Advertisement


மூன்று மாதங்கள் சென்று…


ஜெய்யின் நிச்சயத்திற்கு முதல் நாளே மித்ராவை அழைத்துக் கொண்டு மதியழகன் சென்றுவிட்டான். மறுநாள் அப்பா அம்மாவையும் அழைத்துக் கொண்டு கதிரேசனின் குடும்பம் சென்றது. கருணாவும், ரேவதியும் திருமணதிற்கு வருவதாக இருந்தது.


ஜெய் நிஷா நிச்சயம் நல்லபடியாக முடிய. மித்ராவை தவிர மற்றவர்கள் மட்டும் அன்றே கிளம்பிவிட்டனர். மித்ரா ஒருவாரம் கழித்து வருவதாக இருந்தது.


மறுவாரம் மதியழகன் அவளை அழைக்க வர… அப்போது மித்ரா அவனிடம் சந்தோஷமான விஷயம் சொல்ல… கேட்டதும், அவனுக்குச் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை… “ஹே… நான் அப்பா ஆகிட்டேன்.” என மனைவியைச் சந்தோஷமாகத் தூக்கி சுற்றினான்.


மித்ரா கர்ப்பமாக இருப்பது உறுதி ஆக. அவளை அங்கேயே விட்டு, அவன் மட்டும் கிளம்பி சென்றான்.


“இந்த மாதிரி நேரத்தில அலையக் கூடாது பா… அதுதான் அங்கயே விட்டுட்டு வந்துட்டேன்.” என்றான் துரையிடம்.


அவனுக்குத் தெரியும், இந்த மாதிரி நேரத்தில் தான் என்ன தாங்கினாலும், அவளுக்குப் பிறந்த வீட்டினர் பார்ப்பது போல இருக்காது என்று… அதுவும் இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் தான் அவள் பிறந்த வீட்டில் தங்கி சீரடாவும் முடியும்.


ஜெய்யின் திருமணம் வேறு இரண்டு மாதங்களில் இருந்ததால்… திருமணம் முடிந்தே அவளை அழைத்துக் கொள்ளலாம், இல்லையென்றால் அவள் தேவை இல்லாமல் அலைய வேண்டும் என நினைத்தான்.


மித்ராவுக்குக் கொஞ்சம் மசக்கையும் படுத்தியது. இதே புகுந்த வீடு என்றால்… நாம படுத்திருக்கோம், அவர்கள் வேலைப் பார்கிறார்களே என உறுத்தலாக இருக்கும். இது அம்மா வீடு என்பதால்… எந்தக் கவலையுமின்றி, நிம்மதியாக உறக்கம் வரும் நேரம் எல்லாம் உறங்கி எழுந்தாள்.


ஜெய் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவனுக்கு மதியழகன் மித்ராவை இங்கே விட்டுச் சென்றது, அவ்வளவு சந்தோஷம், அதெல்லாம் சேர்த்து வைத்து தங்கையை நன்றாகக் கவனித்தான்.


திருமணதிற்கு நான்கு நாட்கள் முன்பு சுபத்ராவும் வந்துவிட… இரண்டு தங்கைகளும் வந்திருந்தது… வீடே நிறைந்திருப்பது போல அவனுக்கு நிறைவாக இருந்தது.


மதியழகன் திருமணதிற்கு முன்தினம்தான் வந்தான். இரண்டு மாதங்களாக மனைவியைப் பிரிந்திருந்ததால்…வீட்டிற்கு வந்ததும் மித்ராவை, அவன் கண்கள் ஆவலாகத் தேடியது.


கீழே ஹாலில் கணவன் குரல் கேட்டதும், மித்ராவும் அவனைப் பார்க்க விரைந்து வந்தாள். இருவரின் பார்வையும் ஒன்றையொன்று தழுவி இருக்க, மற்றவர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் நினைக்காமல், மித்ரா மதியழகன் அருகே சென்று, அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.


அவனுக்கும் பார்வையை மனைவியை விட்டு திருப்ப முடியவில்லை. “ஹே சண்ட கோழி எப்படி இருக்க?” என்றான் ஆவலாக.


இரண்டு மாதங்களாக அவன் அவளோடு போன்னில் கூடச் சரியாகப் பேசி இருக்கவில்லை. எங்கே பேசினால்… அவளைத் தான் அங்கே அழைத்து விடுவோமோ என நினைத்தே பேசவில்லை.


இருவரின் நிலையையும் உணர்ந்த ஜெய், “அவரைக் கூட்டிட்டு மாடிக்கு போ.” என்றான்.


