Advertisement

 

பனி சிந்தும் சூரியன்

 

அத்தியாயம் 8


மறுநாள் காலையே பிரகாஷை அழைத்த அகிலாண்டேஸ்வரி, “ஆபீஸ் போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்திட்டு போ. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றவர், “நீ மட்டும்தான் வரணும்.” எனச் சொல்லிவிட்டே வைத்தார்.


முன்தின திருமணக் களைப்பில் இன்னும் நீலிமாவும், அஞ்சலியும் எழுந்துகொள்ளவில்லை. பத்து மணிக்கு மேல் நெற்றியில் விழுந்த முத்தத்தில் நீலீமா சோம்பலாகக் கண் திறந்து பார்க்க, ப்ரகாஷ் அலுவலகம் செல்ல தயராக இருந்தார்.


அதைப் பார்த்ததும், “ஆபீஸ் கிளம்பிடீங்களா, பத்து நிமிஷத்துல நானும் கிளம்பிடுறேன்.” என்றபடி எழுந்தவரை, மீண்டும் கட்டிலில் படுக்க வைத்த ப்ரகாஷ், “நீ ரொம்ப அலுத்து தெரியுற, வீட்ல ரெஸ்ட் எடு. ஆபீஸ்ல இன்னைக்கு ஒரு கிளைன்ட் மீட்டிங் இருக்கு. அதனாலதான் நானே போறேன். மதியம் லஞ்சுக்கு வீட்டுக்கு வந்திடுறேன்.” என்றார்.


“நீங்கதான் போகனுமா?”


“இன்னைக்குச் சோனா வீட்ல இருந்து எல்லோரும் வருவாங்க. அதனால பிரதாப், பிரவீன் ரெண்டு பேருமே ஆபீஸ் வர முடியாது. ராம் சைட்டுக்குப் போயிடுவான். அதனால நான்தான் போகணும்.”


“சரி சீக்கிரம் வந்திடுங்க.”


“ஓகே டியர், டேக் ரெஸ்ட்.” என்றபடி ப்ரகாஷ் கிளம்பி செல்ல, நீலீமா மீண்டும் படுத்துத் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.


அலுவலகம் செல்லும் வழியில், ப்ரகாஷ் தன் அம்மாவை பார்க்க சென்றார். சோனா புகுந்த வீட்டினர் இன்று வருவதால்… வீட்டில் விருந்து ஏற்பாடு தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த மற்றவர்களிடம் பேசிவிட்டு ப்ரகாஷ் அகிலாண்டேஸ்வரியின் அறைக்குச் சென்றார்.


“என்ன மா பார்க்கனும்ன்னு சொன்னீங்க. என்ன விஷயம்? அம்முவுக்கு எதாவது வரன் பார்த்து இருக்கீங்களா?” ப்ரகாஷ் கேட்ட கேள்வி, ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல ஆகி விட்டது. அகிலாண்டேஸ்வரி கோபத்தில் மகனை எரிப்பது போல் பார்த்து வைத்தார்.


தாயின் திடீர் கோபத்துக்குக் காரணம் புரியாது ப்ரகாஷ் விழிக்க, “உன்னாலதான் உன் பிள்ளைங்க கல்யாணம்னு பேச்சை எடுத்தாலே வெறுப்பா பார்க்கிறாங்க. இதுல நீ வரன் பார்த்து இருகீங்களான்னு கேள்வி வேற கேட்கிற.”


“எழுதி வச்சுக்கோ, உன் பிள்ளைங்க கல்யாணமே செஞ்சுக்கப் போறது இல்லை. காலமெல்லாம் தனியாதான் இருக்கப் போறாங்க.” அகிலாண்டேஸ்வரி கோபத்தில் கத்த,


“அம்மா, ப்ளீஸ் என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க,” ப்ரகாஷ் கேட்க, முன்தினம் ராம் பேசியதை சொன்னார்.


மகனின் பேச்சை அறிந்த ப்ரகாஷ் தளர்ந்து போய் அங்கிருந்த கட்டிலில் உட்கார, “இப்ப உனக்குச் சந்தோஷமா. அன்னைக்கு நான் அவ்வளவு சொன்னேனே என் பேச்சை கேட்டியா? ரெண்டு குழந்தைகளுக்கு அப்பாவா இருந்திட்டு, நீ பண்ண வேலையால… இன்னைக்கு ஒரு தப்பும் செய்யாத உன் பிள்ளைகள்தான் மனசு அளவுல நொந்து போய் இருக்காங்க.”


