Advertisement

பனி சிந்தும் சூரியன்


அத்தியாயம் – 6


வரவேற்பில் நின்றிருந்தவர்களிடம் அரட்டை அடித்தபடி அங்கேயே அபர்ணா நின்று விட…. அப்போது அங்கே வந்த அஞ்சலி, “அபர்ணா, அம்மா நீ வந்ததும் உன்னை மேல ரூமுக்கு கூடிட்டு வர சொன்னாங்க .” என்றாள்.


“நானும் என்னோட பையை வைக்கணும், சரி வா போவோம்.” அபர்ணா சொல்ல, மண்டபத்து நுழைவாயிலில் அருகில் இருந்த படி வழியாக இருவரும் மாடிக்கு சென்றனர்.


கண்ணாடி முன்பு நின்று தனது ஒப்பனையைச் சரி பார்த்துக் கொண்டிருந்த நீலீமா, அபர்ணா உள்ளே வருவதைப் பார்த்து, அவள் பக்கம் திரும்பியவள், “வாவ்….அபர்ணா அழகா இருக்க டா.” என மருமகளை அருகில் இழுத்து ரசித்துப் பார்த்தாள்.


நீலீமா விலை உயர்ந்த டிசைனர் புடவையில், வைரமும் தங்கமும் வரிசை கட்டியது போல் ஆபரணங்கள் அணிந்து, எப்போதும் போலக் கண்ணைக் கவரும் வகையில் அழகாக இருந்தாள்.


அபர்ணா அவளுடைய பையை இடம் தேடி வைக்க, “அபர்ணா..” என அழைத்த நீலீமா அவள் கழுத்தில் வைர நெக்லஸ் அணிவிக்க முயல, “வேண்டாம் அத்தை.” என அபர்ணா மறுத்தாள்.


ஏன் என்பது போல் நீலீமா பார்க்க, “நான் அங்க இங்க சுத்துவேன் அத்தை. எனக்குப் பத்திரமா பார்த்துக்க எல்லாம் தெரியாது. வைரம் வேற எங்கையாவது தொலைஞ்சிட்டா என்ன பண்றது?”


“அஞ்சலி போட்டிருக்கா பாரு. அவளை விடப் பெரியவ நீ, பத்திரமா பார்த்துக்க மாட்டியா?”


“அவளுக்கு வைரம் போட்டுப் பழக்கம் அத்தை. எனக்கு அப்படி இல்லையே… எனக்குச் சுமையா தான் தெரியும். இப்படியே விட்டுடுங்களேன் ப்ளீஸ்…”
அபர்ணா முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல, நீலீமா சிரித்து விட்டாள்.


“எங்க நகையும் போடலைனாலும், நீ அழகு தான் டா.” என மருமகளுக்கு விட்டுக்கொடுத்த நீலீமா, “கீழ போகலாமா?” என அதே அறையில் இருந்த தன் கணவரிடம் கேட்க, “உனக்காகத்தான் காத்திட்டு இருக்கேன். வா போகலாம்.” என்றார் ப்ரகாஷ் உற்சாகமாக.


எல்லோரும் வெளியே வந்ததும், நீலீமா அறையைப் பூட்டி சாவியைத் தன்னுடனே வைத்துக் கொண்டார். சின்னப் பெண் போலத் தன் கணவருடன் கை கோர்த்து நடக்கும் அத்தையை ஆசையாகப் பார்த்துவிட்டு, அபர்ணா சோனாவை தேடி சென்றாள்.


இவர்கள் இருவரும் ஜோடி போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்த ராம்மின் முகத்தில் கொலைவெறித் தாண்டவமாடியது. அவன் கார்திக்கோடு வெளியே சென்று வரவேற்பில் நின்று கொண்டான்.


“ஏன் டா இன்னைக்குத்தான் புதுசா பார்க்கிற மாதிரி டென்ஷன் ஆகுற. இது வழக்கமா நடக்கிறது தான.”


“உள்ள அம்மா இருக்காங்க டா… அவங்க பார்த்தா எவ்வளவு பீல் பண்ணுவாங்க? கொஞ்சம் கூட அறிவே இல்லை.”


“உன் அப்பாவுக்கு ஏன் டா புத்தி இப்படிப் போச்சு? இவரால எத்தனை பேருக்கு கஷ்ட்டம்.”


கார்த்திக் அலுத்துக்கொள்ள, இவனுக்கு ஏன் இத்தனை சலிப்பு என்பது போல ராம் அவனைப் பார்த்து வைத்தான். அவன் கஷ்ட்டம் அவனுக்கு.


