Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 36

ஒரு வாரத்தில் ஸ்வர்ணாவே அவர் அம்மாவையும் அண்ணியையும் ஊருக்கு அனுப்பி விட்டார். “நான் இப்ப நல்லா இருக்கேன், அதுதான் அபர்ணா இருக்கா இல்ல. ஒரு பிரச்சனையும் இல்லை கிளம்புங்க.” என்றார்.


ஸ்வர்ணாவே மருமகள் பார்த்துக் கொள்வாள் எனச் சொல்லும் போது அவர்கள் என்ன சொல்ல முடியும்? அவருக்கு மருமகளைப் பிடித்தால், சரிதான் எனக் கிளம்பி விட்டனர்.


அவர்கள் சென்ற அன்றுதான் வீடு பழைய நிலைமைக்குத் திரும்பியது. அன்றுதான் ராம் ஸ்வர்ணாவை அழைத்துக் கொண்டு செக் அப் சென்று விட்டு வந்திருந்தான். இப்படியே இருந்தால் பிரச்சனை இல்லை. இனி அடுத்த மாதம் வாங்க எனச் சொல்லி அனுப்பி இருந்தனர்.


அன்று அகிலா மாலையே வீடு திரும்பி இருந்தாள். ஸ்வர்ணா, அபர்ணாவோடு அவளும் முன்புறம் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தாள். அப்போது பிரவீணா வந்தார்.


ஆரம்பம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. வந்தவர் அண்ணியை நலம் விசாரித்தார். பிறகு அப்படியே பேச்சை வேறு பக்கம் திருப்பினார்.


“நாம ராம்முக்கு ஒரு பொண்ணு பார்த்தோமே… அவ பேர் கூடச் சுஷ்மிதா. அவளுக்கு நேத்துதான் கல்யாணம். பையன் அமெரிக்கவில் பெரிய கோடீஸ்வரன்.”


“நாம வேண்டாம்ன்னு சொன்ன கோபத்தில, அவர் உடனே அவர் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணத்தை முடிச்சிட்டார்.”


“என்னைக் கூப்பிட்டிருந்தார், நான் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அவர் என்கிட்டே சொல்றார், எங்க வீட்ல சம்பந்தம் பண்ணி இருந்தா, கல்யாணம் இப்படி நடந்திருக்கும். உங்க அண்ணன் பையன் கல்யாணம் ரொம்பச் சிம்பிள்லா நடந்ததாமேன்னு கேலியா சொல்லி சிரிச்சார்.”


“நான் என்ன பதில் சொல்ல முடியும். பேசாம வந்திட்டேன்.” என்றார்.


“அவர் சொன்னா சொல்லிட்டு போறார். யாருக்கு எங்கையோ அங்கதான் அமையும். சுஷ்மிதா இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருந்தா.. இப்படி எங்களோட உட்கார்ந்து பேசிட்டு இருப்பாளா…. இல்லை அகிலாதான் உரிமையா இந்த வீட்ல இப்படி இருக்க முடியுமா?”


“எங்களுக்கு ஒன்னும் அந்த வரன் போனதுல வருத்தம் இல்லை. நாங்க சந்தோஷமாதான் இருக்கோம்.” ஸ்வர்ணா சொல்ல, பிரவீணா அசிங்கபட்டார்.


“இரு உனக்குக் குடிக்க எதாவது கொண்டு வரேன்.” என ஸ்வர்ணா எழுந்து செல்ல,


“உங்களுக்குதான் அந்த வரன் போனதுல ரொம்ப வருத்தம் போலிருக்கு, வேணா இன்னும் நல்ல வரனா வேணா பாருங்களேன். நான் ராம்கிட்ட சொல்றேன்.” எனச் சொல்லிவிட்டு அபர்ணா எழுந்து உள்ளே செல்ல, பிரவீணா முகம் போன போக்கை பார்த்து, அகிலா சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தாள்.


இதை மட்டும் ராம்மிடம் சொன்னால்… தன் நிலைமை என்ன ஆகும் என அவருக்குத் தெரியாதா?


