Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 32


மூன்றாவது நாள் காலை ஆறுமணிக்கு விமானம். ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு எல்லாம் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்திருந்தனர்.


அபர்ணா ஏற்கனவே பெங்களூரில் இருந்து இருக்கிறாள். ஜீன்ஸ் டி ஷர்ட்டில், கணவனின் தோளில் தொத்திக்கொண்டு வந்தவள், “இங்கயா ஹனிமூன் வந்திருக்கோம். இங்க ஒண்ணுமே இருக்காதே, மைசூர் போனா கூட எதாவது பார்க்கலாம்.” என்றாள்.


“உனக்குப் பெங்களூர் தெரியும், முழுக் கர்நாடகாவும் தெரியுமா? இங்க நிறைய இண்டரஸ்டிங் இடங்கள் இருக்கு.”


“ஓ… அப்படியா?” என்றவள், அதற்கு மேல் அவனை எங்கே என்று எதுவும் கேட்கவில்லை.


விமான நிலையத்தில் அவர்களுக்காகக் கார் காத்திருந்தது. அதில் இருவரும் ஏறிக்கொள்ள…. “கொஞ்சம் சீக்கிரம் போங்க, பெங்களூர் டிராபிக்ல மாட்டினா அவ்வளவுதான்.” என ஹிந்தியில் சொன்னான்.


“உங்களுக்குப் பெங்களூர் டிராபிக் பத்தி தெரியுமா?” அபர்ணா கேட்க, ராம் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.


சிறிது தூரம் வந்ததும், ரோட்டின் மீது இருந்த பெரிய வணிக வளாகத்தைக் காட்டி, “இது நாம பண்ணதுதான். அப்ப அடிக்கடி இங்க வருவேன்.” என்றான்.


“பார்ரா…. ஒரு ஊரையும் விட்டுறது கிடையாது போல….பெரிய ஆளுல நீங்க.” என்றவள், டிரைவர் இருப்பதைக் கண்டு பேச்சை நிறுத்தினாள்.


“அவருக்குத் தமிழ் தெரியாது. நாம ப்ரீயா கார்ல பேசிக்கனும்ன்னு சொல்லித்தான் ஏற்பாடு பண்ணேன். அதனால தயங்காம பேசு.”


“எனக்குச் சில நேரம் தோணும், நான் நடுவுல வராம இருந்திருந்தா…. உங்களுக்கு ஏத்த மாதிரி பெரிய இடத்தில பார்த்து இருப்பீங்க இல்ல…”


“நான் பிறந்ததில இருந்தே பணக்காரன் தான் அபர்ணா. ஆனா எனக்கு அந்தப் பணம் சந்தோஷத்தையும், நிம்மதியையும் தந்ததா என்ன?”


“அதனால இனி நீ அப்படி நினைக்கவே நினைக்காத. என்கிட்டே ஏற்கனவே இருக்கப் பணம், இன்னும் வந்து எதுவும் ஆகப்போறது இல்ல…. உன் கூட இருக்கும் போது, நான் சந்தோஷமா இருக்கேன். அது எப்பவும் தொடரனும்.”


அவன் சொன்னதைக் கேட்டு அபர்ணாவிற்குப் பெருத்த நிம்மதி, அவனை நெருங்கி அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.


அன்று அலுவலக நாள் என்பதால்…. அந்தக் காலை நேரத்திலேயே டிராபிக் இருந்தது. சிட்டி லிமிட்டை தாண்டி மைசூர் ரோட் பிடிக்கவே இரண்டரை மணி நேரங்கள் ஆனது. அங்கே இருந்த அடையார் ஆனந்தபவனில், காலை உணவை முடித்துக் கொண்டனர். பிறகு அங்கிருந்து திரும்பக் கார் பயணம்.


