Advertisement

சண்ட கோழி


அத்தியாயம் 1


“ஏம்ப்பா மதியழகா, என்னோட கொஞ்சம் வந்திட்டு போப்பா.”


“என்ன திம்சு உன்னோட இம்சையா இருக்கு. என்னவோ கட்டின பொண்டாட்டியை கூப்பிடுற மாதிரி கூப்பிடுற.”


“என்னப்பா நீதான் நியாயத்தைச் சொல்வேன்னு கூப்பிட்டா, நீ ஏதோ லந்து அடிச்சிட்டு இருக்க.”


“சரி சீக்கிரம் சொல்லு, என்ன உன் பிரச்சனை?”


“இந்தச் சேகர் பையன், என் கடைக்கு வாடகையும் கொடுக்க மாட்டேங்கிறான். கடைய காலி பண்ணி கொடுன்னா, அதுவும் செய்ய மாட்டேங்கிறான். நான் எத்தனை நாள் பா… வாடகை வாங்காமலே இருக்கிறது. நானும் குடும்பஸ்தன் தானே?”


“சரி நீ போ… நான் பின்னாடியே வரேன்.” என்ற மதியழகன் பேருக்கு ஏற்றார்போல் ஆளும் அழகு. அறிவும் அழகுதான். ஆனால் என்ன கொஞ்சம் முன்கோபம் அதிகம். சில நேரம் வாய் பேசுவதற்குள் கைபேசி இருக்கும். அவனை நன்றாகத் தெரிந்தவர்கள், கொஞ்சம் எட்ட நின்றே அவனிடம் பேசுவார்கள்.


வீட்டில் கடைசிப் பிள்ளை என்பதால், குடும்பத்தில் செல்லமும் அதிகம், செல்வாக்கும் அதிகம், அவனோடு உடன்பிறந்தவர்கள் மூன்று பேர். முதலில் அண்ணன் கதிரேசன், அடுத்து அக்கா எழிலரசி, திரும்ப ஒரு அண்ணன் கருணா. எல்லோருக்கும் திருமணம் ஆகி இருக்க. சார் தான் கல்யாணத்திற்குக் காத்திருக்கிறார்.


ஆமாம் அவன் காத்திருக்கிறான். பெண் எல்லாம் அவனே பார்த்து வைத்து விட்டான். வீட்டில் கல்யாண பேச்சை எடுத்து விட்டால். உடனே இவள்தான் பெண் என்று காட்டி,. அடுத்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். ஆனால் இவன் வீட்டில் தானாகத் திருமணப் பேச்சை எடுப்பதாகக் காணோம்.


சரி இந்த விஷயம் அந்தப் பெண்ணுக்காவது தெரியுமா? அதுவும் இல்லை. அவளுக்கு மட்டும் தெரிந்தாள். இவனைத் துவைத்து தொங்க விட்டுவிடுவாள். அவளுக்கு இவனை மட்டும் அல்ல, இவன் குடும்பத்தினரையும் பிடிக்காது.


அவர்கள் ஒன்றும் மோசமான குடும்பம் இல்லை. அந்த ஊரில் நல்ல குடும்பம்தான். அந்த ஊரில் பாதிச் சொத்து அவர்களது தான். மளிகை கடை, பான்சி ஸ்டோர், எலெக்ட்ரி கடை என மகன்கள் ஆளுக்கு ஒரு கடை பார்த்துக் கொண்டாலும், வருமானம், செலவு எல்லாம் பொதுதான்.


தெருவில் பெரிய வீடு அவர்களுடையது. வீட்டை கூட மூன்று மகன்களுக்கு, மூன்று பாகமாகத்தான், அவன் அப்பா கட்டி இருக்கிறார். ஆனால் இரவு படுக்கும் வரை, எல்லோரும் ஒரே இடத்தில் தான் இருப்பார்கள்.


