Advertisement

சண்ட கோழி

அத்தியாயம் 2

தம்பியின் அழைப்பை ஏற்று எழிலரசியும் தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளைப் பக்கத்துக்கு ஊரில் தான் கட்டி கொடுத்து இருக்கிறார்கள். பதினெட்டு வயதிலேயே கட்டி கொடுத்து விட்டனர்.

 

பன்னிரெண்டாம் வகுப்பு வரைதான் படித்து இருக்கிறாள். படிப்பும் சரியாக வரவில்லை. அதனால் நல்ல சம்பந்தம் வர, உடனே திருமணம் முடித்து விட்டனர். அவளுக்கு இரண்டு பெரிய பையன்கள் இருக்கிறார்கள்.


“வாங்க எங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்.” என மதியம் சாப்பிட வந்த கணவரை அழைத்துக் கொண்டு வந்தாள். அவள் தனியாகப் போய்க்கொள்ளப் புகுந்த வீட்டினர் கூட அனுமதிப்பார்கள், ஆனால் அவள் தந்தை அனுமதிக்க மாட்டார்.


‘நீ வரணுமா ஒன்னு உன் வீட்டுக்காரரோட வா… இல்லைனா உன் அண்ணங்களைக் கூப்பிட வர சொல்லு, தனியா எல்லாம் வரக் கூடாது.” என்பார்.


“என்ன டி பிறந்த வீட்டுப் பாசம் திடிர்ன்னு அடிக்குது.” எனக் கேட்ட கணவரிடம், எழிலரசி வாயே திறக்கவில்லை. இவரிடம் விஷயத்தைச் சொன்னால், “என்ன நீயே பொண்ணு பார்த்திட்டியா?” என எல்லோரின் முன்பே, மதியழகனிடம்  எக்குத்தப்பாகக் கேட்டு வைப்பார்.


“சும்மா, அம்மா வர சொன்னாங்க. அதுதான் பார்க்க போறேன்.” என்றாள்.
வீட்டிற்கு வந்து நின்ற மகளை, பெற்றோரும் உடன் பிறந்தோரும் மகிழ்ச்சியாக வரவேற்றனர். தனக்காக அக்கா வந்ததில், மதியழகனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.


அப்போது மதிய நேரம் என்பதால்… ஆண்கள் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.


சாப்பிட சொல்லி, மாப்பிளைக்கும் இலை போட்டனர். இருக்கும் கூட்டதிற்குத் தட்டில் போட்டால்… கழுவி மாளாது என்றே இலையில் வைப்பது.


சாப்பிட்டு முடித்ததும், அவள் தந்தை படுக்கச் சென்றுவிட,


“நீங்க போங்க, நான் சாயந்திரம் மதியோட வரேன்.” என எழிலரசி தன் கணவனை அனுப்பி வைத்தாள்.


பிறகு பெண்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட பின் தன் அம்மாவிடம் எழிலரசி மெதுவாக, “நம்ம தம்பிக்கு சங்கமித்ராவை கேட்கலாம் இல்ல மா…. மூத்த அண்ணி ரொம்பப் பொறுப்பு, இவளும் நல்ல பெண்ணாதான் தெரியுறா.” என அவளது விருப்பம் போலச் சொன்னாள்.


அதைக் கேட்ட நீலவேணி யோசிக்க ஆரம்பித்தார். இவரிடம் சொன்னால், எப்படியும் தந்தையின் காதுக்குப் போய்விடும் என்று தெரியும்.


நீலவேணி எப்போது அதைக் கணவரிடம் சொன்னாரோ தெரியாது. ஆனால் சிறிது நேர ஒய்வுக்குப் பின் வெளியே வசந்த துரை கதிரேசனிடம், “உங்க அம்மா மதிக்கு உன் கொழுந்தியாளை கேட்போமான்னு கேட்கிறா?” என்றவர், அங்கிருந்த சேரில் யோசனையாக அமர்ந்தார்.


அப்போது மதியழகனும் அங்கேதான் இருந்தான். அப்பா என்ன சொல்லப்போறாரோ எனப் பதைபதைப்பில் இருந்தாலும், வெளியே முகத்தில் எதையும் காட்டாது இருந்தான்.


அப்போது துரை எதுவும் முடிவு சொல்லவில்லை. டீ குடித்து விடு கடைக்குக் கிளம்பி சென்றுவிட்டார். கடைக்குச் செல்வது போலப் போக்கு காட்டிய இரண்டு அண்ணன்களும், தந்தை வெளியே சென்றதும், வீடு திரும்பினர்.