மைசூர் தாண்டி ரொம்பத் தூரம் வந்ததும், ஒரு பஸ் ஸ்டாண்டில் காரை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கிக்கொள்ள, காரை விட்டு இறங்கிய ராம், அவருக்குப் பணம் கொடுத்துவிட்டு, டிரைவர் இருக்கையில் அமர்ந்தான்.


“ஹலோ மேடம் முன்னாடி வாங்க.” அவன் அழைக்க, “அவர் வரலையா நம்மோட?” என்றவள், இறங்கி முன்புறம் செல்ல, “டிராபிக்ல ஓட்ட கடுப்பா இருக்கும். அதுக்குத்தான் டிரைவர் வச்சேன்… இல்லைனா ஏர்போர்ட்ல இருந்து நானே ஓட்டிட்டு வந்திருப்பேன்.” என்றான்.


வழியெங்கிலும் இயற்கை கொட்டிக் கிடந்தது. வெயில் காலம்தான் ஆனால் வெயிலே தெரியவில்லை. ஏனென்றால் இருபக்கமும் அடர்ந்த மரங்கள். இவர்கள் சென்ற சாலை ,ஒரு வழி சாலை…அதனால் மெதுவாகத்தான் செல்ல முடிந்தது. எதிரே பெரிய பெரிய லாரிகள் வந்து கொண்டிருந்தது.


இவர்களின் கார் பந்திப்பூர் காட்டு வழியே சென்றது. பாதையின் நடுவே அங்கங்கே வேகத்தடுப்பு வைத்திருந்தனர். வலது பக்கத்தில் ஒரு பலகை இருந்தது, யானை வரும் பாதை மெதுவாகச் செல்லவும் என்று… அபர்ணாவுக்குக் குஷியாகி விட்டது.


“ஹே…. இங்க யானை வருமா?நாம பார்த்திட்டு போவோமா?”


“அதெல்லாம் இந்த டைம்ன்னு சொல்ல முடியாது. எப்ப வேணா வரும்.”
இவர்களின் காரின் முன்னே சென்ற கார் நிற்க, அதிலிருந்து சிலர் இறங்கி புகைப்படம் எடுக்க…. எதிரே வந்த வண்டியில் இருந்தவர்கள், இங்கே எல்லாம் நிற்க கூடாது போயிட்டே இருக்கணும் என்றனர்.


“ஏன் நிற்க கூடாது?” என அபர்ணாவுக்குப் புரியவில்லை. அங்கே சாலை ஓரமாக இருந்த இரண்டொரு வீடுகள் கூட இரும்பு முள் வேலியால்… சுற்று சுவர் எழுப்பப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யமானாள். அவர்கள் எல்லாம் அந்தக் காட்டில் வேலை செய்பவர்கள்.


பிறகு இன்னும் சற்றுத் தூரத்தில் அதே மாதிரி பலகை. “புலி வரும் பாதை மெதுவாகச் செல்லவும்.” என்று இருந்தது. அதைப் பார்த்ததில் இருந்து அவளுக்குக் கிலி ஆரம்பித்தது.


“இங்க புலி எல்லாம் வருமா?” என மெதுவாகக் கேட்டாள்.


“புலி இங்க வரலை. நாமதான் புலி இருக்க இடத்திற்கு வந்திருக்கோம். இது முழுக்கக் காடுதான். இங்க எல்லாமே இருக்கும். புலி மட்டும் இருக்காதா? நைட் இந்தப் பக்கம் எந்த வண்டியும் விட மாட்டாங்க.”


“இதுக்கு அப்புறம் என்ன இருக்கு?”


“அதுவும் காடுதான் முதுமலை பாரஸ்ட் கேள்விப்பட்டது இல்ல…”


“அதுக்கு அப்புறம் என்ன இருக்கு?”


“அதுக்கு அப்புறம் ஊட்டி இருக்கு.”


“ஓ… ஊட்டிக்கு போக இந்த வழியா போறோம் போல…” என நினைத்துக் கொண்டாள்.


