Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் – 5


அன்று இரவு விருந்து உணவு சாப்பிட்டுவிட்டு உறவினர்கள் படுக்கச் சென்ற பிறகு, வீட்டு ஆட்கள் மட்டுமே ஹாலில் இருந்தனர். அப்போது பாட்டி ராம்மின் திருமணம் பற்றிப் பேச்சை ஆரம்பித்தார்.


“ராம், உனக்கும் நம்ம நேகவுக்கும் கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும்ன்னு நாங்க நினைக்கிறோம். நீ என்ன சொல்ற?”


அவர் சொல்லிவிட்டு அபர்ணா முகத்தைதான் பார்த்தார். ஆனால் அவள் முகம் மாறவே இல்லை. எப்போதும் போலவே இருந்தாள். நாம்தான் தவறாக நினைத்துவிட்டோமோ எனப் பாட்டிக்கே தோன்றிவிட்டது.


பிரவீனா நீலிமாவை பார்க்க, அவளும் சந்தோஷமாகவே இருந்தாள். ஆனால் உண்மையில் முகம் மாறியது ராம்தான்.


ராம்மிற்கு உண்மையில் இந்த விஷயம் பிடிக்கவே இல்லை. ஆனால் அபர்ணாவின் பொருட்டே அமைதியாக இருந்தான். எவ்வளவு நிச்சயமாகச் சோனாவிடம் பேசினாள், இப்போது தான் நேகாவை திருமணம் செய்யச் சம்மதம் சொன்னால் என்ன செய்வாள்? என நினைத்தான்.


பாட்டியையும் எல்லோர் எதிரேயும் விட்டக் கொடுக்க முடியாமல், “நான் யோசிச்சு சொல்றேன்.” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து உடனே சென்றான்.


அவன் யோசிக்கிறேன் என்றதே எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணம் என்றதும், தடாலடியாக மறுப்பான் என்றே எல்லோரும் நினைத்தனர். ஸ்வர்ணாவுக்குக் கூட மகிழ்ச்சியாக இருந்தது.


பிரகாஷும் நீலிமாவும் அவர்கள் வீட்டுக்கு செல்ல, ஸ்வர்ணா அன்று அங்கேயே தங்கினார்.


இரவு எல்லோரும் படுக்கச் சென்றபிறகு, அபர்ணா ராம்மின் அறைக்கதவை தட்டினாள். கதவைத் திறந்தவன் அவளை எதிர்பாராததால், திகைத்து பின்னரே சுதாரித்தான்.


“என்ன அபர்ணா?”


“எனக்கு உங்களோட பேசணும்.”


“நாளைக்குப் பேசலாம்.”


“நான் நாளைக்குக் காலையில இங்க இருந்து கிளம்புறேன். இப்ப எனக்குப் பேசனும்.”


“இந்த டைம் நாம ரெண்டு பேரும் பேசுறதை யாரவது பார்த்தா தப்பா நினைப்பாங்க.”


“நாம ஒன்னும் தனியா இல்லை சோனா இருக்காங்க. இந்த ஹால்ல உட்கார்ந்து பேசலாம்.”


அப்போதுதான் ராம் சோனாவும் அங்கு இருப்பதைக் கவனித்தான். ஹாலில் இருந்த விடிவிலக்கை அனைத்து விட்டு, பெரிய விலக்கின் விசையைத் தட்டி விட்டவன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்து அபர்ணாவை பார்த்து என்ன பேசணும் எனக் கேட்டான்.


“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு? உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”
அவள் நேரடியாகக் கேட்டது ராம்மிற்கு ஒன்றும் ஆச்சர்யம் அல்ல. அவனுக்குத் தெரிந்த அபர்ணா அப்படித்தான். மனதில் பட்டதைப் பேசும் ரகம்.


அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், “இன்னைக்குப் பாட்டி ஒரு விஷயம் சொன்னாங்களே… அது உனக்குத் தெரியும் தான?” என அவன் பதில் கேள்வி கேட்க,


“அது பாட்டி அவங்க விருப்பத்தைச் சொன்னாங்க. எனக்கு உங்க விருப்பம்தான் முக்கியம்.”


“எனக்கும் விருப்பம்ன்னு நான் சொன்னா….”


