Advertisement

சண்ட கோழி



அத்தியாயம் 11

கொடைக்காணல் சென்று வந்த மறுவாரம் ஞாயிற்றுகிழமை நீலவேணியிடம் சொல்லிவிட்டு, மதியழகன் மித்ராவை அழைத்துக் கொண்டு, முதலில் வெங்கடேஷ் வீட்டிற்கும், அடுத்து அவனையும் சேர்த்துக் கொண்டு நட்ராஜ் வீட்டிற்கும் சென்றனர்.


நட்ராஜ் வீட்டில் இவர்களுக்கு ஒரு சிறிய விருந்தே தயார் செய்து இருந்தனர். அதுவும் அவர்களின் இரட்டை பையன்கள் வேறு மிகவும் சேட்டை. மித்ராவிடம் அத்தை எனப் பாசமாக ஒட்டிக் கொண்டனர்.


எல்லோருமாகச் சேர்ந்து பேசி சிரித்து இரவு உணவு  சந்தோஷமாகக் சாப்பிட்டனர்.


அடுத்த மாதம் வந்த ஞாயிறு விடுமுறையில் மித்ரா கேட்கும் முன்பே, மதியழகன் மித்ராவை அவளது பிறந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான். துரை கூட இப்போது எதற்கு என்றார். ஆனால் போவதில் மதியழகன் உறுதியாக இருக்க… சரி என விட்டு விட்டார்.


“நீயும் வரியா அக்கா.” மித்ரா சுபத்ராவிடம் கேட்க,


“நான் அடுத்தத் தடவை வரேன். நீ இப்ப போயிட்டு வா.” என்றாள். இவளும் சேர்ந்து சென்றால், வீட்டில் யார் வேலை பார்ப்பது.


முதல் நாள் இரவே இருவரும் சென்றுவிட்டனர். இருவர் மட்டுமே என்பதால்… பேருந்தில்தான் சென்றனர். ஜெய் அவர்களுக்காகப் பேருந்து நிலையத்தில் காரோடு நின்றிருந்தான்.


தங்கையைப் பார்த்ததும் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. மறுநாள் அண்ணனும் தங்கையும் மட்டும் இருக்கும் வேளையில், “ஏய் வாலு, அம்மாகிட்ட என்ன சொன்ன? உனக்கு ரொம்பத் தெரியுமா?” என்றான்.


முதலில் அவன் என்ன சொல்கிறான் என மித்ராவுக்குப் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது.


“அவதான் எனக்குப் போன் பண்ணுவான்னு உனக்கு நல்லா தெரியும், ஆனா நீ எடுத்து ஹலோன்னு சொல்லிட்டுதான் என்கிட்டே கொடுப்பா… அவளும் ஒருநாள் கூட உங்க அண்ணன் ஏன் போன் எடுக்கிறாருன்னு கேட்டதே இல்லை.”


“இதுலையே தெரியலையா உங்க லட்சணம்.”


“அது அவ தானான்னு செக் பண்ணிட்டுக் கொடுப்பேன். அதை நீ தப்பா புரிஞ்சிகிட்டா, நான் என்ன பண்றது?”


ஜெய் ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடிக்க, “சரி போ, அப்ப அவ வேண்டாம்ன்னு அம்மாகிட்ட சொல்லிடுறேன்.” மித்ரா அப்படிச் சொன்னதும் ஜெய் பதறிவிட்டான்.


“ஹே…அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாத. நீ பார்த்த பொண்ணு, எனக்கு ஓகே தான்.” என்றான்.


மித்ரா அவனை முறைக்க,” தேங்க்ஸ்…” எனச் சொல்லி புன்னகையுடன் சென்றான். அதில் அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.


மாலை வரை அண்ணனுடன் வம்பு வளர்த்து விட்டே கிளம்பி வந்தாள்.