இன்னும் கொஞ்சம் தூரம் கார் செல்ல… அந்தப்பக்கம் வேறு வாகனங்கள் கூட வரவில்லை. சாலையும் கரடு முரடாக இருக்க….. சுமார் பத்து கிலோமீட்டர் சென்றதும், தார் சாலையாக இருந்தது. அந்தச் சாலையின் முடிவில் ஒரு பெரிய ரெசார்ட் வந்தது.


இவர்கள் காரைப் பார்த்ததும் காவலாளி கேட்டை திறந்துவிட்டான். கீழ் தளத்தின் ஒரு பகுதி வாகனம் நிறுத்துமிடமாக இருக்க… அங்கே காரை நிறுத்துவிட்டு இருவரும் இறங்க, இவர்களைப் பார்த்த பணியாளர் வந்து காரில் இருந்த பெட்டிகளை எடுத்துக் ள்ள… முதல் தளத்தில் இருந்த அலுவலக அறையை நோக்கி சென்றனர்.


தங்கள் வருகையைப் பதிவு செய்ய ராம் செல்ல… அபர்ணா அங்கிருந்த பால்கனி வழியாகச் சுற்றிலும் நோட்டம் விட்டாள்.


அந்த ரெசார்ட் பல ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. ஆனால் ஒரே ஒரு தளம் தான். சுற்றிலும் காடுதான் ஆனால் மரங்கள் அடர்த்தியாக இல்லை. அதனால் சுற்றிலும் அமைந்த இயற்கையை நன்றாகப் பார்க்க முடிந்தது. கீழ் தளத்தில் நீச்சல் குளம், இன்னும் மற்ற அனைத்து பொழுதுபோக்கு வசதிகளும் இருந்தது.


ராம் வந்து போகலாமா என அழைத்ததும், இருவரும் தங்கள் அறையை நோக்கி சென்றனர். இவர்கள் அறை மிகவும் பெரிதாக இருந்தது. நடுவில் கட்டில் இருக்க, உணவு மேஜை ஒருபுறம், டிவி, பிரிட்ஜ் காபி மேக்கர் எனச் சகல வசதிகளும் ஒருந்தது. வெளியே பக்கவாட்டில் சிட் அவுட் வேறு இருந்தது… மாலை நேரத்தில் வெளியே சேரில் உட்கார்ந்து கொள்ளலாம்.


அறைக்குள் மூன்று பக்கம் பெரிய கண்ணாடி தடுப்புகள் இருந்தது. அது வழியாகவும் வெளியே பார்க்க முடியும். இவர்கள் இருந்த ரெசார்ட்க்கு பின்புறம் மலைதான். அதுவும் இவர்கள் அறையில் இருந்து தெரிந்தது.


“பசிக்குது சாப்பிட போகலாமா…” ராம் கேட்க,


“ரொம்ப டியர்டா இருக்கு… எனக்குத் துக்கமா வருது. ஆனா பசிக்கவும் செய்யுது.” என்றாள் அபர்ணா. வரும் வழி காடு தானே, கடைகள் எதுவும் இல்லை. அதனால் நொறுக்கத் தீனி கூடச் சாப்பிடவில்லை.


அவளைப் பார்த்து சிரித்தவன், “ரூம்லயே ஆர்டர் பண்ணி சாப்பிடுவோம். என்ன வேணும் சொல்லு.” என்றான்.


“நீங்களே எதாவது சொல்லுங்க.” என்றவள், கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.


ராம் அங்கிருந்த மெனு கார்டு பார்த்துப் போனில் ஆர்டர் கொடுத்தவன், கட்டிலில் அபர்ணா அருகில் சென்று படுத்தான்.


“உங்களுக்கு ஹனிமூன் வர வேற இடமே கிடைக்கலையா?”


“இந்தச் சீசன்ல உலகத்தில எங்கையுமே ஸ்னோ ஃபால் இல்லை. இருந்தா நான் உன்னைக் கண்டிப்பா கூடிட்டு போய் இருப்பேன்.”


