Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 29


அகிலா திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்ல… கிளம்பிக் கொண்டு இருந்தாள். அவள் செல்வதற்கு முன் தன் அண்ணனுடன் தனியாக நின்று பேசிக்கொண்டு இருந்தாள்.


பத்து நிமிடங்களாக இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்படி என்னதான் ரெண்டு பேரும் பேசுவாங்களோ…என அபர்ணா யோசித்துக் கொண்டு இருந்தாள்.


அபர்ணா அகிலாவை அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்தாள். அந்த அறையில், அவள், ஸ்வர்ணா, ராம் மற்றும் அகிலா மட்டுமே இருந்தனர். இருவரும் தள்ளி நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.


நின்று நின்று அபர்ணாவுக்குக் கால் வலித்து விட… அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டாள். இப்போது சுடிதாரில் இருந்தாள். சுகன்யா செல்வதற்கு முன் அவளை உடை மாற்ற வைத்து, புடவை நகைகளைக் கொண்டு சென்று இருந்தார்.


“நீ அங்க அஞ்சு நாள்தான் இருக்கப் போற அகிலா… இருக்கிறவரை அவங்க மனசு நோகாம நடந்துக்கோ. இப்படித்தான்னு நீயே மனசுல எதுவும் செட் பண்ணிக்காத. அவங்க எல்லாம் ரொம்ப நல்ல மாதிரி.” என ராம் தங்கைக்கு அறிவுரைதான் வழங்கிக் கொண்டு இருந்தான்.


இருவரும் பேசிவிட்டு வர… “பேசியாச்சா… ஹப்பாடா !” என அபர்ணா எழுந்துகொள்ள…


அகிலாவிடம் கண்ணைக் காட்டிய ராம், “அகிலா, உனக்கு அங்க அஞ்சு நாள் இருக்க முடியாதுன்னா, நான் வேணா கார்த்திக்கிட்ட பேசுறேன்.” என்றான்.
அதைக் கேட்டு ஸ்வர்ணா எதோ சொல்ல வர… அவர் கையைப் பிடித்து ராம் பேச விடாமல் தடுக்க… அதற்குள் அபர்ணா பொரிய ஆரம்பித்து விட்டாள்.

“உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே கிடையாதா? அவங்கதான் கார்த்திக் அண்ணா இங்க இருக்க ஒத்துகிட்டாங்க இல்ல…வெறும் அஞ்சு நாள் அகிலா அங்க இருக்க முடியாதா? நீங்க பாட்டுக்கு இப்படிச் சொல்றீங்க?”

“சுஜா ஆன்டி பீல் பண்ண மாட்டாங்களா? கார்த்திக் அண்ணா மேல அவ்வளவு நம்பிக்கை இல்லையா… நீங்க பேசுறது கொஞ்சம் கூடச் சரியே இல்லை.”


அவள் பேசிக்கொண்டே செல்ல… ராம்மும் அகிலாவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.


அப்போது கதவைத் தட்டிக் கொண்டு வந்த கார்த்திக், “போகலாமா…” என அகிலாவை பார்த்துக் கேட்க, “கிளம்பியாச்சு…. போறதுக்குள்ள அபர்ணாவை டென்ஷன் பண்ணலாம்ன்னு நினைச்சேன். அதுவும் பண்ணி ஆச்சு.” என ராம் சொன்னதும்,


“அடப்பாவி ! சும்மாதான் சொன்னானா… நாம்தான் தேவையில்லாம டென்ஷன் ஆகிட்டோமா…” என அபர்ணா நினைக்க… மகனின் கேலி புரிய, ஸ்வர்ணா முகத்திலும் புன்னகை.


கார்த்திக் அகிலாவோடு ஸ்வர்ணாவும் வெளியே சென்றுவிட… அபர்ணா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, அவர்கள் பின்னே செல்ல… ராம் அவள் கையைப்பிடித்து அவளைப் போக விடாமல் தடுத்தான்.


“கோபமா, சும்மா விளையாடுக்குதானே.” அவன் அவளைத் தன் பக்கம் திருப்ப..


“என்னை வச்சு காமெடி பண்றீங்க இல்ல.. நான் உங்களோட பேச மாட்டேன்.” என்றவள், அவனைத் தள்ளிவிட்டு வெளியே சென்று விட்டாள்.


அகிலா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கார்திக்கோடு காரில் ஏற… சோனா அவினாஷ் சென்ற இன்னொரு காரில் சென்று அபர்ணா ஏறினாள்.


