Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 31



திருமணத் தன்று காலை ராமிற்கு அபர்ணாவுக்கும் இனிமையாக விடிந்தது என்றால்…. மற்றவர்களுக்குப் பரபரப்பாக விடிந்தது. பெண் வீட்டினர் முன் தின இரவே மண்டபம் சென்று இருக்க…. மாப்பிள்ளை வீட்டினர் காலையில் வருவதாக இருந்தது.


காலை ஒன்பது பத்தரை முஹுர்த்த நேரம். காலை எட்டு மணிக்கே அங்கே இருக்க வேண்டும் என நினைத்து கிளம்ப… ஆனால் போய்ச் சேரும்போது எட்டு நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டது.


இவர்கள் குடும்பமே பெரிய படை… அதோடு கார்த்திக் வீட்டினர் எல்லோரும் சேர்ந்து பத்துக்கும் மேற்பட்ட கார்களில் சென்றனர்.


இவர்கள் கார் நுழையும் போதே… அருனின் நண்பர்கள் பட்டாசை கொளுத்தி விட… “மாப்பிள்ளை வீடு வந்திட்டாங்க போல…” எனப் பெண் வீட்டினர் வாசலுக்கு விரைந்தனர். ஏற்கனவே ஸ்ரீகாந்தும், சுகன்யாவும் அவர்களை வரவேற்க வாசலில் நின்று இருந்தனர்.


எல்லோரையும் மரியாதையாக வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். மண்டபம் பெரிதாகவே இருந்தது. அந்த ஹால் முழுவதையும் நன்றாக அலங்காரம் செய்து இருந்தனர். அதுவும் மணமேடையை முழுக்கப் பூக்கள் கொண்டே அலங்கரித்து இருந்தனர்.


மாப்பிள்ளை வீட்டினரை நேராக உணவு அருந்த அழைத்துச் செல்ல… காலை உணவு மிகவும் சுவையாக இருந்தது. எதுவும் அதிகம் என்றோ குறை என்றோ இல்லாமல், எல்லாம் சரியான விகிதத்தில் பரிமாறினர்.


ராம்மின் கண்கள் அபர்ணாவை தேடி அலைய… அந்தோ பரிதாபம் ! அவள் அவன் கண்களில் படவே இல்லை.


தனக்குக் கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்று ராம் உடைமாற்றிப் பட்டு வேட்டி சட்டையில் வர…. அதற்குள் சீர் தட்டுகளும் தயாராக இருக்க… மாப்பிள்ளை அழைப்பிற்குக் கிளம்பினர்.


நுழைவாயிலில் இருந்த பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, அங்கிருந்து மாப்பிள்ளை அழைப்புத் தொடங்கியது. இவர்கள் திரும்ப மண்டபத்திற்கு வர… அவர்களைச் செண்டு மேளம் வைத்து வரவேற்றனர்.


அந்த நேரத்தில் மற்ற விருந்தினர்களும் வர ஆரம்பிக்க… எல்லோருமே நின்று செண்டு மேளத்தை ரசித்தனர். ஒரே மாதிரி உடையில் சுற்றி நின்று….. அந்த இடமே அதிர அதிர செண்டு மேளம் வாசிக்கப்பட்டது.


அதற்குள் மாப்பிள்ளைக்கும் ஆரத்தி எடுத்து முடித்து இருந்தனர். கடைசியாக அருண் வந்து, ராம்மின் கழுத்தில் தங்க செயின் அணிவித்து, பிறகு மாலையும் போட்டான். ராம் பதிலுக்கு அவனுக்கு மோதிரம் அணிவித்தான்.


அருண் ராம்மின் கைபிடித்து மணமேடைக்கு அழைத்துச் சென்றான். அவன் மணமேடையில் அமர்ந்து சிறிது நேரத்தில். ‘பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ.’ என அழைப்பு பறக்க…. ராமின் கண்கள் ஆவலாகத் தன்னவள் வரும் பாதையைப் பார்த்தது.


அபர்ணாவின் அறை மனமேடைக்கு எதிர்புறம் இருந்தது. அவளையும் செண்டு மேளம் வைத்தே மணமேடைக்கு அழைத்து வந்தனர். அவளோடு உறவுப்பெண்கள் நடந்து வர… முன்னே புகைப்படம் எடுப்பவர்கள் வேறு… அவள் அடிமேல் அடி வைத்துதான் நடக்க முடிந்தது. சுற்றிலும் உட்கார்ந்து இருந்தவர்கள், மணப்பெண் வருவதை ஆவலாகத் திரும்பி பார்த்தனர்.


