Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 4


அன்றைய நாளின் இனிமையுடன் அபர்ணா உறங்கி விட, அங்கே உறக்கம் வராமல், அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தான் ராம். வெகு நேரம் சென்றே உறங்கினான்.


முன் தின இரவு நீரில் விழுந்தது, அபர்ணாவுக்கு மறுநாள் எழுந்திருக்கும் போதே தலை வலி, ஜலதோஷம் இருந்தது. இருந்தாலும், வழக்கம் போல் காலையில் எழுந்து வந்து ஹாலில் உட்கார்ந்து இருந்தாள்.


ராம் ஜாகிங் முடித்து விட்டு வந்தவன், அபர்ணாவை பார்த்ததும் கண்டுகொள்ளாமல் தன் அறைக்குச் சென்றான். அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில், உடம்ப முடியாத நிலையிலும் உட்கார்ந்திருந்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.


திரும்ப ஆரம்பித்து விட்டான் என நினைத்துக் கொண்டாள். எப்போது பேசுவான், எப்போது முகத்தைத் திருப்புவான் என்று ஒன்றும் புரியாத நிலை. இருந்தாலும் வீம்புக்காக அங்கயே உட்கார்ந்து இருந்தாள்.


ராம் சென்று அலுவலகம் செல்ல கிளம்பி வந்தான். அபர்ணா அவனையே பார்ப்பது கண்ணில் பட்டாலும், எதோ அவசரமாகச் செல்வது போல்… அங்கிருந்து விரைந்து சென்றான். இத்தனைக்கும் மற்றவர்களும் இருந்தனர். யாரையும் கண்டுகொள்ளவில்லை.

 

கீழே உணவு மேஜையில் அமர்ந்திருந்த சோனா, “அபர்ணாவுக்கு உடம்பு சரி இல்லை.” என்றதும்,


“என்ன ஆச்சு?” எனக் கேட்டான்.


“நேத்து தண்ணில விழுந்தா இல்ல… தலைவலி, ஜலதோஷம். சாப்டிட்டு மாத்திரை போடுன்னு சொன்னேன்.” என்றாள்.


சாப்பிட்டதும் அப்படியே கிளம்ப மனமில்லை அவனுக்கு. திரும்ப மாடிக்குச் சென்றான். அபர்ணா அவள் அறையில் இருந்தாள்.
எதற்கென்றே தெரியவில்லை அழுகையாக வந்தது. தலையணையில் முகம் புதைத்து அழுதாள். அறையின் கதவு திறக்கப்பட அஞ்சலி என நினைத்து அவள் பார்க்க, வந்தது ராம்.


அவனைத் திடிரென்று பார்த்ததும் கண்ணீரை கூட மறைக்கத் தோன்றாமல் எழுந்து அமர்ந்தாள்.


ஏற்கனவே வாடி இருந்த முகம். அழுததால், தக்காளி பழம் போல் சிவந்து விட்டது. அதைப் பார்த்து ராம் மிகவும் பயந்து விட்டான்.


“என்ன ரொம்ப முடியலையா?” அவன் கவலையாகக் கேட்க,


“இல்லை அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.”

 

“நீ எதுக்கும் டாக்டர்கிட போயிட்டு வா. நான் மனிஷை கூடிட்டுப் போகச் சொல்றேன்.”


“இல்லை அவ்வளவு மோசமா இல்லை.”


“அப்ப ஏன் அழற?”


“தெரியலை…. எனக்குச் சின்னதா உடம்புக்கு வந்தா கூட எங்க அம்மாவை ரொம்பப் படுத்தி வைப்பேன். எங்க அம்மாதான் சாப்பாடு மாத்திரை எல்லம் கொடுப்பாங்க. இங்க நான் ரொம்பத் தனியா பீல் பண்றேன். அதுதான் அழுகையா வருது.”


அவள் அப்படிச் சொல்லும்போது, அவனுக்கு விட்டு செல்ல மனமில்லை.


“சரி படுத்துக்கோ வரேன்.” என வெளியில் சென்றான்.
திரும்ப அவன் அறைக்குள் வந்த போது, கூடச் சோனாவும் வந்தாள். அவர்களோடு பணிப்பெண் உணவை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்தாள்.


