிட்டு, தன் ஆடைகளை எடுத்து அணிய ஆரம்பித்தான்.
சங்கமித்ரா திரும்ப வந்தபோது, மதியழகன் படுக்கையை உதறி, போர்வைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தான்.


பதறிப் போய் அவனிடம் வந்தவள், “இதெல்லாம் நீங்க ஏன் பண்ணுறீங்க?” நான் பண்ண மாட்டேனா?” என்றாள்.


“நமக்குள்ள என்ன மித்ரா? யாரு பண்ணா என்ன?” என்றவன், செய்த வேலையை முடித்து விட்டே வந்தான்.


என்ன டா இவன், நாம வில்லனைப் போல நினைச்சு வச்சிருந்தா ரொம்பப் பாசக்காரனா இருக்கானே என நினைத்துக் கொண்டாள்.


என்ன இது இவ்வளவு நேரமா இறங்கி வர காணோம், என மாடிப் படியையே பார்த்துக் கொண்டிருந்த வீட்டினருக்கு, இருவரும் பேசி சிரித்தபடி வருவதைப் பார்த்ததும்தான், வாயிற்றில் பால் வார்த்தது போல இருந்தது.


தங்கையின் முகம் பார்க்காமல், வெளியே செல்ல விரும்பாத ஜெய்யும் வீட்டில்தான் இருந்தான். ‘அவங்க வாரட்டும் சேர்ந்து சாப்பிட்டுகிறேன்.’ எனச் சாப்பிடாமல் வேறு இருந்தான். முத்துக்குமார் மட்டும் கடைக்கு சென்று இருந்தார்.


கூந்தலை தளர பின்னி, புதுப் புடவையில் புது மலராக இருந்தாலும், சங்கமித்ராவின் முகத்தில் இருந்த மலர்ச்சியே, எல்லோரின் கண்களுக்கும் குளிர்ச்சியாக இருந்தது.


“இவ என்ன இழுத்து வைக்கப் போறாளோ எனப் பயந்து போயிருந்த ஜெய் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது.


இவர்களைப் பார்த்ததும் சுபத்ரா சென்று பூரிக்கு மாவு தேய்க்க, அவள் அம்மா குழம்பை ஒரு பக்கம் சுட வைத்து விட்டு, பூரிக்கு எண்ணைக் காய வைத்தார்.


மதியழகன் பூஜை அறை எங்கே எனக் கேட்டு, அங்கே சென்று கண் மூடி நிற்க, அதைப் பார்த்த மித்ரா வேகமாகச் சென்று விளக்கேற்றி வைத்தாள்.


மதியழகன் கண் திறந்த போது, மனைவி விளக்கேற்றிய காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருக்க, மலர்ந்த முகத்துடன் திருநீறு வைத்துக் கொண்டான். மித்ராவும் குங்குமம் தேடி எடுத்து வகுட்டில் வைத்துக் கொண்டாள்.


இதையெல்லாம் குடும்பத்தினர் பார்க்காதது போலப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“வாங்க மாப்பிள்ளை சாப்பிடுவோம்.” ஜெய் அழைக்க, மதியழகன் சாப்பிட சென்றான். “நீயும் மாப்பிள்ளையோட சாப்பிடு.” எனச் சங்கமித்ராவையும் உட்கார வைத்தனர்.


பூரி, மட்டன் குழம்பு, மட்டன் கொத்துகறி எனக் காலை உணவு அமர்க்களப்பட… வழக்கம் போல் மூன்று பூரிகளுடன் எழுந்து கொண்ட மித்ராவின் கைபிடித்து உட்கார வைத்த மதியழகன், “நீ ஒழுங்கா இன்னும் ரெண்டு சாப்பிடுற.” என்றவன், அத்தை அவளுக்கு வைங்க என்றான். அவள் தட்டில் பூரி வைத்ததும், அவனே மனைவிக்குக் கறி எடுத்து வைத்தான்.

