Advertisement

பனி சிந்தும் சூரியன்

 

அத்தியாயம் 9

திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில், சோனாவின் புகுந்த வீட்டினர் ஏற்கனவே லண்டன் சென்றிருக்க, புதுமன தம்பதிகள் மட்டும் இன்னும் ஒரு வாரம் சென்று செல்வதாக இருந்தது.


ராம், தங்கையைப் பார்த்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் பாட்டி வீட்டிற்குச் வந்தான்.


மாலை நேரம் இரண்டாவது தளத்தில் இருந்த ஹாலில் சோனா அமர்ந்து இருந்தாள். அவள் கணவன் நண்பர்களைப் பார்க்க செல்வதாகச் சொல்லி சற்று முன்னர்தான் கிளம்பி சென்று இருந்தான்.


ராம் வந்ததைக் கூடக் கவனிக்காமல், சோனா தனக்கு வந்த திருமணப் பரிசுகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். சற்று நேரம் காத்திருந்தவன், தங்கை தன்னைக் கவனிக்கும் வழியில்லை என்பதை அறிந்து, அவள் தோளில் தட்டிவிட்டு, அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.


“ஹாய் அண்ணா, எப்ப வந்தீங்க?”


“நான் வந்தது இருக்கட்டும், ஆமாம் நீ என்ன அப்படிப் பார்த்திட்டு இருக்க?”


“நீங்க சரியான நேரத்துக்குதான் வந்திருக்கீங்க. இதைக் கொஞ்சம் பாருங்க.” எனச் சோனா கொடுத்தை வாங்கிப் பார்த்த ராம், “சூப்பரா இருக்கு.” என்றான்.

சிவப்பு நிறத்தில் அழகாக வடிவமைக்கபட்டிருந்த வின்ட் சிமீஸ். ஒவ்வொரு வட்டமான சட்டத்திலும் சோனாவின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தது. அவள் தனியாக இருக்கும் படங்கள், அவினஷோடு சேர்ந்து இருபது, அவள் பெற்றோரோடு மற்றும் திருமணப் படங்கள் என இருபக்கத்திலும் இருக்க… கடைசியாகக் கீழே அழகான சின்ன மணிகள் கோர்க்கப்பட்டிருந்தது.


ராம் சோபாவின் மீது ஏறி நின்று, சீலிங்கில் இருந்த ஹூக்கில் அதை மாட்டி விட, காற்றுக்கு அது இடது பக்கம் வலது பக்கம் எனச் சுற்றும் போது, புகைப்படங்களும் அழகாகச் சுழல… அதோடு கோர்க்கப்பட்டிருந்த மணியில் இருந்து மெல்லிய சத்தமும் வந்தது.


“நல்லா இருக்கு இல்லைணா”


“ம்ம்… யாரு கொடுத்தது.” ராம் கேட்க, சோனா உடனே பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.


ராம் மீண்டும் சோபாவில் அமர, இண்டர்காமில் அவனுக்கு டீயும், நொறுக்கு தீனிகளும் கொண்டு வர சொன்னவள், அவன் எதிரில் அமர்ந்து, “எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சவங்கதான்.” என்றாள்.


“எனக்குத் தெரிஞ்சவங்க நிறையப் பேர் இருக்காங்க. நீ யாரை சொல்ற, தெரியலையே..”


சோனா பதில் சொல்லாமல் ஒரு மாதிரி புன்னகைக்க… ராம் யோசித்தவன், “அபர்ணா.” என்றான் சரியாக.


“ம்ம்.. ஆமாம். அவளே செஞ்சது.”


“நல்லா இருக்கு. அப்புறம் எங்க அவினாஷ்?”


“பேச்சை மாத்துறீங்க அண்ணா.” சோனா சொல்லும்போதே, காபி மற்றும் நொறுக்குத் தீனிகளுடன் பணியாளர் வர…. நொறுக்கு தீனிகளை ஒதுக்கிவிட்டு, டீயை மட்டும் எடுத்துக் கொண்டான்.


சிறிது நேரம் அண்ணன் முகத்தைப் பார்த்தவள், அவன் முன்பு கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னாள்.


“அவினாஷ் ப்ரண்ட்ஸ் பார்க்க போயிருக்காங்க.”