தங்கையின் கார் அருகில் சென்று அவளுக்கு விடை கொடுத்தவன், அடுத்து அபர்ணா இருந்த காரின் அருகே வந்தான். முன்பக்கம் அவினாஷும் சோனாவும் இருக்க… பின் பக்கம் அபர்ணா உட்கார்ந்து இருந்தாள்.


அபர்ணா இருந்த பக்கம் வந்து நின்றவன், “மாப்பிள்ளை காரை பார்த்து ஓடிட்டு போங்க.” என்றான்.


“எனக்கு இந்தியாவுல கார் ஓடுறது கஷ்ட்டம்தான். ஆனா உங்க தங்கைக்கு எதுவும் ஆகாம பார்த்துகிறேன்.”


“அப்படியே, உங்களை நம்பி என்னோட பிப்டி கேஜி தாஜ்மகால்லை வேற அனுப்புறேன். அதையும் கொஞ்சம் நினைவு வச்சுக்கோங்க.” என்றதும், அபர்ணா முறைத்தாலும், அவளது முகம் சிவக்க ஆரம்பித்தது.


“ஓ…இதுக்குதான் இவ்வளவு அக்கறையா?” எனச் சோனா கேட்க,


“நான் கூடத் தங்கச்சி மேல பாசத்துல சொல்றாருன்னு தப்பா நினைச்சிட்டேன். உங்க அண்ணன் அவர் ஆளை காப்பாத்துறார்.” என அவினாஷ் சிரிக்க…


“போதும் போங்க.” என்றாள் அபர்ணா. அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ராம் அவளைப் பார்த்து போய் வா என்பது போலத் தலையசைத்தான்.


அவனை விட்டு அந்த நொடி பிரிவது, அபர்ணாவுக்கு மிகவும் கஷ்ட்டமாக இருந்தது. இப்படியே அவன் கைபிடித்து எங்காவது சென்று விட மாட்டோமா என்று இருந்தது. அதேதான் ராம்மும் நினைத்தான்.


சிறிது நேரம் அவர்களோடு இருந்துவிட்டு அபர்ணா அவள் வீட்டிற்குக் கிளம்பி விட்டாள். இரவு உணவின் போது, “என்னமா கல்யாணத்தைப் பண்ணாங்க இல்ல. நம்மால அவங்களைப் போலப் பண்ண முடியுமா?” ஸ்ரீகாந்த சொல்ல,


“கண்டிப்பா முடியாதுதான்.” என்றார் சுகன்யா.


“அவங்களே பண்ணிகிறேன்னு சொல்வாங்க இல்லையா…” சொல்லும்போதே ஸ்ரீகாந்தின் குரலில்… என் பெண்ணிற்குச் செய்ய முடியாதா என்ற வருத்தம் இருந்தது.


“அப்பா, எனக்குக் கிராண்டா எல்லாம் வேண்டாம் பா.”


“நீ சொல்ற, ஆனா அவங்க பெரிய இடம் இல்லையா… பெரிசா செய்யணும்ன்னு ஆசைப்படுவாங்க. அதுவும் ராம் அந்த வீட்டு முதல் வாரிசு.” என்றார் சுகன்யா.


ஒருத்தன் அந்த உருகு உருகினான் என்று பார்த்தால்… அவனிடம் இருந்து போன்னும் இல்லை, நேரிலும் ஆள் வரவில்லை. அபர்ணாதான் அகிலாவுக்குப் பதில் அலுவலகம் சென்று பார்த்துக்கொள்கிறாள். அகிலா ஹனிமூன் சென்று வரும் வரை பார்த்துக் கொள்வதாக ஒத்துக்கொண்டாள்.


அபர்ணாவுக்கும் ராம்மை அழைக்கத் தயக்கமாக இருந்தது. அவன் வேலையாக இருப்பானோ… வீட்டில் வேறு உறவினர்கள் இருப்பார்கள் என நினைத்து அழைக்காமல் இருக்க.. அவன் ஏன் அழைக்கவில்லை எனத் தெரியவில்லை.


ஐந்துநாட்கள்  சென்று இருக்கும், அன்று அபர்ணா ஒப்புதலுக்காக வந்திருந்த புதிய நிகழ்ச்சி ஒன்றை பற்றிப் படித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். திடிரென்று யாரோ கதவை தட்ட… அவள் அனுமதி அளிக்கும் முன், ராம் உள்ளே நுழைந்து இருந்தான்.


