Advertisement

 

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 30


திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ராமிற்கு நிற்க நேரமில்லாமல் சுழண்டு கொண்டிருந்தான். முதலில் அகிலா திருமணம் இப்போது உடனே இவனுடைய திருமணம். தொழிலையும் வேறு பார்க்க வேண்டும். அவனுடைய அப்பாவும், சித்தப்பாகளும் பார்கிறார்கள் தான். இருந்தாலும், இவனிடம்தான் நிறையப் பொறுப்புகள் இருந்தது.


ஹனிமூன் போக நேரம் இருக்குமா என்று கூடத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாகப் போக வேண்டும். பிறகு போக வேண்டும் என நினைத்தால்… போகவே முடியாது. அகிலா கார்த்திக் போல இரண்டு வாரங்கள் போகவில்லை என்றாலும் ஒரு வாரமாவது கண்டிப்பாகப் போக வேண்டும் என நினைத்துக் கொண்டான்.


அபர்ணாவிடமே கேட்போம் அவளுக்கு எங்காவது போக விருப்பம் இருக்கலாம் என நினைத்து, அன்று இரவே அவளை அழைத்துக் கேட்டான்.


“ஹாய் பொண்டாட்டி? எப்படி இருக்க?”


“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. பார்த்து நாலு நாள் ஆகுது. அப்படி என்னதான் பண்ணுவீங்க நீங்க?”


“ஹே… எவ்வளவு வேலை தெரியுமா?”


“என்ன வேலையோ போங்க.” அபர்ணா சலித்துக் கொள்ள…


“நாம ரெண்டு பேர் சீக்கிரம் சேர்ந்து இருக்கத்தானே அபர்ணா இவ்வளவும் பண்றேன். அது ஏன் உனக்குப் புரிய மாட்டேங்குது. ஒரு மாசத்துல கல்யாணம் பண்றது எல்லாம் ஈஸியா சொல்லு.”


அவன் சொல்வதும் உண்மைதான்.


“அபர்ணா நாம ஹனிமூன் எங்க போகலாம். உனக்கு எதாவது ஆசை இருக்கா சொல்லு.”


“எனக்கு எங்க போனாலும் ஓகே… ஆனா ஸ்னோ பால் இருக்கணும்.”


“இந்த ரோஜா படத்தில வர்ற மாதிரி பனி கொட்டி, அதுல உனக்கு டூயட் பாடனும் என்ன?”


“எஸ்… ஜில்லுன்னு இருக்கும் இல்ல…”


“நீ சொல்ற இடம் ரொமாண்டிகாதான் இருக்கும். ஆனா மொட்டை வெயில அடிக்கிற இந்தக் காலத்தில நான் எங்க ஸ்னோ பால்க்கு போறது.”


“ஐயோ ! போங்க… எனக்கு வேற எங்கையும் போக வேண்டாம்.”


“ஓ… ஸ்னோ பால் இல்லைனா நீங்க ஹனிமூன் வர மாட்டீங்க.”


“அப்படி இல்லை… சரி நீங்களே ஒரு இடம் சொல்லுங்க. உங்களுக்குப் பிடிச்சதா… பார்க்கணும் போல இருக்கிறது.”


“நாம என்ன சுத்தி பார்க்க டூர்ரா போறோம். எனக்கு உன்னைத் தவிர வேற எதையும் பார்க்க வேண்டாம். உன்னை மட்டும் முழுசா பார்த்தா போதும். அதானல அது எங்கனாலும் ஒகே தான்.” என்றான்.


“நீங்க வர வர ரொம்ப ஓவரா பேசுறீங்க?”


“நான் உன்கிட்டதானே அபர்ணா இது மாதிரி பேச முடியும். அதுவும் உங்கிட்ட முன்னாடி இப்படிப் பேசி இருக்கேனா? நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு… என் பொண்டாட்டி உன்கிட்ட தானே டி பேசுறேன்.”


“சரி சொல்லுங்க, வேற எங்க போகலாம்.”


