Advertisement

சண்ட கோழி


அத்தியாயம் 10

மறுநாள் காலை மதி பட்டு வேட்டி சட்டையிலும், மித்ரா அடர் ரோஸ் நிற பட்டு புடவையிலும் கிளம்பி வந்தனர். இருவரும் காபி குடித்து முடித்ததும், அங்கிருந்த நீலவேணியிடம் சொல்லிவிட்டு, கோவிலுக்குக் கிளம்பி சென்றனர்.


மித்ரா மதியழகனோடு பைக்கில் பாந்தமாக உட்கார்ந்து சென்றாள். முதலில் அந்த ஊரில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குச் சென்றுவிட்டு, பிறகு பெரிய சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். பின்னர் அங்கிருந்து அம்மன் கோவில் என வரிசையாக ஒவ்வொரு கோவிலுக்கும் சென்றனர்.


மதியழகனின் உயரத்திற்கும் கோதுமை நிறத்திற்கும் பட்டு வேட்டி சட்டை, அவனுக்கு அவ்வளவு அம்சமாக இருக்க… அவன் தோள் உரச நடந்து வந்த மித்ராவும் புடவையில் லட்ச்சனமாக இருந்தாள்.


இருவரும் வீட்டுக்கு வந்ததும், நீலவேணி, இருவரையும் கிழக்குப் பக்கமாக உட்கார வைத்து, உப்பு மிளகாய்க் கொண்டு வந்து சுற்றிப் போட்டார்.


அன்று மதியழகன் பதினோரு மணி போல வந்து மித்ராவை டீ போட சொல்லி, அவளோடு உட்கார்ந்து குடித்து விட்டுச் சென்றான்.


ரேவதி அன்று யாரோடும் பேசவே இல்லை. உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டு இருந்தாள். அவள் முகத்தைப் பார்த்து விட்டு பேச தயங்கி மித்ராவும் அமைதியாக இருந்தாள்.


அவள் கவனித்தவரை, ரேவதிக்கு வீட்டு வேலைகள் செய்வதில் அவ்வளவு உடன்பாடு இல்லை. அதற்காக வேலை செய்யாமலும் இல்லை. ஒரு அளவோடு நிறுத்திக் கொள்கிறாள். ஒரு வயது மகளும் இருப்பதால்…

அவளைப் பார்ப்பது போல நேரத்தை கடத்தியும் விடுகிறாள். ஆனால் சுபத்ரா அதற்கு மாறாக எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்கிறாள்.


மறுநாள் அதிகாலை கொடைக்காணல் செல்வதால்… அன்று இரவு எல்லோரும் சீக்கிரமே சாப்பிட்டுவிட்டுப் படுக்கச் சென்றனர். எல்லோரையும் விட மித்ராதான் ஆவலாக இருந்தாள்.


அதிகாலையில் எழுந்து குளித்து, ஆரஞ்சு நிறத்தில் அனார்கலி மாடலில் புதுச் சுடிதார் அணிந்து, முன் தினம் ஷாம்பூ போட்டு அலசிய கூந்தலை தூக்கி வாரி, போனிடைல் போட்டிருந்தாள்.


காதில் பெரிய வளையம். முகத்தில் ஒப்பனை செய்து சின்னப் பொட்டும் வைத்துக் கொண்டாள். பார்க்க கல்லூரிக்குச் செல்லும் பெண் போல இருந்தாள்.


“கலக்குற டி பொண்டாட்டி.” என்ற மதியழகன் ஜீன்ஸ் டி ஷர்ட்டில், அவனும் கலக்கலாகத் தான் இருந்தான்.


காலில் புது ஹில் செருப்பு எடுத்து போட்டவள், முன்பக்க வாசலில் அதை விட்டுவிட்டு வருவதற்காகச் சென்றவள், அப்படியே அந்தப் பக்கமாகவே உள்ளே வர… ஹாலில் நின்றிருந்த துரை, “இதோ பாரு யாரோ வந்திருக்காங்க.” என்றார் நீலவேணியிடம்.


யாரோ எனப் பார்த்த அனைருக்கும் மித்ரா நிற்பதை பார்த்ததும் ஒரே சிரிப்பு.

“அப்பா, என் பொண்டாட்டி பா…” என்றான் மதியழகன்.


