Advertisement

 

பனி சிந்தும் சூரியன்

 


அத்தியாயம் – 7

திருமணக் கலாட்டாக்கள் முடிந்து, சோனாவை அவள் புகுந்த வீட்டிற்கு வழியனுப்பிவிட்டு, வீட்டினர் வீடு திரும்ப மாலை ஆகிவிட்டது. இரவு உணவுக்குப் பிறகு திருமணதிற்கு வந்து தங்கி இருந்த உறவினர்களும் விடைபெற, வீட்டு ஆட்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.


ராம் மற்றும் அகிலா தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு வர, அவர்களுக்காகவே காத்திருந்தது போல… அகிலாண்டேஸ்வரி மின் தூக்கியை பார்த்த வாக்கில் அமர்ந்து இருந்தார். அவர் பக்கத்தில் ஸ்வர்ணா அமர்ந்து இருக்க… வேறு யாரும் அங்கு இல்லை. பிரகாஷ் நீலிமா மற்றும் அஞ்சலி மண்டபத்தில் இருந்தே விடைபெற்று சென்று இருந்தனர்.


அவர்கள் இல்லாத நேரத்தில், தான் பேச வேண்டியதை பேசிவிட வேண்டும் என அகிலாண்டேஸ்வரி நினைத்தார்.


“கிளம்பிட்டியா ராம்.”


“ம்ம்… கிளம்பியாச்சு பாட்டி.” என்றவனுக்கு, அவர் தன்னிடம் என்ன கேட்பார் என்றும் தெரிந்திருந்தது.


அதைப் பொய் ஆக்காமல், “ராம், உனக்கும் நேகாவுக்கும் இன்னும் மூன்னு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிடலாம்ன்னு பார்கிறேன்.” என்றார்.


“எனக்குத் தகவல் சொல்றீங்களா பாட்டி. என்னோட விருப்பம் முக்கியம் இல்லையா?”


ராம் கேட்ட கேள்வியில் திகைத்தவர், உடனே சுதாரித்து, “நான்தான் அன்னைக்கே உன்கிட்ட இதைப் பத்தி பேசினேனே… நீயும் மறுத்து ஏதும் சொல்லலையே.” என்றார் ஆர்வமாக.


“நான் சம்மதம்ன்னும் சொல்லலையே…” என்றவன், மேலும் தொடர்ந்தான்.

 

“அன்னைக்கு உங்களை மத்தவங்க முன்னாடி விட்டு கொடுக்க வேண்டாமேன்னு நினைச்சு அமைதியா இருந்தேன்.”


“ஏன்? உனக்கு நேகாவை பிடிக்கலையா?”


“எப்படிப் பிடிக்காம இருக்கும். ஆனா சின்ன வயசுல இருந்து கூடவே வளர்ந்த பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்றது உங்களுக்கே நல்லா இருக்கா பாட்டி? இதே வீட்ல வளர்ந்த அம்மு, சோனா, மமதி எனக்குத் தங்கைகள், அவங்ககிட்ட ஒருமாதிரியும், நேகாகிட்ட ஒரு மாதிரியும் பழகி இருப்பேன்னு நினைக்கிறீங்களா? அவ எனக்கு அத்தை பெண்ணா இருந்தாலும், அவளும் எனக்கு இன்னொரு தங்கைதான்.”


ராம்மின் பேச்சை கேட்ட பிறகு, மீண்டும் அந்தத் திருமணத்தைப் பற்றிப் பேச அகிலாண்டேஸ்வரிக்கு வாய் வருமா என்ன? அவர்கள் பேசுவதை மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த நேகா அங்கிருந்து விரைந்து சென்று விட, பாட்டி பெருமூச்சு விட்டார்.


“அம்மா கிளம்பலாமா.” என ராம் ஸ்வர்ணாவை பார்த்து கேட்க,


“சரி விடு நேகா வேண்டாம். நீ சொல்ற காரணமும் நியாயமா இருக்கு. ஆனா அந்த அபர்ணாவை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு எதாவது எண்ணம் வச்சிருக்கியா?” என அகிலாண்டேஸ்வரி நேரடியாகவே தன் பேரனிடம் கேட்டு விட்டார்.


