Advertisement

பனி சிந்தும் சூரியன்



அபர்ணா காரில் இருந்து இறங்கும் போதே, மேலே இருந்து ராம் அவளைப் பார்த்து விட்டான். “ஏற்கனவே அழகா இருப்பா… இதுல இப்படி வேற டிரஸ் பண்ணிட்டு வந்து கொல்றாளே…. நான் வேலையைப் பார்ப்பேனா… இல்லை இவளை பார்ப்பேனா…” என அவனுக்கு ஒரே கவலையாகப் போய் விட்டது.


அபர்ணா வரும் வழியில் எதிர்பட்ட ஒவ்வொருவருடனும் நின்று அரட்டை அடித்துக் கொண்டே வந்தாள். ராம் அவளை மேலிருந்து சைட் அடித்துக் கொண்டு இருந்தான்.


கீழே ஹாலில் ஒரு பக்கம் பெண் வீட்டினர், மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்கத் தயார் செய்து கொண்டிருந்தனர். மறுபக்கம் மாப்பிள்ளை வீட்டினர், சீர் வரிசை தட்டிற்குத் தயார் செய்து கொண்டிருந்தனர்.


அபர்ணாவை பார்த்ததும் சுமா, “அபர்ணா நீ எங்க வீட்டு மருமகள் தானே… நீயும் ஒரு ஆரத்தி எடு.” என்றார்.


அதற்குச் சுஜா, “கல்யாணத்துக்கு அப்புறம் தான் உங்க வீட்டு மருமகள், இப்ப எங்க வீட்டு பொண்ணு. அவ கார்த்திக்கு தங்கையா வரிசை தட்டுக் கொண்டு வருவா.” என்றார். அவர்கள் பேசுவதைக் கேட்ட சுகன்யாவுக்குப் பூரிப்பாக இருந்தது.


அபர்ணா அகிலாண்டேஸ்வரியை பார்க்க சென்றாள்.


“பாட்டி ஓகே வா…”


“இங்க வா..” என அருகில் அழைத்து, “ராணி மாதிரி இருக்க” என அவளின் கன்னம் வழித்தவர்,


“நீ இந்த வீட்டுக்கு மருமகளா வரக் கூடாதுன்னு நான்தான் நினைச்சேன். ஆனா அம்மு நிச்சயம் அன்னைக்கு, ராம் பேசினது கேட்டதுக்கு அப்புறம், அவன் மனசுக்குள்ள எவ்வளவு வச்சு அழுத்திட்டு இருக்கான்னு புரிஞ்சிது.”


“ரொம்பக் கஷ்ட்டபட்டுட்டான். அவனோட சந்தோஷம் நீதான்னு தெரிஞ்சிடுச்சு. ஏன் வீம்பு பண்ணி, அவன் வாழ்க்கையை வீணாக்கணும் சொல்லு…”


“எனக்கு ஒரே ஒரு ஆசைதான். ஸ்வர்ணாவை மட்டும் நல்லா பார்த்துக்கோ….அவ இனி கண்ணீர் விடவே கூடாது.”


அகிலாண்டேஸ்வரியை எப்போதும் ஸ்ட்ரிக்ட் ஆபீசராகத்தான் அபர்ணா பார்த்து இருக்கிறாள். அவர் இப்படித் தன்னிடம் உருக்கமாகப் பேசுவார் என அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை.


“கண்டிப்பா பாட்டி. அத்தைக்கு நான் எதாவது கஷ்ட்டம் கொடுத்தா, எங்க அம்மாவே என்னை மன்னிக்க மாட்டாங்க.”


“உங்க அம்மா ரொம்ப நல்ல மாதிரி. ஸ்வர்ணாகிட்ட நேர்ல சம்மதம் கேட்டுதான்,  அவ சம்மதம் சொன்னா.. எனக்குத் தெரியும். அவ வளர்ப்புத் தப்பா போகாது.”


“ஓகே பாட்டி, ரொம்பப் பீலிங்க்ஸா பேசிட்டோம். நான் கீழ போறேன்.” என்றாள்.