“ஓகே… அப்புறம் என்ன ப்ளான்?”


“அபர்ணாவை பார்க்க போகலாம்ன்னு இருக்கேன்.”


“ஓ…”


“உங்களுக்கு எல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு அவ நல்ல ப்ரண்ட். அவளைப் பார்க்கணும், அப்புறம் இந்தக் கிபிட்டுக்காக அவளுக்கு நன்றி சொல்லணும்.”


“வைர நெக்லஸ் கொடுத்திருந்தா கூட, நீ இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்ட போலிருக்கே…”


“கண்டிப்பா… எவ்வளவு யோசிச்சு பண்ணி இருக்கா. … லண்டன் எடுத்திட்டு போகப்போறேன்.”


“நல்லா யோசிச்சு சொல்லு… வைர நகை பார்த்தாலும் சந்தோஷப்பட மாட்டியா.” ராம் புன்னகைத்தபடி புருவத்தை உயர்த்திக் கேட்க,


“என் அண்ணன் கொடுத்தா சந்தோஷப்படுவேன்.” என்றவள் கை நீட்ட, தன் சட்டைக்குள் வைத்திருந்த நகை டப்பாவை எடுத்துச் சோனாவிடம் கொடுத்தான்.
வைரக்கற்கள் பதித்த டிசைனர் நெக்லஸ். அதற்குப் பொருத்தமான காதணி, மோதிரம், ப்ரேஸ்லெட் எல்லாமே இருந்தது.


“அழகா இருக்கு.” என்றாள் நகையை ரசித்துப் பார்த்தபடி.


“உனக்கு என்ன கிபிட் கொடுக்கிறதுன்னு தெரியலை…. உன்கிட்ட நிறைய வைர நகை இருக்கு தெரியும். இருந்தாலும் இதே வாங்கிட்டேன்.”


“என்கிட்டே இந்த டிஸைன் இல்லை. அம்மா சொன்னா கேட்காம எல்லாமே பெரிசுதான் வாங்கினாங்க. எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு.” எனத் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசியவளை பார்த்து ராம் புன்னகைத்தான்.


“சரி நான் கிளம்பட்டுமா.”


“இருங்க நானும் உங்களோட வரேன். என்னைக் கொஞ்சம் நான் சொல்ற இடத்தில விட்டுடுங்க.”


“எங்கப் போற?”


“வந்து சொல்றேன். எனக்கு அஞ்சு நிமிஷம் கொடுங்க.” என்றவள், தன் அறைக்குச் செல்ல, அதற்குள் பாட்டியை பார்த்து விடலாம் என ராம் அவரது அறைக்குச் சென்றான்.


அவன் பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்த போது, சோனா வேறு உடை மாற்றி, ராம் கொடுத்த நகைகளை அணிந்துகொண்டு வந்தாள்.


“பாட்டி, அண்ணா வாங்கிக் கொடுத்தாங்க. நல்லா இருக்கா.”


“நல்லா இருக்கு. ஆனா நீ இவளுக்கு எதுக்கு நகை வாங்கின கண்ணா. ஏற்கனவே இவ அம்மா வாங்கிக் குமிச்சு வச்சிருக்கா. இவளுக்கு அது போதாதா…” என அகிலாண்டேஸ்வரி சொல்ல, இடுப்பில் கைவைத்து அவரை முறைத்தவள், “எங்க அண்ணன் எனக்கு வாங்கிக் கொடுத்தா உங்களுக்கு என்ன?” எனச் சண்டைக்குச் சென்றாள்.


“அவ கேட்கிறதுல என்ன தப்பு பாட்டி.” என ராம் தங்கைக்குப் பரிந்து பேச… பாட்டி இருவரையும் பார்த்து சிரித்தார்.


“வாங்க அண்ணா போகலாம்.” எனச் சோனா ராம்மின் கைபிடித்து இழுக்க…


“எங்க டி போற?” பாட்டி கேட்டதற்கு, சோனா மழுப்பலாகப் பதில் சொல்லிவிட்டு வந்தாள்.


காரில் ஏறிய பின் அவள் பக்கம் திரும்பிய ராம். “நீ இப்ப அபர்ணா வீட்டுக்கு தான போற.” என்றான்.