“நானே என்னோட அம்மாவை காயப்படுத்துவேன்னு நீங்க நினைக்கிறீங்களா?”


“அபர்ணா உன்னையே சுத்தி சுத்தி வரா? உன்னை வளைச்சு போட சொல்லி, அவங்க வீட்ல சொல்லிக் கொடுத்து அனுப்பி இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அப்படியே அத்தை மாதிரி புத்தி.” என அவர் கோபத்தில் வாய்விட,


“பாட்டி, உங்களுக்குத் தெரியாம எதுவும் பேசாதீங்க. அபர்ணா மேல உங்களுக்குக் கோபம் இருக்கலாம். ஆனா உங்களுக்கு நல்லா தெரியாம அவங்க வீட்டை எல்லாம் இதுல இழுக்காதீங்க.” என்றான் ராம் அழுத்தமாக. அபர்ணாவின் அம்மா அவளிடம் பேசியதை அவன் கேட்டுதானே இருந்தான்.


“சரி அதை விடு, வேற பொண்ணு பார்க்கலாமா?”


“எனக்கு வேண்டாம், வேணா அம்முவுக்குப் பாருங்க.” எனப் பந்தை தன் தங்கையின் பக்கம் ராம் தள்ளிவிட,


அதுவரை அமைதியாக நின்றிருந்த அகிலா, தன் அண்ணன் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டு போனாள்.


“ஐயோ ! என்னை ஆளை விடுங்க பா. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்.” என்றாள் வேகமாக.


“அண்ணனும் தங்கச்சியும் விளையாடுறீங்களா? ரெண்டு பேருமே கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னா என்ன அர்த்தம்?”
“உங்க மகனுக்குப் பிள்ளைகளா பிறந்திட்டு, எங்களுக்குக் கல்யாணத்தின் மீது நம்பிக்கை வரும்ன்னு நீங்க நினைக்கிறீங்களா பாட்டி?” ராம் கேட்க, அகிலாண்டேஸ்வரியின் முகம் இருண்டது.


“உண்மையான அன்பு வச்சிருந்த எங்க அம்மாவை விட்டு, அவருக்கு வேற ஒருத்தர் மேல காதல் வந்தது. அவரோட மகன் தானே நான், நானும் அவரை மாதிரி இருக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்? அம்முவுக்கும் அம்மாவோட நிலைமை வராதுன்னு உங்களால சொல்ல முடியுமா?”
ராம் ஆக்ரோஷமாகக் கேட்க, அகிலாண்டேஸ்வரி வாய்யடைத்துப் போனார்.


“உங்க அப்பா அப்படி இருந்தா, எல்லோரும் அப்படி இருப்பாங்களா? அவனுக்குத் தான் புத்தி கெட்டு போச்சு.”


“இருக்கலாம், ஆனா நாங்க அவரை மாதிரியா, இல்லையான்னு சோதித்துப் பார்க்க எல்லாம் எங்களுக்குத் தெம்பு இல்லை. ரொம்பப் பெரிய காயம் பட்டிருக்கோம், அது அவ்வளவு சீக்கிரத்துல ஆறாது.”


அகிலாண்டேஷ்வரி தனது கையாலாகாத பார்வையை ஸ்வர்ணாவிடம் செலுத்த, அவரும் தன் பிள்ளை சொன்னதைக் கேட்டுக் கண்ணீர் சிந்தினார்.


“அம்மா, இப்ப எதுக்கு அழறீங்க? கல்யாணம் பண்ணி நீங்க ரொம்பச் சந்தோஷமா இருந்துடீங்களா? நீங்க அனுபவிச்சது பத்தாதா? நாங்களும் வேற அனுபவிக்கணுமா? என ராம் கோபமாகக் கேட்க, ஸ்வர்ணா கண்களைத் துடைத்துக் கொண்டார்.


மேலும் என்ன சொல்லி அவர்களைத் திருமணதிற்கு ஒத்துக்கொள்ள வைப்பது என அகிலாண்டேஸ்வரிக்கு தெரியவில்லை. அவருக்கு தன் மகன் மீது இருந்த கோபம் இன்னும் அதிகமாகியது.


தங்கள் வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்த அகிலாவுக்கு, கார்த்திக்கின் வாடியே முகமே மனதில் வந்து வதைத்தது.