“ஒரு வழியா என்னை நியாபகம் வந்திடுச்சு போல…” அபர்ணா சாவகசமாகக் கேட்டுவிட்டு, அவள் வேலையைத் தொடர…


“ஹே கோபமா…. நிஜமாவே இன்னைக்குதான் நான் ப்ரீ ஆனேன்.” என்றபடி ராம் எதிரில் அமர்ந்தான். திருமண வேலைகள் முடிந்து, அலுவலகம் சென்று, அங்கிருக்கும் நிலைமையைச் சரி பார்த்து முடிக்கவே நேரம் சரியாக இருந்தது. கார்த்திக்கும் அகிலாவும் அன்றுதான் ஹனிமூன் கிளம்பி சென்று இருந்தனர்.


“அப்புறம் எப்படி இருக்க?”


“நான் நல்லா இருக்கேன். நீங்க?” எனக் கேட்டபடி அபர்ணா தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை மூடி வைத்தாள்.  


“ம்ம்… நல்லா இருக்கேன். உன்கிட்ட கொஞ்சம் பேசணும், நாம வெளிய போய் டின்னர் சாப்பிடலாமா?”


அப்போதே நேரம் ஒன்பது மணி, “இப்ப ரொம்ப லேட் ஆகிடுச்சு ராம். வெளிய போய்ச் சாப்பிட்டா வீட்டுக்கு போக லேட் ஆகிடும். எங்க வீட்டுக்குப் போய்ச் சாப்பிடலாமே.” அபர்ணா அழைக்க….. ராம் சரி என்றான்.


காரில் செல்லும் போதே “அபர்ணா, நாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என ராம் பட்டென்று கேட்டு விட்டான்.


“உடனேனா எப்போ?”


“அடுத்த மாசம்.”


“அவ்வளவு சீக்கிரம் பண்ணிக்க முடியுமா?”


“உனக்கு எப்படிக் கல்யாணம் கிராண்டா பண்ணனுமா?”


“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சொல்லப்போனா எங்க அப்பா… நாம அவங்க அளவுக்குப் பண்ண முடியாதேன்னு கவலைதான் பட்டார். அதோட எனக்கு அவ்வளவு நேரம் மேடையில நிற்க எல்லாம் பொறுமை இல்லை.”


“நீ நிஜமாதான் சொல்றியா?”


“எனக்கு உங்களோட கல்யாணம் ஆகணும். அவ்வளவுதான். வேற எல்லாம் எனக்குப் பெரிய ஆசை கிடையாது.”


“அப்படியா ! ஆனா நான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லியும், நீ உடனே பதில் சொல்லலையே… இதுல பெங்களூர்ல வேற போய் உட்கார்ந்துகிட்டே.”


“எனக்கு எங்க உங்ககிட்ட வந்து என்னைக் கல்யாணம் பண்ணிகிறீங்களான்னு கேட்டுடுவேனோனு பயம். அதுதான் பெங்களூர் போயிட்டேன். இன்னும் ரொம்பத் தூரம் போகனும்ன்னுதான் நினைச்சேன். ஆனா அங்கதான் வேலை கிடைச்சுது.”

அபர்ணா சொன்னதைக் கேட்ட ராம், காரை நிறுத்தியே விட்டான்.
பின்னால் வந்தவன் திட்டிவிட்டு போக… காரை எடுத்து சென்று ஓரமாக நிறுத்தினான்.


“நீங்க ஓகே சொல்லியும், ஏன் உடனே வரலைனா? அப்ப எங்க அப்பா அம்மாவுக்கு முழு விருப்பம் இல்லை. ஏற்கனவே அவங்களை ரொம்பக் கஷ்ட்டபடுத்திட்டேன். அவங்க முழு மனசா ஓகே சொல்லாம, நான் எப்படிச் சொல்ல முடியும்?”


அபர்ணா அன்றைய தன் மனநிலையைச் சொல்லிவிட்டாள். அன்று அவள் பட்ட வேதனைக்கு, இன்று படும் வேதனை சற்றும் குறைவாக இல்லை என்பது, அவளது கண்கள் கலங்கி சிவந்ததிலேயே தெரிந்தது.


கேட்டதும் ராம்மிற்கு இந்தப் பெண்ணிற்குத் தன் மீது எப்படி இவ்வளவு காதல் என்றுதான் தோன்றியது.


“சாரி அபர்ணா. நான் உன்னை ரொம்பக் கஷ்ட்டபடுத்திட்டேன். தெரியாம பண்ணேன்னு சொல்ல மாட்டேன். தெரிஞ்சேதான் பண்ணேன். எனக்கு அப்ப வேற வழியில்லை. ஆனா நான் அதைச் சந்தோஷமா பண்ணலை. உன் அளவுக்கு எனக்கும் வருத்தம் இருந்தது. அதை மட்டும் நியாபகம் வச்சுக்கோ.” என்றான்.


