Advertisement

பனி சிந்தும் சூரியன்

 

இறுதி அத்தியாயம் 2



மூன்று வருடங்கள் கழித்து…


அன்று மமதியின் திருமணம். அகிலா திருமணம் போலப் பிரம்மாண்டமாகச் செய்தனர். வீட்டின் தலைமகனாக ராம் அங்கும் இங்கும் பரபரப்பாகச் சுற்றி வந்தவர்களைக் கவனிக்க, அவனுக்கு ஈடாக மனிஷும் சுழன்றான்.


கார்த்திக் அகிலா தங்கள் மகன் சஞ்சையோடும், அவனினாஷ் சோனா தங்கள் மகள் ஸ்ருதியோடும், வரவேற்பில் நின்று வந்தவர்களை வரவேற்றனர்.


ஸ்வர்ணா உள்ளே சேரில் உட்கார்ந்து, ராம் அபர்ணாவின் அடுத்த வாரிசான ஒரு வயதான புலிக் குட்டியை தூங்க வைத்துக் கொண்டு இருந்தார். குட்டி நிலவுக்குக் கை கால் முளைத்தது போல, பட்டுப்பாவாடை சட்டையில் அவ்வளவு அழகாக இருந்தாள் வர்ஷினி பாப்பா.


காயத்திரி, சுமா, சுகன்யா மூவரும் உட்கார்ந்து அரட்டை அடிக்க, அவர்களிடம் வந்த சுஜா, “என்ன பொண்ணு கல்யாணத்தை வச்சிக்கிட்டு. இப்படி உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க.” எனக் கிண்டலாகக் கேட்க,


“எங்களுக்கு என்ன வேலை இருக்கு. பொறுப்பான பிள்ளைகளைப் பெத்திருக்கோம். அதோட எங்க மருமகள் இருக்கா… எங்க சார்பா எல்லாம் அவ பார்த்துப்பா.” என்றனர், மேடையில் மமதியோடு இருந்த அபர்ணாவை காட்டி. கேட்ட சுஜாவுக்கும் சந்தோஷம்தான்.


இள ரோஜா வர்ண பட்டுப் புடவையில், உடலில் வைரங்கள் ஜொலிக்க, அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், அபர்ணாவின் முகம் சந்தோஷத்தில் மிளிர்ந்தது.


இருக்காதா என்ன? தடை கற்களைப் படிக்கற்களாய் மாற்றி, மனம் விரும்பியவனையே மனம் முடித்து, விலகி நின்ற மாமியாரையும் அரவணைத்து, நாத்தனாருக்கும் நல்லது செய்து, மகிழ்வான இல்லறத்தின் அடையாளமாக இரண்டு முத்துக்களையும் பெற்று, இதையெல்லாம் விட என் பொண்டாட்டி சொன்னா அப்பீலே இல்லை என இருக்கும் கணவன் வேறு… பிறகு சொல்லவா வேண்டும்.


மனம் மகிழ்ச்சியில் இருந்தால்… அது முகத்திலும் தெரியும் அல்லவா?


“அண்ணா, நீங்களும் அண்ணியும் தான் மமதியோட அவங்க வீட்டுக்குப் போகணுமாம். பெரிய சித்தி சொல்ல சொன்னாங்க.” என வந்து நின்ற அஞ்சலியிடம், “சரி நாங்க போயிட்டு வரோம். உன் அண்ணியை வர சொல்லு.” என்றான் ராம்.


என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? மேகா திருமணத்தில், அஞ்சலி யாரிடமும் பேசாமல் ஒதுங்கி இருந்தாள். அவளைக் கவனித்த அபர்ணா, “நீங்க அவகிட்ட பேசுங்க ராம். நீங்க சொன்னா அவ கேட்பா.” என்றாள்.