அபர்ணா அதன்பிறகு கொஞ்சம் மூட் சரியில்லாமல்தான் இருந்தாள். ராம் வேறு தாமதமாக வந்து இன்னும் எரிச்சலை கிளப்பினான். அன்று இரவு அபர்ணா செய்த சமையலை அவன் கேலி செய்ய,


“இனிமே நான் சமைக்கலை.” என அவள் கோபம் கொள்ள,


“என்ன டா இது, இத்தனை நாள் இவங்க அண்ணன் கிண்டல் பண்ணுவான். சிரிச்சிட்டு இருப்பா… இன்னைக்கு நாம ஒரு வார்த்தை சொன்னதும், கோவிச்சிகிட்டா.” என ராம் புரியாமல் பார்க்க, அகிலா அவனிடம் பேசாதே எனக் கண்ணைக் காட்டினாள்.


அபர்ணா அறைக்குச் சென்றதும், ராம் அகிலாவிடம் என்ன என்று விசாரிக்க, இன்று பிரவீணா வந்ததைப் பற்றியும் ,அவர் பேசியதை பற்றியும் சொல்ல,

“போச்சா… இன்னைக்கு எனக்கு நல்லா இருக்கு.” என்றான்.


“அபர்ணாவுக்கு முன்னாடியே தெரியும், அன்னைக்கு நீங்களும் தான் ஹாஸ்பிடல்ல வச்சு. பொண்ணு பார்த்ததைப் பற்றிச் சொன்னீங்க.”


“நானா சொன்னேன். போச்சு என்னைக் கொல்லப் போறா.” என்றான்.


அபர்ணாவிடம் தானே பேசிவிடுவது நல்லது என நினைத்தான். அதற்கு முன் ஸ்வர்ணாவிடம் பேச வேண்டியது இருந்தது. அவர் அறைக்குச் சென்றான்.


“என்ன ராம்?”


“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். உட்காருங்க மா.” என அவன் அங்கிருந்த இருக்கையில் உட்கார, ஸ்வர்ணா கட்டிலில் அமர்ந்தார்.


“நான் சுஷ்மிதாவை வேண்டாம்ன்னு சொன்ன கோபத்தில்தான், என்கிட்டே நீங்க உடம்பு முடியாதது பத்தி சொல்லலையா? அப்புறம் எப்படி அபர்ணாவை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டீங்க?”


ராம் கேட்டதும், ஸ்வர்ணா எதையும் மறைக்கவில்லை. சுஷ்மிதா பேசிய அனைத்தையும் சொல்லிவிட்டார். “அந்த நேரம்தான் எனக்கு உடம்பு முடியலை. இந்தச் சுஷ்மிதா மாதிரி ஒருத்தி மருமகளா வர்றதுக்கு. உனக்குப் பிடிச்ச அபர்ணாவையே, நீ கல்யாணம் பண்ணிக்கட்டுமேன்னு தான் அப்ப நினைச்சேன். ஆனா இப்ப நினைக்கிறேன், அபர்ணாவை விட வேற ஒரு நல்ல மருமகள், இந்த வீட்டுக்கு வந்திருக்கவே முடியாது.”


“நான் எனக்கு உடம்பு சரியில்லாததைப் பத்தி பெரிசா எடுக்கலை… அகிலா கல்யாணம் வேற, அடுத்து உன்னோட கல்யாணம், நான் அதனால்தான் ஹாஸ்பிடல் போறது தள்ளி போட்டுட்டு இருந்தேன். உன் மேல உள்ள கோபத்தினால இல்லை.”


“இப்ப நீங்க தெளிவா இருக்கீங்களா… நான் உங்களை நம்பலாமா.” ராம் புன்னகையுடன் கேட்க, “போடா… உன் பொண்டாட்டி ஏற்கனவே கோபமா இருக்கா… போய் அவளைச் சமாதானம் செய். நீதான் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்தா என்ன?” என்றார் ஸ்வர்ணா.


“இனி சீக்கிரம் வரப் பார்கிறேன் மா.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.
ராம் அறைக்கு வந்தபோது, அபர்ணா குளித்து இரவு உடை மாற்றி இருந்தாள்.