ராம் இன்னும் கொஞ்சம் விரிவாகவே அன்றைய அவனுடைய நிலையைப் பற்றியும், அவன் எப்போது அபர்ணாதான் வேண்டும் என்று முடிவு செய்தான் என்பது பற்றியும் சொல்லி இருக்கலாம். அது பின்னால் அவர்களுக்குள் வரும் புரிதல் இன்மையைப் போக்கி இருக்கும். ஆனால் ஏனோ அதைப் பற்றி அவன் விரிவாகப் பேசவில்லை.


அபர்ணாவை தன் பக்கம் இழுத்தவன், அவளைத் தோளோடு சேர்த்து அனைத்து, “நான் இனிமே உன்னைச் சந்தோஷமா வச்சுப்பேன். ஓகே வா.” என்றான். தான் அதையும் காப்பாற்ற போவது இல்லை என்பது தெரியாமல்.


ராம், அபர்ணா இருவும் சேர்ந்து வீட்டிற்குள் நுழைய… அந்தச் சின்னக் குடும்பம் அவர்களைச் சந்தோஷமாக வரவேற்றது. ஏற்கனவே மற்றவர்கள் சாப்பிட்டு இருக்க.. அவர்கள் இருவரையும் உட்கார வைத்து சுகன்யா உணவு பரிமாறினார்.


சாப்பிட்டு முடித்துவிட்டு ராம் ஸ்ரீகாந்திடம் திருமணம் விஷயம் பற்றிப் பேசினான்.
அவரும் அடுத்த மாதமே எப்படிக் கல்யாணத்தை வைப்பது எனத் திகைத்தார். தனக்குப் பெரிய அளவில் செய்ய விருப்பம் இல்லை என அவன் தெரிவிக்க… தாங்கள் சின்ன இடம் என யோசிக்கிறானா என நினைத்தனர்.


“பெரிசா பண்ணா… மண்டபத்தில இருந்து எல்லாத்துக்கும் வெயிட் பண்ணனும். நாலுல இருந்து ஆறு மாசம் ஆகும்.” என்றான். அவ்வளவு நாள் காத்திருக்க முடியாது என்பதைத்தான் சொல்ல வருகிறான் எனப் புரிந்ததும், சுகன்யாவுக்குச் சிரிப்பை அடக்குவது சிரமாக இருந்தது.


“எங்கதுல பொண்ணு வீட்லதான் கல்யாணம் பண்ணுவாங்க. நாங்க கல்யாணம் பண்ணட்டுமா?” ஸ்ரீகாந்த கேட்க,


“உங்க பொண்ணுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணனும்ன்னு நீங்க ஆசை பட்டீங்களோ அப்படியே பண்ணுங்க. நாங்க பெரிய இடம்ன்னு சொல்லி, நீங்க அதிகமா எதுவும் பண்ண வேண்டாம். நான் என்னோட பிஸ்னஸ் ஆளுங்களுக்காக ஒரு வரவேற்பு மட்டும் ஹோட்டல்ல வச்சுகிறேன்.” என்றான்.


நீங்க கிராண்டா பண்ணுங்க, நாங்க பணம் கொடுத்திடுறோம் என்று சொன்னாலும், மகள் திருமணத்தைச் செய்த முழுத் திருப்தி வராது.


“நீங்க உங்க வசதிப்படி கல்யாணம் பண்ணுங்க. நான் என் சார்பா ஒரு வரவேற்பு வச்சுகிறேன்.” என அவன் சொல்வது, எதார்த்தமாக இருந்தது.


“உங்க அம்மாகிட்ட பேசிடீங்களா? அவங்களுக்கு ஓகே வா…”


“அம்மாகிட்ட பேசிட்டேன். அவங்களும் சீக்கிரமா வைக்கிறது நல்லதுன்னு நினைக்கிறாங்க.” என்றான்.


“அப்ப சரி அப்படியே பண்ணிடலாம்.” என்றார் ஸ்ரீகாந்த. அவர் வெளிநாட்டிலேயே அதிக நாட்கள் இருந்துவிட்டதால்… அவருக்குப் பெரிய உறவு வட்டம் இல்லை. அதனால் பெரிய அளவில் வேலைகளும் இல்லை.