“அன்னைக்குக் கூட ஹோட்டலுக்கு, நீங்க என்னையும் கூடக் கூடிட்டு வந்ததுதான் அவளுக்குக் கோபம். நீங்க மட்டும் போய்ப் பேசி இருந்தா, அப்பவே சரி ஆகி இருப்பான்னு தோணுது”


மருமகள் சொன்னதை ஸ்வர்ணாவும் ஆதரித்தார். “சின்னப் பொண்ணு டா… நாளைக்கு அவ கஷ்ட்டபட்டா… நமக்குச் சந்தோஷமாவா இருக்கும்.” என்றார்.


அஞ்சலி நீலிமாவின் அருகே உட்கார்ந்து இருந்தாள். அங்கே சென்ற அபர்ணா “வா, உங்க அண்ணன் உன்கிட்ட பேசணுமாம்.” எனச் சொல்லித்தான் அஞ்சலியை அழைத்து வந்தாள்.


ராம் அஞ்சலியிடம், “வா… வெளிய போய்ப் பேசுவோம்.” என்றான். இருவரும் மண்டபத்தை விட்டு வெளியே நடந்தனர்.

“ஏன் அஞ்சலி இப்படிப் பண்ற? அந்த உமேஷ் நல்லவனே கிடையாது. அவங்க பண்றது எல்லாம் இல்லீகல் பிஸ்னஸ். அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா நாளைக்கு நீதான் கஷ்ட்டபடுவ.”


“எனக்குத் தெரியும் அண்ணா. ஆனா நான் அவனை லவ் பண்றேன்னு சொல்லிட்டேன், அதோட அன்னைக்கு ஹோட்டல் வேற போனேன். இதெல்லாம் நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணா பிரச்சனை ஆகாதா?”


“அதுக்காகத் தெரிஞ்சே பாழும் கிணத்துல விழுவியா? இப்ப உனக்கு என்ன வயசு ஆகிடுச்சுக் கல்யாணம் பண்ண? இன்னும் நாலு வருஷம் கழிச்சுப் பண்ணிக்கலாம். நீ மேல படி.” என்றான்.


“நீங்க இருப்பீங்களா அண்ணா எனக்கு. இருப்பேன்னு சொல்லுங்க, நான் உங்க பேச்சு கேட்கிறேன்.”


“எப்ப எங்க அம்மா ஒரு முடிவு எடுத்தாங்களோ… அப்ப நமக்குள்ள இருந்த போராட்டம் முடிஞ்சிடுச்சு அஞ்சலி. இனி அப்பாங்கிற ஒருத்தர் எங்களுக்கு இல்லை. அதனால அவர் யார் கூட இருந்தாலும், எங்களுக்குக் கவலையும் இல்லை.”


“உன் மேல எப்பவுமே எங்களுக்குக் கோபம் இல்லை. இப்ப என்ன நான் உனக்கு இருக்கேன்னு சொல்லணும் அவ்வளவுதானே. அண்ணன் நான் உனக்கு இருக்கேன், ஓகே வா.” என்றான்.


அஞ்சலிக்குச் சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது. “தேங்க்ஸ் அண்ணா.” என்றாள் புன்னகையுடன்.


“நீ கவலைப்படாதே, உனக்குப் பார்க்கிற மாப்பிள்ளைகிட்ட, நானே எல்லாத்தையும் பக்குவமா சொல்லிடுறேன். ஆனா அது இப்ப இல்லை. நாலு வருஷம் கழிச்சுதான்.”


“நீ இந்த ஊர்ல இருக்க வேண்டாம். வெளிநாட்டில போய்ப் படி. உங்க அபர்ணா அண்ணி மாதிரி திறமையான பொண்ணா திரும்பி வா.” என்றான்.


அஞ்சலி சம்மதிக்க, அவளிடம் இருந்து செல்லை வாங்கியவன், “உன்கிட்ட வேற செல் இருக்கா? என்றான்.


அவள் இல்லை என்று சொல்ல, அதிலிருந்த சிம் கார்டை எடுத்து விட்டு, அந்த விலை உயர்ந்த கைப்பேசியை, அலட்சியமாக அங்கிருந்த பெரிய சாக்கடையில் வீசினான்.