அந்த வீட்டில் அதிகம் படித்தது மதியழகன்தான். M.Com., படித்து விட்டு அரசு வேலைக்குத் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கிறான். தனக்கு தப்பு என்று பட்டால் தட்டிக் கேட்பான். அதெல்லாம் வெளியே தான்.

வீட்டிற்க்குள் அவன் தந்தை துரை வைத்ததுதான் சட்டம். அதை அண்ணன் தம்பி மூன்று பேருமே கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவார்கள். அவரை எதிர்த்து இதுவரை ஒருவரும் பேசியது இல்லை.


“என்ன சேகர் அண்ணே, வாடகை ஒழுங்கா கொடுக்க முடியலைனா, கடையைக் காலி பண்ணிக் கொடுக்க வேண்டுயதுதான? ஏன் இழுத்து அடிக்கிற?


“நான் என்னப்பா வச்சிகிட்டா இல்லைன்னு சொல்றேன். வருமானம் இல்லாம நானே நட்டத்தில கடையை நடத்திட்டு இருக்கேன். இதுல கடையையும் காலி பண்ண சொன்னா, நான் என்ன செய்ய முடியும்? கொஞ்சம் டைம் கொடுக்கச் சொல்லு.”


“அது அப்படி இல்ல அண்ணே… நீ ஊருக்கு தெரிஞ்சு ஒரு பொண்டாட்டி, ஊருக்கு தெரியாம ஒரு தொடுப்பு வச்சி இருக்கியா. அதுதான் உனக்கு வருமானம் பத்தலை.”


“வேண்டாம் மதியழகா, என்னைப் பத்தி தெரியாது உனக்கு.” சேகர் சொல்லி முடிக்கவில்லை, மதியழகன் அவனை அடித்து இருந்தான்.


ஒரு அறை விட்டு, “என்ன தெரியனும் சொல்லு,” என்றவன், திரும்ப ஒரு அறை வைத்து, “உன்னைப் பத்தி என்ன தெரியனும்.” என்றான்.


அடி வாங்கிய சேகர் பின்னே செல்ல.. அடித்துக் கொண்டே மதியழகன் முன்னேற, கடை முன்னால் கூட்டம் கூடியது.


“ஒழுக்கமா பொழைக்கப் பாரு… இல்லை நடக்கிறதே வேற…. உன் பொண்டாட்டி பிள்ளைகளைப் பரதேசி மாதிரி வச்சிக்கிட்டு… எவளுக்கோ கொண்டு போய் நீ அள்ளி விடுறது எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?”


“இனிமே ஒழுங்கா இருந்துக்க… இல்லைனா பஞ்சாயத்து கூட்ட வேண்டியதா இருக்கும்.” என எச்சரித்து விட்டு மதியழகன் செல்ல, சேகர் ஆடிப் போய் நின்றிருந்தான்.


அன்று இரவு கடை அடைத்துவிட்டு வீட்டிற்கு அவன் சாப்பிட செல்ல, அவன் இளைய அண்ணி தட்டில் சோறு போட்டு வைக்க, அதில் கை வைத்த நொடியில் இருந்து, அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை, அவன் தந்தை வசை பாடினார்.


அவனை நேராக எதுவும் சொல்லவில்லை. யாரையோ திட்டுவது போலத் திட்டிக் கொண்டு இருந்தார்.


அவர் எதோ பாட்டு பாடுவது போல, மதியழகன் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கடைசியாக அவன் கைகழுவும் போது, “நம்ம வீட்லயே ஆயிரம் சோலி இருக்கு. இதுல ஊர் பய பஞ்சாயத்து எதுக்கு? நம்ம வேலையைப் பார்த்தா போதும்.” என்றார்.


அவர் அறைக்குள் சென்றதும், அவன் அம்மா நீலவேணி ஆரம்பிக்க, “நீயுமா, ஏற்கனவே காதுல ரத்தம் வருது. ப்ளீஸ்…” என எல்லாமே வாய்த் திறக்காமல், நடித்துக் காட்டிவிட்டு, அவன் அறைக்கு ஓடிவிட்டான்.


