Advertisement

பனி சிந்தும் சூரியன்


அத்தியாயம் 3


அன்று இரவு உணவு முடிந்ததும், இளையபட்டாளம் மட்டும் மூன்றாவது தளத்திற்குச் சென்றனர்.


மூன்றாவது தளத்திற்கு மின்தூக்கி இல்லை. இரண்டாம் தளத்தில் இருந்து படி வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலே சென்று பார்த்ததும், அபர்ணாவுக்கு மனதிற்குள் உல்லாசம் பிறந்தது.


சுற்றி கைப்பிடி சுவர் முழுவதும், பிளாஸ்டிக் டப்பகளில் வைத்திருந்த விதவிதமான செடி கொடிகள், இன்னொரு பக்கம் அழகான பெரிய ஊஞ்சல், நடுவில் உட்கார்ந்து அரட்டை அடிக்க வசதியாகக் கிரானைட் கல்லினால் செய்த பெஞ்ச் என எல்லா வசதிகளும் இருந்தது.


அபர்ணா சென்று உஞ்சலில் அமர்ந்து கொண்டாள். மற்றவர்கள் சென்று பெஞ்சில் அமர்ந்தனர்.


“அபர்ணா கார்ட்ஸ் விளையாட வரலையா?” சோனா அழைக்க,


“நாங்க எங்க வீட்ல வார கடைசியில எப்பவும் கார்ட்ஸ் தான் விளையாடுவோம். இங்கயும் அதேவா… நீங்க விளையாடுங்க. நான் பாட்டு கேட்கப்போறேன்.” என்றவள், செல்லில் பாட்டு வைத்து, காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு, ஊஞ்சல் ஆடியபடி பாட்டுக் கேட்டுக்கொண்டு இருந்தாள்.


விளையாட்டில் கவனமாக இருந்தாலும், ராம்மின் பார்வை அடிக்கடி, அபர்ணாவை தொட்டு மீண்டது. அவள் இப்போது படுத்துக்கொண்டு பாடல் கேட்டுக்கொண்டு இருந்தாள்.


ஒரு மணி நேரம் சென்று இருக்கும், “போதும் விளையாடினது.” அம்மு சொல்ல, எல்லோருக்குமே விளையாடி போர் அடித்து விட்டதால், சரி என்றனர்.


மனிஷும், அகிலும் கீழே சென்று சாப்பிட இரண்டு, மூன்று இனிப்பு டப்பாக்கள் கொண்டு வந்தனர். எல்லோரும் ஆளுக்கொன்று கையில் எடுக்க, ராம் ஒரு டப்பாவை எடுத்துக் கொண்டு அபர்ணாவிடம் சென்றான்.


அவள் கண் மூடி படுத்திருந்தாள். “அபர்ணா.” ராம் அழைக்க, அவள் கண் திறந்து பார்க்கவில்லை. ராம் லேசாக அவள் கையில் தட்ட, திடுக்கிட்டுக் கண் திறந்தவள், காதில் இருந்த ஹெட் செட்டை எடுத்துவிட்டு எழுந்து அமர்ந்தாள். ராம்மும் சற்று இடைவெளி விட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தான்.


அவன் இனிப்பை கொடுக்க, கையில் எடுத்துக் கொண்டவள், “கொஞ்சம் இந்த ஊஞ்சலை ஆட்டி விடுறீங்களா?” என்றதும் ராம் அவளை முறைத்தான்.


“உங்களை வச்சிகிட்டு என்னால ஆட்ட முடியாது. அதனாலதான்.”
ராம் காலை ஊன்றி உஞ்சலை மெதுவாக ஆட்டினான்.


“என்ன என்னைக் கண்டுக்காம இருந்தீங்க. இப்ப நீங்களே வந்து ஸ்வீட் எல்லாம் கொடுக்குறீங்க.”


“நீங்க எங்க வீட்டுக்கு வந்திருக்க விருந்தாளி, அப்புறம் கவனிக்க வேண்டாமா?”
ராம் சொன்னதைக் கேட்டு உதட்டை பிதுக்கியவள், இனிப்பை சாப்பிட ஆரம்பித்தாள்.


“என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நீங்க எனக்காக யாரையும் திட்ட வேண்டாம்.” திடிரென்று அபர்ணா சொல்ல,


“உங்களுக்காகன்னு இல்லை. உங்க இடத்தில வேற யார் இருந்தாலும், நான் அவங்களுக்காகவும் பேசி இருப்பேன்.” என்றான் ராம்.