“ஏய் ! நீ இதுக்குத் தான வந்த? நீயா வந்திருக்க மாட்ட, மதி கேட்க சொன்னனா?” எனக் கதிரேசனும், கருணாவும் எழிலரசியைக் கட்டம் கட்ட, அதற்கு எழிலரசி இல்லை என மறுக்க, பொய் சொல்கிறாள் என நன்றாகவே தெரிந்தது.


“ஏய், நாங்க அப்பாகிட்ட சொல்ல மாட்டோம். எங்க பொண்டாட்டி கிட்ட கூடச் சொல்ல மாட்டோம்.” என்றதும், எழிலரசி ஒத்துக் கொண்டாள்.


“சரி விடு பார்த்துக்கலாம்.” என இருவரும் சென்றனர்.


மதி எழிலரசியை அவள் வீட்டில் விடச் சென்றான். செல்லும் வழியில் எழிலரசி , “அப்பா ஒத்துக்கலைனா என்ன டா தம்பி பண்ணுவ?” எனக் கவலையாகக் கேட்க, அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை.


அவனைப் பார்த்ததும், “மதி மாமா…” எனப் பாசமாக வந்த தன் மருமகன்களுக்கு, பையில் இருந்த பணத்தை எடுத்து, அப்படியே கொடுத்துவிட்டு வந்தான்.


இரவு சாப்பிட்டதும், துரை பேச்சை ஆரம்பித்தார். “ஒரே வீட்ல இருந்து ரெண்டு பொண்ணு எடுக்க யோசனையா இருக்கு.”


“ஏன்னுங்க?” என்ற நீலவேணியிடம்,


“நாளைக்குப் பெரியவனும், சின்னவனும் ஒன்னு சேர்ந்திட்டு, நடுவுலவனை விட்டுடக் கூடாது இல்லை.” என்றார்.


அவர் சொல்வது நியாயம் என்பதால்… நீலவேணி மறுத்துச் சொல்லாமல் இருந்தார். ஆனால் கதிரேசன், “அதெப்படி நாங்க அவனை விட்டுக் கொடுப்போம். நீங்க அதை எல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க.” என்றான்.


கருணாவும், “அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாதுப்பா. சங்கமித்ரா நல்ல பொண்ணு, அதையும் இதையும் நினைச்சு விட வேண்டாம்.” என்றான்.


தம்பியின் விருப்பம் தெரிந்தே, அண்ணன்கள் இருவரும் அவனுக்காகப் பேசினர். அவர்கள் திருமணத்தில் இந்தப் பேச்சு வார்த்தை கூட இல்லை. துரை பார்த்த பெண்ணை, கேள்வியே கேட்காமல் இருவரும் திருமணம் முடித்து இருந்தனர். இதில் எதுவும் கலந்து கொள்ள முடியாமல், மதியழகன் பார்த்துக் கொண்டு இருந்தான்.


“சரி, அந்தப் பெண்ணையே பார்ப்போம். கதிரு, நீயும் உன் பொண்டாட்டியும், நல்லநாள் பார்த்து போய் அவங்க வீட்ல பேசிட்டு வந்திடுங்க.” எனத் துரை எழுந்து உள்ளே சென்றார்.


சந்தோஷத்தை கூட வெளியே காட்ட முடியாமல், மதியழகன் உட்கார்ந்து இருந்தான்.


வீட்டினர் எல்லோருக்குமே மகிழ்ச்சிதான். ஆனால் கருணாவின் மனைவி ரேவதிக்கு அவ்வளவு விருப்பம் இல்லை. இனி அவங்க அக்காவும் தங்கச்சியும் இல்ல சேர்ந்துப்பாங்க என நினைத்தாள். ஆனால் அவள் எதாவது பேசினால், கருணா துளைத்து விடுவான். அதற்குப் பயந்து பேசாமல் இருந்தாள்.

அறைக்கு வந்ததும் மதியழகன் முதலில் எழிலரசியை அழைத்துத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான். அவளும் மிகவும் சந்தோஷப்பட்டாள்.

“அம்மா சொல்லும்போது தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத கா…” எனச் சொல்லிவிட்டு வைத்தான்.


நேரில் சென்று பேசுவோம் என நினைத்து, சுபத்ரா அவள் வீட்டில் எதுவும் சொல்லவில்லை. இரண்டு நாள் கழித்து அவளும், கதிரேசனும் தங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு புதுக் கோட்டைக்குச் சென்றனர்.


அவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு பிள்ளைகள். வீட்டில் அனைவருக்கும் பொதுவாக ஒரு டாட்டா சுமோ இருந்தது. அதை கதிரேசனே ஓடிக் கொண்டு சென்றான்.

