Advertisement

சண்ட கோழி


அத்தியாயம் 12

மறுநாள் ரேவதி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே இருந்தாள். எழிலரசியோடும் சரியாகப் பேசவில்லை. “நான்தான் வாயை வச்சிட்டு சும்மா இல்லாம பிரச்சனையை இழுத்து விட்டுடேனோ.” என வருந்தியபடி எழிலரசி கிளம்பி சென்றாள்.


அன்று மித்ராவும் ரேவதியும் பாத்திரம் கழுவ வேண்டிய நேரம், “நீ பாதிக் கழுவி வச்சிட்டு போ, நான் மீதியை அப்புறம் கழுவிக்கிறேன்.” என்றாள். அதே போல மித்ரா பாதிப் பாத்திரம் விலக்கிவிட்டு சென்றாள்.


ரேவதி மேல் வேலைகள் செய்வாள்தான். ஆனால் சமையலும் மேலோட்டமாகவே பார்த்து விட்டு போய் விடுவாள்.


இரவு மித்ராவும் சுபத்ராவும் பாத்திரம் தேய்த்தனர். “நீதான் ரேவதி அக்காவை கெடுத்து வச்சிருக்க.” எனத் தன் உடன் பிறந்தவளையே மித்ரா குற்றம் சாட்டினாள்.


“நான் என்ன டி பண்ணேன்?” சுபத்ரா அப்பாவியாகக் கேட்க,


“எல்லாத்தையும் நீயே இழுத்து போட்டு செஞ்சா, அவங்களுக்கு எப்படி நாம பண்ணனும்ன்னு தோணும்?”


“நான் தெரியாமதான் கேட்கிறேன், நீ இந்த வீட்டு மருமகளா? இல்லை வேலைக்காரியா? உன்னை அப்பாவும் அம்மாவும் இந்த வீட்டுக்கு சும்மா அனுப்பினாங்களா? இரு அண்ணன் கிட்டயே சொல்றேன்.” மித்ரா கோபமாகப் பொரிய, சுபத்ரா பெருமூச்சு விட்டாள்.


“நீ இந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி, நான் நிறைய நாள் அவ பண்ணுவான்னு பார்த்தா, அவ பண்ணவே மாட்டா… அதுக்கு அப்புறம் நான்தான் அவசரமா பண்ணனும். அது எதுக்கு? அதுதான் நானே பண்ணிடுவேன்.”


“நீ இவ்வளவு நல்லவளா இருந்தா, உனக்குச் சிலையா வைக்கப்போறாங்க. இளிச்சவாயன்னு பட்டம்தான் கொடுக்கப் போறாங்க.”


“என்ன டி செய்யறது?”


“இப்படியே விடக் கூடாது அக்கா, கருணா அத்தானுக்காகவாவது நாம எதாவது செய்யணும்.”


“மாமாவுக்குத் தெரிஞ்சா பிரச்சனை ஆகும் மித்ரா.”


“விடு அதை நான் பார்த்துகிறேன்.” என்ற மித்ராவுக்கு, அடுத்த இரண்டாவது நாளே அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.


நீலவேணியின் தம்பி வீட்டு திருமணதிற்குத் துரையும், நீலவேணியும் கிளம்பி சென்றனர். கல்யாணம் சென்னையில் என்பதால், எல்லோரும் செல்லவில்லை. பிறகு இங்கே நடக்கும் வரவேற்பில் அனைவரும் கலந்து கொள்வதாக இருந்தது. முன்தினம் காலையே துரையும் நீலவேணியும் கிளம்பி சென்றனர்.


“இன்னைக்கு நைட் வெளியே சாப்டிட்டு அப்படியே படத்துக்குப் போயிட்டு வருவோமா?” மதிய உணவுக்கு வந்த மதியழகன் கேட்க, எல்லோர் முகத்திலும் விருப்பம் தெரிந்தது.


“அப்பாவுக்குத் தெரிஞ்சிட்டா.” கருணா கேட்க,


“எதுக்கு டா வம்பு? அப்பாகிட்ட சொல்லிட்டே போவோம்.” என்றான் கதிரேசன்.