“அது கூடப் பரவாயில்லை. ஆனா எதுக்காக என்னை இப்படி ஒரு காட்டில கொண்டு வந்து விட்டீங்க.”


“ஹே…காட்டுக்குள்ள ஒரு அழகான இடத்துக்குத் தானே கூடிட்டு வந்திருக்கேன்.”


“போங்க, இங்க வேற யாருமே இருக்க மாதிரி தெரியலை…”


“வேற யாரும் எதுக்கு? நான் இருக்கேன் போதாதா.” என்றவன், அவளை அனைத்துக் கொண்டான்.


அந்த நேரம் ஆர்டர் செய்த உணகள் வர…. இருவரும் உணவு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட்டனர். பிறகு இருந்த களைப்பில் அடித்துப் போட்டது போல இருவருக்கும் நல்ல தூக்கம்.


அபர்ணாவுக்கு யாரோ தன்னை எழுப்புவது தெரிந்தது, ஆனாலும் கண்ணே திறக்க முடியவில்லை. அவள் கஷ்ட்டப்பட்டுக் கண்திறக்க, ராம் குளித்து ஈர தலையைத் துவட்டியபடி நின்று கொண்டிருந்தான்.


“எழுந்து கிளம்பு அபர்ணா, டின்னெர்க்கு போகணும்.” என்றான்.


“மணி என்ன?”


“ஏழு.”


“ஏழா? இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா.” என்றவள், உடை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.


இருவரும் நன்றாக உடை அணிந்து கொண்டு சாப்பிட செல்லும்போது மணி எட்டாகி விட்டது. அதே ரெசார்டில்தான். அங்கிருந்த தோட்டத்தில் மேஜை போட்டு… சுற்றலும் புல் வெளியில் சின்னச்சின்ன லாந்தர் விளக்குகள் வைத்து அலங்கரித்திருந்தனர்.


“ஹே… நல்லா இருக்கு.” அபர்ணா புன்னகைக்க…


“இது பேர் என்ன தெரியுமா… ரொமாண்டிக் டின்னர்.” என்றான்.


“ரொம்ப ரொமாண்டிக்கா தான் இருக்கு.” என்றபடி அபர்ணா சேரில் அமர்ந்தாள். சுற்றிலும் வேறு யாரும் இல்லை. இவர்கள் இருவர் மட்டுமே.


முதலிலேயே எனென்ன வேண்டும் என்று ஆர்டர் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். அந்தந்த நேரத்திற்குச் சரியாகக் கொண்டு வந்து வைப்பார்கள். அதனால் தொந்தரவு இல்லாமல் பேசியபடி சாப்பிடலாம்.


ராம் அவள்தான் சொல்ல வேண்டும் எனச் சொல்லிவிட, அபர்ணா வித்தியாசமான உணவு வகைகளையே தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்தாள்.
உணவு மிகவும் சுவையாக இருந்தது. அபர்ணா ரசித்துச் சாப்பிட்டாள்.


“ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்குப் பிடிச்சு இருக்கா?”


“இது உனக்கான ஸ்பெஷல். எனக்கு இனிமே தான்.” என அவளைப் பார்வையாலையே பருகிக் கொண்டு ராம் சொல்ல… இன்னும் வேற என்ன சாப்பிடுவார் என அபர்ணா நினைக்க… அவளைத் தான் சொல்கிறான் என அவளுக்குப் புரியவில்லை.


சாப்பிட்டுவிட்டு அந்த ரெசார்ட்டை இருவரும் சுற்றி வந்தனர். அங்கங்கே புல் வெளியில் அலங்கார விளக்குள் இருந்தது. மற்றபடி சுற்றிலும் இருட்டுத்தான்.
ஒரு சுற்று சுற்றிவிட்டு வாயிலுக்கு வந்தனர். அங்கே நின்றிருந்த காவலாளி, இவர்களைப் பார்த்ததும் புன்னகைக்க… இவர்களும் பதிலுக்குப் புன்னகைத்தனர்.
அபர்ணா அவரிடம் தமிழ் தெரியுமா எனக் கேட்டுவிட்டு பேச்சுக் கொடுத்தாள்.