“என் செல்லத்துக்கு என் மேல கோபமா?” அவன் அவளைக் கொஞ்ச செல்ல, அவன் கையைத் தட்டிவிட்டவள், கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.


“இங்க பாரு, நான் இஷ்ட்டபட்டு எல்லாம் பெண் பார்க்க போகலை. அம்மா பேச்சை மீற முடியாமத்தான் போனேன். ஆனா போனதும் புரிஞ்சிடுச்சு… என்னோட அபர்ணாவை தவிர எனக்கு வேற யாரையும் பிடிக்காதுன்னு.”


“நான் அப்பவே முடியாதுன்னு சொல்லிட்டு வந்திட்டேன்.”


“என்ன காரணமா இருந்தாலும், நான் போய் இருக்கக் கூடாதுதான். ஆனா போனதுனாலதான் என்னோட மனசு எனக்கே புரிஞ்சுது.” என்றவன், அவன் அம்மா பேசியதை பற்றியெல்லாம் அபர்ணாவிடம் சொல்லவில்லை. அது அவன் அம்மா அவனிடம் சொன்னது, அது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது இல்லை என நினைத்தான்.


அவன் அவ்வளவு சொல்லியும் அபர்ணா அமைதியாகவே இருக்க, “என்ன அபர்ணா, இன்னும் கோபம் போகலையா?” என்றான்.


“நிஜமா சொல்றேன், இது மட்டும் எனக்கு வேற எப்பவாவது தெரிய வந்திருந்தா, உங்களைப் பொலி போட்டிருப்பேன். ஆனா அன்னைக்கு நாம ஹாஸ்பிடல்ல இருந்தோம், எனக்கு அந்த நேரத்தில, நீங்க உங்க அம்மா பார்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்ன்னு தான் தோனுச்சு.”


“என்ன பேசுற அபர்ணா?”


“நிஜமா சொல்றேன் ராம், என்னோட குற்ற உணர்வு என்னைக் கொன்னுட்டு இருக்கு. உங்க அம்மாவுக்கு மட்டும் எதாவது ஆகி இருந்தா? நம்ம மிச்ச வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்ன்னு மட்டும் சொல்லுங்க. இந்தக் காதல் எல்லாம் ஏன் வந்ததுன்னு இருக்கு.” என அபர்ணா அழுதே விட,


“ஹே… ஏன் டா அப்படியெல்லாம் நினைக்கிற?”


“ஏன் நீங்க கூட என்னால தான்னு சொல்லலை.”


“ஹே நான் சொன்னது, உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டது இல்லை. அம்மாவுக்கு சரியா நான் புரிய வைக்காம இருந்திட்டேன்னு தான் அப்படிச் சொன்னேன்.”


“அவங்க என் மேல இருந்த கோபத்தில தான் உடம்பு முடியாம போனது பத்தி சொல்லாம இருந்திட்டாங்களோன்னு, எனக்குமே ஒரு குற்ற உணர்வு”


“ஒரு நிமிஷம் கூட அபர்ணா, உன்னை ஏன் கல்யாணம் பண்ணிகிட்டோம்ன்னு நான் நினைக்கலை. அப்படி நான் நினைச்சா.. நாம இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் சொல்லு.”


“நீ இல்லாம என்னால என்னோட வாழ்க்கையை யோசிக்கக் கூட முடியாது. நீ என்னைப் பத்தி தப்பா நினைச்சிட்ட இல்லை. என்னோட பேசாத, போடி.” என்றவன், கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.


அதுவரை அப்படி ஒரு மன உளைச்சலில் அபர்ணா இருந்தாள். அவன் பேசியது அவளுக்கு அவ்வளவு நிம்மதியை கொடுத்தது. அவன் அருகில் படுத்து, அவன் முதுகுக்குப் பின்புறமாக இருந்து, அவள் கட்டி அனைத்துக் கொள்ள…


“நான் செம கோபத்தில் இருக்கேன். அடிச்சிட போறேன். தள்ளி படு.” என்றான்.


“அடிச்சிகோ.” என்றவள், எட்டி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
ராம் அவளைக் கண்டுகொள்ளாமல் இருக்க. அவனைத் திருப்பி, அவன் மீது ஏறி படுத்துக் கொண்டாள்.