அவன் அறை என்பது ஒரு பெரிய ஹால், சின்னப் படுக்கை அறை, சமையல் அறை, பிறகு பொதுவாக ஒரு குளியல் அறை, அங்கே இருக்கும் சின்ன டிவியைப் போட்டுக் கொண்டு தரையில் அமர்ந்தான்.


சேனல் மாற்றிக்கொண்டே வந்தவன், “நீ தானே நீதானே என்னை நெஞ்சை தட்டும் சத்தம்.” என்ற பாடலை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்கள் கனவில் மிதக்க, கனவுலகில் தன் சண்டைக் கோழியுடன் வளம் வந்தான்.


மறுநாள் தங்கள் எலெக்ட்ரிக் கடையில் மதியழகன் உட்கார்ந்து இருக்க, திம்சு என அழைக்கப்படும் திரு வந்து, “நீ போட்ட போடுல, பணத்தை ஒழுங்கா வந்து கொடுத்திட்டான் பா.” என்றான் மகிழ்ச்சியாக.


“இவனுங்க கிட்ட எல்லாம் வாய் பேசக் கூடாது திம்சு, கைதான் பேசணும்.” என்றான்.


புதுகோட்டை ஊரில், அன்று அந்த மகளிர் கல்லூரி, களைகட்டி இருந்தது. காரணம், அன்றுதான் மூன்றாம் வருட மாணவிகளுக்கு, பிரிவு உபச்சார விழா. பட்டுப் புடவையில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒவ்வொருவராகக் கல்லூரிக்கு வர தொடங்கினர்.


சங்கமித்ரா நீல நிற பட்டுபுடவையில், பஸ்ஸில் இருந்து இறங்க, அவளுக்காகவே காத்திருந்த நவீன், விழிகள் தெறிக்கும் அளவிற்கு அவளையே வெறித்து இருந்தான்.

சாதாரண நாட்களிலேயே ஏதோ காணாததைக் கண்டது போலத்தான் பார்த்து வைப்பான். இன்று கல்லூரி விழாவுக்கென அவள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வேறு வந்திருக்கிறாள், பிறகு கேட்கவே வேண்டாம்.


அவன் தன்னையே வெறித்துப் பார்ப்பது சங்கமித்ராவுக்கு எரிச்சலை கொடுத்தது. எப்போதும் போல், அவன் இன்றும் அவள் பின்னால் வர… எப்போதும் கண்டுகொள்ளாமல் செல்பவள், இன்று நின்று அவனிடம் பேசினாள்.


“இங்க பாரு, என் பின்னாடி வராத. எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா பிரச்சனை ஆகும். நான் படிக்கணும், என்னை நிம்மதியா படிக்க விடு.” என்றாள்.


“எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் சங்கமித்ரா. நான் உன்னை லவ் பண்றேன்.” என்றான் நவீன் உல்லாசமாக.


“அதுதான் எனக்கு இஷ்ட்டம் இல்லைன்னு சொல்றேன் இல்ல.. விட்டுடு.” என்றவள், வேகமாகக் கல்லூரிக்குள் சென்று மறைந்தாள்.


தோழிகளைப் பார்த்ததும், நவீனை மறந்தும் விட்டாள். மாலை விழா முடிய தாமதமானதால்… அவள் அண்ணன் ஜெய் அவளை அழைக்க வந்திருந்தான்.  


அவள் அண்ணனோடு இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது வாயாடிக்கொண்டே வந்தாள். எதற்கோ அவள் பின்னால் திரும்பி பார்க்க, நவீன் அவனது வண்டியில், அவளைப் பின் தொடர்ந்தான்.  