“நாம போனா அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார். ஆனா இவங்களைக் கூடிட்டு போக ஒத்துப்பாரா தெரியலையே?” மதியழகன் யோசிக்க,


“ஹலோ, நாங்க எல்லாம் உங்க பொண்டாட்டிங்க தான… எதோ கேர்ள் பிரான்ட் கூடப் போற மாதிரி பில்ட் அப் கொடுக்கிறீங்க.” என்றாள் மித்ரா.


“இங்க பாரு கடை மூடிட்டு போனா நைட் ஷோக்கு தான் போக முடியும். திரும்ப வர ஒரு மணி ஆகும். நைட் நேரம் எதுக்குப் பொம்பளைங்களைக் கூடிட்டு போறீங்கன்னு சொல்வார்.”


“நீங்கதான் ஆசை காட்டினீங்க.”


“சரி இப்படி வேணா செய்வோம். இன்னைக்கு ஹோட்டல் மட்டும் போவோம். இன்னொரு நாளைக்குப் படத்துக்குப் போகலாம்.” என்றான் கதிரேசன். அதற்கு எல்லோரும் ஒத்துக்கொள்ள, சுபத்ராவும், ரேவதியும் புடவையில் வர, மித்ரா மட்டும் சுடிதாரில் வந்தாள்.


அவர்கள் ஊருக்கு பக்கத்து டவுன்ணில் இருந்த அசைவ ஹோட்டலுக்குச் சென்று, நன்றாக ஒரு கட்டு கட்டிவிட்டு வந்தனர். ரேவதி வெளியிடங்களுக்கு வந்தால்…. நன்றாகத்தான் சாப்பிடுகிறாள் என்பதை மித்ரா கவனித்தாள். வீட்டில் செய்ய சோம்பேறித்தனம் வேறு ஒன்றுமில்லை.


இரவு ஒன்பது மணிக்குச் சென்றவர்கள், திரும்ப வரும் போது பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. ரேவதி காரில் இருந்து இறங்கி அப்படியே அவர்கள் பகுதிக்கு சென்று விட, சுபத்ராவிடம் மித்ரா, “அக்கா, நீ காலையில எதுவும் பண்ணாத. இறங்கியே வராத.” என்றாள்.


என்னதான் நடக்கிறது பார்ப்போமே என நினைத்த சுபத்ராவும் சரி என்றாள்.


மறுநாள் காலை தாமதமாக ரேவதி எழுந்து வந்து பார்த்த போது, காலை சமையலுக்காக எந்த வேலையும் நடந்தது போல இல்லை. பால் மட்டும் காய்ச்சி இருந்தது. மித்ரா கோலம் போட்டுவிட்டு பாலைக் காய்ச்சி விட்டு சென்றிருந்தாள். ஆண்கள் கடை திறக்க சென்றிருந்தனர்.


ரேவதி தன் பிள்ளைகளுக்குப் பாலும், தனக்குக் காபி கலந்து எடுத்துக் கொண்டு சென்றாள். திரும்ப அவள் குளித்து விட்டு வந்து பார்த்த போதும், யாரும் சமையல் அறையில் இல்லை.


காலை உணவுக்கு ஆண்கள் மூவரும் வந்துவிட்டனர். ஆனால் காலை உணவு தயாராக இல்லை. தோசை மாவும் இல்லை. இருந்தால், தோசையாவது ஊற்றலாம் என ரேவதி நினைத்தாள்.


எப்படியும் சுபத்ரா அக்கா வந்து செய்வார்கள், இல்லயென்றால் மித்ரா செய்வாள் என நம்பிக்கையாக இருந்தாள். இன்று இருவரும் வரவில்லை.


“உங்க அண்ணி உடம்பு முடியலைன்னு படுத்திருக்கா.” என்ற கதிரேசன் சுபத்ராவை பார்க்கச் சென்றான். மதியழகன் மித்ராவை தேடி சென்றான். மித்ரா சேரில் கால் நீட்டி அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டே, வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்

.
“ஹே… சண்ட கோழி, என்ன இங்க தனியா உட்கார்ந்து அமுக்கிட்டு இருக்க.” என்றபடி மதியழகன் வந்தான். அவன் இப்போது எல்லாம் சண்ட கோழி என்றுதான் அவளைச் செல்லமாக அழைக்கிறான். (சண்ட கோழி காரணப்பெயர் அல்ல செல்லப் பெயர்)


“காலைலைக்கு ஒன்னும் பண்ணலை?” மதியழகன் கேட்க,


“இன்னைக்குத்தான் நான் ப்ரீயா இருக்கேன். அது கூட உங்களுக்குப் பொறுக்காதா?” என்றாள் மித்ரா.