“இங்க வேற யாரும் இருக்காங்களா இல்லையா?”


“சில வெளிநாட்டுக்காரங்க இருக்காங்க மேடம்.”


“ஏன் வேற யாரும் இல்லை.”


“இது வார நாள் இல்ல… சனி ஞாயிறுக்குதான் நிறையப் பேர் வருவாங்க.”


“ஓ…இது காட்டுக்குள்ள இருக்க… இங்க மிருகங்கள் எல்லாம் வராதா?”


“ஏன் வாரமா, நேத்து கூடக் கேட் பக்கத்தில ரெண்டு புலி குட்டிங்க விளையாடிட்டு இருந்தது.” என அவர் சாதாரணமாகச் சொல்ல…


“என்ன இவர் புலிக் குட்டியை பூனைக் குட்டி மாதிரி சொல்றார்.” என அபர்ணாவுக்குத் திகில் ஆகிவிட்டது.


“வாங்க ரூமுக்கு போகலாம்.” என ராம்மை இழுத்துக் கொண்டு அறைக்குச் சென்றாள். உள்ளே வந்து கதவை அடைத்ததும்தான் அவளுக்கு மூச்சே வந்தது.


கண்ணாடி தடுப்பின் வழியே வெளியே பார்க்க… இருட்டு அவளை மிரட்டியது. எல்லாத் திரைசீலைகளையும் நன்றாக இழுத்து மூடினாள். பிறகு உடைமாற்ற குளியல் அறைக்குள் சென்றாள்.


இவள் வெளியே வரும் போது, அறையில் மற்ற விளக்குகள் அணைக்கப்பட்டு, கட்டிலின் அருகே இருந்த டேபிள் விளக்கு மட்டுமே ஒளிர்ந்து கொண்டு இருந்தது. கட்டிலில் வெள்ளை நிற திரைசீலையால்… முழுவதும் மூடி இருக்க…ராம் எங்கே எனத் தேடினாள்.


இவள் அவனைத் தேடிவது தெரிந்ததும், இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தவன், அவளை நோக்கி மெதுவாக நடந்து வந்தான்.


என்ன டா பண்ணப்போறான், என அவள் பார்க்கும்போதே, குனிந்து அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.


“ஹே தூக்கிடீங்க…” என்பது போல் அவள் ஆச்சர்யமாகப் பார்க்க,… கொஞ்ச நேரம் அவளைக் கைகளில் வைத்துக் கொண்டே நின்றான். பிறகு கட்டிலுக்குச் சென்று நிதானமாக அவளை மெத்தையில் படுக்க வைத்தான்.


திரைசீலை மூடி இருந்ததால்… மெத்தையில் மிக மெல்லிய வெளிச்சமே… அவள் மீது பட்டும் படாமல் படர்ந்து, அவள் முகத்தையே அவன் பருகுவது போலப் பார்க்க… ஆர்வம் தாங்காமல் அபர்ணா அவன் இதழில் முத்தமிட்டாள்.


அன்று அவன் அவசரமே காட்டவில்லை. மிகவும் ரசித்து, அவளையும் ரசிக்க வைத்து, அவளோடு ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து  வாழ்ந்தான்.


அவர்கள் உறங்கும் போதே நள்ளிரவுக்கு மேல்…. வழக்கமாக அபர்ணா காலையில் தான் எழுவாள். ஆனால் எதோ சத்தம் தொடர்ந்து கேட்க, அவள் உறக்கம் கலைந்து விழித்துப் பார்த்தாள்.