அவள் அறையில் இருந்து வெளியே வர… ராம் எதிரில் பட்டு வேட்டி சட்டையில் வர…. அபர்ணாவால் பார்வையைத் திருப்பவே முடியவில்லை.


“இது தானா… இது தானா… எதிர்பார்த்த அந்நாளும் இது தானா…


இவன் தானா… இவன் தானா… மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா…


கனவிலும் நான் கண்ட கனவுகள் நனவாக,


உனதானேன் நான் உனதானேன்


திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் இந்நாட்கள், சுகமான ஒரு சுமை தானே


இதழ் பிரிக்காமல், குரல் எழுப்பாமல், நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்.”


மனதிற்குள் பாடல் ஓடிக்கொண்டிருக்க… இதழோ புன்னகையில் விரிந்து இருக்க… பார்வையிலோ காதல் வழிந்தது. அவள் பார்வைக்கு ஈடாக ராம்மின் பார்வையும் இருந்தது.


சுற்றிலும் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால்… இருவருக்கும் பேசவும் தயக்கமாக இருந்தது.


“அகிலாவை பார்த்திட்டு வரலாமா?” ராம் கேட்க, சரி என்பதாகத் தலையசைத்த அபர்ணா அவனுடன் இணைந்து நடந்தாள்.


அறை வாயிலில் நின்றவன், “டிரஸ் பண்ணிட்டு இருக்கப் போறா? நீ போய்ப் பார்த்திட்டு கூப்பிடு.” என வெளியேவே நின்றான்.


அபர்ணா மட்டும் உள்ளே செல்ல, அவளைப் பார்த்ததும் காயத்ரி, “கொஞ்சம் இப்படித் திரும்பு, அப்படித் திரும்பு..” எனச் சொல்ல, அபர்ணா எதற்கு எனத் தெரியாமலே அவர் சொன்னபடி செய்தாள்.


இன்று மடிப்பு வைத்து புடவைக் கட்டியிருந்ததால்… அவள் இடையழகு நன்றாகத் தெரிய…


“பரவாயில்லை இன்னைக்கு ராம் பையனுக்குப் பார்க்க கொஞ்சம் இருக்கு.” என்றார்.


“ச்ச… இதுக்குத்தான் இப்படிப் பார்த்தாரா.” என நினைத்தவள்,


“பையன் மேல அவ்வளவு அக்கறை இருந்தா, சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான…எதுக்கு இப்படி இன்ஸ்டால்மெண்டல காட்டனும்.” என்றாள்.


அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்து, காயத்ரியும், சுமாவும் வாயில் கைவைத்துக் கொள்ள… “நான்தான் சொன்னேன்ல, அவ உங்களை எல்லாம் தூக்கி சாப்பிடுவான்னு.” என அகிலா சிரித்தாள்.


“சீக்கிரம் கல்யாணம் வைக்க, ராம் பையன்கிட்ட சொல் வேண்டியதுதான்.” எனக் காயத்திரி சொன்னதும் தான். ராம் வெளியில் இருக்கிறான் என்ற நினைவே அவளுக்கு வந்தது.


ஐயையோ ! நாம பேசினது எல்லாம் வெளியே கேட்டிருக்குமா என நினைக்கும் போதே ,அறைக் கதவு தட்டப்பட…


“யாரு? உள்ள வாங்க…” எனச் சுமா குரல் கொடுக்க.. ராம் உள்ளே வந்தான். அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு வருவதிலேயே, எல்லாம் கேட்டிருக்கிறான் எனப் புரிந்தது.


அபர்ணா நன்றாகக் கதவை சாற்றி இருக்கவில்லை. அதனால் அவனுக்கு அவர்கள் பேசியது தெளிவாகவே கேட்டிருந்தது.


உள்ளே வந்தவன் அபர்ணாவை பார்த்து, கண் வேறு சிமிட்ட… முகம் சிவக்காமல் காக்க பெரும் பாடுபட்டாள்.


ராம் அகிலாவை பார்த்து, “ரெடியா அம்மு. நேத்து ரொம்ப நேரம் நின்னது கால் வலிக்குதுன்னு சொன்னியே, இப்ப பரவாயில்லையா?” எனக் கேட்டான்.


