Advertisement

சண்ட கோழி




அத்தியாயம் 13



அன்று ரேவதிக்குக் காலையில் இருந்தே ஒரு மாதிரி வயிற்று வலி இருந்து கொண்டே இருந்தது. ஆனால் வீட்டில் யாரிடம் சொல்லாமல் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்து, மதிய உணவு சாப்பிட்டு சென்றிருந்தனர்.


சமையல் அறையில் நின்ற ரேவதி எதற்காகவோ திரும்பி பார்க்க, மித்ரா பார்வையில் அப்படி ஒரு அதிர்ச்சி, இவள் அப்படி எதைப் பார்க்கிறாள் எனக் குனிந்து பார்த்தவள், தன் காலுக்கு இடையே வழியும் உதிரத்தை அப்போதுதான் பார்த்தாள்.


அவளுக்கு இத்தனைக்கும் மாத விடாயும் இல்லை. சொல்லப்போனால் அவளுக்கு மாத விடாய் வந்தும் நாட்கள் ஆகிவிட்டது.


ரேவதியின் காலுக்கு அடியில் தேங்கி நின்ற ரத்தத்தைப் பார்த்து மித்ராவுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. கஷ்ட்டப்பட்டு, “அக்கா…” என அவள் கத்தி அழைக்க, பின்கட்டில் நின்ற சுபத்ரா தலை தெறிக்க ஓடி வந்தாள்.


“என்ன டி?”


“அங்க பாரேன்.” மித்ரா காட்ட, சுபத்ராவுக்குப் பார்த்ததும் புரிந்து விட்டது.


“வா ரேவதி…” என்றவள், “மித்ரா கருணாவுக்குப் போன் போட்டு வர சொல்லு, அப்படியே மதியை கார் எடுத்திட்டு வர சொல்லு.” என்றவள், பயந்து போயிருந்த ரேவதியிடம், “உனக்குப் பீரியட்ஸ் வந்து எவ்வளவு நாள் ஆச்சு.” எனப் பேச்சுக் கொடுத்தபடி, அவளைக் குளியல் அறைக்கு அழைத்துச் சென்றாள்.


“அக்கா, கருணா அத்தான் எடுக்கவே மாட்டேங்கிறாங்க. இவரோட போன் கிடைக்கவே மாட்டேங்குது. நான் நேர்ல போய்க் கூடிட்டு வரேன்.” என்றவள் சிட்டாகப் பறந்தாள். காலில் செருப்பு கூடப் போடவில்லை.


மித்ரா ஓட்டமும் நடையுமாக நடந்து வருவதைப் பார்த்த மதியழகன், அவள் கடைக்கு வருவதற்கு முன்பே, அவளிடம் ஓடினான். எதோ அவசரம் இல்லாமல் கடைக்கு வரமாட்டாள் எனத் தெரியும்.


“என்ன மித்ரா?”


“ரேவதி அக்காவுக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல் போகணும். கார் எடுத்து வருவீங்களாம். கருணா அத்தானுக்கும் சொல்லிடுங்க. அவர் போன் எடுக்க மாட்டேங்கிறார்.” என்றவள், முகத்தில் அவ்வளவு பதட்டம்.


“என்ன? ஏது? எனக் கேட்டு நேரத்தை விரயம் ஆக்காமல், “நீ போ…நான் வரேன்.” என்றவன், கடைக்குச் சென்று கார் சாவி எடுத்துக் கொண்டு வேகமாக ஓடினான். கார் செட்டில் நிற்கும்.


மித்ரா வீட்டிற்கு வருவதற்கும், ரேவதியை சுத்தபடுத்தி, வேறு புடவை மாற்ற வைத்து, சுபத்ரா வெளியில் அழைத்து வருவதற்கும் சரியாக இருந்தது.
வியர்த்து விறுவிறுத்து போய் மித்ரா வந்தாள். அவளுக்கு நேர்மாறாகச் சுபத்ரா பதட்டபடாமல் நிலைமையைக் கையாண்டாள். இதெல்லாம் தெரியாமல் நீலவேணி அறையில் படுத்து இருந்தார்.


“மித்ரா ரேவதிக்குக் கொஞ்சம் சாப்பாடு போட்டு ஊட்டி விடு.” என்றவள், சமையல் அறையில் சிந்தி இருந்த உதிரத்தை பழைய துணி கொண்டுவந்து துடைக்க ஆரம்பித்தாள்.


