Advertisement

சண்ட கோழி


அத்தியாயம் 3

அடுத்து வந்த முஹுர்த்த நாளில். அவர்கள் ஊர் பெரிய கோவிலில் வைத்து, பரிசம் போட்டு முடித்தனர். மதியழகனை தவிர அனைவரும் வந்திருந்தனர்.


“நீ வீட்டையும், கடையையும் பார்த்துக்கோ. நாங்க போயிட்டு வரோம்.” என அவன் அப்பா சொல்லும் போது, அவனால் மட்டும் என்ன செய்ய முடியும். வேறு வழியில்லாமல் சரி என்றான்.


அண்ணன்கள் இருவரும் சங்கமித்ராவை வளைத்து வளைத்துப் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து தம்பிக்கு அனுப்பினர். எதோ இதாவது கிடைத்ததே எனச் சந்தோஷப்பட்டுக் கொண்டான்.


புகைப்படத்தில் இருந்து அவனால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. அவள் அடக்கமாக இருப்பதாக நினைத்தான். கோபத்தை அடக்கிக் கொண்டு இருப்பதாக நினைக்கவில்லை.


துரை தெளிவாகச் சொல்லிவிட்டார். திருமணத்தை அவர்கள் ஊரில்தான் வைக்க வேண்டும் என்று. தங்கள் வீட்டில் கடைசித் திருமணம், அதனால் அங்கே வைக்க வேண்டும் என்றார்.


ஜெய்யின் திருமனத்தை இவர்கள் ஊரில் வைப்பதால்… முத்துகுமாரும் திருமணத்தை அவர்கள் ஊரில் நடத்த ஒத்துக் கொண்டார்.


அடுத்த மாதமே நல்ல முஹுர்த்தம் இருந்ததால்…அன்றே திருமணத்தை வைத்து விட்டனர். முன் தினம் பெண் அழைப்பதாக இருந்தது.


பரிசம் கோவிலில் வைத்ததால் நவீனுக்கு ஒன்றும் தெரியவில்லை. இவன் அவர்கள் ஆளும் இல்லை. அதனால் சங்கமித்ராவுக்குத் திருமணம் நிச்சயம் ஆனது, அவனுக்குத் தெரியாமலே போய் விட்டது.


ஒருநாள் நவீன் சங்கமித்ரா வீட்டுப் பக்கம் சுற்றிக் கொண்டு இருக்க, அந்தப் பக்கம் வந்த தெரிந்த காவலரை நிறுத்திய ஜெய், “சார், இந்தப் பையன் ஒரு மாதிரி இந்த ஏரியாவையே சுத்தி சுத்தி வரான். என்னன்னு பாருங்க.” என்றான்.


அவருக்கு ஜெய்யை நன்றாகத் தெரியும். அதனால், “நான் பார்த்துகிறேன். நீங்க போங்க.” என்றார். நவீன் இவர்களைக் கவனிக்கவில்லை. சிறிது நேரம் நின்று பார்த்த காவலருக்கும் அவன் மேல் சந்தேகம் வர, “யாரு நீ? ஏன் இங்கயே சுத்திட்டு இருக்க? ஸ்டேஷன் வா…” என்றதும், நவீன் அரண்டு விட்டான்.


“என் ப்ரண்ட் வீடு தெரியாம தேடினேன் சார். வேற ஒண்ணுமில்லை.” எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்து பதறி அடித்துக் கொண்டு சென்றுவிட்டான். அதன் பிறகு அவன் இந்தப் பக்கமும் வரவில்லை.


திருமணதிற்கு ஒரு மாதமே இருந்ததால்… இரண்டு பக்கமும் வேலை நெட்டி முறித்தது. அதுவும் பத்திரிக்கை வைக்கும் வேலைதான் அதிகம். மூன்று மகன்களை ஆளுக்கு ஒரு பக்கம் அனுப்பி, துரை பத்திரிகை வைத்தார்.


மதியழகன் நிறைய நாள் சங்கமித்ராவை செல்லில் அழைப்போமா என நினைத்து, கடைசியில் முடிவை மாற்றிக்கொள்வான். அவன் அப்பாவுக்குத் தெரிந்தால்… திட்டு விழும்.

