Advertisement


அபர்ணா மற்றவர்களை வெற்றிப் பார்வை பார்க்க, மனிஷ் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.


“அபர்ணா நீ சொன்னது பொய் தானே.” சோனா கேட்க,


“இல்லை நான் உண்மையைத்தான் சொன்னேன்.” என்றாள் அபர்ணா.


“என் கல்யாணம் முடியாம, நீ இந்த வீட்ல இருந்து போக முடியாது.”


“இல்லை சோனா, காலேஜ் திறக்கிறதுக்குள்ள, வீட்டை பெயிண்ட் பண்ணி, செட் பண்ணனும். நான் சீக்கிரம் போனாத்தான் முடியும். நான் கண்டிப்பா உன் கல்யாணத்துக்கு வருவேன்.”


அபர்ணா சொன்னதைக் கேட்டு ராம் முகமும் மாறத்தான் செய்தது. அவன் சாப்பிட்டு எழுந்துகொள்ள, மற்றவர்களும் எழுந்து சென்றனர்.


ராம் அறைக்குச் சென்று அலுவலகம் செல்ல தயாராகி வந்தான். அவனைப் பார்த்ததும் அபர்ணா, “ராம், அம்மு உங்க தங்கை தான, ஆனா நீங்க அவங்களைக் கண்டுக்கவே மாட்றீங்க.” என்றான்.


ராம் புரியாமல் பார்த்தவன், பிறகு அம்முவை பார்க்க, அவள் வேறு எங்கோ பார்த்தாள்.


“எங்க ராம் அண்ணனை பத்தி நீ என்ன நினைச்ச? எங்க அண்ணா அம்மு அக்காவுக்காகத் தனியா ஒரு டிவி சேன்னல்லே ஆரம்பிச்சு கொடுத்திருக்கார்.” என மாமதி வாய்விட,


“அப்படியா… ஆனா அம்மு வேற சொன்னாங்களே.” என அபர்ணா இழுக்க, ராம் புருவத்தை உயர்த்த, “அண்ணா, அவ பொய் சொல்றா நம்பாத.” என்றாள் அம்மு வேகமாக.


“அவ சொன்னா நான் நம்பிடுவேனா. எனக்குத் தெரியாதா உன்னைப் பற்றி.” என்றவன், “சரி நான் கிளம்புறேன்.” எனச் சொல்லிவிட்டு, அபர்ணாவை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றான்.


அபர்ணா அவன் பார்வையை அலட்சியபடுத்திவிட்டு திரும்ப, “உனக்கு எதுல விளையாடுறதுன்னு இல்லையா?” என அம்மு அவளிடம் கோபப்பட,


“அம்மு அதுதான் கேம். அவ மேல கோபப்படாத. என்னையும் தான் காலையில இருந்து அவினாஷ் கூடப் போன் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. பாவம் மனுஷன் போன் போட்டுட்டே இருக்கார்.” என்றாள் சோனா.


“சரி நான் ஆபீஸ் கிளம்புறேன்.” என அம்மு செல்ல,


“மதியம் வந்திடு.” எனச் சொல்லி அனுப்பினாள் சோனா.


அன்று நீலீமா இங்கு வந்திருந்தாள். எல்லோரிடமும் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, மதியம் போலக் கிளம்பி சென்றாள். நீலீமா வந்திருந்தாலும் அவர்கள் விளையாட்டைத் தொடர்ந்து கொண்டே இருந்தனர்.


மமதிக்கு அவள் அம்மாவை சமைத்து தர சொல்லி எதாவது உணவு வாங்கி வர வேண்டும் என்பது அவளுக்கு கொடுக்கபட்ட பணி.


“கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு, இதுல இவளுக்கு என் கையாள சமைச்சு தரணுமாம்.” என்றவர், மாகி நூட்லஸ் செய்து தந்திருந்தார்.


மனிஷ் அவன் அப்பாவை எதையாவது தேட வைக்க வேண்டும், அவர் செல்லை எடுத்து மறைத்து வைத்து விட்டான். அவருக்கு செல் இல்லாமல் கை உடைந்தது போல் ஆகிவிட்டது. அவரைக் கொஞ்ச நேரம் தேட விட்ட பின்னே கொடுத்தனர்.


நேகா ஒரு மேக்கப் பைத்தியம். உறங்கும் போது கூட மேக்கப் அப்படியே இருக்கும். அன்று அவள் மாலை வரை மேக்கப் போட கூடாது என்பது அவளுக்கு வழங்கப்பட்ட பணி.


“ச்ச என் முகம் நல்லாவே இல்லை.” என அவள் கண்ணாடியை பார்த்து புலம்ப, “இன்னைக்குத்தான் நீ அழகா இருக்க.” என்றாள் அபர்ணா.


மதியம் அம்மு வந்ததும், அபர்ணாவிடம் சென்று மன்னிப்புக் கேட்டாள்.


“சாரி, நான் எதோ கோபத்துல அப்படிப் பேசிட்டேன்.”