“நாம வித்யாசமா ஒரு இடத்துக்குப் போவோம். நான் அதைப் பார்த்துகிறேன்.” என வைத்து விட்டான். சரி எதாவது நல்ல இடமா கூடிட்டு போவான் என நினைத்து இருந்தாள். ஆனால் அவன் அழைத்துச் செல்லும் இடம் பற்றி முன்பே தெரிந்து இருந்தால்…


அங்கே பிரகாஷுக்கும் நீலீமாவுக்கும் தினம் தினம் சண்டை நடந்தது. ராம் அபர்ணா திருமணதிற்கு அவரும் போகக்கூடாது எனச் சண்டை பிடித்துக் கொண்டு இருந்தாள்.


சமுகத்தின் பார்வையில் பிரகாஷுக்கு இரண்டு மனைவிகள். வீட்டில் நடக்கும் எல்லா விஷேஷதிற்கும் இரண்டு மனைவிகளும் வருகிறார்கள். இரண்டாவது மனைவி என்றாலும் நீலீமாவுக்கும் அந்த வீட்டில் சம அந்தஸ்த்து இருக்கிறது. இப்படித்தான் நீலீமா வெளியே தெரியும்படி பார்த்துக் கொண்டாள்.

இதற்காக அவள் பட்ட படு கொஞ்ச நஞ்சமில்லை. ப்ரவீனவை பிடித்து அவளிடம் நட்பு பாராட்டி… ஒன்று இரண்டாக விலையுர்ந்த பரிசுகள் கொடுத்து… அப்படி என்னென்னவோ செய்துதான் அவளை வழிக்குக் கொண்டு வந்தாள்.


இப்போது அந்த வீட்டில் ஒரு விசேஷம். அதற்குத் தான் போகவில்லை என்றால்… ஊர் அவளைப் பற்றி என்ன பேசும். அகிலாவின் திருமணமாவது வெளி சம்பந்தம். ஆனால் ராம் தன்னுடைய அண்ணன் பெண்ணை அல்லவா திருமணம் செய்கிறான். அப்படியிருக்கும் போது அவளே வரவில்லை என்றால்… எல்லோரும் அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்.


சொந்த அண்ணனே வரதே என்று அல்லவா சொல்லிவிட்டார். இப்போது ப்ரகாஷ் மட்டும் நல்லவர் போல… அவள் பிள்ளைகள் திருமணத்தில் முன்னே நிர்ப்பார். தான் அல்லவா எல்லோருக்கும் பொல்லாதவளாகத் தெரிவோம். அதனால்தான் அவரையும் போகதே என்றாள்.


ப்ரகாஷ் அகிலாண்டேஸ்வரியிடம் பேசி பார்த்தார். “அவளோட அண்ணன் பொண்ணு கல்யாணம் இல்லையா மா….. அவளுக்கு வரலைனா கஷ்ட்டமாதானே இருக்கும்.”


“நீலீமா கஷ்ட்டபடுவான்னு சொல்றியே… அப்ப ஸ்வர்ணா? ஸ்வர்ணா பட்ட கஷ்ட்டதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லை.”


“ப்ரகாஷ், நீலீமா மட்டும் கல்யாணத்துக்கு வந்தான்னு வச்சுக்கோ… ராம் அவளைக் கொன்னே போட்டுடுவான். அவன் அகிலா நிச்சயத்து அன்னைக்கு எப்படிப் பேசினான் தெரியுமா… அவன் மனசுக்குள்ள ஒரு எரிமலையே இருக்கு.”


“அவனுக்கு அபர்ணாவை அவ்வளவு பிடிக்கும்… ஆனா அவ நீலேமாவோட உறவுன்னு தான். ரொம்ப நாள் இழுத்தடிச்சிட்டே இருந்தான்.”


“அவனே இப்பதான் இறங்கி வந்து கல்யாணம் பண்றான். இவ எதுவும் நடுவுல புகுந்து குழப்பாம பார்த்துக்கோ. ராம் இந்தப் பெண்ணைத் தவிர வேற யாரையும் கல்யாணமும் பண்ண மாட்டான். அதையும் நினைவு வச்சுக்கோ.” என்றார்.


தன் அம்மா பேச்சில் இருந்த உண்மை உரைக்க… ப்ரகாஷ் நீலீமாவிடம் பார்த்தே நடந்து கொண்டார். தானும் திருமணத்திற்குப் போகவில்லை எனச் சொல்லிவிட்டார். தான் போவது முக்கியம் அல்ல… திருமணம் நல்லபடியாக நடந்தால் போதும் என நினைத்தார்.