“இப்ப பரவாயில்லை அண்ணா.”


‘இன்னைக்குக் கல்யாணம் முடிஞ்சதும் சேர் போட சொல்லி இருக்கேன். அதுல உட்கார்ந்துக்கோங்க. போட்டோ எடுக்க வர்றவங்க பின்னாடி நின்னு எடுக்கட்டும்.”


அவன் செய்யும் அலப்பரையைப் பார்த்தா அபர்ணா, “ஏன் தங்கச்சியைத் தூக்கி வச்சிக்க வேண்டியது தான. கால் வலிக்காதே.” என மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்தாள்.


“எல்லோரும் சாப்பிட கீழே வந்திடுங்க.” எனச் சொல்லிவிட்டு அவன் திரும்ப,


“என்னப்பா தங்கச்சியை மட்டும் கவனிச்ச, அபர்ணாவை ஒன்னும் கவனிக்கலையே.” எனக் காயத்ரி எடுத்து கொடுக்க…


“வை திஸ் கொலைவெறி..” என அபர்ணா கலவரமாகப் பார்க்க… ராம் புன்னகைத்தான்.


“அண்ணா நேத்து சூப்பரா ப்ரொபோஸ் பண்ணீங்க.” மமதி சொல்ல..


“ஹே நீ அங்கையா இருந்த.” என்றான்.


நேற்று நிஜமாகவே அங்கே யார் இருந்தார்கள் இல்லை என அவன் பார்க்கவே இல்லை. அவனுக்குக் கேட்க வேண்டும் எனத் தோன்றியது கேட்டு விட்டான்.


“நாங்க எல்லாம் பார்க்கவே இல்ல…” சுமா சோகமாகச் சொல்ல…


ராம் சிரித்துக் கொண்டே “இன்னைக்கு வேணா கீழ மேடையில் வச்சு ப்ரொபோஸ் பண்ணிடுறேன். மொத்தமா எல்லோரும் பார்த்துக்கங்க.” என்றான்.


“என்னது?” என்பது போலப் பார்த்த அபர்ணா,


“இன்னைக்கு மட்டும் நீங்க அப்படி எதாவது பண்ணுங்க. நான் வெளிய போயிட்டே இருப்பேன். நேத்தே எங்க அம்மா முன்னாடி மானம் போச்சு.” என்றாள்.


“என்னது உங்க அம்மாவும் இருந்தாங்களா?” என்றான் அதிர்ச்சியாக.


“யாரு இருக்காங்க இல்லைன்னு பார்க்காம நீ பாட்டுக்கு ப்ரொபோஸ் பண்ணி இருக்க… கல்யாணம் ஆகிட்டா சுத்தமா எங்களை எல்லாம் கண்ணுல தெரியாது போலவே…” சுமா சொல்ல….


“உங்களை எல்லாம் ஏன் தெரியனும்?” சிரித்துக் கொண்டு கேட்டவன், அப்படியே வெளியில் சென்றான்.


“எங்க ராம்முக்கு இப்படியெல்லாம் பேச சிரிக்கத் தெரியும்ன்னு… எங்களுக்கே இப்பத்தான் தெரியும். உன்னாலதான் கொஞ்சம் தன்னோட கூட்டுல இருந்து வெளியே வரான் அபர்ணா. அவனை இப்படியே வச்சுக்கோ.” காயத்ரி சொல்ல…..அதை அமோதிப்பது போல அகிலா தலையசைத்தாள்.


தன்னவனை நினைத்து அபர்ணாவின் மனம் கனிந்தது.  


காலை உணவு முடிந்ததும், மாப்பிளை அழைப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். கார்த்திக்கின் ஒருபுறம் நித்யாவும் மறுபுறம் அபர்ணாவும் நிற்க…


“உங்க ரெண்டு பேரால என் இமேஜ் டேமேஜ் ஆகிடும் போல….” கார்த்திக் சொல்ல, இருவரும் ஏன் என்பது போலப் பார்த்தனர்.