“ஓ… ஆனா இனி எனக்காகப் பேசாதீங்க.”


“சரி பேசலை.”


இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பிறகு ராம் தான் ஆரம்பித்தான்.


“நீங்க….”


“உங்களை விடச் சின்னப் பொண்ணுதானே. எதுக்கு வாங்க, போங்கன்னு எதோ பெரியவங்ககிட்ட பேசுற மாதிரி சீன் போடுறீங்க.? உங்க மரியாதையை எல்லாம் எனக்கு ஒஉண்ணும் தேவை இல்லை.”


“எப்பவும் இப்படித்தான் நீ பட்டு பட்டுன்னு பேசுவியா?” கோபத்தில் அவனும் மரியாதை பன்மையைக் கைவிட,


“உங்களை மாதிரி எனக்கு மனசுல ஒன்னு வச்சுகிட்டு வெளிய ஒன்னு பேச தெரியாது.”


“நான் என்ன மனசுல வச்சுகிட்டு பேசுறேன்.”


“அது உங்களுக்குத்தான் தெரியும்.”


“இப்ப நீதான தெரிஞ்ச மாதிரி சொன்ன? அப்ப நீதான் அது என்னனும் சொல்லணும்.” இருவரும் மெதுவான குரலில், வழக்காடும் போதே, மற்றவர்கள் கீழே இறங்கி செல்ல, இவர்களும் எழுந்து கொண்டனர்.


“நீங்க முதல் நாள் என்னைப் பார்த்த ராம் இல்லை. அது மட்டும்தான் என்னால சொல்ல முடியும். ஏன்னு காரணம் நீங்கதான் சொல்லணும்.” என்ற அபர்ணா படியில் இறங்கி கீழே செல்ல, ராம் அந்த ஊஞ்சலிலேயே சிறிது நேரம் உட்கார்ந்து விட்டான்.


அன்று முதலில் அவளைச் சந்தித்தபோது, சிறிது நிமிடங்களே இருவரும் பேசியது என்றாலும், பார்வை காட்டிக் கொடுத்து விடும் அல்லவா? அவன் எந்த மாதிரி அவளைப் பார்த்தான் என அவளுக்குத் தெரியும்.


மறுநாள் இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதை கூடத் தவிர்த்தனர். இருவரையும் கவனித்த சோனியா, “என்ன உங்க ரெண்டு பேர்குள்ள நல்லாதான போயிட்டு இருந்தது. அதுக்குள்ள என்ன ஆச்சு?” என ராமிடம் கேட்க, அவன் அலட்சியமாகத் தோள்லை குலுக்கி விட்டுச் சென்றான்.


அன்று இரவு ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. ராம் அங்கு இல்லை. சாப்பிட்டதும் அறைக்குச் சென்றுவிட்டான்.

“போன தடவை மாதிரி இந்தத் தடவை இண்டர்செட்டாவே இல்லை…” மமதி சொல்ல,


“ஆமாம், போன தடவை தான் மொக்கைன்னு நினைச்சோம். இந்தத் தடவை அதை விட மொக்கையா இருக்கு.” என்றாள் அஞ்சலி.


அப்போது எதையோ யோசித்த அபர்ணா சிரிக்க, “ஏய் எதுக்குச் சிரிக்கிற?” எனச் சோனியா கேட்க,


“இல்லை இந்த வீடே ஒரு பிக்பாஸ் வீடு மாதிரிதான் இருக்கு. அதுதான் நினைச்சேன், சிரிச்சேன்.” என்றாள்.


அவள் சொன்னது சரிதான் என மற்றவர்களுக்குத் தோன்ற, “ஹே, நாமும் ஒருநாள் இது போல இருந்து பார்க்கலாமா?” என அகில் கேட்க, மற்றவர்களுக்கும் விருப்பம் இருந்தது.


“நம்ம வீட்ல பாட்டி எல்லாம் வச்சிக்கிட்டு இதெல்லாம் பண்ண முடியுமா?” சோனா கேட்க,


“நாம சீக்ரட் டாஸ்க் மட்டும் வச்சுப்போம். பாட்டிக்கு தெரியாது.” என்றான் மனிஷ்.


“சரி ஓகே.” என்றனர்.