“இல்லை அது பொய். நான் மதியத்துல இருந்து கவனிக்கிறேன். நேகா தான் உங்ககிட்ட வழிய வந்து பேசுறா… அவளைப் பார்க்கும்போது உங்க கண்ணுல காதல் ஒன்னும் தெரியலை… நம்ம வீட்டு பொண்ணு, அந்த மாதிரிதான் அவளோட பேசுறீங்க.”


அபர்ணா சொனதை கேட்டு ராம் உண்மையிலேயே திகைத்துத்தான் போனான். இவளிடம் வெகு கவனமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.


“இதுக்கு முன்னாடி விருப்பம் இல்லை. ஆனா இனி வரலாம்.” என அவன் வேண்டுமென்றே சொல்ல …


அலட்சியமாகத் தோளை குலுக்கிய அபர்ணா, “வரலாம், ஆனா நீங்க ரெண்டு பேரும் பார்க்க பெரிய அண்ணன், சின்னத் தங்கை மாதிரி இருப்பீங்க. உங்க ஜோடிப் பொருத்தம் நல்லாவே இருக்காது.” என்றாள்.


அவள் சொன்னதைக் கேட்டு ராம்மிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் கவனமாக மறைத்துக் கொண்டான். அபர்ணா சொல்வது உண்மைதான். நேகா அழகான பெண் தான். ஆனால் உயரம் மிகவும் குறைவு. ராம்மின் உயரமோ ஆறடிக்கு மேல்… அதனால் இருவரும் சேர்ந்து நின்றால்… அவள் சின்னப் பெண்ணாகத்தான் தெரிவாள்.


“ரொம்ப அழகா இருக்கோம்ன்னு திமிர் தானே உனக்கு.”


“சாரி, நான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது. ஆனா நீங்க நேகாவை லவ் பண்றீங்களா? இல்லைதான.”


“உனக்கு என்ன என்னை ரொம்பத் தெரியுமா… ஒரு ஆறு நாள் என்னைப் பார்த்து இருப்பியா, அதுக்குள்ள லவ் வந்துடுச்சா?” ராம் அவளை மட்டம் தட்ட முயல்வது அபர்ணாவுக்குப் புரிந்தது. மனம் வலித்தாலும், பேசி விடுவது நல்லது என நினைத்தாள்.


“நான் உங்களை லவ் பண்றேன்னு சொன்னேனா… பிடிச்சிருக்கான்னு தான் கேட்டேன். பொண்ணு பார்க்க வரும்போது மாப்பிள்ளையும் பொண்ணும் எவ்வளவு நேரம் பார்த்துகிறாங்க. நான் அதைவிட உங்களை அதிகமா பார்த்து இருக்கேன்னு நினைக்கிறேன்.”


“அது ஓகே, ஆனா என்னைப் பத்தி என்ன தெரியும் உனக்கு. ஒருவேளை இந்த வீட்டை பார்த்து என் மேல காதல் வந்துடுச்சா?”


“நீங்க இந்த வீட்லையா இருக்கீங்க. இல்லையே? இப்ப நீங்களும் என்னை மாதிரி விருந்தாளியா தானே வந்து இருக்கீங்க. அப்புறம் நான் ஏன் இந்த வீட்டு மேல ஆசைப்படணும்.”


அவளை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ராம் வார்த்தையை விட, அபர்ணா சொன்ன பதிலை கேட்டதும், அவனுக்கு உறுத்த ஆரம்பித்து விட்டது. உண்மையில் ராம்மின் வீடு இதை விட அழகாக இருக்கும். அது அபர்ணாவுக்குத் தெரியாது.


அவள் நேரடியாகப் பேசும்போது, தான் இப்படிச் சுற்றி வளைப்பது அவனுக்கே பிடிக்கவில்லை. அதுவும் அபர்ணா ஒன்றும் அவளாக மனதில் ஆசை வளர்த்துக் கொள்ளவில்லை. முதல் தடவை பார்க்கும்போதே, ஒருவர் மீது மற்றவருக்கு இருந்த ஈர்ப்பு இருவரும் அறிந்ததே.


