Advertisement

பனி சிந்தும் சூரியன்



இருவரும் சேர்ந்து கீழே இறங்கி சென்றனர். அகிலாண்டேஸ்வரி அபர்ணாவை பார்த்ததும், “போய் விளக்கு ஏத்திட்டு வா.” என்றார். ராம்மும் அவளுடன் சென்றான். அவள் விளக்கு ஏற்றி விட்டு ஊதுபத்தியை பொருத்தி வைக்க… இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.


ராம் ஸ்வர்ணாவை அழைத்து, அபர்ணாவோடு அவர் காலில் விழுந்து வணங்கியவன், பிறகு தன் பாட்டி காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.


ஸ்வர்ணாவின் உறவினர்கள் அபர்ணாவை பிடிக்காமல்தான் பார்த்தனர். அவள் நீலீமாவின் சொந்தம் அல்லவா. அதனால் அவளோடு அவர்கள் சரியாகப் பேசவும் இல்லை. இதைக் கவனித்த பிரவீணா அவர்களை இன்னும் தூண்டி விட்டுக் கொண்டு இருந்தாள்.


அன்று காயத்ரியிடம் வாங்கிக் கட்டியதில் இருந்து கொஞ்சம் அடங்கித்தான் இருந்தாள். ஆனால் இன்று காலையில் இருந்து மீண்டும் ஆரம்பித்து விட்டாள்.


ராம் ஏற்கனவே, “நான் கல்யாணத்தை அவங்க பொறுப்பில் விட்டுட்டேன். அவங்கதான் பண்றாங்க. யாரும் எந்தக் குறையும் சொல்லக் கூடாது.” எனச் சொல்லியே தான் கல்யாணத்திற்கு அழைத்துச் சென்று இருந்தான். ஆனாலும் அது சரி இல்லை, இது சரி இல்லை எனப் பிரவீணா முனங்கிக்கொண்டே தான் இருந்தார்.


ராம்மும் அபர்ணாவும் கோவிலுக்குக் கிளம்ப, அகிலாவையும் கார்த்திக்கையும் கூடப் போகச் சொல்லி ஸ்வர்ணா சொன்னார்.


“அத்தையும் வர சொல்லுங்க. நாம குடும்பமா போயிட்டு வரலாம்.” என அபர்ணா ரம்மிடம் மெதுவாக சொல்ல…. அவனும், “அம்மா நீங்களும் வாங்க.” என்றான்.


சுவர்ணா தயங்க, “போயிட்டு வா ஸ்வர்ணா… சாப்பாடு வெளியே இருந்து வரப் போகுது. பரிமாற ஆள் இருக்காங்க. அப்புறம் உனக்கு என்ன வேலை. நாங்க இங்க பார்த்துக்கிறோம்.” என்றார் அகிலாண்டேஸ்வரி.


“பாட்டி, எட்டு மணிக்கு சாப்பாடு வந்திடும். எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம். நீங்க சாப்பிடுங்க வந்திடுறோம்.” என்றான் ராம்.


வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருந்த பெரிய கோவிலுக்கு வந்தனர். பெண்களை மட்டும் கோவில் வாசலில் இறக்கிவிட்டு, ராம்மும் கார்த்திக்கும் காரை இடம் பார்த்து நிறுத்த சென்றிருந்தனர். அபர்ணா வாசலிலேயே நிற்க, அகிலா அவளை உள்ளே அழைத்தாள்.


“அவங்க வரட்டும் சேர்ந்து போகலாம். கோவிலுக்குச் சேர்ந்துதான் போகணும்.” என்றாள். எல்லோரும் சேர்ந்தே உள்ளே சென்றனர்.


பிள்ளையார், முருகர், சிவன், அம்மன் என எல்லாச் சன்னிதியிலும் நின்று வணங்கினர். சாமி கும்பிட்டுவிட்டு ஸ்வர்ணா வந்து பிரகாரத்தில் உட்கார…


“நாம கோவிலை ஒருமுறை சுத்திட்டு வந்திடலாம்.” என அபர்ணா ராம்மை அழைத்துக் கொண்டு சென்றாள். இருவரும் கைகோர்த்து பேசியபடி சென்றனர்.


கோவிலை சுற்றி விட்டு வந்ததும், எல்லோருக்குமாக விபூதி, குங்குமம் இரு கிண்ணங்களில் ஒரு பக்கம் வைக்கபட்டிருந்தது. இருவரும் எடுத்து அதை வைத்துக் கொண்டனர்.


“எனக்கு வகிட்டில் குங்குமம் வச்சு விடுறீங்களா.” அபர்ணா ஆவலாகக் கேட்க, ராம் குங்குமத்தை எடுத்து அவள் சொன்னது போல் வைத்துவிட்டான். அதைப் பார்த்த அகிலா திரும்பி கார்த்திக்கை பார்க்க… “என்ன உனக்கும் அப்படி வைக்கணுமா?” என்றவன், அவளை அழைத்துச் சென்று, அதே போல் வைத்துவிட்டான்.