வரவேற்பு மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே விலை உயர்ந்த கார் வந்து நிற்க, அதிலுருந்து ஸ்டைலாக இறங்கி வந்தான் ஆதித்யா.


வரவேற்பில் நின்றிருந்த பிரதாப், பிரேம் இருவரும் அவனைக் கைகொடுத்து வரவேற்க, அவர்களுக்கு அடுத்திருந்த ராம்மும் வேறு வழியில்லாமல் கைகொடுத்தான்.


ஆதித்யா ஆதி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி. எஸ்.என் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் போட்டியாளர் என்று சொன்னால் மிகை ஆகாது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த இரண்டு கட்டுமான நிறுவனங்கள் தான் எப்போதும் முதல் இரண்டு இடங்களில் இருக்கும்.


வெளிநாட்டு முதலிட்டாலர்கள் முதலீடு செய்ய, இந்தியாவில் கட்டப்படும் மென் பொருள் நிறுவனங்களிள் பெரும்பான்மையானது எஸ்.என் க்ரூப் அல்லது ஆதி க்ரூப் மூலமாகவே இருக்கும். இருவரும் ஒரே துறையில் இருக்கும் போட்டியாளர்கள்.


“ராம், ஆதியை உள்ளே கூடிட்டு போ.” பிரதாப் சொல்ல, ராம் ஆதியுடன் சென்றான்.


இருவரும் தொழிலில் மட்டும் எதிரிகள் அல்ல… கல்லூரியில் இருந்தே இருந்தே இருவருக்கும் ஆகாது. கல்லூரியில் நடக்கும் விளையாட்டு போட்டி என்றாலும் சரி, கலை நிகழ்ச்சி என்றாலும் சரி, இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும்.


எதேட்ச்சையாக இருவரும் கல்லூரியில் சந்தித்தாலும், இருவருக்கும் இடையே அனல் வீசும். பார்வையாலையே ஒருவரையொருவர் எரித்துக் கொள்வார்கள்.


இருவருக்கும் இடையே நடக்கும் போட்டிகளில் பெரும்பாலும் வெல்வது ராம்மாகத்தான் இருக்கும். அவனை வெல்ல முடியாத கோபத்தை, ராம்மின் தந்தையைப் பற்றிப் பேசி ஆதித்யா தீர்த்துக் கொள்வான்.


தந்தையைப் பற்றிப் பேசினாலே ராம்மிற்கு வெறி வந்து விடும். இவன் அவனை அடிக்கச் செல்ல, அவன் பதிலுக்கு எகிற எனக் கல்லூரியே ரணகளமாகத்தான் இருக்கும்.


இவர்கள் இருவரும்தான் அடித்துக் கொள்வார்களே தவிர மற்றபடி மற்றவர்களிடம் இயல்பாகவே பழகுவார்கள்.


இப்போது ஒரே தொழிலில் இருப்பதால்… அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டிய நிலை. உள்ளே பகை இருந்தாலும், மற்றவர்களுக்காக வெளியே சிரித்துப் பேசி விட்டுப் போவார்கள்.


மண்டபத்தின் உள்ளே மேடைக்குச் செல்ல நிறையப் பேர் காத்திருக்க, ராம் என்ன செய்வது என்று யோசித்தவன், விருந்தினர்கள் மணமக்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டு வரும், மறுபக்க வழியில் ஆதியை அழைத்துக் கொண்டு சென்றான்.


மேடையில் அந்தப்பக்கம்தான் அந்த வீட்டின் வானரங்கள் எல்லாம் நின்று கொண்டிருந்தது. அவர்களோடு அபர்ணாவும் இருந்தாள். ராம் வேகமாக வருவதைப் பார்த்தவள், அவன் வழியை மறித்தாள்.


“எங்க போறீங்க?” அவள் அதிகாரமாகக் கேட்க,


“எப்படித் தெரியுது உனக்கு?” என ராம் பதில் கேள்வி கேட்டான்.


“இத்தனை பேர் வரிஸையில நின்னிட்டு இருக்காங்களே, அவங்க என்ன முட்டாளா?”


“வழியை விடு.”