“படுத்துற டி.” என்றவன், தானும் அவளை அனைத்துக் கொண்டான். இருவரும் கிட்டத்தட்ட பத்து நாட்களாக இரவில் விலகித்தான் இருந்தனர். இன்றைய நெருக்கம் ராம்மின் தாபத்தைத் தூண்டி விட… அவளைப் புரட்டி கட்டிலில் போட்டவன், அவளை மெல்ல ஆக்கிரமிக்கத் துவங்கினான்.


இத்தனை நாள் விலகி இருந்தது, இன்றைய ஊடல் எல்லாம் சேர்ந்து, அவனிடம் அவ்வளவு வேகம். அவனின் வேகத்தை அபர்ணா கட்டுபடுத்த முயல, “என்னால முடியலை… சாரி.” என்றவன், உணர்ச்சி வேகத்தில் அவளை ஒரு வழியாக்கியே விலகினான்.


ராம்மிற்கு மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க, அவன் அபர்ணாவை பார்க்க, அவள் அவனை முறைத்தாள்.


“என்ன டி முறைக்கிற?”


“இனிமே பக்கத்தில வந்தீங்க கொன்னுடுவேன்.” என்றாள்.


“ஏன்? நான் வருவேன்.” என்றவன், மீண்டும் அவளைக் கட்டிக்கொள்ள,


“உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லனுமா? வேண்டாமா?”


“என்ன சொல்லு?” என்றவன், அவளைத் தன் கை வளைவில் படுக்க வைத்துக் கொண்டான். வேறு எதோ சொல்லப் போகிறாள் என நினைத்து இருந்தான்.


“உங்களுக்கு எந்தக் குழந்தை பிடிக்கும்? பையனா? இல்ல பொண்ணா?”


“எந்தக் குழந்தைனாலும் ஓகே தான்.” என்றவன், திடிரென அவள் குழந்தையைப் பற்றிப் பேசியது ஆச்சர்யமாக இருக்க,


“என்ன திடிர்ன்னு குழந்தையைப் பத்தி பேசுற, உனக்குக் குழந்தை ஆசை வந்திடுச்சா?” என்றான்.


“இனி என்ன ஆசை? அதுதான் ஏற்கனவே வந்தாச்சே.” அபர்ணா கூலாகச் சொல்ல,

“என்ன டி சொல்ற?” எனப் பதறி அடித்து எழுந்து உட்கார்ந்தான்.


“ஆமாம், எனக்குப் பிரியட்ஸ் எப்பவும் மூன்னு நாள் முன்னாடியே வரும். இந்தத் தடவை அதுக்கும் மேல பத்து நாள் ஆச்சு. இன்னும் வரவே இல்லை.”


“அபர்ணா, உனக்கு நல்லா தெரியுமா? ஆசை காட்டி ஏமத்தாத டி.” ராமிற்கு அப்படி ஒரு சந்தோஷம், இல்லையென்றால் அவனால் தாங்க முடியாது.


“அதுக்கு ஒரு வழி இருக்கு.” என்றவள், வீட்டிலேயே கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தை எடுத்து வந்து காட்டினாள்.


“ஏற்கனவே பார்த்திட்டியா?”


“இல்லை, உங்களோட சேர்ந்து பார்க்கனும்ன்னு இன்னும் பார்க்கலை.”


“இப்ப பார்க்கலாமா?”


‘இல்லை காலையில தூங்கி எழுந்ததும் பார்ப்போம்.”


“எனக்கு அதுவரை தூக்கமே வராதே.”


“காலையில பார்த்தா தான் கரெக்டா தெரியும். பேசாம படுங்க.”
அவள் அருகில் படுத்து அனைத்துக் கொண்டவன், “ஏன் இத்தனை நாள் சொல்லலை?” என அவள் முகம் பார்த்தான்.


“சொல்ற மாதிரியா இந்த வீட்டோட நிலைமை இருந்துச்சு? நீங்க அத்தையைப் பார்ப்பீங்களா? இல்ல என்னைப் பார்ப்பீங்களா?”அவள் சொல்வது உண்மை தான்.