திருமணதிற்கு மூன்று தினங்கள் முன்பு அபர்ணாவும் சோனாவும் பார்லர் சென்று இருந்தனர். மதியம் சாப்பிட்டதுமே இருவரும் வந்து இருந்தனர். இப்போது மாலை முடிந்து இரவு தொடங்கும் போதுதான் வெளியே வந்தனர்.


அபர்ணா எப்போதுமே நிலவு மாதிரிதான். இப்போது பௌர்ணமி நிலவு போல… பளபளவென்று இன்னும் ஜொலித்தாள். சோனாவும் ஒன்றும் குறையாக இல்லை.


இருவரும் வெளியே வரும்போது அஞ்சலி உள்ளே நுழைந்தாள்.


“ஹே அஞ்சலி…” என அபர்ணா உற்சாகமாக அழைக்க… அஞ்சலி அவர்களைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றாள்.


அபர்ணாவும் சோனாவும் அவளை விடவில்லை. இருவரும் அவள் பின்னால் சென்று இழுத்து வந்தனர்.


“என்ன வேணும் உங்களுக்கு?”


“ஏன் அஞ்சலி கோபமா இருக்க?” என்ற அபர்ணாவை முறைத்தவள்,


“என் அம்மாவால தான் உனக்கு ராம் அண்ணாவை தெரியும். ஆனா கொஞ்சம் கூட நன்றியே இல்லாம… நீங்களும் அவங்களோட சேர்ந்திட்டு எங்க அம்மாவை ஒதுக்கி வைக்கிறீங்க இல்ல…”


அஞ்சலி சொன்னதற்கு அபர்ணா எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஏற்கனவே அகிலா திருமணத்தில் நீலீமாவிடம் அவமானப்பட்ட சோனா, “இன்னொன்னும் தெரிஞ்சிக்கோ அஞ்சலி. ராம் அண்ணா இவ்வளவு நாள் அபர்ணாவை வேண்டாம்ன்னு சொன்னதுக்கும், உங்க அம்மாதான் காரணம்.” எனச் சொல்லியே விட்டாள்.


அஞ்சலி அதிர்ச்சியாக, அபர்ணா சோனவை பார்த்தாள்.


“இவ ஒன்னும் சின்னப் பொண்ணு இல்ல.. இவகிட்ட ஏன் மறைக்கணும். இவகிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம். இவளே யாரு மேல தப்புன்னு முடிவு பண்ணிக்கட்டும்.” என்றாள் சோனா.


அபர்ணாவுக்கும் அவள் சொல்வது சரியென்று தோன்றியது. பக்கத்தில் இருந்த உணவகத்திற்கு அவளை அழைத்துச் சென்று பேசினர்.


“நீ நினைக்கிற மாதிரி, ஸ்வர்ணா அத்தையை டிவோர்ஸ் பண்ணிட்டு மாமா உங்க அம்மாவை கல்யாணம் பண்ணலை.”


“உங்க அம்மா நடுவில வந்ததுனாலதான். அவங்க குடும்பம் பிரிஞ்சுது. இப்பவரை மாமா ஸ்வர்ணா அத்தையை விவாகரத்து பண்ணலை. ஏன்னா ஸ்வர்ணா அத்தை கொடுக்கலை.”


“அப்ப எங்க அம்மாதான் அவங்க குடும்பத்தை உடைச்சது சொல்றியா?”


“ஆமாம். நீயே யோசிச்சு பாரு. தன்னோட குடும்பம் உடைய யார் காரணமோ .அவங்ககிட்ட எப்படி நல்லா நடதுக்க முடியும்? இதே நீ அவங்க இடத்தில இருந்தா எப்படி நடந்துப்ப சொல்லு?”


அஞ்சலிக்கு இது தெரியவே தெரியாது. அவள் குலுங்கி அழ..


“உன்னைக் கஷ்ட்டபடுத்தனும்ன்னு சொல்லலை. ஆனா நீ நியாயமே இல்லாம மத்தவங்க மேல கோபப்படுற. அதனால்தான் சொல்லிட்டோம்.”


அழுகையின் இடையே நிமிர்ந்த அஞ்சலி, “எனக்கு ராம் அண்ணாவை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா, ஆனா அவர் என்கிட்டே பேசவே மாட்டார். சோனாகிட்ட, மமதிகிட்ட எல்லாம் சிரிச்சுப் பேசும்போது… என்னை மட்டும் தள்ளி நிறுத்திறது நினைச்சு ஆத்திரமா வரும். அதனாலதான் அவர்கிட்ட கோபத்தைக் காட்டுவேன்.”