அபர்ணா சாப்பிட்டு மாத்திரை போட்டுத் திரும்பப் படுக்கும் வரை இருவரும் உடன் இருந்தனர். அவள் உறங்க ஆரம்பித்ததும், இருவரும் வெளியே வந்தனர்.


“அடிக்கடி வந்து பார்த்துக்கோ, சரி ஆகலைனா போன் பண்ணு. டாக்டரை வர சொல்றேன்.”


“சரி அண்ணா.” என இருவரும் பேசியபடி கீழே வந்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த அகிலாண்டேஸ்வரி என்ன எனக் கேட்டார்.


சோனா அபர்ணாவுக்கு உடம்பு சரி இல்லாததைச் சொல்ல,


“அவளுக்கு நீ பணிவிடை பண்றியா? கல்யாண சமயத்துல உனக்கு உடம்பு முடியலைனா என்ன பண்றது?”


“நான் அவ அத்தையை வந்து கூடிட்டுப் போகச் சொல்றேன்.” என்றார்.


“பாட்டி வீட்டுக்கு விருந்தாளியா வந்த பொண்ணை, போன்னு சொல்றது தப்பு பாட்டி. சோனா பார்த்துக்க வேண்டாம். நான் அம்முவை பார்த்துக்கச் சொல்றேன்.” என்றான் ராம்.


இவனுக்கு ஏன் அவள் மீது இவ்வளவு அக்கறை எனப் பாட்டிக்கு, அப்படி ஒரு கோபம். ஆனால் வெளியில் காமிக்க முடியாமல் இருந்தார்.


“சரி கூடிட்டுப் போகச் சொல்லலை. ஆனா இங்க வந்து பார்த்துக்கச் சொல்றேன். அம்மு என்ன அவளுக்கு வேலைக்காரியா?” எனக் காட்டமாகக் கேட்டார்.


“சரி என்னவோ பண்ணுங்க.” என்றவன், வாசலை நோக்கி செல்ல, அவன் பின்னே சென்ற சோனா, “நான் பார்த்துகிறேன் அண்ணா. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.” என்றாள்.


“நீ தள்ளி இருந்தே பார்த்துக்கோ சோனா, கல்யாண நேரத்தில உனக்கு உடம்பு முடியலைனா, அதுவும் கஷ்ட்டம் தானே.” என்றான்.
ராம் சென்றதும், மேலே வந்த சோனா அபர்ணா அறைக்குச் செல்ல, அவளும் அதையே சொன்னாள்.


“மாத்திரை போட்டதும் பரவாயில்லை. நான் ரெஸ்ட் எடுக்கிறேன். நீங்க இங்க வராதீங்க. உங்களுக்கு உடம்புக்கு வந்திட போகுது.” என்றவள் மீண்டும் உறங்கி விட்டாள்.


ராம் வந்து பார்த்து விட்டு சென்றதுனாலோ என்னவோ… மனதில் இருந்த அலட்டல் குறைந்து அமைதியாக உறங்க முடிந்தது. சோனா அஞ்சலியை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்றாள்,


மதியமும் பணிப்பெண் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு, மீண்டும் மாத்திரை போட்டு நன்றாக உறங்கி எழுந்தவள், மாலையில் குளித்துப் புது மலராக வெளியே வந்தாள். அதுவும் ராமை பார்த்ததும், அவள் முகம் மலர்ந்த விதத்தை அவனும் கவனித்தான்.


“எப்படி இருக்க?”


“ம்ம் சூப்பரா இருக்கேன். சாரி உங்களுக்கு எல்லாம் கஷ்ட்டம் கொடுத்திட்டேன்.”


“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. ரொம்ப அலட்டாம ரெஸ்ட் எடு.” என்றவன், அறைக்குள் சென்று விட்டான்.


காலையிலேயே நீலிமாவுக்கு அகிலாண்டேஸ்வரி போன் செய்து சொல்லி இருந்தார். ஆனால் அவள் நிதானமாக மாலை தான் வந்தாள்.

 

அதைப் பற்றி அகிலாண்டேஸ்வரி குறிப்பிட, “நான் அஞ்சலிக்கு போன் பண்ணி கேட்டேன் அத்தை. அவ சொன்னா அபர்ணா மாத்திரை போட்டுட்டு தூங்கிறதா. ரொம்ப முடியலைனா போன் பண்ணுன்னு சொல்லி இருந்தேன்.” என்றாள்.