“உன் நம்பர் ப்ளாக் பண்ண சொல்லிடுவேன். உனக்கு உமேஷோட எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. உனக்கு இங்க இருக்கிற ப்ரண்ட்ஸ் யாரும் வேண்டாம். நான் அவனைப் பார்த்துகிறேன்.” என்றான்.


ப்ரகாஷ் நீலீமா ஒரே வீட்டில் வசித்தாலும், இப்போது இருவருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. ப்ரகாஷ் தவற விட்ட சொந்தங்களை நினைத்து இப்போது வருந்த, நீலீமா இனிமேலும் பிரகாஷை நம்பி இருக்காமல்… தனது சொந்தக் காலில் நிற்பது என முடிவு செய்து கொண்டாள். சொந்தமாகப் பொட்டிக் வைத்து நடத்துகிறாள்.


சொத்துக்கள் வேண்டாம் என ஸ்வர்ணா சொன்னாலும், அகிலாண்டேஸ்வரி அப்படியே விட்டு விடுவாரா? பிரகாஷை அழைத்து, அவரிடம் இருந்து உயில் எழுதி வாங்கிக் கொண்டார். சொத்தை அவரது மூன்று பிள்ளைகளுக்கும் சமமாகக் கொடுத்திருந்தார். நீலீமா பெயரில் உள்ள சொத்துக்கள் அவளுக்கே…. ஸ்வர்ணா கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார் எனத் தெரியும்.


அதன்பிறகு அஞ்சலி படிக்க வெளிநாடு சென்றுவிட்டாள். ராம் என்ன செய்தானோ அவளுக்குத் தெரியாது. ஆனால் உமேஷ் தொல்லை, இப்போது அவளுக்கு இல்லை. அண்ணன் தன்னைப் பார்த்துக் பெருமைக் கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும் எனப் படிப்பில் கவனம் செலுத்துகிறாள். இப்போது மமதியின் திருமனத்திற்காக வந்திருக்கிறாள்.


“என்னங்க என்னைக் கூப்பிட்டீங்களா?” என வந்து நின்ற அபர்ணாவை, ராம் ஏற இறங்க பார்த்தான், அவளின் நிறத்திற்கும் புடவையின் நிறத்திற்கும் வித்தியாசமே தெரியவில்லை. ரோஜா பூவைப் போலவே அவளும் இருந்தாள்.

அவளைப் பார்த்ததும் எதற்கு அவளை வர சொன்னான் என்பதை  மறந்துவிட்டு, அவளை ரசித்துக் கொண்டு இருந்தான். அப்போது அங்கே கார்த்திக் வர, “டேய் மாப்பிள்ளை, இன்னைக்கு நைட் நீ நம்ப வீட்டுக்கு வந்திடு.” என்றான் அவனிடம்.

“ஏன்?”

“வந்தா நீ பசங்களை நைட் பார்த்துப்ப….எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்றான்.

“அப்ப எனக்கு மட்டும் வேலை இல்லையா… நான் ஏற்கனவே பின்னாடி இருக்கேன். சீக்கிரம் அடுத்த குழந்தை பெத்துக்கணும்.” கார்த்திக்கின் வருத்தம் பார்த்து, ராம் அபர்ணா இருவருக்கும் சிரிப்பு பொங்கியது.

“போதும் உங்க விளையாட்டு, என்னை எதுக்கு வர சொன்னீங்க?” அபர்ணா ராமிடம் கேட்க,


“நாம ரெண்டு பேரும் மமதி வீட்டுக்கு போகனுமாமே?” என்றான்.


“ஆமாம், ஆனா அதுக்கு இன்னும் டைம் இருக்கு. வாங்க முதல்ல நாம மமதியோட போட்டோ எடுத்துக்கலாம்.” எனக் கணவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.


திருமணத் தம்பதிகளுடன் புகைப்படம் எடுத்ததும், ராம்மும் அபர்ணாவும் மட்டும் தனிப் படங்கள் எடுக்க, வழக்கம் போல அபர்ணாவை தள்ளிவிட்டு வந்து நின்றது தங்கைகள் படை… அதில் இப்போது அஞ்சலியும் சேர்ந்து கொள்ள…


“எங்க அண்ணாவோட நாங்கதான் இருப்போம்.” என்றனர்.