“உங்களுக்குச் சின்னவன் பொண்டாட்டியை கூட அடையாலம் தெரியலையா?”நீலவேணி கேட்க,


“வேற உடுப்பு போட்டிருக்கா அதுதான் தெரியலை.” என்றார் துரை சிரித்தபடி.
மித்ராவுக்கு ஒரே வெட்கமாகப் போய் விட்டது. அவளைப் பார்த்து மதியழகனுக்குச் சிரிப்புப் பொங்கியது.

துரை மற்றும் நீலவேணியிடம் சொல்லிவிட்டுக் காரில் சென்று ஏறினர். இன்னும் கருணாவின் குடும்பம் மட்டும் வரவில்லை.
ஓட்டுனர் இருக்கையில் இருந்த கதிரேசன், “இன்னைக்குக் கண்டிப்பா ரெண்டு பேரும் சண்டை போடுவாங்க. நீ வாயை திறக்காத மதி, நான் இப்பவே சொல்றேன்.” என்றான்.


“நான் என் பொண்டாட்டியோட பின்னாடி போய் உட்கார்ந்துகிறேன். என்னவோ பண்ணி தொலையட்டும்.” என்றவன், மித்ராவோடு சென்று கடைசி இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். அதில் விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளைத் தூக்கி முன்னால் போட்டான்.


“சித்தப்பாக்கு ரொம்பத் தலைவலிக்குது. அதனால முன்னாடி உட்கார்ந்து விளையாடிட்டு வாங்க.” என்றான்.


அதிக நேரம் காக்க வைக்காமல், ஒரு வழியாகக் கருணாவின் குடும்பம் வந்தது. ரேவதியும் சுடிதரில்தான் இருந்தாள். அவளைப் பார்த்து சுபத்ராவும், மித்ராவும் வரவேற்பாகப் புன்னகைக்க, அவளும் மெலிதாகப் புன்னகைத்தாள்.


பையை வைக்க டிக்கியை திறந்த கருணா, “என்னடா நீ இங்க இருக்க.” என்றான் மதியழகனிடம். பிறகு மித்ராவை பார்த்தவன், “நீ நடத்து.” எனச் சிரித்துக் கொண்டே சென்றான்.


வண்டி கிளம்புவதற்கு முன் வந்த துரை, “பிள்ளைங்களை எல்லாம் கூடிட்டு போறீங்க. வண்டியை மெதுவா ஓடிட்டு போங்க.” என்றார்.


சரி என அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினர்.


நடு இருக்கையில் சுபத்ராவும், ரேவதியும் தங்கள் மகள்களை வைத்துக் கொண்டு இருந்தனர். பையன்கள் இருவரும் முன் இருக்கையில் கருணாவுடன் இருந்தனர். பின் இருக்கையில் மித்ரா ஒரு பக்கம் படுத்துக்கொள்ள, மறுபக்கம் மதியழகன் படுத்துக்கொள்ள, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு வந்தனர்.


சிறிது நேரத்தில் இருவரும் உறங்கியும் போனார்கள். கதிரேசன் காலை உணவிற்காக ஒரு ஹோட்டலில் நிறுத்த, அப்போதுதான் இருவருமே விழித்தனர்.


ரேவதி ஆடி அசைந்து இறங்க… அதற்குள் மற்றவர்கள் இறங்கி ஹோட்டலுக்குச் சென்றுவிட்டனர். கருணா இருந்து அவளை அழைத்து வந்தான்.


“பசங்களா என்ன வேணுமோ சாப்பிடுங்க.” என்ற கதிரேசன், சுபத்ராவிடம் அவளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்க, “நீங்களே சொல்லுங்க.” என்றாள்.


“இந்தக் கதை எல்லாம் வேண்டாம். நீதான் சொல்லணும்.” என்றான். அவள் உணவு பட்டியலைப் பார்த்து விட்டு, ஆப்பம் என்றாள். கதிரேசன் தனக்கும் அதே சொன்னான். பிள்ளைகள் மசால் தோசை கேட்டனர்.


மதியழகன் மித்ராவிடம் கறி தோசை சாப்பிட்டு இருக்கியா நீ?” எனக் கேட்டதற்கு அவள் இல்லை என்று சொல்ல,


ஒரு கறி தோசை கொண்டு வர சொன்னான். “உங்களுக்கு.” மித்ரா கேட்க,
“நாம ஷேர் பண்ணி சாப்பிடுவோம். அது சாப்பிட்டு அடுத்து வாங்குவோம். இல்லைனா ஆறிடும்.” என்றான்.