‘இவ்வளவா?’ என மித்ரா அவனைப் பார்க்க, “அப்புறம் அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு சொல்லக் கூடாது, ஒழுங்கா சாப்பிடு.” என அவளுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னான்.

மிக மெதுவாகச் சாப்பிட்டாலும், அவன் வைத்ததை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விட்டாள். அதுவரை மதியழகன் கைகழுவ கூட எழுந்து கொள்ளவில்லை. அவனுக்குத் தெரியும், அவன் எழுந்து சென்றால், அவள் சாப்பிடாமல் வைத்து விடுவாள் என்று.


மதியழகன் கை கழுவி ஹாலுக்கு வர, “மாப்பிள்ளை, கடை வரை போயிட்டு வருவோமா?” என ஜெய் கேட்க, சரி என்றவன், அவனோடு கடைக்குக் கிளம்பினான். மித்ராவிடம் சொல்லிவிட்டே சென்றான்.

அவர்கள் சென்றதும், நேத்துப் போட்டிருந்த துணிகளைக் கொண்டு வா, துவச்சு தரேன்.” அவள் அம்மா சொல்ல, “இல்லை வேண்டாம், ஊற வச்சிருக்கேன், நானே துவைச்சுகிறேன்.” என மாடிக்கு சென்றாள்.


அவள் இருவர் துணிகளையும் துவைத்து விட்டு வரவும் ,ஜெய்யும் மதிய சமையலுக்குச் சாமான்கள் வாங்கிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.


சங்கமித்ராவின் விழிகள் தன் கணவனைத் தேடி அலைபாய… அதைக் கண்டுகொண்ட ஜெய், “ஒருத்தவங்க அவங்க வீட்டுக்காரரை தேடுறாங்க பா.”

“அந்த வளர்ந்து கெட்டவனை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்ன, மானஸ்த்தியை எங்காவது பார்த்த…” என அவன் கிண்டலாகச் சுபத்ராவிடம் கேட்க,


ஜெய் சொன்னது புரிந்ததும், சுபத்ராவுக்கும், அவர்கள் அம்மாவுக்கும் ஒரே சிரிப்பு. சங்கமித்ரா மிடுக்காகச் சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.


“இந்தக் கல்யாணம் முடியிறதுக்குள்ள இவ என்ன பாடு படுத்தினா தெரியுமா? மதியை வேண்டம்ன்னா… அங்க கொடுக்கிறதுக்குக் கிணத்துல தள்ளுன்னா?” அவள் அம்மா சலிக்க,


“என்கிட்டயும் கோபமா தான இருந்தாங்க மேடம்.” என்ற சுபத்ரா,

“நீ என் தங்கச்சி, அப்படிச் சரி இல்லாத இடத்திலேயா உன்னைக் கொண்டு தள்ளிடுவேன். அப்படி நல்ல இடம் இல்லைனா, நான் உன்னை அங்க செய்ய விடுவேனா? மத்தவங்க அந்த வீட்ல எப்படியோ? ஆனா மதி எனக்கே அவ்வளவு பார்க்கும். அப்ப பொண்டாட்டி உன்னை எப்படி வச்சுக்கும்.” என்றாள் சுபத்ரா பெருமையாக.


“இந்தாங்க, நம்ம கடையில இருந்து உங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி புடவைகள் கொண்டு வந்தேன்.” என இரு டிஸைனர் புடவைகளை ஜெய் தங்கைகளிடம் கொடுக்க, இருவரும் ஆளுக்கொரு நிறத்தை எடுத்துக் கொண்டனர்.


“இப்ப எதுக்குடா இவளுங்களுக்குப் புடவை? ஏற்கனவே அவ்வளவு வச்சிருக்காளுங்க.” அவன் அம்மா சொல்ல,


“இருக்கட்டும் மா, நான் இன்னைக்குச் சந்தோஷமா இருக்கேன்.” என்றான் ஜெய். அவர்களது ஜவுளி கடை என்பதால்… எப்போதும் துணிகளுக்குப் பஞ்சம் இல்லை.