புகுந்த வீட்டின் நடவடிக்கைகள் இப்போது மித்ராவுக்கு ஓரளவுக்கு அத்துப்படி. முன்பு போல் யாரையும் கேட்டுச் செய்யாமல், சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி அவளே பார்த்து நடந்து கொண்டாள்.


இன்னும் உணவுப் பழக்கம் மட்டும் சற்று மாற்ற வேண்டியது இருந்தது. வீட்டிலேயே சுவையாகச் சமைத்தால்… வெளியே ஏன் சாப்பிட போகிறார்கள்.


“இன்னும் ஒரு பொரியல் வைக்கலாம் அக்கா. நாமளே எதாவது வறுவல் மாதிரி பண்ணா, இந்த அப்பளம், பக்கோடான்னு இல்லாம சாப்பிடலாம் இல்ல… பசங்களும் நல்லா சாப்பிடுவாங்க.” என்றாள்.


“இதுவரை மாமா சொல்லித்தான் சமைச்சு இருக்கோம். அவர் எதாவது நினைச்சிகிட்டா?” என்றாள் சுபத்ரா.


“நீங்க என்ன சொல்றீங்க ரேவதி அக்கா?”


“என்னை இதுல இழுக்காத. எனக்குத் தெரியாது.” என்றாள் அவள்.


மாமியாரிடம் காய்கறி நறுக்கக் கொடுப்பது போலச் சென்ற மித்ரா, “அத்தை, மாமா சொன்னதோட இன்னும் ஒரு காய் பண்ணுவோமா… அப்பளம் பக்கோடான்னு வச்சிகிறதுக்குப் பதில். வீட்லயே பண்ணலாம்.” எனக் கேட்டாள்.


மித்ராவின் சமையலை துரை விரும்பி சாப்பிட்டார் என்ற தைரியத்தில் நீலேவேணி சரி என்றார்.


“இன்னொன்னு என்ன பண்ணலாம்?” மித்ரா யோசிக்க,


“உனக்கு இந்தக் காலிஃபிளவர் வறுப்பாங்களே, அது செய்யத் தெரியுமா?” நீலவேணி கேட்க, மித்ரா தெரியும் என்றார்.


“போய் உன் புருஷனுக்குப் போன் போட்டு தேவையானது வாங்கிட்டு வர சொல்லி, அதே பண்ணு.” என்றார்.


வீட்டில் இருக்கும் செல்லை எடுத்து மித்ரா மதியழகனை அழைத்துச் சொல்ல, அவன் அவள் கேட்டதை வாங்கி வந்து கொடுத்துவிட்டுச் சென்றான்.


வழக்கமான சமையலை சுபத்ராவும் ரேவதியும் செய்ய, காலிஃபிளவர் வறுவலை மித்ரா செய்தாள். மித்ரா செய்து முடித்ததும், “மாமா திடிர்ன்னு ஒரு ஆட்டம் ஆடினாலும் ஆடுவார்.” ரேவதி சொல்ல, மித்ராவுக்குப் பயமாகவும் இருந்தது.


மதிய உணவுக்கு வந்த பிள்ளைகள் வறுவல் இருந்ததால்… அன்று நன்றாகச் சாப்பிட்டு சென்றனர்.


துரை சாப்பிட வரும்போது மித்ராவுக்கு ஒரே பயம், அவள் பின்கட்டில் போய் நின்று கொண்டாள்.


“என்ன இன்னைக்குப் புதுசா எல்லாம் எதோ இருக்கு.” துரை கேட்க,


“அது பிள்ளைகளுக்காக மித்ரா செய்தா. இன்னைக்குதான் பிள்ளைங்க ஒழுங்கா சாப்பிட்டு இருக்குங்க.” நீலவேணி சொல்ல, துரை ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டார்.


“இனிமே இன்னும் ஒன்னு வைக்கச் சொல்லுவோமா?”


“நானா வேண்டாம்ன்னு சொன்னேன். நீங்கதான் காய்கறி யாருக்கும் பிடிக்கிறது இல்லைன்னு சொன்னீங்க. இனிமே முன்னாடியே என்ன வேணும்ன்னு சொல்லச் சொல்லு. நானே வாங்கிக் கொடுத்து விடுறேன்.” என்றார்.