இவர்களும் ஸ்வர்ணா இருந்த இடத்தில் சென்று அமர்ந்தனர். “பார்த்தீங்களா மா, உங்க மகளும் மருமகளும் எங்களைப் படுத்துறதை.” ராம் தன் அம்மாவிடம் புகார் சொல்…


“அவங்களாவது என்னை மாதிரி இல்லாம இருக்கட்டும். எனக்குதான் உங்க அப்பாவை பிடிச்சு வச்சுக்கத் தெரியலை.” என்றார்.


“நீங்க ஏன் மா உங்களைக் குறை சொல்லிக்றீங்க. அவருக்குப் புத்தி ஊர் மேஞ்சுது. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?” சொல்லும் போதே ராம் முகத்தில் அவ்வளவு கோபம்.


“அம்மா, ஒன்னு நியாபகம் வச்சுக்கோங்க. அவர் எப்பவுமே நல்லவர் இல்லை. உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அவர் நிறையத் தப்பு பண்ணி இருக்கார். அப்படிபட்டவரைதான் உங்க தலையில கட்டி வச்சிட்டாங்க..”


“அவருக்கு உங்களோட இருக்கத் தகுதியே இல்லை. இல்லைனா, நான் என்னைக்கோ அவர் காலை உடைச்சு, நம்ம வீட்ல போட்டிருக்க மாட்டேனா?”


“என்னை யாராலா என்ன பண்ணி இருக்க முடியும்?”


“நான் எதோ உளறிட்டேன். நீ டென்ஷன் ஆகாத ராம்.” ஸ்வர்ணா சொல்ல…


“நான் டென்ஷன் எல்லாம் ஆகலை. நீங்க இப்படி எதுனாலும் மனசு விட்டு பேசுங்க மா.” என்றான்.


இரவு உணவு முடிந்ததும், வீட்டில் இருந்த உறவினர்களும் சொல்லிக் கொண்டு கிளம்ப, வீட்டினர் மட்டுமே எஞ்சியிருந்தனர். கூட ஸ்வர்ணாவின் சொந்தங்கள் மட்டும். மறுநாள் வரவேற்பு இருப்பதால்… அது முடிந்து அவர்கள் கிளம்புவதாக இருந்தது.


இரவு பத்து மணிக்கே எல்லோரும் படுக்கச் சென்றுவிட…. ராம் சென்று எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, செக்யூரிட்டி அலாரத்தைப் போட்டு விட்டு, அபர்ணாவோடு அவனது அறைக்குச் சென்றான்.


அதுவரையில் அபர்ணா நன்றாகப் பேசிக்கொண்டு வந்தவள், அறைக்குள் நுழைந்ததும் இன்பமாக அதிர்ந்தாள்.


கட்டிலின் நடுவே ரோஜா இதழ்களால் இதயம் போல வடிவமைத்து இருக்க… சுற்றிலும் மல்லிகை பூக்களால் கட்டில் நிரம்பி இருந்தது. ஒரு பக்க டேபிளில் பால் பழங்கள் இனிப்புகள் எல்லாம் இருந்தது.


இவர்கள் கோவிலுக்குப் போன நேரத்தில், இவன் சித்திகள் செய்து வைத்த வேலை.


“மருமகளே, உனக்காக ரொம்பக் கஷ்ட்டபட்டிருக்கோம். அதுக்கான ரிசல்ட் பத்து மாசத்தில தெரியனும்.” எனச் சொல்லிவிட்டு சென்று இருந்தனர். ஓ… அதோட அத்தம் இதுதான் என அபர்ணாவுக்கு இப்போது புரிந்தது.


ராம் அபர்ணாவின் முகத்தைப் பார்க்க… அதில் வெட்கம், தயக்கம் எல்லாம் இல்லை. மாறாக ஒரே பதட்டம். இயல்பாகக் கணவன் மனைவி சேர்வது என்பது வேறு… ஆனால் இது எதோ கண்டிப்பாக அப்படித்தான் நடக்க வேண்டும் என்பது போல் இருந்தது.


விட்டாள் அழுது விடுபவள் போல நின்றவளை பார்த்தவன், “ஹே… இப்ப எதுக்கு டென்ஷன் ஆகுற. உனக்குப் பிடிக்காம எதுவும் நடக்காது.” என்றான்.


“வா, உனக்கு நான் ஒன்னு காட்டுறேன்.” என அறைக்கு வெளியே அவளை அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே இருந்தால்… அவள் இயல்பாகப் பேச மாட்டாள் எனத் தெரியும்.


அங்கே பால்கனி கதவு போல் இருந்தது. அதைத் திறந்தால்… ஒரு குட்டி தோட்டம், நடுவில் ஊஞ்சல் இருந்தது. முழுதாகத் திறந்த வெளியும் இல்லை… பெரிய கனமான இரும்பினால்… இடைவெளி விட்டு மேலேயும், சுற்றிலும் சுவர் போல எழுப்பி இருந்தனர். அதனால் வெளிச்சம் காற்று எல்லாம் இருக்கும். அதே சமயம் பாதுக்காபானதும்.