இவர்கள் ஊரில் இருந்து ஐந்து மணி நேர பயணம்.
செல்லும் வழியில்தான் சுபத்ரா அவர்கள் வருவதாகச் சொல்லி இருந்தாள். இவள் வருவதற்குள் பெரிய விருந்தே தயார் செய்து இருந்தனர்.


பிறந்த வீட்டிற்கு அடிக்கடி சீராட வரும் மகள் அல்ல அவள். வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ முறையோ வருவாள். அதுவும் ஒரு வாரம் மட்டுமே இருந்துவிட்டு செல்பவள். அதனால் அவள் எப்போது வந்தாலும், அவள் வீட்டில் அவளைச் சீராட்டுவர்.


தங்கை வருவது தெரிந்து, ஜெய்யும் வீட்டிற்கு வந்துவிட்டான். அவன் அங்கே பெரிய ஜவுளிக்கடை வைத்திருக்கிறான்.


மதியம் போல இவர்கள் அங்கே போய்ச் சேர, தயாராக இருந்த விருந்தை ஒரு பிடிபிடித்தனர். பிறகு கதிரேசன் சென்று ஓய்வு எடுக்க, சங்கமித்ரா சகோதரியின் பிள்ளைகளோடு பின்னே தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.


சுபத்ரா மெதுவாகத் தன் பெற்றோர் மற்றும் சகோதரனிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்களுக்கு விருப்பம்தான். ஆனால் இந்தச் சங்கமித்ரா தான் பிடிவதமாக இருக்கிறாளே.. அதை நினைத்துதான் யோசித்தனர்.


“நாம எங்க போய் நல்ல இடமா தேடுறது. இங்கேயே செய்வோம்.” என்றார் அவளுடைய தந்தை. ஆனால் ஜெய், “வேண்டாம்பா ஏற்கனவே ஒரு பெண்ணை அங்கதான் கொடுத்திருக்கோம். எதுக்குத் திரும்ப அங்கயே செஞ்சிட்டு, வெளியில பார்ப்போம்.” என்றான்.


தங்கைக்கு விருப்பம் இல்லை என்றே அப்படிச் சொன்னான். அவன் சொன்னதும், அவன் அப்பாவும் யோசித்தார். இதை எல்லாம் பார்த்த சுபத்ராவுக்குதான் முகம் வாடிவிட்டது.


மாலை எழுந்து வந்த கதிரேசனுக்கு, பலகாரங்களைக் கொண்டு வந்து சுபத்ரா கொடுக்க, அவன் மனைவியின் முகத்தை ஆவலாகப் பார்த்தான். ஆனால் அவள் பிடி கொடுக்காமல் விலக, அவன் முகம் மாறியது.


“அப்புறம் மாமா, சுபத்ரா நாங்க வந்த விஷயம் சொன்னாளா?” என அவனே பேச்சை ஆரம்பித்தான்.


“எங்களுக்குச் சந்தோஷம் தான் மாப்பிள்ளை. ஆனா முதல்ல சங்கமித்ராவுக்குச் செய்யலாம்ன்னு நினைச்சோம். ஆனா இப்ப ஜெய்க்கு முடிச்சிட்டு, அப்புறம் அவளுக்குப் பண்ணலாம்ன்னு பார்க்கிறோம். இங்க பக்கத்திலேயே எங்காவது கொடுத்தா வந்து போய் இருக்கும்.” என்றார் நயமாகவே. தன் மூத்த பெண்ணை அவர்கள் வீட்டில் அல்லவா கொடுத்திருக்கிறார். அதனால் தழைந்து தானே போக வேண்டும்.


கதிரேசனுக்கா புரியாது, சட்டென்று தன் இருக்கையைத் தள்ளி விட்டு எழுந்து நின்றான். அதைப் பார்த்து ஒரு நொடி எல்லோருமே பயந்து விட்டனர்.


“நீங்கதான் மாப்பிள்ளை பார்க்கிறதா சொல்லிவிட்டீங்க. இப்ப ஜெய்க்கு முடிக்கப் போறதா சொல்றீங்க. என் தம்பிக்கு பொண்ணு கொடுக்க இஷ்ட்டமில்லைனா, அதை நேரா சொல்லுங்க. எதுக்குச் சுத்தி வளைக்கிறீங்க?”


“உங்க ரெண்டாவது பொண்ணைக் கட்டி கொடுக்க விரும்பாத இடத்தில, உங்க மூத்த பொண்ணு மட்டும் ஏன் இருக்கணும்? அவளையும் நீங்களே வச்சுக்கோங்க.” என்றவன்,


“பிள்ளைங்களா கிளம்புங்க, நம்ம வீட்டுக்கு போவோம்.” என்றான்.