அதே நேரம் அபர்ணாவும் கீழே இறங்கி வர, நீலிமாவின் முகம் மலர்ந்தது. அத்தையைப் பார்த்ததும் அபர்ணாவும் ஆவலாகச் சென்று, அவள் அருகில் அமர்ந்தாள்.


மருமகளின் தலையைக் கோதிய நீலீமா, “எப்படி டா இருக்க?” எனக் கேட்க, “இப்ப நல்லா இருக்கேன் அத்தை.” என்றாள் மருமகள்.

 

இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்து அகிலாண்டேஸ்வரிக்கு பற்றி எரிந்தது.


இரவு வரை நீலிமா அங்கிருந்தாள். பிரகாஷ் வந்து அவளை அழைத்துச் சென்றான். இரவு உணவை எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் போது, ராம் அங்கு இல்லை.


காரில் வீடு திரும்பும்போது நீலீமா பேசாமல் அமைதியாக வர, கார் ஓட்டுனர் இருந்ததால்… பிரகாஷும் அப்போது அவளிடம் எதையும் கேட்கவில்லை.


வீட்டிற்குள் வந்ததும் தனது கைப்பையைத் தூக்கி சோபாவில் போட்ட நீலிமா, “உங்க அம்மாவுக்கு அபர்ணா அங்க இருக்கிறது சுத்தமா பிடிக்கலை. அவங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது.”


“அது அவங்க வீடு மட்டும் இல்லை. உங்களுக்கும் அதுல பங்கு இருக்கு. உங்க அப்பா வாங்கின இடம்னாலும், அந்தப் பழைய வீட்டை இடிச்சிட்டு கட்டினதுல உங்க பங்கும் இருக்கு.”


“எப்பவும் உங்க அம்மாவே அதை ஆளனும்னு நினைக்கக் கூடாது.”


“இப்பவும் நீங்க உங்க தம்பிகளோட சேர்ந்துதான் தொழில் செய்றீங்க.”


“ராம்மை பார்த்து இந்த வீட்டு வாரிசுன்னு சொல்ல தெரிஞ்சவங்களுக்கு, அஞ்சலியும் அந்த வீட்டு வாரிசுன்னு தெரியாதா?”


“விடு நீலீமா, உனக்கு அம்மாவை பத்தி தெரியாதா? அவங்களுக்கு ஸ்வர்ணா மேல பாசம் அதிகம். அதனால உங்கிட்ட இப்படி நடந்துக்கிறாங்க.”


“இதுல என் தப்பு எதாவது இருக்கா? நான் உங்க பின்னாடி சுத்தினேனா. உங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நானா சொன்னேன்?”


“உங்க அம்மா என்னை எவ்வளவு மட்டமா கேவலமா நடத்தினாங்க. அதை நான் ஒருநாளும் மறக்க மாட்டேன்.”


“எனக்கு உரிமை இல்லைன்னு நினைக்கிறாங்க இல்லையா… அந்த இடத்தில நான் என்னோட உரிமையை நிலை நிறுத்தி காட்றேனா இல்லையான்னு பாருங்க.”


“எப்பவும் ராம்ன்னு அவனோட புகழ் தான்.”


“நீலீமா, நீ அம்மா செய்றதுக்கு ராம்மை ஏன் கோவிச்சிக்கிற?”


“எனக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும். அந்த வீட்ல அவன் என்னைக்கும் உரிமை கொண்டாட மாட்டான்.”


“உங்க மகனை நான் உரிமை கொண்டாட வேண்டாம்ன்னு சொல்லலை… அதே உரிமை நமக்கும் அந்த வீட்ல இருக்குன்னு தான் சொல்றேன்.”


“உரிமை இருந்தா கூட ராம் அதை எடுத்துக்க மாட்டான். அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், அவங்க அம்மாவை கூடிட்டு அந்த வீட்டை விட்டு போயிட்டான் இல்லையா?”


“உங்களுக்கு உங்க மூத்த மனைவியோட பிள்ளைகளைதான் பிடிக்கும். நீங்க எப்பவும் அவனுக்குதான் சப்போர்ட் பண்ணுவீங்க.”


“அப்படி இல்லைடா… எனக்கு என்னோட மூன்னு பசங்களுமே ஒண்ணுதான். அஞ்சலி குட்டிய நான் விட்டுக் கொடுப்பேனா?”