“ஆமாம்… இன்னைக்குதான் அவினாஷ் இல்லை ப்ரீயா இருக்கேன், அவளைப் பார்த்திட்டு வந்திடுறேன்.”


“நீ வர்றது அவளுக்குத் தெரியுமா?”


“இந்த வாரத்துல ஒருநாள் வருவேன்னு சொன்னேன். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வீட்லதான் இருப்பாளாம்.”


அதற்கு மேல் ராம் எதுவும் கேட்கவில்லை. சோனாதான் பேசிக்கொண்டே வந்தாள். பேச்சுச் சுவாரஸ்யத்தில் அவள் அபர்ணாவின் விலாசம் சொல்ல மறந்தாள். அவனும் அதைக் கேட்கவில்லை அதுதான் ஆச்சர்யம்.


ராம் சாலையின் ஓரம் காரை நிறுத்தியவன், அங்கிருந்த பெரிய அபார்ட்மெண்ட்டை காட்டி, அந்த அபார்ட்மெண்ட்ல தான் வீடு என்றான்.
சோனா காரில் இருந்து இறங்காமல், ராம்மையே பார்க்க, எதற்கு அப்படிப் பார்க்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை.


“நான் உங்ககிட்ட அட்ரெஸ் சொல்லலை. ஆனா உங்களுக்கு எப்படி அவ இங்கதான் இருக்கான்னு தெரியும்.” சோனா சந்தேகமாகக் கேட்க,


“ரெண்டு நாள் முன்னாடி, நைட் இந்தப்பக்கம் வந்தேன். அப்ப அவ இந்த அபார்ட்மெண்ட் உள்ள போறது பார்த்தேன். அதனால்தான் தெரியும். நீ ரொம்ப உன் கற்பனை குதிரையை ஓட்டாம இறங்கு.” என்றான்.


சோனா இன்னும் சந்தேகமாகவே பார்த்தபடி இறங்க, “என்ன?” எனக் கேட்டான்.


“பிளட் நம்பர் என்ன?”


“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ அவளுக்குப் போன் பண்ணி கேளு…இல்லைனா அந்தச் செக்யூரிட்டிகிட்ட கேளு, இந்நேரம் எப்படியும் அவனை ப்ரண்ட் பிடிச்சிருப்பா.” என்றான்.


“உங்களுத்தான் அவளைப் பத்தி நல்லா தெரியுது.”


“சரியான லொட லொட கேஸ்.”


“அவகிட்ட சொல்றேன் இருங்க.” என்றவள், தங்களையே பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டியிடம், “புதுசா வந்திருக்காங்களே அபர்ணா…” என அவள் கேட்டுக் கூட முடிக்கவில்லை.


“அந்த மேடம் டி பிளாக், ஐநூத்தி ஒண்ணுல இருக்காங்க.” என்றான் பயபக்தியுடன். சோனா ராம்மை பார்க்க, நான் சொன்னேன் பார்த்தியா என்பது போலச் சிரித்தவன், “நைட் தனியா போகாத… வீட்ல இருந்து யாரையாவது வர சொல்லி போ.” என்றான்.


“நீங்களே வர்றீங்களா?”


சோனா சட்டென்று கேட்டு விட, ஒரு கணம் மெளனமாக இருந்தவன், “வேண்டாம், நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்காம இருக்கிறது. எங்க ரெண்டு பேருக்குமே நல்லது.” சொல்லிவிட்டு, அவன் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.


சோனா திடிரென்று வந்து நின்றதும், அபர்ணாவுக்குத் தலை கால் புரியவில்லை. வருவதற்கு முன் கண்டிப்பாகப் போன் செய்வாள் என எதிர்பார்த்தாள்.


“ஹே… சோனா, வா வா…பாட்டி இங்க வந்து பாருங்க, என்னோட ப்ரண்ட் வந்திருக்கா.” என அவள் சத்தமாகச் சொல்ல, சமையல் அறையில் இருந்து, அவள் பாட்டி வெளியே வந்தார்.


“வா மா…” என்றவர், அங்கிருந்த திவானில் அவளை உட்கார சொன்னார். அபர்ணா அங்கிருந்த பீன் பேகில் அமர்ந்து கொண்டாள்.