கதவை சாத்தியவன், அவளோடு உஞ்சலில் அமர்ந்தான்.


“அப்புறம் எப்படி இருந்தது நம்ம கல்யாணம்? நீ சந்தோஷமா இருந்தியா?”


“நான் ரொம்பச் சந்தோஷமா இருந்தேன்.”


“அப்ப ஏன் நான் தாலி கட்டினதும் அழுத?”


“அது நாம சேர்வோமா இல்லையானே தெரியாம இருந்தது இல்லையா… கிட்டதட்ட நாம பிரிஞ்சிட்ட நிலைதான். அதுதான் கல்யாணம் ஆனதும் அழுகையா வந்திடுச்சு.”


அபர்ணாவின் தோள் மீது கைபோட்டு அருகில் இழுத்தவன், “சாரி அபர்ணா, உன்னை நான் ரொம்பக் கஷ்ட்டபடுத்திட்டேன். அம்மாவை நினைச்சுதான் உன்னை விட்டு விலகி இருந்தேன். ஆனா பிறகு ஒரு நாள்,  நானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க அவங்ககிட்ட சம்மதம் கேட்டேன். அவங்க உடனே சரின்னு சொல்லிட்டாங்க. அதுதான் எனக்கு இப்பவரை ஆச்சர்யம்.” என்றான்.


“தெரியாத பிசாசை கட்டி வைக்கிறதுக்கு, தெரிஞ்ச பிசாசே பரவாயில்லைன்னு நினைச்சிருப்பாங்களோ?” அபர்ணா விளையாட்டாகச் சொன்னாலும் உண்மையைத்தான் சொன்னாள்.


“ஹே அப்ப நீ உன்னைப் பிசாசுன்னு ஒத்துகிட்ட…”


அபர்ணா ராம்மை அடிக்க, அவளை இழுத்து மடியில் சாய்த்தவன், “ஆனா அழாகான பிசாசு. பிசாசு எல்லாம் இப்படி அழகா இருந்தா எவனுமே பயப்பட மாட்டான்.” எனப் பேச்சு ஸ்வீட் நதிங்க்ஸ் பக்கம் திரும்ப…. அங்கே ஒரே பேச்சும் சிரிப்புமாக இருந்தது.


பிறகு சிறிது நேரம் சென்று இருவரும் அவர்கள் அறைக்கு வந்தனர். உடைமாற்றும் அறையில் நின்று, அபர்ணா நகைகளைக் கழட்ட… ராம் அவள் பின்புறம் நின்று அவள் நெக்லஸ் கழட்ட உதவினான்.


அப்படியே மெதுவாக அவள் இடையோடு அனைத்து, கழுத்தில் அவன் அழுத்தமாக முத்தமிட… அபர்ணாவின் மேனி சிலிர்த்தது.


கண்ணாடியில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்க… இருவர் கண்ணிலும் காதலும் மயக்கமுமே இருந்தது. அவளை அப்படியே நகர்த்திக் கொண்டு கட்டிலுக்குச் சென்றான்.


இதுவரை புரிந்தும் புரியாமல், தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல் இருந்தது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் விளங்க ஆரம்பிக்க… அங்கே ஓர்  அழாகான காதல் சங்கமம் அரங்கேறியது.

மறுநாள் காலை நிற்க நேரமில்லாமல் வரவேற்புக்குக் கிளம்பத்தான் நேரம் சரியாக இருந்தது. காலை பதினோரு மணிக்கு ஆரம்பித்தது, முடியும் போது மதியம் மூன்று மணி ஆகிவிட்டது. நீள நிற டிஸைனர் புடவையில்… ராம் கொடுத்த வைர நகைகளில் அபர்ணா ஜொலித்தாள்.


ப்ரகாஷ் வரவேற்பிற்கு வந்திருந்தார். தொழில் துறை நண்பர்கள் வருவார்கள். தான் போகவில்லை என்றால்…. நிறையக் கேள்விகள் வரும் என நீலீமாவிடம் காரணம் சொல்லி வந்திருந்தார். அவரோடு அஞ்சலியும் வந்துவிட்டாள்.


அன்று அபர்ணா வீட்டில் தங்கி விட்டு, மறுநாள் காலை இருவரும் ஹனிமூன் கிளம்பி சென்றனர்.


ஹனிமூன் சென்றால்… யாருக்காவது திரும்பி வர மனம் வருமா? ஆனால் போனதில் இருந்து, அபர்ணாவுக்கு எப்போது திரும்பப் போவோம் என்றே இருந்தது.


டேய் ராம் ! உன்னை நம்பி ஒரு பொண்ணு எங்கன்னு கேட்காம கிளம்பி வந்தா… நீ எங்க வேணா கூடிட்டு போவியா? ஒரு நியாயம் வேண்டாம்.

 


Advertisement