“என்னவோ போங்க. உங்க அம்மா இப்படியே பண்ணிட்டு இருந்தா ஒருநாள் பெரிய பிரச்சனை ஆகப்போகுது பார்த்திட்டே இருங்க.”
நீலீமா சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல, பிரகாஷுக்கு ஆயாசமாக வந்தது. அவர் அங்கே சோபாவிலேயே உட்கார்ந்து கொண்டார்.


மறுநாள் வீடே விழாக்கோலம் கொண்டது. அன்று வீட்டில் லக்ஷ்மி பூஜை போன்ற சம்ப்ரதாயங்கள் இருக்க, மாலையில் சோனாவுக்கு நலங்கு வைக்கும் வைபவமும் இருந்தது. அன்றுதான் வீட்டில் மெஹந்தி போடுவதும் நடந்தது.


காலையிலேயே சோனாவுக்கு மெஹந்தி போட பார்லரில் இருந்து ஆட்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். முதல் தளத்தில் ஹாலில் உட்கார்ந்து அவளுக்கு மருதாணி இட, உடன் அவள் தோழிகள் இருந்தனர்.


நல்ல நேரத்தில் லக்ஷ்மி பூஜை செய்து முடிக்க, ஒருபக்கம் பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருந்தது.


பிரவீனா தன் கணவர் சரணுடன் வீட்டிற்குள் நுழைந்தார். கொஞ்ச நேரம் பொதுவாக அலவல் ஆடிவிட்டு, மகளைத் தனது அறைக்கு அழைத்து வந்த அகிலாண்டேஸ்வரி, அபர்ணா வந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் சொல்ல, ப்ரவீனவுக்குக் கொதிக்க ஆரம்பித்தது.


“ஓ… யார்கிட்டயோ இந்த வீட்டோட ராஜியத்தைக் கொடுக்கத்தான் நான் இங்க இருக்கேனா?”


“இப்ப சொல்லு. நீயும் தானே உன் அண்ணனோட ரெண்டாவது பொண்டாட்டியை தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடின. இப்ப உனக்கே அவ ஆப்பு வச்சதும் வலிக்குதா?”


“நீலீமா அப்ப எதோ திட்டத்தோடத்தான் அபர்ணாவை இங்க அனுப்பி வச்சிருப்பாளா?”


“அது எனக்குத் தெரியாது. ஆனா இந்தப் பொண்ணு ராம்முக்கு வலை விரிக்கிறா. அது மட்டும் எனக்குத் தெரியும்.”


“எதாவது செய்யணும் மா.”


“ஸ்வர்ணா இன்னைக்கு வருவா நான் அவகிட்ட பேசுறேன்.” என்றார் அகிலாண்டேஸ்வரி.


நேகாவை தனியே அழைத்துச் சென்ற பிரவீனா, “உனக்கும் ராம்முக்கும் பாட்டி கல்யாணம் பேச போறாங்க.” என்றாள்.


அதுவரை நேகா அந்த மாதிரி யோசித்தது கூட இல்லை. ஆனால் அவளுக்கு விருப்பம் இல்லாமலும் இல்லை. அவள் அம்மா சொன்னால் அவளுக்குச் சரிதான்.


ராம் அவளுக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளை. அப்படிதான் நினைத்துக் கொண்டாள். இதுவரை ராம்மை பார்த்தது வேறு, ஆனால் இனி ராம்மை பார்ப்பது வேறு அல்லவா. கொஞ்சம் வெட்கம் வந்தது.


புன்னகையுடன் அவள் அங்கிருந்து நகர, அவளைப் பிடித்து நிற்க வைத்த பிரவீனா, “ஆமாம், புதுசா வந்திருக்காளே அபர்ணா, அவ எப்படி? ராம்கிட்ட ரொம்பப் பேசுவாளா?” எனக் கேட்க,


“ரொம்பப் பேசி நான் பார்த்தது இல்லை.” என்றவளுக்கு, ஒருநாள் மாடியில் இருவரும் மட்டும் அமர்ந்து பேசியது நியாபகம் வந்தது.


“சில நேரம் பேசுவாங்க.” என்றாள்.


“ராம் உனக்குத்தான். அவன்கிட்ட இருக்க உன்னோட உரிமையை யாருக்காவும் விட்டுக் கொடுக்காத.”