இரண்டு பிரிவுகள், ஒரு பிரிவுக்கு மனிஷும், இன்னொரு பிரிவுக்கு அகிலும் தலைவர்கள்.


அபர்ணா, நேகா, அஞ்சலி மூவரும் மணிஷின் அணி. சோனா, மமதி, அம்மு மூவரும் அகிலின் அணி.


ஒரு அணி சொல்வதை மற்ற அணியில் இருப்பவர்கள் செய்யவேண்டும். ஆளுக்கு இரண்டு பணிகள் செய்யவேண்டும்.


மனிஷும், அகிலும், அவரவர் அணியோடு அடுத்த அணிக்கு என்ன பணிகள் கொடுப்பது என ரகசிய ஆலோசனை செய்தனர். அடுத்த நாள் காலையில் இருந்து ஆரம்பிப்போம் என முடிவு செய்துவிட்டுப் படுக்கச் சென்றனர்.


காலையில் எழுந்த அபர்ணா காபி குடிக்கக் கதவு திறந்து கொண்டு வெளியில் வந்தாள். அங்கு ஏற்கனவே அம்மு அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தாள்.


“ஹாய் அம்மு குட் மார்னிங்.” என்றபடி அபர்ணா சென்று காபி எடுத்து வந்து அவள் எதிரில் அமர்ந்தாள்.


“குட் மார்னிங்.” என்றவள் பேப்பர் படிப்பதை தொடர, “அண்ணன் தங்கை ரெண்டும் சரியான திமிர் பிடிச்சதுங்க.” என மனதிற்குள் திட்டியபடி அபர்ணா காபி குடித்தாள்.


அப்போது அங்கு வந்த அகில், “அம்மு அக்கா அபர்ணாவுக்கு முதல் டாஸ்க் என்னன்னு சொல்லிடுங்க.” என்றான்.


“என்னது?” அபர்ணா கேட்க,


“பாட்டியை உன்னோட சிரிச்சு பேச வைக்கணும்.” அம்மு நக்கலாகச் சிரித்துக் கொண்டு சொல்ல,


“யாரு பாட்டியா? நோ வே…..நான் பண்ண மாட்டேன்.” அபர்ணா மறுக்க,


“அப்ப உங்க டீமுக்கு மார்க் கம்மி ஆகும்.” என்றாள் அம்மு.


அதைக் கேட்டபடி வந்த மனிஷ், “ப்ளீஸ், ட்ரை பண்ணு அபர்ணா.” என்றான்.


“சரி… எப்ப பண்ணனும்.”


“காலையில டிபன் சாப்பிட பாட்டி டைனிங் ஹால் வருவாங்க அப்ப.” அம்மு சொல்ல, அபர்ணா மனமே இல்லாமல் சரி என்றாள்.


“நீ இப்ப அம்மு அக்கா என்ன பண்ணனும்ன்னு சொல்லு.” மனிஷ் சொல்ல,
அபர்ணாவுக்கு அம்மு மீது சரியான கோபம். ஏற்கனவே பாட்டிக்கு அபர்ணா என்றால் ஆகாது. அவரிடம் போய்ப் பேச சொன்னால், அதுவும் சிரித்து, நமக்கு மட்டும் இப்படிச் சொன்னாள் இல்லையா, இவளும் அனுபவிக்கட்டும் என நினைத்தவள்,


“உங்க அன்னாகிட்டா நீங்க இன்னைக்குக் காலையில அவர் ஆபீஸ் கிளம்பி போற வரை பேசக் கூடாது.” என்றாள்.


“எங்க அண்ணனோட நான் பேசக் கூடாதுன்னு சொல்ல நீ யார்?”


“கத்தாதீங்க அம்மு. இது டாஸ்க். பண்ணுங்க பண்ணாம போங்க.உங்க இஷ்ட்டம்.” என்றவள், அறைக்குள் செல்ல, அம்மு மனிஷை பார்த்து முறைக்க,


“விளையாட்டு தானே… ப்ளீஸ்.” என்று அவன் கெஞ்ச, அப்போது ராம்மின் அறைக்கதவு திறக்க, அவன் வெளியே வரும் முன் அம்மு அறைக்குள் சென்றாள்.
ராம் அவளைப் பார்த்து எதாவது கேட்டால், பதில் சொல்ல முடியாது இல்லையா?