இந்தப் பக்கி ஏன் வருது என அவளுக்குப் பதட்டமாக இருந்தது. அண்ணனுக்குத் தெரிந்தால்… அவளைத் தான் திட்டுவான் எனத் தெரியும். பயத்தில் திரும்பி திரும்பி நவீன் வருகிறானா எனப் பார்த்துக் கொண்டு வந்தாள்.


வண்டியின் பக்கவாட்டுக் கண்ணாடியில், நவீன் பின்தொடர்ந்து வருவதை ஜெய்யும் கவனித்து இருந்தான். சங்கமித்ராவின் பதட்டமே, அவளுக்கு அவனைத் தெரிந்திருக்கிறது எனக் காட்டிக் கொடுத்தது.


வழியில் எதுவும் பேசாதவன், வீட்டிற்கு வந்ததும், அவன் யாரென்று விசாரித்தான். கூடவே அவன் அம்மா வேறு இருந்தார்.


“அவன் யாருன்னே எனக்குத் தெரியாதுண்ணே…. அவன் என் பின்னாடி வந்தா நான் என்ன பண்ணுவேன்?”


“உனக்கு அவன் பின்னாடி வர்றது தெரிஞ்சதும், வீட்ல சொல்லி இருக்கனுமா வேண்டாமா?”


“நான் சொன்னா, நீங்க என்னைத் தான் திட்டுவீங்க. அதோட என் படிப்பை நிறுத்திட்டா.”


“என்ன காரணமா இருந்தாலும், நீ செஞ்சது தப்புதான்.”


“நானே அவன்கிட்ட என் பின்னாடி வராதன்னு சொன்னேன்.”


“என்னது ! நீ அவன்கிட்ட நின்னு வேற பேசினியா? உனக்கு  கொஞ்சமாவது அறிவு இருக்கா? அவன் கோபத்தில் உன்னை எதாவது பண்ணி இருந்தா?”


ஜெய் சொன்னதைக் கேட்டு, அவன் அம்மா பதட்டம் கொண்டார்.  “ஆமாம், இப்பதான் டிவில எல்லாம் வருதே, லவ் பண்ண ஒத்துக்கலைனா பொண்ணுங்களை வெட்டுறாங்க, ஆசிட் ஊத்துறாங்க. இன்னும் என்னென்னமோ நடக்குது. அப்படி எதாவது ஆகி இருந்தா? எனக்கு நினைக்கவே பயமா இருக்கே.”


“போதும் டா இவ படிச்சு கிழிச்சது. இவளைக் சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுத்திடலாம்.” என்றார்.


சங்கமித்ரா எதை நினைத்து பயந்தாளோ, அதுதான் நடந்தது.


“ப்ளீஸ் அண்ணா, நான் எம்.எஸ்.சி கூடப் படிக்கலை. B.ed., மட்டும் முடிச்சிக்கிறேன். அதுக்கு அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” சங்கமித்ரா கெஞ்ச,


“நீ ஒழுங்கா வாயை மூடிட்டு இருந்தா, பரிட்சையாவது எழுத கூடிட்டு போவேன். இல்லைனா, அதுவும் எழுத முடியாது.” ஜெய் முறைத்துக் கொண்டு சொல்ல, முதலில் இந்தப் பட்ட படிப்பையாவது முடிப்போம் எனச் சங்கமித்ராவும் வாயை மூடிக் கொண்டாள்.

கல்லூரியில் உடம்பு சரி இல்லை என மருத்துவச் சான்றிதழ் கொடுத்து, அவளை மிச்ச வகுப்புகளுக்கு அனுப்பவே இல்லை. பரிட்சைக்கும் அவனே அழைத்துச் சென்று, தேர்வு எழுதி முடித்ததும், திரும்ப அழைத்து வந்தான்.


வேறு வழியாக ஜெய் அவளைக் கல்லூரிக்கு அழைத்து சென்றதால், நவீனால் சங்கமித்ராவை பார்க்க முடியாமல் போனது. அவள் எப்போது வருகிறாள் போகிறாள் என்றே அவனுக்குத் தெரியவில்லை.