“ஒன்னும் தெரியாத அந்த அப்பாவி பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்த, அதோடு சேர்ந்து உன் பிள்ளைங்க வாழ்க்கையையும் அழிச்சிட்ட, போ போய்ச் சந்தோஷமா இரு. உனக்கு உன்னோட சந்தோஷம் தானே முக்கியம்.” என்றவர், ஜன்னல் பக்கம் சென்று திரும்பி நின்று கொண்டார்.


தாயின் பேச்சு முற்றிலும் உண்மை என்பதால்…. அவரிடம் எதையும் ப்ரகாஷ் மறுக்கவில்லை. தலை குனிந்தபடி அங்கிருந்து வெளியேறினார்.


அலுவலகம் வந்த ப்ரகாஷ் அவருக்காகக் காத்திருந்த வாடிக்கையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பிறகு வீட்டிற்குக் கிளம்ப மனமில்லாமல் அங்கேயே இருந்தார். அப்போது அவரின் செல் அழைத்தது எடுத்து பார்த்தால்.. நீலிமா தான் அழைத்துக் கொண்டு இருந்தாள்.


பிரகாஷுக்கு பேச இஷ்ட்டம் இல்லை. சற்று சலிப்பாகக் கூட இருந்தது. இருந்தாலும் போன்னை எடுத்து காதுக்குக் கொடுத்தார்.


“சொல்லு நீலீமா.”


“என்ன ரொம்ப டல்லா இருக்கீங்க?”


“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. கொஞ்சம் வேலை.”


“காலையில ஆபீஸ் போறதுக்கு முன்னாடி உங்க வீட்டுக்கு போயிருந்தீங்களா?”
நீலீமா அப்படிக் கேட்டதும் பிரகாஷுக்குக் கோபம் வந்துவிட்டது. “என்ன வேவு பார்க்கிறியா?” என அவர் வார்த்தையை விட…


“நான் எப்பவும் நம்ம டிரைவர்கிட்ட நீங்க ஆபீஸ் போய் இறங்கிடீங்கலான்னு கேட்கிறதுதான். உங்களுக்கு அது தெரியாது?”


நீலீமா சொல்வது உண்மைதான். “சாரி, கொஞ்சம் மூட் அவுட் அதுதான் அப்படிப் பேசிட்டேன்.”


ப்ரகாஷ் சொன்னதற்கு நீலீமா பதில் எதுவும் சொல்லவில்லை. “ஆபீஸ் போற வழியில தலையைக் காட்டிட்டு வந்தேன்.” என்றார் அவராகவே.


“சரி எப்ப வருவீங்க?”


“இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. நான் வர லேட் ஆகும். லஞ்ச் இங்கயே பார்த்துகிறேன்.”


எதுவோ சரியில்லை என நீலீமாவுக்குப் புரிந்தது. மாமியார்தான் எதாவது பேசி இருப்பார் என்றும் தெரியும். அப்போதைக்கு எதுவும் கேட்கவில்லை.


பிரகாஷிற்குக் குற்ற உணர்வாகப் போய்விட்டது. தான் ஏன் நீலீமாவை திருமணம் செய்வதில் அவ்வளவு பிடிவாதமாக இருந்தோம் என யோசித்துப் பார்த்தார்.


ஸ்வர்ணாவோடு அவரது திருமணம் அகிலாண்டேஸ்வரியின் விருப்பதிற்காகத்தான் நடந்தது என்றாலும், அவருக்கும் ஸ்வர்ணாவை சுத்தமாகப் பிடிக்காமல் இல்லை.


பளீரென்ற நிறமோ அழகோ இல்லையென்றாலும், குறைவாக நினைப்பதற்கும் இல்லை. மாநிறத்தில் கலையான முகம். அடக்கமான சுபாவம் கொண்டவள் ஸ்வர்ணா.


ஸ்வர்ணாவின் குடும்பமும் வசதியானதுதான். ஆனால் இவர்கள் அளவிற்கு வசதி இல்லை. படிப்பும் ஒரு டிகிரி மட்டுமே முடித்து இருந்தாள்.


கோவில் திருவிழாவிற்குச் சொந்த ஊறுக்கு சென்ற அகிலாண்டேஸ்வரி, அங்கே ஸ்வர்ணாவை பார்த்துவிட்டு, மகனின் விருப்பம் கேளாமலே பேசி முடித்துவிட்டார்.