“ஏன் ப்ரண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லுவேன், எனக்கு ஒரு அண்ணா, அக்கா இருக்காங்க. அதுவும் எங்க அண்ணா சூப்பரா இருப்பான்னு.”


“நீதான் சொல்ற ,ஆனா உங்க அண்ணாவை காட்டவே மாட்டேங்கிறன்னு ப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. ஆனா இனி அண்ணா எனக்கு எப்பவுமே இல்லையில…அகிலா அக்காவும்.”


அஞ்சலி ராம் மீது காட்டியது இத்தனை நாள் கோபம் என்றே நினைத்து இருந்தனர். ஆனால் அவன் மீது இருக்கும் பாசத்தை உரிமையாகக் காட்ட முடியவில்லையே என்றுதான் கோபப்பட்டிருகிறாள் என இப்போது புரிந்தது.


“ஹே லூசு, உங்க அண்ணா உன்கிட்ட நேரடியா பாசத்தை வேணா காட்டாம இருக்கலாம். ஆனா உனக்கு ஒரு கஷ்ட்டம்ன்னா முதல் ஆளா அவர்தான் வந்து நிற்பார்.”


“சந்தோஷத்துல நிறையப் பேர் கூட இருப்பாங்க. ஆனா கஷ்ட்டதுல யார் கூட இருக்காங்களோ, அவங்கதான் உண்மையான அன்பு வச்சிருக்கவங்க.”


அபர்ணா சொன்னதை அமோதித்த சோனா, “அண்ணா எப்பவுமே உன்னை விட்டது இல்ல அஞ்சலி. அன்னைக்கு மண்டப்பத்தில எங்க அம்மா உன்னை வச்சிக்கிட்டுப் பேசினபோது, அவர்தானே அவங்களைப் பேச விடாம பண்ணார். அப்புறமும் எங்ககிட்ட உன் கூடவே இருக்கச் சொன்னார்.” என்றாள்.


“எனக்கு எங்க அப்பா அம்மாவை நினைச்சா ஆத்திரமா வருது.”


“இங்க பாரு அஞ்சலி… அவங்க எதோ தப்பு பண்ணிடாங்க. ஆனா அவங்க உன்னோட அப்பா அம்மா. அதனால நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத. எப்பவும் போல இரு.” என்றாள் அபர்ணா.


அஞ்சலியை பேசி சரிகட்டி, அவள் சாப்பிட்ட பிறகே ,அவளை அங்கிருந்து செல்ல விட்டனர். “நாளைக்கு எங்க வீட்ல மெஹந்தி போடுறோம். நீயும் வந்திடு.” என்றாள் அபர்ணா.


வீட்டிற்கு வந்த மகளின் முக மாற்றத்தை கவனிக்கும் நிலையில் கூட அவள் பெற்றோர் இல்லை.


மறுநாள் மதியத்திற்கு மேல் அவர்கள் வீடே களைகட்டியது. சோனா, அகிலா, மமதி, நித்யா, சுஜா, காயத்ரி, சுமா என ஒரே பெண்கள் கூட்டம். வர மாட்டாள் என நினைத்த அஞ்சலி கூட வந்துவிட்டாள்.


அவர்களுக்கு நடுவே வர வெட்கப்பட்டு அருண், அறைக்குள்ளேயே இருந்தான்.


சுகன்யாவுக்கு அஞ்சலியை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி. அவர் அவளைப் பாசமாக வரவேற்றார்.


“கல்யாணப் பெண்ணுக்கு ஏன் மருதாணி வைக்கிறாங்க தெரியுமா? சுஜா கேட்க, மற்றவர்கள் ‘அழகா இருக்கத் தான்.’ என்றனர்.


“அது இல்லை காரணம். முன்னாடி காலத்தில பொண்ணும் பையனும் கல்யாணத்து அன்னைக்குதான் பார்த்துப்பாங்க. பார்த்ததே கிடையாது அப்ப என்ன பேசுவாங்க? முதல் ராத்திரியில… அவங்களுக்குப் பேச எதாவது காரணம் வேணும் இல்ல… பையன் பொண்ணு கையில இருந்துதான் ஆரம்பிப்பான்.”