இன்னும் ஒரு மாதம் தானே… நேரிலேயே பேசிக் கொள்ளலாம் எனத் தன்னையே சமாதானம் செய்து கொள்வான்.


அங்கே சங்கமித்ராவோ கொதிப்பில் இருந்தாள். இந்த நகை பிடிச்சிருக்கா, புடவை பிடிச்சிருக்கா என்றால்… “ம்ம்… மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு கேட்கலை… இது ரொம்ப முக்கியம்.” என்றாள் இடக்காக.


“இந்தப் புடவை வேணும், இந்த நகை வேணும்ன்னு கேளுங்க. மாப்பிள்ளை எல்லாம் எங்களுக்குப் பார்க்க தெரியும்.” என்றார் அவளின் அம்மாவும் பதிலுக்கு.


அதன் பிறகு அவள் வாயே திறக்கவில்லை. இரண்டு நாட்கள் முன்பு சுபத்ரா வந்துவிட்டாள். ‘தன் கொழுந்தனை வேண்டாம் என்றாள்’ என்ற கோபத்தில் அவளும் தங்கையிடம் பேசவில்லை… ‘இவளால வந்தது இந்தக் கல்யாணம்.’ என்ற கோபத்தில் சங்கமித்ராவும் அவளோடு பேசவில்லை.


முன் தினம் சொந்த பந்தங்களை அழைத்து, வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு, மதியம் உணவு அருந்தியதும், காரில் மாப்பிள்ளையின் ஊருக்கு சென்றனர்.


நேராகக் கல்யாண மண்டபத்திற்குச் சென்றுவிட்டனர். அங்கே மதியழகனை தவிர அனைவரும் இருந்தனர். இவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.


சங்கமித்ரா மனப் பெண் அறையில் இருந்தாள். பிரயாணம் செய்து வந்தது களைப்பாக இருக்க, அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.


அவளை முகம் கழுவ வைத்து, தலைவாரி பூ சூடி, வேறு புடவை மாற்றி விட்டனர். பெண் பார்க்க என்று யாரவது வருவார்கள் அல்லவா.

பெண் பக்க உறவினர்கள், மாப்பிள்ளையின் வெளியூர் சொந்தங்கள் என எல்லோரும் மண்டபத்தை ஆக்ரிமிப்புச் செய்ய, உறவினர்களைச் சந்தித்த மகிழ்ச்சியில், ஒருவரோடு ஒருவர் பேசி மகிழ்ந்தனர். சின்ன வாண்டுகள் எல்லாம் மேடையில் ஏறி ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் இருந்தனர்.


மதியழகன் உள்ளுரில் விட்டு போனவர்களுக்கு எல்லாம் பத்திரிகை வைத்துக் கொண்டு இருந்தான். அவனைப் பார்த்த அவனின் நண்பன் வெங்கடேஷ், “டேய் மாப்பிள்ளை ! என்ன டா இன்னும் இங்க சுத்திட்டு இருக்க. மண்டபத்துக்குப் போக வேண்டாமா? போய்ச் சீக்கிரம் ரெடி ஆகு. நான் மத்தவங்களைக் கூடிட்டு வரேன்.” என்றான்.


மதியழகன் சந்தோஷமாக வீட்டிற்குச் சென்று குளித்து, புதுப் பேன்ட் ஷர்ட் அணிந்து தயார் ஆனான். அப்போது அவனின் நண்பர்களும் வந்துவிட… அவனைக் கேலி கிண்டல் செய்து ஓட்டினர்.


ஆளுக்கொரு வண்டியில் மண்டபம் சென்று சேர்ந்தனர். ஆனால் உள்ளே எல்லாம் போகவில்லை. வெளியேவே இன்று அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மேலும் சில நண்பர்கள் வந்து சேர்ந்து கொண்டனர்.


“டேய் மாப்பிள்ளை இவன் கல்யாணத்துல நடந்த கூத்து தெரியுமா? நீ இவன் கல்யாணத்துக்கு வரலையே?” என வெங்கடேஷ் நட்ராஜை காட்டி, மதியழகனிடம் கேட்க,


“அதைப் போய் ஏன் டா இப்ப சொல்ற?” என கேட்டான் நட்ராஜ்.