“அப்புறம் புதுக் கல்யாண பொண்ணு எப்படி இருக்கச் சொல்லு?”


“ரொம்ப நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?”


“நான் சூப்பரா இருக்கேன்.”


“வீடு எல்லாம் செட்டில் ஆகிடுச்சு போலிருக்கு.” என்றபடி சோனா கண்களால் வீட்டை அளந்தாள். பெரிய வீடுதான். ஹால் டைனிங் ஹால் எனத் தனித்தனியாக இருந்தது. அபர்ணா அவளது ரசனைக்கு ஏற்ப ஹாலை அலங்கரித்து இருந்தாள்.


“பார்த்தியா வீட்டை என்ன பாடு படுத்தி இருக்கான்னு. அவ அம்மா வந்து பார்த்தா திட்டுவா..” என்றபடி வந்த பாட்டியின் கைகளில் பழ சாறு இருந்தது.


புன்னகையுடன் பழசாரை வாங்கிப் பருகிய சோனா, “உனக்கு எப்படி இப்படி எல்லாம் தோணுது.” என அபர்ணாவை பார்த்து கேட்க,


“ஒரு நிமிஷம் இரு வரேன்.” என்றவள் எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு, “இப்ப பாரு.” என்றாள்.


வெளிச்சத்தில் பார்ப்பதை விட இருட்டில் பார்க்கும் போது, நிஜமாகவே வெகுவாகக் கண்களைக் கவரும் விதத்தில் இருந்தது.


“வாவ்…. சூப்பரா இருக்கு.” என்றாள் சோனா.


மீண்டும் விளக்கை போட்டுவிட்டு வந்து அபர்ணா அமர்ந்தாள். பாட்டி மீண்டும் சமையல் அறைக்குள் சென்று விட்டார்.


“நீ இதெல்லாம் ரொம்ப நல்லா பண்ற. எனக்குக் குடுத்தியே கல்யாண கிப்ட், செமையா இருந்துச்சு.”


“உனக்கு மத்தவங்க தங்கமும், வைரமும் கொடுத்திருப்பாங்க. நான் அவங்களோட போட்டி போட முடியுமா… எதோ என்னால முடிஞ்சது.” அபர்ணா அடக்கமாகப் பேச….


அவள் விளையாட்டுக்கு பேசிகிறாள் என்பது தெரியாது, மெய்யாகவே அவள் வருந்துவதாக நினைத்து, “என்ன அப்படிச் சொல்ற அபர்ணா? ராம் அண்ணா கூடச் சொன்னாங்க தெரியுமா… உன்னோட இந்தக் கிபிட் முன்னாடி, எனக்கு வைர நகை கூடப் பெரிசா தெரியாதுன்னு.” எனப் பேச்சு வாக்கில் சொல்லி விட்டாள்.


ராம்மின் பெயர் வந்ததும், சற்று நேரம் இருவருமே மௌனமாகி விட்டனர். பிறகு அபர்ணாவே ஆரம்பித்தாள்.


“அப்புறம் எப்படி இருக்கார் உங்க அண்ணா? ரிடையரான மிலிட்டரி ஆபீசர் மாதிரி எப்பவும் விரைப்பா இருப்பாரே… இப்பவும் அப்படித்தான் இருக்காரா?”


அபர்ணா கேட்டதில் சோனாவுக்குக் கோபம் வர… “எங்க அண்ணாவை எப்படி அப்படிச் சொல்லலாம் நீ? எவ்வளவு தைரியம் உனக்கு?” அவள் கேட்கும் போதே …


“அப்புறம் உங்க வீட்ல ஒரு ஹாஸ்டல் வார்டன் இருப்பாங்களே… எப்ப பாரு ரூல்ஸ் பேசிட்டு… அவங்க எப்படி இருக்காங்க?” என அபர்ணா அடுத்தக் கேள்வி கேட்க,


‘ஹாஸ்டல் வார்டன் யாரு?’ என யோசித்த சோனா, “எங்க பாட்டியை சொல்றியா நீ… உனக்கு அவங்க ஹாஸ்டல் வார்டன்னா?” என அலற… அபர்ணா ஆமாம் என்பதாகத் தலையசைக்க…


“ரொம்பக் கொழுப்பு உனக்கு.” என்ற சோனாவுக்கும் சிரிப்பு வந்து விட்டது. இருவருமே அபர்ணா சொன்னதைக் கற்பனையில் கண்டு, வயிறு வலிக்கச் சிரித்தனர்.


