Advertisement

சண்ட கோழி


அத்தியாயம் 4


காலை ஏழரை ஒன்பது முஹுர்த்தம் என்பதால்…. சாப்பிட்டதும் உள்ளூர் மற்றும் வெளியூர் ஆட்கள் கிளம்பி விட, மாப்பிள்ளையின் பக்கம் நெருங்கிய உறவினர்களும், பெண் வீட்டினர் தாங்கள் பஸ் பிடித்து அழைத்து வந்த சொந்தங்கள் மட்டும் இருந்தனர். பன்னிரெண்டு மணிக்கு மதிய உணவு முடிந்ததும் அவர்களும் கிளம்பி விடுவார்கள்.


நல்ல நேரத்தில் புதுமணத் தம்பதிகள் முதலில் மாப்பிள்ளை வீடு சென்றனர். அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள், சுபத்ரா ஆரத்தி எடுக்கத் தயார் செய்தவள், “நீ எடுக்கிறியா ரேவதி?” எனச் சாதரணமாகக் கேட்க,


“உங்க தங்கச்சி தானே நீங்களே எடுங்க.” என ரேவதி இடக்காகப் பதில் கொடுக்க,


“என்னது உங்க தங்கச்சியா? அப்ப உனக்கு அந்தப் பிள்ளை யாரு? எக்குத் தப்பா பேசிட்டு இருந்த, பல்லை உடைச்சிடுவேன்.” எனக் கருணா கோபத்தில் கொந்தளிக்க,


“ஆத்தி ! இந்த ஆளு இருக்கிறது தெரியாம பேசிட்டேனே.” என ரேவதி மனதிற்குள் நொந்து கொள்ள, ‘பாரு இதுக்குதான் சொன்னேன்.’ என்பது போலத் துரை, தன் மனைவி நீலாவேணியை ஒரு பார்வை பார்த்தார்.


“அக்கா தங்கச்சி எல்லாம் அவங்களுக்குள்ள, அவளும் இந்த வீட்டு மருமகள்தான், அதனால பார்த்து சூசனமா நடந்துக்கோங்க.” நீலவேணி பொதுவாகச் சொன்னாலும், அது தனக்குத்தான் எனச் சுபத்ராவுக்குப் புரிந்தது.


மதியழகன் சங்கமித்ரா இருவரும் காரில் இருந்து இறங்க, காரில் கொஞ்சமும், பின்னே நடந்தும் பல பேர் வந்தனர். ‘மாப்பிள்ளை வீடு இங்கனதான் இருக்கான். வாங்க, போய் ஒரு எட்டு பார்த்திட்டு வருவோம்.” என ஒரு சிலரை தவிர மற்ற அனைவருமே வந்திருந்தனர்.


கருணா, ரேவதிதான் ஆரத்தி எடுக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டான். அதனால் மணமக்களுக்கு அவள்தான் ஆரத்தி எடுத்தாள். சங்கமித்ரா கையில் குத்து விளக்குடன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர… பின்னே வந்த அவளது சொந்தங்கள், சீர்வரிசை கொண்டு வந்தனர்.


செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் முடிந்து, சங்கமித்ராவை ஹாலில் இருந்த ஜமுக்காளத்தில் உட்கார வைக்க, அவளோடு உறவுப் பெண்களும் உட்கார்ந்து இருந்தனர்.


துரை சங்கமித்ராவின் அப்பா மற்று தாய் மாமன்களுடன் ஹாலில் உட்கார்ந்து பேச…. மதியழகன், ஜெய், கதிரேசன், கருணா என இளவட்டங்கள், ஒருபக்கம் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.


சுபத்ரா, ரேவதி, எழிலரசி மூவரும் வந்திருந்த பெண் வீட்டினருக்குக் குடிக்கக் கலர் ஊற்றிக் கொடுத்துக் உபசரித்தனர்.


கல்யாணம் ஆகிடுச்சு, இனிமே இங்க இருந்து தப்பிச்சா போக முடியும், நமக்கு இந்த ஜெயில்தான் என்ற மனநிலைக்குச் சங்கமித்ரா வந்திருந்தாள். அதனால் முகத்தில் அப்படியொரு அமைதி.