எதோ மிருகம் கத்தும் சத்தம்தான் அது எனப் புரியவே கொஞ்ச நேரம் ஆனது. அதுவும் ஒன்று அல்ல… ஒரு கூட்டமே குரல் கொடுக்க… நடுங்கி போய் விட்டாள். பக்கத்தில் ராம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவனை அவசரமாக உலுக்கி எழுப்பினாள்.


“என்ன அபர்ணா?”


“என்னங்க, எதோ கத்துதுங்க.”


சற்று உன்னிப்பாகக் கவனித்தவன், “நரி மாதிரி இருக்கு.” என்றான்.


“என்ன கூல்லா சொல்றீங்க?”


“எங்கையோ எதோ கத்துது. நாம ரூம்குள்ள பத்திரமா இருக்கோம். அப்புறம் ஏன் டா பயப்படுற?” என்றவன், அவளை அனைத்து படுக்க வைக்க… அது வெறும் அணைப்பாக மட்டும் இல்லாமல் போக, இந்தமுறை உறங்கும் போது விடியற்காலை ஆனது.


அபர்ணா காலையில் அடித்துப் போட்டது போல உறங்க, “மேடம் மணி பத்து ஆகுது. இதுக்கு மேல லேட்டா போனா, நமக்குக் காலையில சாப்பாடு கிடையாது.” என ராம் அவளை உலுக்கி எழுப்ப… மெதுவாகக் கண் திறந்தவள், அறையில் இருந்த வெளிச்சத்தைப் பார்த்ததும், வேகமாக எழுந்து அமர்ந்தாள்.


இருவருமாகச் சென்று காலை உணவை சாப்பிட அங்கிருந்த உணவகத்திற்குச் சென்றனர். நிறைய வகைகள் இருந்தது. நாமே தேவையானது எடுத்துக் கொள்ளலாம்.


சாப்பிடும் போது, எதோ அபர்ணாவின் காலை உரச… புலிக் குட்டி ஞாபகத்தில் பயந்து, அவள் கத்திய கத்தில்… அங்கே வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் சத்தம்பித்துப் போய் நிற்க, அவர்களுக்கே அப்படியென்றால்…. அருகில் இருந்த ராமிற்கு ஒரு நொடி இதயமே நின்றது என்றால்… ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.


அபர்ணா பதட்டமாகக் குனித்துப் பார்க்க… அவள் காலடியில் ஒரு சின்னக் குழந்தை உட்கார்ந்து இருந்தது. அது அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருந்தது.


குனிந்து குழந்தையைத் தூக்கிய ராம், “எதுக்கு டி இப்படி உயிர் போன மாதிரி கத்துன.” எனக் கேட்டான்.


“இந்தக் குழந்தையைத் தாங்க புலின்னு நினைச்சுட்டேன்.” என அபர்ணா பாவமாகச் சொல்ல… ராம் தலையிலேயே அடித்துக் கொண்டான். அதற்குள் குழந்தையைத் தேடி அதன் பெற்றோர் வர… அவர்களிடம் குழந்தைக் கொடுத்தான்.


காலை உணவு முடிந்ததும், “வா வெளிய போயிட்டு வரலாம்.” என ராம் அழைக்க… “நான் வர மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு.” என்றாள்.


“நாம கார்லதான் போகப்போறோம். வா போயிட்டு வரலாம்.” என அவள் மறுக்க, மறுக்க, அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.


காரில் அபர்ணா ஜன்னலை கூடத் திறக்க பயந்தாள். கொஞ்ச தூரம் சென்றதும், கூட்டமாகக் காட்டெருமைகள் நின்று கொண்டிருந்தது.


இன்னும் கொஞ்சம் தள்ளி சென்றால். கோபால் சாமி கோவில் எனப் பலகை இருந்தது. கோவில் எங்கே எனப் பார்த்தால்… அது மலைக்கு மேல் இருந்தது.


ராம் காரை மலைக்கு விட்டான். மலையில் ஏறுவதற்கு முன் அங்கிருந்த காட்டின் காவலர்கள், காரை வழிமறித்து நிறுத்தினர்.