இவர்கள் ஆர்டர் கொடுத்து முடித்த பிறகுதான், கருணாவும் ரேவதியும் தங்கள் மகளோடு வந்து உட்கார்ந்தனர். ரேவதி முதலில் மகளுக்கு இட்லி கேட்டாள். கருணா அவனுக்குத் தோசை சொன்னான்.


இவர்கள் ஆர்டர் கொடுத்த உணவுகள் வர… மதியழகனும், மித்ராவும் ஒரு தோசையை இருவரும் சாப்பிட…


அதைக் கவனித்த கதிரேசன், “டேய் உங்களோட முடியலை டா…” என்றதற்கு,


“நீயும் அண்ணியோட சாப்பிடேன் யாரு வேண்டாம்ன்னு சொன்னா.” மதியழகன் சொல்ல,


“வீடுன்னா ஊட்டி விட்டிருப்பார். இது பரவாயில்லை விடுங்க.” என்றாள் சுபத்ரா. அதைக் கேட்டு கருணாவும், ரேவதியும் சிரித்தார்கள். மதியழகன் அடுத்து ஆப்பம் சொன்னான்.

ரேவதி மகளுக்கு மெதுவாக ஊட்டிவிட, “நேரம் ஆகுது சீக்கிரம் கொடு.” எனக் கருணா சொன்னதற்கு, “இதுக்குதான் நான் வரலைன்னு சொன்னேன். உங்க அவசரத்துக்கு எல்லாம் என்னால ஒன்னும் பண்ண முடியாது.” என்றாள் முகத்தைச் சுளித்துக் கொண்டு.


“தெரியும் டி. உன் புத்தியை நீ காட்டுவேன்னு. என்னைக்காவது வெளிய கிளம்பினா சந்தோஷமா வர சொல்லு. நீயா எதாவது மனசுல நினைச்சிட்டு, வெளிய வந்தாலும் வெடுக்கு வெடுக்குன்னே பேசுற… உன்கிட்ட மனுஷன் இருக்க முடியாது.” என்றவன், எழுந்து வெளியே சென்றுவிட்டான்.


கதிரேசன் எழுந்து கருணா பின்னால் சென்று விட… ரேவதி சாப்பிடாமலே எழுந்துகொள்ள, சுபத்ரா அவளைப் பிடித்து உட்கார வைத்தாள்.


“அண்ணி, பாப்பாவை என்கிட்டே கொடுங்க.” என்ற மதியழகன், “மித்ரா அந்த இட்லியை எடுத்திட்டு வா வெளிய வேடிக்கை காட்டிட்டு ஊட்டலாம்.” எனக் குழந்தையைத் துக்கிக் கொண்டு செல்ல, மித்ராவும் இட்லியும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு அவன் பின்னே சென்றாள்.


“நான்தான் வரலைன்னு தானே அக்கா சொன்னேன். எப்படிப் பேசுறார் பாருங்க.” என ரேவதி சுபத்ராவிடம் சொல்ல,


“உன்னை அங்க விட்டுட்டு வந்து, அவர் மட்டும் எப்படிச் சந்தோஷமா இருப்பார் ரேவதி. நாம இத்தனை பேர் இருக்கோம், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். நமக்கே எப்பவோ ஒரு தடவைதான் இது மாதிரி வெளிய வர சான்ஸ் கிடைக்குது.”


“அதுதான் அக்கா எனக்குக் கோபம். நானும் இவரை ரொம்ப நாளா எங்காவது போகலாம்ன்னு சொல்லிட்டு இருக்கேன். கண்டுக்கவே இல்லை. இன்னைக்குத் தம்பி சொன்னதும், உடனே கிளம்புறார். அப்ப நமக்கு ஆத்திரமா வராதா?”


“என் வீட்டுகாரரும் அப்படித்தான். அவரா வெளியில கிளம்பனும்னா அது நடக்கவே நடக்காது. எதோ மதி புண்ணியத்துல இன்னைக்கு வெளிய வந்திருக்கோம். நம்ம வீட்டை பத்தி தெரிஞ்சது தானே விடு.”


“வந்த இடத்தில சந்தோஷமா இரு.”


சுப்த்ராவுடன் பேசிக்கொண்டே ரேவதி சாப்பிட, அங்கே மதியழகன் குழந்தைக்கு வேடிக்கை காட்ட, மித்ரா இட்லி ஊட்டினாள்.


“பரவயில்லையே, உனக்கு நல்லா ஊட்ட தெரியுதே… அப்ப நாம கூட இது மாதிரி ஒரு பாப்பா ரெடி பண்ணலாம்.” அவன் அவளைப் பார்த்து கண்சிமிட்ட,


“ம்ம்… பக்கத்து வீடு பாப்பாக்கு ஊட்டி பழக்கம்.” என்றாள் மித்ரா மிடுக்காக.