“எனக்கு அப்ப பரீட்சை வர முடியலை. நீ சொல்லு என்ன ஆச்சு?” என மதியழகன் ஆர்வம் தாங்காமல் கேட்டான்.


“இவன் கல்யாணத்துல பெண்ணே வந்து ஆரத்தி எடுக்குது, அங்கயும் இங்கயும் நடக்குது. எல்லார்கிட்டயும் நின்னு பேசுது, எங்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சர்யம்.”


“பிறகுதான் தெரியுது. அது பெண்ணோட தங்கச்சியாம், ரெண்டும் ரெட்டை பிறப்புங்க. அச்சு அசல் ஒரே மாதிரி இருக்குங்க டா…”


“ஏன் டா கல்யாணப் பெண்ணுக்கும், தங்கச்சிக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது?” மதி சிரிப்புடன் கேட்க,

“அது எங்க தப்பு இல்லை டா மாப்பிள்ளை. அந்தப் பொண்ணும் கல்யாணப் பொண்ணு மாதிரிதாண்டா சிங்காரிச்சு இருந்தது. அப்புறம் சந்தேகம் வருமா இல்லையா?”


“ஹே நட்டு, இந்தக் கூத்து வேற நடந்துச்சா?” மதியழகன் சிரிக்க,


“அதை விட முக்கியம், நான் இவன் அண்ணிகிட்ட சொல்லிட்டு வந்தேன். ரெண்டு பொண்ணும் ஒரே மாதிரி இருக்கு, நம்ம பையன் மாத்தி முதல்ராத்திரி கொண்டாடிட போறான். எதுக்கும் பார்த்துக்கங்கன்னு சொல்லிடு வந்தேன்.” என வெங்கடேஷ் சிரிக்காமல் சொல்ல, அதைக் கேட்டு மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.


“இப்படியா டா எங்க அண்ணிகிட்ட சொல்லுவா?”


“பின்ன அவனுங்கதான் அறிவு இல்லாம ரெண்டு பொண்ணுங்களுக்கும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணி விடுறாங்க. யாரு பொண்ணு தங்கச்சின்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க முடியுமா… நீ பாட்டுக்கப் பாஞ்சுட்டா என்ன பண்றது? அப்புறம் ரெண்டையும் வச்சிகிட்டு நீ இல்ல சமாளிக்கணும். அதனால உன் நல்லதுக்குதான் செஞ்சேன் மாப்பிள்ளை.”


வெங்கடேஷ் சொன்னதைக் கேட்டு, நட்ராஜ் எனப்படும் நட்டு வெட்கப்பட, அப்போது ஒரு பெண் வந்து வெங்கடேஷ் அண்ணா எனக் குரல் கொடுத்து விட்டுச் சென்றது.


“சரி உள்ள போகலாம்.” வெங்கடேஷ் சொன்னதும், மதியழகன் அவனைப் பார்க்க, வெங்கடேஷும் பதிலுக்கு அவனைப் பார்த்தான். அவன் சொல்லாமலே விஷயம் மதியழகனுக்குப் புரிய.. இதயம் இன்பமாகத் துடித்தது.


மற்றவர்களைக் கழட்டிவிட்டு, வெங்கடேஷும், நட்ராஜும் மட்டும் உடன் சென்றனர். அவர்கள் இருவரும் தான் அவனுக்கு நெருக்கம்மும் கூட.


இவர்கள் உள்ளே சென்றபோது, தோழியர் புடைசூழ சங்கமித்ரா சாப்பிடுவதற்காக வந்து கொண்டிருந்தாள்.


“டேய் மச்சான், நீ ரொம்ப விவரம் டா… வெளியே இருந்தாலும் உள்ளேயும் ஒரு கண்ணு இருக்கு.” நட்ராஜ் சொல்ல,


“ம்ம்… நம்ம மாப்பிள்ளைக்கு நாம பண்ணாம யாரு பண்ணுவா?” என்றான் வெங்கடேஷ் சாதாரணமாக.