“சாரி அபர்ணா. உண்மையைச் சொன்னா, எனக்கு உன்னைப் பிடிக்கும். ஆனா நான் உன்னைக் காதலிக்கிறேனான்னு கேட்டா இல்லை.” இதை ராம் சொல்லும்போதே அபர்ணாவின் முகம் மலர்வதைக் கவனித்தவன், “இரு இதையும் கேட்டுடு, இதை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு போற எண்ணம் எனக்கு இல்லை.” என அவன் முடிவை திட்டவட்டமாகச் சொல்ல… அபர்ணா முகம் வாடிவிட்டது.


“ஏன்?”


“எனக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அதை உன்கிட்ட சொல்லனும்ன்னு அவசியம் இல்லை.”


அபர்ணா அமைதியாக இருக்க, “சரி இப்ப எல்லாம் தெளிவாகிடுச்சுன்னு நினைக்கிறேன். நான் தூங்கப் போறேன்.” என்றவன், அவன் அறைக்குச் செல்ல, எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சோனாவுக்குத்தான் கஷ்ட்டமாகப் போய்விட்டது.


“சாரி அபர்ணா, அண்ணன் விருப்பம் தெரியாம, நான் வேற உன்னை ஏத்தி விட்டேன்.”


“விடு சோனா, அவர் என்னைப் பிடிக்கலைன்னு சொல்லலையே… கொஞ்ச நாள்தான் தெரியும், அதுக்குள்ள லவ் பண்றேன்னு சொன்னா, அதுதான் பொய்.”


“அண்ணன் தான் மேற்கொண்டு கொண்டு போக இஷ்ட்டம் இல்லைன்னு சொல்லிட்டாரே.”


“அப்படி அவர் தான சொன்னார். நான் சொல்லலையே?”அபர்ணா சொல்ல, சோனா அவளை முறைத்தாள்.


“எனக்கும் தெரியலை சோனா… அவர் சொன்னதுக்காக அப்படியே விடவும் முடியாது. பார்க்கலாம்.”


அபர்ணாவுக்குமே என்ன செய்வது என அப்போது ஒன்றும் தெரியவில்லை. அவள் யோசனையுடனே படுக்கச் சென்றாள்.


மறுநாள் காலையிலேயே அபர்ணா அவள் வீட்டுக்கு கிளம்பி விட்டாள். நீலிமா கூடப் போன்னில், “இப்பவே ஏன் போற? கல்யாணம் முடிஞ்சதும், நான் வந்து உதவி செய்கிறேன்.” எனச் சொல்ல, அபர்ணா மறுத்தாள்.


“என்கிட்டே இருக்கிறது கொஞ்ச சாமான் தான். இனிதான் எல்லாம் வாங்கணும். சனி ஞாயிறுன்னா வாங்க ஈஸியா இருக்கும்.”


“சரி ஆனா கல்யாணத்துக்கு வந்திடு.”


“கண்டிப்பா, இல்லைனா சோனா என்னை அடிப்பாளே.”


காலை உணவு நேரம் என்பதால்… எல்லோரும் கீழேதான் இருந்தனர். அபர்ணா கிளம்புவதால்… அன்று வீட்டின் இளையபட்டாளம் கூட எழுந்து வந்திருந்தனர்.


“நீ கல்யாணம் முடிஞ்சதுமே போகலாம்.” மமதி சொல்ல,


“திரும்ப ஆரம்பிக்காத. நான்தான் கல்யாணத்துக்கு வர்றேன்னு சொன்னேன் இல்ல.” என்றாள் அபர்ணா.


அகிலாண்டேஸ்வரிக்கு மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. எல்லாம் அவர் நினைத்தது போல்.. நடப்பதாக நினைத்தார்.


“ரொம்பத் தேங்க்ஸ் பாட்டி, உங்க வீட்ல என்னைத் தங்க அனுமதிச்சத்துக்கு. நான் இத்தனை பேரோட ஒரே வீட்ல இருந்ததே இல்லை. புது அனுபவம் எனக்கு. கோயிங் டு மிஸ் யூ ஆல்.” அபர்ணா சொல்ல,


“எங்க ராம், நேகா கல்யாணத்துக்கும், நீ ஒரு வாரம் முன்னாடியே வந்து தங்கேன், யார் வேண்டாம்ன்னு சொன்னது?” என்றார் பாட்டி.