சரக்கு வந்ததும், மித்ரா தனக்குப் பிடித்ததை எடுத்துக் கொண்டதும் தான், மீதியை கடைக்கே அனுப்புவான் ஜெய். அதே போல, சுபத்ரா வந்தாலும், அவளுக்குப் பிடித்ததை எடுத்து செல்வாள்.


அண்ணனின் பாசம் புரியாமல் இல்லை. ஆனாலும் அவன் தன்னை நம்பவில்லை என்ற கோபம் இருந்தது. அதனால் மித்ரா அவனோடு பேசாமல் இருந்தாள். ஜெயிக்கும் அது புரிந்துதான் இருந்தது.


“மாப்பிள்ளை கடையில இருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்தில கொண்டு வந்து விடுறேன்.” எனச் சொல்லும்போது, தங்கையின் முகம் மலர்வதைக் கண்டுவிட்டே, ஜெய் கடைக்குச் சென்றான்.


சொன்னது போலப் பன்னிரண்டு மணி போல் மதியழகனை கொண்டு வந்து விட்டவன், சாப்பிட வருவதாகச் சொல்லி, அப்படியே வாசலில் இருந்து சென்றுவிட்டான்.


இன்னும் ஜெய் கொடுத்த புடவைகள் சோபாவில் இருக்க, “யாருக்கு புடவை?” எனக் கேட்டபடி மதியழகன் சோபாவில் உட்கார்ந்தான்.


“எனக்கும் அக்காவுக்கும் ஒரே மாதிரி அண்ணா எடுத்திட்டு வந்தாங்க.” என்றாள் மித்ரா.


புடவையைக் கையில் எடுத்து பார்த்தவன், அதன் விலையைப் பார்த்துவிட்டு, தனது பர்சில் இருந்து பணம் எடுத்து மித்ராவிடம் கொடுத்து, “நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி கட்டிட்டு, ரேவதி அண்ணி கட்டலைனா நல்லா இருக்காது. அவங்களுக்கும் ஒன்னு இதே மாதிரி எடுத்திட்டு வர சொல்லு.” என்றான்.


அக்கா தங்கைகள் ஒரே மாதிரி எடுப்பது இயல்புதான். இதுவரை தனித் தனி இடத்தில் இருந்தனர். ஆனால் புகுந்த வீட்டில் இன்னொரு மருமகளும் இருக்கிறாள், அவளை விட்டு இவர்கள் இருவரும் மட்டும் ஒரே மாதிரி கட்டுவது, அவளை வித்தாயசமாகக் காட்டும் அல்லவா. அவளை மட்டும் தனிமைப் படுத்துவது போலவும் தோன்றும்.


“ஜெய் சாப்பிட வரும்போது என்னை எழுப்பு. அதுவரை நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன்.” என மதியழகன் மாடிக்கு சென்றுவிட்டான்.


“மதி உன்னை நல்லாத்தான் பார்த்துக்கும், அதே நேரத்தில குடும்பத்தையும் விட்டுக் கொடுத்திடாது. மதி மட்டும் இல்லை அவங்க அண்ணன்களும் அப்படித்தான். இதையும் தெரிஞ்சிக்கோ.” என்ற சுபத்ரா,


“நான் அண்ணன்கிட்ட சாப்பிட வரும்போது புடவை எடுத்திட்டு வர சொல்றேன்.” எனப் பணத்தை வாங்கிக் கொண்டாள்.


“நீயும் போய் ரெஸ்ட் எடு. மாப்பிள்ளைக்கு இந்த இளநீரை கொண்டு போ…”என அவளது அம்மா, ஒரு சொம்பு நிறைய இளநீரை அவளிடம் கொடுத்து அனுப்பினார்.