“முடியாது, உங்க பிரான்ட் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணா என்ன ஆகிடுவாரு.” என்றவள், பக்கத்தில் நின்றிருந்த ஆதியிடம், “why can’t you wait for sometime.” என இனிமையாகக் கேட்க,


“why not?” என்றவன், “நீங்க எனக்குக் கம்பனி கொடுக்கறீங்களா?” கொடுத்தா இதை விடப் பெரிய வரிசையில கூட நிற்க தயார்.” என்றான் ஆதித்யா இன்னும் இனிமையாக.


இவன் என்ன டா நமக்கே கேட் போடுறான் என அபர்ணா நினைக்க, இது உனக்குத் தேவையா என்பது போல ராம் பார்த்தான்.


“சரி போனாப் போகுதுன்னு இந்தத் தடவை விடுறேன். இனி இந்தப் பக்கம் வராதீங்க.” என அபர்ணா பெரிய மனது பண்ணி வழியை விடுவது போல விலகி நிற்க,


“இதுக்குப் பேர்தான் குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு சொல்றதா…” ஆதித்யா கிண்டலாகக் கேட்க,


“மீசை இருக்கிறவங்ககிட்ட போய் உங்க சந்தேகத்தைக் கேளுங்க.” என்றாள் அபர்ணா. ராம் முன்னால் செல்ல, ஆதித்யா அவனைப் பின் தொடர்ந்தான்.


மண்டபத்தில் முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த அகிலாண்டேஸ்வரி மற்றும் ஸ்வர்ணாவின் பார்வையில் இவை அனைத்தும் விழுந்தது. அபர்ணா சென்று வழிய ராம்மிடம் பேசுவதைப் பார்த்து, இருவரும் இன்னும் கொதிப்படைந்தனர்.


மேடைக்குச் சென்று விட்டு திரும்பிய ராம் மற்றும் ஆதித்யா இருவருக்கும் அபர்ணாவை பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது. மேடையை விட்டு கீழே இறங்கியதும், இருவருமே அவளைத் திரும்பி பார்க்க, அவள் ராம்மை பார்த்து மூக்கை சுருக்கி அழகு காட்டினாள். அது இன்னும் அழகாக இருக்க, இருவரின் புன்னகையும் மேலும் விரிந்தது.


ஆதித்யாவை பார்த்ததும் பிரகாஷ் ஆர்வமாகப் பேச வர, உடன் நீலிமாவும் இருந்தாள். அவர்களைப் பேச விட்டு, ராம் அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டான்.


“வாங்க ஆதி சாப்பிடலாம்.” பிரகாஷ் அழைக்க,


“இல்லை எனக்கு ஒரு பிசினஸ் டின்னெர் இருக்கு. நான் கிளம்பனும். ” என்றவன், ஒருமுறை மேடையில் இருந்த அபர்ணாவின் பக்கம் பார்வையைச் செலுத்திவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டான்.
வரவேற்பு முடிந்து விருந்தினர்கள் செல்ல இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவு உணவு முடிந்து பெரியவர்கள் ஓய்வு எடுக்க அவரவர் அறைக்குச் செல்ல, இளையபட்டாளம் உறங்காமல் மண்டபத்தில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.


திருமணதிற்காக மண மேடையை வேறு விதமாக அலங்கரித்துக் கொண்டு இருந்தனர். அபர்ணா அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போதே மண்டபத்தைச் சுத்தம் செய்யும் பணி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.


“அவங்க கிளீன் பண்ணி முடிக்கட்டும்.கொஞ்ச நேரம் வெளியே இருக்கலாம். கேட் வரை ஒரு வாக் போயிட்டு வரலாம்.” என எல்லோரும் வெளியே சென்றனர். வெளியே ராம்மும் அவனோடு கார்த்திக்கும் இருந்தனர். அபர்ணாவை பார்த்ததும் கார்த்திக் அவளோடு பேச ஆர்வம் காட்டினான். எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பேசியபடி நடக்க ஆரம்பித்தனர்.


“உங்க ஆளை துபாயில விட்டுட்டு வந்திட்டு, நீங்க இங்க என்ன பண்றீங்க?” கார்த்திக் கேட்க,


“நான் எப்ப சொன்னேன் அவர் துபாயில இருக்காருன்னு. அவர் இங்கதான் இருக்கார்.” என்றாள் அபர்ணா.


“இந்த ஊருக்கு வந்தே பத்து நாள்தான் ஆச்சுன்னு சொன்னீங்க.” கார்த்திக் ஆச்சர்யப்பட,


“ஏன் பத்து நாள் போதாதா லவ் பண்ண?” என அபர்ணா பதில் கேள்வி கேட்க,


அவளைப் பார்த்த கார்த்திக், “உங்களுக்குப் போதும்.” என்றான்.