அகிலாண்டேஸ்வரி சொன்னதும், அபர்ணா ராம்மைத்தான் பார்த்தாள். அப்படியா என்பது போல… பிறகு புன்னகையுடன் அனைவரிடமும் விடைபெற்று சென்றாள்.


மற்றவர்களுக்கு அவள் புன்னகை சாதாரணமாகத் தெரிந்தாலும், பாட்டிக்கு வயிற்றில் புளியை கரைத்தது.


வீட்டில் குடி இருந்தவரே, வீட்டை பெயிண்ட் அடித்து வைத்திருந்தார். முன் தினம் தான் பெயிண்ட் அடித்து இருந்தது. பெயிண்ட் வாசம் போக, அபர்ணா ஜன்னல் கதவு எல்லாம் திறந்து வைத்தாள்.


மூன்று படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடுதான். அவள் ஒருத்திக்கு மிகவும் பெரியது. ஆனால் அடுத்த வருடம் அவள் குடும்பத்தினர், இங்கே வருவதால்… இந்த வீடு அவர்களுக்குத் தேவைதான்.


அபர்ணாவின் தந்தை ஸ்ரீகாந்துக்கு உடல்நிலை சரி இல்லை. அதனால் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிடலாம் என நினைத்தனர். இந்த வருடம் அருணின் படிப்பு முடிவதால்… அடுத்த வருடம் அவனை இங்கே வந்து கல்லூரியில் சேர்பதாக இருந்தது.


வீட்டை சுத்தம் செய்து, இரண்டு படுக்கை அறைகளைப் பூட்டிவிட்டு, ஒன்றை மட்டும் தன் உபயோகதிற்கு வைத்துக் கொண்டாள்.


பெற்றோர் இருவருமே வேலை பார்ப்பதால்…. வீட்டு வேலை செய்து பழக்கம் தான். அம்மா வீட்டில் இருக்கும் அன்று மட்டும் எதுவும் செய்ய மாட்டாள். ஏன் உணவை கூடச் சில நேரம் ஊட்டி விடச் சொல்லி பிடிவாதம் பிடிப்பாள்.


‘சாப்பிட வாங்க.’ எனக் கத்துவதை விட, ஒரே தட்டில் அக்கா தம்பி இருவருக்கும் உணவை பிசைந்து சுகன்யா ஊட்டிவிட்டு சென்று விடுவார். ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்து விடும்.


கவனம் எல்லாம் டீவியில் இருப்பதால்.. என்ன கொடுக்கிறார் என்று கூட இருவருக்கும் தெரியாது. அவர்களே சாப்பிட்டால், இதுவா? அதுவா? எனக்கு இது பிடிக்காது என அவரை ஒரு வழியாக்கி விடுவார்கள்.


பெற்றோரின் நினைவு வந்தவுடன் வீட்டிற்கு அழைத்துப் பேசினாள்.


“ஹப்பாடா ! அங்க இருந்து வந்துட்டியா? இப்பதான் நிம்மதியா இருக்கு.”
இதற்கே அம்மா இப்படிச் சொல்கிறார்கள், இன்னும் அவள் ராம்மிடம் வளர்த்து வைத்திருக்கும் நேசத்தை அறிந்தால்…. கண்டிப்பாக உதை கிடைக்கும் என நினைத்துக் கொண்டாள்.


“திருச்சியில இருந்து பாட்டியை உனக்குத் துணைக்குக் மாமா கொண்டு வந்து விடுவான். சமையல் மட்டும்தான் பாட்டியால பண்ண முடியும். வீட்டு வேலைக்கு ஆள் வச்சுக்கோ.”


“இல்லைமா வேண்டாம். நாங்க ரெண்டு பேர் தான. நான் பாட்டிக்கு ஹெல்ப் பண்றேன்.”


“கிழிச்ச நீ…. என்னை ஏமாத்துற மாதிரி பாட்டியையும் ஏமாத்தாத.”


“காலையில காலேஜ் போகும்போது பண்ண முடியாது. திரும்ப வந்து பண்றேன்.”


“நானும் பார்க்கத்தானே போறேன்.”