“பின்ன பச்சை கலர் ஜிங்குச்சா… மஞ்ச கலர் ஜிங்குச்சான்னு ரெண்டு பேரும் இருந்தா.”


“கார்த்திக் ரொம்பப் பேசுற.” நித்யா பல்லைக் கடிக்க…ஏற்கனவே இந்தப் புடவை கட்ட யோசித்த அபர்ணாவும் டென்ஷன் ஆகி விட்டாள்.


“நீ மாப்பிள்ளைன்னு பார்க்கிறோம் கார்த்திக்.”


“காலையிலேயே கண்ணு கூசுதுன்னு ராம் சொன்னான். இப்பதான் எதுக்குன்னு புரியுது.”


“என்ன டா என் பேரு அடிபடுது?” என்றபடி ராம் அங்கே வர…


“மச்சான். உனக்குப் பச்சை கலர் பிடிக்கும்ன்னு எதுவும் சொன்னியா என்ன?” கார்த்திக் கேட்டதும் ராமிற்குப் புரிந்து விட்டது.


“இல்லையே டா மாப்பிள்ளை. ஏன் கேட்கிற?”


“பின்ன எதுக்கு டா , இவ போஸ்ட் கம்பத்துக்குப் பெயிண்ட் அடிச்ச மாதிரி பச்சையா வந்திருக்கா.”


அதைக் கேட்டு ராம் பக்கென்று சிரித்து விட்டான். அபர்ணா இடுப்பில் கை வைத்து இருவரையும் முறைக்க…


“அதுவும் அந்தச் சிவப்புக்கலர் பார்டர் பார்த்தா… எதோ கட்சி கொடி மாதிரி வேற இருக்கு. நீ எதுவும் கட்சி ஆரம்பிக்கப் போறியா?” கார்த்திக் சொன்னதற்கு ராம்மும் “ஆரம்பிச்சிடுவோம்.” எனச் சொல்ல…


“ஆன்டி இவங்க ரெண்டு பேருக்கும் சொல்லி வைங்க.” என அபர்ணா சுஜாவிடம் சொல்ல…


“நீ ஏன் ஆன்டி ஆன்டின்னு என்னைக் கூப்பிடுற? எதையாவது எடுத்து ரெண்டு போரையும் சாத்து.” என்றார்.


எதை எடுப்பது என அபர்ணா பார்க்க, “டேய் ! அடிச்சாலும் அடிச்சிடுவா டா… அப்புறம் நமக்குதான் மானம் போகிடும்.” ராம் கார்த்திக்கை எச்சரிக்க..


“தங்கச்சி மா… அண்ணன் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நீ ரொம்ப அழகா இருக்க… அண்ணியும் ரொம்ப அழகா இருக்காங்க. ரெண்டு பேரும் போய் வேலையைப் பாருங்க.” எனக் கார்த்திக் பின்வாங்க.


“அந்தப் பயம் இருக்கட்டும். ரெண்டு பேருக்கும் அப்புறம் இருக்கு.” எனச் சொல்லிவிட்டு அபர்ணா செல்ல… இதையெல்லாம் பார்த்த ஸ்வர்ணாவுக்கே சிரிப்பு வந்துவிட்டது.


மாப்பிள்ளை அழைப்பு முடிந்து கார்த்திக் மனமேடை ஏறி விட்டான். அபர்ணா கீழே அவள் பெற்றோருடன் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அகிலா திருமணப் புடவையில் அழகான பதுமையாக நடத்து வந்து கார்த்திக்கின் அருகில் அமர… கார்த்திக் மாங்கல்யத்தை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்துத் தனது மனைவி ஆக்கிக் கொண்டான்.


ஹப்பா ! எத்தனை வருட கனவு இன்று நிறைவேறி விட்டது.


தாரை வார்த்துக் கொடுக்க, யாரைப் போகச் சொல்வது என ஆளாளுக்கு ஒன்று சொல்ல… அகிலா அண்ணன் தான் என்று விட்டாள். அவள் பிடிவாதமாக ராமையே பார்த்து இருக்க…தனது அம்மாவை உடன் வைத்துக் கொண்டு, ராம் அகிலாவின் கைகளைப் பற்றிக் கார்த்திக்கின் கைகளில் ஒப்படைத்தான்.