“இருந்தாலும் நாம கொஞ்ச நாள் கழிச்சே ரெடி பண்ணுவோம். நீயே நம்ம வீட்டுக்கு புதுசா வந்திருக்க, இதுல மசக்க, வாந்தின்னா உனக்கு எரிச்சலா இருக்கும். நம்ம வீடு உனக்குச் செட் ஆகட்டும். அப்புறம் ரெடி பண்ணலாம்.” என்றான்.


“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?”


“எனக்கு ரெண்டு அண்ணிங்க இருக்காங்க மேடம். ரெண்டு பேரும் கல்யாணம் ஆனதும் மாசமாகிட்டாங்க. சுபத்ரா அண்ணி பரவாயில்லை சமாளிச்சிட்டாங்க. ரேவதி அண்ணி ரொம்பக் கஷ்ட்டபட்டாங்க.”


“அவங்களுக்கு எது சாப்பிட்டாலும் நிக்காது. இதுல இவன் போய் என்னத்தைப் பேசுவானோ… அவங்க எரிச்சல்ல சண்டை பிடிப்பாங்க. அப்ப இருந்தே ரெண்டு பேரும் இப்படித்தான்.”


“இவங்க அவனைக் குறை சொல்வாங்க. அவன் இவங்களைக் குறை சொல்வான். ரெண்டு பேருக்குள்ள புரிஞ்சிக்கிற தன்மையே இல்லை. கல்யாணம் ஆனதும் குழந்தை வந்திடுச்சா… அதனால தான் இப்படி இருக்காங்களா தெரியலை.”


“நாம எதுக்கும் கொஞ்சம் கேப் விடுவோம்.”


மித்ரா இட்லியை ஊட்டி முடிக்க, சுபத்ராவும் ரேவதியும் வெளியே வந்தனர். கிளம்புங்க கிளம்புங்க என எல்லோரையும் வண்டியில் ஏற்றி, ஒரு வழியாகப் பன்னிரெண்டு மணி போல் கொடைக்காணல் வந்து விட்டனர்.


கதிரேசன் வெளியே சாமான்யமாக வர மாட்டான். ஆனால் வந்து விட்டால், மனைவி குழந்தைகளை நன்றாகக் கவனிப்பான். அவர்களோடு அவனும் அனுபவிப்பான்.


கருணாவும் ரேவதியும் இன்னும் முறைத்துக் கொண்டுதான் இருந்தனர். அதற்கு நடுவிலும் சுற்ற வேண்டிய இடங்களைச் சுற்றி பார்த்தனர்.


மித்ரா செல் போனில் படங்களாக எடுத்து ஜெய்க்கு அனுப்பி வைத்தாள். தங்கை முகத்தில் தெரியும் மகிழ்ச்சி, அண்ணன் அவன் முகத்தையும் மலர செய்தது.


மாலை வரை சுற்றிவிட்டு, ஏற்கனவே பதிவு செய்திருந்த அறைக்குத் திரும்பினர். கருணாதான் தன் நண்பர்கள் மூலமாக அறை பதிவு செய்திருந்தான்.


மதியழகன் மித்ராவுக்கு ஒரு இடத்திலும், இவர்களுக்கு வேறு இடத்திலும் பதிவு செய்திருந்தான்.


அவர்களை அந்த ஹோட்டலில் இறக்கிவிட்டு, தானும் அவர்களுடன் கீழே இறங்கிய கருணா“மதி, நீ நாளைக்கு உன் பொண்டாட்டியோட தனியா சுத்தி பாரு. சாயங்காலம் வீட்டுக்கு போகும் போது, வழியில வந்து ஏறிக்கோ.” என்றான்.


“ஏன் அண்ணே நாங்க மட்டும் தனியா? சேர்ந்து வந்திட்டு, சேர்ந்தே போவோம்.”


“டேய் சொன்னாக் கேளு… நாங்க பிள்ளைங்களை வச்சிக்கிட்டு கிளம்ப எல்லாம் லேட் ஆகும்.”


மதியழகன் அங்கிருந்தே கதிரேசனைப் பார்க்க, அவன் சொல்றதை கேள் என்பதைப் போலத் தலையசைத்தான்.