“பரவாயில்லை. நான் பண்ணதும் தப்புதான்.”


“ப்ளீஸ் அபர்ணா எங்க அண்ணன் விஷயத்துல மட்டும் என்னோட விளையாடாத. அதை என்னால தாங்க முடியாது. எங்க அப்பாவுக்கும் மேல எங்க அண்ணன்தான் எனக்கு..” என்றதும், அபர்ணாவே ஒரு நொடி திகைத்துத்தான் போய் விட்டாள்.


“சாரி.” என்றாள்.


“சரி அடுத்தது என்னன்னு சொல்லு. நான் பண்றேன்.”


“அஞ்சலி சொல்லுவா.”


“அவ சொல்லி எல்லாம் நான் பண்ண மாட்டேன். நீ சொல்லு பண்றேன்.” என்றாள்.
முதல் தடவையாக அபர்ணாவுக்குத் தோன்றியது. நாம நினைச்சது போல அத்தையின் திருமணம் இல்லையோ என்று. யாரிடம் கேட்பது? இந்த வீட்டில் யாரிடமும் கேட்க முடியாது.


மாலை முடிந்து இரவும் வந்தது. இன்னும் ஒன்றே ஒன்று அபர்ணா செய்ய வேண்டியது, சொல்லு செய்கிறேன் என்றாலும், சோனா சொல்லவில்லை. இரு அணிகளும் ஒரே மதிப்பெண்கள், இதில் அபர்ணா வெற்றி பெற்று விட்டாள். அவள் அணியே போட்டியில் வெல்லும்.


ராம் வீட்டிற்கு வந்த பிறகு சோனா சொன்னாள். “ராம் அண்ணாவை எப்படியாவது நீச்சல் குளத்தில தள்ளி விடனும்.”


“இது என்னால பண்ணவே முடியாது. ஏற்கனவே உங்க அண்ணன் என்னை முறைச்சிட்டே இருப்பார்.”


“ஹலோ ! உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடக்குதுன்னு எனக்கும் தெரியும். சும்மா சீன் போடாத.” என்றாள் சோனா.


அப்போது அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.


“என்ன நடக்குது?” ஆர்வம் தாங்காமல் அபர்ணா கேட்டு விட,


“நீ பார்க்காத போது, அவர் பார்க்கிறதும், அவர் பார்க்காத போது, நீ பார்க்கிறதும். என்ன ரெண்டு பேரும் கண்ணாமூச்சி விளையாடுறீங்களா?” என்றாள் சோனா.


“சோனா, ப்ளீஸ் இதுல விளையாடாத. அவர் என்னைப் பார்கிறதை கூடத் தவிர்க்கிறார்.”


“அது நீ பார்க்கும்போது. மத்தபடி அவர் உன்னைத்தான் எப்பவும் பார்க்கிறார். எனக்குத் தெரியும்.”


சோனா சொன்னதைக் கேட்டதும், அபர்ணாவுக்கு எங்கோ பறப்பது போல் இருந்தது.”


“சரி நான் உங்க அண்ணனை நீச்சல் குளத்தில தள்ளி விடுறேன்.” என ஒத்துக் கொண்டாள்.


இருவரும் சாப்பிட கீழே சென்றனர். சாப்பிடும் போது, அபர்ணா தன்னை ராம் பார்கிறானா என அடிக்கடி பார்த்துக் கொண்டாள். அவளுக்கு அவன் பார்ப்பது போலவே இல்லை.
அபர்ணா தன்னைப் பார்ப்பது ராமிற்குத் தெரிந்து விட்டது. அதனால் அவள் பக்கம் திரும்பாமல் இருந்தான்.


உணவு முடிந்ததும், அபர்ணாவின் அணி நீச்சல் குளத்திற்குச் சென்று விட்டனர். நீச்சல் குளத்தைச் சுற்றி விளக்குகள் எரிந்ததால்… அந்த இடம் வெளிச்சமாக இருந்தது.


அவர்கள் அங்கே ராமிற்காகக் காத்திருக்க, இங்கே மற்றொரு அணி அவன் எழுந்து சென்று விடாமல் இருக்க, சோனாவும், அம்முவும் அவனோடு பேசிக்கொண்டே இருந்தனர்.


“சரி தூங்க போகலாம்.” என ராம் எழுந்து விட்டான்.


“எங்கே மற்றவர்கள்.” என அவன் கேட்க,


அங்கிருந்த மனிஷ், “நீச்சல் குளத்துகிட்ட உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்காங்க.” என்றான்.


இந்த நேரத்தில் அங்கு என்ன செய்கிறார்கள் என நினைத்தவன், நீச்சல் குளத்தை நோக்கி சென்றான். மனிஷ் புன்னகையுடன் அவனைப் பின் தொடர, மற்றவர்களும் சென்றனர்.


அவர்களுக்குத் தெரியும் அபர்ணா கண்டிப்பாக ஏதாவது செய்து ராம்மை உள்ளே தள்ளி விடுவாள் என்று.