பாட்டியின் கையில் அல்லவா அபர்ணாவின் வெற்றி இருக்கிறது. அதனால் குளித்துப் புடவை கட்டிக்கொண்டு சென்றாள். எல்லோரும் சேர்ந்து தான் உணவு அறைக்குச் சென்றனர்.


இவ்வளவு காலையில் எழுந்துகொள்பவர்கள் இல்லையே… அதனால் பாட்டி எல்லோரையும் ஆச்சர்யமாகப் பார்த்தார்.


பெரியவர்கள் தான் காலையில ஒழுங்காகச் சாப்பிடுவார்கள். இளையவர்கள் விடுமுறை என்றால், காலை உணவே முக்கால்வாசி நாட்கள் உண்பது இல்லை. எதாவது பழச்சாறு மட்டும் குடித்து விட்டு, நேராக மதிய உணவுதான் சாப்பிடுவது.


சாப்பிட செல்லும்போது ராம் அகிலாவிடம் எதோ கேட்க வர, அதைக் கவனிக்காதது போல், அவள் விலகி சென்றாள். அதைப் பார்த்து அபர்ணாவுக்குச் சிரிப்பு வந்தது.


உணவு மேஜையில் பாட்டி நடுவில் உட்கார்ந்து இருக்க, அவர் பக்கம் உள்ள இடது பக்க இடத்திற்கு அபர்ணா எல்லோரையும் முந்திக்கொண்டு சென்று அமர்ந்தாள்.
ராம் அவளை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே எதிரில் அமர்ந்தான்.


அபர்ணா பாட்டியை பார்த்து வழிய சிரித்து, “நல்லா இருக்கீங்களா பாட்டி?” எனக் கேட்க,


அவர் முறைத்தபடி, “என் வீட்ல என்னையே நலம் விசாரிக்கிறியா?” என்றவர், உணவை எடுத்து தன் தட்டில் பரிமாறிக்கொண்டார்.


அபர்ணா மனிஷை பார்க்க, அவன் சாரி எனப் பார்வையால் கெஞ்சினான். அவன் பக்கத்தில் இருந்த அம்மு, இதைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்க, அபர்ணாவுக்கு வேறு ஒன்று தோன்றியது. அவள் ராம்மை பார்க்க, அவன் பாட்டியோடு பேசியபடி சாப்பிட ஆரம்பித்தான்.

அம்முவுக்குப் புரிந்து விட்டது. இவள் தன்னை மாட்டி விடப் போகிறாள் என்று. அவள் கவனமாக இருந்தாள். ஆனால் அவள் நினைத்தது போல் அபர்ணா எதுவும் செய்யவில்லை. அவள் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள். நாம்தான் தவறாக நினைத்து விட்டோம் என அம்மு நினைத்துக் கொண்டாள்.


சாப்பிட்டு முடிக்கும்போது, “பாட்டி..” என அபர்ணா ஆரம்பிக்க, எல்லோரும் அவளைப் பார்த்தனர்.


“நான் சீக்கிரம் இங்க இருந்து போயிடுவேன்னு நினைக்கிறேன். எங்க வீட்ல குடி இருக்கிறவர் நேத்து போன் பண்ணார். சனிக்கிழமையே வீட்டை காலி பண்ணிடுறேன்னு சொன்னார்.” என்றதும், பாட்டியின் மனம் சற்று இளகத்தான் செய்தது.


அவர் சந்தோஷமாக அபர்ணாவை பார்க்க, “நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க பாட்டி. உங்களைப் பார்த்தா எழுபத்தி அஞ்சு வயசுன்னு நம்பவே முடியலை.” என அபர்ணா ஐஸ் மலையையே தூக்கி வைக்க,


பெண்கள் எந்த வயதில் இருந்தாலும் சரி, அவர்களைப் பார்த்து அழகு என்று சொல்லிவிட்டால், அவர்கள் உச்சி குளிர்ந்து விடும். அதே போல் அபர்ணா சொன்னதைக் கேட்டு, பாட்டியும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.


“சரியான வாயாடி நீ.” என்றவர், கிண்ணத்தில் இருந்த நீரில் கை கழுவ, அவர் உதவியாளர் வந்து எழுந்துகொள்ள உதவி செய்ய, மெதுவாக நடந்து அவர் ஹாலுக்குச் சென்றார்.

Advertisement