துரை படுக்கச் சென்றதும் மித்ரா வந்து, “மாமா என்ன சொன்னார் அத்தை?” எனக் கேட்க, “இனிமே என்ன காய் வேணும்ன்னு முன்னாடியே சொல்வியாம். அவரே வாங்கிக் கொடுத்து விடுறாராம்.” என்றதும்தான், மித்ராவுக்கு மூச்சே வந்தது.


அன்று மதியம் வந்த கதிரேசன், மதியழகன் எல்லோரும் காலிஃபிளவர் இருந்ததால்…நன்றாகச் சாப்பிட. கடைசியாகச் சாப்பிட வந்த கருணாவிடம் மித்ராவே,


“சின்ன அத்தான், உங்களுக்காகதான் இந்த வறுவல் பண்ணி இருக்கு. இன்னைக்கும் பக்கோடா வச்சு சாப்பிடாதீங்க.” என அவளே நேராகச் சொல்லிவிட…


“அப்படியா? நீ சொன்னா சரிதான்.” எனக் கருணா சாப்பிட்டான். மதியழகன் ரேவதி முகத்தை ஓரக்கண்ணால் ஆராய்ந்தான். அவன் எதிர்ப்பார்த்தது போலக் கருத்துப் போய்தான் இருந்தது.


இரவும் மித்ரா சப்பாத்தி சூட்டு குருமா வைக்க, சோறு சாப்பிட போன கருணாவை, “இது கொஞ்சம் சாப்பிட்டு பாருண்ணா, எப்ப பாரு சோறு சாப்பிட்டுத் தொப்பையைதான் பெரிசா வளர்த்து வச்சிருக்க.” என மதியழகன் வற்புறுத்தி சப்பாத்தி சாப்பிட வைத்தான்.


“குருமா நல்லா கரிக்கொழம்பு மாதிரி இருக்கே.” எனச் சொல்லியபடி கருணா நன்றாக ரசித்து சாப்பிட்டான்.


“உனக்கு என்ன வேணுமோ வீட்ல செய்யச் சொல்லி சாப்பிடு. இனி ரோட்டு கடையில எதாவது வாங்கிச் சாப்பிட்ட, அவ்வளவுதான்.” மதியழகன் சொல்ல,


“உன் நல்லதுக்குதானே கருணா சொல்றான். அவன் சொல்றதை தான் கேளேன்.” என்றான் கதிரேசனும். சரி சரி என்றான் கருணா.
துரையும் அன்று சப்பாத்தி தான் சாப்பிட்டு இருந்தார். “இனிமே நைட் டிபனே பண்ணிடுங்க.” என்றார்.


மித்ராவின் கை அந்தக் குடும்பத்தில் ஓங்கிக்கொண்டு வருவதாக ரேவதி நினைத்தாள். அவளைத் தட்டி வைக்க எண்ணி, வேண்டுமென்றே நன்றாக இருந்தாலும் குறை சொல்லுவாள்.


எதாவது செய்தாலும், இதை இப்படிப் பண்ணி இருந்தா நல்லா இருக்கும் என்பாள். அதே மித்ரா அன்று எதுவும் செய்யவில்லை என்றாள்… அவ்வளவுதானா என்பாள்.


மித்ராவுக்குக் கடுப்பாக இருக்கும். மதியழகனிடம் சென்று புலம்புவாள். “நீ எனக்காகப் பண்றியா இல்லை அவங்களுக்காகப் பண்றியா? நீ பண்றது எனக்குப் பிடிச்சிருக்கு.” என்பான்.


இந்த நேரத்தில் எழிலரசி வந்தாள். தம்பியையும் தம்பி மனைவியையும் விருந்துக்கு அழைத்து விட்டு, அப்படியே மூன்று நாட்கள் தங்கிவிட்டுப் போகலாம் எனத் தன் பிள்ளைகளுடன் வந்திருந்தாள்.