அதை வைத்து மாப்பிள்ளை வீட்டினர், “பொண்ணு ரொம்ப அமைதி.” என்பது போல முடிவு செய்து கொண்டு, அதைத் தங்களுக்குள் பேசியும் கொண்டனர்.
இவளா அமைதி என நினைத்த மதியழகனுக்குச் சிரிப்பு வர, அதை வாய்க்குள் அடக்கினான்.

“இப்ப எந்திரிச்சு நான் டான்ஸா ஆட முடியும்? அமைதியாம் அமைதி.” எனச் சங்கமித்ரா மனதிற்குள் கொந்தளித்துக் கொண்டு இருந்தாள்.


சிறிது நேரத்தில் சங்கமித்ராவின் பிறந்த வீட்டினர் கிளம்ப, அதுவரை அமைதியாகக் காட்டிக் கொண்டவாளால் அதற்கு மேல் முடியவில்லை.


ஒவ்வொருவராக அவளிடம் சொல்லிக் கொண்டு வெளியில் செல்ல, ஜெய்க்கு தங்கையின் முகம் பார்க்கவே கஷ்ட்டமாக இருந்தது.


சுபத்ரா திருமணம் முடிந்து சென்றவுடன், இவர்கள் இருவர் மட்டும் தானே… எது என்றாலும் சங்கமித்ரா அவனைத் தான் தேடுவாள், அதனால் இருவருக்கும் நெருக்கமும் அதிகம்.


ஜெய் அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, “என்னை விட்டு போகாத அண்ணே.” என அழுதபடி, அவன் கையைப் படித்தவள், அவள் தோளில் சாய்ந்து அப்படியொரு அழுகை.


யாரின் சமாதானத்தையும் அவள் கேட்கும் நிலையிலேயே இல்லை.


“அதுதான் அக்கா இருக்கா இல்ல, அவ உன்னைப் பார்த்துப்பா.” சங்கமித்ராவின் அம்மா அவளின் முதுகை வருட, அப்போதும் அவள் அண்ணன் தோளில் இருந்து தலையை நிமிர்த்தவே இல்லை.


ஜெய்க்கும் கஷ்ட்டம்தான், இவள் அழுகிறாள்…அவனால் அதுவும் முடியவில்லை. மதியழகன் எதுவும் நினைத்துக் கொள்வானோ எனச் சங்கடமாக அவன் முகம் பார்க்க, அவன் இருவரையும் புரிந்து கொண்டது போலத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.


அவனும் எழிலரசி திருமணம் செய்து போகும் போது, இப்படி அழுதவன் தானே. இவளாவது பரவயில்லை அவன் தேம்பி தேம்பி அழுக, “மச்சான், நான் அவ்வளவு கொடுமைக்காரன் எல்லாம் இல்லை. உங்க அக்காவை நல்லா பார்த்துப்பேன்.” என எழிலரசியின் கணவன் சொல்ல.. அதைக் கேட்டு எல்லோரும் கொல்லென்று சிரித்து இருந்தனர்.


“இவன் அக்கா கல்யாணத்துல இவன் அடிக்காத கூத்தா?” என இப்போது அதை யாரோ ஒருவர் சொல்ல, உறவுகள் வாய்விட்டு சிரிக்க, மதியழகன் கூட லேசாக வெட்கப்ட்டான்.


அது வரை விலகி இருந்த மதியழகன் சங்கமித்ராவின் அருகே வர, தங்கையைத் தன் தோளில் இருந்து நிமிர்த்திய ஜெய், அவளை மதியழகனின் கையில் பிடித்துக் கொடுத்தான்.

“இங்கப் பாரு… இனி இவரைத்தான் நீ கெட்டியா பிடிச்சிக்கனும்.” என்றான். அதைக் கேட்டு மதியழகன் பெரிதாகப் புன்னகைத்தான்.

சங்கமித்ரா முடியாது என்பது போல எதோ சொல்ல வர, அதை உணர்ந்த சுபத்ரா இடையில் புகுந்தாள்.


“இன்னைக்குச் சாயந்திரம் நம்ம ஊருக்குதான் போறோம். அதனால இப்ப அழுகாம அவங்களை அனுப்பி வை.” என்றாள்.


அப்படியா என்பது போல, சங்கமித்ரா நிமிர்ந்து பார்க்க, “ஆமாம் டி, முதராத்திரி நம்ம வீட்ல தான வைக்கணும். அப்புறம் நம்ம வீட்ல விருந்து இருக்கு, அது முடிஞ்சுதான் இங்க வருவீங்க.” அவளின் அம்மா மெதுவான குரலில் சொல்ல, அதன் பிறகு சங்கமித்ரா கொஞ்சம் அமைதி அடைந்தாள்.