“என்ன டி ஒரு தினுசா பேசுற? ஒரு நாள் எங்க அப்பா அம்மா இல்லை, அதுக்கே எங்களுக்குச் சாப்பாடு போட மாட்றீங்க.”


“ஏன் உங்க அண்ணிங்க என்ன பண்றாங்க?” எனத் தெரியாதது போலக் கேட்டுக்கொண்டே மித்ரா எழுந்து பெரிய வீட்டிற்குச் சென்றாள்.


மித்ராவை பார்த்ததும் சுபத்ரா, “ஏன் டி ஒரு நாள் நான் கொஞ்சம் தூங்கிட்டேன். ஏன் நீ டிபன் பண்ணக் கூடாதா? என்றாள்.


“நீ தானக்கா எப்பவும் பண்ணுவ… அதனால நீ பண்ணுவேன்னு நினைச்சேன்.”


“எப்பவும் நானேதான் பண்ணனுமா?”


“இங்க பாரு என்னைக் கேள்வி கேட்கிற வேலை எல்லாம் வச்சுக்காத. நீயும் இந்த வீட்டு மருமகள், நானும் இந்த வீட்டு மருமகள். உன் தங்கச்சின்னு நீ என்னை என்ன வேணா பேசுவியா? ஏன் ரேவதி அக்காவை இப்படிக் கேட்க வேண்டியது தான.”


என்ன டா இதுங்க ரெண்டும் சண்டை போட்டுகுதுங்க என அண்ணன் தம்பி மூவரும் புரியாமல் பார்த்தனர். அக்காவும் தங்கையும் சண்டை போடுவதைப் பார்த்து ரேவதிக்கு மகிழ்ச்சி.


“மித்ரா…” என்ற மதியழகன் குரலுக்கோ, “சுபத்ரா நீயாவது பேசாம இரேன்.” என்ற கதிரேசனின் குரலுக்கோ, அங்கே மதிப்பே இல்லை.


“எனக்குத் தெரியும் யாரை கேட்கணும்ன்னு, நீ வாயை மூடு.” என்றாள் சுபத்ரா.


“இனிமே இந்த அக்கா தங்கை எல்லாம் வேணாம். நீ என் வீட்டுக்காரரோட அண்ணி, அப்படித்தான் இனி உன்னைப் பார்ப்பேன்.”


“அப்படியா சரி, அப்பவும் நான்தானே மூத்தவ, நான் சொல்றதை தான் நீ கேட்கணும்.” என்றாள் சுபத்ரா.


“அதெல்லாம் என்னால முடியாது. இனி அவங்கவங்க வேலையைப் பிரிச்சிக்கலாம்.” என்ற மித்ரா, “ஒரு நாள் காலையில நீ டிபன் செஞ்சா, அடுத்த நாள் ரேவதி அக்கா செய்யட்டும் அதுக்கு அடுத்த நாள் நான் செய்றேன். அதே போல ராத்திரியும். மதியம் மட்டும் எப்பவும் போல சேர்ந்து செய்வோம்.”


“நீயே எல்லா வேலையும் செய்றேன்னு, நீயும் பெருமை பேசிக்க வேண்டாம். நாங்க செய்யலைன்னு எங்களைக் குறையும் சொல்ல வேண்டாம்.” என்றாள் மித்ரா.


எல்லோருக்கும் புரிந்து விட்டது. இது அக்காள் தங்கை சண்டை இல்லை. ரேவதிக்கு வைக்கும் ஆப்பு என்று.


இத்தனை நாள் கும்பலில் பஜனை பாட்டு பாடிக் கொண்டிருந்த ரேவதியை தனிப் பாட்டு பாட சொன்னால்… அவளின் நிலை.