சங்கமித்ராவுக்குத் தெரியும் அவளைத் தான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று, அதனால் குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்தாள்.


எதிரே மதியழகன் நண்பர்கள் கேலி கிண்டலுக்கு இடையே, தன்னவளை பார்த்தும் பார்க்காதது போல வந்தான். ஆனால் முகத்தில் இருந்த மலர்ச்சியை, அவனால் மறைக்க முடியவில்லை.


எதிரே யாரோ வரவும், அவர்கள் விலகி போவார்கள் எனச் சங்கமித்ரா நினைக்க, ஆனால் வந்தவர் நகரவில்லை என்றதும், மெதுவாகப் பார்வையைக் காலில் இருந்து மேலே ஏற்றினாள்.


அது போய்க் கொண்டே இருக்க… அந்த வளர்ந்து கெட்டவனா இருக்குமோ… என நினைத்த போது, சரியாக நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தும் இருந்தாள்.


மதியழகன் அவளைப் பார்த்ததும் பெரிதாகப் புன்னகைக்க, அவன் பார்வையில் பாவை அவள் தடுமாறினாள்.


“எப்ப வந்தீங்க மித்ரா?” அவன் சாதாரணமாகக் கேட்க, மற்றவர்களை வைத்துக் கொண்டு பேசாமல் இருக்க முடியுமா?
“சாயந்தரம் வந்தோம்.” என்றாள்.


வேறு என்ன கேட்பது மதியழகன் யோசிக்க, அவனுக்கு அந்த வாய்ப்பை கொடுக்காமல் நண்பர்கள் பேச்சில் நுழைந்தனர்.


“டேய் ! எங்களை அவங்களுக்கு அறிமுகப் படுத்துடா.” அவர்கள் சொன்னதும், நண்பர்களை அவளுக்கு அறிமுகம் செய்தான்.


“இவன் வெங்கடேஷ், நாங்க சின்ன வயசில இருந்தே ப்ரண்ட்ஸ்.  இவனும் இதே ஊர்ல கடை வச்சிருக்கான்.”


“இவன் நடராஜ் என்னோட சீனியர். கணக்கு வாத்தியா இருக்கான். இதே ஊருங்கிறதுனால ப்ரண்ட் ஆகிட்டோம்.”


“தங்கச்சி எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு? ரெண்டு பசங்க இருக்காங்க. என் பொண்டாட்டி காலையில வருவா, உனக்கு அப்ப காம்மிகிறேன்.” என நட்ராஜ் வாயெல்லாம் பல்லாகச் சொல்ல,


“இப்ப ஒத்த யானை பார்த்த… நாளைக்கு யானைக் கூட்டம் வரும் பாரு.” என வெங்கடேஷ் சொல்ல, சங்கமித்ரவுக்குச் சிரிப்பு வந்தவிட்டது. கிட்டத்தட்ட நட்ராஜ் பாதி யானை சைசுக்கு தான் இருந்தான். ஆனாலும் தவறாக நினைத்துக் கொள்வானோ என அவள் பயந்து போய்ப் பார்க்க, நட்ராஜ் சிரித்துக் கொண்டுதான் இருந்தான்.


அவளின் மனம் புரிந்தது போல, “மாப்பிள்ளை அதுக்கு எல்லாம் கோவிச்சிக்க மாட்டான்.” என மதியழகன் நட்ராஜின் தோளில் கைபோட,


“உண்மைய தான சொன்னோம்.” என்றான் வெங்கடேஷ்.


பக்கத்தில் இருந்த தோழி சங்கமித்ராவை இடிக்க, “நாங்க போகணும்.” என்றாள் அவள் பொதுவாக.


“சரி நாளைக்குப் பாப்போம்.” என நண்பர்கள் விலகி நிற்க, சங்கமித்ரா அவர்களைக் கடந்து சாப்பிடும் அறை நோக்கி சென்றாள்.


அங்கிருந்த உறவினர்களை மதியழகன் நலம் விசாரிக்க, பிறகு இவர்களும் சென்று, பந்தியில் அவளுக்கு எதிரில் அமர்ந்தனர்.