பிரியமான நாத்தனார் என்பதால்… அந்த வீட்டின் மூன்று மருமகளுமே… எழிலரசியை நன்றாகவே கவனித்தனர். மாலை நான்கு பேருமாகச் சேர்ந்து கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்து, வீட்டுக்குப் பக்கவாட்டில் இருக்கும் திறந்த வெளியில் உட்கார்ந்து அரட்டை அடித்தனர். எல்லாம் நன்றாகவே சென்றது.


எழிலரசியின் பிள்ளைகள் இருவருமே பெரிய பையன்கள். அவர்கள் வயதிற்கு நன்றாகச் சாப்பிட்டார்கள். மித்ரா அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதையே செய்து கொடுத்தாள். மதியழகனும் நல்லா சமைச்சு போடு, என அவள் கேட்டதை எல்லம் வாங்கி வந்து கொடுத்தான்.


அவர்களுக்குப் பிடித்த பிரைட் ரைஸ், சிக்கென் ஃபிரை, நூடல்ஸ் எல்லாம் செய்து கொடுத்த மித்ரா அத்தையை அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.


“எங்க அம்மாவுக்கு இதெல்லாம் செய்யவே தெரியாது அத்தை. எப்பவும் பிரியாணி பண்ணுவாங்க, இல்லைனா குழம்பு வைப்பாங்க. நீங்க எங்க வீட்டுக்கு வந்திடுங்க அத்தை.” என அழைத்தனர்.


“உங்க மாமா விட்டா வரேன்.” என்றாள் மித்ரா மதியழகனை பார்த்துக் கொண்டு.


“டேய் ! ஏன் டா என் மடியில கை வைக்கிறீங்க? ஞாயிற்றுக்கிழமை இங்க வந்திடுங்க. வந்து உங்களுக்குப் பிடிச்சது சாப்பிட்டு போங்க.” என்றான் மதியழகன்.


“சரி மாமா…” எனச் சொல்லிவிட்டுப் பிள்ளைகள் விளையாட சென்றுவிட்டனர்.


எழிலரசியும், “மித்ரா எல்லாமே நல்லா பண்ற. உனக்கு நல்ல கைப்பக்குவம் இருக்கு.” என்றாள்.


“ஆமாம் நீங்க சொல்றது சரிதான்.” என ரேவதி ஒத்துக் கொள்ளவும் எல்லோருக்குமே ஆச்சர்யம். இவ இவ்வளவு நல்லவ கிடையாதே எனக் கருணா பார்த்து இருந்தான்.


“அவளுக்கு என்ன இப்ப குழந்தையா குட்டியா… அதெல்லாம் வந்த பிறகு தானே தெரியும். இன்னைக்குப் புதுசா வந்த பவுசியில பண்றா, எங்களுக்கு அப்படியா? பசங்களை மேய்க்கவே நேரம் சரியா இருக்கு. அவ சும்மா இருக்கிறதுக்குச் செய்ய வேண்டியது தான்.” என்றாள்.


கதிரேசனுக்கு மிகவும் கோபம் வந்தது. இப்போ நீங்க பேசுறீங்களா இல்லை நான் பேசவா என்பது போல, அவன் அம்மாவைப் ஒரு பார்வை பார்த்து வைக்க, நீலவேணி, “நீ எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற?” என்றார்.


“குழந்தை இல்லைனா மட்டும், நீ அப்படியே கிளுகிளுன்னு வேலை பார்த்திடுவ? ஆமாம் நீ இதுல எதுக்கு உன்னோட அண்ணியைச் சேர்க்கிற?” என நக்கலாகக் கேட்டான் கருணா.