அறைக்கு வந்ததும் மனைவியை அணைத்து, “நீ இல்லாம இருக்கவே முடியலை மித்ரா.” என்றவன், ஆசையாக அவள் வயிற்றை வருடி, அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்து, “பேபி… அப்பாவை விட்டு ரொம்ப நாள் இருந்துடீங்க. இனிமே அப்பாதான் உங்களைக் கவனிப்பேன்.” என்றவன், இதமாக அவள் வயிற்றில் முத்தமிட்டான்.


குறித்த முஹுர்தத்தில் ஜெய் நிஷா திருமணம் நன்றாக நடந்து முடிய, மறுநாள் மதியழகன் மித்ரா மற்றவர்களுடன் கிளம்பி தங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர்.  


இரவு வந்து உறங்கியது களைப்பாக இருக்க, மறுநாள் மித்ரா தாமதமாகவே எழுந்தாள். ஆனால் அவள் எழுந்து விட்டது தெரிந்ததும், ரேவதி ஒரு பெரிய டம்ளர் நிறைய ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றாள்.


அன்று அவள் மித்ராவை எந்த வேலையும் செய்ய விடவில்லை. மித்ரா உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்க, ரேவதிதான் செய்தாள்.


மதியழகன் பதினொரு மணி போல் பழங்களோடு வர… “நீ இல்லாம உன் வீட்டுக்காரர் வீட்டலையே இல்லை. பசலை நோய்க் கண்ட தலைவின்னு தான் கேள்வி பட்டிருக்கேன். ஆனா தலைவனை இப்போதான் பார்த்தேன்.” என ரேவதி சிரித்துக் கொண்டே சொல்ல,


“ஏன் அண்ணி இப்படி ஓட்றீங்க?” என்றான் மதியழகன்.


“பிறகு சொல்லாம, இத்தனை நாள் கழிச்சு இன்னைக்குத்தானே இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்க.”


“என்னைப் பார்த்தா உங்களுக்குச் சந்தோஷமா இருக்குமா? உங்களைக் கவனிக்க அண்ணனை அனுப்பி வச்சேனா இல்லையா?” என்றான்.


“ஓ… அது உன் வேலைதானா… என்ன டா நம்ம வீட்டுக்காரருக்கு கூட இப்படியெல்லாம் தோணுதேன்னு நினைச்சேன்.” அவள் சொல்லும் போதே, கருணா பழங்களோடு வர…


“பாருங்க இப்ப நான் சொல்லி எல்லாம் அண்ணன் வரலை.” என்றவன், “வா மித்ரா நாம அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.” என அவன் மனைவியை அழைத்துக் கொண்டு செல்ல,


“டேய் ! நீ போறதுன்னா போடா. அது ஏன் எங்களைக் காரணம் காட்டிட்டு போற?” என்றான் கருணா.


“அது பொண்டாட்டிக்கு ஊட்டி விடனும் இல்ல, அதுக்குதான்.” என்றாள் ரேவதி சிரிப்புடன்.


“நீங்கதான் அண்ணி என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க.” என்றான் மதியழகன்.


அவர்கள் பகுதிக்கு வந்ததும், “ஏங்க இப்படிப் பண்றீங்க?” மித்ரா கேட்க,


“நான் தான டி உன்னைக் கவனிக்கணும்.” என்றான். ஆனால் அவன் கவனித்ததோ வேறு விதத்தில்… கூடல் முடிந்து விலகிய கணவனை, விலக விடாமல் இழுத்தவள், “இதுக்குதான் தனியா கூடிட்டு வந்தீங்களா?” என்றாள் கண்களில் காதலை தேக்கி,


“ரொம்ப நாள் ஆச்சா, அதுதான் நைட் வரை வெயிட் பண்ண முடியலை.” என்றவன், அவள் நெற்றியில் இதமாக இதழ் ஒற்றி விலகினான்.


ஏழாம் மாசம் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குப் போகிறாயா? எனக் கேட்ட கணவனிடம், “இல்லை, அவ்வளவு நாள் உங்களை விட்டுட்டு இருக்க முடியாது. ஒன்பதாவது மாசம் போறேன்.” என்றாள் மித்ரா.


ஒன்பதாவது மாதம் மித்ராவுக்கு வீட்டிலேயே வளைக்காப்பு செய்தனர். அவளைப் பிரிந்து இருக்க வேண்டுமே, அதோடு எப்படிப் பிரசவம் இருக்கப் போகிறதோ என அந்த எண்ணம் வேறு, அதனால் மதியழகன் கொஞ்சம் பதட்டமாகவே சுற்றிக் கொண்டு இருந்தான்.