“சரி இன்னைக்குச் சொன்னதுதான், பேச்சு மாத்தின அவ்வளவுதான்.” எனச் சென்ற சுபத்ரா, வேகமாகக் கோதுமை மாவு , ரவை கலந்து ஊறவிட்டு, ஒரு பக்கம் சட்னி அரைத்தாள்.


அவள் இரண்டு அடுப்பிலும் தோசை கல்லை காய வைத்து மட மடவென்று தோசை ஊற்ற, மித்ரா எடுத்து சென்று எல்லோருக்கும் பரிமாறினாள். ஆண்கள் சாப்பிட்டு கடைக்குக் கிளம்ப, பிறகு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அழைத்து, அவர்களுக்கும் கொடுத்து இவர்களும் சாப்பிட்டனர்.


மதியம் மூவரும் சேர்ந்து செய்தனர். இரவு மித்ராவின் முறை. அவள் சப்பாத்தியும் குருமாவும் செய்தாள். அடுத்த நாள் காலை என்ன செய்வது என ரேவதிக்கு இப்போதே யோசனை. எப்போதும் சுபத்ரா தான் செய்வாள், இவள் வந்து சட்னி அரைத்து விட்டு சென்று விடுவாள்.


மறுநாள் காலை திருமணதிற்குச் சென்றுவிட்டு வந்த நீலவேணிக்கு நடு மருமகள் சமையல் அறையில் நின்று சமைத்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஆச்சர்யம்.


முன் தினம் மாவு அரைத்து இருந்ததால்.. இட்லி ஊற்றி சட்னி வைத்திருந்தாள். மித்ரா என்றால் இரண்டு சட்னி செய்வாள் என்பதால்….. இவளும் இரண்டு சட்னி செய்து இருந்தாள்.


மற்றவருக்குச் செய்யும் போது கணவருக்குக் கொடுக்க மாட்டாளா என்ன? ஆவி பறக்கும் இட்லியை தட்டில் வைத்துக் கருணாவிடம் கொடுக்க, அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.


“சட்னி சூப்பர் அண்ணி.” என்ற மதியழகன், “மித்ரா அண்ணி கிட்ட கத்துக்கோ.” என வேண்டுமென்றே மனைவியை வம்பு இழுக்க…


“வா டா வா… அப்புறம் வருவ இல்லை.” என்பது போல மித்ரா பார்வையாலையே அவனை மிரட்ட, “போடி சண்ட கோழி.” என அவனும் உதடசைத்தான்.


பகலில் மனைவி தங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தை அறிந்து வந்த கருணா, அவளிடம் அப்போது சூடாகப் போட்டிருந்த சீரணியை நீட்ட, ‘என்ன டா இது? இவர் இப்படி எல்லாம் பண்றார். மழையே வராத நாம ஊர்ல கூட மழை வந்திடுமோ?’ என ரேவதி நினைத்து ஆச்சர்யபட்டு போனாள்.


அது அப்படி இல்லை. இவள் நன்றாக நடந்து கொள்ளவும், நாமும் அவளுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் கருணாவும் இறங்கி வந்தான். அப்போது இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என ஆசை வரும் அல்லவா… ரேவதிக்கும் வந்தது.


முன்னால் கூட்டத்தில் பஜனைப் பாடிக் கொண்டிருந்தனர். இப்போது அப்படி இல்லை அல்லவா..இன்று யார் சமையல் என நன்றாகத் தெரியும். உணவு பதார்த்தங்களும் எது நன்றாக இருக்கிறது என ஆண்களால் அலசி ஆராயபட்டது. அது பெண்கள் மூவருக்குள்ளும் ஒரு போட்டி எண்ணத்தை உருவாக்கியது. தங்களுக்கே தெரியாமல் பெண்களுக்குள், அப்படி ஒரு போட்டி எண்ணம் உருவாக ஆண்களும் காரணமாகினர்.


இன்னைக்கு நீ பண்ணியா, நாளைக்கு நான் இதை விட நல்லா பண்றேன் பாரு எனப் பெண்கள் மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு செய்தனர்.