சிவப்பு நிறத்தில் தங்க ஜரிகையில் நெய்த புடவை, பாவை அவள் உடலை பாங்காகத் தழுவி இருக்க…. அதற்குப் பொருத்தமான தங்க நகைகள் அணிந்து, மணப்பெண் அலங்காரத்தில், அனைவரின் கண்களையும் நிறைக்கச் செய்யும் வகையில் அழகாக நடந்து வந்தாள்.


மேடையின் கீழ் ஸ்ரீகாந்தும் சுகன்யாவும் இருக்க….முதலில் நேரே அவர்களிடம்தான் சென்றாள். மணப்பெண் அலங்காரத்தில் மகளைப் பார்த்ததும் பெற்றவர்களுக்குப் பேச்சே வரவில்லை.


“அழகா இருக்க டா…” ஸ்ரீகாந்த சொல்ல…. சுகன்யா மகளுக்குத் திர்ஷ்ட்டி சுழித்தார். அப்போது அங்கு வந்த அருணிடம், டேய் ஐஸ் ! செமையா இருக்க டா…” என அபர்ணா சொல்ல… “நிஜமா நல்லாதனே இருக்கு.” என ஆர்வமாகக் கேட்டான். இன்றுதான் முதல்முறையாக வேஷ்ட்டி அணிந்து இருக்கிறான்.


ராம் அய்யர் சொன்னதைச் செய்து கொண்டிருந்தாலும், பார்வை எல்லாம் அபர்ணா மீதுதான்.


“போய் உங்க அத்தைகிட்ட, பாட்டிகிட்ட, நம்ம பாட்டிகிட்ட எல்லாம் ஆசிர்வாதம் வாங்கிட்டு மேடைக்குப் போ…” எனச் சுகன்யா சொன்னதும், முன் வரிசையில் இருந்த ஸ்வர்ணாவிடம் சென்றாள். இவளைப் பார்த்ததும் அவர் எழுந்து நிற்க, அவர் காலில் விழுந்து வணங்கினாள்.


“நல்லா இரு…. எழுந்திரு மா.” என்றதும், எழுந்து அடுத்து இருந்த அகிலாண்டேஸ்வரி, அவளது பாட்டி என வரிசையாக ஆசிர்வாதம் வாங்கினாள்.


அகிலாவும் சோனாவும் வந்து அவளை மணமேடைக்கு அழைத்துச் சென்றனர். ராம் அவளையே பார்த்து இருந்தான். மணமேடைக்கு வந்தவள், எல்லோரையும் பார்த்து வணங்கிவிட்டு, அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.


ராம் அவளையே பார்ப்பது உணர்ந்து, அவனைப் நன்றாகத் திரும்பி பார்த்து புன்னகைத்தாள். “இப்பத்தான் உனக்கு என்னைக் கண்ணு தெரியுதா?” அவன்  அவளுக்கு மட்டும் கேட்கும் படி மெதுவாகக் கேட்க,


“உங்களைப் பார்த்தா வேற யாரையும் பார்க்க மாட்டேன். அதனால்தான் உங்களைப் பார்க்கலை.” என்றாள் அவளும் மெதுவாகவே.


அவளின் நிலை அவனுக்குப் புரிந்தது. ஏனென்றால் அவனும் அந்த நிலையில் தானே இருந்தான். இருவரும் ஒருவரையொருவர் ஆழமாகப் பார்த்துக் கொண்டனர்.


அகிலா அபர்ணாவின் கழுத்தில் மல்லிகை மாலையை அணிவிக்க…. திருமாங்கல்யம் பெரியவர்களின் ஆசிர்வாதத்திற்குச் சென்றது.


“அத்தையை மேல கூப்பிடுங்க.” என்றாள் அபர்ணா ராம்மிடம். அவன் அங்கே இருந்த மனிஷிடம் சொல்ல…. அவன் சென்று அழைக்க… ஸ்வர்ணா, தான் இங்கேயே இருப்பதாகச் சொல்ல…. அவரையே பார்த்துக் கொண்டிருந்த ராம் எழுந்துகொள்ள முயல…. வேண்டாம் எனத் தடுத்த ஸ்வர்ணா மேடை ஏறி இருந்தார்.