ராம் பேசிவிட்டு வீட்டிற்குக் கிளம்ப, அபர்ணா அவனோடு கீழே வரை சென்றாள். இருவரும் கை கோர்த்துக் கொண்டு பேசியபடி அந்தக் குடியிருப்பை ஒருமுறை வளம் வந்தனர்.


“நிஜமாவே இதெல்லாம் நடக்குதா… கனவு இல்லையே…” என அபர்ணா கேட்க, யாரவது கனவு என்று எழுப்பி விட்டு விடுவார்களோ என அவளுக்கு நிஜமாகவே பயம்.


“எப்படி ப்ரூப் பண்றது? நான் வேணா ஒரு முத்தம் கொடுக்கவா?” ராம் ஆவலாக அவள் அருகில் வர…


“ராம் ப்ளீஸ்… கல்யாணத்துக்கு அப்புறம். எனக்கு எதோ தப்பு பண்ற மாதிரி உறுத்தலா இருக்கும்.” என்றாள்.


“ஓகே… இதுக்காகவாவது தீயா வேலைப் பார்த்து, சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்.” என்றவனைப் பார்த்து அபர்ணா சிரித்தாள்.


அவள் திரும்ப வீட்டிற்கு வரும்போது, அவள் பெற்றோர் உட்கார்ந்து கல்யாணத்துக்குத் திட்டமிட்டுக் கொண்டு இருந்தனர். அருண் லாப்டாப்பில் அமர்ந்து மண்டபத்திற்குப் பார்த்துக் கொண்டிருந்தான்.


“என்ன மா அதுக்குள்ள ஆரம்பிச்சுடீங்க?”


“அடுத்த மாசம் கல்யாணம் வைக்கணும்ன்னு சொல்றாரு. நாம ஒருநாள் கூட வேஸ்ட் பண்ண முடியாது.” என்றார்.


“இப்ப நாம் சேர்த்து வச்சிருக்க நகை நூறு பவுன் இருக்கும். இன்னும் இருப்பத்தஞ்சு பவுன் மட்டும் வாங்கிடலாம்.”


“அவங்க வீட்ல எல்லாமே இருக்கும். நாம கொடுக்கிற சீர் அவங்களுக்குப் பெரிசாவே தெரியாது. அதனால கல்யாணத்தைக் கிராண்டா பண்ணிடலாம். அவங்க சொந்தகாரங்க எல்லாம் கல்யாணத்துக்கு வருவாங்க. அவங்க குறை சொல்ற மாதிரி இருக்கக் கூடாது.” என்றார் சுகன்யா.


ராம் வீட்டிற்கு வந்தவன், “அபர்ணா வீட்டுக்கு போனேன், அங்கேயே சாப்பிட்டேன் மா.” என்றான்.


ராம் சாப்பிட்டதும் தான் ஸ்வர்ணா சாப்பிடுவார். இரவு உணவுக்கு வரவில்லை என்றால்… முன்பே சொல்லிவிடுவான். இன்று சொல்ல மறந்திருந்தான்.


“திடிர்ன்னுதான் அங்க போனேன். சாரி சொல் மறந்துட்டேன்.” என்றவன், “நீங்க சாப்பிடுங்க மா…” என அவர் சாப்பிடும் வரை அங்கயே உட்கார்ந்து இருந்தான்.


முதலில் தான் அபர்ணா வீட்டில் சாப்பிட்டுவிட்டேன் என மகன் சொன்னதும், ஸ்வர்ணாவுக்கு ஒரு மாதிரிதான் இருந்தது. தான் இனி இதற்கெல்லாம் பழகிக்கொள்ள வேண்டும் என நினைத்தார். ஆனால் ராம் அவர் சாப்பிடும் போது உடன் இருக்க… தன் மகன் தன்னை விட மாட்டான் என நம்பிக்கை வந்தது.


“அம்மா அவங்க வீட்ல அடுத்த மாசம் கல்யாணம் வச்கிக்க்கலாம்ன்னு சொன்னதும் யோசிச்சாங்க. அப்புறம் உங்களுக்கு ஓகேனதும் சரின்னாங்க.”


“நான் நாளைக்கு ஜோசியரை வர வச்சு நாள் குறிச்சிடுறேன்.” என்றார் ஸ்வர்ணா.


அடுத்த நாள் ஜோசியரை அழைத்து இருவரின் பேர் ராசிக்கும் பார்த்து நாள் குறித்தனர். ஜாதகம் பார்க்கவில்லை… எப்படியும் அவள்தான் என முடிவு ஆகிவிட்டது, ஜாதகம் பார்த்து பொருந்தவில்லை என்றால்… வீணாக மனவருத்தம் வரும் என்று பார்க்கவில்லை. ஏன் கார்த்திக், அகிலாவுக்குமே பார்க்கவில்லை.