“உங்க அம்மாகிட்ட சொன்னியா?”


“எனக்கு உங்ககிட்ட தான் முதல்ல சொல்லணும். அதனால யார்கிட்டயும் சொல்லலை.”


மனைவியின் அந்தப் பதிலில், அவள் தன் மீது வைத்திருக்கும் காதல் புரிய, அவள் நெற்றியில் இதமாக இதழ் ஒற்றினான்.


“நமக்கு என்ன பேபி டி பிறக்கும்?”


“ம்ம்.. அனேகமா புலிக் குட்டியோ… சிங்க குட்டியோ தான் பிறக்கும். அந்தக் காட்டில தான உருவாச்சு. நான் வேற எப்பவும் அதை நினைச்சிதான் பயந்திட்டு இருப்பேன்.”


அபர்ணா சொன்ன பதிலை கேட்டு ராம் மனம் விட்டுச் சிரித்தான். “நீ அந்தக் காட்டை மட்டும் மறக்க மாட்ட இல்ல.”


“பொண்ணுனா புலிக் குட்டி, பையன்னா சிங்க குட்டி ஓகே வா…” அபர்ணா கேட்க,


“ஹே… அதை விடு டி லூசு, உன்னை மாதிரி அழகா ஒரு பொண்ணு பிறக்கும் பாரு.” என்றான்.


“எனக்கும் பொண்ணு தான் பிடிக்கும். நிறைய ஷாப்பிங் பண்ணலாம். ஆனா உங்களை மாதிரி பையன் பிறந்தாலும் ஓகே தான். உங்க அம்மாவுக்காக நீங்க எப்படி அழுதீங்க. என்னால அதை மறக்கவே முடியாது.”


“அவங்க ரொம்பக் கஷ்ட்டபட்டுடாங்க அபர்ணா… அதுதான் அவங்களுக்கு மேலும் கஷ்ட்டம் வரும் போது, தாங்கவே முடியலை.”


“விடுங்க, இனிமே அவங்களை ஹப்பியா வச்சுக்கலாம்.”


“அவங்களுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு அபர்ணா. இந்த வீட்டுக்கு அபர்ணாவை விட வேற யாரும் நல்ல மருமகள் வந்திருக்க முடியாதுன்னு அவங்களே சொல்லிட்டாங்க.”


“அப்படியா?” எனக் கேட்டவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.


இருவரும் பேசி பேசியே பொழுதை கழித்து விட்டு, தாமதமாகத்தான் உறங்கினார்கள். இருந்தாலும், ராம் மனதில் குழந்தையைப் பற்றியே எண்ணம் இருக்க… காலையிலேயே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது.


அவன் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி வந்தவன், அபர்ணாவை எழுப்பிக் குளியல் அறை அனுப்பினான். அவள் சிறிது நேரம் சென்று குரல் கொடுக்க, அங்கே ஆவலாகச் சென்றான்.


அப்போது தான் கர்ப்பத்தை உறுதி செய்யும் சாதனத்தில் ஒரு கோடு விழுந்து, அடுத்தக் கோடு விழ ஆரம்பித்தது.


“ஹே…” என அபர்ணா குதிக்க.


“குதிக்காத டி.” என்றவன், மகிழ்ச்சியில் அவளைக் கட்டிக் கொண்டான்.
இருவருக்கும் சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை. திரும்ப அறைக்குள் வந்து உட்கார்ந்து கொண்டனர்.


“நீ போய் அம்மாகிட்ட சொல்றியா?”


“என்னால முடியாது, எனக்கு வெட்கமா இருக்கு?”


இப்படியே இருவரும் பேசி பேசியே நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தனர்.


பிறகு குளித்து விட்டு இருவரும் சேர்ந்தே கீழே இறங்கி வந்தனர். ஹாலில் கார்த்திக்கும் அகிலாவும் அலுவலகம் செல்ல தயாராக இருந்தனர். ஸ்வர்ணா டைனிங் ஹாலில் உட்கார்ந்து இருந்தார்.