அவள் விலகி நிற்க, சங்கமித்ரா வீட்டினர் கிளம்பினர். முத்துக்குமார் துரையிடம், “சம்பந்தி, நாளை மறுநாள் நம்ம வீட்ல விருந்து இருக்கு. எல்லோரும் கண்டிப்பா வந்திடனும். நன் நாளைக்குப் போன் பண்றேன். வேற யாரு யாருக்கு சொல்லணும் சொல்லுங்க, போன்ல சொல்லிடலாம்.” என முறையாக அழைத்து விட்டே சென்றார்.


“மண்டபத்தில சாப்பாடு ரெடியா இருக்கு. எல்லோரும் சாப்பிட்டுதான போகணும்.” என்ற துரை, “டேய் கதிரு, கருணா… முன்னாடி போய் அவங்களைக் கவனிங்க, நான் பின்னாடி வரேன்.” என்றதும், மகன்கள் இருவரும் விரைந்து, தங்கள் வண்டியில் மண்டபம் நோக்கி சென்றனர்.


பெண் வீட்டினர் மதிய உணவு அருந்தியதும், அவர்கள் வந்த பஸ்சில் ஏறிக்கொள்ள, இன்னொரு காரில் முத்துக்குமார் அவரது மனைவி இன்னும் சிலரும் ஏறிக்கொள்ள, அவர்களை அனுப்பி விட்டு, தங்கையை அழைத்துச் செல்ல வேண்டி, ஜெய் மட்டும் அங்குத் தங்கினான்.


சங்கமித்ராவுக்கு இன்னும் சுபத்ரா மீது கோபம்தான். அதனால் அவளிடம் கேட்காமல், ரேவதியிடம் அக்கா, “நான் பாத்ரூம் போகணும்.” என்றாள் மெதுவாக.


அவங்க அக்காவை கேட்காம நம்மைக் கேட்கிறாளே என ரேவதி அதில் கொஞ்சம் குளிர்ந்து போய், “வா..” என மாடிக்கு அழைத்துச் சென்றாள். அது சுபத்ராவின் அறைதான். இரவில் கதிரேசனின் குடும்பம் அங்குதான் இருக்கும்.


சங்கமித்ரா பாத்ரூமிற்குள் சென்று கதவைத்தான் சாற்றி இருப்பாள். அங்கே மதியழகனும் வந்துவிட்டான்.


“நீ இங்க என்ன பண்ற?” எனக் கேட்ட ரேவதியிடம்,


“ஒரு அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்…” என மதியழகன் செய்கையில் காட்ட,


“சீக்கிரம் வந்திடுங்க. இல்லைனா அத்தை திட்டப்போறாங்க.” எனச் சொல்லிவிட்டு ரேவதி கீழே இறங்கி சென்றாள்.


மனைவி வருவதற்காக மதியழகன் ஹாலில் உட்கார்ந்து இருந்தான். சங்கமித்ரா பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள், மதியழகனை அங்கே எதிர்பார்க்கவில்லை.


அவள் கீழே செல்லப் போக, விரைந்து அவளிடம் சென்றவன், அவளைத் தள்ளிக் கொண்டு பக்கத்தில் இருந்த படுக்கை அறைக்குச் சென்றான்.


“என்ன பண்ணப் போறீங்க?” சங்கமித்ரா பயத்துடன் கேட்க, மதியழகனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.


“என்ன பண்ணலாம், நீயே சொல்லேன்.” என்றான் சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி.


“நீங்க வேணா உட்கார்ந்து சட்டியும் பானையும் செய்ங்க. நான் போகணும்.” என்றாள்.


“அதெல்லாம் வேண்டாம், ரெண்டு நிமிஷம் என்னோட பேசேன்.” என்றான் ஆசையாக.
முதல் கேள்வியே, “நாம எப்ப எங்க வீட்டுக்கு போவோம்.” என்றுதான் கேட்டாள்.