ஜோசியரிடம் இரண்டு மூன்று தேதிகளைக் குறித்துக் வாங்கிக்கொண்டு, இதில் எந்தத் தேதி அவர்களுக்கு வசதி எனக் கேட்டு வர ராம் சென்றான்.

அவன்சென்றபோது ஸ்ரீகாந்தும், அருணும் மண்டபம் பார்க்க சென்று இருந்தனர். அதனால் வீட்டில் அபர்ணாவும் சுகன்யாவும் மட்டுமே இருந்தனர்.


“இதுல ரெண்டு மூன்னு தேதி இருக்கு. அபர்ணாவுக்கு எந்தத் தேதி வசதின்னு அம்மா கேட்டுட்டு வர சொன்னாங்க.” என்றான்.


அவன் சொன்ன உடனே, அபர்ணா, “எனக்கு எந்தத் தேதினாலும் ஓகே…” என்றாள்.

அவளுக்கு எதற்காகக் கேட்கிறார்கள் எனப் புரியவே இல்லை. ராமிற்குச் சிரிப்பாக வந்தது. சுகன்யா இருந்ததால் அடக்கிக் கொண்டான்.


சுகன்யாவுக்கும் ராம்மை வைத்துக் கொண்டு அபர்ணாவிடம் பேச முடியவில்லை. “நான் அப்புறமா அவளைக் கேட்டு சொல்றேன்.” என்றார்.


இதுல கேட்க என்ன இருக்கு? என்பது போலவே அபர்ணா பார்த்தாள். அப்போது ஸ்ரீகாந்த சுகன்யாவை அழைத்து, போரூரில் புது மண்டபம் ஒன்னு இருக்கு. நாம எதிர்ப்பார்த்தது போல, மண்டபம் நல்ல பெரிசா, நம்ம பட்ஜெட்க்கு இருக்கு. கல்யாண தேதி என்னன்னு கேட்கிறாங்க.” என்றார்.


“மாப்பிள்ளை இங்கதான் இருக்கார். பேசிட்டு சொல்றேன். ஒரு பத்து நிமிஷம் அங்கயே இருங்க.” என்றவர், அபர்ணாவை ஜூஸ் போடு எனச் சமையல் அறைக்கு அனுப்பி வைத்தார். ராம் கொடுத்த பேப்பரை எடுத்துக் கொண்டு, அவரும் உள்ளே சென்றார்.


“அபர்ணா, உனக்குப் பீரியட்ஸ் எந்தத் தேதியில வரும்.”


“எதுக்கு மா?”


“அந்த நேரத்தில கல்யாணத்தை வச்சா… உனக்குத் தானே கஷ்ட்டமா இருக்கும். அதுக்குத்தான் கேட்கிறது.”


“ஓ இதுக்குதான் தன்னைக் கேட்கிறார்களா?” என நினைத்தவள், தனக்குப் போன மாதம் வந்த தேதியை சொன்னாள். “எனக்கு எப்பவும் முன்னு நாள் முன்னாடியே வரும்.”


அவளுக்கு வீட்டு விலக்கு முடிந்து, ஒரு வாரம் சென்று வரும் முஹுர்த்த தேதி சரியாக இருக்கும் என நினைத்த சுகன்யா, அதைச் சென்று ராம்மிடம் சொல்ல… அவன் ஸ்வர்ணாவுக்கு அழைத்துக் கேட்க, அவர் சரி அன்னைக்கே வச்சுக்கலாம் என்றார்.


உடனே சுகன்யா அழைத்து ஸ்ரீகாந்திடம் தேதியை சொல்ல… அவர் மண்டப பொறுப்பாளரிடம் பேசிவிட்டு, அந்தத் தேதி இருக்காம். “எதுக்கும் மாப்பிள்ளை வந்து மண்டபத்தைப் பார்த்துகிறாரா கேளு.” என்றார்.


சுகன்யா ராம்மிடம் ஸ்ரீகாந்த சொன்னதைச் சொல்ல… “இல்லை வேண்டாம். அவர் பார்த்தா போதும்.” என்றுவிட்டான்.