 

சங்கமித்ராவும் அவன் வருகிறாணா என்றெல்லாம் பார்க்கவில்லை. போகும் போதும், வரும் போதும், புத்தகத்தைதான் விரித்து வைத்து பார்த்துக் கொண்டு வருவாள். அதை ஜெய்யும் கவனித்து இருந்தான்.


பரீட்சை முடிந்ததும் வீட்டிற்குள் சிறை வைக்கப் பட்டாள். இது தெரியாத நவீன், இப்போது விடுமுறை அதனால் பார்க்க முடியாது என நினைத்து இருந்தான்.


சங்கமித்ராவுக்குத் தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அதன் பயனாக, அவளுடைய அக்காள் சுபத்ராவுக்கும் செய்தி போனது.


இரவு உணவு நேரத்தில், துரை சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவரிடம் வந்த கதிரேசன், “அப்பா, சங்கமித்ராவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம். எதாவது நல்ல இடமா இருந்தா, உங்களைச் சொல்ல சொன்னாங்க.” என்றான்.


“கண்டிப்பா தெரிஞ்சா சொல்றேன்.” என்றார் துரை.


அப்போது அங்கே இருந்த மதியழகனுக்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டுட்டு போன கதையாகிட கூடாது மதியழகா… சீக்கிரம் எதாவது பண்ணு. என அவன் மனசாட்சி குரல் கொடுத்தது.


அப்போதே அக்கா எழிலுக்கு அழைத்தவன், “எழில், நாளைக்குக் கொஞ்சம் நம்ம வீடு வரை வந்திட்டு போயேன்.” என்றான்.


“எதுக்குச் சொல்லு, அப்பதான் வருவேன்.”


“நம்ம அண்ணியோட தங்கச்சி சங்கமித்ராவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம். நீ வந்து அந்தப் பெண்ணை எனக்குப் பேச சொல்லேன்.”


“ஐயையோ ! அப்பாவுக்குத் தெரிஞ்சா கொன்னுடுவாரு. என்னால முடியாது.”


“ஏய் நீ சும்மா சொல்லிப் பாரு. கண்டிப்பா அப்பா ஒத்துக்குவாங்க.” என்றான்.


அங்கே சங்கமித்ரா வீட்டில் அவளது அம்மா, “எங்கையோ வெளிய பார்க்கிறதுக்கு, நம்ம மூத்தவளோட கொழுந்தனுக்குப் பார்க்கலாம். ரொம்ப நல்ல தம்பி.” என்றார்.


“யாரு அந்த வளர்ந்து கெட்டவனா. அவனை எல்லாம் நான் கட்டிக்க மாட்டேன். அவங்க வீட்ல பொண்ணுங்களை, மனுஷியா கூட மதிக்க மாட்டாங்க. அந்த மாதிரி வீட்டுக்கு நான் போகமாட்டேன்.” எனச் சங்கமித்ரா போட்ட கத்தலில், ஜெய்க்குக் கோபம் வந்தது.


“வேண்டாம்னா வேண்டாம்ன்னு சொல்லு. எதுக்கு இப்படிப் பேசுற? அம்மா, நாம வேற இடம் பார்ப்போம்.” என்றான்.


“ஆமாம், என்னை அங்க கட்டி கொடுக்கிறதுக்கு, பேசாம நீங்களே கிணத்துல பிடிச்சு தள்ளி விட்டுடலாம்.” என முனங்கிக்கொண்டே சென்றாள் சங்கமித்ரா.


அங்கே ஒருவன் இவளை திருமணம் செய்யப் போராட, சங்கமித்ராவோ, அதற்கு நான் கிணற்றிலேயே குதித்து விடுவேன் என்கிறாள். ஆரம்பமே இருவரும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள்.

 











Advertisement