ஒரு நொடி எல்லோருமே ஆடிவிட்டனர். கதிரேசன் இப்படியெல்லாம் கோபம் கொண்டு சங்கமித்ரா பார்த்ததே இல்லை. எப்போதும் அமைதியாகப் பேசும் அத்தானுக்கு இப்படியும் பேச தெரியுமா எனப் பார்த்து இருந்தாள்.

சுபத்ரா தான் ஒரே அழுகை. கோபத்தில் தன்னை அல்லவா, அவள் கணவன் தள்ளி வைக்கப் பார்க்கிறான். அவளை அவள் பெற்றோரும், சகோதரனும் சமாதானம் செய்ய, அவர்களைத் தள்ளிவிட்டு தன் கணவனிடம் சென்றவள்,

“நானும் உங்களோட வரேங்க.” என்றாள்.


“இனி உனக்குப் பிறந்த வீடு கிடையாது. அப்படின்னா வா.. நாளைக்கு அண்ணன் கல்யாணத்துக்குப் போகணும், தங்கச்சி கல்யாணத்துக்குப் போகணும்ன்னு எதாவது சொன்ன, உன்னை வெட்டிடுவேன். இனி இவங்களும் உன்னைத் தேடி வரக் கூடாது.” என்றான்.


எல்லாவற்றிற்கும் சுபத்ரா தலையைத் தலையை ஆட்ட, “போய், நம்ம பையை எடுத்திட்டு வா.” என்றான்.


“மாப்பிள்ளை நீங்க ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க. நாம பேசலாம்.” என்றார் முத்துக்குமார்.


“என் தம்பிக்கு பொண்ணு கிடைக்காம, நாங்க இங்க வரலை. இன்னைக்கு நாங்க அவனுக்குப் பொண்ணு பார்க்கிறோம்ன்னு வெளிய தெரிஞ்சா, நாளைக்கே அத்தனை சம்பந்தம் எங்களைத் தேடி வரும். ஆனா நீங்க எதோ தகுதி இல்லாதவனுக்குப் பொண்ணு கொடுக்கிற மாதிரி யோசிக்கிறீங்க.”


அவன் சொல்வது உண்மைதான். அவர்களுடையது எல்லாவற்றிலும் தகுதியான குடும்பம் தான்.


“உங்களை நாங்க குறைவா எல்லாம் நினைக்கலை மாப்பிள்ளை. ஒரு தங்கச்சியை அந்த வீட்ல கொடுத்தோம், இன்னொன்னு பக்கத்தில இருந்தா, அடிக்கடி போய் வர இருக்குமேன்னு நான்தான் சொன்னேன்.” என்றான் ஜெய்.


அவன் சொல்ல வரும் காரணம் கதிரேசனுக்குப் புரியாமல் இல்லை. “உங்க தங்கச்சி உங்க வீட்டுக்கு அடிக்கடி வர்றது இல்லை, உண்மைதான். ஆனா நாங்க எதுக்காவது அவ உங்களை எதிர்பார்க்கிற மாதிரி வச்சிருக்கோமா.” என்றான்.


ஒருநாளும் அதை வாங்கி வா, இதை வாங்கி வா எனக் கதிரேசனோ, அவன் குடும்பத்தினரோ சொன்னதே இல்லை. ஜெய் அமைதியாக இருக்க,


“நாங்க பேசினது தப்புதான். நாங்க வேற எதோ நினைச்சோம். ஆனா உங்க குடும்பத்தைத் தப்பா எல்லாம் நினைக்கலை.” என்றார் முத்துக்குமார்.


வீட்டுக்கு சென்றால் மதி தன் முகத்தை ஆவலாகப் பார்ப்பானே, அவனுக்கு என்ன சொல்வது எனக் கதிரேசன் கலங்கி போனான். சுபத்ராவுக்கு அது புரிந்தது.


“இவங்களுக்கு நம்ம மதி மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைக்கலை. நீங்க ஏன் கலங்குறீங்க? இப்படியெல்லாம் யோசிச்சு யாரும் பொண்ணு தர வேண்டாம். வாங்க போகலாம்.” என்றாள் சுபத்ரா.


“இரும்மா, நீயும் அவசரப்பட்டா எப்படி? நாம பேசலாம்.” என்றார் முத்துக்குமார்.


“வாங்க அத்தான். நாம கடை வரை போயிட்டு வருவோம்.” என ஜெய் கதிரேசனை அழைத்துச் சென்றான்.