மகனின் பக்கம் வந்தவர், “அங்க இருந்து நல்லா தெரியுதுன்னு நினைச்சேன்.” என, “இங்கயே இருங்க மா.” என்றான் ராம். மகன் சொல்லைத் தட்டாமல் ஸ்வர்ணா மகன் பக்கத்திலேயே இருந்தார். முக்கியமான சொந்தங்கள் மேடை ஏறினர். கார்த்திக்கும் அகிலாவும் மணமக்கள் பின்னே நின்று கொண்டிருந்தனர்.


முஹுர்த்த நேரம் முடிவதற்குள் ராம் மாங்கல்யத்தை அபர்ணாவின் கழுத்தில் அணிவித்துத் தன் மனைவி ஆக்கிக் கொண்டான்.


மிகவும் மகிழ்ச்சியான தருணம் மட்டும் அல்ல… நெகிழ்ச்சியான தருணமும் கூட…. அபர்ணாவின் கண்கள் கலங்க…. அதைக் கவனித்த ராம் அவள் கையைப் பற்றி அழுத்தி விட்டான்.


மகளின் முகத்தைத் தன் பக்கம் திருப்பிய சுகன்யா, “அம்மா சொன்னேன் இல்ல.. அழக் கூடாது.” என்றவர், மகளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சென்றார்.
மேடையில் இருந்தவர்கள் மணமக்களை வாழ்த்த கைகொடுக்க… அபர்ணாவின் முகமும் மலர்ந்தது.


மாலை மாற்றும் போது, கார்த்திக், “ராம், நல்லா நிமிர்ந்து உட்காரு… எப்படி இவ மாலை போடுறா பார்க்கலாம்.” என்றான்.


அபர்ணாவே நல்ல உயரம்… இருந்தும், அவளுக்கு ராம்மின் கழுத்து எட்டவில்லை. அவன் வேறு குனிய மறுக்க… அபர்ணா சற்று எழும்பித்தான் மாலை அணிவிக்க முடிந்தது.


இப்போது ராம்மின் முறை… நாங்க மட்டும் விடுவோமா என அகிலாவும் சோனாவும், அபர்ணாவை பின்னுக்கு இழுக்க… ராம் சற்று முன்னே வந்து மாலை அணிவித்தான்.


இந்தக் கலாட்டாவை பார்த்து அனைவரின் முகமும் மலர்ந்தது. தாரை வார்த்துக் கொடுப்பது முடிந்ததும், விருந்தினர்கள் மதிய உணவு அருந்த சென்றனர்.


உறவுனர்கள் தம்பதிகளுடன் புகைப்படம் எடுத்ததும், புதுமன தம்பதியரை மட்டும் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அவர்கள் இருவரை மட்டும் வைத்து படம்பிடித்தனர்.


இருவரையும் எதிர் எதிரே நிற்க வைத்து கைகோர்த்தபடி, தோள் மீது கைபோட்டு என விதவிதமாக எடுக்க…. அபர்ணாவுக்கு அப்படி ஒரு வெட்கம். அவள் வெட்கத்தைப் பார்த்து ராமிற்குச் சிரிப்பு வந்தது.


ராம் நன்றாக ஒத்துழைக்க… அபர்ணா தடுமாறினாள். அவளைச் சரிகட்டுவதே பெரும் பாடாக இருந்தது.


“இது அபர்ணாவா?” என ராம் ஆச்சர்யப்பட…


‘நீ மட்டுமா இருக்க?’ என அபர்ணா மற்றவர்களை கண்களால் காட்டினாள்.


ராம் அபர்ணாவின் பின்னே நின்று அவளை அணைப்பது போலப் போஸ் கொடுக்கச் சொல்ல… கூச்சம் தாங்கமல் அபர்ணா நெளிய, வேறுவழியில்லாமல் அவள் கைகொண்டே அவள் இடையை அணைத்தான்.


ஒருவழியாகப் புகைப்படம் எடுத்து, மதிய விருந்தும் அருந்திவிட்டு இருவரும் வர…. “அண்ணா, கிளம்பலாமான்னு அம்மா கேட்க சொன்னாங்க.” என்றபடி அகிலா வந்தாள்.


‘இவ்வளவு சீக்கிரமா?” என நினைத்த அபர்ணாவின் விழிகள் அவள் பெற்றோரை தேடியது. விரும்பியவனையே திருமணம் செய்தாலும், பெற்றோரை விட்டு பிரிவது வலிதான். அவர்கள் கிளம்பப் போவது அறிந்து அவர்களும் விரைந்து வந்தனர்.