வேண்டாம் என மறுத்த ரேவதியை கட்டயப்படுத்தி மித்ரா சாப்பிட வைத்தாள். நான்கு வாய்தான் சாப்பிட்டு இருப்பாள், அதற்குள் கருணாவும் மதியும் வந்து விட்டனர்.


துணியில் இருந்த ரத்தத்தைப் பார்த்தே, அவர்கள் இருவரும் அரண்டு போய் விட… “அபார்ஷன் மாதிரி இருக்கு, உடனே டாக்டர்கிட்ட போய்டலாம்.” என்றாள் சுபத்ரா.


கேட்டதும் கருணா தலையில் அடித்துக் கொண்டு அழ, ரேவதிக்கும் அழுகை வந்தது. “இப்போ நீ தைரியமா இருக்கணும்.” என்ற மதியழகன் , “மித்ரா வீட்டை பார்த்துக்கோ. அப்பா அம்மாகிட்ட அண்ணிக்கு வயித்து வலின்னு மட்டும் சொல்லு. மத்தது அப்புறம் சொல்லிக்கலாம்.” என்றவன், காரை எடுக்கச் செல்ல, ரேவதியை கருணாவும் சுபத்ராவும் அழைத்துச் சென்றனர்.


ரேவதியின் ஒரு வயது மகளும் நீலவேணியோடு உறங்கிக் கொண்டு இருந்தாள். அவர்கள் எழுவதற்குள் மித்ரா முகம் கழுவி தன்னைச் சீராக்கினாள்.


மதியழகன் காரை பறக்க விட, இருபது நிமிடத்தில் பக்கத்து டவுனில் இருந்த மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனைக்கு ரேவதியை அழைத்துச் சென்றனர்.


துரை சாப்பிட வரும் நேரம் எழுந்து வந்த நீலவேணியிடம், “ரேவதி அக்காவுக்கு வயித்த வலி, சுபத்ரா அக்காவும் கருணா அத்தானும் ஹாஸ்பிடல் கூடிட்டு போய் இருக்காங்க.” என்றாள் மித்ரா.


அவர் எதுவும் பெரிதாக இருக்கும் என நினைக்கவில்லை. சாப்பிட வந்த துரையிடமும் சாதரணமாகவே சொன்னார். துரை போன் செய்து மதியழகனிடம் கேட்க, “இப்பதான் பா டாக்டர் பார்க்கிறாங்க. அவங்களைக் கேட்டுட்டு சொல்றேன்.” என வைத்து விட்டான்.


ரேவதிக்கு உடனே ஸ்கேன் எடுத்துப் பார்க்கப் பட்டது. பிறகு இவர்களை அழைத்து மருத்துவர் பேசினார்.


“அவங்க கர்ப்பமா இருந்திருக்காங்க. ஆனா இப்ப ப்ளீடிங் ஆகுது. குழந்தையும் போதிய வளர்ச்சி இல்லை. அபார்ஷன் தான் பண்ணனும். ஆனா அதுக்கும் உடம்பில ரத்தம் இல்லை.”


“இப்ப இருக்கிற நிலைமையில அபார்ஷன் செஞ்சா… அவங்க உயிருக்கே கூட ஆபத்தா போகலாம்.”


“ஏற்கனவே ரெண்டு குழந்தைகள் இருக்கு. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கலாம்.” என்றார்.


இரண்டாவது குழந்தை பெற்றபோதும், அவள் பலகீனமாக இருந்ததால் தான், அவளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யாமல் விட்டிருந்தனர்.


இத்தனைக்கும் குழந்தை வரக் கூடாது எனக் கவனமாகத்தான் இருந்தனர். ஆனால் எதோ பிசக்கில் உருவாகிவிட்டிருந்தது.


“டாக்டர், எனக்கு அவளை எப்படியாவது காப்பாத்திக் கொடுங்க.” என்றான் கருணா கண்ணீருடன். இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், ரேவதி இல்லாமல் அவனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.


“அவங்களை அட்மிட் பண்ணுங்க. எங்களால முடிஞ்சது பண்றோம்.” என்றார்.
மதி கதிரேசனுக்குப் போன் செய்து, விவரத்தை சொல்லி, நிலைமை கொஞ்சம் சரி இல்லைதான். ஆனால் சரி செய்து விடலாம் என்றான். வீட்டில் பெரியவர்கள் இருவரும் உடைந்து போனார்கள்.