இலையில் சோறு போட்டதும், நட்ராஜ் சாம்பாருக்காகப் பெரிய குழி பறிக்க, “போன வாரம் ரவி வீட்டு கல்யாணத்துல, சாப்பாடு ரொம்பக் கேவலமா இருந்துச்சு. அதுக்கே நம்ம மாப்பிள்ளை நாலு ரவுண்டு போனான். இன்னைக்கு டேஸ்டா வேற இருக்கு… எத்தனை ரவுண்டு போவானோ.” என வெங்கடேஷ் சொல்ல, மதியழகன் நட்டுவை பார்த்து பெரிதாக புன்னகைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.


நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், பார்வையால் சங்க மித்ராவை வருடவும் மறக்கவில்லை. ஆனால் அவள் இவன் பக்கம் பார்வையைத் திருப்பவே இல்லை.


சாப்பிட்டு முடிக்கும் வரை, அவள் பார்ப்பாளா எனப் பார்த்துக் கொண்டே இருந்தான்.


“அதெல்லாம் விவரமா இருப்பாங்க. நீ பார்க்கிறது தெரிஞ்சு இருக்கும். நீ பார்க்காத போது பார்ப்பாங்க பாரு.” என வெங்கடேஷ் கை கழுவ எழுந்து சென்றான்.


வெங்கடேஷ் அதிகம் படிக்கவில்லை. பள்ளி படிப்பு மட்டும்தான். படித்து முடித்த கையோடு, அவன் அப்பா கடைக்குச் சென்றுவிட்டான். ஆனாலும் உலக அறிவு உண்டு. அவன் கடைக்கு வருபவர்களிடமே அவ்வளவு பேசுவான். மனிதர்களை எளிதாகப் புரிந்தும் கொள்வான்.

மதியழகன் சாப்பிட்டுக் கை கழுவி வரும்போதுதான் ஜெய் அவனைப் பார்த்தான்.


“சாரி மாப்பிள்ளை, நான் உங்களைக் கவனிக்கலை.” என ஜெய் சொல்ல,


“நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. நாங்கதான் உங்களைக் கவனிக்கனும். வாங்க சாப்பிடுங்க.” என்றான் மதியழகன் உபசரிப்பாக. அவன் பேசும் விதம் ஜெய்யைக் கவர்ந்தது.


“நான் சாப்பிடுறேன். அப்புறம் ரொம்ப வேலையா…. பெரிய மாப்பிள்ளை சொன்னாரு, நீங்க பத்திரிகை வச்சிட்டு இருக்கிறதா.”


“ஆமாம், சில பேருக்கு விட்டு போச்சு. அதுதான் வச்சிட்டு இருந்தேன்.”


இருவரும் பேசிக் கொண்டு இருந்தபோது, அவர்களைத் தாண்டி சங்கமித்ரா கைகழுவ சென்றாள். சாப்பிட்டுவிட்டு வந்தவளை, யாரோ உறவினர் நிறுத்தி வைத்து பேசி… ஒருவழியாக இப்போதுதான் விட்டார். கூட வந்த பெண்கள் அப்போதே கைகழுவி விட்டு சென்றிருந்தனர்.


அது திருகு குழாய் அல்ல… மேல் பக்கத்தை அழுத்தினால் தண்ணீர் வரும். அவளும் ஒவ்வொரு குழாயாக அழுத்தி பார்க்கிறாள், தண்ணீர்தான் வரவில்லை.


மதியழகன் ஜெய் இருவருமே அவள் போராடுவதைப் பார்த்தனர். “அண்ணா…” எனச் சங்கமித்ரா குரல் கொடுக்க, அவனுக்கு முன்பு மதியழகன் சென்றான். அதைப் பார்த்து புன்னகையுடன் ஜெய் அங்கிருந்து கழண்டு கொண்டான்.


“சரியா சாப்பிட மாட்டியா நீ… ஒரு குழாய் அழுத்த கூடத் தெம்பு இல்லை.” எனக் கேட்டுக் கொண்டே , குழாயில் இருந்த அவள் கைமீது தன் கைவைத்து, லேசாக அழுத்த நீர் வந்தது.