அவனும் அவளுக்காக ஐந்து வருடங்களாகக் காதலை சொல்லிவிட்டுக் காத்திருக்கிறான். முதலில் அவனைச் சந்தித்த தினத்தில் இருந்து நினைத்து பார்த்தாள்.


எஸ். என் க்ரூப்ஸ் கணக்கு விவரங்களை மொத்தமும் பார்ப்பது கார்த்திக்கின் ஆடிங் கம்பெனி தான். அவன் தாத்தா, அப்பா, சகோதரன் எல்லோருமே ஆடிட்டர்கள். அவன் தாத்தா காலத்தில் இருந்தே அவர்கள் நிறுவனத்துக்கும் எஸ் ஏன் நிறுவனத்துக்கும் தொடர்பு உண்டு. கார்த்திக் படித்து முடித்து வந்ததும், அவனும் அவன் அப்பா மற்றும் சகோதரனோடு தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்க ஆரம்பித்தான்.


தங்கள் வேலை விஷயமாகக் கார்த்திக்கும் ராம்மும் அடிக்கடி சந்திக்க நேரும், அதோடு இருவரும் சம வயதினர் என்பதால்… சீக்கிரமே இருவருக்கும் இடையே நட்பு உருவானது.


கார்த்திக்கின் அண்ணன் மகேந்திரன் திருமணத்திற்கு ராம் அகிலாவை அழைத்துக் கொண்டு சென்றான். கலையான முகமும், சற்று பூசினர்போல உடல்வாகும் கொண்ட அகிலாவை பார்த்ததும் கார்த்திக்குப் பிடித்துவிட்டது. அகிலா அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தாள்.


மறுநாள் வீட்டில் நடந்த விருந்துக்கும் இருவரும் சென்றனர். கார்த்திக்கின் அண்ணி நித்யா இயல்பிலேயே கலகலப்பான சுபாவம் உடையவள், அவளிடம் அகிலாவை கார்த்திக் அறிமுகம் செய்ய அழைத்துச் சென்றான்.


அவன் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் நித்யா அகிலாவிடம் நன்றாகப் பேசினாள். ஒரு கட்டத்தில் நித்யா கேள்விக் கணைகளை நிறுத்தாமல் தொடர… எப்போதும் கொஞ்சம் அளந்தே பேசும் அகிலா, அவள் வேகத்திற்குப் பதில் பேச முடியாமல் திணறி போனாள்.


“அண்ணி, முதல் தடவையே இவ்வளவு கேள்வி கேட்டா பயந்திட போறாங்க.” என்றதும், நித்யா அசடு வழிய, அகிலாவுமே சிரித்து விட்டாள்.


“சரி நீங்க பேசுங்க.” என நித்யா அங்கிருந்து செல்ல,


“அவங்க கோவிச்சிக்கப் போறாங்க.” என்றாள் அகிலா கார்த்திக்கிடம்.


“அண்ணி ரொம்ப நல்ல மாதிரி அதெல்லாம் புரிஞ்சிப்பாங்க.” என்றவன்,

 

“இந்த வருஷத்தோட உன்னோட படிப்பு முடியுதே…என்ன பண்ணப்போற? மேல படிக்கப் போறியா? இல்லை உங்க கம்பெனியிலேயே வேலை பார்க்க போறியா?”


“நான் விஷுவல் கம்யுனிகேஷன் படிச்சு இருக்கேன். அந்தப் படிப்புக்கு ஏத்த மாதிரி வேலைக்குப் போயிட்டே, மேல மாஸ்டர்ஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன்.”


“சரி எங்க வேலைக்குப் போறதுன்னு முடிவு பண்ணிட்டியா?”


“எனக்கு ஒரு டிவி சேனல் தொடங்கணும்ன்னு ஆசை. அதனால எதாவது டிவி சேனல்ல வேலை பார்த்தா எனக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இனிதான் அண்ணன்கிட்ட கேட்கணும்.”


“என்னோட ப்ரண்ட் ஒரு பிரபல சேனல்ல க்ரியேடிவ் ஹெட்டா இருக்கான். நான் அவன்கிட்ட பேசட்டுமா?”