அவன் சொன்ன தினுசில் அபர்ணாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.


“கல்யாணம் எப்பன்னு எல்லாம் முடிவு பண்ணியாச்சா?”


“ஹலோ, நான்தான் லவ் ப்ரோபோசல் பண்ணி இருக்கேன். இன்னும் அவர் ஓகே சொல்லலை.”


அபர்ணா சொன்னதைக் கேட்டு கார்த்திக் நொந்தே போனான். “ஒன் சைட் லவ்வுக்குத்தான் இந்தப் பில்ட்ப்பா…”


“ம்ம்… ஒன் சைட் எல்லாம் ஒன்னும் இல்லை. அவரும் தான் லவ் பண்றார். ஆனா ஒத்துக்கத்தான் மனசு வரலை.” என அபர்ணா ராம்மை பார்த்து சொல்ல, அவன் காதில் விழுந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை.


கேட்டை தாண்டி வெளியே சென்றவர்கள் சாலை ஓரம் இருந்த கடையில் குளிர்பானம் வாங்கி அருந்தினர். அப்போது அபர்ணாவின் செல்லில் அவள் அம்மா அழைக்க, தள்ளி சென்று பேசினாள்.


மற்றவர்கள் மெதுவாக நடக்க ஆரம்பிக்க, கார்த்திக்கும் ராம்மும் அவளுக்காகக் காத்திருந்தனர்.


“அம்மா, நான் அனுப்பின போட்டோ பார்த்தீங்களா? நான் எப்படி இருக்கேன்?”


“நீ எப்பவும் போல அழகாத்தான் இருக்க…. வீட்டுக்கு வந்துட்டியா அதை மொதல்ல சொல்லு.”


“நாளைக்குத்தான் மா கல்யாணம்.”


“நீ இன்னும் அங்கதான் இருக்கியா? வரவேற்புக்கு மட்டும் போயிட்டு வந்தா போதாதா?”


“அம்மா ப்ளீஸ்… இங்க எல்லாரும் ஒண்ணா இருக்க நல்லா இருக்கு, வீட்டுக்கு போனா நான் மட்டும்தான இருக்கணும்.”


“அவங்க என்ன நமக்கு ரொம்பச் சொந்தமா? உன் அத்தைக்குதான் சொந்தம். அதனால ஒரு அளவோட நிறுத்துன்னா நீ கேட்க மாட்டேங்கிற.”


“அத்தை வீடு தானே மா… வெளி ஆளுங்க மாதிரி சொல்றீங்க.”
“உன் அத்தை வீடுனாலும் அவங்க பணக்காரங்க. நாளைக்கு அவங்க பணத்துக்காக வந்து ஒட்டிகிட்டோம்ன்னு சொல்வாங்க. நமக்கு இதெல்லாம் தேவை இல்லாதது.”


“சரி மா விடுங்க.”


“இனி நீ அங்க போகக் கூடாது சொல்லிட்டேன். நாளைக்குக் கல்யாணம் முடிஞ்சதும் எந்தச் சாக்கும் சொல்லாம வீட்டுக்கு வரணும்.” எனச் சொல்லிவிட்டுச் சுகன்யா போன்னை வைக்க, அபர்ணா டென்ஷனாக இருந்தாள்.


அபர்ணா தள்ளி சென்று பேசி இருக்கவே வேண்டாம், ஏன்னென்றால் அவ்வளவு சத்தமாகப் பேசினாள். அவள் பேசியது கார்த்திக் ராம் இருவருமே கேட்டு இருந்தனர். அவள் அம்மாவுக்கு அவள் இங்கே வந்ததில் விருப்பம் இல்லை என்றும் புரிந்தது.


திரும்பச் செல்லும் போது அபர்ணா எதோ யோசனையாகவே வர… தங்களோடு வந்த மனிஷோடு பேசியபடி கார்த்திக் முன்னே சென்றான். அபர்ணா இவ்வளவு அமைதியாக வருவது ராமிற்கே பிடிக்கவில்லையோ என்னவோ?


“என்ன யோசனை?” எனக் கேட்டே விட்டான்.


அபர்ணாவுக்கு அவன் பேசி விட்டால் போதாதா…. “சத்தியமா உன்னை எப்படிக் கரெக்ட் பண்றதுன்னே தெரியலை….” என அவளும் சொல்லியே விட, ராமிற்குச் சிரிப்புதான் வந்தது.