“சரி அண்ணே… ஆனா நீ அண்ணிக் கூடச் சண்டை போடாத என்ன?” எனச் சொல்லிவிட்டு மதியழகன் மித்ராவுடன் கிளம்ப.


“இந்தா இந்தப் பணத்தை வச்சுக்கோ.” என மதியழகன் மறுக்க மறுக்க, கருணா தம்பியிடம் பணத்தைக் கொடுத்து விட்டே சென்றான்.


காரில் ஏறிய கருணாவிடம், “இவங்க மட்டும் ஏன் தனியா இருக்காங்க.” என ரேவதி கேட்க, “நம்ம ஹோட்டல்ல ரெண்டு ரூம் தான் இருந்துச்சு.” என்றான்.


பெரிய ஹோட்டல் எல்லாம் இல்லை. நடுத்தர மக்கள் தங்க வசதியான ஹோட்டல். ஆனால் நன்றாகச் சுத்தமாக, அதுவும் முக்கியச் சாலையில் இருந்தது.


அறைக்குச் சென்றதும் களைப்பில் மதியழகன் கட்டிலில் படுத்து விட. அந்தக் குளிரிலும் குளித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்ற… மித்ரா சென்று வெந்நீரில் குளித்துக் காட்டன் சுடிதார் அணிந்து வந்தாள்.


அவள் சென்று கட்டிலில் கணவனின் அருகே அமர்ந்து அவன் நெற்றியை அழுத்தி விட… அதில் கண் திறந்தவன், அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“ஹே குளிச்சிட்டியா? நானும் குளிச்சிட்டு வரேன்.” என்றவன், துண்டை கையில் எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் சென்றான்.


குளித்து விட்டு வரும் போது, கையேடு உள்ளாடைகளைத் துவைத்துக் கொண்டு வந்திருந்தான், அவனோடது மட்டும் அல்ல அவளோடதும்.
“உங்களுக்கு ஏன் இந்த வேலை? நீங்க குளிச்சதும், நான் துவைக்கலாம்ன்னு இருந்தேன்.”


“ஏன் நான் துவைக்கக் கூடாதா… அதை அவனே காய வேறு போட…” மித்ரா தலையில் அடித்துக் கொண்டாள்.


“ரூம் சர்விஸ் இருக்கு. என்ன சாப்பாடு வேணும், நீயே போன் பண்ணி சொல்லு. இங்கயே உட்கார்ந்து சாப்பிடுவோம்.” என்றவன், உடைகளை எடுத்து அணிய.. மித்ரா போன்னில் பிரைட் ரைஸ் நூட்லஸ் சொன்னாள்.

 


மதியழகன் மித்ராவின் அருகே சோபாவில் அமர்ந்தான். “என்ன மேடம் யோசிக்கிறீங்க?”


“நீங்க என்னைக் கொஞ்சமாவே கவனீங்க. அப்புறம் பின்னாடி நீங்க சண்டை போட்டா எனக்குக் கஷ்ட்டமா இருக்கும்.” என்றாள்.


“நாமும் அண்ணன் அண்ணி மாதிரி சண்டை போட்டுபோம்ன்னு நினைக்கிறியா?”


“தெரியலை… ஆனா கொஞ்சம் பயமா இருக்கு.” என்றவள், அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.


“நமக்கும் சண்டை வரும் மித்ரா, புருஷன் பொண்டாட்டினா சண்டை வராம இருக்காது. நம்ம ரூம்குள்ள நீ எவ்வளவு சண்டைனாலும் போடு, வெளிய என்னை விட்டுக் கொடுக்காத, நானும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்.”


“அன்னைக்குக் கார்ல பேசின மாதிரி நீ பேசினா, கோபத்தில நானும் பேசிடுவேன்.”


“எனக்கு எவ்வளவு சொந்தம் இருந்தாலும், நீ தனிதான். அதே போலத்தான் உனக்கு நானும்.”


“ஆமாம் அது எனக்குப் புரியுது. நாம இனி கொஞ்சம் அடக்கியே வாசிக்கலாம். எனக்கு என்னவோ நம்மைப் பார்த்துதான் சின்ன அத்தான் அக்காகுள்ள சண்டை வருதோன்னு தோணுது.”


“இங்க பாரு மத்தவங்களுக்காக நாம வாழ முடியாது புரியுதா? என் அன்பை நான் உனக்குக் காட்டுறேன் இதுல என்ன தப்பு?”