“நீங்க இப்படி இருந்தா, நான் எப்படிப் போறது?” எனக் கேட்ட மனைவிக்காக, முகம் மலர புன்னகைத்தான்.


கிளம்பும் சமயம் மித்ரா எல்லோரிடம் சொல்லிக்கொண்டவள், சுபத்ரா மற்றும் ரேவதியிடம், “அக்காஸ், நான் குழந்தை பிறந்து ஒரு மாசத்தில வந்திடுறேன்.” என்றாள்.


அவளைப் பார்த்து கும்பிட்ட கதிரேசன், “நீ நல்லபடியா மூனாவது மாசமே வா தாயே…. இல்லைனா எங்க மொத்த குடும்பத்தையும் வரிசையில நிக்க வச்சு திட்டுவ.” என அவன் பாவமாக் சொல்ல, அதைக் கேட்டு சுபத்ராவுக்கும் மதியழகனுக்கும் அப்படி ஒரு சிரிப்பு, அசடு வழிந்த மித்ரா, “உங்களுக்குத்தான் அத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.” என்றாள்.


“எதுக்கு மா? என் தம்பியை உனக்குக் கட்டி வச்சதுக்கா?” என்றான் சரியாக.


ஆமாம் எனத் தலையசைத்தவள், “தேங்க்ஸ் அத்தான்.” என்றாள் வெட்கத்துடன்.


கணவனைப் பிரியும் வருத்தத்தில் காரில் ஏறிய மித்ரா கண்ணீர் சிந்த, “நம்ம வீட்டுக்குத்தானே வர அழக் கூடாது. அவர் உன்னை அடிக்கடி பார்க்க வருவாரு.” என ஓட்டுனர் இருக்கையில் இருந்த ஜெய் தங்கையைத் தேற்றினான்.


பெண்கள் பிறந்த வீட்டை பிரிந்தாலும் அழுகிறார்கள், புகுந்த வீட்டை விட்டு வந்தாலும் அழுகிறார்கள். போங்க டா பசங்களா, என்ன இருந்தாலும், பெண்கள் தான் பாசமானவர்கள்.


மித்ராவுக்குச் சொன்ன தேதியில், அழகான பெண் குழந்தை பிறந்தது. மதியழகன் அப்போது அவளுடன்தான் இருந்தான். ஒரு மாசத்தில் வருகிறேன் என்றவளை மூன்று மாதங்கள் சென்றுதான் அழைத்து வந்தான்.


குழந்தை பெரிய வீட்டில் தொட்டிலில் உறங்க, நீலவேணி தொட்டிலை ஆட்டிக் கொண்டு இருந்தார். மருமகள்கள் மூன்று பேரும் எப்போதும் போல,பேசி, சிரித்து வேலை செய்து கொண்டிருந்தனர்.


“எங்கள் குடும்பத்தை இப்படியே சந்தோஷமா வை இறைவா.” என இறைவனிடம் வேண்டியபடி, நீலவேணி குழந்தைக்குத் தாலாட்டு பாடிக் கொண்டிருந்தார்.


அன்று கார்த்திகை தீபம், மூன்று மருமகள்களும் ஒரே மாதிரி பட்டுபுடவையில், வீடெங்கும் விளக்கேற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை இப்படிச் சேர்ந்து பார்க்க துரைக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


அதே மாதிரி அண்ணன் தம்பிகள் மூவரும் ஒரே மாதிரி வேட்டி சட்டை அணிந்து, அவர்களுக்கு உதவுகிறேன் என்ற பேரில், தங்கள் மனைவியை உரசிக் கொண்டு நின்றனர்.

 

“இப்ப நீங்க என்ன பண்றீங்க?” மித்ரா கேட்க,


“சண்ட கோழி, இப்ப நல்லா வெட கோழி மாதிரி இருக்கியா… அதுதான் தள்ளி இருக்க முடியலை.” என்றான் மதியழகன் கண்ணில் கிறக்கத்துடன்.


“உங்க முதல் பாப்பா இன்னும் தொட்டில்தான் தூங்குது. உங்களுக்கு அது நினைவு இருக்கட்டும்.” மித்ரா குழந்தையைக் கண்களால் காட்ட… மதியழகன் மையல்லாகப் புன்னகைத்தான்.


விளக்கேற்றி முடித்ததும், எல்லோருமாக வாசலில் சேர்ந்து நின்று மத்தாப்பு கொளுத்தினர்.


அப்போது டிவியில், “எங்க வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை….” எனப் பாடிக் கொண்டிருந்தது. (பாத்திமா ஹாப்பியா)

Advertisement