“எங்க அம்மா உனக்குக் காஸ்ட்லி கிபிட் தான் வாங்கிக் கொடுக்கச் சொன்னாங்க. ஆனா உனக்கு அது பிடிக்குமான்னு கூடத் தெரியாது. இந்தக் கிபிட் பார்க்கும்போது எல்லாம் என்னை நினைச்சுப்ப இல்லையா… அதுக்குத்தான் ஓகே வா…”


“கண்டிப்பா… அந்தக் கிபிட் பார்க்கலைனாலும் நான் உன்னை நினைச்சுப்பேன் தான். நான் லண்டன் போகாம இதே சென்னையில இருந்தா… நாம அடிக்கடி மீட் பண்ணி இருக்கலாம்.” சோனா சோகமாகச் சொல்ல,


“ஏன் ரொம்ப வருத்தப்படுற, உங்க அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜோடியா லண்டனுக்கு வந்துட்டா போச்சு.” என்றாள் அபர்ணா சாதாரணமாக.


அவள் சொன்னதைக் கேட்டு திடுகிட்ட சோனா, “நீ இன்னும் அண்ணாவை நினைச்சுட்டு இருக்கியா. வேண்டாம் அபர்ணா. நீதான் அப்புறம் கஷ்ட்டபடுவ. நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன்.” என்றாள்.


“உன் அண்ணன் மாதிரி என்னால உடனே மனசை மாத்திக்க முடியாது. பார்க்கலாம், எனக்கும் அவரைத் தொங்கிட்டு இருக்கனும்ன்னு தலையெழுத்தா என்ன? மனசுல இருந்து தூக்கி போட முடிஞ்சா நல்லாத்தான் இருக்கும்.”


இந்த முறை அபர்ணா கோபமாகச் சொல்ல… சோனா அவளைக் கவலையாகப் பார்க்கும் போதே… “நைட்க்கு என்ன செய்யலாம்?” என்றபடி பாட்டி வந்துவிட்டார்.


உடனே தன் முகப் பாவனையை மாற்றிய அபர்ணா, “நீ மட்டும் ஒரு போன் பண்ணிட்டு வந்திருந்தேனா உனக்கு ஒரு விருந்தே ரெடி பண்ணி இருப்பேன்.” என்றவள், “எதாவது ஆர்டர் பண்ணிக்கலாம் பாட்டி.” என்றாள்.
சோனா மறுக்க அபர்ணா கேட்கவில்லை. பிசா ஆர்டர் செய்தாள்.


“பாட்டி, நீ சாப்பிடுவ தான?”


“ஏன் எனக்கு என்ன? நிறையச் சீஸ் போட சொல்லு. கூடக் கார்லிக் பிரட் ஆர்டர் பண்ணு. எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். ” என்ற பாட்டியை முறைத்தபடி அபர்ணா ஆர்டர் செய்தாள்.


பிசா வருவதற்குள் சோனாவை அழைத்துக் கொண்டு சென்று தங்கள் அபார்ட்மெண்டை சுற்றிக் காட்டினாள். இருவரும் பேசியபடி நீச்சல் குளத்தை வட்டம் அடித்தனர்.


“இங்க உனக்குப் பொழுது போகுதா அபர்ணா? உன் அப்பா அம்மாவை விட்டு இருக்கக் கஷ்ட்டமா இல்லையா?”


“உண்மையா சொல்லனும்ன்னா எனக்கு இப்பதான் அப்பா அம்மா அருமையே தெரியுது. இங்க எல்லாத்தையும் நான் தனியா பார்த்துக்கணும். பாட்டி கூட இருக்கிறது ஒரு சப்போர்ட் தான்.”


“அப்பா அம்மா செஞ்சதை ஈஸியா குறை சொல்லி இருக்கேன். இங்க தனியா இருக்கும்போது தான் அவங்க அதைச் செய்ய எவ்வளவு கஷ்ட்டபட்டிருப்பாங்கன்னு புரியுது.”