“அண்ணன்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்.”


அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே ராம் அங்கு வர… அகிலா அவனிடம் கார்த்திக் சொன்னதைச் சொன்னாள்.


“எனக்கும் சிலபேரை தெரியும். ஆனா கார்த்திக் சொல்றவரு சரியா வருவாருன்னு தோணுது. நீயே இந்த விஷயத்தைப் பார்த்துக்கோ கார்த்திக்.”


ராம் தன் நண்பனிடம் பொறுப்பைக் கொடுக்க, கார்த்திக் மகிழ்ச்சியுடன் சரி என்றான்.


சரியாக ஒரு வாரம் சென்று கார்த்திக்கிடம் இருந்து அகிலாவுக்குப் போன் வந்தது. “நான் அவர்கிட்ட பேசிட்டேன். இருந்தாலும், நீயும் அவரை ஒரு தடவை வந்து மீட் பண்ணிட்டா நல்லா இருக்கும்.”


கார்த்திக் சொன்னதை அகிலா ராம்மிடம் சொல்ல, “அவன் என்கிட்டே கேட்டுட்டுதான் உனக்குப் போன் பண்ணான். எனக்கு நிறைய வேலை இருக்கு. அதோட எனக்கு இந்தப் பீல்ட் பத்தி ரொம்பத் தெரியாது. கார்த்திக் கூடவே போயிட்டு வந்திடேன்.”


அகிலா ரொம்பவும் யோசிக்க, அதை உணர்ந்த ராம் “நீ அவனை நம்பலாம் அம்மு. அவங்க குடும்பமே நமக்கு ரொம்ப வருஷமா தெரியும். கார்த்திக் ஒரு வேலையில இறங்கிட்டா அதுல ஒரு குறை சொல்லவே முடியாது.”


“நான் உன்னோட வந்தா, நான் யாருன்னு சொல்ல வேண்டியது வரும். நமக்கு இருக்கிற அந்தஸ்த்துக்கு, உனக்கு உடனே வேலை கிடைக்கும். ஆனா நீ ஒரு சாதாரணப் பெண்ணா வேலைக்குப் போனாத்தான் உனக்கு ஆதியில இருந்து அந்தம் வரை கத்துக்க முடியும்.” என்றான்.


“சரி நான் கார்த்திக் கூடவே போறேன்.”


“அதைச் சந்தோஷமா சொல்லலாமே.” எனத் தங்கையின் கன்னத்தைத் தட்டியவன்,


“நீ போற பீல்ட் நம்ம குடும்பத்துக்குப் புதுசு. உனக்கும் சவாலானது தான். ஆனா நீ கண்டிப்பா சாதிப்பேன்னு நம்புறேன்.” என்றதும், அகிலாவும் நம்பிக்கையாகத் தலையசைக்க… ராம் புன்னகையுடன் விடைபெற்றுச் சென்றான்.


கார்த்திக் வீட்டிற்கே வந்து அகிலாவை அழைத்துச் சென்றான். செல்லும் வழியில், “என்னோட வர்ற உங்க அண்ணன்கிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சா? என் மேல அவ்வளவு நம்பிக்கை.” என அவன் சொல்ல,


“உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு சொன்னேனா? எனக்கு எல்லாமே எங்க அண்ணன்தான், அவர்கிட்ட கேட்டு செய்றதுல என்ன தப்பு?”


“அண்ணன்கிட்ட மட்டும்தான் பேசினியா.. உன் அப்பாகிட்ட இதைப் பத்தி சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டியா?”


“நான் அவர்கிட்ட எதுக்கும் போறது இல்லை.” அகிலா சொல்ல, கார்த்திக் அவளின் முகம் பார்க்க, அவள் முகமோ கோபத்தில் சிவந்து இருந்தது.
தேவையில்லாமல் கேட்டு விட்டோம் என நினைத்தவன், “சாரி, தெரியாம கேட்டுட்டேன்.” அவன் மன்னிப்பு கேட்டும், அகிலா உடனே சமாதானம் ஆகவில்லை. அவள் அவன் பக்கம் பார்க்காமல் வேறு பக்கம் பார்க்க,


“அதுதான் சாரி சொல்லிட்டேன் இல்ல..” என்றான் கார்த்திக் சமாதானம் செய்யும் விதமாக. அகிலா அப்போதும் திரும்பாமல் இருக்க, “அம்மு ப்ளீஸ்…” என்றதும், சட்டென்று திரும்பி பார்த்தவள், “நீங்க ஏன் அம்மு சொல்றீங்க?” எனக் கேட்டாள்.