“கார்ல போக முடியாது. இப்ப ஜீப் வரும், அதுல போங்க.” என்றனர்.
கண்டிப்பா போகனுமா என்பது போல அபர்ணா பார்க்க…. போவதில் ராம் பிடிவாதமாக இருந்தான். அதனால் அவள் வேறுவழியில்லாமல் காரில் இருந்து இறங்கினாள்.


இருவரும் ஜீப்பில் மலைக்குச் சென்றனர். இறக்கி விட்டவன், ‘ஆறு மணிக்கு மேல் இங்க அனுமதி இல்லை.’ என அவன் சொல்லிவிட்டுச் சென்றான். கோவிலில் கொஞ்சம் பேர் இருந்தனர். எல்லோரும் பார்க்க கிராமத்து ஆட்கள் போல இருந்தனர்.


பெருமாள் கோவில் உள்ளே சென்று சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். மலை மேல் இருந்து பார்க்கும்போது… சுற்றிலும் இயற்கை காட்ச்சிகள் அழகாகத் தெரிந்தது.


அங்கே ஒரு சின்னப் பெட்டிக் கடை இருந்தது. ஆனால் கதவை மூடி வைத்து விட்டு, கடைக்காரர் வெளியே அமர்ந்து இருந்தார்.


ராம் ஏன்னென்று கேட்க, “இந்தக் குரங்குங்க தொல்லை தாங்களை. வாலைப்பழத்தை பார்த்தா தூக்கிட்டு ஓடிடுதுங்க.” என்றார்.


“பழம் இருக்கா?”


“இருக்கே… எவ்வளவு வேணும்.”


“இருக்கிறது எடுங்க.” என்றான்.


அவர் மொத்தமாக ஒரு தாரைக் கொண்டு வர, அதில் நடுவில் இருந்து நான்கு பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, மிச்சத்தை…. “அங்க போய் வைங்க.” என்றான்.


அவர் கொண்டு போய் மதில் சுவர் மேல் வைக்க… குரங்குகள் எல்லாம் குஷியாக வந்து எடுத்துக் கொண்டது. ராம் அபர்ணாவிடம் இரண்டு பழக்கங்களைக் கொடுத்து விட்டு, அவன் இரண்டு பழங்களைச் சாப்பிட்டான்.


குரங்குகள் பழங்கள் சாப்பிடுவதை ஒரு பெஞ்சில் உட்கார்ந்து அவன் ரசிக்க, பக்கத்தில் அபர்ணா உட்கார்ந்து இருந்தாள். பழங்களைச் சாப்பிட்ட குரங்குகள், ராம்மின் அருகே பாசமாக வர… அபர்ணா கால்களைத் தூக்கி பெஞ்சின் மீது வைத்து, அவனை இறுக்கக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.


அவளை ஒரு கையால் அனைத்தவனுக்கு, அவள் செய்யும் ரகளையைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. அபர்ணாவைக் கண்டுதான் எல்லோரும் பயப்படுவார்கள். பேச்சிலேயே எல்லோரையும் மிரட்டுவாள். இன்று அவள் பயப்படுவதைப் பார்த்து அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு.


“எனக்குப் பயமா இருக்கு. ப்ளீஸ் போகலாம்.” என்றதும், கடைக்காரை அழைத்துப் பணத்தைத் தாரளமாகக் கொடுத்தவன், அவளோடு அங்கு வந்த ஜீப்பில் சென்று ஏறினான்.


திரும்ப அவர்கள் காருக்கு வந்ததும், “நாம இன்னைக்கே சென்னை போகலாம்.” என அவனை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.


“இப்படிக் குரங்கை பார்த்தே பயப்படுறியே… நம்ம வீட்ல இருக்க… டைகரை நீ இன்னும் பார்க்கலையா?” என்றான்.


“யூ மீன் டாக்.”


“எஸ் மேடம். விருந்தாளிங்க வந்ததுனால பின்னாடி கட்டி வச்சிருந்தோம்.”