ப்ரகாஷ் வெளிநாட்டில் சென்று படித்தவர், தாய்நாட்டிற்கு வந்து சொந்த தொழிலை பார்த்தாலும், அடிக்கடி வெளிநாட்டிற்குப் பறந்து கொண்டு இருந்தார்.

வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டும் என்பது பிரகாஷின் எண்ணமாக இருக்க, இப்படித்தான் வாழவேண்டும் என எண்ணம் கொண்ட ஸ்வர்ணவுக்கும், இவருக்கும், திருமணம் என்பது விதி அன்றி வேறு எது?


இப்போது திருமணம் வேண்டாம் என ப்ரகாஷின் மறுப்புகளைக் காதில் வாங்காமல், திருமணம் செய்ததுதான் பிழையாகி போனதோ என்னவோ?


விருப்பம் இல்லாத திருமணம் என்றபோதிலும், குடும்பக் குத்து விளக்காக மிளிர்ந்த ஸ்வர்ணாவை வெறுக்கவும் முடியவில்லை. இல்லறத்தின் அடையாளமாக ஸ்வர்ணா திருமணமான சில நாட்களிலேயே கருவுற, செய்தி கேட்டு, அகிலாண்டேஸ்வரி பெருமை கொண்டார்.


எங்கே மகன் தடம்புரண்டு விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாகவே அவனுக்கு அவசரமாகத் திருமணம் முடித்து இருந்தார். திருமணம் முடிந்து குழந்தையும் வந்தபிறகு, மகன் இனி மாறமாட்டான் என அவர் எண்ணி இருக்க… இனிதான் ஒரு பெரிய இடியாக அவர் தலையில் போடப்போகிறான் என அவருக்கு அப்போது தெரியவில்லை.


ஸ்வர்ணா முதல் குழந்தை பிறந்த ஒரு வருடத்திலேயே அடுத்தக் குழந்தை உண்டாக. உடல் பலகீனத்தால் கரு கலைந்தது. ஸ்வர்ணாவுக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருக்க… சில நாட்கள் அவர் யாரோடும் பேசாமல் இருந்தார்.


மருமகளை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்று அகிலாண்டேஸ்வரி காண்பிக்க…. குழந்தையை இழந்த அதிர்ச்சியில் இருக்கிறார். இன்னொரு குழந்தை பிறந்தால் சரி ஆகிவிடுவார் என்றார் மருத்துவர். அவர் சொன்னது போலவே மீண்டும் கருவுற்றதும் தான் ஸ்வர்ணா இல்யல்புக்கு திரும்பினார். அதன்பிறகுதான் அகிலாண்டேஸ்வரிக்கு நிம்மதி வந்தது.


ஒரு குழந்தையை இழந்ததால்…. ஸ்வர்ண, தன் மற்ற இரு குழந்தைகளைக் கண்களுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார். அவருக்குக் குழந்தைகளே உலகம்.
பெரிய குடும்பத்தில் மூத்த மருமகளாக வாக்கபட்டிருந்த ஸ்வர்ணா தன் பொறுப்பு உணர்ந்து நடந்தார். ஆனால் தன் கணவரின் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை மறந்தார்.


அவரைப் பொறுத்தவரை ப்ரகாஷ் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாக நினைத்தார். சுவாமிநாதன் அப்போது உடல்நலமில்லாமல் இருந்தார். பிரதாப்புக்கு அப்போதான் திருமணம் முடிந்து இருந்தது. அவருடன் படித்த காயத்ரியை விரும்பி மனது கொண்டார். அடுத்து ப்ரவீனாவுக்கு வேறு திருமணம் நடப்பதாக இருந்தது.


இரண்டு குழந்தைகளை வேறு வைத்துக் கொண்டு வெளி நாட்டிற்க்கு உல்லாச பயணம் செய்ய அழைத்தால்… ஸ்வர்ணா குடும்பப் பொறுப்புகளைக் காரணம் காட்டி வர மறுக்க… ப்ரகாஷ் ஒரு கட்டத்தில் ஸ்வர்ணாவை அழைப்பதையே நிறுத்திக் கொண்டார். அவர் தனியாகவே சுற்றிக்கொண்டு இருந்தார்.


சில வருடங்கள் கடந்த நிலையில்… சிங்கப்பூரில் ஒரு ஹோட்டல் கட்ட காண்ட்ராக்ட் போடப்பட… அதைச் சாக்காக வைத்துக் கொண்டு ப்ரகாஷ் அங்கேயே அதிக நாட்கள் தங்கிவிட… அங்கே அவருக்கு உதவியாளராக வந்தவள்தான் நீலீமா.