நேகவுக்கு அவள் அம்மா என்ன சொல்ல வருகிறார் எனப் புரிந்தது. சரி என்றவள் அங்கிருந்து சென்றாள்.


சோனாவுக்கு இரண்டு கை முழுக்க மருதாணி வைத்து முடிக்கவும் சாமி கும்பிடும் நேரம் வரவும் சரியாக இருந்தது. சாமி கும்பிட எல்லாவற்றையும் எடுத்து வைக்கும் போது, சரியாக ராம்மும் அவன் அம்மாவும் வந்தனர். அகிலா அப்படியே அவள் அம்மாவின் ஜாடை என்பதால்… யார் என்று பார்த்ததும் அபர்ணாவுக்குப் புரிந்தது.


எல்லோரும் அவர்களை வரவேற்க, அபர்ணா புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சாமி கும்பிடும் போது, நேகா சென்று ராம்மின் அருகில் நின்று கொண்டாள். அவன் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, சாமி கும்பிடுவதில் கவனம் செலுத்தினான்.


அபர்ணா ஸ்வர்ணாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவர் பக்தியாகச் சாமி கும்பிடவில்லை, வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தார்.


லக்ஷ்மி பூஜை முடிந்ததும், அனைவரும் சாப்பிட சென்றனர். சோனாவுக்கு அடுத்துக் காலில் மருதாணி போட ஆரம்பித்து இருந்தனர். அவளுக்கு ஒரு பெரிய வெளித்தட்டில் உணவு வகைகளை வைத்துக் கொண்டு வந்த ஸ்வர்ணா, மருதாணி போட்டுக் கொண்டிருந்த பெண்களைச் சாப்பிட அனுப்பி விட்டு, அவளுக்கு உணவை தானே ஊட்டி விட்டார்.


பக்கத்துச் சோபாவில் அமர்ந்து அபர்ணா பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அபர்ணா, “எங்க அம்மா கூட எனக்கு இப்படித்தான் ஊட்டி விடுவாங்க.” என்றாள்.


அவள் சொன்னதைக் கேட்டு ஸ்வர்ணா அவளைப் பார்த்து புன்னகைத்தாள். அவளுக்கு இன்னும் அபர்ணா யார் என்று தெரியாது. திருமணத்திற்காகக் காயத்ரியின் பிறந்த வீட்டினர், சுமாவின் பிறந்த வீட்டினர் எல்லாம் வந்திருந்தனர். அவர்கள் வீட்டுப் பெண் என நினைத்து இருந்தார்.


அபர்ணாவுக்கு அவள் அத்தை போல் நேர்த்தியான மூக்கு, அழகான இதழ்கள் இருந்தாலும், அதற்காக இருவரும் அச்சு அசல் இல்லை. அபர்ணா நீலிமாவை விட உயரமும் கூட. இருவரும் அருகருகே நின்றால்… தோற்ற ஒற்றுமை தெரியும்.


“நீங்க சிரிக்கும்போது ரொம்ப அழகா இருக்கீங்க ஆன்டி. நீங்க மட்டும் கொஞ்சம் ஸ்லிம் ஆனீங்கன்னு வச்சுக்கோங்க, இங்க இருக்கிற எல்லோரையும் விட நீங்கதான் அழகா இருப்பீங்க.”


இந்த முறை அபர்ணா சொன்னதற்கு ஸ்வர்ணாவிடம் இருந்து கசப்பான புன்னகையே வந்தது.


“நீயும் மருதாணி போட்டுக்கோ.” எனச் சோனா சொல்ல,


“ம்ம்… சரி. நான் போய்ச் சுஸு போயிட்டு வந்திடுறேன். இல்லைனா எனக்கு அப்ப பார்த்துதான் வரும்.” எனச் சொல்லிவிட்டு அபர்ணா எழுந்து செல்ல, சோனா சிரித்தாள்.


“யாரிந்த பொண்ணு?” ஸ்வர்ணா கேட்க,


“அஞ்சலியோட அத்தை பொண்ணு பெரியம்மா.” என்றாள் சோனா.