அவர்கள் சென்றதும், “நான் அப்பவே நம்ம மதிக்கு பர்ப்போம்ன்னுதான் சொன்னேன். இதோ இங்க இருக்காளே, இவ பண்ண வேலைதான். இவதான் அக்கா வீடு வேண்டாம், வேற இடம் பார்க்க சொன்னா…” என அவர் அம்மா போட்டு உடைக்க, சுபத்ரா தங்கையைக் கோபமாக முறைக்க, சங்கமித்ரா முகத்தைத் திருப்பினாள்.


“நான் எதோ ஜெய் சொல்றான்னு இல்ல நினைச்சேன். சின்னப் பிள்ளை பேச்சை கேட்டுகிட்டா, அவன் வேண்டாம்ன்னு சொன்னான்.”


“சங்கமித்ரா, நீ அவ்வளவு பெரிய ஆள் ஆகிட்டியா. உன் அக்கா நாங்க பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணலை. நீ மட்டும் ஏன் இப்படியெல்லாம் பேசிட்டு திரியுற. ஒழுங்கா இருக்கணும்.” என்றார் முத்துக்குமார்.


சங்கமித்ராவுக்கு அவள் அப்பா என்றால்… மிகுந்த பயம். அதனால் மறுத்துப் பேசாமல் இருந்தாள்.


கடையில் இருக்கும் போது, மதியழகன் இரண்டு முறை செல்லில் அழைத்து விட, கதிரேசன் எடுக்கவில்லை. தன் குரலில் இருந்தே அவன் கண்டுகொள்வான் என்றுதான் எடுக்கவில்லை.

அதைக் கவனித்த ஜெய்க்கு, மதியழகனுக்குச் சங்கமித்ராவை திருமணம் செய்ய விருப்பம் இருக்கிறது போல, அதனால்தான் கதிரேசன் இவ்வளவு பேசுகிறான் எனப் புரிந்தது.


கதிரேசனை கல்லாவில் உட்கார வைத்து விட்டு, தனியே சென்று ஜெய் தன் அப்பாவிற்கு அழைத்தான்.


மாப்பிள்ளை எங்கே இருக்கிறார் எனக் கேட்டுக் கொண்ட பிறகே முத்துக்குமார் பேச ஆரம்பித்தார்.


“என்ன டா? நான் நீ எதோ யோசிக்கிறேன்னு பார்த்தா, நீ அந்தச் சின்னப் பிள்ளை பேச்சை கேட்டுகிட்டு ஆடுற.” என்றார்.


“ஆமாம் பா… நான் அவ பேசுறதை பெரிசாவே எடுத்திருக்கக் கூடாது.”


“சரி நீ மாப்பிளையை வீட்டுக்கு கூடிட்டு வா… நாம அவர்கிட்ட சரின்னு சொல்லிடுவோம்.” என்றார். ஜெய் கதிரேசனோடு வீடு திரும்பும் போது, நவீன் இவர்கள் வீட்டையே வண்டியில் சுற்றி வருவதைப் பார்த்தான்.


இவன் கண்டிப்பா ஓரண்டைய இழுப்பான் என நினைத்தவன், தன் தங்கையின் திருமணத்தைச் சீக்கிரமே முடிக்க வேண்டும் என நினைத்தான்.


இத்தனை நாள் அவன் நவீன் மீது கைவைக்காததற்குக் காரணம். விஷயம் வெளியில் தெரிந்தால்…. இவன் ஏன் அவனை அடிச்சான். அப்ப எதோ நடந்திருக்கு என்றுதான் மற்றவர்கள் நினைப்பார்கள். அந்த ஒரு காரணத்திற்குத் தான் விட்டு வைத்திருக்கிறான்.

கதிரேசன் வந்ததும், முத்துக்குமார், மதியழகன் சங்கமித்ரா திருமணதிற்குச் சம்மதம் சொல்லிவிட்டார். அவனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.


“ஒரு தடவை முடிவு பண்ணா பண்ணதுதான் மாமா. பின்னாடி எந்தப் பேச்சும் இருக்கக் கூடாது.” எனக் கதிரேசன் உறுதியாகக் கேட்க,


“இல்லை நாங்க மாறமாட்டோம். நீங்க தேதி குறிங்க.” என்றார் முத்துக்குமார்.


இரவு படுப்பதற்கு முன், “எல்லாம் ஓகே .” எனக் கதிரேசன் மதியழகனுக்கு மெசேஜ் தட்டி விட, அவன் கனவில் மிதந்தான். இங்கே சங்கமித்ரா கடுப்பில் இருந்தாள்.

Advertisement