சுகன்யா அவர் பிறந்த வீட்டினரிடம் அபர்ணாவின் திருமணம் குறித்துச் சொன்னார். ஏற்கனவே அவர்களுக்குத் தெரியும், ஆனால் இந்தத் தேதி என்று தெரியாது. அவர்களுக்குமே அபர்ணாவை அந்த வீட்டில் செய்வது விருப்பம் இல்லை. தாங்கள் மறுத்து சொன்னாலும், ஒன்றும் ஆகாது எனப் பேசாமல் இருந்தனர்.


மறுநாளே பத்திரிகை அடிக்கக் கொடுத்து, அதற்கு அடுத்த நாளே அது வந்தும் விட்டது. அந்த வார இறுதியில், தங்கள் சொந்த ஊருக்கு சென்று, முதலில் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு விட்டு, அப்படியே அங்கிருந்த சொந்தகளுக்குப் பத்திரிகை கொடுத்து விட்டு வந்தனர்.


ஸ்ரீகாந்தும் சுகன்யாவும் பத்திரிகை வைக்க நீலீமா வீட்டிற்குச் சென்றனர். நீலீமா அவர்களிடம் சரியாக முகம் கொடுத்தே பேசவில்லை. ஒரு தாம்பாளத்தில் அவர்களுக்கு வாங்கிய உடைகள், பழங்கள், இனிப்புகள் வைத்து மரியாதையாகத்தான் ஸ்ரீகாந்த தங்கைக்குப் பத்திரிகை கொடுத்தார்.


“முதல்ல எங்களுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பமே இல்லை. நான் எந்த மூஞ்சியை வச்சிட்டு என் பெண்ணை அங்க கட்டி கொடுக்க முடியும் சொல்லு. ஆனா அபர்ணா வேற யாரையும் கல்யாணம் பண்ணிப்பான்னு எங்களுக்குத் தோணலை…”


“நீ தப்பே செஞ்ச போதும், நான் உன்னை விட்டுடலை… ஆனா எனக்கு இப்ப என் தங்கச்சியா பொண்ணான்னு வரும் போது, எனக்கு என் பொண்ணு வாழ்க்கை தான் முக்கியமா படுது.”


“என் பொண்ணு வாழப்போற வீட்ல, நாங்க அவங்க மனசுபடிதான் நடந்துக்க முடியும். உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்.”


தன் சகோதரன் சொன்னதை முழுவதும் கேட்ட நீலீமா, “இதுக்கு நீங்க எனக்குப் பத்திரிகை கொடுக்காமலே இருந்திருக்கலாம்.” என்றார் கோபமாக.


“ஆனா இதுக்கு யார் காரணம்? அதையும் சொல்லு.” என ஸ்ரீகாந்த பதிலுக்குக் கோபமாகக் கேட்க, நீலீமா வாய் மூடிக்கொண்டாள்.


“என்ன இருந்தாலும் நீ என் தங்கை. உனக்குப் பத்திரிகை கொடுக்காம இருக்க மனசு வரலை. ஆனா நீ எங்க நிலைமையும் புரிஞ்சிக்கோ.” எனச் சொல்லிவிட்டு சென்றார்.


கார்த்திக்கும் அகிலாவும் ஹனிமூன்னில் இருந்து திரும்பி வந்ததும்தான், அவர்களுக்குத் திருமண விஷயம் சொல்லப்பட்டது.


“டேய் ! எங்களை நாலு மாசம் வெயிட் பண்ண வச்சிட்டு, நீ மட்டும் உடனே பண்ணிக்கிறியே நியாயமா?” எனக் கேட்ட கார்த்திக்கை பார்த்து ராம் சிரித்தான்.


கார்த்திக்கும் அகிலாவும் வந்ததும், ராம் அபர்ணா திருமண நிச்சம் செய்யப்பட்டது. ரொம்பப் பேருக்கு சொல்லவில்லை.. இருபக்கமும் வீட்டு ஆட்கள் மட்டும்தான். ஸ்ரீகாந்த் அதையுமே ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைக்க… நிச்சயம் நல்லபடியாக முடிந்தது.


இன்னும் திருமணதிற்கு இருபது நாட்களே இருந்தது. ராம் அவன் பக்கம் சில சொந்தகளுக்கு மட்டும்தான் திருமணப் பத்திரிகை கொடுத்தான். பலருக்கு வரவேற்பு பத்திரிகை தான். அதுவும் நிறையப் பேரை எல்லாம் அழைக்கவில்லை. முக்கியமானவர்கள் மட்டும்தான்.