“நாங்க கிளம்பறோம் மாமா.” ராம் சொல்ல…. மகளைப் பிரியும் வருத்தத்தில் ஸ்ரீகாந்த நிற்க, அதை உணர்ந்த அபர்ணா, “இதே ஊர் தானேப்பா… நோ பீலிங்க்ஸ். நான் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வருவேன்.” என்றாள் தனது வலியை மறைத்துக் கொண்டு.


“பக்கத்தில தானே இருக்கப்போறோம் அடிக்கடி பார்த்துக்கலாம்.” எனச் சுகன்யாவும் அவரைச் சமாதானம் செய்தார்.


அங்கருந்த தன் பக்க உறவினர்களிடம் அபர்ணா சொல்லிக்கொள்ள… “அவங்க ரொம்பப் பெரிய இடம். பார்த்து இருந்துக்கோ.” என்றார் அவளது பாட்டி.


சரி எனத் தலையசைத்தவள், அருண் எங்கே எனத் தேட….. அவன் ஓரமாக நின்று கொண்டிருந்தான். அவன் அழுகிறான் எனப் பார்க்கும் போதே தெரிந்தது.

பெற்றவர்களைக் கூடப் பிரிந்து வந்துவிடலாம். ஆனால் உடன்பிறந்தவர்களைப் பிரிவதுதான் மிகவும் துன்பம். அவர்களோடு தான் அதிகம் பேசி, சிரித்து, சண்டையும் போட்டு இருப்போம்.


அவன் அருகில் சென்றவள், “ஹே…என்னது இது? நான் என்ன வெளிநாட்டுக்கா போறேன். முதல்ல நீ கண்ணைத் தொட.” என்றாள்.


“நீ போயிட்டா நம்ம வீடு வீடு மாதிரியே இருக்காது அப்பு.” என்றவன், அவளைக் கட்டிக்கொண்டு அழ…. இவன் அவளையும் அழ வைக்கப் போகிறான் எனச் சுகன்யா தன் மக்களிடம் விரைந்தார். ராம் எல்லாவற்றையும் கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.


தான் அழுதால் அவன் இன்னும் அழுவான் என அபர்ணா கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள். சுகன்யா சென்று மகனுக்குச் சமாதானம் சொன்னார். அருண் சமாதானம் ஆகும் வழியைக் காணோம். ராம் அவர்கள் அருகில் சென்றான்.


“ஹே அருண், நீ ஹப்பியா இருப்பேன்னு நினைச்சேன்.” என ராம் அவனிடம் சொல்வது போல, அபர்ணாவை வேண்டுமென்றே சீண்ட…அருண் விலகி கண்ணீரை துடைத்தான்.


“டேய் ! நீ இனிமேலாவது ஜாலியா இருடா…” என அவன் மேலும் சீண்ட… அபர்ணா திரும்பி அவனை முறைத்தாள்.


“ஆமாம் டா ஐஸ், இனிமே சார் எப்படிக் கதறுறாருன்னு பாரு. நீ அழாத. சார் தான் அழுவார்.” என அபர்ணா சொல்ல… ராம் அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்தான்.


“அது தானே அருண், நீ ஏன் அழற?” என ராம் சொன்னதும், அருனுக்குமே சிரிப்பு வந்துவிட்டது. அப்போதே மற்றவர்களிடம் விடைபெற்று கிளம்பி விட்டனர்.


கார்த்திக் காரை ஓட்ட, அவன் பக்கத்தில் அகிலா இருந்தாள். பின்புறத்தில் ராம்மும் அபர்ணாவும் இருந்தனர்.


அபர்ணா ஜன்னல் பக்கமே பார்த்துக் கொண்டு வந்தாள். கார்த்திக் பேசிக்கொண்டே திரும்பிப் பார்த்தவன், ராம்மிடம் அவளைப் பாரு எனக் கண் காட்டினான்.


ராம் அபர்ணாவின் தோளில் கைவைக்க… அவள் அவன் பக்கம் கண்ணீரோடு திரும்பினாள்.


“ஹே ! அங்க தைரியமா பேசிட்டு, இப்ப நீயே அழறியே? நாளைக்கு நாம் உங்க வீட்டுக்கு போகலாம்.” என்றான்.