ரேவதிக்கு முதலில் ரத்தப் போக்கு நிறுத்தபட்டது. ரத்தம், ட்ரிப்ஸ் என ஏற்றினர். சில நாட்கள் மருத்துவமனையிலே இருந்து கொஞ்சம் அவளுக்கு உடல்நிலை சரியானதும், நாற்பது நாட்கள்தான் என்பதால்… கருகலைப்புக்கு வீரியம் இல்லாத மாத்திரையே கொடுத்தனர்.


மூன்று நாட்களில் ரத்தபோக்கு குறைய… ஐந்தாம் நாள் சுத்தமாக நின்றுவிட, அதன் பிறகே அவளை வீட்டிற்கு அனுப்பினர்.


அவள் மருத்துவமனையில் இருந்த பத்து நாட்களும், சுபத்ராவும் மித்ராவும் மாற்றி மாற்றி அவளுக்குத் துணைக்கு ஆஸ்பத்திரியில் இருந்தனர். கருணா மனைவியுடனே மருத்துவமனையில் தங்கி விட… கூட ரேவதியின் அம்மாவும் இருந்தார்.


கதிரேசனும், மதியழகனும் தங்கள் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வருவது, திரும்பக் கூட்டி செல்வது, உணவு கொண்டு வருவது என இருவரும் அலைந்து கொண்டே இருந்தனர்.


வீட்டையும் குழந்தைகளையும் பார்க்க, எழிலரசி வந்து விட, நீலவேணிக்கு மிகவும் உதவியாக இருந்தது.


ரேவதியின் பிறந்த வீட்டில் அவ்வளவு வசதி கிடையாது. அதுவும் அவளது அண்ணியோடு ரேவதிக்கு சுமுக உறவும் இல்லை. இப்போது இருக்கும் நிலையில், ரேவதியை அங்கே அழைத்துப் போனால், தன்னால் ரேவதியையும், அவள் குழந்தையும் தனியாளாகப் பார்க்க முடியாது என நினைத்து ரேவதியின் அம்மா, நான் எங்க வீட்ல வச்சுப் பார்த்துகிறேன் என எதுவும் சொல்லவில்லை.


ரேவதிக்கு மிகவும் கஷ்ட்டமாக இருந்தது. தன்னால் சுபத்ராவுக்கும் மித்ராவுக்கும் ரொம்பக் கஷ்ட்டம் என நினைத்தாள். அவள் அம்மா அழைத்தால்… அங்கே சில நாட்கள் செல்லலாம் என நினைத்து இருந்தாள்.. ஆனால் அவர்கள் அழைக்கவே இல்லை.


தானாக எப்படிக் கேட்பது எனத் தெரியாமல் இருந்தாள். திரும்ப வீட்டிற்கு வரும் வழியில், அவளுக்கு அதை நினைத்து அழுகை வர,


ஏன் அழுகிறாள்? எனப் புரியாமல் மித்ராவும், சுபதாரவும் பதறி விட்டனர்.


“என்ன பண்ணுது ரேவதி?” கருணாவும் பதற…


“இல்லை எங்க அம்மா என்னைக் கூப்பிடுவாங்கன்னு நினைச்சேன், கூப்பிடவே இல்லை. என்னால உங்களுக்கு எல்லாம் கஷ்ட்டம்.” என்றாள். காரை ஓட்டியபடி அதைக் கேட்ட மதியழகன், காரை ஓரமாக நிறுத்தி விட்டான்.


“என்ன அண்ணி எங்களுக்குக் கஷ்ட்டம்? நீங்க யாரு? உங்களுக்கு நாங்க பார்க்காம யாரு பார்ப்பா?”


“முதல்ல அவங்க ஏன் உங்களைப் பார்க்கணும்? நம்ம எல்லாம் ஒரு குடும்பம் அண்ணி. உங்களுக்கு எதுனாலும் நாங்கதான் பார்க்கணும்.”


“இனிமே இது மாதிரி பேசிட்டு இருக்காதீங்க. நீங்க நல்லா ஆகி வந்ததே எங்களுக்குச் சந்தோஷம். இனியாவது நல்லா சாப்பிடுங்க, சத்தாவும் சாப்பிடுங்க.” என்றான்.


தான் உணவு மீது அக்கறை காட்டாதது, இவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும் என அவள் நினைக்கவே இல்லை.


நீலவேணி ரேவதியை பெரிய வீட்டில் கீழே இருக்கும் அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டார். இன்னும் கொஞ்சம் உடம்பு தேரட்டும், அதோடு அவளைக் கவனிக்க வசதியாக இருக்கும் என நினைத்தே சொன்னார்.