“நல்லா பாருங்க, எவ்வளவு சமத்தாகிட்டா உங்க பொண்ணுன்னு தெரியும்.”


ஞாயிறு மாலை வரவேற்பு, மறுநாள் காலை திருமணம். வரவேற்புக்கு செல்ல அபர்ணா கிளம்பிக்கொண்டு இருந்தாள். மறுநாள் திருமணம் முடிந்துதான் திரும்பி வருவாள். அதற்கும் தேவையானது எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.


சிவப்பு நிறத்தில் முழு நீள ஆடை அணிந்து இருந்தாள். கையில்லாத உடை. பெரிய கருப்பு நிற கற்கள் பதித்த சங்கிலியை இடையை சுற்றி தொங்க விட, அவளின் இடை வடிவை இன்னும் அழகாகக் காட்டியது. காதில் பெரிய தோடு, இடது கையில் கடிகாரமும், வலது கையில் ப்ரேஸ்லெட் மட்டும்.


ஆடைக்குப் பொருத்தமான தலை அலங்காரம், முக ஒப்பனை செய்து, சிவப்பு நிற லிப்ஸ்டிக் தீட்டி இருந்தாள்.


கண்ணாடியில் உதடு குவித்து அழகு பார்த்தவள், “அழகு டி அபர்ணா.” என அவளே சொல்லிக் கொண்டாள். கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு, “டைம் ஆகிடுச்சு.” எனப் பதறியபடி,கைப்பையும், ஆடைகள் இருந்த மற்றொரு பையையும் எடுத்துக் கொண்டு காலனி அணிந்து கிளம்பி விட்டாள்.


பெரிய மண்டபம். கேட்டில் இருந்து உள்ளே செல்லவே அரைக் கிலோமீட்டர் தூரம் இருக்கும். டாக்ஸிக்குக் கேட் வரைதான் அனுமதி, சொந்த காரில் வருபவர்கள் உள்ளே வரை செல்லலாம்.


கேட்டில் இறங்கியவள், அணிந்திருந்த ஹீல்ஸ் மற்றும் பையோடு நடக்கவே சிரமபட்டாள். பின்னால் வந்த காரில் இருந்தவன், அவள் திணறுவதைப் பார்த்து, “கார்ல ஏறிக்கோங்க, அங்க போய் விடுறேன்.” என்று கதவை திறந்து விட, “தாங்கஸ்…” என்றபடி அபர்ணா காரினுள் ஏறி அமர்ந்தாள்.


“ஹப்பா…” என அபர்ணா பெருமூச்சு விட, ஓட்டுனர் இருக்கையில் இருந்தவனோ அவளையே பார்த்தான். அதைக் கவனித்த அபர்ணா, “ஹலோ ! பார்த்ததும் காதல்ல எல்லாம் விழுந்துடாதீங்க. எனக்கு அல்ரெடி ஆள் இருக்கு.” என்றதும், அவனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.


“ஹலோ மேடம் ! நானும் அதுக்காகப் பார்க்கலை… எனக்கும் ஆள் இருக்கு தெரிஞ்சிக்கோங்க.” என்றான்.


“அப்புறம் ஏன் என்னை அப்படிப் பார்த்தீங்க?”


“உங்களை இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையே, யாரா இருக்கும்ன்னு யோசிச்சேன்.”


“ஓ… நான் அபர்ணா, என்னை உங்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. நான் துபாயில இருந்து வந்து ரெண்டு வாரம்தான் ஆகுது.”


“நான் கார்த்திக், சென்னை டி. நகர்ல ஆடிட்டிங் ஆபீஸ் வச்சிருக்கேன். இந்த எஸ். என் க்ரூப்ஸ் மொத்த ஆடிட்டிங் நான்தான் பார்கிறேன்.”


“ஓ… யாரு எஸ். என்.”


“நீங்க மாப்பிள்ளை வீடா பொண்ணு வீடா?”


“பொண்ணு வீடுதான்.”


“அவங்க தாங்க எஸ். என் க்ரூப்ஸ்.”


“நானே வந்து பத்து நாள்தான் ஆகுது. எனக்கு எப்படித் தெரியும். என்னோட அத்தைதான் இந்த வீட்டு மருமகள்.”