“உனக்கு இந்த மருதாணி அழகா இருக்குன்னு.” மெதுவா முதல்ல அவள் கையைத்தான்  பிடிப்பான்.”


சுஜா சொல்லி முடித்ததும், ‘ஓ இதுக்குப் பின்னால இவ்வளவு கதை இருக்கா.’ என மற்றவர்கள் நினைத்தனர்.


சுஜா இன்னொன்றும் சொன்னார். “ஆனா இப்ப இருக்கப் பசங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூன் எங்க போறதுன்னு வரை பேசிடுதுங்க.” என்றார்.


“உங்க காலம் மாதிரி எங்க காலம் இல்லை. நாங்க என்ஜாய் பண்றோம்.” என்றனர் இளவட்டங்கள்.


எல்லோருமாக உட்கார்ந்து, பேசி, சிரித்து, நடு நடுவே கொறித்து என அனைவருக்கும் மருதாணி போட்டு முடிக்கும்போது, மாலை முடிந்து இருள் சூழ ஆரம்பித்து விட்டது.


மாலை ராம் வந்தான். முன்தினம் அவனைப் பார்க்க முடியவில்லை என அபர்ணா சண்டையிட்டதால்… அதோடு எல்லோரும் அங்கே இருப்பது தெரிந்து வந்திருந்தான்.


ராம் வந்தது தெரிந்ததும், அபர்ணா ஹாலுக்கு வர, அதற்குள் அவன் அங்கிருந்த திவானில் அமர்ந்து இருக்க.. அவனைச் சுற்றி தங்கைகள் கூட்டம்.


“வாங்க…” என அபர்ணா சொல்ல… ராம் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.


“அண்ணா, யாரு போட்டிருக்க மருதாணி அழகா இருக்கு?” மமதி கேட்க,
ராம் தன் தங்கைகள் மூவரின் கைகளையும் மாறி மாறி பார்த்தான். அஞ்சலி சற்று தள்ளி நின்றிருந்தாள்.


“ஒழுங்கா அபர்ணாது தான் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போயிடு.” என்றார் சுஜா.


சற்று நேரம் உற்று உற்று பார்த்தவன், மூன்னு பேருதுமே நல்லாத்தான்  இருக்கு.” என்றான். அவன் இப்படித்தான் சொல்வான் என எல்லோருக்கும் தெரியும். அவன் தங்கைகளோடே பேசிக்கொண்டிருக்க…


“ஹலோ, நீங்க என்னைப் பார்க்க வந்தீங்களா? இல்லை இவங்களையா…” அபர்ணா கோபித்துக் கொள்ள…


“ஹே… நீயும் இங்க வா…” என்றான்.


“எனக்கு எங்க இடம் இருக்கு.” என்றதும், ராம் தன் பக்கத்தில் அபர்ணாவுக்கு இடம்விட…… தங்கைகள் விடுவார்களா என்ன? அவர்கள் இன்னும் அவனை நெருங்கி அமர்ந்தனர்.


“ஐயையோ ! என்னது இது? இன்னைக்கு எல்லாம் ஒரு மாதிரி டெரரா இருக்கீங்க.” என்றான் ராம்.


“இன்னும் கல்யாணம் ஆகலை இல்ல… அதனால எங்களுக்குத் தான் முதல் உரிமை.” என்றனர்.


“ராம் சாரி மா…” என்றான் அபர்ணாவை பார்த்து, அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள…


“வேணா நீ என் மடியில உட்கார்ந்துக்கோ.” என்றான் பெருந்தன்மையாக.


“பார்த்தியா இவனை, தங்கைகளுக்குப் பேசுற மாதிரி போக்கு காட்டிட்டு, அவளை மடியில உட்கார சொல்றான்.” காயத்ரி சுமாவிடம் சொல்ல…


“அது தானே கா….” என்றார் சுமா பதிலுக்கு.


சுகன்யா அவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்துச் சிரித்துக் கொண்டார். பெரிய பணக்காரர்கள் எப்படிப் பழகுவார்களோ என நினைத்து இருந்தார். இப்படிப் பழகுவார்கள் என அவரே எதிர்ப்பார்க்கவில்லை.