ஸ்வர்ணாவுக்கு முகம் மாறாமல் காக்க, பெரும் பாடாக இருந்தது. அதற்குள் அபர்ணா வந்துவிட்டாள். சாப்பிட சென்றவர்களும் வந்து விட, சோனாவுக்கும் அவளோடு அபர்ணாவிற்கும் மருதாணி போட ஆரம்பித்தனர். மற்றவர்கள் இரவு உணவுக்குப் பிறகே போடுவதாக இருந்தது.

 

ஸ்வர்ணா தட்டை எடுத்துக் கொண்டு சென்றார். எதற்காகவோ அந்தப் பக்கம் வந்த ராம்மை பார்த்தும், சோனா “அண்ணா, நல்லா இருக்கா.” என அவள் கை இரண்டையும் காட்டிக் கேட்க,


“சூப்பரா இருக்கு டா.” “என்றான் அவன்.


உடனே அபர்ணா, “எனக்கு?” என அவளின் இடது கையைக் காட்டிக் கேட்க,


“ம்ம்… நல்லா இருக்கு.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.


ஸ்வர்ண தன் மாமியாரின் அறைக்கு வர, “வா ஸ்வர்ணா.” என்றவர், அவளை அழைத்துத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.
சிறிது நேரம் வேறு விஷயங்கள் பேசி விட்டு, அகிலாண்டேஸ்வரி தான் பேச விரும்பிய விஷயத்திற்கு வந்தார்.


“நாம ஏன் ராம்முக்கு வெளிய பொண்ணு தேடனும். நம்ம நேகாவையே செய்யலாமே. ப்ரவீனாவுக்கும் இதில் விருப்பம். நீ என்ன சொல்ற ஸ்வர்ணா.”


“நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது அத்தை. ராம்தான் எடுக்கணும். அவனுக்கு விருப்பம் இருந்தா, எனக்கும் சம்மதம் தான்.”


“நீ இப்படியே பேசிட்டு இருந்தன்னு வச்சுக்கோ… உன் பையன் உன் கைவிட்டுப் போயிடுவான் பார்த்துக்கோ.”


மாமியார் சொல்ல வருவது புரிந்தும் புரியாமலும் ஸ்வர்ணா பார்க்க,
“அஞ்சலியோட மாமா பொண்ணு, அவ பேரு கூட அபர்ணா. நீ அவளைப் பார்த்தியா.”


“ம்ம்… பார்த்தேன்.”


“அவ நம்ம ராம்கிட்ட ரொம்ப உரிமை எடுத்து பழகிறா. இவனும் அவளோட பேசுறான். எனக்கே ஆச்சர்யம் தான். இன்னும் அவங்க அப்பாகிட்டையே முகம் கொடுத்து பேச மாட்டான். அதுதான் ரொம்ப யோசனையா இருக்கு.”


“அவ என்கிட்டயும் பேசினா. அவளே வந்து பேசும் போது, பேசத்தானே வேணும். அப்படி அவனும் பேசி இருக்கலாம்.”


“என்னவோ போ… உன்னால அவளோட சகஜமா பேசிட முடியுமா?”
அவரால் முடியவில்லைதான். அவள் யாரென்று தெரியாத வரை இருந்த இலகு தன்மை, இப்போது இல்லை. அதனால்தான் அங்கிருந்து வந்துவிட்டார்.


“நாம கல்யாணத்துக்கு இவங்க சம்மதம் கேட்டுட்டே இருந்தா… வயசுதான் ஏறிட்டே போகும். நான் முடிவு பண்ணிட்டேன். நான் அவன்கிட்ட பேசுறேன்.”


இதே தவறைத்தான் இவர் பிரகாஷ் திருமணத்தின் போதும் செய்தார். பிறகு அதை உணர்ந்துதான் மற்ற பிள்ளைகளுக்கு இவர் பெண் பார்க்கவில்லை. இப்போது எங்கே ராம் அபர்ணாவின் பக்கம் சாய்ந்து விடுவானோ என்ற அச்சத்தில், மீண்டும் அதே தவறை செய்ய இருக்கிறார்.


இரவு ஏழு மணிக்கு மேல்தான் சோனாவுக்கு நலங்கு வைக்கபட்டது. கையிலிருந்த மருதாணியைக் கழுவாமல் உதிர்த்து மட்டும் விட்டு, அதில் எண்ணெய் தேய்த்து வைத்து இருந்தாள்.