“சிரிக்காத கொன்னுடுவேன், இதுல என் அம்மா வேற இது பண்ணாத, அது பண்ணாதுன்னு சொல்றாங்க. நான் எப்படி உன்னைப் பார்க்கிறது.”


அபர்ணா சொல்லி முடித்து விட்டு அமைதியாக வர, திரும்ப மண்டபத்திற்குள் வரும் வரை இருவரும் பேசவே இல்லை. எல்லோரும் உள்ளே சென்றிருக்க அபர்ணாவும் உள்ளே சென்றாள்.


“அபர்ணா…” ராம் அழைக்க, அவள் ஆவலாகத் திரும்பினாள்.
“நீ உங்க அம்மா சொல்றது கேளு. அதுதான் எல்லோருக்குமே நல்லது.” எனச் சொல்லிவிட்டு, ராம் அவளுக்கு முன்பே விரைந்து உள்ளே சென்றான்.


அபர்ணாவுக்கு அழுகை வரும் போல் இருந்தது. உள்ளே செல்லாமல் அங்கிருந்த தோட்டத்தில் சிறிது நேரம் நின்றிருந்தாள். சிறிது நேரம் சென்றே உள்ளே சென்றாள்.


கீழே அந்தப் பெரிய ஹாலில் எல்லோரும் இருந்தனர். ராம் மட்டும் இல்லை. யாரோடும் பேசும் நிலையில் இல்லாததால்… அபர்ணா மெதுவாக உள்ளே இருந்த படி வழியாக மாடியில் இருக்கும் அறைக்குச் சென்றாள். அதுவரை மேலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ராம்மும் அவனது அறைக்குச் சென்றான்.


அபர்ணா அன்று இரவு வெகு நேரம் வரை உறங்கவே இல்லை. காலையில் எதோ சத்தம் கேட்டு அவள் கண்விழிக்க, நீலீமாவும், அஞ்சலியும் பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டு இருந்தனர்.


“அபர்ணா, என்ன உட்கார்ந்துட்டே இருக்க… எழுந்து சீக்கிரம் ரெடி ஆகு.” என்றார் நீலீமா.


“நீங்கதான் இந்த வீட்டு ஆளுங்க, அதனால சீக்கிரம் கிளம்பனும். எனக்கு என்ன? நான் மெதுவா வந்தா போதும்.”


அபர்ணா சொல்ல அதைக் கேட்டு புன்னகைத்த நீலீமா நகைகளை எடுத்து அணிய ஆரம்பித்தாள்.


அவர்கள் கிளம்பி சென்ற பிறகே, அபர்ணா நிதானமாகக் குளித்துத் தயாரானாள். வெந்தைய நிறத்தில் சிவப்பு நிற கரையிட்ட பட்டுப்புடவை. சிவப்பு நிறத்தில் வேலைப்பாடுகள் செய்த ரவிக்கை. காதில் பெரிய ஜிமிக்கியும், கழுத்தில் ஆரமும், கைகளில் புடவைக்குப் பொருத்தமான நிறத்தில் வளையல்கள் அணிந்து தயாரானாள்.


முகத்திற்கு ஒப்பனை செய்து சிவப்பு நிறத்தில் பொட்டு வைத்து முடித்த போது, கீழே மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டிருந்தது. அபர்ணா மாடியில் இருந்த பால்கனியில் நின்று கீழே நடக்கும் சம்ப்ரதாயங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


பெண்கள் ஆரத்தி எடுத்து முடித்த பிறகு, பெண்ணுக்கு சகோதரன் என்ற முறையில், ராம் வந்து தங்கள் வீட்டு மாப்பிள்ளைக்கு மாலை அணிவித்து, கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.


அபர்ணா கண்களுக்கு அவனைத் தவிர வேறு யாருமே தெரியவில்லை. ராம் பட்டு வேஷ்ட்டி சட்டையில் பார்க்க அவன்தான் மாப்பிள்ளை போல இருந்தான். அவன் எப்போதும் வைத்திருக்கும் லேசான தாடி… இன்று இன்னும் அவனைத் தூக்கி காட்டியது.


ராம் காலையில் இருந்து இன்னும் அபர்ணாவை பார்க்கவில்லை. ஒருவேளை இங்கிருந்து சென்று விட்டாளோ என்று நினைத்த போது, நிம்மதி வரவில்லை… மாறாக எங்காவது தென்படுகிறாளா என்றுதான் கண்கள் தேடியது.