வெளி ஆட்களிடம் கண்டிப்பாகத் தங்கள் பணக்கார தனத்தைக் காட்டத்தான் செய்வார்கள். அதே அவர்கள் குடும்பத்திற்குள் விட்டுக் கொடுத்துக்கொள்ள மாட்டார்கள். குடும்பம் கட்டுக்குள் இருக்க அகிலாண்டேஸ்வரியும் பெரிதும் காரணம்.


கார்த்திக் வந்து அவன் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல… சித்திமார்களும் தங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கிளம்பினர். அஞ்சலியும் கிளம்பினாள்.


“அஞ்சலி எதுல வந்தா? யார் கூடப் போறா? என ராம் அபர்ணாவிடம் விசாரிப்பது, வெளியே செருப்பு அணிந்து கொண்டிருந்த அஞ்சலி காதிலும் விழுந்தது.


அவன் அதுவரை அவளைக் கண்டுகொள்ளாதது போலத்தான் இருந்தான். அவள் மேல் அக்கறை இருக்கப் போய்தானே விசாரிக்கிறான். அவள் மனதுக்கு இதமாக இருந்தது. மகிழ்ச்சியாகவே கிளம்பி சென்றாள்.


“மாப்பிள்ளை, உங்களுக்கு டிபன் ரெடி பண்றேன். சாப்பிட்டு போங்க.” எனச் சுகன்யா சொல்ல.. சரி என்றவன், அபர்ணாவை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.


“கீழ நிறையப் பேர் இருப்பாங்க. என் கையையே பார்ப்பாங்க. மாடிக்கு போகலாம்.” என்றாள் அபர்ணா. அவள் கைகளுக்குப் பாதி வரையிலும், கால்களில் பாதங்களுக்கு மட்டும் மருதாணி வைத்திருந்தாள்.


இருவரும் மின்தூக்கியில் மேலே வந்தனர். ராம் சுவற்றில் சாய்ந்து நிற்க, அபர்ணா அவன் எதிரில் நின்றாள். மொட்டை மாடியில் காற்று சிலு சிலுவென்று வீச… சிறிது நேரம் நின்று அந்தச் சுகத்தை அனுபவித்தனர்.


“வர மாட்டேன்னு சொன்னீங்க, அப்புறம் எப்படி வந்தீங்க.”


“உன்னைப் பார்க்கனும்ன்னு தோனுச்சு வந்துட்டேன்.”


“என்னைப் பார்க்க வந்த மாதிரி தெரியலையே… தங்கச்சிகளை இல்லை கொஞ்சிட்டு இருந்தீங்க.” அபர்ணா தலை சரித்துக் கிண்டலாகக் கேட்க,


“நான் உன்னையும் கொஞ்ச ரெடியா தான் இருக்கேன். நீதான் கல்யாணத்துக்கு அப்புறம்ன்னு ரூல்ஸ் பேசின.” என்றான் அவளைப் பார்த்துப் புருவத்தை உயர்த்தி.


அந்நேரம் அவளுடைய துப்பட்டா காற்றில் பறக்க.. “அதைக் கொஞ்சம் சரியா போட்டு விடுங்க.” என்றாள். அதை எடுத்துச் சரியாகப் போட்டு விட்டவன், “ஆமாம் இப்ப உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது இல்ல.” என்றான்.


“என்ன பண்ண முடியாது?” அபர்ணா யோசிக்கும் போதே, அவள் இடையில் அவன் கிச்சு கிச்சு மூட்ட… கைகளில் மருதாணி இருந்ததால்…. அவனைத் தடுக்க முடியாமல், அவள் திண்டாடினாள்.


“ஹே… வாட் எச் சான்ஸ்?’ என்றவன் , அவள் இடையில் கைகொடுத்து, அவளை இழுத்து அனைத்து, நெற்றி, கன்னம், என முத்தமிட்டவன், கடைசியாக அவளது இதழ்களையும் சிறை செய்தான்.


கைகள் இரண்டிலும் மருதாணி இருக்க… அவன் கரங்களுக்குள் அடங்கி இருக்கத்தான் அவளால் முடிந்தது. சிறிது நேரம் சென்று விலகியவன், அவள் நெற்றியில் ஒரு முட்டு முட்டி, “இந்த த்ரில் கல்யாணத்துக்கு அப்புறம் வராதுல.” என்றான்.


அபர்ணா அவனை முறைக்க முயன்றாலும், அவளுக்குச் சிரிப்புதான் வந்தது.

Advertisement