அபர்ணா கண்ணீரை துடைத்தபடி, சரி எனத் தலையசைக்க,


“ஹே ! நானும்தான் எங்க வீட்டை விட்டு வந்தேன். இப்படியா அழுதேன்.” எனக் கார்த்திக் சொல்ல… அகிலாவுக்குக் கோபம் வந்துவிட்டது.


“நான்தான் உங்க வீட்டுக்கு வரேன்னு தானே சொன்னேன். சும்மா கிண்டல் பண்ணா எனக்குக் கோபம் வரும்.” என்றாள்.


“நீ சொல்ற மா… ஆனா எங்க அம்மா சேர்க்க மாட்டேங்கிறாங்களே.” எனக் கார்த்திக் சொன்ன தினுசில், எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.


அபர்ணா சந்தோஷமாகவே தன் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள். செய்ய வேண்டிய சடங்கு சம்பரதாயங்களைச் செய்து விட்டு, மணமக்கள் ஹால் சோபாவில் அமர்ந்தனர். அகிலா வெள்ளி டம்ளரில் பாலும், பழமும் கலந்து ஸ்பூன் போட்டுக் கொண்டு வந்து அண்ணனுக்கும் அண்ணிக்கும் கொடுத்தாள்.


ஸ்வர்ணாவின் பெற்றோர் மற்றும் சகோதரரின் குடும்பம். மற்றும் அகிலாண்டேஸ்வரியின் மொத்த குடும்பமும் அங்கே இருந்தது. ப்ரகாஷ், நீலீமா மற்றும் அஞ்சலி தவிர….அஞ்சலி திருமணதிற்கு வரவில்லை.


அபர்ணா மற்றவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டு இருக்க, காயத்திரியும் சுமாவும் வந்து அவளை அழைத்துக் கொண்டு ராம்மின் அறைக்குச் சென்றனர். ஏற்கனவே அவளுடைய மூன்று பெட்டிகள் அங்கே இருந்தது.


அறையின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியக்காமல், “அடப்பாவி ! ரூம்மை இப்படிக் கிளீன்னா வச்சிருக்கானே, நாம இப்படி எல்லாம் வச்கிக்க மாட்டோமே.” என அபர்ணாவுக்குக் கவலை பிறந்தது.


காயத்ரியும் சுமாவும் அங்கே இருந்த சோபாவில் அமர்ந்து பேச, அபர்ணாவின் தலை அலங்காரம் கலைக்க மமதி உதவினாள்.


“டிரஸ் மாத்திட்டு கொஞ்ச நேரம் தூங்கு அபர்ணா.” என்றவர்கள் “மமதி அவளைக் கொஞ்ச நேரம் தூங்க விடு, பேசிட்டே இருக்காத.” எனச் சொல்லிவிட்டு வெளியே சென்றனர்.


அபர்ணா அலங்காரம் கலைத்து, பாத்ரூம் போய் முகம் கழுவிட்டு வந்து கட்டிலில் படுத்த நொடி, உறங்கியும் போனாள். அதிகாலை எழுந்தது, கல்யாண பரபரப்பு, சரியான தூக்கம்மின்மையும் சேர்த்து அவளை ரொம்ப அசத்தியது.


“நீயும் போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ராம்.” என அவனையும் அறைக்கு அனுப்ப, அவன் அறைக்கு வந்த போது, மமதி சோபாவில் படுத்து செல்லை பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அண்ணனைப் பார்த்ததும் எழுந்து, அவள் அறையை விட்டு வெளியே செல்ல, கதவை சாற்றிவிட்டு வந்த ராம், கட்டிலில் படுத்திருந்த அபர்ணாவை பார்த்தான். நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவனும் போய் முகம் கழுவிட்டு வந்து, அவளது உறக்கம் கலைக்காமல் பக்கத்தில் படுத்து உறங்கி போனான்.


மாலை யாரோ கதவு தட்டும் சத்தத்தில் அபர்ணா பதறி அடித்து எழ, பக்கத்தில் ராம் அசந்து உறங்கிக் கொண்டு இருந்தான். இவன் எப்போது வந்தான் என நினைத்தவள், அவன் உறக்கம் கலைக்காமல் மெதுவாக எழுத்து சென்று கதவை திறந்தாள்.