“ரியலி நான் அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன்.”


அபர்ணாவிடம் விளையாட்டுத்தனம், துடுக்குத்தனம் போன்ற குணங்கள் இருந்தாலும், அவளுக்குள் ஒரு பொறுப்பான பெண் இருப்பதையும் சோனா புரிந்து கொண்டாள்.


பிசா வந்ததும் சாப்பிட்டு விட்டு அபர்ணாவும், சோனாவும் கேட் அருகில் காத்திருக்க, அவினாஷ் வந்து சோனாவை அழைத்துச் சென்றான்.
இந்தியா வரும்போது கண்டிப்பாகப் பார்க்க வருவதாகச் சொல்லி சோனா விடைபெற்றாள்.


வீட்டிற்கு வந்த அபர்ணாவிடம், “நீ இந்த ஊருக்கு புதுசு தானே… அதுக்குள்ள எப்படி இவ்வளவு சீக்கிரம் ப்ரண்ட் பிடிச்ச.” என்ற பாட்டியிடம், “கல்யாணம் பண்ணத்தான் ஜாதகம் எல்லாம் பார்க்கணும். ப்ரண்ட் பிடிக்க இல்ல…” அபர்ணா பதிலுக்குக் கடித்து வைக்க… பாட்டி அவளை முறைத்தபடி சென்றார்.


அவினாஷோடு பேசி சிரித்தபடிதான் சோனா காரில் இருந்து இறங்கினாள். ஆனால் அங்கிருந்த ராம்மை பார்த்ததும் அவள் முகம் மாறியது. அவள் அவனை எதிர்ப்பார்க்கவில்லை என்பது ஒருபுறம், அபர்ணா சொன்னது வேறு நினைவு வந்தது.


அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராம்முக்கும் அவளின் மாற்றம் தெரிந்தே இருந்தது.


“ஹாய் அவினாஷ், எப்படி இருக்கீங்க.” என அவன் கைநீட்ட, அவன் கைப்பற்றிக் குலுக்கிய அவினாஷும் பதிலுக்கு நலம் விசாரித்தான்.


“நாளைக்கு எங்க வீட்ல உங்களுக்கு விருந்து. அம்மா சொல்ல சொன்னாங்க. அதுதான் நேர்ல உங்களைப் பார்த்து சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்.” என்றான்.


அவினாஷ் சோனவை பார்க்க, “கண்டிப்பா வரோம் அண்ணா. நானும் பெரியம்மாவை பார்க்க வரணும்ன்னு தான் இருந்தேன்.” என்றாள் அவள்.


அவினாஷ் அங்கிருந்த தன் மாமனாரோடு பேசியபடி உள்ளே செல்ல, அண்ணனும் தங்கையும் பின்தங்கினர்.


“என்ன சொன்னா உன் ப்ரண்ட்?” ராம் கேட்க,


“உங்களை மாதிரி நினைச்சதும் மனசை மாத்திக்க முடியாதாம். உங்களைத் தொங்கிட்டு இருக்கனும்ன்னு தலையெழுத்து இல்லையாம். மனசுல இருந்து உங்களைத் தூக்கி போட முடிஞ்சா நல்லாத்தான் இருக்குமாம்.”


நீதானே கேட்டே, வாங்கிக்கோ என்பது போல… அபர்ணா சொன்னதை அப்படியே சொல்லிவிட்டு சோனா உள்ளே செல்ல… கேட்ட ராம், அங்கேயே நின்று விட்டான்.


‘அடிப்பாவி ! என்னவோ துரத்தி துரத்தி லவ் பண்ணிட்டு விட்டிட்டு போன மாதிரி டயலாக் பேசி இருக்காளே…. சோனாகிட்டையே இவ்வளவு சொல்லி இருக்கா… நாம மட்டும் நேர்ல மாட்டினோம் தொலைஞ்சோம். அவளைப் பார்த்துட மட்டும் கூடாது.’ என நினைத்தான்.


நீ மட்டும் முடிவு பண்ணா போதுமா ராம்? அவள் வருவாளே !




Advertisement