“இரு அண்ணா, அண்ணி சொல்றது சரிதான். அவங்களுக்கு உடனே குழந்தை வந்ததுனால நமக்கு அவங்களோட திறமை தெரியாம போய்டுச்சு.” என்றவன்,


“இப்ப என்ன அண்ணி? மித்ரா மாசமானா நீங்க சமைங்க, உங்களுக்குத்தான் பசங்க பெரிசாகிட்டாங்களே… நீங்க பண்ணாலும் நாங்க சாப்பிடுவோம் அண்ணி.” என மதியழகன் புன்னகைக்க, அதுவரை முகம் வாடிப் போய் இருந்த மித்ராவின் முகம் மலர, தங்கையின் கையை அழுத்திவிட்டாள் சுபத்ரா.


“எங்க நமக்குத் தோசை ஊத்த, சப்பாத்தி சுடவே வலிக்கும், அதுக்குத்தான் சோத்தையே போடுறது.” கருணா நக்கலடிக்க, அறையில் இருந்து இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த துரை, “எல்லோரும் பேசாம போய்ப் படுங்க.” என்றார் அதட்டலாக.


துரையின் குரல் கேட்டதும், எல்லோரும் நொடியில் இடத்தைக் காலி செய்தனர்.


தங்கள் பகுதிக்கு வந்ததும், ரேவதி கருணாவிடம் சண்டை பிடித்தாள். “மதி அவன் பொண்டாட்டியை தலையில தூக்கி வச்சிட்டு ஆடுறான், ஆனா நீங்க என்னை எப்படிப் பேசுறீங்க?”


“எழில் மித்ராவை புகழ்ந்தா உனக்கு ஏன் வலிக்குது. நீ செய்யலைன்னு யாரும் சொன்னாங்களா? அது சின்னப் பொண்ணு எதோ ஆர்வமா பண்ணுது. அதைப் பாராட்டினா உனக்கு என்ன?”


“உனக்கும் ஆர்வம் இருந்தா நீயும் பண்ணு. நீயும் மாசம் ஆன நாள்ல இருந்து, எனக்கு முடியலை முடியலைன்னுதான் சொல்லிட்டு இருக்க.”


“நீ போடுற பழையதை சாப்டிட்டு, நான் பேசமா தான் இருந்தேன். உன்னை எதாவது சொன்னேன்?”


“இப்ப நீயா வந்துதான் வாயை கொடுத்து மாட்டிகிட்ட, மதி, சொல்லிட்டான் இல்ல… நீங்களும் பண்ணுங்கன்னு.”


“அவன் சொன்னா நான் பண்ணனுமா?”


“முடியாது இல்ல, அப்ப வாயை மூடிட்டு இரு. எதுக்கு அவன் பொண்டாட்டியை வம்பு இழுக்கிற?” என்ற கருணா கட்டிலில் திரும்பி படுத்து விட… ரேவதி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ரேவதிக்கு ரொம்ப நேரம் அடுப்படியில் நின்று சமைப்பது எல்லாம் ஆகாது. சீக்கிரம் வேலை முடித்து விட்டு வந்து விட வேண்டும்.


எல்லோருக்கும் தனி ஆளாகச் செய்யச் சுபத்ராவல் முடியாது. அதனால் அவளால் முடிந்த அன்று டிபன், முடியாத அன்று சாதம் என வைத்துக் கொண்டு இருந்தாள்.


ரேவதிக்கு எப்படிச் சமையலில் ஆர்வம் இல்லையோ, அதே போல் சாப்பிடுவதிலும் ஆர்வம் இல்லை. எதோ கடமைக்கு என்றுதான் சாப்பிடுவாள். அதனால் ஆளும் ஒல்லியாகத்தான் இருப்பாள்.


கணவருக்கு என்ன பிடிக்கும்? அதைக் கேட்டுச் செய்வோம் என்று எல்லாம் நினைக்க மாட்டாள். என்னால இதுதான் முடியும், நீ சாப்பிட்டுதான் ஆக வேண்டும் என்பாள். அவளோடு மல்லு கட்டுவதற்கு, வீட்டில் அவள் போடுவதைச் சாப்பிட்டுவிட்டு, வெளியில் அவனுக்குப் பிடித்ததை வாங்கிக் கருணா சாப்பிட்டுக் கொள்வான்.