“உங்க அத்தை பேர் என்ன?”


“நீலீமா ப்ரகாஷ்.”


பெயரை கேட்டதும் முகம் மாறாமல் காக்க, கார்த்திக் பெரிதும் பாடுபட்டான்.


முன்னே நிறைய வாகனங்கள் சென்றதால், இவர்கள் கார் மெதுவாக ஊர்ந்துதான் செல்ல முடிந்தது.


“நீங்க உங்க அத்தையைப் போலவே அழகு.” கார்த்திக் சொல்ல, அபர்ணா புன்னகைத்தாள்.

தன் அத்தையைக் கொண்டே மற்றவர்கள் அவளை வெளித்தொற்றத்தில் மட்டும் அல்ல, உள்ளேயும் எடை போடுகிறார்கள் என அவளுக்குத் தெரியவில்லை.


தெரிந்தாலும், அவள் அதை மதிப்பாளா? கண்டிப்பாகக் கிடையாது.

மண்டபத்தின் அருகே சென்றதும், அங்கிருந்த ஊழியர்கள் வந்து காரின் சாவியை வாங்கிக் கொண்டு, டோக்கன் கொடுத்தனர். அவர்களே சென்று எங்காவது பார்க் செய்து விடுவார்கள்.


அபர்ணா தன் பைகளை எடுத்துக் கொண்டு காரில் இருந்து இறங்கினாள். கார்த்திக் அவளோடு இணைந்து நடந்தான்.


இருவரும் சென்றபோது, விருந்தினர்களை வரவேற்க வாசலில் நின்றிருந்த ராம், இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்துப் புருவத்தை உயர்த்தினான்.


அபர்ணாவை பார்த்ததும், மமதி அகில் எல்லாம் அவளிடம் செல்ல, அவர்களைப் பார்த்ததும் அபர்ணாவுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது.


ராம் கார்த்திக்கை வரவேற்று அழைத்துச் சென்றான்.


“டேய் ராம், உங்கிட்ட ஒன்னு கேட்கணும். அதோ அந்தப் பொண்ணு யார்ன்னு உனக்குத் தெரியுமா”


“ம்ம்… தெரியும். ஆனா உனக்கு எப்படித் தெரியும்?”


“கேட்ல இருந்து உள்ள வர லிப்ட் கொடுத்தேன் டா.”


“அவளே யார்ன்னு உன்கிட்ட சொன்னாளா?”


“இல்லை, நான்தான் கேட்டேன். அவ வரலாறே சொல்லிட்டா. யாரையோ லவ் பண்றாளாம், என்னைச் சைட் எல்லாம் அடிக்காதேன்னு வேற சொல்லிட்டா.”


கார்த்திக் சொன்னதைக் கேட்டு ராம்மின் முகம் மாற, “எல்லாத்தையும் சொன்னாளே, யாரை லவ் பன்றேன்னு சொல்லலையா?”


“இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா அதையும் சொல்லி இருப்பா. அதுக்குள்ள இறங்க வேண்டிய இடம் வந்திடுச்சு. அடுத்தத் தடவை பேசும் போது கேட்டுட்டா போச்சு.”


“ரொம்ப முக்கியம், வந்த வேலையைப் பாருடா.”


“நீயேண்டா கடுப்பாகிற?” கார்த்திக் சொல்லும் போதே, அவனைப் பார்த்த அபர்ணா, “தேங்க்ஸ் கார்த்திக்.” எனச் சத்தமாகச் சொல்ல, பதிலுக்குக் கார்த்திக் கையசைத்தான்.


பிறகுதான் அபர்ணா ராம்மை பார்த்தாள். “ஹாய்…” எனச் சொல்லி, அவள் பளிச்செனப் புன்னகைக்க… பதிலுக்கு வேண்டா வெறுப்பாக

“ஹாய்…” என்றவன், கார்திக்கோடு உள்ளே சென்றான். ஆனால் அவன் மனம் தடுமாறுவது, அவன் மட்டுமே அறிந்தது.


“ரொம்பக் கஷ்ட்டமா இருக்கும் போலிருக்கே…” என நினைத்தபடி அபர்ணா, மற்றவர்களிடம் சென்றாள்.

 

 

 

Advertisement