கார்த்திக் இவர்கள் வீட்டில் இருந்தாலும், மதியம் மட்டும் அவன் அம்மாவிடம் சாப்பிட சென்றுவிடுவான். அகிலாவுக்கே இப்போது தான் போட்ட கண்டிஷன் முட்டாள் தனமாகத் தோன்றியது. அதுவும் கார்த்திக் தன்னைக் கண்ணுக்குள் வைத்து தாங்கும் போது, தானும் அவனுக்காகப் பார்க்க வேண்டும் என நினைத்தாள்.


“நாம அங்கயே போய்டலாம்.” என்றவளை, ராம்தான் திருமணம் வரை இங்கே இரு  எனப் பிடித்து வைத்திருக்கின்றான்.


சுஜாவும், “அபர்ணா வந்து கொஞ்சம் உங்க அம்மாவோட பழகட்டும், அப்புறம் வாங்க.” என்றுவிட்டார்.


ராம் தன் தங்கையின் திருமணதிற்கே பிரகாஷை அழைக்கவில்லை. இப்போது தன்னுடைய திருமணதிற்குப் போய் அழைப்பானா… அவன் அழைக்கவும் இல்லை. அவர் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. அவர் உரிமையாகப் பத்திரிகை வைத்துக் கொண்டு இருந்தார்.


“அவன்தான் அவ்வளவு திமிரா இருக்கான் இல்ல.. நீங்க ஏன் பண்றீங்க?” என்ற நீலீமாவின் பேச்சையும் அவர் கேட்கவில்லை.


“அவன் என்னை வேண்டாம்ன்னு விடலையே… நான்தானே அவங்க வேண்டாம்ன்னு விட்டேன். என் மேலதான் தப்பு. அவன் என்னோட பேசலைனாலும், அவன் என்னோட பையன்தான்.” என்றுவிட்டார்.


அண்ணன் திருமணம் முடிந்த பிறகே செல்லலாம் எனச் சோனாவும் இங்கேதான் இருந்தாள். அவள், அகிலா, அபர்ணா எல்லாம் சேர்ந்து கல்யாண புடவை மற்றும் வரவேற்புக்கு புடவை எடுக்கச் சென்றனர். கூடவே ராம்மின் சித்திகள் வேறு… பிறகு அங்கே கலாட்டாவுக்குக் கேட்கவும் வேண்டுமா…

 

பாவம் இத்தனை பெண்களுக்கு நடுவில் இரண்டே இரண்டு ஆண்கள். ராம் மற்றும் கார்த்திக். இருவரும் புடவை பார்க்க வரவில்லை.. அது மட்டும் உறுதி.


கார்த்திக் அகிலாவை உரசிக்கொண்டு நிற்க, இன்னும் திருமணம் ஆகாததால்… ராம் அபர்ணாவை விட்டு சற்று விலகி நின்றான்.


“இந்தப் புடவை ஒகே வா சித்தி.” அகிலா காயத்ரியிடம் கேட்க,


“என்கிட்டே கல்யாணப் புடவையைப் பத்தி கேட்காத… நான் முதல் ராத்திரி புடவைக்கு மட்டும்தான் சொல்வேன்.” என்றார்.


உடனே அங்கே பெரிய சிரிப்பொலி எழுந்து அடங்கியது.


ராம் அபர்ணாவின் காதில், “முதல் ராத்திரிக்கு எதுக்குப் புடவை?கழட்ட வேற ரொம்ப டைம் எடுக்கும்.”  என்றதும், அபர்ணாவுக்கு ஒரு நொடி மூச்சே நின்றுவிட்டது.


“அவன் என்ன சொல்றான் உன் காதுல?” காயத்ரி கேட்க, ராம் அங்கிருந்து நழுவ…. கூடவே கார்த்திக்கும் சென்றுவிட்டான்.


“முதல் ராத்திரிக்கு எதுக்குப் புடவைன்னு கேட்டிருப்பான். இதையெல்லாம் போய்க் கேட்டுட்டு.” எனச் சுமா சரியாக அடித்து விட… அபர்ணா முழித்த முழியிலேயே, அதைத்தான் சொல்லி இருக்கிறான் என அனைவருக்கும் நன்றாகவே புரிந்தது.


நீலீமா அங்கே கூண்டு புலியாக நடந்து கொண்டிருந்தாள். தன் கைதான் ஓங்கி இருக்கிறது என ஒரு பிரேமையை உருவாக்கி வைத்திருந்தாள். ராம் ஒரே நிமிடத்தில் எல்லாவற்றையும் சரித்து விட்டான். அவள் ஒன்றுமே இல்லை எனக் காட்டிவிட்டான். இழந்த தன் மதிப்பை எப்படி மீட்பது எனக் காத்திருந்தாள்.

Advertisement