மித்ரா சென்றபோது மதியழகன் அப்போதுதான் உடை மாற்றி விட்டுப் படுக்கத் தயாரானான்.


இவளைப் பார்த்ததும் புன்னகைத்தவன், “என்னோட ட்ரெஸ் எல்லாம் துவைச்சுப் போட்டிருக்கப் போலிருக்கு.” என்றான்.


இவள் பதில் சொல்லாது இளநீரை அவனிடம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவன், அவளையும் இழுத்து தன் பக்கத்தில் உட்கார வைத்து, தானும் குடித்து அவளையும் குடிக்க வைத்தான்.


பிறகு அவன் கட்டிலில் சாய்ந்து கொண்டு, அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான். சிறிது நேரம் அவளை முத்தமிட்டும் மகிழ்ந்தான்.


“நீ இங்க இருந்தா நான் தூங்க மாட்டேன். நீ கீழ போய் உங்க அம்மாவுக்கும், அண்ணிக்கும் ஹெல்ப் பண்ணு.” என்றான்.


“அவங்கதான் மேல போகச் சொன்னாங்க.” என்றவள், அவன் பக்கத்தில் படுத்து,

“நான் உங்களைத் தொந்தரவு பண்ணலை. ஆனா உங்க செல் கொடுங்க.” என்றாள்.


அவன் செல்லைக் கொடுத்ததும், அதைப் பார்க்க ஆரம்பித்தாள். மதியழகன் அவளைப் பார்த்தபடி உறங்கியும் போனான். செல்லைப் பார்த்துக் கொண்டிருந்த மித்ராவும், சிறிது நேரத்தில் உறங்கி போனாள்.


மதியம் மித்ரா தான் முதலில் எழுந்து மதியழகனை எழுப்பினாள். “ரெண்டு மணி ஆகுது. அண்ணன் சாப்பிட வந்திடுவாங்க. கீழ போகலாமா.” என்றாள்.


“நீ போ…நான் வரேன்.” என அவளை முதலில் அனுப்பிவிட்டு, முகம் கழுவி உடைமாற்றி மதியழகன் கீழே சென்றான்.


ஜெய் அப்போதுதான் வந்திருந்தான். ஹாலில் தழைவாழை இலைப் போட்டு, சுபத்ராவும் அவள் அம்மாவும் பரிமாற… மற்றவர்கள் வரிசையாக உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.


மீன் குழம்பு, மீன் வறுவல், இறால் தொக்கு, நண்டு என ஒரு பெரிய விருந்தே இருந்தது.


மனைவியின் இலையைப் பார்த்த மதியழகன், “உனக்கு நண்டு பிடிக்காதா?” என்றான்.


“ம்ம்… பிடிக்கும், ஆனா அது உடைச்சு சாப்பிட தெரியாது.” என்றாள் மித்ரா.


“உடைச்சு சாப்பிட சோம்பேறின்னு சொல்லு.” என்றார் அவளின் அம்மா.


மதியழகன் நண்டை எடுத்து, ஓடை உடைத்து, உள்ளிருந்த சதையை மட்டும் எடுத்து ஓரமாகச் சேர்த்துக் கொண்டே வந்தான். ஜெய்க்கு அப்போதே தெரியும், மனைவிக்குத்தான் கொடுக்கப் போகிறான் என்று.


அவன் எதிர்பார்த்தது போல, மித்ராவின் இலையில் வைத்தான். அவள் கணவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே எடுத்து சாப்பிட்டாள்.


விட்டுட்டு போறேன்னு சொன்ன புருஷனையே, சுபத்ரா விட்டுக் கொடுக்க மாட்டாள். இதுல இப்படியெல்லாம் தாங்கினா, சின்னது நம்மை எல்லாம் சீக்கிரம் மறந்திடும் என ஜெய் நினைத்துக் கொண்டான்.

Advertisement