“என்ன ரெண்டு பேர் முகத்திலேயும் பல்பு எரியுது.” கார்த்திக் கேட்க,


“அம்மா வீட்ல ஸ்வீட் இருக்கா?” என ராம் கேட்டான்.


“எதோ ஸ்வீட்டான விஷயம் சொல்லப்போறியா?” கார்த்திக் சொன்னதும், எல்லோரும் அவனை ஆவலாகப் பார்த்தனர்.


“அம்மா, உங்களை இனி எப்பவும் பிஸியா வச்சுக்க, நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி வாண்டு வரப் போகுது.” என ராம் சொல்ல… ஸ்வர்ணாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.


“நான் எதிர்பார்த்தேன். நான் நினைச்சதையே நீ சொல்லிட்ட” என்றவர், சமையல் அறைக்குச் சென்று சக்கரை கொண்டு வந்து, இருவர் வாயிலும் போட்டார்.


கார்த்திக்கு புரியவில்லை… அகிலா அவனிடம் மெதுவாக விஷயத்தைச் சொல்ல…

“ஹே…. குட்டீஸ் வரப் போகுதா.” என்றவன் ராம்மை சந்தோஷமாக அனைத்துக் கொள்ள, அகிலா அபர்ணாவை அனைத்து வாழ்த்து சொன்னாள். ரொம்ப நெகிழ்ச்சியான தருணம் அது.


“நாம இதைக் கொண்டாடனும்.” கார்த்திக் சொல்ல, “கண்டிப்பா.” என்றான் ராம்.


வெளியே போகலாம்?” என இருவரும் திட்டமிட…


“அதெல்லாம் இந்த நேரத்தில அலையக் கூடாது. வெளியேவும் சாப்பிட கூடாது. மதியத்துக்கு நான் விருந்து சமைச்சு வைக்கிறேன். எல்லோரும் வீட்லயே கொண்டாடுவோம்.” என்றார் ஸ்வர்ணா.


கார்த்திக்கும் அகிலாவும் மதியம் வந்துவிடுவதாகச் சொல்லி அலுவலகம் சென்றனர்.


ராம்மும் அபர்ணாவும் சாப்பிட அமர, அபர்ணா வழக்கம் போல மூன்று இட்லி உண்டுவிட்டு எழுந்து கொள்ள, “நீ உட்காரு, உன் டயட் எல்லாம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வச்சுக்கோ. நீ இவ்வளவு கொஞ்சமா சாப்பிட்டா, வயித்துப் பிள்ளைக்கு எப்படிப் பத்தும்.” என்றவர், மேலும் இரண்டு இட்லிகளை, அவள் தட்டில் வைத்தார். அபர்ணாவும் மறுக்காமல் உட்கார்ந்து சாப்பிட்டாள்.


“நீ அபர்ணாவை கூடிட்டு போய் அவங்க வீட்ல போய் விஷயத்தைச் சொல்லிட்டு, அப்படியே அவங்க அம்மாவையும் அழைச்சிட்டு டாக்டர்கிட்ட போயிட்டு வந்திடுங்க. நான் சமையல் ரெடி பண்றேன்.”


“நீங்க எப்படி மா தனியா பண்ணுவீங்க? உடம்புக்கு எதாவது இழுத்து விட்டுக்காதீங்க.” ராம் பயப்பட….


“நானா செய்யப்போறேன். அதுதான் ஆளுங்க இருக்காங்க இல்ல… அவங்களை வச்சுப் பார்த்துகிறேன். நீங்க சீக்கிரம் போயிட்டு வாங்க. அப்படியே அபர்ணா வீட்லயும் மதிய சாப்பாடுக்கு வர சொல்லிடு.”


ஸ்வர்ணாவிடம் இப்போது ஒரு ஆளுமை வந்திருக்க, அதை ஒடுக்க வேண்டாம் என நினைத்த அபர்ணா, “அவங்க விருப்பபடி விடுங்க” என்றாள் ராம்மிடம்.


இருவரும் காலையிலேயே சேர்ந்து வந்து நிற்க, சுகன்யாவுக்கு ஆச்சர்யம். அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.


“உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல வந்தோம்.” ராம் சொல்ல, சுகன்யா மகளைப் பார்த்தார்.