வெளியே சோனா நின்று கொண்டிருந்தாள். அபர்ணா வழிவிட உள்ளே நுழைந்தவள், அண்ணன் உறங்குவதைப் பார்த்து, மெதுவான குரலில், “சீக்கிரம் ரெடி ஆகி கீழ வாங்க அபர்ணா. கோவிலுக்குப் போகணுமாம்.” எனச் சொல்லிவிட்டு சென்றாள்.


சுகன்யா ஏற்கனவே சொல்லி இருந்தார். மாலையே குளித்து வேறு புடவை கட்டும்படி. அபர்ணா குளித்து உடை மாற்றும் வரை கூட ராம் எழுந்துகொள்ளவில்லை. குளியல் அறையை ஒட்டி பெரிய கண்ணாடியோடு டிரெஸ்ஸிங் அறை இருந்ததால்…. அங்கேயே நின்று உடைமாற்றிக் கொண்டாள்.  


அவள் கிளம்பியதும் அவனை மெதுவாகத் தட்டி எழுப்பினாள். கண் திறந்தவன் எதிரே அபர்ணாவை பார்த்ததும் புன்னகையுடன் எழுந்து அமர்ந்தான்.


“ஹாய் பொண்டாட்டி… அசத்துற.” என்றான்.


சந்தன நிறத்தில் அரக்கு நிற பார்டர் வைத்த புடவை. அவள் நிறத்திற்கு எடுப்பாக இருக்க, இடைவரை இருந்த கூந்தலை, தழைய பின்னி இருந்தாள்.


“கோவிலுக்குப் போகணுமாம் சீக்கிரம் கிளம்புங்க.”


“ஆமாம் அப்பவே அம்மா சொன்னாங்க. நீ இப்பவே குளிச்சிட்டியா… நானும் குளிச்சிட்டு வரேன்.” என்றவன், எழுந்து குளியல் அறைக்குச் சென்றான்.


அபர்ணா கண்ணாடி முன்பு உட்கார்ந்து ஒப்பனை செய்ய, ராம் பத்து நிமிடத்தில் குளியல் அறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். இடையில் பெரிய துண்டை சுற்றி இருந்தான். வேறு ஆடைகள் எதுவும் அணியவில்லை.


அவனைப் பார்த்ததும் அபர்ணா அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள். அவளின் செயலைப் பார்த்து புன்னகைத்தபடி, ராம் உடைகளை எடுத்து அணிய ஆரம்பித்தான்.


உடைமாற்றிக் கொண்டு வந்தவன், அறையைச் சுற்றி நோட்டம் விட்டான். சோபாவில் அவள் காலையில் கட்டி இருந்த பட்டு புடவையை மடித்து உளற போட்டிருந்தாள். ஒரு பக்கம் அவள் பெட்டிகள், டிரெஸ்ஸிங் டேபிள் மீது அவளது பொருட்கள் எனப் பார்த்ததும், “பாய் ரூம்மா இருந்தது, இப்படிக் கேர்ள் ரூம்மா மாத்திடியே டி.” என அவன் சிரித்துக் கொண்டு கேட்க,


“ம்ம்…. அவ்வளவு வருத்தம் இருந்தா, ஒரு பையனையே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தானே. என்னை ஏன் பண்ணீங்க?” என்றாள்.


“நல்ல கேள்வி.” என்றவன், அவளை இழுத்து அனைத்து, அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “இதையெல்லாம் எனக்கு உனக்குத் தானே பண்ண பிடிக்கும்.” என்றான் அவளை ரசித்துப் பார்த்து.


“சரி போதும், கீழ போகலாமா… எங்க ரொம்ப நேரமா காணோம்ன்னு நினைக்கப் போறாங்க.” வெட்கம், தயக்கம் எனக் கலவையான உணர்வுகளை அவள் முகம் பிரதிபலித்தது. அது இன்னும் ராம்மிற்குக் கிறக்கத்தைக் கொடுக்க… அவளை விட்டு விலக மனமில்லாமல் நின்றான்.


மணி வேறு அப்போது ஆறாகி சில நிமிடங்கள் கடந்து இருந்தது. மீண்டும் அவள் போகலாமா என்றதும், “சரி.” என்றவன், அவன் பர்ஸ் மொபைல் எல்லாம் எடுத்துக் கொள்ள, அபர்ணா சோபாவில் இருந்த புடவையை எடுத்து, உடைமாற்றும் அறையில் வைத்துவிட்டு வந்தாள்.



 

Advertisement