முதலில் எல்லாம் மூவரும் பேசிக்கொண்டு வேலை செய்வார்கள். இப்போது அப்படி இல்லை. பெண்கள் மூவருக்குள்ளும் இருந்த ஒற்றுமை குறைந்து விட்டது.


இதை வீட்டின் மூத்த உறுப்பினர்கள் கவனித்துக் கொண்டே இருந்தனர், இன்று போட்டியில் ஆரம்பிக்கிறது, நாளைக்குப் பொறாமை வரும், அடுத்து என்ன பிரிவு தான். இவர்களை இப்படியே விட்டால், சரிப்பட மாட்டார்கள் என உணர்ந்த துரை, அன்று இரவு உணவு முடிந்ததும், எல்லோரையும் ஹாலுக்கு அழைத்துப் பேசினார்.


“எங்க காலத்து வரைதான் கூட்டுக் குடும்பம் எல்லாம் ஒத்து வரும்ன்னு எனக்கும் தெரியும். அதுதான் அவங்க அவங்களுக்குத் தனியா அடுப்படியோடவே வீடு கட்டி கொடுத்திருக்கேன். சொத்தும் அவங்கவங்க பேர்ல தனித் தனியாதான் வாங்கி போட்டு இருக்கேன். நாளைக்கு நீங்க எதுக்கும் ஒருத்தரோட ஒருத்தர் அடிச்சிக்கக் கூடாது.”


“இன்னைக்குப் போட்டி போட்டு வேலை செய்றீங்க. ஆனா அதைச் சந்தோஷமா சேர்ந்து பேசி சிரிச்சு செய்றீங்களா?”


துரை இப்படிச் சொன்னதும், பெண்கள் மூவருக்கும் தெரிந்துவிட்டது, தங்களைத்தான் மாமனார் சொல்கிறார் என்று. மூவர் முகமும் கருத்து விட்டது.


“நான் வீட்டுக்குள்ள வரும்போது, இன்னைக்கு மருமகள்கள் என்ன சமையல் செஞ்சிருப்பாங்கன்னு வரமாட்டேன். என் மருமகள்கள் சேர்ந்து இருக்காங்கங்கலான்னு தான் பார்த்திட்டு வருவேன்.”  


“இன்னைக்குப் போட்டியில ஆரம்பிக்கும், நாளைக்கு அது எதுல போய் முடியுமோ? நாளைக்குச் சண்டை போட்டு பிரியறதை விட.. இப்பவே தனியா போகணும்ன்னு நினைக்கிறவங்க, தனியா போயிடுங்க. விலகி இருந்தாலும், ஒருத்தரோட முகம் கொடுத்து பேசி சந்தோஷமா இருப்பீங்க.” என்றார்.


அவர் பேசி முடித்ததும், அங்கே அப்படி ஒரு கனத்த மௌனம். அப்பா பேசியதை கேட்ட மகன்கள் முகத்திலும் இறுக்கம். நீலவேணி எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் என்றுமே எந்த ஒரு மருமகளை உயர்த்தியும், தாழ்த்தியும் பேச மாட்டார்.


துரை அறைக்குள் சென்றதும், யாரும் யாரோடும் பேசாமல் கலைந்து சென்றனர்.


கதிரேசனுக்குத் தன் மனைவியைப் பற்றித் தெரியும். அவள் என்றுமே தனியாகப் போக வேண்டும் என நினைக்க மாட்டாள். ஒரு வேளை தம்பிகள் சென்றாலும், அவன் எப்போதும் பெற்றோரோடு சேர்ந்து இருப்பது என்பது, அவன் எப்போதோ எடுத்த முடிவு. இப்போதும் அதில் மாற்று கருத்து இல்லை.


தங்கள் பகுதிக்கு வந்த கருணா ரேவதியிடம், “இங்கப் பாரு, நீ இன்னைக்கு எதோ அவங்களோட போட்டி போடனுமேன்னு செய்ற.. ஆனா எப்பவும் செய்வியா தெரியாது.”


“பேசாம எங்க அப்பா கொடுக்கிற ஆஃபர் எடுத்திட்டு தனியா வந்திடு. நீ என்னைத்தை செஞ்சு போட்டாலும், எனக்குப் பிரச்சனை இல்லை. எங்க அப்பா சொல்ற மாதிரி சண்டையாவது வராமல் இருக்கும்.” என்றான்.