“போட்டோ தான எடுத்துக்கோங்க.” என அபர்ணா விட்டுக் கொடுத்து செல்ல, மற்றவர்கள் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.


தன் கணவன் தன் மீது கொண்டுள்ள அன்பில் சந்தேகம் இருந்தால் தானே, மற்றவர் மீது பொறாமை ஏற்படும். எத்தனை பேர் இருந்தாலும், அவனுக்குத் தான் தனி என அவளுக்குத் தெரியாதா…. அவள் நினைத்தது போலவே, அவளைத் தேடி வந்த ராம், “கோபமா டா… நாம அப்புறம் வீட்ல போய், நாம ரெண்டு பேர் மட்டும் எடுப்போம்.” என்றவன், “வர்ஷினி அம்மாகிட்ட இருக்கா… இந்த ரிஷி எங்க ஆளைக் காணோம்.” என்றான்.


“அவன் எங்க அப்பாகிட்ட இருந்தான். நான் போய்ப் பார்கிறேன்.” என அபர்ணா சென்றாள்.


ரிஷி ஸ்ரீகாந்திடம் இல்லை. “எங்கப்பா ரிஷி?” அபர்ணா கேட்டதும், ஸ்ரீகாந்த, “உன் வீட்டுக்காரரோட அத்தை பிரவீணா வந்து தூக்கிட்டு போனாங்க மா.”என்றார்.


“ப்ராவீணாவுக்கு என்ன ரிஷி மீது பாசம்?” என நினைத்தவள், சந்தேகம் வந்து, விறுவிறுவென மாடிக்கு சென்றாள். பிரவீணா இன்னும் அப்படியேதான் இருக்கிறார், அதே போல, இவர்கள் யாரும் அவரை மதிப்பதும் இல்லை.

அபர்ணா சந்தேகப்பட்டது போல….அங்கே ஹாலில் ரிஷியை வைத்துக் கொண்டு ப்ரகாஷ் நின்றிருந்தார்.


தள்ளி நின்றே அபர்ணா ரிஷி என அழைக்க, ரிஷி அவளைப் பார்த்ததும் பிரகாஷிடம் இருந்து இறங்கி அவளிடம் வந்துவிட்டான்.


அபர்ணா அவனைத் தூக்கிக் கொண்டு திரும்பி நடக்க, “அம்மா, அந்தத் தாத்தா சாக்லேட் வாங்க கொடுத்தாங்க.” எனத் தன் சட்டை பாக்கட்டை காட்டினான்.


எல்லாம் இரண்டாயிரம் தாள்கள், அபர்ணாவுக்குச் மிகக் கோபம். திரும்பி பிரகாஷிடம் சென்றவள், பணத்தை அவரிடம் கொடுத்தாள்.


“அபர்ணா, நீ சொன்னா ராம் கேட்பான். என்னையும் சேர்த்துக்கச் சொல்லேன்.” என்றார்.


“ஏன் சொல்லணும்?” என அபர்ணா திருப்பிக் கேட்டாள்.


“நீங்க எதோ ட்ரைன்ல ஸ்டேஷன் வந்ததும் இறங்கி போற சக பயணி மாதிரி… உங்களுக்குப் பிடிச்ச ஸ்டேஷன் வந்ததும் போயிட்டீங்க. இப்ப நீங்க திரும்பி வந்து ஏறிக்க, இது ரயில் பயணம் இல்லை வாழ்க்கை பயணம்.”


“இதுல மத்த உறவுகள் வேணா நடுவில விட்டுட்டுப் போகலாம்…. ஆனா புருஷன் பொண்டாட்டினா சாகிற வரை சேர்ந்து இருக்கணும்.”