ரேவதிக்குக் கணவனிடம் எப்படி அன்பாகப் பேச வேண்டும் என்றும் தெரியாது. இவள் எதாவது வெடுக்கென்று பேசிவைக்க, வீட்டிற்கு வரவே கருணாவுக்கு எரிச்சலாக இருக்கும். மொத்தத்தில் ரேவதி அவளும் வாழ்க்கையை அனுபவிக்காமல், கருணாவையும் அனுபவிக்க விடாமல் செய்து கொண்டிருந்தாள்.


இரவில் கணவன் தன்னை நெருங்கும் போதும், ஒரு தடவை குதர்க்கமாக அவள் பேசி வைக்க, “இதுக்கும் என்னை வெளியில போக வச்சிடாதா. அதுக்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. எங்க அப்பா ஒருத்தருக்காகதான், இல்லைனா உன்னை எப்பவோ தூக்கி போட்டுட்டு போயிருப்பேன்.” என்றான்.


அன்றிலிருந்து கணவன் நெருங்கினால் மட்டும், அவள் வாயே திறப்பதில்லை.


அங்கே மித்ராவோ மதியழகனின் சிண்டை பிடித்து ஆய்ந்துக்  கொண்டு இருந்தாள்.


“நான் இந்த வீட்ல இனி ஒன்னும் பண்ணலைப்பா. எனக்கு எதுக்கு இந்தப் பேச்சு வாங்கனும்ன்னு தலையெழுத்தா என்ன?”


“நான் பாட்டுக்கு படிச்சிட்டு இருந்தேன், எங்க அக்கா படுபாவியும், உங்க அண்ணனும் சேர்ந்து பண்ண வேலை. என்னை இங்க கொண்டு வந்து தள்ளினாங்க.”


“நான் யார் கிட்டயும் பேர் வாங்க எல்லாம் செய்யலை. எனக்குத் தோனுச்சு நான் செஞ்சேன்.”

“உங்க அண்ணி குழந்தை இருக்கிறதுனால செய்யலையா… முதல்ல அந்தக் குழந்தைக்கு ஒழுங்கா சோறு கொடுக்கச் சொல்லுங்க. எப்பவும் ஆறி போனதுதான் கொடுக்கிறாங்க.”


இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தவள், கடைசியில் “எனக்குக் குழந்தை இல்லைன்னு சொல்லிட்டாங்க இல்ல, உங்க அண்ணி.” என அழுதே விட….


அவளை இறுக அணைத்த மதியழகன், “ஹே லூசு, அவங்க அப்படிச் சொல்லலை… குழந்தை வந்தா நீ வேலை செய்ய மாட்டேன்னு தான் சொன்னாங்க.”


“ஏன் அப்போ, நான் இப்பவே எதுவும் செய்ய மாட்டேன் போ…”


“அதுக்குதான் அவங்க சொல்றாங்க. உன்னைச் சீண்டி விட்டு உன்னையும் அவங்க மாதிரியே ஆக்க பார்கிறாங்க. உனக்கு அது புரியலையா டி?”


“நீ தப்பு செய்யலை இல்லை. அப்ப ஏன் நீ அவங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிற?”


“இது நம்ம வாழ்க்கை, நமக்குப் பிடிச்ச மாதிரிதான் நாம வாழனும். அவங்களுக்காக நீ உன்னை மாத்திப்பியா?”


“எங்க அப்பா அம்மா எதுவும் சொன்னா நீ வருத்தப்படலாம். அவங்க உன்னை எதுவும் சொன்னாங்களா?”


மதியழகன் கேட்க கேட்க மித்ரா யோசிக்க ஆரம்பித்தாள். அதுதானே நான் ஏன் யாருக்காகவோ மாறணும்.


இருடி ரேவதி சொக்கா… உன்னை மாத்தி காட்றேன் டி என் அக்கா என நினைத்துக் கொண்டாள்.

Advertisement