அகிலா ராம் தோள் மீது சாய்ந்து விசும்ப… அவள் முதுகை வருடி சமாதானம் செய்தவனின் கண்களிலும் கண்ணீர். அதைப் பார்த்த அனைவருக்குமே கண் கலங்கி விட்டது.


ப்ரகாஷ் மேடையின் கீழ் நின்று பார்த்துக் கொண்டு இருந்தார். ஒரு சாஸ்திரத்துக்குக் கூடத் தன் குடும்பத்தினர் தன்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது மனதில் வலியை கொடுத்தது.


இவர் அவர்களை முக்கியமாக நினைத்தாரா? அப்போது அவரது சுயநலம் தானே பெரிதாகத் தெரிந்தது. பிறகு அவர்கள் மட்டும் எப்படிச் சேர்த்துக் கொள்வார்கள். இப்போது தான் தன் பக்க தவறை உணர ஆரம்பித்தார்.


திருமணம் முடிந்ததும், உறவினர்கள் சாப்பிட செல்ல… கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் குறைய ஆரம்பித்தது.


அபர்ணாவிடம் வந்த ராம், “என்னோட வா…” என அழைக்க….. ஏற்கனவே எல்லார் முன்பும் வைத்து, எதாவது கேட்டு விடுவானோ என அவள் கலக்கத்திலேயே இருந்ததால்… அவனுடன் செல்ல தயங்கினாள்.


அவளது பயத்தை அறிந்தவன், புன்னகையுடன், “என் ப்ரண்ட்ஸ் வந்திருக்காங்க. உன்னை அவங்களுக்கு அறிமுகம் செய்யத்தான். வா…” எனத் தனது வலது கையை நீட்டினான்.


சுகன்யா போ என அபர்ணாவிடம் சொல்ல… அதன் பிறகே தயக்கத்தை உதறி, அவன் கையைப் பிடித்தபடி எழுந்து அவனுடன் சென்றாள்.


“நான் உன்னை என்ன பண்ணிடுவேன்? ஏன் இப்படிப் பயப்படுற?” என அவன் கிசுகிசுப்பாகக் கேட்க, அபர்ணா பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் முகம் சிவந்தது. அதைப் பார்க்காதது போலப் பார்த்தவனின் முகமும் மலர்ந்தது.


அபர்ணாவை அழைத்துச் சென்று அவன் கல்லூரி நண்பர்களுக்கு அறிமுகம் செய்தான்.


“ஹே… இவங்க அன்னைக்கு ஹோட்டல்ல பார்த்தவங்க தானே… நாங்க அப்பவே நினைச்சோம்.” என்றனர்.


“எப்படா உங்க கல்யாணம்?” என்ற நண்பர்களிடம்,” நேத்துதான் டா ப்ரொபோஸ் பண்ணி இருக்கேன். இனிமே தான் பேசணும்.” என்றான்.


சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு இருவரும் திரும்பும் போது, இவர்கள்தான் அடுத்த ஜோடி எனத் தெரிந்த புகைப்படம் எடுப்பவர்கள், இருவரையும் சூழ்ந்து கொள்ள…


அபர்ணாவின் தோள் மீது கை போட்டபடி, போஸ் கொடுத்தவன், சில படங்கள் எடுத்ததும், “போதும், அப்புறம் எடுக்கலாம்.” என அவளுடன் அங்கிருந்து சென்றான்.


பலருக்கு இவர்கள் ஜோடி பொருத்தத்தைப் பார்த்து மகிழ்ச்சி என்றால்… சிலருக்கு வருத்தம் தான். ஸ்வர்ணாவின் உறவினர்கள் அவளை நீலீமாவின் சொந்தம் எனப் பார்த்தனர்.


இன்னும் சிலருக்குப் பொறாமை. அஞ்சலி, பிரவீணா எல்லாம் கேட்கவே வேண்டாம்.


நாம இந்தச் சிலரை விட்டு விடலாம். பலரை மட்டும் பார்ப்போம்.

Advertisement