“அதுவும் உங்களுக்கும் அத்தைக்கும் பிரச்சனை, ஒத்துவரலைன்னா கூடப் பரவாயில்லை. உங்களுக்கு வேற ஒருத்தரை பிடிச்சிருந்ததுனால இவங்களை விட்டு போய் இருக்கீங்க. அப்ப உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்திருக்கணும்?”


“பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரம் என்ன? உங்க இஷ்ட்டத்துக்குப் போவீங்க. அப்புறம் உங்க இஷ்ட்டத்துக்குத் திரும்பி வருவீங்க. நீங்க திரும்பி வரும்போது அவங்க சேர்த்துக்கனுமா?”


“உங்களைத் திரும்பச் சேர்த்துகிட்டா, ஸ்வர்ணா அத்தை பட்ட கஷ்ட்டம் எல்லாம் இல்லாம போய்டுமா.. இல்லை அவங்க இழந்த சந்தோஷத்தை எல்லாம் திருப்பித் தருமா?”


“இல்லையில்ல… அப்புறம் நீங்க எதுக்கு எங்களுக்கு? நீங்க ஆடி முடிச்சு வயசான பிறகு திரும்பி வருவீங்க. உங்களால வாழ்க்கையைத் தொலைச்சவங்க, ஆரத்தி எடுத்து உங்களைச் சேர்த்துக்கனும்ன்னு வேற எதிர்பார்ப்பீங்களா?”


“உங்களை உங்க பிள்ளை அடிக்காம விட்டிருக்காறேன்னு வேணா சந்தோஷப்படுங்க.”


“இந்த மாதிரி என் பிள்ளைக்குக் காசு கொடுத்து, இன்னொரு முறை உங்க பக்கம் இழுக்கப் பார்த்தீங்க, அவ்வளவுதான்.” என்றவள், திரும்பி படிக்கட்டை நோக்கி செல்ல, அங்கே ராம் நின்றிருந்தான்.


அவன்தானே ரிஷியை காணவில்லை என அபர்ணாவிடம் சொன்னான். அவள் பிள்ளையைத் தேடி மாடிக்கு செல்வதைப் பார்த்து, அவனும் அவள் பின்னே வந்திருந்தான். அதனால் நடந்த எல்லாவற்றையும் பார்த்தும் இருந்தான்.


அவனைப் பார்த்ததும், ரிஷி அவனிடம் தாவியவன், “தாத்தா.” என்றான் பிரகாஷை காட்டி.


“உன்னோட தாத்தா எப்பவோ செத்து போயிட்டார் டா… நீ போற வர்றவங்களை எல்லாம் தாத்தான்னு சொல்லாத.” என மகனிடம் நறுக்கென்று சொல்லியே அழைத்துச் சென்றான்.


பிரகாஷிற்கு நன்றாக உரைக்க வேண்டும் என்றே அபர்ணா அப்படிப் பேசினாள். அதுவும் ராம் வேறு அப்படிச் சொன்னதும், இனி தன் எண்ணம் ஒரு நாளும் நிறைவேறாது, தான் தொலைத்த உறவுகள் தொலைத்தது தான் எனப் பிரகாஷிற்குப் புரிந்தது.


ஆறு மாதங்கள் சென்று…


தமிழக அரசின் சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில், இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட பாதிகப்பட்ட பெண்களின் வாழ்க்கையைச் சீரமைத்து, அவர்கள் தங்கள் சொந்த காலில் நிற்க உதவிய ஸ்வர்ணாம்பிகைக்கு, தமிழகத்தின் சிறந்த பெண்மணி விருது வழங்கப்பட்டது.


அவர் பெயர் அறிவிக்கப்பட்டு, அவர் மேடை ஏறி விருந்து வாங்கும் போது, பின் இருக்கையில் இருந்த ராம், அகிலா, கார்த்திக் மூவரும் எழுந்து நின்று கை தட்ட, கூட்டத்தைப் பார்த்து அழுத மகளைக் கையில் வைத்துக் கொண்டு கதவருகில் நின்ற அபர்ணா, பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் ஸ்வர்ணாவுக்கு வழிதான் காட்டினள். தான் இனி போக வேண்டிய பாதையை அமைத்துக் கொண்டவர் அவரே… அதுவும் வெகு சிரத்தையாகப் பணி செய்தார். இந்த விருதுக்கு அவர் முழுவதும் தகுதி ஆனவரே.