ரேவதி வீட்டிற்கு வந்ததும், அவளைப் பார்த்து விட்டு எழிலரசி கிளம்பி சென்றாள். ரேவதிக்கு முழு ஒய்வு கொடுத்துவிட்டு சுபத்ராவும், மித்ராவும் எல்லாம் பார்த்துக் கொண்டனர்.


மதியழகன் பதினோரு மணிக்கு பழங்களோடு வந்துவிடுவான். அவனே ஜூஸ் போட்டு ரேவதிக்கு கொடுப்பான். அப்போதும் பொண்டாட்டியை விட்டு விட மாட்டான்.


“சண்ட கோழி, இந்தா இதைக் குடிச்சிட்டு தெம்பா வேலைப் பாரு.” என மனைவிக்குக் கண்டிப்பாகக் கொடுத்து விடுவான்.


இதுவரை தம்பியை கிண்டாலாகப் பார்த்துக் கொண்டிருந்த கதிரேசனுக்கும், கருணாவுக்கும் கூட, மனைவியின் உடல் நலனில் நாமும் அக்கறை காட்டி இருக்கலாம் எனத் தோன்றியது.


சுபத்ரா என்னதான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், சாப்பிடுவதிலும் அக்கறை காட்டுவாள். ஒழுங்காகக் காய்கறி, பால் பழங்கள் எல்லாம் சேர்த்துக் கொள்வாள். ஆனால் ரேவதிக்கு பால் பிடிக்காது, பழங்கள் சாப்பிட சோம்பேறித்தனம். காய்கறியும் பிடிக்காது. அனேக நேரங்களில் ஊறுகாய் தொட்டுக் கொண்டுதான் சாப்பிடுவாள். அதனால் பழங்கள் வாங்கிப் போட்டாலும், வீணாகப் போகிறது எனக் கருணா வாங்கவே மாட்டன்.


காலையில் பாலைக் காய்ச்சியதும், மித்ரா முதலில் ரேவதிக்கு தான் ஹார்லிக்ஸ் போட்டுக் கொண்டு போய்க் கொடுப்பாள். பிறகு சுபத்ரா வந்ததும், இருவரும் சேர்ந்து வேலை செய்வார்கள். பகல் நேரத்தில் பழங்கள் ஜூஸ் போட்டுக் கொடுக்க மதியழகன் வந்து விடுவான். இரவு சுபத்ரா ரேவதிக்கு பால் கொடுத்து விட்டே படுக்கச் செல்வாள்.


இப்படி ஆளாளுக்கு ரேவதியை நன்றாகத் தாங்கினர். ஆனால் அது அவளுக்கு மிகுந்த குற்ற உணர்வை கொடுத்தது. புகுந்த வீட்டு உறவுகளின் அருமை, இப்போது அவளுக்குப் புரிந்தது. ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொண்டதால் பாதிக்கப்பட்டது அவள்தான். பிறந்த வீட்டினர் கைவிட்ட நிலையில் புகுந்த வீட்டினர் பார்க்க வில்லை என்றால், தன்னுடைய கதி என்ன ஆகி இருக்கும் என நினைக்கும் போதே அச்சமாக இருந்தது.


இப்போது ரேவதியும் வேலை செய்ய முடியாததால்… சுபத்ராவுக்கு மித்ராவுக்குதான் வேலை அதிகம். ஆனால் இருவரும் எதையும் காட்டிக் கொள்ளாது வேலைப் பார்த்தனர்.


“சுபத்ரா மித்ரா தான் பாவம், அவங்களுக்கு ரொம்ப வேலை இருக்கு. பாத்திரம் கழுவ மட்டும் ஆளு வைப்போமா?” எனத் தன் கணவரிடம் கேட்டார் நீலவேணி,


“ஏன் கேட்டுட்டு இருக்க வச்சிடு. அப்புறம் இவங்களுக்கு எதுவும் முடியாம போயிட போகுது.” என்றார். இதே முன்பு என்றால்… ஒத்துக் கொண்டிருக்க மாட்டார் தான். இப்போது ரேவதிக்கு முடியாமல் போனதில் கொஞ்சம் அரண்டு போய்தான் இருந்தார்.


பாத்திரம் கழுவ காலை மாலை ஆள் வைத்ததும், வேலையும் கொஞ்சம் குறைந்தது. ஒரு மாதம் சென்று ரத்த பரிசோதனை செய்ததில், ரேவதிக்கு இப்போது ரத்த சோகை இல்லை என்பதும் உறுதியானது.



Advertisement