நீலீமா அழகும் திறமையும் கொண்ட இளம் பெண். வேலை என்று வந்துவிட்டால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பாள். நிறைய விஷயங்களில் தனக்கும் நீலீமாவுக்கும் ஒத்த எண்ணம் எனப் பிரகாஷிற்குத் தோன்றியது.


அவர் நீலீமாவுடன் அதிக நேரம் செலவிட்டார். சிங்கப்பூரில் இருவரும் ஒன்றாகவே சுற்றிக்கொண்டு இருந்தனர். ஒருகட்டத்தில் பிரகாஷிற்குத் தன் மனதை கட்டுபடுத்த முடியவில்லை. அவர் தன் காதலை நீலிமாவிடம் சொல்ல… நீலிமாவும் ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு ப்ரகாஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியாது.


சிங்கப்பூரில் வேலை முடிந்து கிளம்பும் போது, ப்ரகாஷ் நீலிமாவையும் உடன் அழைத்துக் கொண்டு இந்தியா வந்தார். இங்கு அவர்களின் நிறுவனத்திலும் நீலிமாவிற்கு வேலை போட்டுக் கொடுத்தார்.


அப்போதுதான் முதன்முறையாக நீலிமாவுக்குச் சந்தேகம் வந்தது. தம்பிகள் இருவருக்கே திருமணம் ஆகிவிட்டது. இன்னும் ஏன் இவருக்கு ஆகவில்லை என்று.


அதை அன்றே அவர் பிரகாஷிடம் கேட்க, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவி, குழந்தைகள் இருப்பதை ப்ரகாஷ் அப்போதுதான் தெரிவித்தார்.


நீலிமாவிற்குப் பலத்த அதிர்ச்சி. அவள் அழுது, கத்தி சண்டையிட்டாள். ப்ரகாஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டினாள்.


“உன்னோட எத்தனையோ சந்தர்பத்தில் தனியா இருந்திருக்கேன். ஒருமுறையாவது எல்லை மீறி இருப்பேனா… உண்மையைச் சொல்லாமல் உன்னை உரிமை ஆக்கிக்கக் கூடாதுன்னு நினைச்சு தான்.”


“என்னோட முதல் திருமணம் ஒரு பிசக்கு. எங்க ரெண்டு பேருக்கும் எந்த விதத்திலேயும் ஒத்து போகலை. இத்தனை வருடங்கள் எப்படியோ போயிடுச்சு… இனியும் மனம் ஒட்டாத அந்தப் பந்தத்தில் என்னால இருக்க முடியாது.” என ப்ரகாஷ் தெளிவாகச் சொல்லிவிட… நீலிமா அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


நீலீமா பிரகாஷிடம் இருந்து விலக வேண்டும் என நினைத்திருந்தால்… இந்த இடத்தில்தான் விலகி இருக்க வேண்டும். ஆசை யாரை விட்டது. காதல் கண்ணை மறைக்க, அறிவும் வேலை செய்யவில்லை. மறுக்காமலும் இல்லை… மறுத்தாள் தான். ஆனால் அத்தனையும் பலகீனமானது. அழுத்தமாக மறுக்கவில்லை.


சந்தர்ப்பம் வரும்போது வீட்டில் சொல்வதாகச் சொன்ன ப்ரகாஷ், அங்கேயும் இங்கேயுமாகத் தங்க ஆரம்பித்தார். உரிமை என்று வருவதற்கு முன்பே… இருவருக்கும் இடையே உறவு தொடங்கிவிட்டது.


பின்னாளில் இவர்களே உரிமையை ஏற்படுத்திக்கொண்டார்கள். ஆனால் அது சட்டப்பூர்வமானது அல்ல… அவர் நினைத்தது போல்… ஸ்வர்ணாம்பிகையை எளிதாக அவரால் விலக்க முடியவில்லை.


கிராமத்துப் பெண் என்று சாதாரணமாக நினைத்து இருந்தார். ஆனால் எப்போதும் அடக்கமாக இருக்கும் ஸ்வர்ணா ருத்ர அவதாரம் எடுத்தார்.