விழா முடிந்து அனைவரும் சந்தோஷமாக வீடு திரும்பினர்.


“நீ என்ன பண்ணப்போற அபர்ணா? உனக்குன்னு ஒரு அடையாலம் வேண்டாமா?” ராம் கேட்க,


எத்தனை கணவர்கள் இப்படி மனைவியிடம் கேட்பார்கள்? அபர்ணாவுக்குத் தன்னவனை நினைத்துப் பெருமையாக இருந்தது. திறமையான பெண்களையும் கூட வீட்டில் அடக்கி வைக்க முனைபவர்களே அதிகம், இந்த நாட்டில். அப்படி இருக்க, தன்னிடம் அவன் இப்படிக் கேட்பது மகிழ்ச்சியாக இருந்தது.


“தனியா ஒரு அடையாலம் இருக்கனும்ன்னு கட்டாயம் இல்லை ராம். என்னோட அடையாலம் நீங்க, அப்புறம் நம்மோட குடும்பம் தான். நீங்க பிஸியா இருக்கீங்க. அத்தையும் பிஸியா இருக்காங்க. என்னால குழந்தைகளை வேற யார் கிட்டயும் விட முடியாது. அவங்களை நாம நல்லா வளர்க்கணும்.”


“அவங்க எல்லாம் வளரட்டும், பிறகு பார்க்கலாம். எனக்கும் ஒரு நேரம் வரும். ஏன் உங்க அம்மா அறுபது வயசுல சாதிக்கலையா.. நானும் கொஞ்சம் மெதுவாவே வரேன். எல்லோரும் ஒரே நேரத்தில ஒடனும்ன்னு அவசியம் இல்லை.”


அபர்ணா தெளிவாக இருந்தாள். கண்டிப்பாகப் பிற்காலத்தில் அவள் பல உயரங்களை எட்டுவாள். ராம் அவளது விருப்பத்திற்கே விட்டான்.


அபர்ணாவின் பெற்றோர் இப்போது அருண் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், அவனோடு இருக்கிறார்கள். அங்கே ஆறு மாதம், இங்கே சென்னை வீட்டில் ஆறு மாதங்கள் என இருக்கிறார்கள்.


அபர்ணா தன் குழந்தைகளுக்குச் சமமாகப் பேசி, சிரித்து, சாப்பிட்டு, விளையாடி என அவர்கள் உலகத்தை ஆனந்தமாக வைத்துகொண்டாள். அப்பா நம்மோட அதிக நேரம் இருப்பது இல்லை என்ற குறை தெரியாமல் ராம்மும் பார்த்துக் கொண்டான்.


சிறிது நாட்கள் ஓய்வு கிடைத்தாலும், குடும்பமாகச் சின்னச் சுற்றுலா சென்று விடுவார்கள். குடும்பம் என்றால் அதில் கார்த்திக் அகிலா மற்றும் அவர்கள் குழந்தையும் சேர்த்துதான். மற்ற உறவுகளுக்கும் கொடுக்க வேண்டிய நேரத்தை கொடுத்தனர்.


குழந்தைகளை ஆடம்பரமாக வாழவைக்கப் பணம் செலவு செய்வதை விட… அவர்களோடு நேரத்தை செலவு செய்தால்… அவர்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை இருவருமே புரிந்து வைத்து இருந்தனர். அதே நேரத்தில் தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தையும் விட்டு விட மாட்டார்கள்.

 

திருமணமான புதிதில் எப்படி காதலித்தார்களோ… இப்போதும் அப்படியே தான் இருக்கிறார்கள்.

 

மொத்தத்தில் ராம் அபர்ணா இருவரும் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகத் தங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தார்கள். இனியும் அப்படியே வாழ்வார்கள்.

Advertisement