“நான் சொல்லாம…” என அவளைக் கேலியாகப் பார்த்து சிரித்தவன், காரை விட்டு இறங்க… அப்போதுதான் தாங்கள் வர வேண்டிய இடம் வந்துவிட்டதைக் கவனித்த அகிலாவுக்கு, இப்போது வேறு பதட்டம் தொற்றிக்கொண்டது.


“ரிலாக்ஸ்… உனக்குக் கண்டிப்பா இங்க வேலை உண்டு. என் பிரண்ட்டோட தங்கைன்னு உன்னைச் சொல்லி இருக்கேன். அவனும் மேல கேட்கலை… நானும் சொல்லலை. நீயும் சாதாரணமாவே காட்டிக்கோ.” எனச் செல்லும் வழியில் கார்த்திக் சொல்லிக்கொண்டே வர… எல்லாவற்றிற்கும் அகிலா உம் கொட்டியபடி சென்றாள்.


சந்திக்க வேண்டியவரை சந்தித்துப் பேசிவிட்டு வெளியே வர மேலும் ஒரு மணி நேரம் ஆனது. அகிலாவுக்குத் திருப்தியாக இருந்தது. இங்கே தான் நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என அவளுக்கு நம்பிக்கை வந்தது.


அவள் முகத்தில் இருந்தே அவள் எண்ணத்தைப் படித்த கார்த்திக், “உனக்கு ஓகே தான.” என்றதும், அகிலா அவனை ஆச்சர்யமாகப் பார்க்க, “உன்னோட முகம்தான் நீ என்ன நினைக்கிறேன்னு அப்படியே காட்டிக் கொடுக்குதே. ஆனா அது நல்லது இல்ல அகிலா. உன்னை நீ கண்ட்ரோல் பண்ணனும்.”


“இது வரை காலேஜ் வீடுன்னு இருந்திருப்பா… ரொம்ப வெளி ஆட்களைப் பார்த்திருக்க மாட்ட… ஆனா இனி அப்படி இல்லை. நீ அதிகம் வெளி ஆட்களோடதான் இருக்கப் போற…இவ்வளவு எக்ஸ்பிரஸ்சிவ்வா இருக்காத. அது நல்லது இல்ல.”


கார்த்திக் சொல்வது தனது நல்லதிற்குதான் என்பதால் அகிலா அமைதியாகக் கேட்டுக்கொண்டாள்.


“ஆனா என்கிட்டே அப்படி இருக்கலாம் தப்பு இல்லை.” எனக் கார்த்திக் கண்சிமிட்ட, இவன் எப்போது விளையாட்டாகப் பேசுவான், எனப் புரியாமல் அகிலா குழப்பாமாகப் பார்க்க, கார்த்திக் அதற்கும் சிரித்தான்.

அவளை வீட்டில் விட்டுவிட்டு சென்றவன், அதன் பிறகும் வாரத்தில் ஒருமுறையாவது அவளை அழைத்து அவள் வேலையைப் பற்றி விசாரித்து விடுவான்.


சில மாதங்கள் சென்ற பிறகு, ஒருநாள் அகிலா வேலை முடிந்து வெளியே வர, கார்த்திக் அவளுக்காகக் காத்திருந்தான். இந்தச் சில மாதங்களில் இருவரும் சரளமாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்து இருந்தனர். அதனால் கார்த்திக்கை பார்த்ததும் அகிலாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.


கார்த்திக் அவனே வீட்டில் விட்டுவிடுவதாக அழைக்க, மறுக்காமல் அகிலா அவனுடன் காரில் சென்றாள். அகிலா அவள் வேலையைப்பற்றிச் சொல்லிக்கொண்டே வர, முகத்தில் புன்னகையுடன் கார்த்திக் அடிக்கடி அகிலாவை பார்த்தபடி கார் ஓட்டினான்.