பார்லர் பெண்களே அவள் தயாராக உதவி செய்து விட்டு சென்றனர். ஹாலில் ஒரு சேரில் சோனா அமர, எல்லோரும் வந்து நலங்கு வைத்தனர். முதலில் காயத்ரியும், அடுத்து ஸ்வர்ணாவும், அடுத்து சுமாவும் வைக்க, அடுத்து நீலீமா வைத்தாள்.


முதலிலேயே சோனா சொல்லி விட்டாள். பெரியம்மா நீங்க கண்டிப்பா நலங்கு வைக்கும் போது இருக்க வேண்டும் என்று. அதோடு அகிலாண்டேஸ்வரியும் சொல்லி இருந்தார், இன்று கண்டிப்பாக ராம்மிடம் பேச வேண்டும். அதனால் நீ இருக்க வேண்டும் என்று.


ஸ்வர்ணா இருந்ததால்… நீலீமா அதிகம் நடமாடாமல் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தாள். பிரகாஷும் வந்திருந்த உறவினர்களுடன் பேசும் சாக்கில் வெளியவே நின்று கொண்டார்.


நலங்கு வைத்து முடித்ததும் இளைய பட்டாளம் எல்லாம் ஒரே ஆட்டம், கொண்டாட்டம்தான்.


அபர்ணா, எம்ரால்ட் பச்சை நிறத்தில் வளவளப்பான புடவை அணிந்து இருந்தாள். புடவையின் முன்புறம் தங்க நிறத்தில பீட்ஸ் வைத்திருந்ததால்… காதில் மட்டும் பெரிய ஜிமிக்கி போட்டு,  முகத்திற்கு லேசான ஒப்பனை செய்து சின்னப் பொட்டு வைத்திருந்தாள்.

 

அதற்கே ஆளை அசத்துவது போல் இருந்தாள்.
ஆனால் அவள் அழகை உணர்ந்தது போல இல்லை. சோனாவை கேலி செய்து வம்பு இழுத்துக் கொண்டு இருந்தாள்.


“அடுத்து எங்க வீட்ல அம்முவுக்குதான் கல்யாணம். நீ அதுக்கும் கண்டிப்பா வரணும்.” சோனா சொல்ல,


“ஹலோ…அதுக்கு நான்தான் உன்னை வரவேற்பேன் புரியுதா… நீ இல்லை.” என அபர்ணா சொல்ல, சோனாவுக்கு அவள் என்ன அர்த்தத்தில் சொல்கிறாள் எனப் புரிந்து விட… அவளைக் கிண்டல் செய்து ஓட்டினாள்.


அது அவளுக்கு மட்டும் மில்லை. அபர்ணா மீதே பார்வையைப் பதித்திருந்த பாட்டிக்கும் பேரனுக்கும் கேட்டது.


இருவருக்குமே பயங்கிற கோபம். இவளுக்கு நிச்சயமாக அதுதான் நடக்கபோகிறது எனத் தெரியுமா. இவ்வளவு உறுதியாகப் பேசுவதென்றால்… இவளுக்கு யார் கொடுத்த தைரியம்? என இருவரும் மனதிற்குள் கொந்தளித்துப் போய் இருந்தனர்.


அது தோழிகள் இருவரின் கேலி பேச்சு அவ்வளவுதான். அவர்கள் இருவரும் எப்போதுமே இப்படிக் கேலி செய்துதான் பேசுவார்கள்.

 

சோனாவுக்கு அபர்ணாவை பிடித்திருந்தது. மனதில் எதையும் மறைத்து வைக்கும் ரகம் இல்லை அபர்ணா. மனதில் பட்டதைத் தைரியமாக வெளிப்படையாகப் பேசிவிடுவாள்.


அண்ணாவுக்கு இவள் பொருத்தமாக இருப்பாள் எனச் சோனாவுக்கு ஒரு எண்ணம். ராம்முக்கும் அபர்ணாவை பிடித்திருப்பதாக நினைத்தாள். அபர்ணாவின் விருப்பமும் அவள் அறிந்ததுதான். உண்மையில் அவர்கள் இருவரும் சேர வேண்டும் எனச் சோனா ஆசைப்பட்டாள்.


இவர்கள் இருவரும் ஆசைப்பட்டால் போதுமா? மற்றவர்களுக்கு அந்த எண்ணம் தோன்ற வேண்டும். முக்கியமாக நம் நாயகன் ராம் ப்ரகாஷிற்கு.

 

Advertisement