“ஓ… பொமேரியன்னா, ஹட்ச் டாக்கா…”


“ஹான்… ராஜபாளையம் நாய். ஒரே புடுங்குல ஒரு கிலோ கறி எடுத்திடும். வந்து பாரு.”


“எனக்கு மத்த அனிமல்ஸ் விட, நாய்னா கொஞ்சம்தான் பயம்.” அவள் பொய் சொல்கிறாள் என நன்றாகவே தெரிந்தது. ராம் தனக்குள் சிரித்துக் கொண்டான்.


திரும்ப ரிசார்ட் வந்ததும், சாப்பிட்டு படுத்து தூங்கினர். மாலை இருவரும் வெளியே சிட் அவுட்ல் உட்கார்ந்து இருக்கும்போது, மான்கள் வெளியே கூட்டமாகத் திரிவதை பார்த்தனர்.


அபர்ணா அதை ஆர்வமாகப் பார்க்க, ராம் அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தது கொண்டான். இவள் மானை ரசிக்க, அவன் இவளை ரசித்தான்.


அவர்கள் இருந்த ரெசார்டில், செல் போன் சிக்னல் கிடைக்காது.மறுநாள் வெளியே வந்த இடத்தில் கிடைக்க… அபர்ணா கார்த்திக்கை அழைத்து ராம்மை பற்றிப் புகார் கூறினாள்.


அபர்ணா ராம்மிடம் போன்னை கொடுக்க, அவன் தள்ளி சென்று பேசினான்.“என்ன டா? இப்படிப் பயப்படுறா? வேற எங்கையாவது போய் இருக்கலாம் இல்ல.” என்றான் கார்த்திக்.


“இதுதான் டா எனக்கு நல்லது. என்னையே ஓட்டிட்டு இருக்கா…அங்க இங்க நகர்றது இல்லை.” என ராம் சிரிக்க,


“அப்ப நல்லா என்ஜாய் பண்ற?”


“கண்டிப்பா…” என்றவன், கார்த்திக்கிடம் வேறு விஷயங்கள் பேசிவிட்டு வைத்தான்.


நான்காவது நாள் காலை ரொம்பவும் சத்தமாக இருக்க, அபர்ணா சென்று வெளியே பார்க்க… அங்கே நிறையப் பேர் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.


வார இறுதி என்பதால்… மேலும் சில குடும்பங்கள் வந்திருக்க… பார்த்த அபர்ணாவுக்கு நிம்மதியாக இருந்தது. பக்கத்தில் முதுமலை காடு, விலங்குகள் சரணாலையம் எனப் பகல் நேரத்தில் ராம் அழைத்துச் செல்ல… அபர்ணாவும் பயம் குறைந்து, அவைகளை ரசிக்க ஆரம்பித்தாள்.


ஆறு நாட்கள் சென்று, ஏழாவது நாள் ஊர் திரும்பினர். அதே போல் வழியில் டிரைவர் வந்து ஏறிக் கொண்டார். பெங்களூர் வரையில் அந்தக் காரில் வந்துவிட்டு, பிறகு காத்திருந்த இவர்கள் சொந்தக் காரில் ஏறி, சென்னை வரைக்கும் காரிலேயே சென்றனர்.


“இங்க கூட்டிட்டு வந்திட்டேன்னு என் மேல கோபமா?” என்றவனிடம், அபர்ணா இல்லை என்பதாகத் தலையசைக்க… “கொஞ்ச நாள் கழிச்சு நீ ஆசைப்பட்ட இடத்துக்குக் கண்டிப்பா கூடிட்டு போறேன்.” என்றான். அபர்ணா அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.


பின்னொரு நாளில், நாம் அவனோடு அந்தக் காட்டிலேயே இருந்திருக்கலாம் என நினைக்கப் போகிறோம் என அவளுக்கு அப்போது தெரியவில்லை.

Advertisement