“நீங்க பாட்டியாகப் போறீங்க. இனிமே கொஞ்சம் மேக் அப் எல்லாம் கம்மி பண்ணிக்கோங்க.” என்றால் அபர்ணா சிரித்தபடி.


“எனக்குத் தெரியும், நீ என்கிட்டே ஒரு வாரமா சரியா பேசலை… அப்பவே எனக்குச் சந்தேகம்.” என்றார் சுகன்யா மகிழ்ச்சியாக.


அபர்ணா எழுந்து அவரைக் கட்டிக் கொண்டாள். “சாரி மா, நீங்க கேட்டு என்னால இல்லைன்னு சொல்ல முடியாது. அதுதான் பேசலை. ராம்கிட்ட நேத்து நைட் தான் சொன்னேன்.”


“எனக்குப் புரியும் அபர்ணா, எல்லோருக்கும் அவங்க புருஷன்கிட்டே தான் முதல்ல சொல்லனும்ன்னு இருக்கும். நீ பீல் பண்ணாத. உங்க அப்பா ரொம்பக் குஷி ஆகிடுவார். இனி அவரைக் கையில பிடிக்க முடியாது. அவர்கிட்ட வீட்டுக்கு வந்ததும்தான் சொல்லணும்.”


ராம் அவரிடம் ஸ்வர்ணா அவர்களை வீட்டிற்கு அழைத்ததைச் சொல்ல, சுகன்யா ஸ்ரீகாந்திடம் ,மதியம் சாப்பிட அபர்ணா வீட்டிற்கு வந்துவிடும் படி மட்டும் சொன்னார். அங்கே வைத்து நேரில் சொல்லிக்கொள்ளலாம் என நினைத்தார்.


மூவருமாக மருத்துவமனைக்குச் சென்றனர். மருத்துவர் சோதித்துப் பார்த்து விட்டுக் கர்ப்பத்தை உறுதி செய்தார். வழக்கமாகக் கொடுக்கும் எல்லா ஆலோசனைகளையும் கொடுத்து அனுப்பினார். பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டனர்.


ஸ்வர்ணா வந்து சுகன்யாவை வரவேற்றவர், களைப்பாக இருந்த அபர்ணாவிடம் பழசாறு கொடுத்துக் குடிக்கச் செய்து, “இனிமே பகல்ல நீ கீழ இருக்கிற ரூம்லயே இரு. நைட் மட்டும் படுக்க மாடிக்கு போ.” என்றவர், “இப்ப போய்க் கொஞ்ச நேரம் படு.” என்றார்.


சுகன்யாவும் ஸ்வர்ணாவும் பேசிக் கொண்டு இருக்க, அபர்ணாவும் ராம்மும் அறையில் ஓய்வு எடுத்தனர். மதியம் எல்லோரும் சேர்ந்து உணவு அருந்தினர்.


அபர்ணாவின் தந்தைக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. அவருக்கு அபர்ணாவே குழந்தையாகத் தெரிவாள், அவளுக்கு ஒரு குழந்தை என்றதும், அவருக்கு மிகுந்த சந்தோஷம்.


வீட்டிற்குக் கிளம்பும் சமயம், “நாங்க அபர்ணாவை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய்ப் பார்த்துக்கடுமா. இந்த நேரம் ரெஸ்ட் எடுக்கனுமே.” என அவர் ஸ்வர்ணாவை கேட்க,


“இங்க மட்டும் நான் வேலையா பா பண்ண போறேன். நான் கொஞ்ச நாள் கழிச்சு வரேன்.” என்றாள் அபர்ணா.


இப்போதுதான் ஸ்வர்ணா சரி ஆகிக்கொண்டு இருக்கிறார், இப்போது அவரை விட்டு செல்ல வேண்டாமே என நினைத்துதான் அப்படிச் சொன்னாள்.


“அவளுக்குத் தெரியும், பார்த்துப்பா வாங்க.” எனச் சுகன்யா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்றார்.


புது வரவு அந்த வீட்டிற்குள் வருவதற்குள்ளேயே நிறைய நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தது. இன்னும் வந்துவிட்டால்…

Advertisement