“நான் இந்த வீட்டுக்கு முறையாக வந்தவள், இரண்டு குழந்தைகளையும் பெற்று, இந்தக் குடும்பமே என் குடும்பம் என்று வாழ்ந்தவள், நீ வேற ஒருத்தியோட போயிட்டேன்னு, நான் வேற ஒருத்தனோட போக முடியுமா? நான் இங்க இருந்து போக மாட்டேன். விவகரத்தும் கொடுக்க மாட்டேன். உன்னால பண்ண முடிஞ்சது பண்ணிக்கோ.” எனச் சாவல் விட்டார்.”


உண்மையில், தான் மட்டும் என்றால்… பிரகாஷின் முகத்தில் விழிக்கக் கூட ஸ்வர்ணா விரும்பி இருக்க மாட்டாள். ஆனால் யாரோ செய்த தவறுக்கு தன் குழந்தைகள் உரிமை அற்று, உறவுகள் அற்று ஏன் போக வேண்டும் என்ற எண்ணமே, தன் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என வைராக்கியம் கொள்ளவைத்தது.


‘சொத்து எல்லாத்தையும் மருமகள், குழந்தைகளுக்குதான் கொடுப்போம்.’ எனப் பெற்றோரும் ஸ்வர்ணாவுக்கு ஆதரவு கொடுக்க… பிரகாஷால் எதுவும் செய்ய முடியவில்லை.


அவனின் தந்தை இருந்தவரை அவர் வீட்டு வாசலை பிரகாஷை மிதிக்க விட்டது இல்லை. அலுவலகத்திற்கு மட்டும் செல்வார். தந்தை இறந்த பிறகுதான், உடன்பிறந்தவர்கள் அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்து போக ஆரம்பித்தார்.


முதலில் அகிலாண்டேஸ்வரி தடுத்து பார்த்தார். பிறகு அவர் சொல்லை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. ஸ்வர்ணாவுக்குதான் அவரைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கும். தாயின் துயரை அறிந்த ராம், வளர்ந்து தொழில் இறங்கிய ஒரே வருடத்தில், தன் தாய்க்கு என்று தனியாக வீடு கட்டி அழைத்துச் சென்றுவிட்டான்.


பிள்ளைகள் எப்போதோ அப்பா என்று அழைப்பதை நிறுத்திக்கொண்டார்கள். இவாறாக எதாவது கேள்வி கேட்டால்… பதில் மட்டும் சொல்வார்கள்.


தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பிள்ளைகளைப் பாதிக்கவில்லை… அவர்கள் சுகமாக இருக்கிறார்கள் என்றே நினைத்து இருந்தார். ஆனால் தன்னால் தான் அவர்கள் திருமணம் என்னும் பந்தத்தையே வெறுக்கிறார்கள் என்று இன்றுதான் தெரிந்து கொண்டார்.


இளமையில் தவறாகத் தெரியாதது… இப்போது பெரிய பூதாகரமாகத் தோன்றியது. தன் வினை தன்னைச் சுட ஆரம்பித்து இருந்தது. இதுதான் ஆரம்பம்பமே… அதற்குள் பிரகாஷிற்குத் தலை சுற்றியது.


பழைய விஷயங்களை நினைத்து பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை முடிந்து இரவு வந்தும், வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே இருந்தார்.


இரவு ஒன்பது மணி ஆகியும் அவர் கிளம்பாமல் இருக்க… அவர் செல்லை அனைத்து வைத்திருந்ததால்…நீலீமா அலுவலக எண்ணிற்கு அழைத்தாள்.
“மணி என்ன தெரியுமா?” என அவள் கேட்டதும் தான் நேரத்தை பார்த்தவர், அது ஒன்பதை காட்ட, “இதோ கிளம்பிட்டேன்.” எனப் போன்னை வைத்துவிட்டு எழுந்தார்.


அவர் அறையில் இருந்து வெளியே வந்தபோது, ராம்மின் அலுவலக அறையில் இன்னும் விளக்கு எரிவதை பார்த்தார். அங்கிருந்த பணியாளிடம் “ராம், இன்னுமா இருக்கான். வீட்டிற்குப் போகலை.” எனக் கேட்க,
“ராம் சார் போக எப்பவும் ஒன்பது, பத்து மணி ஆகிடும் சார்.” என்றான்.

மகன் தொழிலில் இறங்கிய பிறகு…. தங்கள் நிறுவனத்திற்கு எவ்வளவு வளர்ச்சி என்று அவருக்கு தெரியும். எப்போதும் மகனை நினைத்து அவருக்கு பெருமை உண்டு.