“எனக்கு மட்டும் காட்டுங்க போதும்.” என்றாள் மித்ரா. அவனின் மீசையைப் பிடித்து இழுத்தபடி… அதில் கிறங்கியவன், அவளை அணைக்க, அந்த நேரம் ஆர்டர் செய்த உணவுகள் வர…. இருவர் மட்டும் தனியே இருப்பதால்… மாற்றி மாற்றி ஊட்டிவிட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.


சாப்பிட்டு முடித்ததும், “வெளியே நடந்துவிட்டு வரலாம்.” என மதியழகன் மித்ராவை அழைத்துக் கொண்டு சென்றான்.


அவள் தோளில் கைபோட்டு, அவளிடம் கதை பேசியபடி நடந்து செல்ல, இருவருக்கும் அது புது அனுபவமாக இருந்தது. அவர்கள் ஊரில் இப்படி அவர்களால் இருக்க முடியாது. வந்த இடத்தில் அனுபவித்தனர்.


அங்கே காரில் இருந்து இறங்கும் போதே கதிரேசன் கருணாவிடம் சொல்லிவிட்டான். “டேய் காலையில பார்ப்போம். எப்படியும் நாங்க கிளம்பப் பத்து மணி ஆகிடும்.” என்று. அதற்குக் கருணாவும் சரி என்றான்.


குழந்தைகளுக்கு உடை மாற்றிவிட்டு, தானும் குளித்துச் சுபத்ரா சுடிதார் அணிந்து, கதிரேசன் மனைவியைப் பார்வையாலையே பருகிக் கொண்டு இருந்தான்.


குழந்தைகள் இருவரும் விளையாட… அவனின் அருகே வந்தவள், “இப்படியே பார்த்திட்டே இருக்கப் போறீங்களா?” என்றாள்.


“பசங்க தூங்கிற வரை ஒன்னும் பண்ண முடியாதே? அதுதான் பார்த்திட்டாவது இருக்கேன்.” என்றான்.


“அப்புறம் பாருங்க, பசிக்குது.” என்றாள்.


“வெளியே போய்ச் சாப்பிடுவோமா?” கதிரேசன் கேட்க, சுபத்ரா சந்தோஷமாகச் சரி என… குழந்தைகளை அழைத்துக் கொண்டு இருவரும் கிளம்பி விட்டனர்.


அங்கே அறைக்கே உணவு வரவழைத்து, குழந்தைகளைச் சாப்பிட வைத்து, கருணாவும் ரேவதியும் சாப்பிட்டு முடிக்கவே வெகு நேரம் ஆகி விட்டது. குழந்தைகள் விளையாட, கருணா டிவி பார்க்க, ரேவதி கட்டிலில் படுத்து இருந்தாள்.


சிறிது நேரம் விளையாடிவிட்டுப் பிள்ளைகள் இருவரும் அசதியில் உறங்க ஆரம்பிக்க, அவர்களைக் கட்டிலில் வசதியாகப் படுக்க வைத்த கருணா, சோபாவை படுக்கையாக மாற்றிவிட்டு வந்தவன், விளக்கை அனைத்து விட்டு, கட்டிலில் படுத்து இருத்த ரேவதியை கைகளில் தூக்கிக் கொண்டு சோபாவிற்குச் சென்றான்.


“விடுங்க என்னை.” ரேவதி கத்த,


“காலையில சண்டை போடலாம். ப்ளீஸ் ரேவதி.” என்றான்.


ரேவதியும் கணவனின் கைகளில் உருக ஆரம்பிக்க, அதை உணர்ந்த கருணா மகிழ்ச்சியாக மேலும் முன்னேறினான்.


மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து மதியழகனும் மித்ராவும் நன்றாக உடை அணிந்து, வெளியே சுற்ற கிளம்பி விட்டனர்.


மற்ற இரண்டு குடும்பமும் நிதானமாக எழுந்து, கிளம்பி, ஊர் சுற்றி பார்க்க சென்றனர். இன்று ரேவதி கொஞ்சம் சாதாரணமாக இருந்தாள். அதைக் கவனித்த கதிரேசனுக்கும், சுப்த்ராவுக்கும் நிம்மதியாக இருந்தது.


அப்படி இப்படி என ஊர் கிளம்ப மாலை ஆறு மணி ஆகிவிட்டது. வழியில் மதியழகனும் மித்ராவும் இவர்களோடு சேர்ந்து கொண்டனர். எல்லோருமே நல்ல மனநிலையில் இருந்ததால்… வண்டியில் ஒருவரோடு ஒருவர் அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக வந்தனர். இந்த நிலை தொடருமா?

Advertisement