அபர்ணா அங்கிருந்த சாய்வு நாற்காலியில் படுத்து, வளர்பிறை நிலவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.


“ராம் அண்ணா வர்றாங்க.” அஞ்சலி சொல்ல, எழுந்து சென்று நீரை பார்ப்பது போல நின்று கொண்டாள்.


“இங்க என்ன பண்றீங்க? எல்லாம் இன்னும் தூங்காம.” ராம் கேட்க, மற்றவர்கள் அவனைப் பார்த்தனர்.


“இவ்வளவு சீக்கிரம் தூங்கி என்ன பண்ணப்போறோம். அதுவும் நாம ஜாலியா இருக்கத்தானே இங்க எல்லோரும் சேர்ந்து இருக்கோம்.” என்றாள் நேகா.

ராம்மும் அங்கேயே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தான். அபர்ணாவுக்கு ஒரே நடுக்கம். எப்படித் தள்ளி விடுவது என யோசித்துக் கொண்டு இருந்தாள்.


அபர்ணா வெகு நேரமாக ஒரே இடத்தில் நிற்பதை பார்த்த ராம் அவளிடம் சென்றான்.


“என்ன உள்ள மீன்னா இருக்கு. அப்படி உத்து பார்த்திட்டு இருக்க.” என அவனே  எடுத்துக் கொடுக்க, அபர்ணா பிடித்துக்கொண்டாள்.


“தண்ணியில நிலவு தெரியுது பாருங்க.” என அவள் காட்ட, ராம்மும் பார்த்தான்.
அபர்ணா சற்று பின்னே வந்து, அவன் முதுகில் கை வைத்து தள்ள, ராம் ஒரு அடி கூட அசையவில்லை. அவன் வலுவாக நின்றிருந்தான்.


அபர்ணா அவனைப் பார்த்து விழிக்க, “ஓ…. காலையில இருந்து இந்த விளையாட்டுத்தான் போகுதா.” என்றவன், அபர்ணா எதிர்பார்க்காத நேரம், அவளைப் பிடித்துத் தண்ணீரில் தள்ளி விட்டான்.


அபர்ணாவுக்கு உண்மையாகவே நீச்சல் தெரியாது. அவள் தண்ணீருக்குள் சென்று விட்டு மேலே வந்தவள், நீரில் தத்தளிப்பதை பார்த்து, ராம் தண்ணீருக்குள் இறங்கி விட்டான்.


அதுவரை நடந்தை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த மற்றவர்கள் பயந்து விட்டனர்.


ராம் அபர்ணாவை பிடித்து இழுத்து நிறுத்த முயற்சி செய்ய, அவள் பயத்தில், “ஐயோ நான் சாகப்போறேன்.” எனக் கத்த.


“ஹே லூசு, முதல்ல நில்லு டி.” என்றவன், அவளைப் பிடித்து நிறக வைத்தான். அபர்ணா அவன் கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள்.


ராம் தன்னைப் பிடித்திருக்கிறான் என்று அறிவுக்குப் புரிந்ததும்தான். அபர்ணா அவன் சொல்வதைச் செய்தாள்.


அவள் இருக்கும் உயரத்திற்குத் தண்ணீர் அவள் மார்பு வரையில்தான் இருந்தது. இதில் எங்கே அவள் மூழ்குவது.


தான் பயந்ததை நினைத்து அவளுக்கே வெட்கமாகப் போய்விட்டது. அவள் மெதுவாக நிமிர்ந்து ராம்மை பார்க்க, அவன் அதிசயமாக, அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு இருந்தான்.


அவனின் புன்னகை அபர்ணாவையும் தொற்றிக்கொள்ள, அவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். ராம்மிற்கு அப்போது அவர்கள் இருவரை தவிர வேறு எதுவும் நினைவு இல்லை.


“ஹே… நாம ரெண்டு டீமும் வின்.” என நிகில் கத்தினான்.


“எல்லோரும் ஸ்விம் பண்ணலாம்.” என்றபடி மமதி நீருக்குள் இறங்க, மற்றவர்களும் இறங்கினர்.


அபர்ணாவுக்கு இன்னும் பயம் தெளியவில்லை. அதை உணர்ந்தது போல ராமமும் அவள் கையைப் பிடித்திருந்த பிடியை விடவில்லை.


எல்லோரும் நீரை ஒருவர் மேல் மற்றவர் அடித்து விளையாட, ராம்மும் தண்ணீரை எடுத்து அபர்ணாவின் முகத்தில் அடித்தான். அவள் பதிலுக்கு அடிக்க, மற்றவர்களும் சேர்ந்து கொள்ள, அங்கே ஒரே கொண்டாட்டம் களைக்கட்டியது.


இதையெல்லாம் அவர் அறை பால்கனியில் இருந்து அகிலாண்டேஸ்வரி பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ, அதுதான் நடந்து கொண்டிருந்தது.


அவர் அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தார்.

 

Advertisement