அவன் மனதில் வேறு எதோ ஓடிக்கொண்டிருந்தது. அவள் சொன்னது அவன் காதில் விழுந்ததா என்று கூடத் தெரியவில்லை.


கார் வீட்டிற்குச் செல்லாமல் வேறு வழியில் செல்ல, அதை உணர்ந்து அகிலா கேட்பதற்குள். “கொஞ்சம் உன்கிட்ட பேசணும் அகிலா, பக்கத்தில இருக்கிற ரெஸ்டாரன்ட் போறேன்.” என்றான் கார்த்திக்.


என்ன பேசணும்? என அகிலா யோசிக்க, அவளை அதிகம் யோசிக்கவிடாமல், அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது.


அகிலாவுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டு கார்த்திக் ஆர்டர் செய்ய, இருவரும் உணவு வந்ததும், சாப்பிட ஆரம்பித்தனர். அகிலா சிறிது நேரம் சென்றே கார்த்திக்கை கவனிக்க, அவன் சாப்பிடாமல் உணவை வெறுமனே அளந்து கொண்டு இருந்தான்.
“என்னகிட்ட என்ன கேட்கணும் கார்த்திக்? ஏன் இப்படி ரெஸ்ட்லஸா இருக்கீங்க.” என அகிலா கேட்டே விட,


“உனக்கு என்னை, என் குடும்பத்தை நல்லா தெரியும் இல்லையா?”
எதற்கு இந்தக் கேள்வி என்று புரியாமலே அகிலா தெரியும் எனத் தலையசைக்க,


“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு அகிலா, உனக்கு என்னைப் பிடிச்சு இருக்கா? அப்படி உனக்கும் விருப்பம் இருந்தா, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனக் கார்த்திக் கேட்டே விட்டான்.


“கார்த்திக், எனக்கு உங்களைப் பிடிக்கும். நீங்க எங்க அண்ணனோட ப்ரண்ட். எனக்கும் நீங்க நல்லதுதான் நினைப்பீங்க. எனக்கு உங்க மேல நிறைய மரியாதை இருக்கு. ஆனா அதுக்கு மேல நான் உங்களைப் பத்தி யோசிச்சது இல்லை. அதுதான் உண்மை.”


“இனி யோசிக்கலாமே அகிலா, நீ வேற யாரையும் விரும்புறியா?”


“உங்களுக்கு எங்க அப்பாவை பத்தி தெரியும் இல்லையா கார்த்திக். எனக்குக் காதல், கல்யாணம் எதுலையும் நம்பிக்கை கிடையாது.”


“உங்க அப்பா அப்படி இருந்தா, எல்லோரும் அப்படி இருப்பாங்களா அம்மு?”


“எங்க அப்பா இன்னொரு பெண்ணை விரும்புறாருன்னு தெரிஞ்சப்ப எங்க அம்மா துடிச்ச துடிப்பை நான் கண்ணால பார்த்து இருக்கேன். அவங்க தன்னோட சுயமரியாதையை விட்டு அவருக்காக அவங்களை மாத்திக்க முயற்சி பண்ணாங்க. அப்பவும் எங்க அப்பா மாறலை. அவங்க எவ்வளவு மனசு ஒடிஞ்சு போனாங்க தெரியுமா?”


“அதெல்லாம் என் மனசுல பதிஞ்சு போச்சு கார்த்திக். எனக்குக் காதல், கல்யாணம் இந்த வார்த்தை எல்லாம் கேட்டாலே வெறுப்பா இருக்கு. எனக்கு எதுவுமே வேண்டாம், என்னை இப்படியே நிம்மதியா இருக்க விடுங்க ப்ளீஸ்.” எனச் சொல்லிவிட்டு அகிலா அங்கிருந்து விரைந்து சென்று விட, அன்றிலிருந்து இன்றுவரை கார்த்திக் அகிலாவின் மனமாற்றதிற்காகக் காத்திருக்கிறான்.


பலமுறை அவளிடம் பேசி புரியவைக்கக் கார்த்திக் முயற்சிக்க, ஒருகட்டத்தில் அவனோடு பேசுவதையே அகிலா நிறுத்திக்கொண்டாள். இவர்களின் கண்ணாம்பூச்சி ஆட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

Advertisement