அதில் நொந்து போனாலும், “அது சாயங்காலமா போவோம்.” எனப் பதிலும் கொடுத்தவன், “உனக்கு எங்க வீடு பிடிச்சிருக்கா?” என ஆர்வக் கோளாரில் அவன் ஒரு கேள்வி கேட்டு வைக்க,


“பிடிக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என இடக்காகப் பதில் கேள்வி ஒன்று சங்கமித்ரா கேட்டு வைத்தாள்.


“திருந்த மாட்ட டி நீன்னு, எப்பவும் எடுக்கு மடக்கா பேசுறதே வேலை.”


“நான் அப்படித்தான்னு தெரியும் இல்ல, அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணீங்க?” சங்கமித்ரா முறைத்துக் கொள்ள,


“அது உன்னைப் பிடிச்சு தொலைச்சிருச்சு, என்ன பண்றது?” என்றான். கோபமாக எல்லாம் சொல்லவில்லை, புன்னகையுடந்தான் சொன்னான்.


அப்போது கீழே இருந்து ரேவதி, “மதி…” எனக் குரல் கொடுக்க, அவசரமாகச் சங்கமித்ராவை அனைத்து, அவள் கன்னத்தில் முத்தமும் கொடுத்துவிட்டு, மதியழகன் வேகமாகக் கீழே இறங்கி சென்றான்.


இப்போ என்ன நடந்தது எனச் சங்கமித்ரா திகைத்து போய் நிற்க, சுபத்ராவின் இரண்டு பிள்ளைகளும் சித்தி என அவளைத் தேடி வந்துவிட்டனர். அவர்களுடன் பேசிக் கொண்டே கீழே இறங்கி வந்தாள்.


அங்கே ஹாலில் நல்லபிள்ளை போல, மதியழகன் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தான். சங்கமித்ரா அவனைப் பார்த்து முறைக்க, மற்றவர்கள் இருந்ததால்… அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தான்.


நல்லவேளை வீட்டில் அப்போது பெரியவர்கள் யாரும் இல்லை. எல்லோரும் மண்டபத்திற்குச் சாப்பிட சென்று இருந்தனர்.


சாப்பிட போவோம் என மாப்பிள்ளையும் பெண்ணையும் அழைத்துக் கொண்டு மிச்சம் இருந்தவர்களும் கிளம்ப, எல்லோரும் நடந்தே தான் மண்டபம் சென்றனர்.


ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம், யார் பொண்ணு மாப்பிள்ளை என்று தெரிய வேண்டாம். அதனால் இப்படி நடந்து செல்வதுதான் வழக்கம்.


அதற்குள் விஷயம் எப்படித்தான் தெரியுமோ… அவரவர் வாசலில் நின்று, மாப்பிள்ளையும் பெண்ணும் வருவதைப் பார்த்து, தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டனர்.


வழியில் வெங்கடேஷும், நடராஜும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள, பேசிக்கொண்டே மண்டபம் வந்து சேர்ந்தனர்.


எல்லோரும் நேராகச் சென்று சாப்பிட அமர, மாப்பிள்ளையும் பெண்ணையும் ஊட்டி விடச் சொல்லி, நண்பர்கள் ரகளைச் செய்ய, விருப்பம் இல்லையென்றாலும், மற்றவர்களுக்காகச் சங்கமித்ரா அவனுக்கு ஊட்டி விட்டாள். அவள் எதோ கடமையாகச் செய்ய, மதியழகன் அதையே விரும்பி செய்தான்.


சாப்பிட்டு முடித்ததும் வீட்டு ஆட்கள் மட்டும்தான் மண்டபத்தில் இருந்தனர். ஆளுக்கொரு பக்கம் மண்டபத்திலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். மதியழகன் சங்கமித்ராவுடன் வெங்கடேஷும், நட்ராஜும் உட்கார்ந்து இருந்தனர்.


“எங்க வீட்ல கல்யாணத்துக்கு வந்திருந்தாங்களே பார்த்தியா?” நட்ராஜ் ஆர்வமாகச் சங்கமித்ராவிடம் கேட்க,


“ஆமாம் பார்த்தேன், உங்களுக்கு ட்வின்ஸா.” என்றாள் ஆர்வமாக.


“ஆமாம்.” என நட்ராஜின் முகத்தில் மகிழ்ச்சி டின் டின்னாக வழிய…


“நீங்க எப்ப அண்ணா கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?” என்றாள் வெங்கடேஷிடம்.