“நான் தனியா வந்திட்டா, அவங்க அக்கா தங்கச்சி இல்ல சேர்ந்துப்பாங்க. நான் வர மாட்டேன்.” என்றாள் ரேவதி.


அங்கே மதியழகன் மித்ராவை முறைத்துக் கொண்டே இருந்தான்.


“இதெல்லாம் நீ ஆரம்பிச்சு வச்சது தான….” அவன் சொல்ல, மித்ரா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.


“ஹே சண்ட கோழி, இப்படியே பண்ணிட்டு இருந்தன்னு வை, அந்த வெடுக்கு வெடுக்குன்னு ஆடுற கழுத்தை அப்படியே திருகி போட்டுடுவேன்.” என்றதற்கு, மித்ரா பதில் சொல்லாமல் முறைத்தாள்.


“நீ தனியாப் போகணும்ன்னு சொல்லுவ? மதியழகன் மிரட்டலாகக் கேட்க,


“நான் இப்ப எதாவது சொன்னேனா?” மித்ரா திருப்பிக் கேட்க,


“இல்லை நீ சொல்லி தான் பாரேன்.” என்றான்.


மித்ரா எதுவும் பேசாமல் படுத்துக் கொண்டாள். அவள் பேசாமல் படுத்ததும், மதியழகனுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது. மித்ராவுக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என அவனுக்கும் தெரியும்.

 

“ஹே இங்கப் பாருடி என்னை.” என அவளைத் தன் பக்கம் திருப்பியவன், அவள் கண்ணீரை பார்த்ததும், பதறி போய் விட்டான்.


“ஹே… மித்ரா சாரி டி, நான் எதோ கோபத்தில பேசிட்டேன்.”


“நீங்களே இப்படிச் சொல்றீங்க, அப்ப மத்தவங்களும் அப்படித்தானே நினைப்பாங்க. நான் ரேவதி அக்கா மாறணும்ன்னு தான் நினைச்சேன். தனியா போகணும்ன்னு எல்லாம் ஒருநாளும் நினைச்சது இல்லை.” என்றாள் அழுகையின் இடையே…


“தப்பு எல்லார் மேலையும்தான். ஏன் எங்க மேலையும் தான். உங்களுக்குள்ள போட்டி உருவாக்கிவிட்டது நாங்கதான்.”


“நடந்தது நடந்திடுச்சு, இனி பார்த்து இருந்துப்போம்.” என்றான். ஆனால் எல்லோருக்கும் ஒரு பயம் இருந்தது. எங்கே ரேவதி தனியாகச் சென்று விடுவாளோ என…அன்று இரவு யாராலும் சரியாகவே உறங்க முடியவில்லை.


காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து அடித்துப் பிடித்து மித்ரா பெரிய வீட்டிற்குச் சென்றால்…. இவளைப் போலவே சுபத்ராவும் ரேவதியும் வந்து நின்றனர்.


“என்ன டிபன் செய்யலாம் ரேவதி அக்கா?” மித்ராவே ஆரம்பிக்க,  


“மாவு இல்லை. பூரி செய்வோம்.” என்றாள்.


சுபத்ரா மாவு பிசைய, மித்ரா தேவையானது நறுக்கி கொடுக்க, ரேவதி அடுப்பில் நின்று சமைத்தாள். அதைப் பார்த்த மற்றவர்களுக்குச் சந்தோஷம்.


மூவரும் சேர்ந்து செய்தாலும், கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தனர். மதிய சமையலுக்கு வழக்கம் போல் காய்கறிகள் வர…

“இன்னைக்கு என்ன சமையலோ?” மித்ரா சொல்ல,  


“அந்த லவ் லெட்டரை எடுத்து படி, தெரியும்.” என ரேவதி சொன்னதும், மற்ற இருவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு. அவர்களோடு ரேவதியும் இணைந்து கொள்ள… மூவரின் சிரிப்பு சத்தமும் வீட்டை நிறைக்க, இந்தப் பக்கம் ஒரு கண்ணை வைத்திருந்த நீலவேணிக்கும் சந்தோஷம்.

 

Advertisement