அவன் கைப்பட்டதும் பதட்டத்தில் அவள் கையை உருவ முயல, “முதல்ல கழுவ.” என்றான் கொஞ்சம் சத்தம் உயர்த்தி.


அவள் கை கழுவியதும், தன் கையை எடுத்தவன், “கல்யாணம் ஆகப்போற பொண்ணு நல்லா சாப்பிட வேண்டாமா.” என்றான்.


“ஏன் என் கூட நீங்க தினமும் சண்டைப் போட போறீங்களா?” என்றாள் வாய் துடுக்காக.


அவள் சொன்னதில் சிரிப்பு வந்தாலும், “யோசிக்காம பேசுற பார்த்தியா?” என்றான்.


“அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடீங்களா. என்ன இன்னும் பண்ணலைன்னு நினைச்சேன். உங்களுக்கு என்னைப் பார்க்கும் போது எல்லாம் அட்வைஸ் பண்ணத் தான் தோணுமா?” அவள் எரிச்சலாகக் கேட்க,


“இதுக்கு நாளைக்குப் பதில் சொல்றேன்.” என்றான் புன்னகையுடன் . ஆனால் அதைச் சங்கமித்ரா கவனித்தால் அல்லவா…


அதற்குள் அங்கு வந்த நட்ராஜ், “டேய் எவ்வளவு நேரம் டா பேசுவீங்க? இந்தப் பக்கம் கை கழுவ வர்றவங்களை அந்தப் பக்கம் அனுப்பிட்டு இருந்தோம். உன் அப்பா இந்தப் பக்கம் வர்றாரு. வெங்கடேஷ் அவரைப் பிடிச்சு வச்சு பேசிட்டு இருக்கான்.” என்றான் பதட்டமாக.


“நீ போ மித்ரா.” என்றவன், அவள் உள்ளே சென்றதும், மண்டபத்தின் பின்பக்கம் செல்ல, உடன் நட்ராஜ் சென்றான்.


சங்கமித்ரா உள்ளே வரவும், அவள் தோழிகள் சேர்ந்துகொள்ள, “எங்க டி போனீங்கஎன்னை  விட்டுட்டு?” என அவள் கேட்க,


“எங்களை உன்கிட்ட வரவிடாம தான். அவர் ப்ரண்ட்ஸ் நின்னாங்களே, நாங்க என்ன பண்றது?” என்றனர்.


சங்கமித்ரா களைப்பில் போய்ப் படுத்ததும் உறங்கி விட, அதிகாலையில் அவளை எழுப்பிக் குளிக்கச் செய்து, அலங்காரம் செய்கிறேன் என ஒருவழியாக்கி, மணமேடையில் மதியழகன் அருகில் நிறுத்தியும் விட்டனர்.


மணமக்களைச் சுற்றி அவ்வளவு பேர்.. இதில் கழுத்தில் வேறு இரண்டு பெரிய மாலைகள். கழுத்தை அவளால் நிமிர்த்தவே முடியவில்லை. இதில் என்ன நடக்கிறது என அவள் பார்ப்பதற்குள், கெட்டி மேளம் ஒலிக்க… மதியழகன் அவள் கழுத்தில் தாலி சங்கலியை அணிவித்து இருந்தான்.
கழுத்தில் தாலியை பார்த்ததும்தான் திருமணம் ஆகிவிட்டதே தெரிந்தது.

போச்சா ! இனிமே நமக்கு இந்த ஜெயில் வாழ்க்கைதான் என நினைத்ததும், அவளுக்குக் கண்களில் கண்ணீர் பெருகியது.


இவளே மனதில் சிலவற்றை உருவகப்படுத்திக் கொண்டாள். நல்லதை நினைத்து சென்றால்… நல்லதே நடக்கும் நடக்கும். இவள் புகுந்த வீட்டை சிறைச்சாலை என நினைத்து செல்கிறாள்….. அப்போது அவளுக்கு அப்படித்தான் இருக்கும்.


மங்கை அவள் எண்ணத்தை மணாளன் அவன் மாற்றுவானா?










Advertisement