அவர் அங்கே நிற்கும் போதே, அவன் அறையில் இருந்து வெளியே வந்த ராம், அந்த நேரத்தில் அவரை எதிர்ப்பார்க்கவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது.
அவன் அவரிடம் எதுவும் பேசவில்லை… விரைந்து வெளியே சென்றுவிட்டான்.


அவன் எப்போதுமே அவரிடம் பேச மாட்டான். அலுவலகம் சம்பந்தமாக எதாவது பேச வேண்டும் என்றால் கூட, தன் சித்தப்பாக்கள் மூலமாகத் தான் சொல்லிவிடுவான். ஒரு வாரத்தைக் கூட மகன் பேசாமல் சென்றது, இன்றுதான் பிரகாஷிற்கு வலித்தது. சிறிது கோபம் கூட வந்தது.


வீட்டிற்குச் செல்லாமல் ஒரு நட்ச்சத்திர ஹோட்டல் பாருக்கு சென்றார். எப்போதும் ஒரு அளவில் நிருத்துகிறவர், மனதில் இருந்த அழுத்தம் காரணமாக, இன்று அளவுக்கு மீறி குடித்தார்.


அவர் மேலும் மதுபானம் கேட்க, மறுத்த சர்வரிடம், அவர் சண்டைக்குச் செல்ல, ஹோட்டல் மேலாளருக்கு அவரை நன்றாகத் தெரிந்திருக்க, அவரது மகன் என ராமிற்குப் போன் செய்து சொல்லிவிட்டார்.


ராம்மும் சிறிது நேரத்தில் வந்துவிட்டான். BMW பைக்கில் வந்து இறங்கியவன், அலுவகத்திற்கு எப்போதும் பார்மலில் வருபவன், இப்போது டி ஷர்ட்டும், ட்ராக் பேண்டும் அணிந்து இருந்தான்.


பைக்கை நிறுத்து விட்டு, நேராக மேஜையில் தலை கவிழ்ந்து படுத்திருந்தவரிடம் முன்பு வந்து நின்று “வீட்டுக்கு போகாம இந்த நேரத்தில இங்க என்ன பண்றீங்க?” எனக் கேட்க,


அவன் தன்னிடம் தான் பேசுகிறானா என்பது போல் சுற்றிப் பார்த்தவர்,” தி கிரேட் ராம் ப்ரகாஷ் என்னோட எல்லாம் பேசுறாரே, ரொம்ப ஆச்சர்யமா இருக்கே.” என ப்ரகாஷ் நக்கல் அடிக்க, ராம்மின் பொறுமை குறைந்து கொண்டே வந்தது.


அவன் அங்கிருந்த ஓட்டுனரிடம் கண்ணைக் காட்ட, அவர் பிரகாஷின் அருகில் வந்து, “சார் வீட்டுக்கு போகலாமா.” எனக் கேட்டார்.


தள்ளாடியபடி எழுந்து நின்றவர், “எனக்கு ஒண்ணுன்னா நீதான் வரணும். புரிஞ்சுதா.” என மகனை பார்த்து சொல்ல, அவரை அழுத்தமாகப் பார்த்தவன், “சோனா, மாப்பிள்ளை எல்லாம் வீட்டில இருக்காங்க. அதனாலதான் சித்தப்பாவுக்குப் பதில் நான் வந்தேன். உங்களுக்காக வரலை புரிஞ்சுதா.” என அவரைப் போலவே சொன்னவன்,


ஹோட்டல் மேலாளரிடம், “இனிமேல் இவர் இங்க வந்து பிரச்சனை பண்ணா. எனக்குப் போன் பண்ணாதீங்க. போலீஸ்க்கு போன் பண்ணுங்க.” எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றே விட்டான்.


மகனின் அலட்சியத்தில் பிரகாஷிற்கு ஏறிய போதை இறங்கிவிட்டது. அவர் அமைதியாக டிரைவரோடு வீட்டிற்குச் சென்றார்.


வீட்டில் அவருக்காகக் காத்திருந்த நீலீமா, “எங்க போனீங்க?” என விசாரிக்க, “எங்க போனாலும் உன்கிட்ட சொல்லிட்டுத்தான் போகனுமா. உன் வேலையைப் பார்.” என மகனின் மேல் இருந்த கோபத்தை அவளிடம் காட்டினார்.


இதுவரை ப்ரகாஷ் இப்படிப் பேசியதே இல்லை. நீலீமா திகைத்து போய் நின்று விட்டாள். இனிதான் அவரின் இன்னொரு முகத்தைப் பார்க்க போகிறாள்.


Advertisement