அவன் மணமகனை மேடையில் விட்டுவிட்டு கீழே இறங்க, அப்போதுதான் அபர்ணா எதிரே வந்து கொண்டிருந்தாள். தூரத்தில் வரும்போது வேறு எங்கோ இருந்த இருவரின் பார்வையும், அருகில் வந்ததும் கட்டுபடுத்த முடியாமல் ஒன்றையொன்று தழுவியது.


அபர்ணா இன்னும் கோபத்தில் இருக்க, அதனால் அவனை முறைத்தபடி சென்றாள். அவள் தாண்டி செல்லும் வரை, சிந்த இருந்த புன்னகையைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தான் ராம்.


அபர்ணாவுக்கு மேடைக்குச் செல்ல இஷ்ட்டம் இல்லை. எங்கே உட்காருவது எனப் பார்த்தவள், கார்த்திக் அருகே இடம் இருந்ததும், அங்கே சென்று அமர்ந்தாள்.


திருமணதிற்கு அவன் குடும்பத்தினரும் வந்து இருந்தனர். அது அவளுக்குத் தெரியாது. உரிமையாக ஒரு பெண் அருகில் வந்து உட்கார்ந்ததும், கார்த்திக்கின் அம்மாவும், அண்ணியும் அவளை ஆர்வமாகப் பார்த்தனர்.
“டேய் ! நீ சொன்னியே பொண்ணு. இவ தானா…” என அவன் அம்மா காதில் கிசுகிசுக்க…


“கொஞ்சம் பேசாம இருக்கீங்களா… காதுல விழுந்தது சாமி ஆடிடுவா…. அவ வேற யாரையோ லவ் பண்றா.” என்றவன், “அபர்ணா, இவங்க என்னோட அம்மா, இவங்க என்னோட அண்ணி நித்யா.” என இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான்.


சிறிது நேரத்தில் அபர்ணா அவர்களோடு சரளமாகப் பேச ஆரம்பித்து விட்டாள். நித்யா அபர்ணாவை விட அதிகம் பேசினாள். அவளின் செல் எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டாள்.


திருமணம் நல்லபடியாக முடிந்தது. “நீ கண்டிப்பா வீட்டுக்கு வரணும்.” என்றவர்கள் அவளிடம் விடைபெற்று சென்றனர். கார்த்திக் அவர்களோடு செல்லவில்லை.


“சரி நானும் கிளம்புறேன்.” என அபர்ணா எழுந்து கொள்ள…


“சாப்பிடலையா நீ… இரு கொஞ்சம் கூட்டம் குறையட்டும். சாப்டிட்டு நானே உன்னை ட்ராப் பண்றேன்.” என்றான் கார்த்திக்.


“சரி நான் போய்ச் சோனாகிட்ட சொல்லிட்டு வரேன்.” என அபர்ணா செல்ல, கார்த்திக் மட்டுமே இருப்பதைப் பார்த்த ராம், அவன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்.


ராம்மிடம் முக்கியமாக எதோ கேட்க வந்த அகிலா, அவன் கார்த்திக்கோடு இருப்பதைப் பார்த்து, எதுவும் கேட்காமலே திரும்பி சென்றாள். அதைப் பார்த்தவனின் முகம் கடுத்தது.


“உன் தங்கச்சி உன்னை எதுக்கோ தேடுற மாதிரி இருக்கு.” கார்த்திக் சொல்ல, ராம் எழுந்து சென்றான்.


“சாப்பிட போகலாமா?” என்றபடி அபர்ணா வர, “நீ வேணா போய்ச் சாப்டிட்டு வா. எனக்குப் பசிக்களை.” என்றான் கார்த்திக்.


“என்ன ஆச்சு இவனுக்கு?” என்பது போல் பார்த்த அபர்ணா, “எனக்கும் பசிக்களை.” என்றாள்.


“சரி வா அப்ப கிளம்புவோம்.” எனக் கார்த்திக் முன்னே செல்ல, அபர்ணா அவனைப் பின் தொடர்ந்தாள்.


மேடையில் நின்றிருந்த அண்ணன் தங்கை இருவரின் பார்வையும் இவர்கள் மீதுதான் இருந்தது. அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். தங்கள் மீது வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று கூடத் தெரியும். ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. செய்யவும் விரம்பவில்லை என்பதுதான் உண்மை.


அன்பை கொடுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத நிலையில் இருவரும் இருந்தனர்.

 

Advertisement