“நீதான் வந்துட்டியே, இந்த அண்ணனுக்கு ஒரு பொண்ணு பாரு.” வெங்கடேஷ் உரிமையாகச் சொல்ல…


“உங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும் சொல்லுங்க.” என்றாள் சங்கமித்ராவும்.


“எந்தக் கழுதையைக் கட்டினா என்ன? எதோ ஒன்னு பாரு. எவ வந்தாலும் உதைக்கப் போறா.” என்றான் வெங்கடேஷ் இலகுவாக.


“நீ என்ன டா மாப்பிள்ளை இப்படிப் பொசுக்கு பொசுக்குன்னு உண்மையைப் பேசுற?” நட்ராஜ் சிரிக்க,


“இருங்க கழுதைன்னு நீங்க சொன்னதை, அவங்க வந்ததும் போட்டுக் கொடுக்கிறேன்.” என்றாள் சங்கமித்ரா.


“அவ கழுதைனா நான் மட்டும் குதிரையா? நானும் கழுதைதான்.” வெங்கடேஷ் புன்னகைக்க,


“பாரு இப்பவே பயப்படுற?” என்றான் நட்ராஜ்.


தன் மனைவி தன் நண்பர்களிடம் உரிமையாகப் பேசி பழகுவதை மதியழகன் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அதற்குள் எதேச்சையாகத் திரும்பிய சங்கமித்ரா அங்கே தன் சகோதரன் தனியாக உட்கார்ந்து இருப்பதைப் பார்த்ததும், “இருங்க வரேன்.” என்றவள், எழுந்து செல்லப் போக,


“எங்கப் போற இங்க உட்காரு.” என்றான் மதியழகன் கொஞ்சம் அதட்டலாக.
அதைச் சங்கமித்ரா சட்டை செய்தால் தானே… “நான் போவேன்.” என்றவள், போய்யே விட்டாள்.


மதியழகன் முகம் மாற, “விடு, கொஞ்ச நாளைக்கு அப்படித்தான். அப்புறம் நீயே போகச் சொன்னாலும் போக மாட்டங்க.”


“மதி, உனக்கும் சட்டுன்னு கோபம் வரும். அந்தப் பிள்ளையும் பார்த்தா பொறுமையான்ன பிள்ளை மாதிரி தெரியலை. யாரவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து போங்க… இல்லைனா ரெண்டு பேரும் முட்டிக்க வேண்டியதுதான்.” என்றான் வெங்கடேஷ் நண்பனாக.


சங்கமித்ரா அவர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தது, பிறகு மதி சொல்லி கேட்காமல், அவள் இங்கே வருவது, எல்லாமே ஜெய் பார்த்து இருந்தான்.


“நீ ஏன் இங்க வந்த? அங்க மாப்பிள்ளையோடு இரு.” என்றான் அருகில் வந்த தங்கையிடம்.


அவனும் அப்படிச் சொன்னதில் சங்கமித்ராவுக்குக் கோபம், “நீ தனியா இருக்கியேன்னு வந்தேன்.”


“இவ்வளவு நேரம் பெரிய மாப்பிள்ளை என்னோடதான் இருந்தார். இப்பதான் போனார். நீ மாப்பிள்ளைகிட்ட போ.”



சங்கமித்ரா போவது போலத் தெரியவில்லை என்றதும், அவளையும் அழைத்துக் கொண்டு மதியழகனிடம் சென்று அமர்ந்தான். ஜெய் வந்ததும், ஆண்கள் மட்டும் பேச, சங்கமித்ரா பார்த்துக் கொண்டு இருந்தாள்.


நல்ல நேரத்தில் பெண்ணையும் மாப்பிள்ளையும் மறுவீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சங்கமித்ரா ஆர்வக் கோளாரில் முந்திக்கொண்டு காரில் ஏற செல்ல, “எல்லார்க்கிட்டையும் சொல்லிக்க வேண்டாமா?” மதி அவள் காதில் கடிக்க, பிறகே நினைவு வந்து, எல்லோரிடமும் போய் வரேன் என்றாள்.


‘என்ன டா இவ இப்படி இருக்கா…’ இவளை வச்சு எப்படிச் சமாளிக்கப் போறோம் என உண்மையிலேயே மதியழகனுக்குப் பயம் வந்துவிட்டது. பயம் அவனுக்கு மட்டும் அல்ல ஜெய்க்கும் தான்.



Advertisement